
நீலா மாலா
அழ. வள்ளியப்பா
நாடகம் திரைப்படமானது!
டாக்டரின் கார், ‘வேன்’ இரண்டும் அண்ணா நகரில் உள்ள டாக்டரின்
வீட்டின் முன்னால் வந்து நின்றன. குழந்தைகள் கும்மாளம் போட்டுக்
கொண்டு கீழே இறங்கினார்கள். பெரியவர்களும் இறங்கினார்கள்.
அப்போது அவர்களைத் துரத்தி வந்த காரும் அங்கு வந்து நின்றது.
அதிலிருந்து சில்க் ஜிப்பா அணிந்த ஒருவர் இறங்கினார்.
அவர் டாக்டரின் அருகே வந்தார். “டாக்டர், நாடகம் மிகப் பிரமாதமாக
இருந்தது. நாடகம் முடிந்ததும், உங்களைப் பாலர் அரங்கிலே பார்த்துப்
பேச நினைத்தேன். ஆனால், சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நான்தான்
குணாளன் பிக்சர்ஸ் சொந்தக்காரர் கோதண்டராமன். உங்களுடன் ஒரு
சில நிமிஷங்கள் பேசலாம் என்றுதான் வந்தேன்.”
“ஓ. அப்படியா! ஆனால், குழந்தைகள் மிகவும் பசியாக இருப்பார்கள்.
அவர்களுடன் நீங்களும் சாப்பிட ஒப்புக்கொண்டால், சாப்பிட்ட பிறகு, சில
நிமிஷங்களென்ன, பல நிமிஷங்கள் கூடப் பேசலாம்” என்றார் டாக்டர்.
“அப்படியா! சரி, சாப்பிட்டுவிட்டே பேசுவோம்.”
கோதண்டராமனை வீட்டுக்குள் அழைத்துச் சென்று வரவேற்பு அறையில்
உட்கார வைத்தார் டாக்டர். குழந்தைகளில் சிலர் வெந்நீரிலும், சிலர்
குளிர்ந்த நீரிலும் குளித்தார்கள். பிறகு, சாப்பிட உட்கார்ந்தார்கள்.
கூடவே, கோதண்டராமனும், டாக்டரும், மற்றப் பெரியவர்களும்
உட்கார்ந்தார்கள். பாதாம் அல்வா, வடை, பாயசம், முழு மாம்பழம்,
வாழைப்பழம், ஐஸ்கிரீம் ஆகியவற்றுடன் விருந்தை ஆனந்தமாக
உண்டார்கள்.
பிறகு டாக்டரிடம் தாம் பேச வந்த விஷயத்தை மெதுவாக ஆரம்பித்தார்
கோதண்டராமன்.
“நான் புதுவிதமாக ஒரு சினிமா எடுக்கப் போகிறேன்.”
“புது விதமாகவா! அது எப்படி?”
“வேறு ஒரு தயாரிப்பாளராக இருந்தால். இன்று நடந்த நாடகத்தை
அப்படியே கொஞ்சம் கூட்டிக் குறைத்துச் சினிமாவாக எடுக்க
நினைப்பார். ஆனால், நான் அப்படி எடுக்கப் போவதில்லை. கிராமத்துக்கு
உங்கள் பெண் சென்றதிலிருந்து, அங்கே சிறுவர் சங்கம் அமைத்தது,
நாடகம் போட்டது, நாடகத்தைப் பார்த்துத் திருடன் சரண் அடைந்தது,
போலீஸார் அவனைப் பிடித்துச் சென்றது, பிறகு சென்னை வந்தது,
இங்கும் அந்த நாடகத்தை நடத்திக் கவர்னர் கையால் பரிசு பெற்றது –
எல்லாவற்றையும் எடுக்கப் போகிறேன்…!”
மளமளவென்று பேசிக்கொண்டே போனார் கோதண்டராமன்.
“அப்படியானால், பூங்குடிக்கே நீங்கள் போய்ப் படம் எடுப்பீர்களா?”
“ஆம், அங்கே போய் அங்கு எடுக்க வேண்டிய காட்சிகளை எடுப்போம்.”
“அப்படியானால், நடிகர்கள்?….”
இதைக் கேட்டதும் கோதண்டராமன் சிரித்து விட்டார். “என்ன டாக்டர், இந்த நாடகத்தில் நடித்தவர்களே தான் சினிமாவிலும் நடிக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் படம் எடுக்க நினைக்கிறோம். அது பற்றிப் பேசத்தானே நான் வந்தேன்.”
இதைக் கேட்டதும் டாக்டர் தயங்கினார். பிறகு, “குழந்தைகளுக்குப்
படிப்புத்தான் முக்கியம். இப்போதே பத்து நாள் லீவு எடுத்து விட்டார்கள்.
சினிமாவில் நடிப்பதென்றால்…?” என்று இழுத்தார்.
“கவலைப்படாதீர்கள். நவராத்திரி லீவு வருமே, அப்போது கிராமத்துக்குப்
போய் எடுக்கலாம்”
“எதற்கும் நாளைப் பிற்பகல் மூன்று மணிக்கு வாருங்கள்.
மற்றவர்களைக் கலந்து முடிவு சொல்கிறேன்.”
கோதண்டராமன் விடைபெற்றுச் சென்றதும், தலைமை ஆசிரியரிடமும்,
குழந்தைகளிடமும், மற்றப் பெரியவர்களிடமும் டாக்டர் விவரத்தைக்
கூறினார்.
அதைக் கேட்ட முரளி, துள்ளிக் குதித்துக் கொண்டே, “அடி சக்கை, நம்
பூங்குடி கிராமம் சினிமாவிலே நடிக்கப் போகுது!” என்றான். மற்றக்
குழந்தைகளும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார்கள்.
அப்போது நீலா, “பெரியவர்கள் பார்த்து எப்படி முடிவு செய்தாலும்
சரிதான். ஆனால், ஒன்றைமட்டும் கூறவேண்டும். சினிமா எடுத்தால்,
நாங்கள் எல்லாரும் படத்திலே தெரிவோம். ஆனால், மாலா நாடகத்திலே
நடிக்கவே இல்லையே! அவளைப் படத்திலே பார்க்கவே முடியாதே!”
என்றாள்.
உடனே டாக்டர், “கோதண்டராமன் என்ன சொன்னார் என்பதை
உங்களுக்கு நான் சரியாகச் சொல்லவில்லை போலிருக்கிறது. மாலா
விடுமுறையில் பூங்குடிக்குச் சென்றது முதல், சென்னைக்கு வந்து
பரிசு வாங்கியது வரை படம் எடுக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார்.
அப்படி எடுத்தால், மாலாவையும் படத்திலே பார்க்கலாம். இங்கே இருக்கிற மற்றவர்களையும்கூடப் பார்க்கலாம்” என்றார்.
“என் அம்மாவைக் கூடவா?” என்றாள் நீலா. “கட்டாயம் உன் அம்மாவும்
இருப்பார்கள்.”
“அப்படியானால் என் அம்மாவும் இருப்பார்கள்” என்று குதித்தான் முரளி.
பூங்குடி கிராமத்துக்கும், அங்குள்ள மக்களுக்கும் விரைவில்
திரைப்படம் மூலமாகப் புகழ் கிடைக்கப் போவதை நினைத்து
நினைத்துப் பரமசிவம் பிள்ளை மிகவும் பெருமைப்பட்டார். தமது
பள்ளியும், பள்ளிக் குழந்தைகளும் தமிழ் தெரிந்த அனைவருக்கும்
தெரியப் போகிறார்கள் என்பதை எண்ணித் தலைமை ஆசிரியர் மகிழ்ச்சி
அடைந்தார்.
மறுநாள் காலை, எல்லாரும் மகாபலிபுரம், திருக்கழுக்குன்றம் எல்லாம்
பார்த்துவிட்டுப் பகல் ஒரு மணிக்குத் திரும்பி வந்தார்கள்.
குறித்த நேரத்தில் கோதண்டராமன் வந்து விட்டார். டாக்டர் சூரியசேகர்,
குழந்தைகளையும் பெரியவர்களையும் ஒவ்வொருவராக அழைத்து,
கோதண்டராமனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். பிறகு, படம் எடுப்பது
பற்றிய விவரங்களைக் கோதண்டராமன் கூறினார்:
“பூங்குடியிலே அதிகமாகப் போனால் பத்து அல்லது பதினைந்து
நாட்களில் தேவையான காட்சிகளையெல்லாம் எடுத்து விடலாம். பிறகு,
சென்னையிலே சில காட்சிகளை எடுப்போம். அதோடு, நேற்று நீங்கள்
பார்த்திருப்பீர்களே, உங்கள் நாடகம் நடக்கும் போது, தமிழக செய்தித்
துறையினர் சில காட்சிகளையும், கவர்னர் பரிசு கொடுக்கும்
நிகழ்ச்சியையும் சினிமாவாக எடுத்தார்களே, அதையும் அவர்களிடம்
கேட்டு வாங்கிச் சேர்த்துக் கொள்வோம். இது சம்பந்தமாக இன்று
காலையிலே கூடச் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசினேன். இப்படிப்பட்ட
படங்களை எடுக்க அரசாங்கமே தாராளமாக உதவுகிறது.”
“பூங்குடியிலே என்னென்ன ஏற்பாடு செய்ய வேண்டுமென்று
சொன்னால், நானும், பரமசிவம் பிள்ளையும் செய்து விடுவோம்” என்றார்
தலைமை ஆசிரியர்.
“உங்கள் உதவி நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேதான் நான்
இதிலே தீவிரமாக இறங்குகிறேன்… இந்தப்படத்துக்குக் குழந்தைகள்
வைத்த பெயரையே வைக்கப் போகிறேன். ‘பொன் மனம்’ – அழகான
பெயர்! இதிலே நடிக்கிற குழந்தைகள், பெரியவர்கள் எல்லாருக்கும்
சேர்த்து ஒரு தொகையை மொத்தமாகக் கொடுக்கலாம் என்று
நினைக்கிறேன்… டாக்டர், நீங்கள் சொல்லுங்கள். எவ்வளவு
கொடுக்கலாம்?”
எல்லாரும் தனியாகச் சென்று சிறிது நேரம் பேசினார்கள். பிறகு, டாக்டர்
ஒரு தொகையைச் சொன்னார். அவர் சொன்ன தொகையைக்
கோதண்டராமன் உடனே ஒப்புக்கொண்டுவிட்டார். குணாளன் பிக்சர்ஸ்,
மாங்குயில் சிறுவர் சங்கத்துக்கு ரூபாய் ஐம்பதாயிரம் கொடுப்பது
என்று முடிவு செய்யப்பட்டது!
இது நடந்த இரண்டு நாட்களில் பொன் மனம் புதுமையான ஒரு திரைப்
படமாக வரப் போகிறது என்ற செய்தி எல்லாப் பத்திரிகைகளிலும்
விவரமாக வெளிவந்து விட்டது. பூங்குடியில் உள்ளவர்கள் இந்தச்
செய்தியைப் படித்ததும் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தார்கள்.
மாங்குயில் சிறுவர் சங்கக் குழந்தைகளும், அவர்களுடன் சென்னைக்கு
வந்த பெரியவர்களும் பூங்குடிக்குத் திரும்பியபோது அவர்களுக்கு
அமோகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதே போலத்தான் மாலாவும்
நீலாவும் பள்ளிக்குச் சென்ற போது வாயில் காப்பவர் முதல் தலைமை
ஆசிரியை வரை எல்லாரும் அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள்.
“நமது பள்ளிக்கு இவர்களால் மேலும் மேலும் பெருமை சேருகிறது”
என்று பெருமையோடு கூறினார் தலைமை ஆசிரியை. ஆனாலும்,
நீலாவிடத்திலும் மாலாவிடத்திலும் கொஞ்சமாவது கர்வம் இருக்க
வேண்டுமே! துளிக்கூட இல்லை. வழக்கம் போல் எல்லாருடனும்
இனிமையாகவே பழகினார்கள்.
நீலாவும் மாலாவும் படிப்பிலும் மிகுந்த அக்கறை காட்டி வந்தார்கள்.
அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து படிக்கத் தொடங்கி விடுவார்கள்.
நீலாவைப் போல் நாமும் நன்கு படித்து முன்னேற வேண்டும் என்று
மாலா ஆசைப்படுவாள். முன்பெல்லாம் கணக்கு, விஞ்ஞானம்
இரண்டையும் முகத்தைச் சுளித்துக்கொண்டே படிப்பாள். ஆனால், நீலா
வந்த பிறகு, அந்தப் பாடங்களிலும் அவளுக்கு ஆர்வம் ஏற்பட்டது.
இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாததைக் கேட்டுச் சந்தேகத்தைப்
போக்கிக் கொண்டார்கள்.
அன்று காலை, பள்ளிக்கூடம் ஆரம்பமாவதற்குக் கால்மணி நேரம்
இருக்கும்போது டாக்டர் சூரியசேகரின் கார், தலைமை ஆசிரியையின்
அறைக்கு எதிரே வந்து நின்றது. காரை ஓட்டிக் கொண்டு வந்த
மாலாவின் அம்மா நளினி, மாலா, நீலா மூவரும் காரிலிருந்து
இறங்கினார்கள். மாலாவும் நீலாவும் கண்ணாடி போட்ட இரண்டு பெரிய
படங்களைத் தூக்கிக்கொண்டு வந்தார்கள். தலைமை ஆசிரியைக்கு
எதிரேயுள்ள சுவரில் அவற்றைச் சாய்த்து வைத்துவிட்டு வணக்கம்
செலுத்தினார்கள்.
“நீலாவும் மாலாவும் பள்ளிக்கூடத்திற்காக இரண்டு படங்களை
வரைந்திருக்கிறார்கள்……..” என்று ஆரம்பித்தாள் நளினி.
உடனே தலைமை ஆசிரியை எழுந்து அந்தப் படங்களின் அருகே வந்து
பார்த்தார். ஒரு படத்தில் பொக்கை வாய்ப் புன்னகையுடன் காந்தித்
தாத்தா இருந்தார். அவருடைய உருவத்துக்குக் கீழே,
சத்தியம் பேசுதல் இவர் கொள்கை;
தருமம் காத்தல் இவர் கொள்கை
இத்தல மக்கள் யாவர்க்கும்
இன்ப சுதந்திரம் இவர் கொள்கை.
என்று எழுதப்பட்டிருந்தது.
இன்னொரு படத்தில் குழந்தைகளின் நண்பரான நேரு மாமா, அழகான
ரோஜாப் பூவைக் கையில் வைத்திருந்தார். அவருடைய உருவத்துக்குக்
கீழே,
மனிதருக்குள் மாணிக்கம்
மக்கள் போற்றும் தலைவராம்
புனித மான விடுதலை
பெற உழைத்த ஜவஹராம்
என்று எழுதப்பட்டிருந்தது. படங்களும் எழுத்துக்களும் சுற்றியுள்ள பூ
வேலைப்பாடுகளும் மிகவும் அழகாக இருந்தன. கண்ணைக் கவரும்
வகையில் வண்ணங்கள் தீட்டப்பட்டிருந்தன.
“ஆஹா! எவ்வளவு நன்றாக இருக்கின்றன! படங்கள் மட்டுமல்ல;
பாடல்களும் பொருத்தமாக இருக்கின்றன!” என்று வியந்து பாராட்டினார்
தலைமை ஆசிரியை.
“இந்த இரண்டையும் வரைந்தது மாலாதான்” என்றாள் நீலா.
“படங்களுக்கு ஏற்ற பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்ததே
நீலாதான். இப்படி ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு படத்தை வைக்கலாம்
என்று யோசனை சொன்னதும் இவள்தான்” என்றாள் மாலா.
“ஒருவருக்குத் திறமை மட்டும் இருந்தால் போதாது. அதை நல்ல
காரியத்துக்குப் பயன்படுத்த வேண்டும். அதுதான் சிறப்பு.
உண்மையிலேயே ஒரு சிறப்பான செயலை நீங்கள் இருவரும் சேர்ந்து
செய்திருக்கிறீர்கள்!” என்று கூறி விட்டு, நளினியைப் பார்த்து, “நீங்கள்
பாக்கியசாலி” என்று மனமாரப் பாராட்டினார்.
வீட்டிலே படிப்புக்கு இடையூறு இல்லாமல், நேரம் கிடைக்கும்
போதெல்லாம் நீலாவும் மாலாவும் பள்ளிக்கு வேண்டிய படங்களைத்
தயாரித்தார்கள். ஒரே மாதத்தில் அவர்களது பள்ளியில் வகுப்புக்கு ஒரு
படம் வீதம் காட்சி அளித்தது. மொத்தத்தில், நீலா அந்தப் பள்ளியில்
சேர்ந்ததிலிருந்தே அங்கு ஒரு குதூகலமும், கலகலப்பும் ஏற்பட்டு
விட்டன.
திட்டமிட்டபடியே ‘பொன் மனம்’ திரைப்பட வேலை ஆரம்பமாகியது. படப் பிடிப்பில் கலந்து கொள்ள நளினி, மாலா, நீலா, ரவி நால்வரும் பூங்குடி சென்றார்கள். அவர்கள் அமரபுரத்தில் ரயிலில் வந்து இறங்கிய காட்சி முதலில் படமாக எடுக்கப்பட்டது. தொடர்ந்து படப் பிடிப்பு வேலைகள் நடைபெற்றன. பூங்குடியிலும் அமரபுரத்திலும் எடுக்க வேண்டிய காட்சிகளையெல்லாம் எடுத்தார்கள்.
மாரியம்மன் கோயில் திறந்தவெளி அரங்கில், மாங்குயில் சிறுவர் சங்கக்
குழந்தைகள் ‘பொன் மனம்’ நாடகத்தை நடத்தினர். நாடகத்தைப் பார்க்க
வந்த கூட்டம், முன்பு வந்த போலீஸ்காரர்கள், சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் எல்லாரையுமே படம் எடுத்தார்கள். ஆனால், சங்கிலியாண்டியைத் தான் அங்கு கொண்டுவர முடியவில்லை. அவன் தான் சிறையில் இருக்கிறானே! அவனுக்குப் பதிலாக வேறு ஒருவரை நடிக்கச் செய்து படம் எடுத்தனர். அவரும் மிக அற்புதமாக நடித்தார்.
திரைப் படம் மூன்று மாதங்களில் தயாராகி விட்டது. பொங்கல்
விழாவன்று பல இடங்களில் ‘பொன் மனம்’ திரையிடப்பட்டது.
அப்போது அமரபுரத்தில் உள்ள ஆனந்தா தியேட்டரிலும் அப்படத்தைத்
திரையிட்டனர். பெரும் கூட்டம் அப்படத்தைப் பார்க்கத் திரண்டு வந்தது.
அதற்கு முன்பு அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தை ஆனந்தா தியேட்டரில்
கண்டதே இல்லை!
‘பொன் மனம்’ வெற்றிப் படமாக அமைந்து பல நாட்கள் ஓடியது.
பத்திரிகைகள் எல்லாம் குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டு
அவர்களின் நடிப்பை மிகவும் பாராட்டின. இப்படிப்பட்ட புதுமையான
படத்தை எடுத்த குணாளன் பிக்சர்ஸ் கோதண்டராமனையும் புகழ்ந்து
எழுதின.
முன்பு ஒப்புக்கொண்டபடி மாங்குயில் சிறுவர் சங்கத்துக்குக்
குணாளன் பிக்சர்ஸ் ரூபாய் ஐம்பதாயிரம் கொடுத்தார்கள். அந்தத்
தொகையை யார் யாருக்கு எப்படிப் பங்கிட்டுக் கொடுப்பது என்று
புரியவில்லை. நிலா, மாலா இருவருக்கும் தலைமை ஆசிரியர் கடிதம்
எழுதி அவர்களது யோசனையைக் கேட்டார். “எங்கள் ஊர்ப் பள்ளிக் கூடம்
இப்போது கூரைக் கட்டிடத்திலே இருக்கிறது. மழை பெய்தால் ஒழுகும்.
பெரும் காற்று வந்தால் கொட்டகையே சாய்ந்து விடுமோ என்று
நாங்களெல்லாம் பயப்படுவோம். மழை, புயல், தீ எதற்கும் பயப்படாமல்
பிள்ளைகள் படிக்க வேண்டுமானால்….”
“இந்த ஐம்பதாயிரத்திலே ஓர் அழகான கட்டடத்தைக் கட்டிவிடலாம்
அப்படித்தானே! ஆஹா! நல்ல யோசனை! நல்ல யோசனை!” என்று
குதித்தாள் மாலா.
டாக்டரிடமும் நளினியிடமும் இந்த யோசனையைத் தெரிவித்தார்கள்.
அவர்களும் ஆமோதித்தனர்.
அன்றே பூங்குடிக்குக் கடிதம் பறந்தது. இந்த யோசனையை எழுதி,
“இது எங்கள் யோசனை. மற்றவர்களது யோசனைகளையும் கேட்டு,
நீங்கள் எப்படி முடிவு செய்தாலும் சரி” என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.
எல்லாரும் இந்த யோசனையை அப்படியே மனப்பூர்வமாக ஏற்றுக்
கொண்டனர்.
கோடை விடுமுறையில் மாலாவும் நீலாவும் பூங்குடி சென்றபோது
புதிய பள்ளிக் கட்டடம் உருவாகிக் கொண்டிருந்தது. அதைக் கண்டு
அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை எவராலும் எடுத்துக் கூற முடியாது!
நீலா சென்னைக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஓடிவிட்டன. அன்று
மாலை நேரம். டாக்டர் சூரியசேகரும் நளினியும் உட்கார்ந்து பேசிக்
கொண்டிருந்தார்கள்.
“நீலா மிகவும் கெட்டிக்காரி. வழக்கம் போல் எட்டாவது வகுப்பிலும் முதல் இடம் நீலாவுக்குத் தான்! நம் மாலாவுக்கு இரண்டாவது இடம்!
முன்பெல்லாம் ஆறாவது, ஏழாவது இடத்தில்தான் மாலா இருப்பாள்.
நீலாவுடன் சேர்ந்ததிலிருந்து மாலா எப்படிப் படிக்கிறாள்!” என்றாள்
நளினி.
“நீலா வந்ததிலிருந்து படிப்பு மட்டும்தானா? மாலாவின் பண்புகூட
வளருதே! ரவிகூட அவள் சொல்லிக் கொடுத்த பாடல்களை எப்படி
அபிநயத்துடன் ஆனந்தமாகப் பாடுகிறான் அழகாக ஆடுகிறான்.”
இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, டெலிபோன் மணி
ஒலித்தது. டாக்டர் போனை எடுத்து, “டாக்டர் சூரியசேகர் பேசுகிறேன்”
என்றார். அப்போது, நீலாவும் மாலாவும் விரைவில் சோவியத் நாடு
செல்லப் போகிறார்கள் என்ற இனிப்பான செய்தியை அவர்
எதிர்பார்க்கவில்லை!



