
நீலா மாலா
அழ. வள்ளியப்பா
அம்மாவுக்கு ஆபத்தா?
விழா முடிந்ததும், கலெக்டர் தம்முடைய காரிலேயே பரமசிவம்
பிள்ளையையும், தலைமை ஆசிரியர் தணிகாசலத்தையும் ஏற்றிக்
கொண்டார்.
“அந்தப் பெண் வீடு எங்கே இருக்கிறது? டிரைவருக்கு வழி
சொல்லுங்கள்” என்றார் கலெக்டர்.
சிறிது நேரத்தில் கலெக்டரின் கார், ஊரின் கடைசியில் இருந்த குடிசைப்
பகுதிக்கு வந்தது. அப்போது இரவு மணி எட்டு இருக்கும்.
“இதோ இந்தக் குடிசைதான்” என்று கூறித் தலைமை ஆசிரியர் ஒரு
குடிசையைக் காட்டினார். டிரைவர் காரை அந்தக் குடிசையின் முன்னால்
நிறுத்தினார். கார் நின்றதும் எல்லாரும் வேகமாகக் கீழே இறங்கினார்கள்.
தலைமை ஆசிரியர் முன்னால் சென்றார்.
அந்தக் குடிசைக்குள் அரிக்கேன் விளக்கு மங்கலாக எரிந்து
கொண்டிருந்தது. எந்த வித சப்தத்தையும் காணோம்.
“இன்னும் வைத்தியரது வீட்டிலிருந்து வரவில்லை போலிருக்கிறது”
என்றார் கலெக்டர்.
“வைத்தியர் வீடு பக்கத்தில் இல்லை. அது இன்னொரு கோடியில்
இருக்கிறது” என்றார் பரமசிவம் பிள்ளை.
அதேசமயம், குடிசைக்குள்ளேயிருந்து விளக்கைக் கையில் ஏந்தியபடி
யாரோ வருவது தெரிந்தது. “யாரது?” என்று கேட்டார் தலைமை ஆசிரியர்.
திரியைத் தூண்டிவிட்டு விளக்கைத் தூக்கிப் பிடித்தது அந்த உருவம்.
“அடடே, தலைமை ஆசிரியரா? இதோ எங்கள் எஜமானர். அது யார்?
தெரியவில்லையே!” என்று அந்த உருவம் கேட்டது.
உடனே பரமசிவம் பிள்ளை, “யாரது மீனாட்சியா? உன்னைக் கருந்தேள்
கொட்டினதாக யாரோ சொன்னார்களே?” என்று கேட்டார்.
“கருந்தேளா? என்னைக் கொட்டியதா! யார் சொன்னது?” என்றாள்
மீனாட்சி அம்மாள்.
மூவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் விழித்தனர்.
“அப்படியானால் எல்லாம் பொய்தானா?” என்றார் தலைமை ஆசிரியர்.
“பொய்யாக இருப்பதே நல்லது. மெய்யாக இருந்தால் பாவம், அந்தப்
பெண் நீலா என்ன பாடுபடுவாள்?” என்றார் கலெக்டர்.
“சரி மீனாட்சி, நீலா எங்கே? இங்கே வரவில்லையா?” என்று கேட்டார்
பரமசிவம் பிள்ளை.
“பகலிலே பள்ளிக்கூடம் போனவள் தான். இன்னும் வரவில்லையே!”
என்று பதில் அளித்தாள் மீனாட்சி அம்மாள்.
உடனே தலைமை ஆசிரியர், “இந்த அம்மாளைக் கருந்தேள் கொட்டி
உயிருக்கே ஆபத்து ஏற்பட்டதாகவும், சத்திரத்துக்குப் பக்கத்திலே
இருக்கிற தருமலிங்க வைத்தியரிடத்திலே தூக்கிப் போயிருக்கிறதாகவும்
சொன்னார்களே, அதனாலே, நீலா தருமலிங்க வைத்தியர் வீட்டுக்குத்தான்
ஓடியிருப்பாள். பாவம்” என்றார்.
“என்னம்மா, உங்களுக்கு உடம்புக்கு ஒன்றும் இல்லையே?” என்று
மீனாட்சி அம்மாளைப் பார்த்துக் கேட்டார் கலெக்டர்.
“கடவுள் அருளாலே என் உடம்பு நன்றாகவே இருக்கிறது. நீலா
மனசுதான் என்ன துடிதுடிக்குமோ!” என்றாள் மீனாட்சி அம்மாள்.
“சரி, நாம் காரை எடுத்துக் கொண்டு வைத்தியர் வீட்டுக்குப் போவோம்.
வழியிலே நீலா வருகிறாளா என்று பார்த்துக்கொண்டே போகலாம்”
என்றார் கலெக்டர்.
எல்லாரும் காரின் அருகிலே சென்றார்கள். ஏறப் போகும் சமயம், “அதோ
யாரோ ஓடி வருவது போல் தெரிகிறதே!” என்றார் டிரைவர்.
யாவரும் கூர்ந்து பார்த்தனர். சந்தேகமில்லை.. ஒடிவருவது நீலாவேதான்!
தன் குடிசையின் முன்னால் கார் நிற்பதையும், காரைச் சுற்றிப் பெரிய
மனிதர்கள் நிற்பதையும் மங்கிய நிலவு வெளிச்சத்தில் கண்டாள் நீலா.
உடனே “அம்மா!” என்று கதறிக் கொண்டே குடிசையை நோக்கித்
தாவினாள்.
வாசலில் நின்று கொண்டிருந்த அம்மா, “நீலாக் கண்ணு. நீ எங்கே
போயிருந்தாய்? என்ன நடந்தது?” என்று ஆவலாகக் கட்டி அணைத்துக்
கொண்டு கேட்டாள்.
“அம்மா! உங்களைத் தேள் கொட்டி உயிருக்கே ஆபத்து என்று…”
“நீலா, நான் நன்றாகத்தானே இருக்கிறேன். யாரோ கதை கட்டி
விட்டிருக்கிறார்கள்”
“அம்மா! நீங்கள் விழாவுக்கு வருவதாகச் சொன்னீர்களே, வந்திருந்தால்
இப்படியெல்லாம் நடந்திருக்குமா?”
“சரி, என்னதான் நடந்தது! புரியும்படி சொல்லு நீலா!”
நீலா நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள். அவள் சொன்னதைக் கலெக்டர்,
தலைமை ஆசிரியர், பரமசிவம் பிள்ளை, டிரைவர், இன்னும் அக்கம்
பக்கத்திலே இருந்த பலரும் காது கொடுத்துக் கவனமாகக்
கேட்டுக்கொண்டிருந்தனர்.
“அம்மா, நீங்கள் பள்ளிக்கூடத்துக்கு வருவதாகச் சொல்லி விட்டு,
வராமலே இருந்து விட்டீர்கள்: நான் ஒவ்வொரு தடவை பரிசு வாங்குகிற
போதும், கூட்டத்திலே தேடித் தேடிப் பார்த்தேன். பள்ளிக்கூடத்து வாசல்
பக்கம் அடிக்கடி வந்து பார்த்தேன். உங்களைக் காணோம். வெள்ளிக்
கோப்பை வாங்குகிற போதாவது வந்து விடுவீர்கள் என்று
எதிர்பார்த்தேன். வரவில்லை. தலைமை ஆசிரியர் பேசிக்கொண்டிருந்த
சமயம் பள்ளியின் முன்னாலே வந்து, தெருவையே பார்த்துக்கொண்டு
நின்றேன். அப்போது முரளி வந்து ‘உன் அம்மாவைக் கருந்தேள் கொட்டி
விட்டதாம். சத்திரத்துக்குப் பக்கத்திலே இருக்கிற தருமலிங்க வைத்தியர்
வீட்டுக்குத் தூக்கிப் போயிருக்கிறார்களாம். உன் அம்மா பிழைக்கிறதே
கஷ்டம்தானாம். யாரோ ஒரு அம்மா சொன்னார்கள்’ என்றான். அப்புறம்
என்னாலே ஒரு வினாடி அங்கே இருக்க முடியுமா? உடனே வேகம்
வேகமாகச் சத்திரத்துப் பக்கமாக ஓடினேன். அங்கே வைத்தியர்
திண்ணையிலே உட்கார்ந்து வெற்றிலை பாக்கு போட்டுக்
கொண்டிருந்தார். ‘என் அம்மா வந்தார்களா?’ என்று கேட்டேன்.
‘இல்லையே!’ என்றார் வைத்தியர். எனக்கு மேலும் பயம் ஏற்பட்டுவிட்டது…”
“ஏன் நீலா பயப்படணும்? வைத்தியர்தான் நான் வரவில்லையென்று
சொல்லிவிட்டாரே!”
நீலா சிரித்துக்கொண்டே, “இப்போது நான் பயப்படவில்லை. ஆனால்,
அப்போது பயந்து போனேன். அம்மாவைத் தூக்கிக்கொண்டு
போகிறபோது வழியிலே ஏதாவது ஆகியிருந்தால்….? வீட்டுக்கே திரும்பக்
கொண்டு போயிருப்பார்களோ என்று நினைத்து மிகவும்
வேதனையோடு ஓடி வந்தேன். இங்கே வருகிற போது, வீட்டுக்கு
முன்னாலே காரும், பெரியவர்களும் நிற்கிறதைப் பார்த்ததும் என்னவோ
ஏதோ என்று பயந்து போனேன். என் அம்மா நல்லபடியாக இருக்க
வேணுமென்று கடவுளை வேண்டிக் கொண்டேன். நல்ல வேளை, கடவுள்
தான் காப்பாற்றினார்” என்றாள் நீலா.
நீலா சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தலைமை ஆசிரியர்,
“சே, இப்படியும் ஒரு விளையாட்டா? வீண் வதந்தியைக் கிளப்பி விட்டு
வேடிக்கை பார்ப்பதா? ஒருவனுக்கு வேடிக்கை; எத்தனை பேருக்கு
வேதனை!” என்று ஆத்திரத்துடன் கூறினார்.
“நீலா, முரளிதானே உன்னிடம் பொய் சொன்னது? என் தங்கை மகன்
முரளிதானே? வரட்டும். அவனை நான் என்ன செய்கிறேன், பார்” என்று
சீறினார் பரமசிவம் பிள்ளை,
“பாவம், முரளி என்ன பண்ணுவான்? அவனிடத்திலே யாரோ ஓர் அம்மா
சொல்லியிருக்கிறார்கள். என்னை அவனுக்கு நன்றாகத் தெரியும்
என்பதால் உடனே ஓடிப்போய் நீலாவிடம் சொல்லியிருக்கிறான். அவன்
மேலே குற்றம் சொல்லக்கூடாது” என்றாள் நீலாவின் அம்மா.
இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே விழா முடிந்து, நடந்து
வந்தவர்கள் அங்கு வந்து சேர்ந்து விட்டனர். நீலாவின் குடிசையின்
முன்பு கலெக்டரின் காரும், ஒரு சிறு கூட்டமும் நிற்பதைக் கண்ட
அவர்களுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. பிறகு, அங்கிருந்த
சிலரைக் கேட்டு நடந்ததைத் தெரிந்துகொண்டார்கள்.
“இதோ இவையெல்லாம் நீலா வாங்கிய பரிசுகள்! ஒவ்வொரு தடவை
பரிசு வாங்கியதும் என்னிடத்திலேதான் தந்து வைத்தாள்” என்று
கூறினாள், நீலாவின் தோழியான கோமளா. இரண்டு கைகளாலும்
தூக்கிவந்த பரிசுகளை அவள் மீனாட்சி அம்மாளின் முன்னால் வைத்தாள்.
அரிக்கேன் விளக்கில் அவைகளைப் பார்த்தாள் மீனாட்சி அம்மாள்.
அப்போது, கலெக்டர் தம்முடைய கார் டிரைவரிடம், “காரை இப்படிக்
குடிசைக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்தி, முன் விளக்குகளைப்
போடு” என்றார். அவ்வாறே கார் நிறுத்தப்பட்டது. காரின் பிரகாசமான
வெளிச்சத்தில் பரிசுப் பொருள்கள் பளிச்சென்று தெரிந்தன. கண் குளிரக்
கண்டாள் மீனாட்சி அம்மாள்.
ஃபவுண்டன் பேனா, புத்தகப் பெட்டி, பிளாஸ்டிக் வாளி, பூக்கூடை,
புத்தகம், எவர்சில்வர் தட்டு, வர்ணப்பெட்டி! அவை ஒவ்வொன்றையும்
கையில் எடுத்துப் பார்த்தாள் மீனாட்சி அம்மாள். அப்போது அவள்
முகத்தில் சொல்ல முடியாத மகிழ்ச்சி பொங்கியது. நீலா முகத்தில் அந்த
மகிழ்ச்சி இரண்டு மடங்காகப் பிரதிபலித்தது.
“அம்மா! இவர்கள் தான் நமது மாவட்டக் கலெக்டர். இவர்கள்
கையாலேதான் இந்தப் பரிசுகளையெல்லாம் வாங்கினேன்.” என்றாள்
நீலா.
மீனாட்சி அம்மாள் கலெக்டரைக் கையெடுத்துக் கும்பிட்டாள்.
“அம்மா! உண்மையிலேயே நீங்கள் பாக்கியம் செய்தவர்கள். உங்களுடைய
பெண் படிப்பிலே, பண்பிலே சிறந்தவளாக இருக்கிறாள். இவளை நீங்கள்
நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். பரமசிவம் பிள்ளை வேண்டிய
உதவியைச் செய்வதாகச் சொல்லியிருக்கிறார். நிச்சயம் அவர்
சொன்னபடி செய்வார். இந்தப் பெண்ணின் படிப்பு சம்பந்தமாக
என்னாலே முடிந்த உதவிகளை நானும் செய்வேன்” என்றார் கலெக்டர்.
உடனே மீனாட்சி அம்மாள், “இவளுடைய அப்பா எத்தனையோ பேருக்கு
உதவியிருக்கிறார். கடைசியிலேகூட ஒரு குழந்தைக்காக அவர் தம்
உயிரையே கொடுத்தார். தருமம் தலை காக்கும் என்று சொல்வார்கள்.
அவர் செய்த உதவியும் தியாகமும்தான் இப்படி உங்களைப் போன்ற
நல்லவர்கள் உருவத்தில் வந்திருக்கிறது… எங்களாலே உங்களுக்கு
எவ்வளவோ சிரமம்…” என்று நன்றியோடு கூறினாள்.
“மிஸ்டர் தணிகாசலம் அந்த வெள்ளிக் கோப்பையை இந்த இருட்டிலே
கொடுக்க வேண்டாம். நாளைக் காலையிலே கொண்டுவந்து
நீலாவிடத்திலே, என் சார்பிலே கொடுத்துவிடுங்கள்” என்று கூறி
கலெக்டர் எல்லாரிடத்திலும் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டுவிட்டார்.
நீலாவின் அப்பா ஒரு குழந்தைக்காக உயிரைக் கொடுத்தார் என்பது
அந்தப் பகுதியிலே உள்ள எல்லாருக்கும் நன்றாகத் தெரியும். அது நடந்த
மறுநாளே – அதாவது எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக – அந்தச் செய்தி
எல்லாப் பத்திரிகைகளிலும் கொட்டை எழுத்துக்களில் வெளிவந்தது.
அந்தச் செய்தி என்ன?



