பசி
க. நா. சுப்ரமண்யம்

12

சாத்தனூர் ஸர்வமானிய அக்கிரஹாரத்தின் அதிர்ஷ்டம் அது ; நம்மைவிடச் சிறந்த ஆசிரியன் ஒருவன் அதன் பிரபாவங்களை எழுதுவதற்குக் கிடைக்கவில்லை. நம்முடைய அதிர்ஷ்டமும் சற்று மட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். நமக்கும் இந்த அக்கிரஹாரத்தை விட்டால் வேறு கதியில்லை; நம் கதை இதைவிட்டு நகருவதற்கில்லை.

தெருவின் தினசரி வாழ்க்கையில் பல தலைமுறைகளாகவே எவ்விதமானமாறுதலும் இன்றி ஒன்றன் பின் ஒன்றாக நாட்கள் கழிந்து கொண் டிருக்கின்றன. ஊருக்கு வந்த புதிதில் அவ் வாழ்க்கையில் அமைதியும் வசீகரமும் இருந்ததாகச் சாமா எண்ணியது வாஸ்தவந்தான். ஆனால் இரண்டு மாதங்களுக் குள்ளாகவே அது அலுத்துவிட்டது. அக்கிரஹாரத்து வாசிகள் மிகவும் குறுகிய பரப்புக்குள் வளைய வளைய வந்து கொண்டிருந்தார்கள். மனிதப் பிறவி எடுத்தவர்களுக்கு, அதன் உயரிய அம்சங்களை அறிந்தவர்களுக்கு, அது சரியான வாழ்க்கை அல்ல என்று சாமாவுக்குப் பட்டது. மேல் நாடுகளில் புதுப்புது சமுதாயங்கள் வயிற்றுப் பசி ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு அமைக்கப் படுகின்றன: அவை சாரமற்றவை என்று குற்றம் கண்டுபிடித்த சாமா இங்கே தன் தெருவிலும் வயிற்றுப் பசியைத் தவிர வேறு எப்பசியையும் அறியாத மனிதர்கள் இருந்தார்கள் என்பதைக் கண்டான். தங்கள் தங்கள் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்ளுவதைத் தவிர வேறு லக்ஷியமே இல்லாமல் மனிதர்கள் வாழ்க்கை நடத்துவது சாத்தியமாக இருந்தது என்பதைக்கண்டு சாமா ஆச்சரியப்பட்டான். வாழ்க்கையில் வேறு எவ்வளவோ கணக்கற்ற நேர்த்தியான விஷயங்களுக்கு ஹிந்து சமூகம், கொள்கை அளவில், இடம் கொடுத்தது. ஆனால் இது கொள்கை அளவில்தான். சாதாரண மனிதர்களின் தினசரி வாழ்க்கையில் இவை ஒரு சிறிதும் ஒட்டவில்லை.

பசிகள் எல்லாவற்றையுமே மீறி விட்டவர் சாம்பமூர்த்தி ராயர்; அவர் ஒரு லக்ஷிய புருஷர் என்றுதான் சாமா முதலில் எண்ணி இருந்தான். அதுவும் தவறான அபிப்பிராயம் என்று சாமாவுக்கு இப்பொழுது பட்டது. வாழ்க்கையில் தோல்வி அடைந்து விட்டவர் என்பதற்காக அவரைக் கடியவில்லை சாமா. தோல்வி என்பது அர்த்தமில்லாத ஒரு வார்த்தை. தோல்வியையே வெற்றியாகவும் கருதலாம்; வெற்றியையும் தோல்வியாகக் கருதலாம். அது அவரவர்களுடைய மனோபாவத்தைப் பொறுத்தது. சாம்பமூர்த்தி ராயர் ஒருநாளும் தான் தோல்வி அடைந்தவர் என்று ஒப்புக்கொள்ள மாட்டார். ஆனால் அவர் வாழ்க்கையின் ஆசாபாசங்களை மீறி எழுந்தவர்; பசிகளைக் களைந்தவர்; ஒரு நிர்வாண சூன்ய நிலையை எட்டிவிட்டவர். அது தான் அவர் செய்துவிட்ட தவறு என்று சாமாவுக்குப் பட்டது. பசி – வயிற்றுப் பசி மட்டுமல்ல மற்ற எல்லாப் பசிகளும் தான்- இல்லாமல் மனிதன் மனிதனே ஆகமாட்டான் என்ற முடிவுக்கு வந்தான் சாமா. ஒரு மனிதனுக்குப் பசிகள் எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக இருக்கின்றனவோ அவ்வளவுக் கவ்வளவு அவன் மேன்மையானவன்; எதாவது ஒரு பசி இல்லாவிட்டாலும் அவன் தரத்தில் குறைந்தவனே ஆவான்.

இந்தக் கொள்கைகளையும் முடிவுகளையும் கடைப்பிடித்துக் கடைசி வரையில் ஆராய்ச்சி செய்து பார்க்க முற்பட்டான் சாமா. ஆனால் அது அவ்வளவாகத் திருப்திகரமான விஷயமாக இல்லை. சில சமயம் அவனுடைய ஆராய்ச்சி முடிவுகள் அவனையே திடுக்குறச் செய்தன.

வயிற்றுப் பசியையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுவோம். பசிக்கும்போது சாப்பிடுகிறோம்; பசி அடங்கி விடுகிறது. உண்மையில் அடங்கியதா? இல்லவே இல்லை. பத்து நாழிகை நேரத்துக்குள் மறுபடியும் பசிக்க ஆரம்பித்து விடுகிறது. அது ஏன் ? மனிதனாகப் பிறந்து விட்ட ஒவ்வொருவனுக்கும் நிரந்தரமாக உள்ள ஓர் உரிமை அந்த வயிற்றுப் பசி. தற்காலப் பொருளாதார சாஸ்திரிகள் இந்தப் பசி ஆறுவதுதான் மனிதனுடைய உரிமை என்று எண்ணி அசட்டு மனோராஜ்யம் செய்து சாஸ்திரம்என்ற பெயரிட்டு, கட்டக் கட்ட உடனுக்குடனே பாழாகிக் கொண்டுவரும் ஒரு கோட்டையை நிர்மாணிக்கிறார்கள். ஆனால் பசிதான் மனிதனுடைய உண்மையான உரிமை. சரித்திரம் அதையே தான் நமக்கு அறிவுறுத்தி வந்திருக்கிறது. இங்கே பசித்திருப்பவனே முடிவில் பரமபதம் சேருவான் ” என்று இயேசு கிறிஸ்து சொன்னது இதை உத்தேசித்தே இருக்க வேண்டும்.

வயிற்றுப் பசியைப் போலவேதான் மனிதனுடைய மற்றப் பசிகளும் இருக்க வேண்டுமென்று சாமா எண்ணினான். பிறந்த வினாடி முதல் இறக் கும் வரையில் மனிதன் பலதரப்பட்ட பசிகளால் பீடிக்கப்படுகிறான். இந்தப் பசிகளின் தரத்தையும் வேகத்தையும் அடிப்படையாக வைத்து மனித ஜாதியை மூன்று வகுப்புக்களாகப் பிரிக்கலாம் என்று சாமாவுக்குத் தோன்றிற்று. வயிற்றுப் பசியாலும் சிற்றின்பப் பசியாலும் மட்டும் பீடிக்கப்படுகிறவர்களை மனிதர்களிலே மிருகங்களாகக் கொள்ள வேண்டும். மற்றப் பசிகள் அதிகரிக்க அதிகரிக்க மனிதன் மிருகப் பிராயம் நீங்கி மனிதப் பிராயத்தை எட்டி சில சமயம் அதையும் தாண்டி தேவப் பிராயத்தையும் தொடுகிறான்.

சாத்தனூரில் மட்டுமல்ல. உலகில் பெரும் பகுதியில் வயிற்றுப் பசியும், சில்லரை இந்திரியப் பசிகளுமே ஆட்சி செலுத்துகின்றன என்பதைச் சாமா கண்டான். வேறு பசிகள் உள என்பதையே அறியாதவர்கள் போல மனிதர்கள் காலம் கடத்தினார்கள்.

ஸர்வமானிய அக்கிரஹாரத்தின் மந்தை போலப் பரந்த உலகிலே பல மனித மந்தைகள் நடமாடித் திரிந்து கொண்டிருந்தன.

தான் இதிலே தப்பிப் பிறந்தவனாக எண்ணிக் கொண்டான் சாமா. சாத்தனூர் ஸர்வமானிய அக்கிரஹாரத்திலிருந்து தப்பி வெளியேறி விட்டால் போதும். எவ்வளவு சீக்கிரம் வெளியேற முடிகிறதோ அவ்வளவுக் கவ்வளவு நல்லது என்று எண்ணினான். ரெயிலில் காசு கொடுத்து டிக்கட்டு வாங்கிச் சாதித்துவிடக் கூடிய காரியழல்ல அது. வேறு எங்கே சென்றாலும் எந்த ஊரிலும் அதே மனிதர் மந்தைதான்; கோர சொரூபங்கள் தான். தன் உள்ளமும் உடலும் ஆத்மாவும் ஸர்வமானிய அக்கிரஹாரத்துக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட வேண்டுமென்று சாமா விரும்பினான். அவன் மனமும் அறிவும் விடுபட்டுவிட்டன ; ஆனால் பரிபூரண சுதந்திரத்திற்கு அது மட்டும் போதாது; போதவே போதாது.

சுந்தாப்பாட்டியும் உள்ள நாராயணையரும் வரையில் தனக்கு விடுதலை கிடைக்காது என்று சாமாவுக்கு நன்கு தெரியும். அப்படியானாலும் அவர்கள் இருவரும் இறந்து ஒழிந்து விட வேண்டும் என்றா சாமா விரும்பினான் ? இல்லவே இல்லை. இவ் வுலகில் அவனுடைய உண்மை மதிப்பையும் உயர்வையும் உள்ளபடி அறிந்தவர்கள் தற்சமயம் அவர்கள் இருவரும்தானே! அவர்களிருவரும் அவனிடம் தான் தங்கள் உயிரை வைத்திருந்தார்கள்; அவன் நலம் ஒன்றையே தங்கள் லக்ஷியமாக எண்ணி வாழ்க்கை நடத்தினார்கள். அன்புக்கும் அறிவுக்கும் இடையே அவன் உள்ளத்தில் மூண்ட போராட்டத்தில் அன்பே வெற்றி பெற்றது. அறிவு எனும் தன் ஆற்றலைக் கூடியவரையில், நாராயணையரும் சுந்தாப்பாட்டியும் உள்ள வரையில், அவர்களுக்காக அடக்கி வைத்திருப்பதே நல்லது என்று அவன் எண்ணினான். ஆனால் அவர்களுக்காக அவன் செய்த மகத்தான தியாகத்தை அவர்கள் அறிந்து கொள்ளவே இல்லை!

ராஜி காரணமாக அவன் மனத்தில் இரண்டொரு நாள் ஏற்பட்ட குழப்பத்தை அவன் சுலபத்தில் மறந்து விடவில்லை. எவ்வளவுதான் தெளிவாகச் சிந்தனை செய்யும் சக்தி படைத்திருந்தாலும், சொந்த விஷயம் என்று வரும்போது தெளிவும் அமைதியும் நீங்கி விடுகின்றன என்பதை அவன் அனுபவத்தில் கண்டு கொண்டான். சிந்தனைகளால் மட்டும் யாருக்கும் எவ்விதமான பயனும் இல்லை ; அதை ஒட்டிக் காரியமும் செய்யத் தெரியவேண்டும் என்று தீர்மானம் செய்தான் சாமா.

முடிவுகள் எல்லாம் சரிதான் ; ஆனால் அந்த முடிவுகளைக் காரி யத்தில் காட்டுவதுதான் சிரமமான காரியமாக இருக்கும்போல் இருந்தது. சிந்தனைகள் மட்டும் – அவை எவ்வளவு உயர்தரமானவையானாலும்- போதாது; செய்கையும் வேண்டும் என்று சாமா சித்தாந்தம் செய்து கொண்டான்.

ஆனால் சுந்தாப்பாட்டிக்கோ சிந்தனைகளைப் பற்றிக் கவலையே கிடையாது; செய்கையே பிரதானமாக இருந்தது. அவள் அந்த ஆனி மாதத் துக்குள் சாமாவுக்குக் கல்யாணம் செய்து வைத்துப் பார்த்து விடுவது என்று தீர்மானித் திருந்தாள். சாமாவின் அசட்டுச் சிந்தனைகளுக்காக அவள் தான் பிடித்த பிடியை விட்டுக் கொடுப்பதாக இல்லை. பெண் வீட்டுக்காரர்கள் வழக்கம் போலவே சாத்தனூர் ஸர்வமானிய அக்கிரஹாரத்தின் மாஜி தபாலாபீஸ்காரர் வீட்டில் தக்க பையன் இருப்பதாக விசாரித்து அறிந்து கொண்டு வந்து ஜாதகம் கொடுத்தும் வாங்கியும் போய்க் கொண்டிருந்தார்கள். இரண்டொரு ஜாதகங்கள் திருப்திகரமாகப் பொருந்தியும் இருந்தன. அந்த இடங்களில் “லௌகிகம்” என்று சொல்லப்படுவது சரியாக இல்லாவிட்டாலும் பாதகமில்லை ; மற்றபடி எல்லாம் திருப்திகரமாக இருந்தால் ஒப்புக்கொண்டு விடலாம் என்று தாயும் பிள்ளையும் தீர்மானித்திருந்தார்கள். சாமா வேறு விதமான தீர்மானம் செய்து கொண்டிருந்தான். தன் தீர்மானத்தை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் இரண்டு மூன்று இடங் களுக்குப் போய், அவர்கள் இஷ்டப்படி, அவன் பெண் பார்த்துவிட்டு வந்தான். பார்த்த பெண்கள் பிடிக்கவில்லை. எப்படிப் பிடிக்கும்? சாமா தனக்கு வேண்டும் என்ற கண்கொண்டு பார்த்திருந்தால் தானே பிடிக்க? அவன் உள்ளத்தில் ஒரு பெண் தெய்வம் குடிகொண்டு விட்டாள்; வேறு பெண் உருவங்கள் அவன் கண்ணில் கூடச் சரியாகப் படவில்லை.

தந்தையையும் பாட்டியையும் இது ஏமாற்றுவதாகுமே என்று சாமா சிந்திக்காமல் இல்லை. தவறு தான் என்று அவனும் அறிந்தே இருந்தான்.

ஆனால் தனக்கு வேண்டியவர்களுக்கு மனக் கஷ்டம் தரலாகாது என்ற எண்ணத்தினால் பிறந்த தவறு அது. இப்படி அன்பினால் இழைக்கப்பட்ட தவறு தவறே ஆகாது என்று அவன் தன் மனத்துக்குச் சமாதானம் சொல்லிக் கொண் டான். மிகவும் சௌகரியமான சமாதானம்தானே அது! !

சுந்தாப்பாட்டி அவனுடைய நடத்தையின் அர்த்தத்தை வெகு சீக்கிரமே கண்டு கொண்டாள். “இப்படித் தட்டிக் கழித்துக் கொண்டே இருக்கயே! சாகுமுன் உனக்குக் கலியாணம் பண்ணி வச்சு நான் கண்ணாரக் காண வேண்டாமா?”

“சாவு சாவுன்னு ஏன் பாட்டி அடிச்சிக்கறே! உனக்கு இன்னும் பத்து வருஷத்துக்குக் குறை யாமே ஆயுசு இருக்கு. கவலைப்படாதே!”

“கல்யாணம் பண்ணி வச்சு, குடித்தனம் வச்சு பேரன் பெண்டாட்டி குடித்தனம் நடத்தற சவரணையைப் பாத்துட்டுப் போகணும்னு இராதா எனக்கு?” என்றாள் சுந்தாப்பாட்டி.

“கொள்ளுப் பேரன் பிறந்து, அவனுக்கும் பேரன் பிறக்கற வரைக்கும் இருந்து பாத்தூட்டுப் போயேன். யார் வாண்டாங்கிறா?” என்றாள் கமலா, சிரித்துக் கொண்டே. முன்பெல்லாம் இருந்தது போல அச்சிரிப்பில் கலகலப்போ ஆனந்தமோ இல்லை என்பது சாமாவுக்கும் தெரிந்தது. ஏன் இல்லை என்பதும் அவனுக்குத் தெரியும். அச் சிரிப்பு அவளுடைய உள்ளத்தின் ஏக்கத்தையும் துயரத்தையும் அடக்கமாக வெளியிட்டது என்பதையும் அவன் கண்டு கொண்டான்.

“எனக்குப் பிடிச்ச பெண் கிடைத்தால் நான் கல்யாணம் பண்ணிக்கத் தயார்தான்” என்றான் சாமா.

“உனக்குப் பிடிச்ச பொண்ணூன்னு தனியா பிரும்மா ஒரு ரகம் படைச்சிருக் கானா என்ன ? ஏதோ சுமாரா, குடித்தனப் பாங்கா….”

“நீயே இப்படிச் சொல்றயே பாட்டி! கல்யாணம்னா சுலபத்திலே முன்னே பின்னே யோசிக்காமலே முடிச்சூடற விஷயமா? சொல்லேன். ஆயுசு பூராவும் ஒருத்தியைக் கட்டிண்டு அழுதா கணுமே….”

“வேதாந்தம் படிக்காதேடா ” என்றாள் சுந்தாப்பாட்டி. “தட்டிக் கழிக்கக் காரணம் சொல்லாதே.”

அவள் குரலில் அளவு கடந்த வருத்தம் தொனித்தது. சாமா பதிலாக “நான் ரெண்டு மூணு தரம் பெண் பார்க்கப் போனது கூட உனக்காகத் தானே பாட்டி. அதைப் புரிஞ்சுக்காதே நீ வருத்தப்படறயே!” என்றான்.

சுந்தாப்பாட்டி இதை ஒப்புக் கொண்டாள். அந்த மட்டில் கொஞ்சம் திருப்திதான் அவளுக்கு. சாமாவையும் மீறி ஏதாவது ஓரிடத்தில் நிச்சயமாகி விடாதா என்று அவளுக்கு ஆசை.

“நேத்திக்குப் பாத்துட்டுவந்த பொண் ரொம்ப நன்னாருக்காமே. கமலா சொன்னாள்.”

“சப்பை மூக்கு. பல்லு ஒண்ணாவது நேரா இல்லை” என்றான் சாமா சிரித்துக்கொண்டே.

“நல்ல சிகப்பு. உயரமும் பருமனும் பாந்தமா இருக்கு” என்று குறுகிட்டாள் கமலா. இது விஷயமாக அவளுக்குப் பேசவே மனமில்லை. என்றாலும், அங்கிருந்து கொண்டு ஒன்றும் பேசாமல் இருப்பது சிரமமாக இருந்தது. எழுந்திருந்து போய் விடவும் அவனுக்கு மனம் இல்லை.

சாமா உரக்கச் சிரித்தான். “பெண்ணின் தாயாரும் நல்ல சிகப்புத்தான். பாந்தமாகக் குதிர் போல இருக்காள். பாத்தாயோல்லியோ கமலா. ரெண்டு வருஷத்திலே பெண்ணும் அம்மாவைப் போல ஆயிடும்.”

கமலாவும் சிரித்தாள்.

“போடா போக்கிரி!” என்றாள் சுந்தாப் பாட்டி. ஆனால் அவளும் சிரித்தாள். “வக்கிரமா பேசத் தெரியறது. வேறே என்ன? நீ என்ன ? பொண்ணைப் பார்க்கப் போனயா, அவள் அம்மாவைப் பார்க்கப் போனயா?” என்று கேட்டாள்.

“ரெண்டு பேரையும்தான் பாத்தேனே! ” என்றான் சாமா.

விளையாட்டெல்லாம் சரிதான். ஆனால் சுந்தாப் பாட்டியின் இடைவிடாத வற்புறுத்தல்களுக்கு அதிக நாள் ஈடு கொடுத்துச் சமாளித்துக் கொண்டிருக்க முடியாது என்று சாமா அறிந்தே இருந்தான். என்றாவது ஒருநாள் உண்மையைச் சொல்லியே தீரவேண்டி வந்துவிடும் என்று அவன் எதிர் பார்த்தான்; தப்ப வழி கிடைக்காது. என்ன செய்யலாம் என்று அவன் யோசித்தான்.

சில நாளைக் குள்ளாகவே தன்னுடைய கல்யாணப் பேச்சைத் தட்டிக் கழிக்க அவனுக்கொரு திவ்வியமான “சாக்கு”க் கிடைத்தது. குதிராட்டமா வளர்ந்த பொண் ஒண்ணை ஆத்திலே வச்சிண்டு கல்யாணத்துக்கு ஒண்ணும் ஏற்பாடு பண்ணாமே இருக்கா ! அவாளை நம்பித்தானே நாங்க இருக்கோம்? பேரனுக்குக் கல்யாணம் பண்ணிப் பாக்க ஆத்திரப்படறது கிழம் ஜானம்மாள் அடுத்த வீட்டுக்காரியிடம் கூறிக் கொண்டிருந்தது சாமா காதில் ஒரு நாள் விழுந்தது. அது நியாயமான குறையாகவே சாமாவுக்குப் பட்டது. பாட்டியும் தகப்பனாரும் அவனிடம் கல்யாணத்தைப் பற்றிச் சொல்லி வற்புறுத்தும் போதெல்லாம் சாமா இதைச் சொல்லித் தப்பித்துக் கொள்ள முயன்றான். ஓரளவு தப்பவும் தப்பினான் என்றே சொல்ல வேண்டும்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *