நீலா மாலா
அழ. வள்ளியப்பா

ஒளி தெரிந்தது!

    நீலா, மாலாவுடன் திரும்பிவந்த குழந்தைகள் விமானத்தை விட்டு
    இறங்கியதுமே,

    “அதோ, அதோ, எல்லாருக்கும் முன்னால் வருகிறான் சுரேஷ்”

    “அதோ, நம் ரேகா வருகிறாள்!”

    “வலது பக்கம் வருகிறான் சந்த்ரேஷ்!”

    “சந்த்ரேஷ் பக்கத்திலே வருகிறாள் நீரஜா!”

    • இப்படி அந்தக் குழந்தைகளின் உறவினர்கள் மகிழ்ச்சியோடு அவர்களை
      வரவேற்கத் தயாரானார்கள்.

    ஆனால் மீனாட்சி அம்மாளோ, “ஐயோ, நீலாவுக்கும் மாலாவுக்கும்
    நிறையக் கண் திருஷ்டி பட்டிருக்கும், வீட்டுக்கு வந்ததும் முதல்
    வேலையாகத் திருஷ்டி சுற்றிப் போட வேண்டுமென்று நினைத்தேனே!
    கண் திருஷ்டி கழிப்பதற்கு முன்னாலே, நீலாவின் கண்ணுக்கு ஆபத்து
    வந்துவிட்டதே!” என்று கதறி அழுதாள்.

    “அம்மா, அழாதீர்கள். நீலாவுக்கு நல்ல மனசு. அவளுக்கு எந்த ஆபத்தும்
    வராது. ஒரு வேளை, கண் வலியாக இருந்தாலும் இருக்கலாம்.

    அவசரப்படாதீர்கள். கடவுள் கிருபையாலே எல்லாம் நல்லபடியாக
    நடக்கும்” என்று ஆறுதல் கூறினார் டாக்டர் சூரியசேகர்.

    “மாரியாத்தா, என் நீலாவை நீதான் காப்பாற்ற வேணும்” என்று
    பூங்குடியில் உள்ள மாரியம்மனை நினைத்து இரு கைகளையும்
    சேர்த்துக் கும்பிட்டாள் மீனாட்சி அம்மாள்.

    இதற்குள், “அதோ, அதோ, ரேணுகா தேவி வருகிறாள்!”, “ஆ! பிரபல
    நட்சத்திரம் ரேணுகா தேவி வருகிறாளே!” என்று விமான நிலையத்தில்
    கூடியிருந்த சிலர் ஆரவாரத்துடன் கூவினார்கள்.

    பல தமிழ்ப் படங்களிலும், சில இந்திப் படங்களிலும் நடித்துப் புகழ்பெற்ற ரேணுகா தேவி, நீலாவுக்கும் மாலாவுக்கும் பின்னால் வந்து
    கொண்டிருந்தாள். அப்போது அவள் முகத்தில் மலர்ச்சி இல்லை; ஏதோ
    கவலையுடன் அவள் வருவது தெரிந்தது.

    நீலாவும் மாலாவும் நெருங்கி வந்ததும், மீனாட்சி அம்மாள், நீலாவின்
    அருகிலே ஓடி, “நீலா, உன்னை நான் ‘என் கண்ணே, என் கண்ணே’ என்று
    கூப்பிடுவேனே, இப்போது நீ, உன் கண்ணிலே கட்டுப் போட்டபடி
    வந்திருக்கிறாயே! என்னம்மா நடந்தது?” என்று பதற்றத்துடன் கேட்டாள்.
    “ஒன்றுமில்லை, அம்மா. வீட்டுக்குப் போய் சாவதானமாகப் பேசுவோம்”
    என்றாள் நீலா. எப்போதும்போல், அவள் சிரித்த முகத்துடனே இருந்தாள்.
    அதற்குள் சினிமா நட்சத்திரம் ரேணுகா தேவி, “அம்மா! எல்லாம் என்னால்
    வந்த தொல்லை தான். என்னை மன்னித்து விடுங்கள்” என்று
    கலக்கத்துடன் கூறினாள்.

    “என்ன! என்ன நடந்தது?” என்று கவலையோடு கேட்டாள் மீனாட்சி
    அம்மாள்.

    இதற்குள் ரஷ்யத் தூதரகத்திலிருந்து வந்த இரண்டு அதிகாரிகள் அங்கு
    வந்துவிட்டார்கள். பரிசு பெற்ற குழந்தைகளை சோவியத் நாட்டிற்கு
    அழைத்துச் சென்றாரே, தூதரகத்தைச் சேர்ந்த அம்மையார், அவர் அந்த
    அதிகாரிகளிடம் தனியாக ஏதோ சொன்னார். உடனே அவர்கள் விமான
    நிலையத்தில் இருந்த ஒரு குளிர் சாதன அறைக்குள் எல்லாரையும்
    அழைத்துச் சென்றார்கள்.

    அறைக்குள் சென்றதுமே, “மாலா, நீதான் சொல்லேன். என்ன நடந்தது”
    என்று கேட்டாள் மீனாட்சி அம்மாள்.

    அதற்குள் ரேணுகா தேவி, “அம்மா, நடந்ததை நானே சொல்லுகிறேன்.
    உலகப் பயணம் சென்ற நான், மாஸ்கோவிலிருந்து இந்தக்
    குழந்தைகளுடன் விமானத்தில் வந்து கொண்டிருந்தேன். வலது
    பக்கத்தில் நான் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அதே வரிசையில் இடது
    பக்கம் நீலாவும் மாலாவும் உட்கார்ந்திருந்தார்கள். நீலாவின் முகம்
    எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. ‘எங்கே பார்த்தோம்?’ என்று
    யோசித்தேன். அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. ஆறு
    மாதங்களுக்கு முன்பு, சென்னையில் ‘பொன் மனம்’ என்ற சிறுவர்
    படத்தைப் பார்த்தேன். அதில் நடித்தவள் தான் நீலா என்பது என்
    நினைவுக்கு வந்தது. உடனே நீலாவை என் அருகே அழைத்தேன். என்
    பக்கத்து ‘ஸீட்’ காலியாக இருந்தது. அதில் நீலாவை உட்காரச் சொல்லி,
    அவளுடன் பேசிக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் சென்றதும், நீலா
    அவளுடைய இடத்துக்குச் செல்வதற்காக எழுந்தாள். அப்போது
    சட்டென்று விமானம் சிறிது தூரம் கீழே இறங்கி, பிறகு முன்போல் மேலே
    பறந்து சென்றது. விமானம் செல்லும் போது, எதிரே ஒரு கழுகு
    வந்ததாம். அதனால்தான் விமானத்தைச் சிறிது தூரம், கீழே
    இறக்கியதாகச் சொன்னார்கள். விமானம் சட்டென்று கீழே இறங்கிய
    போது, எழுந்து நின்ற நீலா என் பக்கமாகச் சாய்ந்தாள். கீழே
    விழுந்துவிடாதபடி நான் அவளைப் பிடிக்கப் போனேன். அப்போது
    தவறுதலாக என் விரல் நீலாவின் கண்ணிலே பட்டுவிட்டது. புலி,
    கரடியைப் போல் நான் நீளமாக வளர்த்திருக்கிறேனே இந்த நகம், இது
    அவள் கண்ணிலே பட்டுவிட்டது…”

    ரேணுகா தேவி இதைச் சொன்னதும், “என்ன! நகம் பட்டுவிட்டதா? இந்தக்
    கூர்மையான நகம் நீலாவின் கண்ணில் பட்டுவிட்டதா” என்று துடித்தாள்,
    மீனாட்சி அம்மாள்.

    உடனே சூரியசேகர், “அம்மா, அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராதீர்கள்.
    டாக்டர் இந்தர் சிங் வீட்டில் தானே நாம் தங்கியிருக்கிறோம்? அவர்
    டில்லியிலேயே பிரபலமான கண் டாக்டர். அவரிடம் காட்டி என்ன
    செய்யலாம் என்று கேட்போம். எப்படியும் அவர் குணப்படுத்தி விடுவார்.
    உடனே அவரிடம் கொண்டுபோய்க் காட்டுவோம்” என்று கூறினார்.
    பிறகு, எல்லாரும் பிரிந்து சென்றார்கள். அவர்கள் நீலாவிடம் விடை
    பெறும்போது, அவள் சிரித்தபடியே விடை கொடுத்தாள். “எனக்கு
    ஒன்றுமில்லை. சரியாகிவிடும்” என்று சொன்னாள். நடிகை ரேணுகா
    தேவியும், ரஷ்யத் தூதரகத்தைச் சேர்ந்த அம்மையாரும் நீலாவைப் பிரிய
    மனமில்லாமல் கூடவே வந்தார்கள்.

    டாக்டர் இந்தர் சிங், நீலாவின் கண்ணிலே இருந்த கட்டை அவிழ்த்தார்.
    அவிழ்க்கும்போதே, “நீலா, உன் கண்ணில் நகம் பட்டதும் ரத்தம் வந்ததா?”
    என்று கேட்டார்.

    “இல்லை டாக்டர், நகம் பட்டதும் கண் கலங்கியது; நீர் வழிந்தது; பார்வை
    மங்கியது. உடனே விமானப் பணிப்பெண்கள் முதல் உதவி செய்து
    கண்ணைக் கட்டிவிட்டார்கள்.”

    “சரி, இப்போது நீ உன் இடது கண்ணை மூடிக்கொள்..”

    நீலா இடது கண்ணை நன்றாக மூடிக் கொண்டாள்.

    “வலது கண்ணால் என்னைப் பார்; தெரிகிறேனா?”

    “இல்லை டாக்டர்.”

    “இதோ எதிரில் இருக்கிற சுவர் தெரிகிறதா?”

    “இல்லை டாக்டர்.”

    நீலா பதில் சொல்லச் சொல்ல, “ஐயோ, என் மகளின் ஒரு கண் குருடாகி
    விட்டதே!” என்று கதறிக் கண்ணீர் விட்டாள் மீனாட்சி அம்மாள்.
    டாக்டர் இந்தர் சிங் நீலாவைப் பார்த்து, “நீலா, இதோ இந்த விளக்கு
    வெளிச்சம் தெரிகிறதா?” என்று கேட்டார்.

    “தெரிகிறது டாக்டர்” என்றாள் நீலா.

    “வெரிகுட். வெளிச்சம் தெரிகிறதா? அப்படியானால் உள்ளே பார்வை
    நரம்பு நன்றாக இருக்கிறது! அம்மா, துளிக்கூடக் கவலைப்படாதீர்கள்.

    கருவிழி மட்டும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறது. நல்லவேளை. வெள்ளை
    விழியோ, மற்ற உள் உறுப்புகளோ சேதம் அடையவில்லை. ஆகையால்,
    எளிதில் குணப்படுத்திவிடலாம்” என்று தைரியம் கூறினார் டாக்டர் இந்தர்
    சிங்.

    டாக்டர் சூரியசேகர் இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார். அப்போது
    மீனாட்சி அம்மாள், “குணமாக எவ்வளவு நாட்களாகும்?” என்று கேட்டாள்.

    “நன்றாகப் பார்வை தெரிய ஒரு மாதம் ஆகலாம்.”

    “என்ன! ஒரு மாதமா? அவ்வளவு நாளாகுமா?”

    “ஆமாம்மா. கருவிழியில் நகம் பட்டதால் புண் இருக்கிறது. அது
    ஆறியவுடன் ஆபரேஷன் செய்து…”

    “என்ன! கண்ணிலே ஆபரேஷனா?”

    “சின்ன ஆபரேஷன் தான். ஆபரேஷன் முடிந்ததும் முன்போல் கண்
    பார்வை வந்துவிடும். இது போல் நான் எத்தனையோ ஆபரேஷன்
    செய்திருக்கிறேன். நீங்கள் விரும்பினால் இங்கேயே இருந்து
    குணப்படுத்திக் கொள்ளலாம். சென்னையிலும் இந்த மாதிரி ஆபரேஷன்
    செய்யக் கூடிய சில கண் டாக்டர்கள் இருக்கிறார்கள்.”

    டாக்டர் இந்தர் சிங் இப்படிக் கூறியதும், “சென்னையில் இருக்கும் கண்
    டாக்டர் வேங்கடசாமியை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்
    சூரியசேகர்.
    “அவரைத் தெரியாமல் இருக்க முடியுமா? பல மாநாடுகளிலும்,
    கருத்தரங்குகளிலும் சந்தித்திருக்கிறேன்! இந்தத் துறையில் அவர் பெரிய
    நிபுணராயிற்றே!” என்றார் இந்தர் சிங்.

    “உங்களைப் போலவே அவரும் எனக்கு மிகவும் வேண்டியவர். எனக்கு
    ஊரிலே நிறைய வேலை இருப்பதால், ஒரு மாதம் இங்கே தங்குவது சிரமம்.

    நாளையே சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டுச் செல்லலாம்
    என்றிருக்கிறேன்.”

    டாக்டர் சூரியசேகர் இப்படிச் சொன்னதும், டாக்டர் இந்தர் சிங் தடுத்துச்
    சொல்லவில்லை. “உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள்” என்றார்.
    நீலாவுக்கு விரைவில் கண் பார்வை தெரிந்து விடும் என்று அறிந்ததும்,
    நடிகை ரேணுகா தேவி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். டாக்டர்
    சூரியசேகரிடம், “டாக்டர், நானும் நாளை உங்களுடன் சென்னை
    வருகிறேன். நீலாவுக்கு வைத்தியம் பார்க்க என்ன செலவானாலும், அதை
    நான் ஏற்றுக் கொள்கிறேன். அது என் கடமை. இந்த விபத்தே என்னால்
    ஏற்பட்டதுதானே!” என்று மனம் உருகிக் கூறினாள்.
    “உங்கள் மேல் எந்தக் குற்றமும் இல்லை. அது தற்செயலாக நடந்த
    விபத்து. சென்னை சென்றதும் உங்கள் வேலையை நீங்கள்
    கவனியுங்கள். நீலாவின் நிலைமை பற்றி அவ்வப்போது டெலிபோனில்
    கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்” என்றார் டாக்டர் சூரியசேகர்.
    மறுநாள் விமானத்தில் நீலா, மாலா, டாக்டர் சூரியசேகர், மீனாட்சி அம்மாள், ரேணுகா தேவி ஆகிய ஐவரும் புறப்பட்டுச் சென்னை வந்து
    சேர்ந்தார்கள்.

    ‘காலிங் பெல்’ சத்தம் கேட்டதும், மாலாவின் அம்மா நளினி விரைந்துவந்து
    கதவைத் திறந்தாள். மறுநாள் காலையில் ரயிலில் வருவதாக
    இருந்தவர்கள், ஒரு நாள் முன்னதாகவே வந்ததைக் கண்டதும், “அடே,
    இன்றே வந்து விட்டீர்களே!” என்று மகிழ்ச்சி பொங்க வரவேற்றாள்.
    டாக்சியிலிருந்து இறங்கிய நீலாவைப் பார்த்ததும், “என்ன நீலா
    கண்ணிலே கட்டு!” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.

    வீட்டுக்குள் சென்றதும், எல்லாவற்றையும் விவரமாக மாலாவும் டாக்டர்
    சூரியசேகரும் கூறினார்கள். நடந்ததைக் கேட்டு நளினி மிகவும்
    வருத்தப்பட்டாள். ஆனால், நீலா சிறிதும் கவலைப்படவில்லை;
    மகிழ்ச்சியாக இருந்தாள். ரவியைத் தூக்கி வைத்துக்கொண்டு
    கொஞ்சினாள்; அவனுக்கு ரஷ்யாவிலிருந்து கொண்டு வந்த சில
    பொம்மைகளைக் கொடுத்து விளையாட்டுக் காட்டினாள்.
    அன்று மாலை மாலாவும் நீலாவும் தனியாக இருக்கும் போது, “நீலா,
    உனக்குக் கண் குணமாகிற வரை நானும் பள்ளிக்கூடம் போகமாட்டேன்.
    உன்னுடனேயே இருப்பேன்” என்றாள் மாலா.

    “எனக்காக நீ ஏன் பள்ளிக்கூடம் போகாமல் இருக்க வேண்டும்? எப்படியும்
    ஒரு மாதத்திலே என் கண் குணமாகிவிடும். அப்படிக் குணமாகாமல் என்
    கண் குருடாகி விட்டால்தான் என்ன? இன்னொரு கண்தான் நன்றாகத்
    தெரிகிறதே! நான் பூங்குடியில் படிக்கிறபோது, பள்ளிக்கூடத்திலே
    ‘அதிசயப் பெண்மணி’ என்ற புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்தார்கள்.
    அதை எப்போதும் என் பெட்டியிலே பத்திரமாக வைத்திருப்பேன். நீ கூடப்
    பார்த்திருப்பாயே!”

    “ஹெலன் கெல்லர் என்ற அம்மையாரைப் பற்றிய புத்தகம்தானே!”

    “ஆமாம், அந்த அம்மையாருக்குக் கண் குருடு; காதும் செவிடு. பத்து
    வயதுவரை வாயும் ஊமையாகவே இருந்ததாம். கடைசிவரை
    குருடாகவும், செவிடாகவும் இருந்த அந்த அம்மையார், கல்லூரியிலே
    படித்துப் பட்டம் பெற்றாராம்; நூற்றுக் கணக்கான புத்தகங்களைப்
    படித்தாராம்; அவரே ஏழு புத்தகங்களை எழுதினாராம். உலகின் பல
    பாகங்களுக்கும் சென்று சொற்பொழிவு செய்தாராம். இந்தச்
    சென்னைக்குக்கூட ஒரு முறை வந்திருந்தாராம். அவருடைய அதிசய
    வாழ்க்கையைத் திரைப்படமாகக்கூட எடுத்திருக்கிறார்களாம். இரண்டு
    கண்ணும் இல்லாதபோதே அந்த அம்மாள் பற்பல அற்புதங்களைச்
    செய்திருக்கிறார்களே, எனக்கு ஒரு கண் போனால்கூட…”
    “நீலா, அப்படியெல்லாம் சொல்லாதே” என்று குறுக்கிட்டுக் கூறினாள்
    மாலா.

    மறு நாள் காலை, டாக்டர் வேங்கடசாமி நீலாவின் கண்ணைப்
    பரிசோதித்தார். புண் ஆறுவதற்கு மருந்து போட்டுக் கட்டினார். “நிச்சயம்
    குணமாகிவிடும்” என்று உறுதி கூறினார்.

    ஒரு நாள் மாலை. டாக்டர் வேங்கடசாமி, டாக்டர் சூரியசேகரிடம், “இன்று
    மத்தியானம் ஒருவர் இறந்து விட்டார். அவர் இறப்பதற்கு முன்பு, தான்
    இறந்ததும் தன் கண் விழிகளை யாருக்காவது தானம் செய்ய வேண்டும்
    என்று எழுதிக் கொடுத்திருக்கிறார். அவருடைய விழிகளில் ஒன்றை
    எடுத்துப் பத்திரப்படுத்தி வைக்கச் சொல்லியிருக்கிறேன். நீலாவுக்கு
    நாளையே அதை வைத்து ஆபரேஷன் செய்துவிடலாம்” என்றார்.
    டாக்டர் சூரியசேகருக்கு ஒரே மகிழ்ச்சி. அப்போது, கூட இருந்த நளினி
    டாக்டர் வேங்கடசாமியிடம், “ஏன் டாக்டர், நீலாவின் கண்ணை எடுத்து
    விட்டு, இறந்தவரின் கண்ணை வைப்பீர்களா?” என்று கேட்டாள்.
    “இறந்தவரின் கண்ணை அப்படியே வைக்க மாட்டோம். நீலாவின்
    கருவிழிதானே சேதம் அடைந்திருக்கிறது? அதனால், இறந்தவரின்
    கண்ணிலுள்ள கருவிழியைத் தனியாக எடுப்போம். நீலாவின் கண்ணிலே
    சேதமடைந்த கருவிழியை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக அந்தக்
    கருவிழியைப் பொருத்தி விடுவோம். சில நாட்களிலே பார்வை
    தெரிந்துவிடும்” என்று விளக்கினார்.

    மறுநாள் காலை ஆபரேஷன் நடந்தது. “ஆபரேஷன் வெற்றி” என்று
    மகிழ்ச்சியோடு கூறினார் டாக்டர் வேங்கடசாமி.


    அன்றுதான் கட்டு அவிழ்க்கும் நாள். காலை ஒன்பது மணி இருக்கும்.
    டாக்டர் சூரியசேகர் வீட்டுக்கு டாக்டர் வேங்கடசாமி வந்தார். எல்லாரும்
    நீலாவைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். நடிகை ரேணுகா
    தேவியும் தகவல் தெரிந்து அந்தச் சமயம் அங்கே வந்துவிட்டாள்.

    “நீலா, இன்னும் சிறிது நேரத்தில் நீ உன் இரண்டு கண்களாலும் நன்றாகப்
    பார்க்கலாம். இதோ கட்டை அவிழ்க்கப் போகிறேன்” என்று
    கூறிக்கொண்டே நீலாவின் கண்ணிலிருந்த கட்டை அவிழ்த்தார் டாக்டர்
    வேங்கடசாமி. பிறகு, இடது கண்ணை நன்றாக மறைத்துவிட்டு, நீலா,
    இப்போது எங்களையெல்லாம் தெரிகிறதா?” என்று கேட்டார்.
    “ஓ! நன்றாகத் தெரிகிறது. இதோ என் அம்மா. இதோ ரவி. இதோ மாலா”
    என்று ஒவ்வொருவராகச் சொன்னாள். அவள் சொல்லச் சொல்ல
    எல்லாருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

    அப்போது, “சார், தபால்” என்ற குரல் கேட்டது.

    உடனே மாலா ஓடிச் சென்று தபால்காரரிடம் கடிதங்களை வாங்கி வந்தாள்.
    அவற்றில் பெரிய அளவில் ஒரு பத்திரிகை இருந்தது. அதன் மேல்
    உறையைப் பிரித்து அட்டையைப் பார்த்தாள். “அடே, ‘சோவியத் நாடு’
    பத்திரிகை! நீலா, இடது கண்ணை மூடியபடி இந்த அட்டைப் படத்தைப்
    பார். இதில் யார் யார் இருக்கிறார்கள்?” என்று கேட்டாள் மாலா.

    “அடடே, நேரு பரிசு பெற்ற நம் ஆறு பேரையும் அட்டையிலே
    போட்டிருக்கிறார்களே! இதோ மாலா, நீரஜா, ரேகா, நரேஷ், சந்த்ரேஷ்!”

    “அது சரி, சுற்றி ஐந்து வட்டங்களிலே நாங்கள் ஐந்து பேரும்
    இருக்கிறோம். நடுவிலே அழகாகச் சிரித்துக்கொண்டு நிற்பது யார்?”

    “அதுவா…. அது வேறு யாரும் இல்லை. உன் அருமைத் தோழி நீலாதான்”
    என்று கூறி மாலாவைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கலகலவென்று
    சிரித்தாள் நீலா. அங்கிருந்த எல்லாரும் அவளுடன் சேர்ந்து சிரித்து
    மகிழ்ந்தார்கள்!

    ★ ★ ★

    இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

    மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

    சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

    இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *