
நீலா மாலா
அழ. வள்ளியப்பா
முரளி சொன்ன ரகசியம்!
முன்னால் சென்ற மாலா மாமரத்தை அடைந்தாள். அங்கிருந்த கல்லிலே
உட்கார்ந்தாள். முரளி அருகில் வந்து நின்றுகொண்டு சுற்று முற்றும்
பார்த்தான்.
“முரளி, அது என்ன ரகசியம்?” என்று பேச்சை ஆரம்பித்தாள் மாலா.
“நமது வீட்டுக்கு வருகிறாளே, வேலைக்காரி மகள் நீலா, அவளைப் பற்றி
உனக்குச் சரியாகத் தெரியாது. நல்லவளைப் போல் நடிப்பாள்; சிரித்துச்
சிரித்துப் பேசுவாள். அவள் பெரிய ஆள்…”
“என்ன! பெரிய ஆளா! பத்தாவது வயசிலே ஐந்தாவது படிக்கிற நீலா
பெரிய ஆளா? பதினைந்தாவது வயசிலே நாலாவது படிக்கிற நீ பெரிய
ஆளா? சந்தேகமே இல்லை. நீதான் பெரிய ஆள்….”
“மாலா, விளையாடாதே. நான் சொல்வதைக் கேள். எல்லாரும் நினைக்கிற
மாதிரி நீலா படிப்பிலே பெரிய புலி இல்லை. அவளுடைய அப்பா ஒரு
குழந்தையைக் காப்பாற்றப் போய், அங்கேயே செத்துப் போனார். அது
உனக்கும் தெரிந்திருக்கும். அதனாலே அவர் பெரிய தியாகி ஆகிவிட்டார்.
அவருடைய பெயரைச் சொல்லிச் சொல்லி, நீலாவும் அவள் அம்மாவும்
ஊரை ஏமாற்றுகிறார்கள்.”
“ஊரை ஏமாற்றுகிறார்களா!!”
“ஆமாம், நீலாவுடைய அம்மா ஒரு பெரிய தந்திரக்காரி! அவள்
ஹெட்மாஸ்டரிடத்திலே போய், ‘எங்க வீட்டுக்காரர் உயிரோடு இருந்தால்,
நீலாவை நன்றாகப் படிக்கவைத்து முன்னுக்குக் கொண்டுவந்திருப்பார்.
நானோ ஒரு பெண். என்னால் என்ன செய்ய முடியும் நீங்கள் தான்
எப்படியாவது நீலாவை முன்னுக்குக் கொண்டு வர வேண்டும்’ என்று
கெஞ்சினாள்; கண்ணீர் விட்டாள். ஹெட்மாஸ்டருக்கு மிகவும் இளகிய
மனசு. அவர் எல்லா ஆசிரியர்களிடமும் சொல்லிவைத்திருக்கிறார்.
வருஷா வருஷம் எல்லா ஆசிரியர்களும் மார்க்கை வாரி வாரி அவளுக்குக்
கொடுக்கிறார்கள். அதனாலேதான் ஆறு பரிசு, ஏழு பரிசு என்று
வாங்கினாள். இல்லாத போனால், அவளாவது, பரிசு வாங்குகிறதாவது…”
“அடடே, அப்படியா சமாச்சாரம்! எனக்கு இதெல்லாம் தெரியாதே!”
“அதனாலேதானே நான் விளக்கமாகச் சொல்கிறேன். போன தடவை நீ
வந்திருந்த போது நீ உன் கிளாஸிலே எட்டாவது ராங்கிலே இருக்கிறதாக
உன் அம்மா சொன்னார்கள். ‘நம் மாலா எட்டாவது ராங்கிலே இருக்கிற
போது, இந்த வேலைக்காரி மகள் முதல் ராங்கிலே இருக்கிறதா? பரிசு
மேலே பரிசு வாங்குவதா? அதுவும் கலெக்டர் கையாலே வாங்குவதா?’
என்று ஆத்திரப்பட்டேன். அதனாலேதான் வெள்ளிக் கோப்பை வாங்குகிற
சமயம் பார்த்து, ஒரு கதை கட்டி விட்டேன்.”
“கதையா! அது என்ன கதை? சொல்லு முரளி. கதை கேட்பதென்றால்
எனக்கு மிகவும் பிடிக்கும்”
“வெள்ளிக் கோப்பையைக் கொடுப்பதற்குக் கொஞ்ச நேரம் முன்னாலே
நீலாவிடத்திலே போனேன். ‘உன் அம்மாவுக்குக் கருந் தேள் கொட்டி
உயிருக்கே ஆபத்தாம். தருமலிங்க வைத்தியர் வீட்டுக்குத் தூக்கிப்
போயிருக்கிறார்களாம். ஒரு அம்மா சொன்னார்கள்’ என்று புளுகினேன்.
அப்புறமும் அவள் அங்கே நிற்பாளா? தலைதெறிக்கத் தருமலிங்க
வைத்தியர் வீட்டுப் பக்கம் ஓடிவிட்டாள். நான் உடனே ஒரு டீச்சரிடம் போய், யாரோ ஓர் அம்மா சொன்னதாக அதே கதையைச் சொன்னேன். டீச்சர் ஓடிப் போய் ஹெட்மாஸ்டரிடத்திலே சொன்னார்கள். ஹெட்மாஸ்டர் கலெக்டரிடத்திலே சொன்னார். வெள்ளிக் கோப்பையைக் கொடுக்காமலே விழா முடிந்து விட்டது! எப்படி என் திட்டம்?”
“அபாரம், அபாரம். நீ ஒவ்வொரு வகுப்பிலேயும் இரண்டு வருஷம்,
மூன்று வருஷம் என்று இருக்கிறதனாலே, உன் தலையிலே களி
மண்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், உனக்கும் மூளை
இருக்கிறது. அது வேலையும் செய்கிறது என்று இப்பொழுதுதான்
தெரிந்தது. ஆமாம், உன் மூளை நல்ல வழியிலே வேலையே செய்யாதோ?
இப்படி மற்றவர்களுக்குத் தொல்லை கொடுக்கத்தானா அந்த
மூளையைச் செலவிட வேண்டும்?”
“என்ன மாலா, இப்படிப் பேசுகிறாய்? நான் நல்ல காரியத்திற்குத்தானே
என் மூளையை உபயோகித்தேன்.”
“நீ செய்ததா நல்ல காரியம்? உனக்குப் பொறாமை அதிகம். அந்தப்
பொறாமையிலே நீ எவ்வளவு பெரிய கெடுதலைச் செய்திருக்கிறாய்?
நீலா எவ்வளவு நல்லவள், எவ்வளவு கெட்டிக்காரி என்பதெல்லாம்
எனக்குத் தெரியும். தாத்தாவுக்கும் தெரியும். என் அம்மாவுக்கும்
தெரியும்.”
இப்படி மாலா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “சபாஷ்” என்ற குரல்
பின்னாலிருந்து கேட்டது.
இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். மாமரத்தின் பின்னால்
மறைந்திருந்த பரமசிவம் பிள்ளை, அவர்களின் எதிரிலேவந்து நின்றார்.
கணக்கப் பிள்ளை வீட்டுக்குப் போகும் போது, மூக்குக் கண்ணாடியை
மறந்து விட்டார். சிறிது தூரம் சென்ற பிறகுதான் கண்ணாடி நினைவு
வந்தது. கணக்கப் பிள்ளை வீட்டில் ஏதாவது படிக்க வேண்டியது, எழுத
வேண்டியது வந்தால், கண்ணாடி தேவைப்படுமே என்றுதான் திரும்பி
வந்தார். அறையிலிருந்து ஜன்னல் வழியாகப் பார்த்தார். தோட்டத்திலே
மாலாவிடம் முரளி பேசிக் கொண்டிருந்ததைக் கண்டார். அங்கே நீலாவைக் காணோம். முரளி ஏதாவது கோள் சொல்லி மாலாவுக்கும் நீலாவுக்கும் சண்டை மூட்டினாலும் மூட்டிவிடுவான் என்று நினைத்தார். அதனால், கொல்லைப்புற வழியாகச் செடிகளுக்குப் பின்னால் மறைந்து மறைந்து மாமரத்தின் பின்பக்கமாக வந்து நின்றார். மறைவாக நின்று கொண்டு அவர்கள் பேசியதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார்.
‘சபாஷ்’ என்று கூறிக்கொண்டு அங்கு வந்த பரமசிவம் பிள்ளையைக்
கண்டதும், முரளி ஓடத் தொடங்கினான். “டேய் முரளி, நில். ஓடாதே!”
என்று பலமாக அதட்டினார் பரமசிவம் பிள்ளை. முரளி அரண்டு போய்
அங்கேயே நின்றான். அவன் கால்களும் கைகளும் ‘கிடுகிடு’ என்று
நடுங்கின.
“டேய், அயோக்கியப் பயலே! நீதான் சரியாகப் படிக்கவில்லை. நன்றாகப்
படிக்கிறவர்களையும் ஏன் கெடுக்க நினைக்கிறாய்? உனக்கு நல்ல
எண்ணம் இல்லை. அதனாலேதான் நீ உருப்படாமல் போனாய்.
அன்றைக்கே நினைத்தேன். நான் நினைத்தது சரியாகப் போய்விட்டது.
கலெக்டர் கலந்து கொண்ட ஒரு விழாவிலே இப்படி ஒரு பொய் சொல்லி,
அந்த விழாவையே நடுவில் நிறுத்தி விட்டாயே, இது கலெக்டருக்குத்
தெரிந்திருந்தால், உன் கதி என்ன ஆகியிருக்கும்! அவர் கூட வந்த
போலீஸ்காரர்களிடத்திலே, உன்னை ஒப்படைத்திருப்பார். அவர்கள்
உன்னை அமரபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு
போயிருப்பார்கள். எங்களுக்கெல்லாம் அவமானமாகப் போயிருக்கும்.
அதனாலேதான் நான் இதைப் பற்றிப் பேசாமலே இருந்து விட்டேன். டேய்
முரளி, உன் கெட்ட குணம் வளர்ந்து கொண்டே போகிறது. உன்னைத்
திருத்தவே முடியாது. ஆனால், ஒரு விஷயத்திலே நான் கண்டிப்பாக
இருக்கப் போகிறேன். இன்றையிலிருந்து நீ இந்த வீட்டுப் படி
ஏறக்கூடாது… போடா, வெளியே!” என்று கூறி, அவன் பிடரியிலே கையை
வைத்து வேகமாகத் தள்ளினார்.
உடனே மாலா குறுக்கே ஓடி வந்தாள். “தாத்தா! முரளி தெரியாமல் தப்புப்
பண்ணிவிட்டான். இனிமேல் இப்படிச் செய்ய மாட்டான். இந்தத் தடவை
மன்னித்து விடுங்கள், தாத்தா” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்.
“டேய் முரளி, அன்றைக்கு நீலாவின் அம்மா ஏன் விழாவிற்கு வரவில்லை?
உன் அத்தைக்கு உடம்பு சரியில்லாததால், உன் அத்தையைத் தனியாக
விட்டுவர அவளுக்கு மனசில்லை. கூடவே இருந்திருக்கிறாள்.
விழாவிற்கு வராதது மட்டும் இல்லை. அவள் மகள் பரிசு மேலே பரிசு
வாங்கினாளே, அதையெல்லாம் அவள் பார்த்தாளா? அவள் மகளைப்
பலரும் பாராட்டிப் பேசினார்களே, அதையெல்லாம் அவள் கேட்டாளா? உன் அத்தைக்கு உதவி செய்யப்போக, நீ அவளுக்கும் அவள் மகள்
நீலாவுக்கும் எவ்வளவு தொல்லைகள் கொடுத்து விட்டாய்?”
“மாமா! நான் இதுவரை பண்ணினதெல்லாம் தப்புதான். இனி, நான்
தப்புப் பண்ண மாட்டேன்; பொய் பேசமாட்டேன். என்னை
மன்னித்துவிடுங்கள் மாமா” என்று கூறிப் பரமசிவம் பிள்ளையின்
காலைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினான் முரளி. அப்போது அவன்
கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது.
அப்போது மாலாவைப் பார்த்தார் பரமசிவம் பிள்ளை. அவள் கண்களும்
கலங்கியிருந்தன.
“சரி, முரளி! இனி ஒரு தடவை நீ தப்பு செய்தால், உன் தோலை
உரித்துவிடுவேன். ஒழுங்காகப் படித்து, முன்னேறுகிற வழியைப் பார்!”
என்று கூறிவிட்டு, “மாலா, மூக்குக் கண்ணாடியை மறந்து போனேன்.
எடுக்க வந்தேன். போய் வரட்டுமா?” என்று கூறிப் புறப்பட்டு விட்டார்
பரமசிவம் பிள்ளை.
பரமசிவம் பிள்ளை தலை மறைந்ததும், முரளி மாலாவைப் பார்த்தான்.
அவன் பார்வை மிகவும் கெஞ்சுவது போல இருந்தது. “மாலா! நான்
செய்தது எல்லாம் தப்புதான். அன்றைக்குக் கதை கட்டிவிட்டது,
கலெக்டருக்குத் தெரிந்திருந்தால், மாமா சொன்ன மாதிரி போலீஸ்
ஸ்டேஷனுக்குக் கொண்டு போயிருப்பார்கள். நல்ல வேளை…
தப்பினேன்…மாலா, இந்த நேரத்திலிருந்து நான் பழைய முரளியில்லை;
புது முரளி! ஆமாம், புது முரளி! சத்தியமாகச் சொல்கிறேன்” என்று
உணர்ச்சி பொங்கக் கூறினான்.
“முரளி, நீ திருந்தினால் உனக்கும் நல்லது; மற்றவர்களுக்கும் நல்லது;
எல்லாருக்குமே நல்லது. நீ நீலாவோடு போட்டி போடு. படிப்பிலே போட்டி போடு; விளையாட்டிலே போட்டி போடு. ஆனால், வீணாகப் பொறாமைப் படாதே.”
“சரி, மாலா!” என்று அடக்கமாகப் பதில் சொன்னான் முரளி.
அப்போது, “மாலா! மாலா!” என்று கூவிக் கொண்டே அங்கே வந்தாள்
நீலா. அவள் கையிலே அழகிய வர்ணப் பெட்டி இருந்தது.
“நீலா! நான் படம் போடுவது உனக்கு எப்படித் தெரியும்? நான்
சொல்லவேயில்லையே! ‘கலர் பாக்ஸ்’ கொண்டு வந்திருக்கிறாயே!” என்று
ஆச்சரியத்தோடு கேட்டாள் மாலா.
“அடே, நீ படம்கூடப் போடுவாயா?”
“சுமாராகப் போடுவேன். இந்த ஊர்க் கடைசியில் இருக்கிறதே தாமரைக்
குளம், அதை இந்த ஊருக்கு வந்த புதிதிலே வரைந்து பார்த்தேன்.
சேர்ந்தாற் போல் நாலைந்து நாட்கள் காலை நேரத்திலே வரைந்தேன்.
அப்புறம் மறந்தே போனேன்?”
“அப்படியா! அந்தப் படத்தைப் பார்க்கலாமா?”
“நீலா! உனக்காகத்தான் நான் அதை வரைந்தேன். மாடியிலே மேஜை
அறையிலே வைத்திருக்கிறேன். வா, மாடிக்குப் போகலாம்.”
“சரி, நான் இந்த வர்ணப் பெட்டியைக் கொண்டு வந்தது யாருக்காகத்
தெரியுமா? முரளிக்காகத்தான்” என்றாள் நீலா.
முரளி திடுக்கிட்டான்.



