
நீலா மாலா
அழ. வள்ளியப்பா
பத்திரிகைகளின் பாராட்டு!
“நீயும் நீலாவும் நாளை இரவு பட்டணத்துக்குப் போகப் போகிறீர்களே!
உங்களது அருமை பெருமைகளையெல்லாம் தெரிந்து கொள்ளாமலே
இத்தனை நாளும் இருந்து விட்டேன். இப்போது நன்றாகத் தெரிந்து
கொண்டவுடனே, நீங்கள் என்னைவிட்டு வெகுதூரம் போகப்
போகிறீர்களே” என்று துக்கத்தோடு கூறினாள் பார்வதி அம்மாள்.
“ப்பூ, இதற்குத்தானா அழுதீர்கள்! கவலைப்படாதீர்கள் அம்மா. லீவு
விடுகிறபோதெல்லாம் இவர்களை நான் இங்கே அனுப்பி வைக்கிறேன்”
என்று ஆறுதல் கூறினாள் நளினி.
அந்தச் சமயம், “சார், தந்தி” என்ற குரல் கேட்டது.
“என்ன, தந்தியா! யாருக்கு?” என்று கேட்டார் பரமசிவம் பிள்ளை.
“உங்களுக்குத்தான்” என்று கூறித் தந்தியை நீட்டினார், தந்திச் சேவகர்.
“என்ன தந்தி?” என்று எல்லாரும் பரபரப்புடன் கேட்டுக் கொண்டே
பரமசிவம் பிள்ளையைச் சுற்றிலும் வந்து நின்றனர்.
“நல்ல செய்திதான் வந்திருக்கிறதாம். போஸ்ட் மாஸ்டர் சொன்னார்”
என்றார் தந்திச் சேவகர்.
உடனே மாலாவின் அம்மா நளினி, அந்தத் தந்தியை வாங்கிப் பிரித்துப்
படித்தாள்.
“கொள்ளைக்காரனைப் பிடித்த குழந்தைகளுக்கு என்
வாழ்த்துக்கள். திங்கட்கிழமை காலை எழும்பூர் வருகிறேன்.”
டாக்டர் சூரியசேகர்.
“அடடே, அதற்குள் மாப்பிள்ளைக்கு விஷயம் தெரிந்து, தந்தியும்
கொடுத்திருக்கிறாரே!” என்று ஆச்சரியப்பட்டார் பரமசிவம் பிள்ளை.
அதற்குள் டி. எஸ். பி. திருஞானம், “இன்று காலையில் சென்னையில்
உள்ள மேல் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தோம். அப்போது, ஒரே
ஒரு குழந்தையைத் தவிர எல்லாருமே இந்த ஊர்க் குழந்தைகள் தான்
என்று சொன்னோம். ‘அந்த ஒரு குழந்தை யார்?’ என்று கேட்டபோது,
சென்னையில் உள்ள டாக்டர் சூரிய சேகருடைய குழந்தை என்று
சொன்னோம். ஒரு வேளை உங்கள் மாப்பிள்ளைக்குச் சென்னையில்
உள்ள அதிகாரிகள் தகவல் கொடுத்திருக்கலாம்” என்றார்.
“இருக்கலாம், இருக்கலாம். சென்னையில் இருக்கிறாரே, உதவி போலீஸ்
கமிஷனர் உத்தண்டராம பிள்ளை, அவர் மாலாவின் அப்பாவுக்கு மிகவும்
வேண்டியவர். அவருடைய அம்மாவுக்கு நரம்பு வியாதி. அதைக்
குணப்படுத்த இவர் அடிக்கடி அவர்கள் வீட்டுக்குப் போய் வருவார்.
அவர்தான் தகவல் கொடுத்திருப்பார்” என்றாள் நளினி.
“ஏனம்மா, மூளை வியாதி, நரம்பு வியாதி நிபுணரான டாக்டர் சூரிய
சேகர்தான் உங்களுடைய கணவரா? கீழ்த் திசை நாடுகளிலே அவர் மிகப்
பிரபலமானவர் அல்லவா? அவர் பெண்தான் மாலா என்பதைக் கேட்க
எனக்கு இரட்டிப்புச் சந்தோஷம். ஆமாம், சென்னையில் அவரது விலாசம்
என்ன?” என்று கேட்டார் டி. எஸ். பி. பரமசிவம் பிள்ளை ஒரு காகிதத்தில் விலாசத்தை எழுதிக் கொடுத்தார்.
“சென்னையில் உள்ள மேல் அதிகாரிகளுக்கு இப்போது அமரபுரம்
போனவுடனே முழு விவரங்களையும் தெரிவிப்போம். ஆமாம்,
மாலாவுடன் கூட நீலாவும் சென்னைக்குப் போவதாக சப்-இன்ஸ்பெக்டர்
சொன்னாரே” என்று கேட்டார் டி. எஸ். பி. “ஆமாம். நாளை இரவு மாலாவுடன் நீலாவும் போகிறாள்” என்றார் பரமசிவம் பிள்ளை.
“பரிசுத் தொகையான ரூபாய் ஐயாயிரத்தையும் உடனே கிடைக்க
ஏற்பாடு செய்கிறேன். கதையை எழுதிய நீலாவுக்கும், நாடகமாக்கிய
மாலாவுக்கும் பரிசுத் தொகையைப் பங்கிட்டுக் கொடுக்கச்
சொல்வார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.”
டி. எஸ். பி. இப்படிச் சொன்னதும், “சார், சார், கதையை எழுதியது நானாக
இருந்தாலும், அதை எவ்வளவு அழகாக நாடகமாக்கியிருக்கிறாள் மாலா!
எவ்வளவு அருமையாக டைரக்ட் செய்திருக்கிறான் முரளி எவ்வளவு
அற்புதமாக நடித்திருக்கிறார்கள் எங்கள் சங்கக் குழந்தைகள்!
சங்கிலியாண்டி அவர்களது உருக்கமான நடிப்பைப் பார்த்ததால்தான்
மனம் திருந்தினான். அதனால் எல்லாருக்கும் பொதுவாக மாங்குயில்
சிறுவர் சங்கத்துக்கே பரிசைக் கொடுத்துவிடுங்கள் சார்” என்றாள் நீலா.
ஏழையாக இருந்தாலும், எவ்வளவு பரந்து விரிந்த மனம் நீலாவுக்கு
இருக்கிறது என்பதை உணர்ந்து டி. எஸ். பி., சப்-இன்ஸ்பெக்டர், தலைமை
ஆசிரியர் எல்லாருமே மிகவும் வியப்படைந்தார்கள். ‘அடே, நீலா இவ்வளவு தூரம் விட்டுக் கொடுக்கிறாளே!’ என்று மூக்கின் மேல் விரலை
வைத்தாள் பார்வதி அம்மாள்.
டி எஸ். பி. திருஞானமும், சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவமும் விடைபெற்றுச்
சென்ற பிறகும் பரமசிவம் பிள்ளை வீட்டில் கூட்டம் கலையவில்லை.
மறு நாள் மாலை, மயிலைக் காளைகள் பூட்டிய வில்வண்டி பரமசிவம்
பிள்ளை வீட்டின் முன்னால் தயாராக நின்றது. அதன் பின்னால் இரண்டு
வண்டிகள் நின்றன. அந்த ஊரே திரண்டு வந்து. விட்டது, வழியனுப்பி
வைக்க!
வில் வண்டியில் மாலா, நீலா, முரளி, நளினி, ரவி, பரமசிவம் பிள்ளை,
பார்வதி அம்மாள் எல்லாரும் ஏறிக் கொண்டார்கள். பின்னால் இருந்த ஒரு
வண்டியில் தலைமை ஆசிரியருடன் மற்ற சங்கக் குழந்தைகளும்,
இன்னொரு வண்டியில் நீலாவின் அம்மா மீனாட்சியும், முரளியின் அம்மா
முத்து லட்சுமியும் வேறு சில குழந்தைகளும் ஏறிக் கொண்டார்கள். ஊர்
மக்கள் ஆரவாரத்துடன் வழியனுப்ப மூன்று வண்டிகளும் புறப்பட்டன.
அமரபுரம் ரயில் நிலையத்தை அடையும்போது மணி ஏழு ஆயிற்று.
“இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது” என்றார் தலைமை ஆசிரியர்.
நேரம் ஆக ஆக நீலாவுக்கு அம்மாவைப் பிரிந்து செல்ல
வேண்டியிருக்கிறதே என்ற கவலை அதிகமாகியது.
அம்மாவைத் தனியாக அழைத்து, “அம்மா, நீங்கள் எனக்காகவே
வாழ்கிறீர்கள். உங்களைப் பிரிந்து எப்படி அம்மா இருக்கப் போகிறேன்?”
என்று கண் கலங்கக் கூறினாள்.
“நீலா, கண்ணைத் துடை. ஒரே மகளான உன்னைப் பிரிந்து இருக்க
எனக்கும் மனசில்லை தான். ஆனாலும், உன் அப்பா நினைத்தது போல, நீ
நன்றாகப் படித்து முன்னுக்கு வர வேண்டும் என்றால், வேறு வழி
இல்லை. மாலாவும் அவள் அம்மாவும், உன் மேல் வைத்திருக்கும்
பிரியத்தைப் பார்த்தேன். நிச்சயம் தன் சொந்தப் பெண்ணைப் போலப்
பார்த்துக் கொள்வார்கள். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
புறப்படுகிறபோது அழலாமா? கூடாது நீலா” என்று மீனாட்சி நீலாவை
அணைத்துக்கொண்டு ஆறுதல் கூறித் தேற்றினாள்.
அப்போது, “நீலா! நீலா!” என்று முரளி கூப்பிட்டான். உடனே, நீலா
கண்ணைத் துடைத்துக் கொண்டு சென்றாள். மாங்குயில் சிறுவர்
சங்கத்தை எப்படி எப்படியெல்லாம் நடத்தலாம் என்பது பற்றித் தலைமை
ஆசிரியரும் பரமசிவம் பிள்ளையும் கூறிய யோசனைகளை நீலாவும்
மற்றவர்களும் கேட்டார்கள்.
ரயில் வர இன்னும் கால் மணி நேரமே இருந்தது. அப்போது, ஒரு சிறுவன்
வெகு வேகமாக அவர்கள் இருந்த இடத்துக்கு ஓடி வந்தான். அவன்
முரளியிடம் சென்று, தன் கையிலிருந்த ஒரு பெரிய துணிப் பையைக்
கொடுத்தான். முரளி, உள்ளேயிருந்து இரண்டு ரோஜா மாலைகளை
எடுத்தான். தலைமை ஆசிரியரிடம் கொடுத்து, நீலாவுக்கும்
மாலாவுக்கும் போடச் சொன்னான்.
தலைமை ஆசிரியர் ஒரு மாலையை மாலாவுக்குப் போடப் போனார்.
ஆனால் மாலா கழுத்தை நீட்டவில்லை. “சார், சார், முதலில் நீலாவுக்குப்
போடுங்கள். எல்லாவற்றுக்கும் அவள் தான் காரணம்” என்றாள்.
“இல்லை, இல்லை. மாலாவுக்குத்தான் முதல் மாலை” என்றாள் நீலா.
இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது சப்-இன்ஸ்பெக்டர்
சதாசிவம் அவர்களை வழியனுப்ப அங்கு வந்து சேர்ந்தார். உடனே,
தலைமை ஆசிரியர் தம் கையிலே ஒரு மாலையை வைத்துக் கொண்டு,
சப்-இன்ஸ்பெக்டரிடம் இன்னொரு மாலையைக் கொடுத்தார்.
“முரளி, நீ ஒன், டூ, த்ரீ என்று சொல். த்ரீ என்றதும் தலைமை ஆசிரியரும்
நானும் ஒரே சமயத்தில் நீலாவுக்கும் மாலாவுக்கும் மாலைகளைப்
போட்டு விடுகிறோம். சரிதானா?” என்றார் சப்-இன்ஸ்பெக்டர்.
“நல்ல யோசனை! நல்ல யோசனை!” என்று எல்லாரும் குதூகலத்துடன்
ஆமோதித்தனர். நீலாவின் கழுத்திலும் மாலாவின் கழுத்திலும் ஒரே
சமயத்தில் மாலைகள் விழுந்தன.
“நீலா, மாலா, நீடூழி வாழ்க!”
“மாலா, நீலா, மகிழ்வோடு வாழ்க!”
முரளி முன்னால் கூற, மற்றவர்களும் பலமாகக் கூறி வாழ்த்தினார்கள்.
அவர்களது வாழ்த்தொலி, ஸ்டேஷனுக்கு ரயில் வரும்வரை நிற்கவில்லை.
ரயில் வந்து நின்றதும், நீலா, மாலா, நளினி, ரவி நால்வரும் ஏறினார்கள்.
அப்போது பார்வதி அம்மாள், “நளினி, நீலாவை நன்றாகக் கவனித்துக்
கொள். மாலா, நீலாவோடு போட்டி போட்டு நன்றாகப் படிக்க வேண்டும்.
ரவி, நீ பொல்லாத பயல். பாட்டி வீட்டுக்கு வந்து, நீலாவைக் கூட்டி
போய்விட்டாயே! நீலா நன்றாக ஆடுவாள்; பாடுவாள். உன் பாடு
கொண்டாட்டம்தான்” என்று கூறிக்கொண்டே ரவியின் கன்னத்தில் மாறி
மாறி முத்தம் கொடுத்தாள்.
“நீலா, யார் மனசும் கோணாதபடி நடந்து நல்ல பெண் என்ற பெயர் எடுக்க
வேண்டும். வளர்க்கிறவர்கள், ஆதரிக்கிறவர்கள், பெற்றவர்கள்
எல்லாருக்கும் மேலும் மேலும் பெருமை தேடித் தர வேண்டும்” என்று
அன்போடு கூறினாள் நீலாவின் அம்மா.
“நீலா, மாலா, நீடூழி வாழ்க!”
“மாலா, நீலா, மகிழ்வோடு வாழ்க!”
மீண்டும் வாழ்த்தொலி வானளாவக் கேட்டது.
ரயில் நகர்ந்தது. கண் கலங்க எல்லாரும் விடை கொடுத்தார்கள்; பார்வை
மறையும் மட்டும் கைகளை ஆட்டிக்கொண்டே நின்றார்கள்.
செங்கற்பட்டு ரயில் நிலையத்தில் வண்டி நின்ற போது நன்றாக
விடிந்துவிட்டது. இரவு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்ததால், நீலாவும்
மாலாவும் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தனர். குழந்தை ரவிக்கும்
நல்ல தூக்கம்.
“பேப்பர், பேப்பர், பிரபல கொள்ளைக்காரன் சங்கிலியாண்டி பிடிபட்டான்!
பேப்பர், பேப்பர்” என்ற குரல் கேட்டு நளினி ஆவலோடு எட்டிப் பார்த்தாள்.
பேப்பர் விற்ற பையனிடம் காசைக் கொடுத்து, ஒரு பத்திரிகையை
வாங்கினாள். அந்தப் பெட்டியிலிருந்த வேறு சிலரும் ஆளுக்கு ஒரு
பத்திரிகை வாங்கினார்கள்.
நளினி பத்திரிகையின் முன் பக்கத்தைப் பார்த்ததும், “அடே, நம்முடைய
மாலா, நீலா, முரளி படமெல்லாம் போட்டிருக்கிறார்களே!” என்று
அளவில்லாத ஆனந்தத்துடன் கூறினாள்.
உடனே, “அடியே, நீலா, மாலா, எழுந்திருங்கள். இதோ உங்கள் படங்கள்
எல்லாம் பத்திரிகையிலே வந்திருக்கிறது. உம், எழுந்து பாருங்கள்” என்று
அவர்களைத் தட்டி எழுப்பினாள்.
நீலாவும் மாலாவும் உடனே கண்விழித்து எழுந்தார்கள். படங்களைப்
பார்த்ததும், ‘நாம் காண்பது கனவா? நனவா?’ என்று அவர்களுக்கு
முதலில் விளங்கவில்லை. கண்களை நன்றாகக் கசக்கிக்கொண்டு
பார்த்தார்கள். உண்மைதான் என்பதைப் புரிந்து கொண்டார்கள்.
‘பிரபல கொள்ளைக்காரன் சங்கிலியாண்டி சரணடைந்தான்’ என்று
பத்திரிகையின் முன் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் இருந்தது.
அதற்குக் கீழே, ‘குழந்தைகளின் பொன் மனம் நாடகம் செய்த புரட்சி’
என்று சற்றுப் பெரிய எழுத்துக்களில் இருந்தது. பிறகு பூங்குடி
கிராமத்தில் நடந்ததைச் செய்தியாக வெளியிட்டிருந்தார்கள்.
அப்போது, அந்தப் பெட்டியில் இருந்தவர்கள் எல்லாரும் அங்குவந்து
நீலாவையும், மாலாவையும், “அடடே, இந்தப் பெண்கள் தானா!” என்று
அதிசயத்துடன் பார்த்தார்கள். சற்று நேரத்தில், அந்த ரயிலில்
இருந்தவர்கள், பிளாட்பாரத்தில் நின்றவர்கள் எல்லாருமே கூட்டமாக வந்து அவர்களை வியப்போடு பார்க்கத் தொடங்கினர். கூட்டம் வர வர
அதிகமானதால், போலீஸார் வந்து ஒழுங்குபடுத்த வேண்டிய நிலைகூட
ஏற்பட்டுவிட்டது!
வண்டி மீண்டும் புறப்படும்போது, பிளாட்பாரத்தில் நின்ற முன்பின்
தெரியாதவர்களெல்லாம் கூடத் தங்கள் கைகளை ஆட்டி நீலா, மாலாவை
வழி அனுப்பி வைத்தார்கள்.
ரயில் புறப்பட்டுச் சிறிது நேரத்தில் ஒரு டிக்கெட் பரிசோதகர் ஐந்தாறு
பொட்டலங்களுடன் அவர்கள் இருந்த இடத்துக்கு வந்தார். “பல்லைத்
தேய்த்துவிட்டு இந்தப் பலகாரங்களைச் சாப்பிடுங்கள். பாவம்,
பட்டினியோடு இருப்பிர்கள், உங்களைப் பார்க்க வந்தவர்கள், உங்களைச்
சாப்பிடக்கூட விட்டிருக்க மாட்டார்கள்” என்றார் அவர். அவரது அன்பைக்
கண்டு அவர்களது மனம் நெகிழ்ந்தது.
அவர்கள் பல்லைத் தேய்த்துப் பலகாரத்தைச் சாப்பிட்டதும், டிக்கெட்
பரிசோதகரும், அப்பெட்டியிலிருந்த மற்றவர்களும் அவர்களுடன் பேசிக்
கொண்டே வந்தார்கள்.
ரவி தாம்பரம் வந்துதான் எழுந்தான். அவன் எழுந்ததும், “ரவி, இதோ பார்,
இது யார்?” என்று பத்திரிகையிலிருந்த நீலாவின் படத்தைக் காட்டிக்
கேட்டாள் நளினி. அவன் நீலாவைப் பார்த்துச் சிரித்தான். “இது யார்?”
என்று மாலாவின் படத்தைக் காட்டி நீலா கேட்டதும், மாலாவைப் பார்த்துச் சிரித்தான் ரவி.
எழும்பூர் ஸ்டேஷனுக்குள் ரயில் நுழையும் போதே டாக்டர் சூரியசேகர்
அவர்களைப் பார்த்து விட்டார். அவர்கள் இருந்த பெட்டிக்கு வேகமாக
வந்தார்.
“நளினி, இதோ பார்” என்று தம் கையிலிருந்த ஓர் ஆங்கிலப்
பத்திரிகையில் இருந்த படங்களைக் காட்டினார்.
“இதோ, இதைப் பாருங்கள்” என்று பதிலுக்குத் தன் கையில் இருந்த
தமிழ்ப் பத்திரிகையைக் காட்டினாள் நளினி.
“மாலா, உன் சிநேகிதி நீலாவை நேரில் பார்க்கிறதுக்கு முன்னால்
படத்திலே பார்த்துவிட்டேன்!” என்று சிரித்துக்கொண்டே கூறிவிட்டு,
“சபாஷ்!” என்று இரு சிறுமிகளையும் முதுகில் தட்டிக் கொடுத்தார்.
பிறகு, ரவியைக் கையில் வாங்கி அவன் கன்னங்களில் முத்தம்
கொடுத்தார். எல்லாரும் வண்டியை விட்டு இறங்கி வெளியில் வந்தார்கள்.
டாக்டரின் கார் வெளியே நின்று கொண்டிருந்தது. அதில் ஏறிக்
கொண்டார்கள். அண்ணா நகரை நோக்கிக் காரை ஓட்டினார், டாக்டர்.
“பத்திரிகையிலே படம், செய்தியெல்லாம் வந்திருக்கிற விஷயம் எனக்கு
முதலில் தெரியவே தெரியாது. நான் உங்களை ஸ்டேஷனுக்கு வந்து
அழைத்துவர அவசர அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அந்தச்
சமயத்திலே நம் வக்கீல் வராகமூர்த்தி இருக்கிறாரே, அவர் போன்
பண்ணி, ‘என்னப்பா, உன் பெயர், உன் மகள், பெயரெல்லாம் பேப்பரிலே
வந்திருக்கிறதே! உன் மகள் படம் கூட வந்திருக்கிறது’ என்று சொன்னார்.
அண்ணா நகருக்குத்தான் சீக்கிரம் பேப்பர் வராதே! வருகிற வழியிலே
இந்தப் பேப்பரை வாங்கிப் பார்த்தேன். இந்தச் சின்ன வயதிலேயே இந்த
இரண்டு பெண்களும் பேரும் புகழும் பெற்று விட்டார்கள்!!” என்று
அளவில்லாத மகிழ்ச்சியோடு கூறினார்.
“அது சரி, நீங்கள் பூங்குடிக்கு மறுநாளே தந்தி கொடுத்துவிட்டீர்களே,
உங்களுக்கு எப்படி அவ்வளவு சீக்கிரம் தகவல் கிடைத்தது?” என்று
கேட்டாள் நளினி.
“உதவி போலீஸ் கமிஷனர் நம் உத்தண்டராம பிள்ளை இருக்கிறாரே, அவர்
சனிக்கிழமை காலையிலே எனக்கு போன் பண்ணி, ‘உங்கள்
மாமனாருடைய ஊர் எது?’ என்று கேட்டார். திடீரென்று இப்படிக்
கேட்கிறாரே, என்ன விசேஷமோ? என்று நினைத்தேன். ‘பூங்குடி’ என்று
நான் பதில் சொன்னதும், ‘உங்கள் மகள் பெயர் மாலாதானே?’ என்று
கேட்டார். ‘ஆம்’ என்றேன். ‘ஒரு நல்ல செய்தி’ என்று ஆரம்பித்து,
சங்கிலியாண்டி சரணடைந்ததை அவர் சுருக்கமாகக் கூறினார். உடனே
நான் தந்தி கொடுத்தேன்.”
“அம்மா, பூங்குடிக்குத் தந்தி வந்ததும் நீங்கள் சொன்னீர்களே, அது
சரிதான்” என்றாள் நீலா.
பேசிக்கொண்டே அவர்கள் வீடுவந்து சேர்ந்தார்கள். வீட்டுக்குள்
நுழையும்போதே, டெலிபோன் மணி ‘கண கண’ என்று ஒலித்துக்
கொண்டிருந்தது.
டாக்டர் போனை எடுத்துப் பேசினார். மற்றவர்கள் அருகில் நின்றபடி
கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
“ஆமாம், டாக்டர் சூரியசேகர்தான் பேசுகிறேன். ஓ, உத்தண்டராம்
பிள்ளையா?……நீலா என்பது எங்களுக்கு மிகவும் வேண்டியவர்களுடைய
பெண்தான். இரண்டு பேரையும் இப்பொழுதுதான் ரயிலிலிருந்து
அழைத்துவந்தேன். உடனே நல்ல சகுனம்போல, டெலிபோன் மணி
அடித்தது.. முரளி என்கிற பையன் பூங்குடி கிராமத்திலேயே
இருக்கிறான்.. ஓ, நீங்களே சாயங்காலம் வருகிறீர்களா? சந்தோஷம்……
என்ன! அதைவிடச் சந்தோஷமான செய்தியா! அது என்ன?…… நேரே
வரும்போது சொல்கிறீர்களா? சரி, தாங்ஸ்” என்று கூறிப் பேச்சை
முடித்தார் டாக்டர்.
“யாரது? உதவி போலீஸ் கமிஷனரா? ஏதோ மிகவும் சந்தோஷமான
செய்தி என்று அவர் சொன்னாரே! அது என்னவாம்?” என்று ஆவலாகக்
கேட்டாள் நளினி.



