பசி
க. நா. சுப்ரமண்யம்

1

என்றும் இல்லாமல் அபூர்வமாக சாத்தனூர் ஸர்வ மானிய அக்கிரஹாரத்துக்குள் வந்துவிட்ட அந்த மோட்டார்காரைப் பார்ப்பதற்குத் தெரு ஜனங்கள் எல்லோரும் – பெண்கள், குழந்தை குட்டிகள் உள் படச் சுமார் நூறுபேர் இருக்கலாம் – வெளியே தெருவுக்கு வந்துவிட்டார்கள். காரில் உட்கார்ந்திருந்த இரண்டு வாலிபர்களில் ஒருவனைப் பார்த்துவிட்டு, தெருச் சிறுவர்களில் ஒருவன் ஆச்சரியத்துடன் “அவாத்து சாமா டோய்!” என்று குரல் கொடுத்தான்.
“நாராயணையராத்து சாமா காரில் வந்து இறங்குகிறான் ” என்ற விஷயம் அந்தப் பையன் மூலம் ஒரு வினாடிக்குள் தெரு முழுதும் பரவி விட்டது.

“பூம் ! பூம்!” என்று ஊதிக்கொண்டே கார் கம்பீரமாக ஊர்ந்து வந்து தெரு மத்தியிலிருந்த ஒரு மாடி வீட்டுக்கு எதிரே நின்றது.

காரிலிருந்து, இருபது இருபத்திரண்டு வயது என்று மதிப்பிடக்கூடிய ஒரு வாலிபன் இறங்கினான்.வாரிவிடாத கிராப்பும், அம்மைத் தழும்புகள் நிறைந்த முகமும், எடுப்பான மூக்கும், சிரிக்கும் போது கீற்றுப்போல வெண்மையாகத் தெரியும் பற்களும், பெரிய மண்டையும், முகத்துக்கு ஏற்காத பெரிய மூக்குக் கண்ணாடியும், சுருக்கங்கள் நிறைந்த அகன்ற நெற்றியும், முகத்தில் தோன்றிய அலாதிக் களையும், சற்றுக் கூனிய முதுகும், சிவந்த மேனியுமாகக் காட்சி அளித்த இந்த வாலிபன் தான் நாராயணையரின் பிள்ளை, சுவாமிநாதன்.

காரிலிருந்த இரண்டாவது வாலிபனுக்கும் சற் றேறக் குறைய இதே வயது தான் இருக்கும். ஆனால் அவன் உண்மையிலேயே அழகன். அவன் ஆங்கிலப் பாணியில் ஆடை அணிந்திருந்தது நண்பர்கள் இருவருக்கும் இடையே நடை உடை பாவனைகளில் உள்ள வித்தியாசத்தை சற்று அதிகப் படுத்தியே காட்டிற்று. சாமாவின் முகத்தில் ஏதோ ஒரு அசாதாரணமான சக்தி, ஆத்மீகமான சக்தி, அழுந்தி அடங்கிக் கிடப்பது போல் இருந்தது. அவனுடைய நண்பன் முகத்திலோ பெரிய பெரிய வஸ்தாதுகளுக்கெல்லாம் இருக்குமே, அதுபோன்ற ஒரு சூன்ய பாவம் நிறைந்திருந்தது.

ஒருவன் படிப்பிலே வெகுவாக முன்னேறி நிற்பவன் என்பதையும் மற்றவன் விளையாட்டுப் பந்தய மைதானத்திலே முன்நிற்பவன் என்பதையும் அவர்களுடைய முகங்களும் உருவங்களுமே நன்கு எடுத்துக்காட்டின. இருவரும் ஆப்த நண்பர்கள். இருவரும் பீ.ஏ. பரிக்ஷை கொடுத்துவிட்டுக் கலா சாலையிலிருந்து விடுதலை பெற்று வந்திருக்கிறார்கள்.

“இறங்கிச் சற்றுநேரம் உட்காரேன் ஸ்ரீனிவாஸா! காபி போட்டுத்தரச் சொல்றேன்; சாப்பிட்டுவிட்டுப் போகலாம்” என்று காரை விட்டு இறங்கிய சாமா தன் நண்பனைப் பார்த்துச் சொன்னான்.

காரில் இருந்தபடியே ஸ்ரீனிவாஸன் “வேண்டாம், சாமா. நாழி ஆகிவிட்டது. நாலு மணிக்கெல்லாம் நான் ஊரில் இருக்கணும். அதில்லாமே இப்பத்தானே காபி சாப்பிட்டோம்” என்று பதில் சொன்னான்.

“காபி வேண்டாம். இளநீர் கொண்டுவரச் சொல்றேன். சாப்பிட்டுவிட்டுப் போ. அப்படி ஒண்ணும் பிரமாதமா நாழியாயிடல்லே. இறங்கு” என்று சாமா வற்புறுத்தினான்.

ஸ்ரீனிவாஸனுக்கு மனமில்லைதான். எனினும் தன் நண்பன் சொன்னதைத் தட்டமாட்டாமல் காரைவிட்டு இறங்கினான். இருவரும், கை அகல மிருந்த வாசல் தோட்டத்துக் கமானையும் வாசல் குறட்டையும் தாண்டிக் கீழ்த் திண்ணையில் படிந்திருந்த தூசியைத் தட்டிவிட்டு உட்கார்ந்தார்கள்.

இதற்குள் மேல் வேஷ்டியை இடுப்பில் கட்டிக் கொண்டு வேலைக்காரன் வீட்டிற்குள்ளிருந்து வந்தான். அவனைப் பார்த்ததும் சாமா “காரில் இருக்கிற பெட்டியையும் படுக்கையையும் உள்ளே கொண்டுபோய் வை. இரண்டு இளநீர் சீவிக் கொண்டு வா….ஜல்தி வா பார்க்கலாம்” என்றான்.

“வந்தயாடாப்பா சாமா, வா. கார்த்தாலையே வருவேன்னு நினைச்சேன். கூட யாரு?” என்று கேட்டுக்கொண்டே உள்ளே இருந்து கண்மங்கிய கிழ விதவை ஒருத்தி வெளியே வந்தாள்.

கூட என் சிநேகிதன் வந்திருக்கான் பாட்டி என்று சாமா பதில் அளித்தான். “என்னோடே படிக்கிறான். ஸ்ரீனிவாஸன்னு பேரு. கார்த்தாலையே நான் வந்துட்டேன். கும்பகோணத்திலே தங்காத்திலே மத்தியான்னம் சாப்பிட்டுவிட்டு சாயங்காலமாப் போகலாமேன்னான்; இருந்துட் டேன். அவன் காரிலே என்னைக் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போக வந்தான்.”

“கும்பகோணமா? கும்பகோணத்திலே உனக்கு எந்தத் தெரு?” என்று பாட்டி ஸ்ரீனிவாஸனை விசாரித்தாள்.

“பக்தபுரி அக்கிரஹாரம்.”

“யார் ஆம்?”

“இப்ப வேண்டாம் பாட்டி. உன் விசாரணையை எல்லாம் அப்பறம் இன்னொரு நாள் சாவகாசமாக வச்சுக்கலாம். இப்போ அவன் அவசரமாப் போகணுமாம்” என்றான் சாமா. பிறகு தன் நண்பன் பக்கம் திரும்பிச் சிரித்துக் கொண்டே “எங்க சுந்தாப்பாட்டி குலங் கோத்திரம் விசாரிக்க ஆரம்பித்தால் கடைசியில் ஒரே ஒரு முடிவுக்குத் தான் வந்து சேருவாள்- தானும் மற்றவரும் உறவு என்று ஸ்தாபித்து விடுவாள். அதைச் செய்ய முடியாமல் போய்விட்டால் ஏதாவது புது உறவுக்கு ஏற்பாடு செய்துவிடுவாள். அவளுக்கு ஒரு பேத்தி இருக்காள், கல்யாணமாகாமல்……..” என்று சாமா அடுக்கினான்.

சுந்தாப்பாட்டி குறுக்கிட்டாள் : ” என்ன டாப்பா அவ்வளவு அவசரம் ! இருந்து எங்காத்திலே ராத்திரி ஒருவேளை சாப்பிட்டூட்டுப் போகப் படாதா?”

“இல்லை, வேலையிருக்கு. இன்னொரு நாள் சாவ காசமாக வரேன்” என்றான் ஸ்ரீனிவாஸன்.

“நிஜமாகத்தான் ஸ்ரீனிவாஸா, வாயேன் ஒரு நாள். எங்க சந்தாப்பாட்டி சமைச்சால்…..” எப்படி இருக்கும் என்று சாமா நாக்கைச் சொடுக்கிக் காட்டினான். பிறகு, “பாட்டி! பழையதை எடுத்துவை, போ. எனக்குப் பசிக்கிறது. நான் ஸ்ரீனிவாஸனை அனுப்பிவிட்டு வரேன்” என்றான்.

பேரனுக்குப் பழையது எடுத்து வைக்கப் பாட்டி உள்ளே போய்விட்டாள். சோலமலை இரண்டு வெள்ளி டம்ளர்களில் இளநீரை ஊற்றிக்கொண்டு வந்து வைத்தான். இரண்டு நண்பர்களும் எடுத்துச் சாப்பிட்டார்கள்.

“நாளை நாளனன்றைக்கு நான் மறுபடியும் கும்பகோணம் வர வேண்டியிருக்கும். வந்து உன்னைப் பார்க்கிறேன்” என்றான் சாமா.

“கார் வேணுமானால் அனுப்பட்டுமா?” என்று கேட்டுக்கொண்டே ஸ்ரீனிவாஸன் எழுந்தான்.

சாமாவும் உடன் எழுந்தான். “வேண்டா மப்பா. அஞ்சு மைல்தானே ! சாயங்காலமா நடந்து வரேன்.”

“இப்போது ஏது சாமா ரெயில் உனக்கு ?” என்று கேட்டுக்கொண்டே எதிர்வீட்டு மகாலிங்கையர் வந்து சேர்ந்தார்.

“ரெயில்லே வரல்லை, மாமா. பட்டணத்திலேருந்து நேரே இவா கார் வந்தது. அதிலேயே நானும் வந்துட்டேன்.”

“அதானே பாத்தேன்” என்றார் மகாலிங் கையர். “நீ இன்னிக்கும் வரக்காணோமேன்னு நாராயணன் கவலைப் பட்டுண்டிருந்தான். என்னிக்கி வரேன்னு ஒரு கடிதாசு போடப்படாதோ!”

சாமா “சூள்” கொட்டினான். “ என்ன கடுதாசு! அதான் நேரிலேயே வந்தாச்சே!”

“உனக்கு அப்படியிருக்கு. உங்கப்பாவுக்கு………?” என்று வாக்கியத்தை முடிக்காமல் நீட்டினார் மகாலிங்கையர். பின்னர் ஒரு நிமிஷம் கழித்து நாராயணன் கூட இவ்வளவு நாழி எங்காத்துத் திண்ணையிலேதான் உட்கார்ந்திருந்தான். பொடியில்லேன்னு வாங்கிண்டுவர மேற்கே போனான். ஆச்சு வந்துடுவான் ” என்றார்.

“அப்ப சரி, சாமா, நாழியாறது. நான் கிளம்பட்டுமா ?” என்று கேட்டுக் கொண்டே ஸ்ரீனிவாஸன் காரில் ஏறி உட்கார்ந்துகொண்டான்.

“சரி.”

“வரேன்” என்று சொல்லிவிட்டு ஸ்ரீனிவாஸன் காரைச் சுற்றி வாயைப் பிளந்து கொண்டு நின்ற சிறுவர்களை விரட்ட இரண்டுதரம் “பூம் ! பூம்” என்று ஊதிவிட்டு காரைத் திருப்பிக் கொண்டு போய்விட்டான்.

“யார் அது, பிள்ளையாண்டான்?” என்று விசாரித்தார் எதிர்வீட்டுக்காரர்.

“என்னோடே வாசிக்கறான். கும்பகோணத்திலே ரிடையர்டு என்ஜினியர் ராமசாமி ஐயர் இருக்காரே, அவர் பிள்ளை…….”

“அதானே பார்த்தேன் – பார்த்த முகமா இருக்கேன்னு” என்றார் மகாலிங்கையர். “போய்ச் சட்டையைக் கழட்டிப் போட்டுவிட்டுக் காபி சாப்பிடு, போ . பரிக்ஷை நன்னா எழுதியிருக்கையா?”

“ஏதோ எழுதியிருக்கேன். பாஸானால் சாமி புண்ணியந்தான். இரண்டு பகுதியிலே நல்ல மார்க்கு கிடைத்துவிடும். ஒரு பகுதி ஊதினாலும் ஊதிவிடும்.”

“உனக்கா ஊதும்! பலே ஆசாமியாச்சே நீ ! போ. பேரனை உள்ளே வரவிடாமல் பேசிண்டேருக்கேன்னு உன் பாட்டி என்னைக் கோபிச்சுக்குவாள்;” என்றார் மகாலிங்கையர்.

மகாலிங்கையர் போனபின் அவருடைய பிள்ளை கிருஷ்ணமூர்த்தி வந்தான்.

“வா சாமா! நீ சௌக்கியமா?”

“சௌக்கியம்தான். நீ சௌக்கியமா?”

“செளக்கியம் தான் அப்பா.”

“உன் எருமை மாடு சௌக்கியமா?”

“எத்தனை நாளானாலும் அதை மாத்திரம் நீ மறந்துவிடாதே” என்றான் கிருஷ்ணமூர்த்தி. “பேரனை இன்னும் காணலியே, காணலியேன்னு பாட்டிதான் உசிரை விட்டுண்டிருந்தாள். பேரன் வந்துட்டான்” என்று, உள்ளே பழையதை எடுத்து வைத்து விட்டுச் சாப்பிடக் கூப்பிட வந்திருந்த பாட்டியைப் பார்த்துக் கிருஷ்ணமூர்த்தி சொன்னான்.

“சாப்பிட்டுவிட்டு வரேன்” என்று கிருஷ்ண மூர்த்தியிடம் சொல்லிவிட்டு சாமா உள்ளே போனான். சட்டையைக் கழற்றி மாட்டிவிட்டு, முகம் கைகால் எல்லாவற்றையும் அலம்பிக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தான் சாமா. பழையது தயாராக எடுத்து வைத்திருந்தது; இலையும் போட்டிருந்தது. சாதம் போடத் தயாராக அவன் அத்தை ஜானம்மாள் உட்கார்ந்திருந்தாள்.

அடுப்பண்டை ஏதோ காரியம் செய்வது போலச் செய்து கொண்டே திரும்பித் தன்னைப் பார்த்த யுவதியைக் கண்டு சாமா ஒரு நிமிஷம் திடுக்கிட்டான். அது யார் என்று அவனுக்கு நிதானப்பட இரண்டு விநாடி பிடித்தது. புரிந்து கொண்டதும் அவன் திகைத்துப் போனான். ஒரு வருஷத்தில் தான் என்ன மாறுதல்! கமலாவா இப்படி வளர்ந்து விட்டாள்!

“சாதம் போடு அத்தை” என்று சொல்லிக் கொண்டே சாமா இலையில் உட்கார்ந்தான். இரண்டு பிடி சாப்பிட்டபின், கமலாவைப் பார்த்து “என்ன கமலா, பேசமாட்டேங்கிறயே! முதல்லே எனக்கு அடையாளமே தெரியல்லை….சௌக்கியம் தானே?” என்றான்.

கமலா ஒன்றும் பதில் சொல்லவில்லை. கமலாவின் தாயார் ஜானம்மாள் தான் பதில் சொன்னாள்: “சௌக்கியத்துக்கு என்னடா குறைச்சல்! மாமா வாத்துச் சோத்தைச் சாப்பிட்டுண்டு குதிராட்டமா வளந்துண்டிருக்கா!”

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *