
நீலா மாலா
அழ. வள்ளியப்பா
பொன் மனம் நாடகம்
“நீலா! நீலா!”
குரல் கேட்டு நீலா குடிசைக்குள்ளிருந்து ஓடி வந்தாள். எதிரே மாலாவும்
முரளியும் நிற்பதைக் கண்டதும், “என்ன மாலா! உன் பாட்டி
வீட்டுக்குத்தான் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அதற்குள்ளே நீங்கள்
வந்துவிட்டீர்களே!” என்றாள்.
“நாம் கொடுத்த நாடகத்தை இரவே திருத்தி வைப்பதாக ஹெட்மாஸ்டர்
சொன்னாரே, இந்நேரம் திருத்தி வைத்திருப்பார், இல்லையா? அவர் வீடு
இங்கிருந்து பக்கம் தானே! அதனாலே தான் நாங்கள் இங்கே
வந்துவிட்டோம். வா, போகலாம்” என்றாள் மாலா.
மூவரும் புறப்பட்டுத் தலைமை ஆசிரியர் வீடு நோக்கிச் சென்றனர்.
அப்போது அவர் துண்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு
வெளியே புறப்பட இருந்தார். நீலா, மாலா, முரளி மூவரையும் கண்டதும்,
“அடடே! நீங்களே வந்துவிட்டீர்களா? நான் பரமசிவம் பிள்ளை
வீட்டிற்குத்தான் புறப்பட்டுக் கொண்டிருந்தேன்” என்றார்.
“சார், நாடகம் எப்படி சார் இருக்கிறது?” என்று தயக்கத்துடன் கேட்டாள்
மாலா.
“அதெல்லாம் இப்போது எதுவும் சொல்ல மாட்டேன். எல்லாரும் நேராக
உன் தாத்தா வீட்டுக்குப் போவோம். அங்கே போய்ப் பேசலாம்” என்று
கூறி, நாடகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். அவர் கூடவே
மூவரும் சென்றார்கள்.
பரமசிவம் பிள்ளையின் வீட்டுக்குள் நுழைந்ததும், பார்வதி
அம்மாளைத்தான் அவர்கள் முதலில் கண்டார்கள். உடனே தலைமை
ஆசிரியர், “அம்மா, உங்கள் மாலாவும் நீலாவும் சேர்ந்து ஒரு நாடகம்
தயாரித்திருக்கிறார்கள்: அடடா! அடடா! அடடா!” என்று ஒரேயடியாகப்
புகழ்ந்தார்.
“அப்படியா!” என்று ஆனந்தம் பொங்கக் கேட்டாள் பார்வதி அம்மாள்.
“அப்படியானால் இந்த நாடகத்தைப் பிரமாதமாக நடத்திவிட
வேண்டியதுதான்” என்று கூறிக் கொண்டே அங்கு வந்தார் பரமசிவம்
பிள்ளை.
அன்று மாலையே மாங்குயில் சிறுவர் சங்கச் செயற்குழு மாமரத்தடியில்
கூடியது. நாடகத்தில் யார் யாரை எந்த எந்தப் பாத்திரத்தில் நடிக்கச்
செய்தால் நாடகம் சிறப்பாக இருக்கும் என்று ஆலோசனை செய்தார்கள்.
“சார்! இந்த நாடகத்திலே நான் திருடனாக நடிக்கட்டுமா சார்?” என்று
கூட்டத்துக்குத் தலைமை வகித்த தலைமை ஆசிரியரைக் கேட்டான் முரளி.
“சார், பொன்னியாக நடிப்பதற்கு நான் ஒரு பெண்ணைத்
தேர்ந்தெடுத்திருக்கிறேன். நீங்கள் சரியென்று சொன்னால்…” என்று
மாலா கூறுவதற்குள்,
“யார் அந்தப் பெண்?” என்று தலைமை ஆசிரியர், நீலா, முரளி மூவரும்
ஒரே சமயத்தில் கேட்டனர்.
“நம் நீலாதான்” என்று சிரித்துக்கொண்டே கூறினாள் மாலா.
“நல்ல வேளை! வேறு யாரையாவது சொல்லப் போகிறாயோ என்று
நினைத்தேன்” என்றார் தலைமை ஆசிரியர்.
“எந்த வேஷம் கொடுத்தாலும், என்ன வேலை சொன்னாலும், என்னாலே
முடிந்த வரையில் செய்கிறேன்” என்று அடக்கமாகப் பதிலளித்தாள் நீலா.
“நாடகத்துக்கு என்ன பெயர் வைக்கலாம்?” என்று கேட்டார் தலைமை
ஆசிரியர்.
“‘திருந்திய திருடன்’ என்று பெயர் வைக்கலாம் சார்” என்றான் மணி.
“அவ்வளவு நன்றாக இல்லையே! செல்வி, நீ ஒரு பெயர் சொல்லம்மா.
சங்கத்துக்கு அழகான பெயர் வைத்தவளல்லவா நீ” என்றார் தலைமை
ஆசிரியர்.
அவள் யோசித்து யோசித்துப் பார்த்தாள். நல்ல பெயராகத்
தோன்றவில்லை.
“‘பொன் மனம்’ என்று பெயர் வைக்கலாமா, சார்?” என்று கேட்டாள் நீலா.
“ஆ! நல்ல பெயர்! பொன் மனம்! பொன்னைக் கொள்ளையிட வந்தவன்,
செல்வந்தரின் பொன் மனத்தை அறிந்துதானே திருந்துகிறான்! அதனால்
‘பொன் மனம்’ மிகவும் பொருத்தமான பெயர். இதையே வைத்து
விடலாமா?” என்று மற்றக் குழந்தைகளைப் பார்த்துக் கேட்டார், தலைமை
ஆசிரியர்.
“சரி சார். அப்படியே வைத்து விடலாம்” என்று எல்லாரும்
ஆமோதித்தார்கள்.
“சரி, ‘பொன் மனம்’ நாடகத்தில் உடனே பத்துப் பிரதிகள் எடுத்து, நடிக்கப்
போகிற ஒவ்வொருவரிடமும் ஒரு பிரதியைக் கொடுக்கலாம்.
ஒவ்வொருவரும் அவரவர் பேசவேண்டியதை இரண்டு நாளைக்குள்
மனப்பாடம் செய்துவிட வேண்டும். நான் இன்றிரவு தஞ்சாவூர்
போகிறேன். நாளை மறுநாள் திரும்பி விடுவேன்” என்றார் தலைமை
ஆசிரியர்.
பள்ளிக்கூடத்தில் ஆண்டுக்கு ஒரு முறை நாடகம் நடக்கும். அந்த
நாடகங்களில் முரளிக்குச் சிறு சிறு வேஷம்தான் கொடுப்பார்கள்.
ஆனாலும் நாடகம் சம்பந்தமாக எந்த வேலை கொடுத்தாலும்
ஆர்வத்தோடு செய்வான். அதனால் அவனுக்கு டைரக்ஷன், ஒப்பனை,
காட்சி அமைப்பு, ஒலி ஒளி அமைப்பு எல்லாவற்றிலும் கொஞ்சம்
கொஞ்சம் தெரியும். அந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு மற்றக்
குழந்தைகளுக்கு அவன் எப்படி எப்படி நடிக்க வேண்டும் என்று
சொல்லிக் கொடுத்தான்.
மூன்றாம் நாள் காலையில், நாடக ஒத்திகை மாமரத்தடியில் நடந்து
கொண்டிருந்தது. பரமசிவம் பிள்ளையும் மற்றக் குழந்தைகளும் அதைப்
பார்த்துச் சுவைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது தஞ்சாவூர்
போயிருந்த தலைமை ஆசிரியர் அங்கே வந்தார். உடனே ஒத்திகையை
நிறுத்தி விட்டு, “வணக்கம் சார், வணக்கம் சார்” என்று எல்லாரும்
கைகூப்பி வரவேற்றார்கள். உடனே அவர், “ஏன் ஒத்திகையை நிறுத்தி
விட்டீர்கள்? உம், நடத்துங்கள்” என்றார்.
தொடர்ந்து ஒத்திகை நடந்தது. குழந்தைகள் திக்கவில்லை;
திணறவில்லை. நன்றாக மனப்பாடம் செய்திருந்ததால் அழகாகப்
பேசினார்கள்; கூச்சமில்லாமல் உணர்ச்சியோடு நடித்தார்கள்.
“இவ்வளவு நன்றாகச் செய்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
இதெல்லாம் உங்களது அளவில்லாத ஆர்வத்தையே காட்டுகிறது.” என்று
மகிழ்ச்சியோடு கூறினார் தலைமை ஆசிரியர்.
“சார்! இவ்வளவு தூரம் எங்களுக்கு நடிக்கக் கற்றுக் கொடுத்ததே
முரளிதான் சார்” என்றாள் நீலா.
“அப்படியா! சரி, கதை – நீலா, நாடக அமைப்பு – மாலா, டைரக்ஷன் – முரளி’
என்று விளம்பரப்படுத்த வேண்டியதுதான்” என்றார் தலைமை ஆசிரியர்.
உடனே மற்றக் குழந்தைகள் எல்லாரும் “ஆமாம் சார், அப்படியே
செய்துவிடலாம்” என்று குதித்துக்கொண்டே கூறினார்கள்.
ஐந்தாம் நாள் ஒத்திகை நடந்தபோது, பரமசிவம் பிள்ளை தலைமை
ஆசிரியரிடம், “சார்! இந்த நாடகத்தை இந்த மாமரத்தடியிலே மேடை போட்டு நடத்த வேண்டுமென்றுதானே நினைத்தோம். அது கூடாது.
பிள்ளைகளெல்லாம் இவ்வளவு அருமையாக நடிக்கும் போது, இந்தச்
சின்ன இடத்திலே நடத்துவது சரியில்லை. மாரியம்மன் கோயில்
முன்னாலே இருக்கிறதே திறந்தவெளி அரங்கம், அங்கேதான் இதை நடத்த
வேண்டும்” என்றார்.
“நல்ல யோசனைதான். ஆனால், இருநூறு, முந்நூறு செலவாகுமே!”
“ஐந்நூறு ரூபாய் செலவாகட்டுமே! நான் தருகிறேன். இப்படி ஒரு நல்ல
நாடகத்தை நம் ஊர் ஜனங்கள் மட்டுமில்லை; சுற்றுப்புறத்து ஊர்
ஜனங்களும் வந்து பார்த்து மகிழவேண்டும்.”
உடனே அங்கிருந்த குழந்தைகள் கைதட்டி அந்த யோசனையை
வரவேற்றனர்.
“அப்படியானால், நாம் உடனே அமரபுரம் போய், நாடகம் நடத்துவதற்குப்
போலீஸ் அனுமதி வாங்க வேண்டும். மைக், லைட், மேக்-அப்
எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்யவேண்டும். வேதமுனி கம்பெனியிலே
சொல்லி நாடக சீன்களையும் கொண்டுவரச் சொல்லவேண்டும்” என்றார்
தலைமை ஆசிரியர்.
“சார், நாம் இருவரும் நாளையே புறப்பட்டுச் சென்று எல்லா
ஏற்பாடுகளையும் செய்து விடுவோம்…….ஆமாம், நாடகத்தை எந்தத்
தேதியில் வைத்துக் கொள்ளலாம்?” என்று கேட்டார் பரமசிவம் பிள்ளை,
அவருக்கு அளவு கடந்த உற்சாகம். அந்த உற்சாகத்தில் அவர் இருபது
வயது இளைஞரைப் போலத் தோன்றினார்.
“நாங்கள் புறப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்னாலே வைத்துக்
கொண்டால் நல்லது” என்றாள் மாலா.
“சரி, நீங்கள் அடுத்த மாதம் அதாவது ஜுன் 10-ஆம் தேதி தானே
புறப்படுகிறீர்கள்? 8-ஆம்தேதி வெள்ளிக்கிழமை நாடகத்தை நடத்தி
விடலாமா?” என்று கேட்டார் பரமசிவம் பிள்ளை.
“வெள்ளிக்கிழமை பொருத்தமான நாள். அது மட்டுமில்லை. அதற்கு
முதல் நாள் – வியாழக்கிழமை அமரபுரத்திலே சந்தை கூடும். அங்கே
விளம்பரம் செய்தால், நிறையப் பேர் நாடகம் பார்க்க வருவார்கள்” என்றார்
தலைமை ஆசிரியர்.
நாடகத்துக்கான ஏற்பாடுகளெல்லாம் மும்முரமாக நடந்தன.
நாடகத்துக்கு அனுமதி வாங்கப் போனபோது சப்-இன்ஸ்பெக்டர்
சதாசிவம், “நீங்கள் நடத்தப் போகிற நாடகத்திலே ஒரு பிரதி கொண்டு
வந்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்.
தலைமை ஆசிரியர் தயாராகக் கையில் வைத்திருந்த ஒரு பிரதியை
அவரிடம் கொடுத்தார். “நாளைக் காலையில் யாரையாவது
அனுப்புங்கள். அதற்குள் கதையைப் படித்துப் பார்க்கிறோம்.
ஆட்சேபகரமான விஷயம் எதுவும் இல்லையென்றால் உடனே அனுமதி
கொடுத்து விடுவோம்” என்றார் சப்-இன்ஸ்பெக்டர்.
மறுநாள் காலையில் தலைமை ஆசிரியரே சப்-இன்ஸ்பெக்டரைப் பார்க்கச்
சென்றார். அவரைப் பார்த்ததும், “நாடகம் மிக நன்றாக இருக்கிறது.
இவ்வளவு நன்றாக எழுதிய உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே
தெரியவில்லை” என்றார் அவர்.
“அடடே, இதை எழுதியவன் நான் அல்ல. நீலா என்ற சிறுமி கதை
எழுதினாள். மாலா என்ற சிறுமி அதை நாடகமாக்கினாள். உங்கள்
பாராட்டை அந்தச் சிறுமிகளிடம் சொல்லுகிறேன்.”
“அப்படியா! சரி, அன்று நாடகம் நடத்தும் இடத்துக்கு நாலைந்து
போலீஸ்காரர்களை அனுப்பி வைக்கிறேன். ஜனங்களை ஒழுங்காக
உட்கார வைக்க, அமைதி காக்க அவர்கள் உதவுவார்கள்.”
“மிகவும் நன்றி. நாடகம் பார்க்க நீங்களும் அவசியம் வரவேண்டும். நீங்கள்
வந்தால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.”
“வரப் பார்க்கிறேன். நாடகம் வெற்றி பெற என் நல்வாழ்த்துக்கள்.” என்று
கூறி, சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம், தலைமை ஆசிரியரின் கையைப்
பிடித்துக் குலுக்கி விடை கொடுத்தார்.
பெரிய பெரிய தட்டிகளிலும் அட்டைகளிலும் நாடக விளம்பரங்களை
எழுதினார்கள். மாலாவுக்குத் துணையாகப் பள்ளிக்கூட டிராயிங்
மாஸ்டரையும் தலைமை ஆசிரியர் அனுப்பி வைத்திருந்தார். இருவரும்
அழகாக விளம்பரங்களை எழுதினார்கள். முரளி கவர்ச்சியாக வர்ணம்
தீட்டினான். பல வண்ணங்களில் தயாரான அந்த விளம்பரத் தட்டிகளும்
அட்டைகளும் பூங்குடியிலும் சுற்றுப்புற ஊர்களிலும் உள்ள
மரங்களிலும், பஸ் ஸ்டாண்ட், கடை வீதி போன்ற இடங்களிலும் காட்சி
அளித்தன.
அமரபுரத்தில் சந்தை கூடும் இடத்தின் முகப்பிலே இருந்த
விளம்பரத்தைப் பார்க்காமல் யாரும் உள்ளே போக முடியாது!
நண்பர்களுடன் சைக்கிளில் ஏறி ஊர் ஊராகச் சென்று இப்படியெல்லாம்
விளம்பரப்படுத்தியவன் முரளி’தான்! தலைமை ஆசிரியர் சொன்னது
போல், ‘கதை – நீலா, நாடக அமைப்பு – மாலா, டைரக்ஷன் – முரளி’ என்று
எல்லா அட்டைகளிலும் விளம்பரப்படுத்தப்பட்டது.
சிறுவர்களே இந்த நாடகத்தை நடத்துகிறார்கள் என்பதைக் கேட்டுச்
சுற்றுப்புறத்து ஊர்களிலுள்ள குழந்தைகளெல்லாம் தங்கள்
பெற்றோருடன் நாடகம் பார்க்க வந்துவிட்டார்கள். அவ்வளவு பெரிய
கூட்டத்தை மாரியம்மன் கோவில் திருவிழாவில் – அதுவும் ஒன்பதாம் திரு
விழாவில்தான் – காணலாம்.
நாடகம் தொடங்கியது. ஒவ்வொரு காட்சியையும் கூடியிருந்தோர்
மிகவும் சுவைத்தார்கள்; பாராட்டினார்கள்; பலமுறை கைதட்டி
மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.
நாடகத்தில் பதினோரு காட்சிகள் முடிந்து விட்டன. இதோ
பன்னிரண்டாவது காட்சி.
மேடையில் ஒரு பங்களாவின் ஒரு பகுதி தெரிகிறது. அங்கே மங்கலாகத்
தெரியும் விளக்கு ஒளியில், ஓர் உருவம் அடிமேல் அடிவைத்துப்
பூனைபோல் நடந்து வருகிறது. சுற்றுமுற்றும் பார்க்கிறது. கட்டிலில்
படுத்திருக்கும் வீட்டுக்காரரைக் கண்டதும், அருகிலே செல்கிறது.
தலையணைக்கு அடியிலே மெதுவாகக் கையைக் கொடுத்துத் தடவிப்
பார்க்கிறது. ஒன்றும் அகப்படவில்லை. அப்போது வீட்டுக்காரர் விழித்துக்
கொள்கிறார். “திருடன்! திருடன்!” என்று கூச்சலிடுகிறார்.
“ஏய், வாயை மூடு. பேசாமல் பெட்டிச் சாவியைக் கொடு. இல்லை, இதோ
பார்…” என்று கையிலிருக்கும் கூர்மையான கத்தியைக் காட்டுகிறான்,
அந்தத் திருடன்.
“பெட்டிச் சாவி என்னிடம் இல்லையே!” என்கிறார் வீட்டுக்காரர்.
“ஏய், பொய்யா சொல்கிறாய்? இதோ உண்மையைக் கக்க வைக்கிறேன்,
பார்” என்று கூறி அவரது நெஞ்சுக்கு நேராகத் திருடன் கத்தியைக்
காட்டுகிறான். எங்கே பெட்டிச் சாவி என்று மீண்டும் மிரட்டுகிறான்.
“இதோ பெட்டிச் சாவி. அவரை ஒன்றும் செய்யாதே!” என்று
கூறிக்கொண்டே அடுத்த அறையிலிருந்து ஒரு சிறுமி ஓடிவருகிறாள்.
“அனாதையான என்னைச் சொந்த மகளைப் போல வளர்த்து வருகிறார்
இந்த உத்தமர். இவரைக் கொன்று திரும்பவும் என்னை அனாதை ஆக்கி
விடாதே!” என்று கெஞ்சுகிறாள் அச்சிறுமி.
அவள் குரலைக் கேட்ட திருடன் திடுக்கிடுகிறான். தன் பைக்குள்ளிருந்த
டார்ச் விளக்கை எடுத்து அவள் முகத்துக்கு நேராகப் பிடிக்கிறான்.
விளக்கு வெளிச்சத்தில் அவளைப் பார்த்ததும், “ஆ! என் பொன்னியா!
பொன்னம்மா!” என்று கூறிக் கையிலிருந்த டார்ச்சையும், கத்தியையும்
கீழே போட்டுவிட்டுச் சிறுமியின் அருகே ஓடுகிறான். அவளை அப்படியே
கட்டி அணைத்து, இரு கன்னங்களிலும் மாறிமாறி முத்தம்
கொடுக்கிறான்.
அப்போது வீட்டுக்காரர் சுவிட்சைப் போடுகிறார். விளக்கு பளிச்சென்று
எரிகிறது. வெளிச்சத்தில், தன் முகத்தைக் காட்டவே திருடனுக்கு
வெட்கமாக இருக்கிறது. தலையைக் கீழே தொங்கப் போட்டுக் கொண்டு,
முகத்தை மூடிக் கொள்கிறான்.
“அப்பா! இன்னும் இந்தத் தொழிலை விடவில்லையா? இந்தத் திருட்டுத்
தொழிலால்தானே நான் என் அம்மாவைப் பறிகொடுத்தேன்!” என்று கண்
கலங்க அச்சிறுமி கூறுகிறாள்.
“என்ன! உன் அம்மாவைப் பறி கொடுத்து விட்டாயா?” என்று
பதற்றத்துடன் நிமிர்ந்து பார்த்துக் கேட்கிறான் திருடன்.
“ஆமாம், இரண்டு வருஷத்துக்கு முன்னாலே, உங்களைப்
போலீஸ்காரர்கள் பிடித்துப் போனார்களே, அதற்கப்புறம் அம்மா அதே
கவலையிலே நோயாய்ப் படுத்து விட்டார்கள். இதோ நீங்கள் கொல்லப்
போனீர்களே, இவர்கள் கட்டி வைத்த தரும ஆஸ்பத்திரியிலேதான் அம்மா
பத்து நாள் படுக்கையிலே இருந்தார்கள். எவ்வளவோ மருந்து
கொடுத்தும், எவ்வளவோ கவனமாகப் பார்த்தும் அம்மா
பிழைக்கவில்லை. செத்துப் போனார்கள். பெரிய டாக்டரம்மாவுக்கு என
மேலே மிகவும் பிரியம். நான் அனாதையாகப் போன விவரத்தை
டாக்டரம்மா இவர்களிடத்திலே சொன்னார்கள். இவர்கள் உடனே என்னை
இங்கே அழைத்துவந்து சொந்த மகள் மாதிரியே வளர்க்கிறார்கள். பெட்டிச்
சாவியைக்கூட என்னை நம்பித் தந்து வைத்திருக்கிறார்கள். இதோ சாவி.
உம், பிடியுங்கள்.”
இதைக் கேட்டதும் திருடனின் கண்களில் பொலபொலவென்று கண்ணீர்
வழிகிறது. திடீரென்று வீட்டுக்காரரின் காலில் அவன் விழுகிறான். பிறகு,
“ஐயா, என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் நான் திருட மாட்டேன்;
ஊரை ஏமாற்றமாட்டேன் உழைத்துப் பிழைப்பேன். என் பெண்ணைக்
காப்பாற்றின உங்கள் வீட்டிலேயே நான் கொள்ளையடிக்க வந்தேனே!
உங்களைக் கொல்வதாக மிரட்டினேனே! உங்கள் பொன் மனசை
அறியாமல் உங்கள் வீட்டிலே பொன் திருட வந்துவிட்டேன். உங்கள் பொன் மனம் என்னைத் திருத்தி விட்டது. என் பொன்னியும் என்னை திருத்தி விட்டாள். நான் அடியோடு திருந்தி விட்டேன். என்னை மன்னித்து
விடுங்கள்” என்று அவர் காலடியில் உட்கார்ந்த படியே அழுகிறான். அவன்
சிந்தும் கண்ணீர் அவரது பாதத்தைக் கழுவுகிறது.
உள்ளத்தை உருக்கும் இக்காட்சியை மெய் மறந்து மக்கள் பார்த்துக்
கொண்டிருக்கும் போது, திடீரென்று எங்கிருந்தோ ஒரு சாமியார்
மேடைக்கு ஓடி வந்தார். சடை முடியும், நீண்ட தாடியும், காவி உடையும்
அணிந்திருந்த அவர் தம்முடைய தாடியைப் பிடித்து இழுத்தார். அது
தனியாக வந்து விட்டது! சடை முடியையும் தனியாகக் கழற்றினார்.
இரண்டையும் தூக்கி எறிந்துவிட்டு மேடையிலே நின்ற அவரை,
எல்லாரும் உற்றுப் பார்த்தார்கள். நல்ல உயரம், பயில்வான் போல
உறுதியான உடல், முறுக்கு மீசை, பரட்டைத் தலை, இவற்றுடன்
அவனைக் கண்டதும் மக்கள் திடுக்கிட்டனர்.
“நான் தான் சங்கிலியாண்டி” என்றான் அவன்.
“ஆ! சங்கிலியாண்டியா”
“ஐயோ! பொல்லாத கொள்ளைக்காரனல்லவா!”
“பெரிய கொலைகாரன்!”
“இவன் ஜெயிலிலிருந்து தப்பி ஓடிவிட்டதாகப் பேப்பரிலே வந்ததே!”
“இங்கே எப்படி வந்தான்? ஏன் வந்தான்?”
இதுமாதிரிப் பலரும் திகிலுடன் கூச்சலிட்டார்கள். மேடைக்கு
அருகிலிருந்த பலர், அலறியடித்துக் கொண்டு, ‘தப்பித்தோம்;
பிழைத்தோம்’ என்று ஓடலானார்கள்.
ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. அடுத்து என்ன நடக்குமோ, ஏது
நடக்குமோ என்ற பயத்துடன் எல்லாரும் இருந்த இடத்தைவிட்டு எழுந்து
நின்றனர்.



