
நீலா மாலா
அழ. வள்ளியப்பா
சங்கிலியாண்டி சரண் அடைந்தான்!
நாடகம் பார்க்க வந்தவர்கள் நடு நடுங்கி நின்ற போது, சங்கிலியாண்டி
தலை குனிந்து எல்லாருக்கும் வணக்கம் செலுத்தினான். பிறகு, ஒலி
பெருக்கியின் முன்னால் வந்து நின்றுகொண்டு பேசினான்! “என்னைப்
பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி
வரை, நான் கொள்ளைக்காரனாகத்தான் இருந்தேன்; கொலைகாரனாகத்
தான் இருந்தேன். இப்போது இந்த நாடகத்தைப் பார்த்த பிறகு, என் மனசு
அடியோடு மாறிவிட்டது.”
சங்கிலியாண்டியின் பேச்சை ஒருவருமே நம்பவில்லை.
“உங்களுக்கு நம்பிக்கை வராது. ஆனால், சத்தியமாகச் சொல்கிறேன்.
இந்த ஊர் மாரியம்மனுக்குப் பொதுவாகச் சொல்கிறேன். நான் பழைய
சங்கிலியாண்டி இல்லை. இந்தப் பிள்ளைகள் போட்ட நாடகம் என்னைத்
திருத்தி விட்டது”
ஒரு பிரபல கொள்ளைக்காரன், பொல்லாத கொலைகாரன், சிறுவர்களின்
நாடகத்தைப் பார்த்துத் திருந்தி விடுவானா? அவர்களுக்கு நம்பிக்கை
ஏற்படவில்லை.
“தயவு பண்ணி எல்லாரும் உட்காருங்கள். நான் சொல்லப் போகிறதைப்
பெரிய மனசு பண்ணிக் கேளுங்கள்” என்றான் திருடன்.
அப்போதும் சத்தம் அடங்கவில்லை. மக்கள் உட்காரவும் இல்லை. உடனே
பரமசிவம் பிள்ளையும், தலைமை ஆசிரியர் தணிகாசலமும் மேடைக்கு
வந்தார்கள். பாதுகாப்புக்காக வந்த போலீஸ்காரர்களும் மேடையை
நோக்கிச் சென்றார்கள். மூலைக்கு ஒருவராக உஷாராக நின்று
கொண்டார்கள்.
“தயவு செய்து உட்காருங்கள். சங்கிலியாண்டி ஏதோ சொல்லப்
போகிறானாம். என்னதான் சொல்கிறான் என்று பார்ப்போமே!” என்றார்
பரமசிவம் பிள்ளை,
“ஆமாம், அமைதியாக உட்காருங்கள்” என்றார் தலைமை ஆசிரியர்
தணிகாசலமும்.
பிறகுதான் எல்லாரும் அமைதியாக உட்கார்ந்தார்கள். சங்கிலியாண்டி
என்ன சொல்லப் போகிறான் என்று ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.
“இந்த வட்டாரத்திலே என் பெயர் எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.
எல்லாரும் நல்ல பெயர் எடுக்கப் பாடுபடுவார்கள். நானோ
கொலைகாரன், கொள்ளைக்காரன் என்று பெயர் எடுத்து விட்டேன். பத்து
வருஷமாகப் போலீஸ்காரர்களுக்கு அகப்படாமலே இருந்த நான், போன
வருஷம் சரியாக மாட்டிக்கொண்டேன். எனக்கு ஆயுள் தண்டனை
கொடுத்தார்கள். ஆனால், ஆறு மாதத்திற்கு முன்னாலே ஜெயிலிலிருந்து
தப்பி ஓடி வந்துவிட்டேன். பிறகு என்ன என்னவோ வேஷமெல்லாம்
போட்டுக்கொண்டு ஊர் ஊராகச் சுத்தினேன். ஆனால், திருட்டுத்
தொழிலை மட்டும் விடவில்லை. இங்கே நாடகம் நடக்கிறதைக்
கேள்விப்பட்டுச் சாமியார் வேஷத்திலே இங்கு வந்தேன். கூட்டத்தோடு
கூட்டமாக ஒரு மூலையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
நாடகத்திலே வந்த சில காட்சிகளைப் பார்த்து அப்படியே உருகிப்
போனேன். என் இரும்பு மனசை இளக வைத்து விட்டது இந்தக்
குழந்தைகள் போட்ட நாடகம்.”
சங்கிலியாண்டி இதைச் சொன்னபோது, அவன் தொண்டை அடைத்தது.
கண்கள் கலங்கின “போன மாதம் நான் ஒரு வீட்டுக்குத் திருடப் போனேன். பீரோவை உடைத்துப் பணப் பெட்டியை எடுக்கப் போன சமயம், வீட்டுக்காரர் விழித்துக் கொண்டார். ‘ஐயோ! திருடன்! திருடன்!’ என்று கத்தினார்.
உடனே நான் பிச்சுவாக் கத்தியை அவருடைய நெஞ்சுக்கு நேரே
கொண்டு போனேன். அப்போது ஏழு வயதான அவருடைய பெண் ஓடி
வந்து, ‘ஐயோ, அப்பாவை எதுவும் செய்திடாதே. என் அம்மா செத்துப்
பத்து நாள் கூட ஆகவில்லை. அப்பாவையும் கொன்று விடாதே’ என்று
கதறிக் கதறி அழுதது. நான் அதை எவ்வளவோ மிரட்டிப் பார்த்தேன். அது
சத்தம் போடுவதை நிறுத்தவில்லை. ஆத்திரத்திலே அந்தச் சின்னப்
பெண்ணை நான்… நான்… நான்…. என் கத்தியாலே கொஞ்சம்கூட ஈவு
இரக்கம் இல்லாமல் குத்திக் கொன்றுவிட்டுப் பணப் பெட்டியோடு தப்பி
வந்துவிட்டேன். ஒரு பாவமும் அறியாத அந்தச் சிறுமியைக்
கொன்றதற்குக் கடவுள் என்னை நன்றாகத் தண்டித்து விட்டார்.”
சங்கிலியாண்டி சற்று நிறுத்தினான்; கண்களில் வழிந்த நீரைத்
துடைத்துக் கொண்டான்; பிறகு தொடர்ந்தான்:
“மறு நாள் குடுகுடுப்பைக்காரன் வேஷத்திலே சங்கரம்பட்டிக்குப்
போனேன். நான் ஜெயிலுக்குப் போனபோது, அந்த ஊரிலேதான் என்
சம்சாரமும் என் ஒரே மகள் மீனாவும் ஒரு வீட்டிலே இருந்தார்கள். ஆனால்,
நான் போனபோது அந்த வீட்டில் யாருமே இல்லை. அக்கம் பக்கத்திலே
விசாரித்துப் பார்த்தேன். என் ஏழு வயது மகள் மீனா பத்து நாட்களாய்க்
காய்ச்சலாய்க் கிடந்தாளாம். சாப்பாட்டுக்கே வழியில்லாமல் என் சம்சாரம்
தவித்துக் கொண்டு இருந்தாளாம். பெண்ணுக்கு மருந்து வாங்க அவள்
எங்கே போவாள்? காய்ச்சல் அதிகமாகி என் மீனா – என் அருமை மகள்
மீனா.. கண்ணை மூடி விட்டாளாம், நான் ஒரு சிறுமியைக் கொலை
பண்ணினேன். அதற்குப் பதிலாக என் மகளைப் பறிகொடுத்து விட்டேன்..
.
என் மகளை மட்டும் பறிகொடுக்கவில்லை. கூடவே, என் சம்சாரத்தையும்
பறிகொடுத்து விட்டேன். மகள் இறந்த துக்கம் தாங்காமல் அவளும்
நஞ்சைத் தின்று செத்துப் போய் விட்டாளாம்… பாவம், தன் புருஷன்
கொள்ளைக்காரனாக, கொலைகாரனாக இருந்தால், எந்தப்
பெண்பிள்ளையாலே நாலு பேருக்கு நடுவே நிம்மதியாக, கௌரவமாக
வாழ முடியும்? என் குடும்பமே அழிந்து போய்விட்டது! பெற்ற
குழந்தையையும் கட்டின மனைவியையும் கடைசி நிமிஷத்திலேகூடப்
பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. நான் எத்தனையோ பேரை
அழவைத்தேன். அலற வைத்தேன்; குத்திக் காயப்படுத்தினேன்; கொலை
பண்ணினேன். கடவுள் கொடுத்த கையும் காலும் நன்றாக இருந்தும்,
நான் உழைத்துப் பிழைக்கவில்லை. ஊரைக் கொள்ளையடித்துப்
பிழைத்தேன்.. ஏராளமான பணத்தைக் கொள்ளையடித்தேன். ஆனால்,
நான் கொள்ளையடித்த பணத்திலே ஒரு காசுகூட, சாகக் கிடந்த என்
மகளுக்கு மருந்து வாங்கப் பிரயோசனப்படவில்லை. ஐயோ….”
தலைமயிரைப் பிடித்துக்கொண்டு சங்கிலியாண்டி அழுதான். தாரை
தாரையாக அவன் கண்களிலிருந்து நீர் வழிந்தது. துக்கம் தொண்டையை
அடைக்க, அவன் மேலும் சொன்னான்:
“இந்த நாடகம் என்னைத் திருத்தி விட்டது. என்னைத் திருத்தவே இந்த
நாடகத்தைப் போட்ட மாதிரி இருந்தது. இதிலே வந்த பொன்னி, நான்
குத்திக் கொன்றேனே அந்தப் பெண், என் மகள் மீனா மூன்று பேரும்
மாறி மாறி என் முன்னாலே வந்து, ‘நீயும் ஒரு அப்பனா? நீயும் ஒரு
அப்பனா?’ என்று கேட்கிற மாதிரி இருக்கிறது. நான் இன்றைக்கே இந்தத்
திருட்டுத் தொழிலுக்கு முழுக்குப் போட்டு விட்டேன்.
ஜெயிலிலேயிருந்து தப்பித்து வந்த நான், திரும்பவும் ஜெயிலுக்கே
போகப் போகிறேன். ஐயா, போலீஸ்காரர்களே, இதோ நான் சரண்
அடைந்து விட்டேன். என்னைக் கைது செய்யுங்கள்.”
சங்கிலியாண்டி இப்படிக் கூறிக் கொண்டிருக்கும் போதே மேடையின் ஓர்
ஓரமாக ஒரு ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து போலீஸ் அதிகாரி
இறங்கினார். நாடகம் தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்று
அவர் நினைத்தார். அவர் ஜீப்பிலிருந்து இறங்குவதைக் கண்டதும்,
தலைமை ஆசிரியர், “அதோ சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவமே வந்துவிட்டார்?”
என்று கூறிக்கொண்டே மேடையிலிருந்து இறங்கி அவர் அருகே ஓடினார்.
நடந்ததைச் சுருக்கமாகச் சொல்லி அவரை மேடைக்கு அழைத்து வந்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவத்தை மேடையில் கண்டதும், சங்கிலியாண்டி
அவருக்கு வணக்கம் செலுத்திவிட்டு, இரு கைகளையும் அவர் முன்
நீட்டினான்.
உடனே சப்-இன்ஸ்பெக்டர் அங்கிருந்த போலீஸ்காரர்களை அழைத்தார்.
அவர்கள் சங்கிலியாண்டியின் இரு கைகளிலும் விலங்கை மாட்டினார்கள்.
அப்போது சப்-இன்ஸ்பெக்டர், “எங்கே, நாடகத்தில் நடித்த குழந்தைகள்?”
என்று கேட்டார்.
“அதோ வருகிறார்கள்” என்றார் பரமசிவம் பிள்ளை. நீலா, மாலா, முரளி
இன்னும் நாடகத்தில் நடித்த குழந்தைகள் எல்லாரும் எங்கிருந்தோ
மேடையை நோக்கித் துள்ளிக்குதித்துக்கொண்டே வேகமாக வந்தார்கள்.
அப்போது பரமசிவம் பிள்ளை, “சப்-இன்ஸ்பெக்டர் சார்! மேடைக்குச்
சங்கிலியாண்டி வந்ததும் எல்லாரும் பயந்து போனோம். ஒரு வேளை,
இந்த நாடகம் தன்னைத்தான் குத்திக் காட்டுகிறது என்று அவன்
நினைத்துவிட்டால்….? ஒரு பாவமும் அறியாத இந்தக் குழந்தைகளை
அவன் என்ன செய்வானோ என்று பயந்து விட்டேன். ஸ்கூல் டிராயிங்
மாஸ்டரிடத்திலே சொல்லிக் குழந்தைகளையெல்லாம் பின்பக்கமாக
அழைத்துப்போக ஏற்பாடு செய்தேன். சிறிது தூரத்திலே என் தங்கை வீடு
இருக்கிறது. அங்கேதான் இவர்கள் எல்லாம் இருந்தார்கள்.
உண்மையிலேயே சங்கிலியாண்டி திருந்தி விட்டான் என்று
தெரிந்தவுடனே, ஆள் அனுப்பி அழைத்துவரச் சொன்னேன்.
அதற்குள்ளே நீங்களும் வந்து சேர்ந்து விட்டீர்கள்.”
சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் குழந்தைகள் மத்தியிலே நின்று பேச
ஆரம்பித்தார். ஒலி பெருக்கியில் அவரது பேச்சு கணீரென்று கேட்டது!
“பொதுமக்களே! சங்கிலியாண்டி இங்கு தானாகச் சரண் அடைந்த
நிகழ்ச்சி மிகவும் அபூர்வமானது அதிசயமானது. இந்தச்
சங்கிலியாண்டியைப் பிடிக்க எங்கள் போலீஸ் இலாகா எவ்வளவோ
முயன்றது. இதற்காக நாங்கள் போகாத ஊர் இல்லை; அலையாத இடம்
இல்லை. ஆனாலும், எப்படியோ எங்களுக்கெல்லாம் டிமிக்கி கொடுத்து
வந்த சங்கிலியாண்டி இன்று தானாகவே சரண் அடைந்திருக்கிறான்!
சங்கிலியாண்டி சரணடையக் காரணமாக இருந்ததே இந்த நாடகம்தான்.
இந்த நாடகத்தில் நடித்த அருமைக் குழந்தைகள் தான்.”
“அன்றைக்கு இந்த நாடகத்தைப் படித்துப் பார்த்தபோதே, நான் மிகவும்
மகிழ்ச்சி அடைந்தேன். திருடனைத் திருத்தும் இந்த நாடகம் போலீஸ்
இலாகாவுக்கு உதவியாக இருக்கும் என்று கருதினேன். ஆனால்,
இவ்வளவு விரைவிலே பலன் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே
இல்லை. நாடகத்தில் நடித்த எல்லாக் குழந்தைகளுக்கும் நான் போலீஸ்
இலாகாவின் சார்பில் நன்றி சொல்கிறேன்.”
“பொதுமக்கள் சார்பில் நான் நன்றி சொல்கிறேன்” என்று
கூட்டத்திலிருந்த ஒருவர் உரக்கக் கூவினார்.
உடனே எல்லாரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
தொடர்ந்து பேசிய சப்-இன்ஸ்பெக்டர், “சென்ற மாதம் இந்தச்
சங்கிலியாண்டி ஒரு சிறுமியைக் கொன்று, பணத்தைக்
கொள்ளையடித்து விட்டான் என்பதை அறிந்ததும், இனி இவனை விட்டு
வைக்கக்கூடாது என்று முடிவு கட்டினோம். மேல் அதிகாரிகளுக்கு
எழுதினோம். சங்கிலியாண்டியைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு
ஐயாயிரம் ரூபாய் பரிசு கொடுப்பதாக அறிவிக்கும்படி இன்று
காலையில் தான் தகவல் வந்தது. அது சம்பந்தமாகத்தான் கலெக்டருடன்
பேசி விட்டு வந்தேன். பரிசை அறிவிப்பதற்கு முன்பே சங்கிலியாண்டி
சரணாகதி அடைந்து விட்டான்! பரிசுத் தொகையை இந்தக்
குழந்தைகளுக்கே அளிக்கும் படி மேல் அதிகாரிகளுக்கு நான் சிபார்சு
செய்யப் போகிறேன். நிச்சயம் அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.
இப்போது நாங்கள் சங்கிலியாண்டியை அமரபுரத்துக்குக் கொண்டு
செல்கிறோம். இன்று இரவே மேல் அதிகாரிகளுக்குத் தகவல்
கொடுப்போம். நாடகத்தில் நடித்த குழந்தைகளுக்கு மீண்டும் என்
நல்வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். வணக்கம்” என்று கூறி
நீலா, மாலா, முரளி ஆகியோருக்குக் கைகொடுத்துப் பாராட்டினார்.
பிறகு மேடையைவிட்டுக் கீழே இறங்கினார்.
இரண்டு போலீஸ்காரர்கள் சங்கிலியாண்டியைக் கொண்டுபோய் ஜீப்பின்
பின்சீட்டில் நடுவே உட்கார வைத்து, ஆளுக்கு ஒரு பக்கமாக அமர்ந்து
கொண்டார்கள். சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் முன் சீட்டில் உட்கார்ந்து
கொண்டார். நாடகத்தில் நடித்த குழந்தைகள், பரமசிவம் பிள்ளை,
தலைமை ஆசிரியர், பொதுமக்கள் எல்லாரும் அவர்களைக் குதூகலமாக
வழியனுப்பி வைத்தார்கள். ஜீப் நகரும் போது, விலங்கிட்ட கைகளைத்
தூக்கித் தூக்கி எல்லாருக்கும் வணக்கம் செலுத்தினான் சங்கிலியாண்டி.
ஜீப் மறைந்த பிறகு பொதுமக்கள் எல்லாரும் நீலா, மாலா, முரளி
ஆகியோரை மிகவும் பாராட்டினார்கள். அப்போது அவர்கள் அடைந்த
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!
மறுநாள் காலை பரமசிவம் பிள்ளை வீட்டுக்கு முன்னால் போலீஸ் ஜீப்
வந்து நின்றது. அதிலிருந்து டி.எஸ்.பி. (மாவட்டத் தலைமைப் போலீஸ்
அதிகாரி) திருஞானம் இறங்கினார். அவருடன் கூட சப்-இன்ஸ்பெக்டர்
சதாசிவமும், ஒரு புகைப்படக்காரரும் வந்தனர். டி.எஸ்.பி. திருஞானம்
நாடகத்தில் நடித்த குழந்தைகளை வரவழைத்து, அவர்களை மிகவும்
பாராட்டியதோடு, ஒவ்வொருவரைப் பற்றிய விவரங்களையும் குறித்துக்
கொண்டார். பிறகு, நீலா, மாலா, முரளி மூவரையும் தனித் தனியாகவும்,
சேர்த்தும் புகைப்படம் எடுத்தார்கள். நாடகத்தில் நடித்த குழந்தைகள்
எல்லாரையும் ஒன்றாக நிற்க வைத்தும் ஒரு படம் எடுத்தார்கள்.
புகைப்படம் எடுத்து முடிந்த பிறகு, சப்-இன்ஸ்பெக்டருடன் டி.எஸ்.பி.
நாடகம் நடந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டார்.
அன்று போலீஸ் அதிகாரிகளுக்கும் நாடகத்தில் நடித்த
குழந்தைகளுக்கும் பரமசிவம் பிள்ளை வீட்டில் பலத்த விருந்து நடந்தது.
குழந்தைகளைப் பாராட்ட வீடுதேடி வந்தவர்களுக்கும் விருந்துச் சாப்பாடு
கிடைத்தது!
பார்வதி அம்மாள், நீலாவின் அம்மா மீனாட்சியிடம், “மீனாட்சி! நம்
குழந்தைகளுக்குத் திருஷ்டி பட்டுவிடப் போகிறது; உடனே திருஷ்டி
கழிக்க வேண்டும். சமையல் கட்டிலே இருக்கிற பூசணிக்காயைக்
கொண்டு வா” என்றாள். பூசணிக்காயில் சூடத்தை ஏற்றி வைத்துக்
குழந்தைகளை மூன்று முறை சுற்றிவந்து, வாசலில் கொண்டு போய்
உடைத்தாள்.
பிறகு, “மாலா! நீலா!” என்று இருவரையும் அருகிலே அழைத்தாள் பார்வதி
அம்மாள். இருவரையும் கட்டிப் பிடித்துக்கொண்டு பாசத்துடன் மாறி
மாறிப் பார்த்தாள். அப்போது அவளது கண்களிலிருந்து அருவி போல் நீர்
வழிந்தது.
“ஏன் பாட்டி, அழுகிறாய்?” என்று கவலையோடு கேட்டாள் மாலா.



