நீலா மாலா
அழ. வள்ளியப்பா

சென்னையில் பொன்மனம்!

    “உதவி போலீஸ் கமிஷனர் நாலு மணிக்கு வரப்போகிறார்; நல்ல செய்தி
    சொல்லப் போகிறார். அவர் வருவதற்கு முன்னாலே, பலபேர் உங்களைப்
    பார்க்க வரப் போகிறார்கள். அதனாலே மாலா நீயும் நீலாவும் உடனே
    போய்க் குளித்து, அழகாய் உடை உடுத்தித் தயாராக இருக்க வேண்டும்.
    உம், மாலா, நீலாவை அழைத்துப் போ” என்றார் டாக்டர் சூரியசேகர்.
    பிறகு மனைவியைப் பார்த்து, “நளினி, குழந்தைகளைப் பலரும் பார்க்க
    வருவார்கள். அதனாலே நேற்று மாலையே மிட்டாயிலே இரண்டு கிலோ,
    பிஸ்கட்டிலே ஐந்து கிலோ வாங்கி வந்து விட்டேன். பால்கூட நாலு புட்டி
    அதிகமாகக் கொண்டு வரச் சொன்னேன்” என்றார்.

    நீலா குளித்துவிட்டு வந்ததும் அழகான ஒரு பட்டுப் பாவாடையையும்,
    ஒரு பட்டுச் சட்டையையும் தயாராக வைத்துக்கொண்டு நின்றாள் மாலா.
    “நீலா, இதோ இந்தப் பாவாடை, சட்டையைப் போட்டுக்கொள்” என்றாள்
    மாலா.

    “எனக்கு எதற்கு இந்தப் பட்டுப் பாவாடையெல்லாம்? வேண்டாம் மாலா.
    நான் கொண்டு வந்திருக்கிற பாவாடை, சட்டையையே போட்டுக்
    கொள்ளுகிறேன்.”

    “அதெல்லாம் கூடாது இதோ பார், இன்னொரு செட் பட்டுப் பாவாடை,
    பட்டுச் சட்டை நாம் இரண்டு பேரும் இன்றைக்குப் பட்டு ஆடை அணிய
    வேண்டுமாம்! இது என் அப்பாவின் ஆசை. அம்மாவின் ஆசையும்
    இதுதான். நீ வேண்டாம் என்றால் எனக்கும் வேண்டாம்.”

    “மாலா, நீ பட்டு ஆடை உடுத்தலாம், ஆனால், நானோ ஏழை…”

    “நீலா, இனிமேல் இப்படியெல்லாம் பேசக் கூடாது. நீயும் நானும் ஒன்று.

    நமக்குள்ளே வித்தியாசமே கிடையாது. நீ இந்த உடைகளைப் போட்டுக்
    கொள்ளத்தான் வேண்டும்.”

    இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, நளினி அங்கு வந்து
    விட்டாள்.

    “நீலா, பேசாமல் வாங்கி அணிந்து கொள் நீயும் மாலாவும் எங்களுக்கு
    இரட்டைப் பிள்ளைகள் மாதிரி. உங்களுக்குள்ளே வித்தியாசமே கூடாது.
    டாக்டர் காலையில் மிகவும் கண்டிப்பாகச் சொல்லியிருக்கிறார்” என்றாள்.
    “ஏனம்மா, நாளைக்குப் பள்ளிக்கூடம் திறந்து விடுவார்களே, நீலாவைச்
    சேர்க்க வேண்டுமே!”

    “எல்லாம் உன் அப்பா முன்னதாகவே ஏற்பாடு செய்து பணமும்
    கட்டிவிட்டார். நாளைக் காலையிலே நான் உங்களோடு வந்து, தலைமை
    ஆசிரியையிடம் நீலாவை அறிமுகப்படுத்தப்போகிறேன்…… அது சரி, நீலா,
    பட்டு ஆடையை உடுத்திக்கொள். சீக்கிரம் தயாராக வேண்டும்.”

    நளினி வற்புறுத்திச் சொன்னதும் நீலா பட்டுப் பாவாடையையும்
    சட்டையையும் அணிந்து கொண்டாள். தலை வாரி, பூச்சூடி இருவரும்
    டாக்டரின் முன்னால் போய் நின்றதும், “ஆ! நளினி! இந்த இரட்டைக்
    குழந்தைகளைப் பார்த்தாயா? எவ்வளவு அழகாக இருக்கிறார்கள்!” என்று
    ஆனந்தம் பொங்கக் கூறி, அவர்கள் இருவரையும் இரு கைகளால்
    அணைத்துக் கொண்டார்.

    டாக்டர் எதிர்பார்த்தபடியே, அண்ணாநகரில் இருக்கிற குழந்தைகள்,
    பெரியவர்கள், இன்னும் வெளியிடத்திலே இருந்தும் பலர் தொடர்ந்து
    வந்து கொண்டே இருந்தார்கள். மாலாவையும் நீலாவையும்
    மகிழ்ச்சியோடு பாராட்டினார்கள். மனமார வாழ்த்தினார்கள்.
    ‘டாண், டாண், டாண், டாண்.’

    சரியாக மணி நான்கு அடிப்பதற்கும் தெருவிலே ஹாரன் சப்தம்
    கேட்பதற்கும் சரியாக இருந்தது. படகு போன்ற பச்சை நிறக் கார் ஒன்று
    டாக்டர் சூரியசேகரின் பங்களா எதிரிலே வந்துநின்றது. உடனே டாக்டர்
    சூரியசேகர் வாசலுக்கு விரைந்து வந்தார். காரிலிருந்து இறங்கிய உதவி
    போலீஸ் கமிஷனர் உத்தண்டராம பிள்ளையை வணங்கி வரவேற்றுப்
    பங்களாவுக்குள் அழைத்துச் சென்றார். உள்ளே நுழைந்ததும் நளினி,
    மாலா, நீலா மூவரும் இரு கைகூப்பி அவரை வரவேற்றார்கள். ரவிகூட
    சல்யூட் அடித்து அவரை வரவேற்றான்?

    ரவியின் கன்னத்தில் செல்லமாகத் தட்டிக் கொடுத்துவிட்டு, நீலாவின்
    அருகிலே சென்றார், உதவி போலீஸ் கமிஷனர். “நீலா, நீயும் மாலாவும்
    கிராமத்திலேயிருந்த பக்காத் திருடனைப் பிடித்துக் கொடுத்தீர்கள்.

    பட்டணத்திலேயும் பெரிய பெரிய திருடர்கள் இருக்கிறார்கள்.
    உங்களிடத்திலே அவர்களும்கூட மாட்டிக் கொள்வார்கள்” என்று சிரித்துக்
    கொண்டே கூறினார். பிறகு, இரு சிறுமிகளையும் இருபுறமும் உட்கார
    வைத்துக்கொண்டு சிற்றுண்டி சாப்பிட்டவாறே பேசினார்:

    “டாக்டர், நான் இந்தக் குழந்தைகளை நேரிலே பார்த்துப் பாராட்டுவதோடு,
    ஒரு சந்தோஷமான செய்தியையும் சொல்லிவிட்டுப் போகலாமென்று
    தான் வந்தேன். சங்கிலியாண்டி பிடிப்படக் காரணமாக இருந்தவர்களுக்கு
    ரூபாய் ஐயாயிரம் பரிசு கொடுப்பதென அரசாங்கத்திலே முடிவு எடுத்து
    விட்டார்கள். பரிசை எப்படிக் கொடுப்பது என்பதும் முடிவாகி விட்டது”
    என்று கூறித் தமது பையிலிருந்த ஒரு சிறு டயரியை எடுத்தார். அதிலே
    ஒரு பக்கத்தைப் புரட்டி, “கதை எழுதிய நீலாவுக்கு ஆயிரம் ரூபாய்;
    நாடகமாக்கிய மாலாவுக்கு ஆயிரம் ரூபாய்; டைரக்ட் செய்த முரளிக்கு
    ஆயிரம் ரூபாய், மிச்சமுள்ள ரூபாய் இரண்டாயிரத்தை மற்றக்
    குழந்தைகளுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுப்பதாக முடிவு
    செய்தாயிற்று. அத்துடன் ஒரு வேண்டுகோள்” என்றார்.
    “வேண்டுகோளா! அது என்ன?” என்று கேட்டார் டாக்டர்.

    “அடுத்த மாதம் எங்கள் போலீஸ் இலாகாவிலே ‘போலீஸ் வாரம்’ என்று
    ஒரு வாரம் கொண்டாடப் போகிறோம். ஒவ்வொரு நாளும் இரவிலே கலை நிகழ்ச்சி நடக்கும். கடைசி நாளிலே – அதாவது ஜூலை 31-ஆம் தேதி
    ‘பொன் மனம்’ நாடகத்தைப் பூங்குடியிலே நடத்திய அதே குழந்தைகள்
    நடத்திக் காட்ட வேண்டும். இந்த ஊரிலே இருக்கிறவர்களும் அதைப்
    பார்க்க வேண்டாமா?”

    “ஓ! நன்றாக நடத்தலாம். ஆனால், நீலா, மாலாவைத் தவிர எல்லாருமே
    பூங்குடியிலேதான் இருக்கிறார்கள்.”

    “அது தெரிந்ததுதானே? அவர்களையெல்லாம் நீங்கள் சென்னைக்கு
    வரவழையுங்கள். போக வரச் செலவு, சாப்பாட்டுச் செலவு
    எல்லாவற்றையும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். தங்குவதற்கும் வசதி
    செய்து கொடுப்போம்.”

    “போக வரச் செலவு மட்டும் கொடுத்தால் போதும். அவர்கள் இங்கேயே
    தங்குவார்கள். இங்கேயே சாப்பிடுவார்கள். எனக்கும் இதிலே
    சந்தோஷம்தானே?” என்றார் டாக்டர்.

    “சரி, இன்றைக்கே உங்கள் மாமனாருக்கு எழுதிப் போடுங்கள். நாங்களும்
    அமரபுரம் சப்-இன்ஸ்பெக்டர் மூலமாக பூங்குடியில் உள்ள மாங்குயில்
    சிறுவர் சங்கத்துக்குத் தகவல் தெரிவிக்கிறோம்.”

    உதவி போலீஸ் கமிஷனர் விடைபெற்றுச் சென்ற பிறகு, மாலா மகிழ்ச்சி
    தாங்காமல் குதிக்கத் தொடங்கி விட்டாள். “அப்பா, கூடவே
    நிலாவினுடைய அம்மா, முரளியினுடைய அம்மா, தாத்தா, பாட்டி
    எல்லாரையும் வரச் சொல்லவேண்டும்.”
    மாலா கூறி முடிப்பதற்குள், “மாலா, நம் சங்கத் தலைவரை
    மறந்துவிட்டாயா?” என்று கேட்டாள் நீலா.

    “பருப்பில்லாமல் கல்யாணமா? உங்கள் தலைமை ஆசிரியர் இல்லாமல்
    நாடகமா? கட்டாயம் அவரையும்தான் அழைக்க வேண்டும்” என்றாள் மாலா.

    அடுத்த நிமிடமே டாக்டர் சூரியசேகர், பரமசிவம் பிள்ளைக்கு விவரமாகக்
    கடிதம் எழுதினார்.


    மறுநாள் காலை ஒன்பதரை மணிக்கு கஸ்தூரிபா கல்வி நிலையத்தில்
    பிரார்த்தனை நடந்தது. பிறகு, தலைமை ஆசிரியை தங்கம்மாள் பேச
    ஆரம்பித்தார்:

    “அருமைமிக்க ஆசிரியைகளே, அன்புமிக்க மாணவிகளே, இன்று ஒரு
    மகிழ்ச்சியான செய்தியைக் கூறப் போகிறேன். நமது பள்ளி மாணவி
    மாலாவும், அவளது சிநேகிதி நீலாவும் ஒரு திருடனைப் பிடித்துக்
    கொடுத்ததாகப் பத்திரிகையில் படித்திருப்பீர்கள். நேற்றுவரை மாலா
    மட்டுமே நம் பள்ளி மாணவியாக இருந்தாள். இன்று நீலாவும் நம் பள்ளி
    மாணவியாகிவிட்டாள்! ஆம், இன்று நீலாவும் நம் பள்ளியில்
    சேர்ந்துவிட்டாள். இப்போது மாலாவும் நீலாவும் உங்கள் முன்னால்
    வந்து நிற்பார்கள்” என்றதும் மாலா, நீலாவின் கையைப் பிடித்து
    அழைத்துவந்தாள். இருவரும் தலைமை ஆசிரியையின் இருபுறமும்
    நின்று எல்லாருக்கும் வணக்கம் செய்தார்கள். உடனே, மற்ற மாணவியர்
    அனைவரும் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

    அன்று மாலை பள்ளிக்கூடம் விட்டு வீடு வந்ததும், வரவேற்பு அறையில்
    இருந்த ஒருவர், “குழந்தைகளே, உங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன்”
    என்றார். அவர் அருகிலே காமிராவுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
    “என்ன சார் வேண்டும்?” என்று கேட்டுக் கொண்டே மாலா அவர் அருகிலே சென்றாள். நீலாவும் கூடவே போனாள்.

    அவர் தம் கையில் வைத்திருந்த ஒரு கட்டுப் பத்திரிகைகளை மேஜை மேல்
    பரப்பினார். “ஆ! இந்த ‘சிறுவர் உலகம்’ பத்திரிகை எனக்கு மாதா மாதம்
    தபாலில் வருகிறதே எனக்கு மிகவும் பிடிக்குமே!” என்றாள் மாலா.
    “அப்படியா! மகிழ்ச்சி. இத்தனையும் சிறுவர் உலகம் தான். ஆனால்,
    வெவ்வேறு மொழிகளில் இருக்கிறது. மொத்தம் 13 மொழிகளில் இதை
    வெளியிடுகிறோம். தமிழ்ப் பதிப்பின் ஆசிரியர் நான்தான்…”

    “அடடே, அருமைநாயகம் என்பது நீங்கள் தானா! நீலா, இவர்களுடைய
    கதைகளையெல்லாம் நான் ஆசை ஆசையாகப் படிப்பேன்.
    இன்றைக்குத்தான் நேரிலே பார்க்கிறோம். இது நம் அதிர்ஷ்டம்தான்”
    என்றாள் மாலா.

    “உங்கள் இருவரையும் பார்க்கத்தான் நான் வந்திருக்கிறேன். உங்களைப்
    பேட்டி கண்டு சிறுவர் உலகத்திலே எழுதப் போகிறேன். உங்களுடைய
    புகைப்படங்களோடு பேட்டி வெளிவர வேண்டும் என்பதுதான் என் ஆசை.

    ஆனாலும் அவசரமில்லை. உள்ளே போய்க் கால் முகம் கழுவி, ஏதாவது
    சாப்பிட்டுவிட்டு வாருங்கள். காத்திருக்கிறோம்” என்றார் அருமைநாயகம்.
    மாலை ஆகாரம் முடிந்ததும் பேட்டி ஆரம்பமானது. ஆசிரியர்
    அருமைநாயகம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மாலாவும், நீலாவும்
    ‘டாண், டாண்’ என்று பதில் சொன்னார்கள்.

    பிறகு, மாலாவையும் நீலாவையும் ஒன்றாக நிற்க வைத்தும் உட்கார
    வைத்தும் புகைப்படங்கள் எடுத்தார்கள். இருவரும் சேர்ந்து ‘சிறுவர்
    உலகம்’ படிப்பது போல ஒரு படம் எடுத்தார்கள். அப்போது டாக்டர்
    சூரியசேகர் அங்கு வந்துவிட்டார். டாக்டர், நளினி, ரவி ஆகியோரையும்
    அவர்களுடன் நிற்கவைத்துப் படம் எடுத்தார்கள்.

    “போலீஸ் வாரம் கொண்டாடும் போது இவர்களது பேட்டியுடன் ‘சிறுவர்
    உலகம்’ வந்துவிடும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல; பாரத நாடு முழுவதும்
    நீலா-மாலா புகழ் பரவப் போகிறது, எங்கள் பத்திரிகை மூலமாக!” என்று
    பெருமையுடன் கூறி விடைபெற்றுச் சென்றார் அருமைநாயகம்.
    போலீஸ் வாரம் ஆரம்பமான மூன்றாவது நாளே பூங்குடியிலிருந்து
    நாடகத்தில் நடிக்கப்போகும் குழந்தைகளும், தலைமை ஆசிரியரும்,
    நீலாவின் அம்மா மீனாட்சி, முரளியின் அம்மா முத்துலட்சுமி, பரமசிவம்
    பிள்ளை, பார்வதி அம்மாள் ஆகியோரும் சென்னைக்கு வந்துவிட்டார்கள்.
    டாக்டர் வீடு ஒரே கலகலப்பாக இருந்தது.

    சென்னையில் எல்லா முக்கியமான இடங்களையும் சுற்றிப் பார்க்க
    டாக்டர் ஒரு ‘வேன்’ ஏற்பாடு செய்திருந்தார். காலை எட்டு மணி முதல் பகல் ஒரு மணிவரை எல்லாரும் நகரைச் சுற்றிப் பார்ப்பார்கள். பிறகு,
    சாப்பிட்டுவிட்டு மூன்று மணி வரை ஓய்வு. நாலு மணிக்கு நாடக
    ஒத்திகை ஆரம்பமாகும்.

    சென்னையை அவர்கள் முதல் நாள் சுற்றிப் பார்க்கச் சென்றபோது
    வழியிலே தெரிந்த ஒரு வண்ணச் சுவரொட்டியைக் கண்டார்கள். உடனே
    “முரளி, அதோ பார்!” என்று மாலா குதூகலத்துடன் காட்டினாள். முரளி
    சுவரொட்டியில் இருந்ததை வாய்விட்டுப் படித்தான்.

    மற்றக் குழந்தைகளும் அதைப் பார்த்தார்கள்; படித்தார்கள்; துள்ளிக்
    குதித்தார்கள். போகும் வழியிலெல்லாம் இவர்கள் நடிக்கப்போகும்
    நாடகத்தைப் பற்றிய செய்தியை விளம்பரமாகச் சுவர்களில்
    ஒட்டியிருந்தார்கள். அதைப் பார்க்கப் பார்க்க அவர்களுக்கு ஒரே
    ஆனந்தமாக இருந்தது.

    நாடகம் நடைபெறும் நாளில், காலை முதல் மாலை நாலு மணிவரை பாலர் அரங்கத்திலே ஒத்திகை நடந்தது. அன்று மாலை ஆறு மணிக்கு மேன்மை தங்கிய கவர்னர் முன்னிலையில் ‘பொன் மனம்’ நாடகம் தொடங்கியது.

    நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் குழந்தைகள் மிகவும்
    கவனமாகவும் திறமையாகவும் நடித்தார்கள். மேலும் காட்சி அமைப்பு,
    ஒளி, ஒலி ஏற்பாடு, மேக்-அப் எல்லாம் சிறப்பாக இருந்ததால், நாடகம்
    பூங்குடியில் நடந்ததைவிடப் பலமடங்கு சிறப்பாக அமைந்தது. திருடன்
    மகளாக நடித்த நீலாவும், திருடனாக நடித்த முரளியும் மிகவும்
    உருக்கமாக நடித்த காட்சியைக் கண்டு சபையோர் கண்கலங்கி விட்டனர்.
    முன் வரிசையிலிருந்த கவர்னர்கூடக் கைக்குட்டையால் கண்களைத்
    துடைத்துக் கொண்டார்!

    நாடகம் முடியப் போகும் சமயம் கவர்னரை மேடைக்கு அழைத்து
    வந்தார்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் நாடகத்தைப் பற்றிய
    விவரங்களை எடுத்துக் கூறினார். நடித்த குழந்தைகளையும்
    அறிமுகப்படுத்தினார்.

    கவர்னர் பேசும்போது, “நாம் சிறுவர்கள் தானே! நம்மால் என்ன நன்மை
    செய்ய முடியும்? என்று உதட்டைப் பிதுக்குகிறவர்களுக்கு இந்த நாடகம்
    ஒரு நல்ல பாடத்தைப் போதிக்கிறது. இந்த நாடகம் அரங்கேறிய
    தினத்திலே அதிசயப்படும்படியான பலன் கிடைத்துவிட்டது. இந்த
    நாடகத்தில் பங்கு பெற்ற குழந்தைகளுக்கு என் மனமார்ந்த
    வாழ்த்துக்கள்” என்று கூறிப் பரிசுத் தொகையைக் குழந்தைகளுக்கு
    வழங்கினார். ஒவ்வொருவரும் பரிசு பெறும்போது அந்த மண்டபமே
    அதிரும்படி பொதுமக்கள் கைதட்டித் தங்களது மகிழ்ச்சியைத்
    தெரிவித்தார்கள்.

    நாடகம் முடிந்து எல்லாரும் மகிழ்ச்சியாக வீடு திரும்பினார்கள். முன்னால்
    டாக்டரின் கார் சென்றது. அதைத் தொடர்ந்து ‘வேன்’ சென்றது.
    இரண்டிலும் குழந்தைகளும் பெரியவர்களும் நிரம்பியிருந்தனர். சிறிது
    தூரத்தில் இவர்களைப் பின் தொடர்ந்து வெகு வேகமாக ஒரு பெரிய கார்
    வந்து கொண்டிருந்தது. அந்தக் காரின் பின் சீட்டில் உட்கார்ந்திருந்தவர்,
    “உம், சீக்கிரம் போ. இன்னும் வேகமாகப் போ” என்று டிரைவரை
    அவசரப்படுத்திக் கொண்டிருந்தார்.

    இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

    மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

    சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

    இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *