
நீலா மாலா
அழ. வள்ளியப்பா
நீலா மாலாவுக்கு நேரு பரிசு!
ஆறு மாதங்களுக்கு முன்பு, கஸ்தூரிபா கல்வி நிலையத்தில்
பிராத்தனைக் கூட்டம் நடந்த போது. தலைமை ஆசிரியை தங்கம்மாள் ஒரு
செய்தியைச் சொன்னார்.
“மாணவிகளே, சோவியத் நாடு, சிறுவர் சிறுமியருக்காக ஒரு கட்டுரைப்
போட்டியை அறிவித்திருக்கிறது. 10 முதல் 13 வயது வரையுள்ள
குழந்தைகள் இதில் கலந்து கொள்ளலாம். இந்தப் போட்டிக்கு என்ன
பெயர் தெரியுமா? ‘சோவியத் நாடு – நேரு பரிசுப் போட்டி’. இந்தப்
போட்டியில் கலந்து கொள்பவர்கள் மனிதர்களுக்குள் மாணிக்கமாகத்
திகழ்ந்த நேருஜியைப் பற்றியோ அல்லது புதிய ரஷ்யாவை உருவாக்கிய
புரட்சி வீரர் லெனினைப் பற்றியோ எழுதலாம். நேருஜியையும்
லெனினையும் சேர்த்துக்கூட எழுதலாம். வெள்ளைத் தாளில்
இருபத்தைந்து பக்கங்களுக்கு மேற்படாமல் எழுத வேண்டும். கட்டுரை
அனுப்ப வேண்டிய கடைசித் தேதி வருகிற செப்டம்பர் பதினைந்து.
“இந்தியா முழுவதும் நடைபெறும் இப்போட்டியில் மிகச் சிறந்த
கட்டுரைகளை எழுதிய ஐந்து குழந்தைகளைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்த
ஐவருக்கும் பரிசு உண்டு. என்ன பரிசு தெரியுமா?”
“சோவியத் நாட்டுக்கு அழைத்துச் சென்று அங்கு ‘ஆர்த்தெக்’ என்ற
குழந்தைகள் முகாமில் ஒரு மாதம் தங்கியிருக்க ஏற்பாடு செய்வார்கள்.
அழகிய அந்த முகாமிலே ஆனந்தமாகப் பொழுது போக்கலாம். அந்த
முகாம், கருங்கடல் என்று கேள்விப்பட்டிருப்பீர்களே – அதன் கரையில்தான் இருக்கிறது. முயற்சி செய்யுங்கள். நவம்பர் 14ஆம் தேதி நேருஜி பிறந்த நாளில் பரிசு பெற்றவர்களின் பெபர்கள் அறிவிக்கப்படும். கட்டுரையை ‘சோவியத் நாடு, நேரு பரிசுக் குழு, புது தில்லி-1′ என்ற விலாசத்துக்கு அனுப்ப வேண்டும். முழு விலாசமும் என்னிடம் இருக்கிறது.
தேவையானவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.”
அன்று வீடு திரும்பும்போது, “நீலா, காலையிலே நம் தலைமை ஆசிரியை
சொன்னார்களே, அந்தப் போட்டிக்கு நீ ஒரு கட்டுரை எழுது. பரிசு
கிடைக்கும்” என்றாள் மாலா, “நான்தான் எழுத வேண்டுமா? நீ எழுது.”
“நீலா, உனக்குத்தான் என்னைவிட நிறைய விஷயம் தெரிந்திருக்கிறது.
பள்ளிக்கூட நூல் நிலையத்திலே இருக்கிற புத்தகங்களிலே பாதியைப்
படித்திருக்கிறாய். நீ கட்டுரை எழுதுவது சுலபம். நீதான் எழுத
வேண்டும்.”
“சரி, ஒன்று செய். நான் கட்டுரை எழுதிப் பார்க்கிறேன். நன்றாக
இருந்தால், அதற்கு நீதான் படம் போட்டுத் தரவேண்டும்…… ஆனால்,
கட்டுரைக்கு மட்டும் தானே பரிசு! ஓவியத்துக்கு இல்லையே!”
“அதனால் என்ன? நான் படம் போட்டுத் தருகிறேன். உனக்குப் பரிசு
கிடைத்தால், எனக்கும் கிடைத்த மாதிரிதான். நீ பரிசு பெற்று சோவியத்
நாட்டுக்குப் போய்வந்தால், எல்லாருக்கும் பெருமை தானே!”
நீலா ஒரு வார காலமாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள். ஒரு நாள் இரவு எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் போது, “மாலா, நேருஜியையும் லெனினையும் சேர்த்து ஒரு கட்டுரை எழுதினால் என்ன?” என்று நீலா கேட்டாள்.
உடனே டாக்டர், “நல்ல யோசனை தான். இருவருமே உலகத் தலைவர்கள்,
பெரிய தேசபக்தர்கள்; செயற்கரிய செய்தவர்கள்.. இருவரையும் சேர்த்தே
எழுது நீலா” என்று ஊக்கமூட்டினார்.
“உன் கட்டுரைக்கு என்ன பெயர் வைப்பாய்?’ என்று கேட்டாள் மாலா.
நீலா சிறிது நேரம் யோசித்தாள். பிறகு சொன்னாள்: “இப்படி
வைக்கலாமா? “நேரு மாமா லெனின் மாமா என்று வைத்தால்….?”
“அருமையான பெயர். அப்படியே வைத்து விடலாம்” என்றாள் நளினி.
நீலா நூல் நிலையத்திலிருந்த நேருஜியைப் பற்றிய புத்தகங்களையும்,
லெனினைப் பற்றிய புத்தகங்களையும் எடுத்துவந்து தினமும் ஒரு
மணி நேரமாவது படிப்பாள். ஆகஸ்ட் முதல் தேதி பிள்ளையார் சுழி
போட்டுக் கட்டுரையை எழுதத் தொடங்கினாள்.
அவள் எழுதிய கட்டுரைக்கு மிகவும் அழகாகப் பத்துப் படங்கள்
வரைந்தாள், மாலா. அட்டையில் நேரு மாமாவும் லெனின் மாமாவும்
உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நடுவிலே ஒரு சிறுமி நிற்கிறாள்.
அவள் இருவர் தோள்களிலும் கைபோட்டுக் கொண்டு சிரிக்கிறாள்…….
இப்படி ஓர் அழகான படம் போட்டிருந்தாள், மாலா.
கட்டுரையையும் படங்களையும் பார்த்த டாக்டர் மிகவும் மகிழ்ச்சி
அடைந்தார். பிறகு தமது மனைவியைப் பார்த்து, “நளினி, நீலா எவ்வளவு
நன்றாக இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறாள்! ஓர் இடத்தைப் படித்துக்
காட்டுகிறேன், கேள்:”
“நேரு மாமாவுக்குக் குழந்தைகள் என்றால் கொள்ளை ஆசை.
குழந்தைகளின் மலர்ந்த முகங்களைக் காணும் போதெல்லாம் அவருக்கு
மகிழ்ச்சி பொங்கும். ‘குழந்தைகளுடன் கூடி இருக்க, குழந்தைகளுடன்
கொஞ்சிப் பேச குழந்தைகளுடன் குதித்து விளையாட எனக்கு மிகவும்
ஆசை’ என்று அடிக்கடி கூறுவார். அவருடைய பிறந்த நாளச் சிறப்பாகக்
கொண்டாட வேண்டும் என்று பலர் விரும்பினார்கள். ஆனால், நேரு மாமா
அதற்கு இணங்கவில்லை. தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்கள்.
கடைசியாக அவர் இணங்கினார். ‘என் பிறந்த நாளைக் கொண்டாட
வேண்டுமானால், அதைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாட வேண்டும்.
அதுதான் என் விருப்பம்’ என்றார். நேரு மாமா பிறந்த நவம்பர் 14ஆம் தேதி
குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதை நாம்
எல்லாரும் எவ்வளவு குதூகலமாகக் கொண்டாடி வருகிறோம்!
நேரு மாமாவைப் போலவே லெனின் மாமாவும் குழந்தைகளிடத்தில்
மிகுந்த அன்பு வைத்திருந்தார். ‘எதிர்காலத்தில் நாட்டை நடத்திச் செல்லும்
நல்லவர்களாக, வல்லவர்களாக நம் குழந்தைகள் விளங்க வேண்டும்.
ஆகையால், எவை எவை நல்லவையோ அவையெல்லாம்
குழந்தைகளுக்கு இன்று கிடைக்க வேண்டும்’ என்று கூறுவார்.
மாணவர்களைப் பார்க்கும் போதெல்லாம், ‘படிக்கிற வயதிலே நீங்கள்
படிப்பில்தான் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் முதல் கடமை கல்வி
கற்பது; இரண்டாவது கடமை கல்வி கற்பது; மூன்றாவது கடமை கல்வி
கற்பது’ என்று அழுத்தமாக அறிவுரை கூறுவார்.”
நீலா எழுதிய கட்டுரையில் இந்தப் பகுதியை டாக்டர் படித்துக் காட்டியதும்,
“ஆஹா! நீலா எவ்வளவு நன்றாக எழுதியிருக்கிறாள்! சில பிள்ளைகள்
பெரியவர்களை எழுதித் தரச் சொல்லி, அதைத் தாங்களே எழுதியதாகக்
கூறிப் பரிசையும் வாங்கி விடுவார்கள். ஆனால், நம் நீலா யாருடைய
உதவியும் இல்லாமல், அவளாகவே புத்தகங்களைப் படித்து, படித்ததைப்
பற்றி நன்றாக யோசித்து, அழகாக எழுதியிருக்கிறாள்” என்றாள் நளினி.
“நிச்சயம் இந்தக் கட்டுரைக்குப் பரிசு கிடைக்கும். பரிசு கிடைத்ததும்,
நீலா, நீ என் வாய்க்குச் சர்க்கரை போட வேண்டும்” என்று
சிரித்துக்கொண்டே சொன்னாள் மாலா.
இப்படி மாலா, மாலாவினுடைய அப்பா, அம்மா எல்லாரும் பாராட்டிய
கட்டுரைக்குத்தான் நேரு பரிசு கிடைத்திருப்பதாக டெலிபோனில் செய்தி
வந்தது. ஆம், சென்னையில் உள்ள சோவியத் தூதரகத்தில் இருந்துதான்
டாக்டர் சூரியசேகருக்கு இத்தகவலைத் தெரிவித்தார்கள்.
டெலிபோனில் பேசிய தூதரக அதிகாரி சொன்னார்: “கட்டுரைக்கு மட்டும்
தான் பரிசு கொடுப்பதாக இந்த ஆண்டு அறிவித்தோம். ஆனால், நீலா
எழுதிய கட்டுரை மிகவும் சிறப்பாக இருந்ததோடு, அதற்காக வரைந்த
சித்திரங்களும் மிகச் சிறப்பாக இருந்தனவாம். அதனால், பரிசுக்
குழுவினர் கட்டுரை எழுதிய நீலாவுக்கும், சித்திரங்கள் வரைந்த
மாலாவுக்கும் பரிசு கொடுப்பதென முடிவு செய்திருக்கிறார்கள்.
இருவரையும் சோவியத் நாட்டிற்கு விமானத்திலே அழைத்துச்
செல்லவும் அங்கே ஒரு மாதம் சிறுவர் முகாமிலே தங்க வைக்கவும்
ஏற்பாடு செய்கிறோம். இது குறித்து, இன்று தபாலில் நீலாவுக்கும்
மாலாவுக்கும் தனித் தனியாகக் கடிதம் எழுதியிருக்கிறோம். நாளைக்
காலையில் எல்லாப் பத்திரிகைகளிலும் இச்செய்தி வரும். முன்கூட்டியே
உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றுதான் போன் பண்ணினோம்.”
“மிகவும் நன்றி” என்று தூதரக அதிகாரிக்கு டாக்டர் நன்றி செலுத்தினார்.
பிறகு, “நீலா, மாலா, நீலா, மாலா, ஓடி வாருங்கள்” என்று உரக்கக்
கூவினார். மாடியில் படித்துக் கொண்டிருந்த நீலாவும் மாலாவும்
படிகளில் தடதடவென்று வேகமாக இறங்கி வந்தார்கள்.
“எங்கே, கை கொடுங்கள்” என்று கூறி நீலாவின் கையை வலது
கையாலும், மாலாவின் கையை இடது கையாலும் ஒரே சமயத்தில்
பிடித்துக் குலுக்கினார். இருவரும் ஒன்றும் புரியாமல் விழித்தார்கள்.
“நளினி, கொஞ்சம் சர்க்கரை கொண்டு வந்து நீலாவிடம் கொடு. மாலா
சொன்னபடியேதான் நடந்து விட்டது. மாலாவின் வாய்க்கு நீலா சர்க்கரை
போட வேண்டாமா?” என்றார் டாக்டர்.
“என்ன டாக்டர் சொல்லுகிறீர்கள்?” என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள்
நீலா.
“நீலா, உன் கட்டுரைக்கு நேரு பரிசு கிடைத்திருக்கிறது! உன் கட்டுரைக்கு
மட்டுமல்ல; மாலாவின் சித்திரத்துக்கும் பரிசு கிடைத்திருக்கிறது. நீங்கள்
இருவருமே சோவியத் நாட்டிற்குச் செல்லப் போகிறீர்கள்!”
“என்னப்பா, உண்மையாகவா?” என்று மாலா கேட்டாள்.
“ஆம், இப்போதுதான் சோவியத் தூதரகத்திலிருந்து டெலிபோன் வந்தது.
நாளைக் காலையில் பத்திரிகைகளிலும் பரிசு பெற்றவர்கள் பெயர்கள்
வருமாம். உங்கள் இருவருக்கும் தனித் தனியாகக் கடிதம் கூட
எழுதியிருக்கிறார்களாம். நாளைக்குக் கிடைக்கும்” என்றார் டாக்டர்.
இதைக் கேட்ட மாலாவும் நீலாவும் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தார்கள்.
மாலா நீலாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, “நீலா, பூவுடன் சேர்ந்த
நாரும் மணம் பெறும் என்பார்கள். உன் கட்டுரைக்குப் படம் போட்டதால்
எனக்கும் பரிசு கிடைத்திருக்கிறது. நானும் உன்னுடன் சோவியத்
நாட்டிற்கு வரப் போகிறேன்” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினாள்.
மறுநாள் காலை எல்லாப் பத்திரிகைகளிலும் இச் செய்தி வெளி வந்தது.
வழக்கமாக ஐந்து குழந்தைகளுக்குத்தான் பரிசு கொடுப்பார்கள்.
ஆனால், இந்த ஆண்டு ஆறு குழந்தைகளுக்குப் பரிசு கொடுப்பதென்று
முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. காரணம், நீலா என்ற சிறுமி எழுதிய
கட்டுரையும், அதற்கு மாலா என்ற சிறுமி வரைந்திருக்கும் ஓவியங்களும்
ஒன்றை விட்டு ஒன்று பிரிக்க முடியாதபடி அவ்வளவு சிறப்பாக
அமைந்துள்ளன. அதனால், இச்சிறுமிகளையும் பிரிக்க வேண்டாம்;
சேர்த்தே சோவியத் நாட்டிற்கு அனுப்பி வைக்கலாம் என்று முடிவு
செய்திருக்கிறார்கள்” என்று பத்திரிகைகளில் விளக்கமாகச் செய்தி வெளி
வந்தது.
மத்தியானம் சோவியத் நாடு அலுவலகத்திலிருந்து நீலாவுக்கு ஒரு
கடிதமும், மாலாவுக்கு ஒரு கடிதமும் வந்தன. கடிதங்கள்
ஆங்கிலத்தில்தான் இருந்தன. மாலாவுடன் ஆறாவது வகுப்பிலிருந்து
ஆங்கில மீடியத்தில் நீலாவும் படித்துவந்ததால் ஆங்கிலத்தில் ஓரளவு
நன்றாகப் பேசவும், எழுதவும், படித்துப் புரிந்து கொள்ளவும்
கற்றுக்கொண்டிருந்தாள். வகுப்பிலேயே ஆங்கிலத்திலும் முதல் மார்க்கு
வாங்கி வந்தாள்.
“மாலா, சோவியத் நாட்டிற்கு நம்முடன் இரண்டு பெண்களும் இரண்டு
பையன்களும் வரப் போகிறார்கள். அவர்கள் பெயர், வயது எல்லாம் கூட
இந்தக் கடிதத்திலே கொடுத்திருக்கிறார்கள்!” என்றாள் நீலா.
“ஆமாம், நீரஜா, ரேகா… நரேஷ், சந்த்ரேஷ் நீரஜாவுக்கும் சந்த்ரேஷுக்கும்
நம்மைப் போல் பதின்மூன்று வயதுதான். ரேகாவுக்கும் நரேஷுக்கும்
ஒரு வயசு குறைச்சல்.”
“நம் ஆறு பேரையும் டில்லியிலிருந்து விமானத்திலே சோவியத்
நாட்டிற்கு அழைத்துப் போவார்களாம்… டில்லி வரை வந்து, நம்மை
வழியனுப்புகிற பெரியவர்களுக்கும் போகவரச் செலவு
கொடுப்பார்களாம். ஆளுக்கு ஒருவரை நாம் அழைத்து போகலாமாம்.”
“யாரை அழைத்துப் போகலாம்?”
“உன் அப்பாவிடம் கேட்போம். அவர்களே முடிவு செய்யட்டும்” என்று
கூறினாள் நீலா. இருவரும் டாக்டரிடம் சென்று கடிதங்களைக்
காட்டினார்கள்.
“அடுத்த வருஷம் ஜூன் மாதம் பதினைந்தாம் தேதிதான் டில்லியிலிருந்து
நீங்கள் புறப்பட வேண்டும். இன்னும் ஏழு மாதம் இருக்கிறது.
அதற்குள்ளே நீங்கள் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அது சரி, இரண்டு பெரியவர்களை நீங்கள் டில்லிவரை அழைத்து
போகலாமே, யாரை அழைத்து போகப் போகிறீர்கள்?” என்று கேட்டார்
டாக்டர்.
“நீங்கள் தான் முடிவு பண்ண வேண்டுமாம். நீலா சொல்கிறாள்” என்றாள்
மாலா.
“அப்படியானால், நீலா, நீ உன் அம்மாவையும், மாலா, நீ உன்
அம்மாவையும் டில்லி வரை அழைத்து போங்கள்” என்றார் டாக்டர்.
“நான் போய் என்ன செய்வது? நீங்கள் போனாலும் இவர்களுக்கு
உதவியாயிருக்கும்” என்றாள் நளினி.
“அப்படியானால், நீலாவினுடைய அம்மா, நீ, ரவி, நான் ஆக நால்வரும்
இவர்களோடு டில்லி வரை போய் வழியனுப்பி வருவோம். ஆனால்,
இரண்டு பேருடைய செலவைத்தான் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
பரவாயில்லை. மேலே ஆகிற செலவை நாமே ஏற்றுக் கொள்வோம்”
என்றார் டாக்டர்.
“எதற்கும் கோடை விடுமுறை முடிந்துதானே இவர்கள் சோவியத்
நாட்டிற்குப் போவார்கள்? நாம் எல்லாரும்தான் கோடை விடுமுறைக்கு
வழக்கம்போல் பூங்குடி போவோமே! திரும்பி வரும் போது நீலாவின்
அம்மா மீனாட்சியைக் கூட்டி வந்து விடலாம்” என்றாள் நளினி.
நீலாவும் மாலாவும் நேரு பரிசு பெற்றிருப்பதையும், சோவியத் நாடு
செல்லப் போவதையும் பத்திரிகையின் மூலம் அறிந்த பூங்குடியில்
உள்ள பெரியவர்கள், சிறுவர், சிறுமியர் எல்லாரும் நீலாவுக்கும்
மாலாவுக்கும் பாராட்டுக் கடிதங்கள் எழுதியிருந்தார்கள். நீலா – மாலா
பள்ளிக்கூடத்திலும் அவர்களைப் பாராட்டாதவர்களே இல்லை. தலைமை
ஆசிரியை அவர்களைத் தனியாக அழைத்து முதுகிலே தட்டிக்கொடுத்துப்
பாராட்டினார்.
நீலா – மாலாவுக்கு நேரு பரிசு கிடைத்த செய்தி வந்து ஒரு வாரம்
ஓடிவிட்டது. அன்று இரவு டாக்டர் சூரியசேகர் நீலாவையும்
மாலாவையும் அழைத்தார்.
“நாளைக் காலை பத்து மணிக்கு உங்கள் இரண்டு பேரையும்
ஒருவருடைய வீட்டுக்கு அழைத்துச் செல்லப் போகிறேன். சோவியத்
நாட்டிற்கு நீங்கள் போவதனாலே அவரைப் பார்த்துப் பேசுவது
உதவியாயிருக்கும்” என்றார்.
“யாரப்பா அவர்? ரஷ்யாக்காரரா?” என்று கேட்டாள் மாலா.
“இல்லை.”
“அப்படியானால் ரஷ்யத் தூதரகத்திலே வேலை செய்கிறவரா?”
“அதுவும் இல்லை. அவரைப்பற்றி இப்பொழுது சொல்ல மாட்டேன்.
நாளைக் காலையில் நீங்களே நேரிலே தெரிந்து கொள்வீர்கள்!”



