

நீலா மாலா
அழ. வள்ளியப்பா
ஆசிரியர் முன்னுரை
சிறுவருக்காக வெளிவரும் ஒரு சிறந்த பத்திரிகை ‘கோகுலம்’.
அப்பத்திரிகையில் 1976 ஆம் ஆண்டு ‘நீலா மாலா’ என்னும் இக் கதையை
எட்டு மாதங்கள் தொடர்ந்து எழுதி வந்தேன். பல்லாயிரக்கணக்கான
குழந்தைகள் படித்து மகிழ்ந்த கதை, இப்போது புத்தக வடிவம்
பெற்றிருக்கிறது.
நீலா சின்னஞ் சிறு கிராமத்தைச் சேர்ந்த ஓர் ஏழைச் சிறுமி, மாலா,
சென்னையிலுள்ள புகழ் பெற்ற ஒரு டாக்டரின் மகள், இருவரும்
வேற்றுமையின்றிப் பழகுகின்றனர். இணைபிரியாத
தோழிகளாகின்றனர். இருவரின் அன்பினால் பல நன்மைகள்
விளைகின்றன. அவர்களது நட்பினால் பல அற்புதங்கள் நிகழ்கின்றன.
கதையில் வரும் நீலாவும் மாலாவும் நேரு பரிசு பெற்று, சோவியத் நாடு
சென்று திரும்புகின்றனர். என் இனிய நண்பரும், சிறந்த கவிஞருமாகிய
அமரர் நாக முத்தையா அவர்களின் மகள் செல்வி திலகவதி, 1971ஆம்
ஆண்டு நேரு பரிசு பெற்று சோவியத் நாடு சென்று வந்தார். அவரிடம்
இப்பரிசைப் பற்றியும், பயணத்தைப் பற்றியும் நேரிலே பல
விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். சில புத்தகங்கள்
மூலமாகவும் ‘ஆர்த்தெக்’ முகாம் பற்றித் தெரிந்து கொண்டேன்.
கேட்டதும் படித்ததும் எனக்கு மிகவும் பயன்பட்டன.
விமானத்தில் வரும் போது நீலாவின் வலது கண்ணுக்கு விபத்து
ஏற்பட்டுப் பார்வையை அவள் இழக்கிறாள். இழந்த பார்வையை ஒரு
மாதத்தில் மீண்டும் பெற்றுவிடுகிறாள். இறந்த ஒருவரின் கருவிழியை
எடுத்து நீலாவின் சேதமடைந்த கரு விழிக்குப் பதிலாக வைத்து
ஆபரேஷன் செய்யும் கட்டத்தை விவரிக்க, எனக்குத் தேவையான
விவரங்களையெல்லாம் தந்து உதவியவர்கள் மதுரை மருத்துவக்
கல்லூரித் துணை முதல்வராயிருந்தவரும், பெரும் புகழ்பெற்ற கண்
டாக்டருமாகிய கோ. வேங்கடசாமி அவர்களும், அவரது சகோதரி கண்
டாக்டர் ஜி. நாச்சியாரும் ஆவார்கள்.
எழுத்துலகம் பெரிதும் மதித்துப் போற்றும் கவிஞர், பல்கலை வித்தகர்
உயர்திரு. மீ. ப. சோமசுந்தரம் (சோமு) அவர்கள் அன்போடு
இப்புத்தகத்திற்கு அணிந்துரை தந்திருக்கிறார்கள்.
இப்புத்தகத்திற்கு ஏற்ற முறையில் ஓவியம் வரைந்து தந்தவர் ஓவியர்
ரமணி அவர்கள். இப்புத்தகம் தன்முறையில் வெளிவரப் பலவகையிலும்
உதவியவர்கள் என் அருமை நண்பர் ரத்னம், இளம் ஓவியர் அழ.
திருநாவுக்கரசு, அழகு பழனிச்சாமி ஆகியோராவர்.
இவர்கள் அனைவருக்கும் என் மனங்கனிந்த நன்றி.
இப்புத்தகத்தை வாங்கிப் படிப்பதன் மூலம் என் இலக்கிய முயற்சிக்கு
ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி.
அழ. வள்ளியப்பா



