
நீலா மாலா
அழ. வள்ளியப்பா
மாலா சொன்ன கதை
‘நீலாவைப் பட்டணத்துக்கு வேலைக்காரப் பெண்ணாக அனுப்புகிறேன்’
என்று பார்வதி அம்மாள் சொன்னதும், மாலாவின் அம்மா நளினி
திடுக்கிட்டாள். “என்ன அம்மா, வேலைக்கு வேறு பெண்ணா கிடைக்காது!
நீலா படிப்பிலே எவ்வளவு கெட்டிக்காரி! அவளையா
வேலைக்காரியாக்குவது? அதுவும் இந்தச் சின்ன வயதிலா?” என்று
கேட்டாள்.
இந்தச் சமயம் மாலா தோட்டத்திலிருந்து ரவியுடன் வீட்டுக்குள் வந்தாள்.
நீலா தன் அம்மாவுடன் வீட்டுக்குச் சென்றுவிட்டாள்.
மாலா வீட்டுக்குள் வருவதைப் பார்த்ததும் பாட்டியும் அம்மாவும் பேச்சை
நிறுத்திவிட்டனர்.
“பாட்டி, பாட்டி! நான் ஒரு கதை சொல்லவா பாட்டி?” என்று கேட்டாள் மாலா.
எப்போதும் பாட்டியையே கதை சொல்லும்படி நச்சரிக்கும் மாலா, இன்று
பாட்டிக்குக் கதை சொல்லுகிறாளாம்! பாட்டிக்கு ஆச்சரியமாக இருந்தது.
“மாலா! நீயா கதை சொல்கிறாய்? சொல்லு, சொல்லு!”
“பாட்டி, ஒரே ஒரு ஊரிலே ஒரு பையன் இருந்தார்!”
“என்ன! பையன் இருந்தாரா! இருந்தான் என்றுதான் சொல்லணும்”
“ஐயையோ! அவன், இவன் என்று சொல்லலாமா? தப்பு, தப்பு!”
“கதைதானே, சொல்லலாம். சொல்லு!”
“சரி, அந்தப்பையன் மிகவும் கெட்டிக்காரனாம். ஒவ்வொரு
பாடத்திலேயும் தொண்ணூறுக்கு மேலேதான் மார்க் வாங்குவானாம்.
எஸ்.எஸ்.எல்.சி. யிலே தமிழ் நாட்டிலேயே அதிக மார்க் வாங்கியது அவன்
தானாம்! பத்திரிகைகளில் எல்லாம் அவன் படத்தைப் போட்டு, ‘இவன்
மிகவும் ஏழை; அப்பா அம்மா இல்லை. தாய்மாமன்தான் இவனை மிகுந்த
சிரமப்பட்டுப் படிக்க வைத்தார்’ என்றெல்லாம் எழுதியிருந்ததாம். அதைப்
பார்த்த ஒரு பெரியவர் உடனே அந்தப் பையனை வரவழைத்து, அவனுக்கு
வேண்டிய உதவியெல்லாம் செய்வதாகச் சொன்னாராம்; சொன்னபடியே
செய்தாராம். அந்தப் பையன் மேலும் மேலும் நன்றாகப் படித்து
அவருடைய உதவியாலே டாக்டர் ஆகிவிட்டானாம்!”
இப்படிச் சொன்னதும், கதையைக் கேட்டுக் கொண்டிருந்த பாட்டியும்
அம்மாவும் சிரித்தார்கள்.
“என்ன பாட்டி சிரிக்கிறாய்? டாக்டரான பிறகும் ‘அவன்’ என்று
சொன்னேனே, அதற்காகவா? சரி, இனிமேல் ‘அவர்’ என்றுதான்
சொல்வேன். அந்த டாக்டர் முப்பத்தைந்தாவது வயதுக்குள்ளே மூளை
வியாதி, நரம்பு வியாதிகளையெல்லாம் குணப்படுத்துவதிலே மிகவும்
கெட்டிக்காரர் என்று பெயர் எடுத்து விட்டாராம்! ‘பத்ம பூஷண்’
விருதுகூடப் பெற்று விட்டாராம்!”
“அது சரி, உன் கதையிலே வருகிறவர் யாரென்று சொல்லி விடட்டுமா
மாலா?”
“உம், சொல்லு பாட்டி, சொல்லு பார்க்கலாம்.”
“அவர்தான் என் அருமைப் பேத்தி மாலாவினுடைய அப்பாவாம். டாக்டர்
சூரியசேகர்தான் அவர் பெயராம்…” என்று சொல்லிவிட்டுப் பாட்டி
சிரித்தாள். மாலாவும் அவள் அம்மாவும் கூடச் சிரித்தார்கள்.
“கண்டு பிடித்து விட்டாயே பாட்டி! என் அப்பாவுக்கு உதவி செய்து படிக்க
வைத்தாரே, அவருடைய பெயர் தெரியுமா?”
“ஏன் தெரியாது? உன் அப்பாதான், உங்கள் வீட்டு, முகப்பிலும் பூசை
அறையிலும் அவருடைய பெரிய படத்தை மாட்டி வைத்திருக்கிறாரே!
‘கதிரேசர் இல்லம்’, ‘கதிரேசர் மருத்துவமனை’, ‘கதிரேசர் மருந்துக் கடை’
என்று எடுத்ததற்கெல்லாம் உன் அப்பா அவர் பெயரைத்தானே
வைத்திருக்கிறார்!”
“ஆமாம் பாட்டி, அப்பாவைப் படிக்க வைத்த கதிரேசன் செட்டியாரை, அப்பா ஒரு நாளும் மறப்பதில்லை. அப்பாவுக்கு ஓய்வு கிடைக்கிறதே அபூர்வம்.
அப்படி ஓய்வு கிடைக்கிற நேரத்திலே என்னிடத்திலேயும்
அம்மாவிடத்திலேயும் அவரைப் படிக்க வைத்த கதிரேசன் செட்டியாரைப்
பற்றி நிறையச் சொல்லுவார்.”
“ஆமாம் மாலா, அவருடைய உதவி இல்லாது போனால் உன் அப்பா
இவ்வளவு பேரும் புகழும் பெற்றிருக்க முடியுமா?” என்று நன்றியோடு
கூறினாள் மாலாவின் அம்மா.
இப்படி இவர்கள் பின்கட்டில் பேசிக்கொண்டிருக்கும் போதே, முன்
பக்கத்து ஹாலிலிருந்து பரமசிவம் பிள்ளை அங்கு வந்தார்.
“ரவிப்பயல் என்ன செய்கிறான்? பாட்டியும் பேத்தியும் என்ன
பேசுகிறார்கள்?” என்று கேட்டுக் கொண்டே குழந்தை ரவியின்
கன்னத்தைச் செல்லமாகத் தட்டிக் கொடுத்தார்.
மாலாவும் பாட்டியும் பேசிக் கொண்டிருந்ததை மாலாவின் அம்மா,
சுருக்கமாகக் கூறினாள். அதைக் கேட்டதும், பரமசிவம் பிள்ளை முகத்தில்
ஒரு பிரகாசம் தெரிந்தது. மாலாவை அவர் மகிழ்ச்சியோடு பார்த்தார்.
“மாலா, கதிரேசன் செட்டியார் ஒரு பெரிய வள்ளல்! எத்தனையோ பேருக்கு உதவியிருக்கிறார். அவரது உதவியைப் பெற்றவர்கள், இன்று ஆயிரக்கணக்கான பேருக்கு உதவி வருகிறார்கள். கதிரேசன் செட்டியாரைப்
பார்ப்பதற்கு முன்பு, நான்கூட ஒரு கஞ்சனாகத்தான் இருந்தேன்.
அவரைப் பார்த்த பிறகுதான், அவர் வாரி, வாரி வழங்குவதைக் கேட்ட
பிறகுதான், எனக்கும் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற
எண்ணமே வந்தது…..” என்று பரமசிவம் பிள்ளை சொல்லிக்
கொண்டிருக்கும் போதே,
“அது சரி, கதிரேசன் செட்டியார் பெரிய லட்சாதிபதி. அவர் தருமம்
செய்யலாம். நம்மாலே முடியுமா?” என்றாள் பார்வதி அம்மாள்.
“பார்வதி, அவரைப் போல் நான் பெரிய பணக்காரன் இல்லை. அவரைப்
போல் நம்மாலே பெரிய தருமம் செய்யவும் முடியாது. ஒப்புக்
கொள்ளுகிறேன். ஆனாலும், கடவுள் ஓரளவுக்கு நமக்கு
நன்றாகத்தானே கொடுத்திருக்கிறார்? நம்மாலே முடிந்த அளவு
ஏழைகளுக்கு உதவலாம் அல்லவா?. சரி, சரி, இப்படிப் பேசிக்கொண்டே
இருந்தால் நேரமாகிறது. தாமரைக் குளத்துக்குப் பக்கத்திலே
குடியிருக்கிறாரே கணக்கப் பிள்ளை, அவரைப் பார்த்துவிட்டு வருகிறேன்.
என்னடா ரவி, என்ன மாலா, போய் வரட்டுமா?” என்று கூறி ரவியைச்
செல்லமாகத் தட்டிக் கொடுத்து விட்டு வெளியே புறப்பட்டார் பரமசிவம்
பிள்ளை. ‘தாமரைக் குளம்’ என்று தாத்தா சொன்னதும், ‘அடடே, அதை அப்படியே அரைகுறையாக விட்டு விட்டேனே! அடியோடு மறந்தே போனேன்’ என்று மாலா தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
மாலா சென்னையிலிருந்து வந்தாளே, அதற்கு அடுத்த நாள் காலையிலே,
தாத்தா மாலாவை அழைத்துக் கொண்டு, ஊருக்குப் பக்கத்தில் உள்ள
நிலங்களைப் பார்வையிடச் சென்றார்; செல்லும் வழியில்தான் தாமரைக்
குளம் இருக்கிறது.
அந்தக் குளத்திலே ஒரு பக்கத்தில் அழகாகப் பூத்திருந்த தாமரை
மலர்களைக் கண்டதும், மாலா அங்கேயே நின்று விட்டாள்.
“என்ன மாலா, தாமரைப் பூ வேணுமா? இதோ பறித்துத் தருகிறேன்”
என்று பரமசிவம் பிள்ளை கூறிக் குளத்திலே இறங்கினார். முழங் கால்
அளவு தண்ணீரில் நின்று கொண்டு, கைக்கு எட்டிய தூரத்தில் இருந்த
ஒரு தாமரைப் பூவைப் பறித்தார்; மாலாவிடம் கொடுத்தார்.
மாலா சிறிது நேரம் அந்தக் குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
குளத்திலிருந்த தாமரை மலர்களையும் அங்கே நீந்திய
வாத்துக்களையும், கரை ஓரத்திலே கல்லிலே துணி துவைத்துக்
கொண்டிருந்த இரண்டு மூன்று மனிதர்களையும் பார்த்தாள். பிறகு,
குளத்தைச் சுற்றி இருந்த மரங்களைப் பார்த்தாள். அப்புறம் சிறிது
தூரத்தில் இருந்த மலைகளைப் பார்த்தாள். வானத்திலே கூட்டமாகப்
பறந்து சென்ற பறவைகளையும் பார்த்தாள். அவள் எங்கு எங்கு
பார்த்தாளோ அங்கெல்லாம் அவளுடைய தாத்தாவும் பார்த்தார்.
மாலா பார்த்த காட்சி, அவள் மனத்திலே நன்றாகப் பதிந்து விட்டது. அந்தக்
காட்சியை ஒரு படமாக வரைய வேண்டும் என்பது அவளது ஆசை.
அவளுக்குச் சுமாராகப் படம் போட வரும். சென்னையிலே பொழுது
போகாதபோது படம் வரைந்து கொண்டிருப்பாள்.
அன்று காலைப் பலகாரம் சாப்பிட்ட பின், தாமரைக் குளத்தை ஓர் அழகான
படமாக வரைவதற்கு உட்கார்ந்தாள். மத்தியானம் வரை வரைந்தாள்.
அவளுக்குத் திருப்தியாக அது அமையவில்லை. தொடர்ந்து மூன்று
நான்கு நாட்கள் காலை நேரத்தில் படம் வரைந்தாள். ஆனாலும், நீலாவிடம்
அதைப் பற்றி அவள் சொல்லவே இல்லை. ஊரை விட்டுப் போகும் போது
அந்தப்படத்தை நீலாவுக்குப் பரிசாகக்கொடுத்து ஆச்சரியப்பட
வைக்கவேண்டும் என்று நினைத்தாள். நீலாவுக்குப் பரீட்சை முடிந்த
பிறகு, நீலாவுடனே நீண்ட நேரம் இருந்து வந்தாள். அவளுடன்
பேசுவதிலும் விளையாடுவதிலுமே நேரத்தைப் போக்கினாள். மாடி
அறையிலிருந்த மேஜைக்குள் அரைகுறையாக அவள் வரைந்து
வைத்திருந்த படத்தை அடியோடு மறந்துவிட்டாள். அதன் நினைவு
இப்போதுதான் வந்தது.
கணக்கப்பிள்ளை வீட்டுக்குச் செல்லும் தாத்தாவை வழியனுப்பிவிட்டு
மாடிக்குச் சென்று படத்தைப் பூர்த்தி செய்ய நினைத்தாள்… அப்போது
“மாலா?” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். முரளி வந்து
கொண்டிருந்தான்.
“என்னையா கூப்பிட்டாய்?” என்று கேட்டாள் மாலா.
“ஆமாம் மாலா! உன்னிடத்திலே ஒரு முக்கியமான விஷயம் சொல்லப்
போகிறேன். மிக மிக முக்கியமான விஷயம்”
“அப்படி என்ன மிக மிக முக்கியமான விஷயம்? உம், சீக்கிரம் சொல்லு.”
“அது மிகவும் ரகசியமான விஷயம். ரகசியமான விஷயத்தை இங்கே
சொல்லலாமா? தோட்டத்துக்கு வா. அங்கே சொல்லுகிறேன்.”
“முரளி! எனக்கு ‘ரகசியம்’ என்றாலே பிடிக்காது. எதையும்
மனசுக்குள்ளே மறைத்து வைக்கிறதும் பிடிக்காது…”
“மாலா, உனக்கு அந்த ரகசியம் தெரிய வேண்டுமா, வேண்டாமா?
வேண்டுமானால், தோட்டத்துக்கு வா. இல்லாத போனால், பேசாமல் போ.”
மாலாவுக்கு அரைகுறையாக உள்ள சித்திரத்தை முடிக்க வேண்டும்
என்ற ஆவல் இருந்தது. அதே சமயம், முரளி ஏதோ ரகசியம் என்கிறானே,
அது என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும்
இருந்தது. சிறிதுநேரம் ஏதோ யோசனை செய்தாள். பிறகு, “முரளி, வா.
தோட்டத்துக்குப் போகலாம். மாமரத்தடியிலே உட்கார்ந்து ரகசியம்
பேசலாம்” என்றாள் மாலா.
முரளிக்கு ஆனந்தம். மாலா முன்னால் சென்றாள். முரளி பின்
தொடர்ந்தான்.



