நீலா மாலா
அழ. வள்ளியப்பா

சோவியத் நாட்டில் நீலா மாலா!

    மறுநாள் காலையில் டாக்டர் சூரியசேகரின் காரில் டாக்டர், நீலா, மாலா
    மூவரும் புறப்பட்டனர். யார் வீட்டுக்குப் போகிறோம் என்று டாக்டர்
    சொல்லவில்லை.

    டாக்டரின் இடது பக்கத்தில் இருந்த புத்தகத்தை நீலா பார்த்தாள். “டாக்டர்,
    ‘சோவியத் நாட்டில் மூன்று ஆண்டுகள்’ என்ற இந்தத் புத்தகத்தை
    நானும் மாலாவும் படித்திருக்கிறோம். சோவியத் நாட்டைப் பற்றி
    நிறையத் தெரிந்து கொண்டோம். பேராசிரியர் கனகலிங்கம் மிக நன்றாக
    எழுதியிருக்கிறார்” என்றாள்.

    “அடடே, நீங்கள் ஏற்கெனவே படித்துவிட்டீர்களா! இப்போது நாம் எங்கே
    போகிறோம், தெரியுமா? இந்தப் புத்தகத்தை எழுதிய பேராசிரியர்
    வீட்டுக்குத்தான்! அவர் எனக்கு மிகவும் வேண்டியவர் சோவியத் நாட்டில்
    மூன்று ஆண்டுகள் இருந்திருக்கிறார். அவருக்கு ரஷ்ய மொழி நன்றாகத்
    தெரியும். சோவியத் நாட்டில் பல மாணவர்களுக்கு அவர் தமிழ் சொல்லிக்
    கொடுத்திருக்கிறார். அவரைப் பார்த்துப் பேசினால், அவர் உங்களுக்கு
    நல்ல நல்ல யோசனையெல்லாம் சொல்லுவார்” என்றார் டாக்டர்.
    சிறிது நேரத்தில் மயிலாப்பூரிலுள்ள பேராசிரியர் கனகலிங்கம் வீட்டை
    அடைந்தார்கள். நீலாவும் மாலாவும் நேரு பரிசு பெற்றிருப்பதை முன்பே
    அறிந்திருந்த பேராசிரியர் அவர்களை மனமாரப் பாராட்டினார். பிறகு,
    “ரஷ்யக் குழந்தைகள் இந்தியாவைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள
    ஆசைப்படுவார்கள். நீங்கள் நம் நாட்டைப் பற்றி முடிந்த வரை தெரிந்து
    வைத்துக் கொள்ளுங்கள் ரஷ்யக் குழந்தைகள் கேட்கும்
    கேள்விகளுக்குத் தெரிந்த வரை பதில் சொல்லுங்கள். தெரியாது
    போனால், ‘தெரியவில்லை’ என்று சொல்லிவிடுங்கள். தவறாக மட்டும்
    எதையும் சொல்ல வேண்டாம்” என்று ஆரம்பித்து அந்த நாட்டைப்
    பற்றியும் மக்களைப் பற்றியும் சுருக்கமாகச் சொன்னார்.
    “ஏன் சார், எங்களுக்குத் தமிழில்தான் நன்றாகப் பேசத் தெரியும்.
    ஆங்கிலத்திலும் ஓரளவு பேசுவோம். ரஷ்யக் குழந்தைகளுடன் நாங்கள்
    எந்த மொழியில் பேசுவது?” என்று கேட்டாள் நீலா.
    “நம் தேசத்தைப் போலவே சோவியத் நாட்டிலும் பல மொழிகள்
    இருக்கின்றன. ஒவ்வொரு பகுதியினரும் வெவ்வேறு மொழி
    பேசுவார்கள். பள்ளிக்கூடத்தில் அவரவருடைய தாய்மொழிக்குத் தான்
    முதல் இடம். இரண்டாவது மொழியாக ரஷ்யமொழி பயில்கிறார்கள்.
    ஆறாவது வகுப்பு முதல் பத்தாவது வகுப்புவரை ஏதாவது ஓர் அயல்
    நாட்டு மொழியைக் கட்டாயப் பாடமாகக் கற்க வேண்டும். பெரும்பாலான குழந்தைகள் ஆங்கிலம் கற்கிறார்கள். சிலர் ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மொழிகளைக் கற்கிறார்கள். அதனால், ஆங்கிலம் தெரிந்த குழந்தைகள் பலர் அங்கே இருப்பார்கள்” என்றார் பேராசிரியர்.

    பிறகு, “உங்களுக்கு நடனம் ஆடத் தெரியுமா?” என்று அவர் கேட்டார்.
    “சுமாராக ஆடுவார்கள். பள்ளிக்கூட விழாக்களில் இருவரும் சேர்ந்து
    ஆடியிருக்கிறார்கள். ஆனாலும், நடன ஆசிரியர் வைத்து முறையாகக்
    கற்றுக் கொள்ளவில்லை” என்று சொன்னார் டாக்டர்.

    “நீலா கரக ஆட்டம் நன்றாக ஆடுவாள். நானும் அவளும் குறவன் – குறத்தி
    டான்ஸ் ஆடிப் பள்ளி விழாவிலே பரிசுகூட வாங்கியிருக்கிறோம்”
    என்றாள் மாலா.

    “அதையெல்லாம் நீங்கள் குழந்தைகள் முகாமில் ஆடிக் காட்டலாம். ரஷ்யக்
    குழந்தைகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்… அது சரி. உங்களுக்குப் பாடத்
    தெரியுமா?”

    “இருவருமே சுமாராகப் பாடுவார்கள். இவர்கள் பள்ளியிலே ஓர் இசை
    ஆசிரியை இருக்கிறார். அவர் சொல்லிக் கொடுத்த சில பாடல்களைப்
    பாடுகிறார்கள்” என்றார் டாக்டர்.

    “அப்புறம் என்ன? இவர்களுக்குப் பாடவும் தெரியும். ஆடவும் தெரியும்.
    ஆடலும் பாடலும் மொழி தெரியாதவர்களைக்கூட எளிதிலே கவர்ந்து
    விடுமே! இன்னொன்றையும் நான் சொல்ல வேண்டும். ரஷ்ய நாட்டுக்
    குழந்தைகள் உங்களுக்குச் சிறு சிறு பரிசுகளைக் கொடுப்பார்கள்.
    நீங்களும் பதிலுக்கு ஏதாவது கொடுக்க வேண்டாமா? முடிந்தால் சில
    பரிசுப் பொருள்களைக் கொண்டு போவது நல்லது” என்றார்
    பேராசிரியர்.

    அன்று முதல், பேராசிரியர் சொன்னபடி இந்தியாவைப்பற்றி நிறையத்
    தெரிந்து கொண்டார்கள். ரஷ்யாவைப் பற்றியும் அறிந்து கொண்டார்கள்.
    ரஷ்யக் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காகப் பல பரிசுப்
    பொருள்களைச் சேகரித்தார்கள். பளிங்கிலே செய்த தாஜ்மஹால்,
    கருங்கல்லிலே செய்த மகாபலிபுரத் தேர், கண்ணாடியிலே செய்த
    கபாலீஸ்வரர் கோயில், தந்தத்திலே செய்த யானை, தலைவர்களின்
    படங்கள் போட்ட தபால் தலைகள், தஞ்சாவூர்ப் பொம்மை போன்ற சில
    பொம்மைகள், மகாத்மா காந்திக்குப் பிடித்த மூன்று குரங்குகளின்
    பொம்மை, பைக்குள் அடங்கக் கூடிய அளவிலே திருக்குறளின் ஆங்கில
    மொழி பெயர்ப்புப் புத்தகம், காந்திஜியின் வாழ்க்கையை எடுத்துக்
    கூறும் சித்திரக் கதைப் புத்தகத்துடன் இன்னும் சில சிறுவர்
    புத்தகங்கள் இப்படிப் பலவற்றையும் சேகரித்தார்கள். இவற்றுடன் மாலா
    எழுதிய சில வண்ண ஓவியங்களையும் சோவியத் நாட்டுக்குக் கொண்டு
    செல்ல நீலா எடுத்து வைத்தாள்.

    நீலாவும் மாலாவும் சோவியத் நாடு போவதற்குப் பலவிதமான
    ஏற்பாடுகளைச் செய்த போதிலும் பள்ளிப் படிப்பிலே எப்போதும்
    போலவே நல்ல கவனம் செலுத்தி வந்தார்கள். வழக்கம் போல் ஆண்டுத்
    தேர்விலே நன்றாக எழுதினர்; சிறப்பாகத் தேறினர்.
    நீலா, மாலா, நளினி, ரவி நால்வரும் கோடை விடுமுறையைப்
    பூங்குடியில் குதூகலமாகக் கழித்துவிட்டு, ஜூன் முதல்தேதி சென்னை
    திரும்பினார்கள். வரும்போது நீலாவின் அம்மா மீனாட்சியையும் கூடவே
    கூட்டி வந்துவிட்டார்கள்.

    சோவியத் நாடு போவதற்கு ஒரு வாரம் முன்னதாகவே நீலா, மாலா,
    டாக்டர், நளினி, ரவி, மீனாட்சி அம்மாள் அறுவரும் டில்லி வந்துவிட்டார்கள்.

    டாக்டரின் நெருங்கிய நண்பரான டாக்டர் இந்தர் சிங் என்பவருடைய வீட்டில் தங்கி, அவருடைய காரில் டில்லியில் உள்ள முக்கியமான இடங்களையும், ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால், கண்ணன் பிறந்த மதுரா போன்ற சரித்திரப் பிரசித்தி பெற்ற இடங்களையும் பார்த்தார்கள்.

    ஜூன் 15ஆம் தேதி டில்லியிலிருந்து சோவியத் நாட்டின் தலைநகரான
    மாஸ்கோவுக்கு நீலாவையும், மாலாவையும், அவர்களுடன் பரிசு பெற்ற
    நான்கு குழந்தைகளையும் ஏற்றிச்செல்ல விமானம் தயாராக இருந்தது.
    டாக்டர், நளினி, மீனாட்சி அம்மாள் மூவரின் பாதங்களை நீலாவும்,
    மாலாவும் தொட்டுக் கும்பிட்டு விடை பெற்றார்கள்.

    ‘பெற்றோரைப் பிரிந்து இவ்வளவு தூரம் செல்கிறார்களே! ஒரு மாத
    காலம் பிரிந்து இருக்க வேண்டுமே!’ என்றெல்லாம் மீனாட்சி அம்மாளும்,
    நளினியும் கவலைப்பட்டார்கள்.

    ஆனால், டாக்டர் “இவர்கள் மட்டுமா போகிறார்கள்? கூடவே நான்கு
    குழந்தைகளும் போகிறார்களே! இவர்களைப் பத்திரமாக அழைத்துச்
    செல்ல ரஷ்யத் தூதரகத்தைச் சேர்ந்த ஓர் அம்மையாரும் செல்கிறாரே!
    சின்ன வயதில் இப்படியெல்லாம் வெளிநாடு போய் வந்தால்தான்
    அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படும்” என்று தைரியம் கூறினார்.
    டில்லியிலிருந்து மாஸ்கோ நோக்கிப் புறப்பட்டது விமானம். பரிசு பெற்ற
    ஆறு பேருக்குமே விமானத்தில் செல்வது இதுதான் முதல் தடவை. சுமார்
    நான்கு மணி நேரம்தான் ஆகியிருக்கும். அப்போது ரஷ்யத்
    தூதரகத்திலிருந்து வந்த அம்மையார், “இளம் நண்பர்களே, இன்னும்
    சிறிது நேரத்தில் மாஸ்கோவைக் காணப் போகிறீர்கள். ‘மாஸ்க்வா’
    என்னும் ஆற்றங் கரையில் இந் நகரம் இருப்பதால் இதற்கு ‘மாஸ்கோ’
    என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இங்கு இரண்டு நாட்கள் தங்குவோம்.
    பிறகு ஆர்த்தெக் முகாம் செல்வோம்” என்று அறிவித்தார்.
    மாஸ்கோவில் அவர்கள் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தார்கள்.
    அவர்களின் உள்ளத்தை மிகவும் கவர்ந்தது ‘லெனின் மாஸோலியம்’
    என்பது தான், ஒரு சதுரமான கட்டடத்தின் நடுவே கண்ணாடிப் பேழையில்
    லெனினுடைய உடல் வைக்கப்பட்டிருக்கிறது. தூங்குவது போல்
    இருக்கும் லெனின் உருவம் சிறிதுகூடக் கெடாமல் விஞ்ஞான
    முறையிலே பாதுகாக்கப்படுகிறது.

    அதைப் பார்த்ததும், “மாலா, லெனின் இறந்து ஐம்பது ஆண்டுகளுக்கு
    மேல் ஆகிறது. ஆனாலும் அப்படியே பத்திரமாக வைத்திருக்கிறார்களே,
    இப்படி நம் காந்தித் தாத்தாவின் உடலையும் வைத்திருந்தால்,
    நாமெல்லாம் பார்க்கலாமே!” என்று ஏக்கத்தோடு கூறினாள் நீலா.
    இரண்டு நாள் மாஸ்கோவில் தங்கிய பின், கருங்கடலின் கரையிலுள்ள
    ஆர்த்தெக் முகாமுக்கு அவர்களை அழைத்துச் சென்றார்கள். அலை
    மோதும் கடல், கடற்கரையிலே உயர்ந்த மலைகள், மலைச் சரிவிலே
    அழகான கட்டடங்கள், சுற்றிலும் பலவித மரங்கள், பலவகைப்
    பூஞ்செடிகள் இவற்றையெல்லாம் கண்ட அவர்களுக்கு ஒரே ஆனந்தம்.
    அங்கு போய்ச் சேர்ந்த சிறிது நேரத்திலே, அங்கிருந்த ரஷ்யக்
    குழந்தைகள் எல்லாரும் அவர்களுக்கு மிகவும் வேண்டியவர்களாகி
    விட்டார்கள். விதம் விதமான பாட்ஜுகளையும், சோவியத் நாட்டின்
    அற்புதமான காட்சிகளுடன் கூடிய அஞ்சல் அட்டைகளையும், வண்ண
    வண்ணத் தபால் தலைகளையும் பல ரஷ்யக் குழந்தைகள்
    அவர்களுக்குப் பரிசாக அளித்தார்கள்.

    ஆர்த்தெக்கில் பல முகாம்கள் இருந்தன. ஒவ்வொரு முகாமிலும் நாற்பது
    சிறுவர் சிறுமியர் இருந்தனர். அவர்களுக்கு ஆண் லீடர், பெண் லீடர்
    என்று இரண்டு லீடர்கள் இருந்தார்கள். இந்தியக் குழந்தைகளை
    அவர்களது முகாம்களுக்கு அழைத்துச் சென்று
    அறிமுகப்படுத்தினார்கள்.

    டில்லியிலிருந்து வந்த சந்த்ரேஷும், நீரஜாவும் ஆறு ரோஜாச் செடிகளைப்
    பதியன் போட்டுப் பத்திரமாகக் கொண்டு வந்திருந்தார்கள். அன்று
    மாலை நல்ல ஓர் இடமாகப் பார்த்து, அங்கு ஆறு பேரும் ஆளுக்கு ஒரு
    செடியாக நட்டார்கள். ரஷ்யக் குழந்தைகள் சுற்றிலும் நின்று வேடிக்கை
    பார்த்தார்கள்.

    “நேரு பரிசு பெற்ற நாங்கள், நேருவுக்கு மிகவும் பிடித்தமான ரோஜாச்
    செடிகளை இங்கு நட்டு வைத்திருக்கிறோம். இச்செடிகள் நன்கு பூத்துப்
    பல மலர்களைத் தரப் போகின்றன. இங்கு வரும் நண்பர்களுக்கு அந்த
    மலர்களைப் பார்க்கும் போதெல்லாம் நேரு மாமாவின் நினைவு வரும்.
    அத்துடன் எங்கள் நினைவும் வருமல்லவா?” என்று சிரித்துக்கொண்டே
    சொன்னாள், நீரஜா.

    முகாமில் காலையிலும் மாலையிலும் கட்டாய உடற் பயிற்சி நடக்கும்.
    மற்ற நேரங்களில் ரஷ்ய நண்பர்களுடன் சேர்ந்து மலை ஏறுவார்கள்;
    நீந்துவார்கள்; விளையாடுவார்கள்; புதிர் போடுவார்கள்;
    ஒவ்வொருவரது ஊரைப் பற்றியும், மக்களைப் பற்றியும், அவர்களது
    பழக்க வழக்கங்களைப் பற்றியும் தெரிந்து கொள்வார்கள்.
    ரஷ்யக் குழந்தைகளின் தேச பக்தி, ஒழுங்கு, கட்டுப்பாடு, தூய்மை
    முதலியவற்றைப் பார்க்கும் போது, “நாமும் இப்படி இருக்க வேண்டும்.
    நம் தேசக் குழந்தைகளும் இப்படி இருக்க வேண்டும்” என்று இந்தியக்
    குழந்தைகள் ஆசைப்படுவார்கள்.

    ஆர்த்தெக் முகாமிற்கு வந்த ஐந்தாம் நாள் நீலா மற்ற இந்தியக்
    குழந்தைகளுடன் காலை உணவு அருந்தச் சாப்பாட்டுக் கூடத்திற்குச்
    சென்றாள். அப்போது அங்கிருந்த சுமார் நானூறு சிறுவர் சிறுமியர்,
    “நீலா, உனக்கு மகிழ்ச்சியான பிறந்த நாள்” என்று வாழ்த்துக்
    கூறினார்கள்.

    அன்றுதான் நீலாவின் பிறந்த நாள் என்பது அப்போதுதான் நீலாவுக்கே
    தெரிந்தது. மாலாவும் மற்ற இந்தியக் குழந்தைகளும்கூட அப்போது
    தான் தெரிந்து கொண்டார்கள். அந்த முகாமிற்கு வரும்
    ஒவ்வொருவருடைய பெயர், முகவரி, பிறந்த நாள், பிறந்த ஊர் போன்ற
    விவரங்களை அங்கே உள்ள பதிவுப் புத்தகத்திலிருந்து தெரிந்து
    கொள்ளலாம். அன்றுதான் நீலாவின் பிறந்த நாள் என்பதை அப்
    புத்தகத்திலிருந்துதான் ரஷ்யக் குழந்தைகள் தெரிந்து கொண்டார்கள்;
    வாழ்த்தும் தெரிவித்தார்கள்.

    சிலர் நீலாவின் கையைப் பிடித்துக் குலுக்கினார்கள்; சிலர் இனிப்பு
    வழங்கினார்கள்; வேறு சிலர் மலர்களைக் கொடுத்து மகிழ்ச்சியைத்
    தெரிவித்தார்கள். இப்படி நானூறு பேரும் சேர்ந்து வாழ்த்தியபோது நீலா
    அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

    அந்த முகாமில் உள்ள ரஷ்யக் குழந்தைகள் அனைவரையுமே ‘இளம்
    முன்னோடிகள்’ என்றுதான் குறிப்பிடுவார்கள். அவர்கள் கழுத்தில்
    சிவப்பு டை அணிந்திருப்பார்கள். இந்தியக் குழந்தைகளுக்கும் அவர்கள்
    சிவப்பு டை அணிவித்து, அவர்களையும் கௌரவ இளம்
    முன்னோடிகளாக்கி விட்டார்கள்.

    முகாமில் இருந்தபோது இந்திய தினம் என்று ஒரு நாளைக்
    கொண்டாடினார்கள். அதையொட்டி ஒரு காட்சி நடந்தது. நான்கு நாட்கள்
    முன்பே, இந்தியக் குழந்தைகளுக்கு ஏராளமான டிராயிங் தாள்களையும்,
    அட்டைகளையும், வர்ணப் பெட்டிகளையும் கொடுத்திருந்தார்கள்.
    கல்கத்தாவிலிருந்து வந்த நரேஷ், யானை, மயில் போன்ற பல வண்ணப்
    படங்களை அழகாக வரைந்திருந்தான். மாலாவும் நீலாவின் உதவியுடன்
    டில்லியில் பார்த்த குதுப்மினார், செங்கோட்டை, ஆக்ராவில் கண்ட
    தாஜ்மஹால் போன்ற படங்களை அழகாக வரைந்திருந்தாள். ‘நேரு
    மாமா-லெனின் மாமா’ புத்தகத்திற்கு அவள் வரைந்திருந்த படங்களுடன்,
    ஏற்கெனவே அவள் ஊரில் வரைந்திருந்த படங்களையும் காட்சியில்
    வைத்திருந்தாள்.

    கேரளாவிலிருந்து வந்த ரேகா வரைந்திருந்த உழவர், மீனவர், நெசவாளர்,
    கதகளி நடனக் கலைஞர் ஆகியோரின் படங்களையும் ரஷ்யக்
    குழந்தைகள் கண்டு மகிழ்ந்தனர். அக்காட்சியில் காந்திஜி, நேருஜி,
    லால்பகதூர் சாஸ்திரி போன்ற தலைவர்களின் படங்களும் வைக்கப்
    பெற்றிருந்தன. அவற்றுடன் இந்தியக் குழந்தைகள் கொண்டு சென்ற பல
    கலைப் பொருள்களையும் ரஷ்யக் குழந்தைகள் பார்த்துப் பார்த்து
    மகிழ்ந்தனர்.

    அன்று ‘கோஸ்ட்ரோவையா’ என்ற சதுக்கத்தில் உயர்ந்த கம்பத்தில்
    பட்டொளி வீசிப் பறந்தது இந்தியக் கொடி! இந்தியக் குழந்தைகள்
    ‘ஜனகண மன’ கீதம் பாடி முடித்ததும், அவர்களுக்கு ரஷ்யக் குழந்தைகள்
    வாழ்த்துக் கூறினார்கள். மாலையில் இந்தியக் குழந்தைகளின் கலை
    நிகழ்ச்சி நடந்தது.

    ரோகவின் கதகளி நடனமும், நீலாவின் கரக ஆட்டமும் ரஷ்யக்
    குழந்தைகளை மிகவும் கவர்ந்து விட்டன. நாய், பூனை, கோழி கத்துவது
    போலவும், ரயில், ஸ்கூட்டர், ஏரோப்ளேன் வேகமாகச் செல்வது
    போலவும் நரேஷ் ‘மிமிக்ரி’ செய்தான். சந்த்ரேஷ் மாஜிக் நிபுணராக வந்து
    பல மாயா ஜால வித்தைகளைச் செய்து காட்டினான்.

    நீரஜா, நேருஜியைப் போல வெள்ளை உடை அணிந்து, தலையில்
    வெள்ளைத் தொப்பி வைத்து மேடைக்கு வந்தாள். அவள் தோளில் ஒரு
    வெள்ளைப் புறா இருந்தது! சமாதானத்துக்கு அறிகுறியான அந்தப்
    புறாவைக் கண்டதும், எல்லாருக்கும் ஒரே குதூகலம். அச்சமயம், ஒரு
    ரஷ்யச் சிறுமி மேடைக்கு ஓடி, தன் கையிலிருந்த சிவப்பு டையை
    நேருவாக நடித்த நீரஜாவின் கழுத்திலே கட்டிவிட்டாள். அப்போது
    இடைவிடாமல் கைதட்டி எல்லாரும் தங்கள் மகிழ்ச்சியைத்
    தெரிவித்தார்கள்.

    “1961ஆம் ஆண்டு நேருஜி இங்கு வந்தபோது அவருக்குச் சிவப்பு டை
    கட்டியதாகப் புத்தகத்திலே படித்தேன். அது இப்போது என் நினைவுக்கு
    வந்தது. அதனால்தான் நேரு மாமாவைப் போல் வந்த சகோதரி
    நீரஜாவுக்கு டை கட்டிவிட்டேன்” என்றாள் அச்சிறுமி.
    இந்தியக் குழந்தைகள் தங்களுக்குத் தெரிந்த பாடல்களைத்
    தனியாகவும், சேர்ந்தும் பாடினார்கள். எல்லாவற்றையும்விட நீலாவும்
    மாலாவும் ஆடிய குறவன் குறத்தி நடனத்துக்கு நல்ல வரவேற்பு
    இருந்தது.

    முகாம் முடிவதற்கு முதல் நாள் மாலை, ரஷ்யக் குழந்தைகள் நடனங்கள்
    ஆடியும், பாடல்கள் பாடியும் எல்லாரையும் குறிப்பாக இந்தியக்
    குழந்தைகளை மகிழ்வித்தார்கள்.

    முப்பது நாட்களும் முப்பது நிமிஷங்களாக ஓடிவிட்டன. இந்தியக்
    குழந்தைகள் விடைபெற்றுத் திரும்பும்போது பல ரஷ்யக் குழந்தைகள்
    அவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்கள். இந்தியக் குழந்தைகளும்
    தாங்கள் கொண்டுவந்த பரிசுகளை நண்பர்களுக்கு அளித்தார்கள்.
    பிரிய மனமில்லாமல் பிரிந்தார்கள்.

    “மகிழ்ச்சியோடு செல்லுங்கள்
    மறுபடியும் வாருங்கள்”

    என்று பாடி ரஷ்யக் குழந்தைகள் வழி அனுப்பினார்கள்.

    நீலாவும் மாலாவும் டில்லிக்குத் திரும்பி வருவதற்கு முதல் நாளே டாக்டர்
    சூரியசேகரும், நீலாவின் அம்மா மீனாட்சியும் டில்லிக்கு
    வந்துவிட்டார்கள். விமானம் வருவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே
    விமான நிலையத்தை அடைந்தார்கள்.

    விமானம் வரும் சப்தம் கேட்டதுமே, “அதோ நமது நீலா – மாலா வரும்
    விமானம் வந்து விட்டது” என்று குழந்தையைப் போலக் குதூகலத்துடன்
    கூறினார் டாக்டர். மீனாட்சி அம்மாளும் ஆவலாக விமானம்
    இறங்குவதைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

    விமானத்திலிருந்து பலர் இறங்கினார்கள். அவர்களின் பின்னால், பரிசு
    பெற்ற மற்ற நான்கு குழந்தைகளும் இறங்கினார்கள். டாக்டரும் மீனாட்சி
    அம்மாளும், “எங்கே நம் குழந்தைகள்?” என்று ஆவலாகக் கூர்ந்து
    பார்த்தார்கள். அப்போது மாலா விமானத்தின் உள்ளே இருந்து வருவது
    தெரிந்தது. “அதோ, மாலா!” என்றார் டாக்டர்.

    நீலா எங்கே? மாலாவும் ரஷ்யத் தூதரகத்தைச் சேர்ந்த அம்மையாரும்
    நீலாவை அணைத்த படி அழைத்து வருவது தெரிந்தது. நீலாவைப்
    பார்த்ததும் டாக்டர் திடுக்கிட்டார்!

    “என்ன இது! நீலாவின் வலது கண்ணிலே கட்டு! நீலாவுக்கு என்ன
    நேர்ந்தது?” என்று கதறி விட்டார்.

    “என்ன! நீலாவின் கண்ணிலே கட்டா?” என்று துடிதுடித்துப் போனாள்
    மீனாட்சி அம்மாள்.

    இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

    மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

    சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

    இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *