நீலா மாலா
அழ. வள்ளியப்பா

அப்பாவின் தியாகம்

    நீலாவுக்கு அப்போது இரண்டு வயது இருக்கும். ‘விளையும் பயிர்
    முளையிலே தெரியும்’ என்பார்கள், அந்தச் சின்ன வயதிலே நீலா மிகவும்
    கெட்டிக்காரியாக இருந்தாள்; எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பாள்;
    எதையும் கூர்ந்து பார்ப்பாள்; வீட்டுக்கு யார் வந்தாலும், அவர்களுடன்
    சிரித்து விளையாடுவாள்; மழலை மொழியில் பேசுவாள்; அப்பா, அம்மா
    சொல்லிக் கொடுக்கும் பாடல்களை அபிநயத்துடன் ஆனந்தமாகப்
    பாடுவாள்; ரேடியோ பாடும்போது கவனமாகக் கேட்பாள், கைதட்டி
    ரசிப்பாள்; சில சமயங்களில் மகிழ்ச்சி அதிகமாகிவிடும். இசைக்கு ஏற்றபடி
    ஆட ஆரம்பித்து விடுவாள்! அவளது ஆட்டத்தைக் கண்டு எல்லாரும்
    ஆனந்தம் அடைவார்கள்.

    “மீனாட்சி, நம் நீலாவைப் பார். எவ்வளவு நன்றாகப் பாடுகிறாள்!
    எவ்வளவு ஜோராக ஆடுகிறாள்! ஒரு தடவை சொல்லிக் கொடுத்தால்
    போதும்; அப்படியே திருப்பிச் செய்கிறாள்! இவளை நாம் நன்றாகப்
    படிக்கவைத்து முன்னுக்குக் கொண்டு வரவேண்டும்” என்று அடிக்கடி
    நீலாவின் அப்பா குமாரசாமி கூறுவார்.

    அப்போதெல்லாம் நீலா குடிசையில் வசிக்கவில்லை. ஒரு பெரிய ஓட்டு
    வீட்டிலே அப்பா அம்மாவுடன் வசதியாக வாழ்ந்துவந்தாள். நீலாவின்
    அப்பா குமாரசாமிக்கு உள்ளூரிலேயே நிறைய நிலங்கள் இருந்தன. ஒரு
    பெரிய தென்னந் தோப்பும் இருந்தது.

    குமாரசாமி காலையில் எழுந்ததும், வயலுக்குப் போவார். தோட்டத்தைச்
    சுற்றிப் பார்ப்பார். மற்ற நேரங்களில் அந்தக் கிராமத்தில் உள்ளவர்களுக்கு
    உதவி ஒத்தாசை செய்வார். யார் வீட்டிலாவது சண்டை என்றால், அங்கே
    போய்ச் சமாதானம் செய்வார். தவறு செய்கிறவர்களுக்கு நல்ல
    புத்திமதிகள் கூறித் திருத்துவார். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம்
    நீலாவுடன் கொஞ்சிப் பேசிக் குழந்தை போல் விளையாடுவார்.

    பூங்குடியில் ஆண்டுதோறும் மாரியம்மன் கோயில் திருவிழா சிறப்பாக
    நடைபெறும். கிராமத்து மக்கள் எல்லாரும் சேர்ந்து அந்த விழாவை
    நடத்துவார்கள். விழாச் செலவுக்காகப் பண வசூல் செய்வது,
    விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்வது எல்லாவற்றையும் முன்னால்
    நின்று நடத்துவார் குமாரசாமி.

    அந்த ஆண்டு, திருவிழா நடப்பதற்கு இன்னும் இரண்டு நாட்களே
    இருந்தன. விழா வேலையாகப் பூங்குடிக்கு நான்கு மைல்
    தூரத்திலுள்ள அமரபுரத்துக்குச் சென்றிருந்த குமாரசாமி, அன்று பகல்
    இரண்டு மணிக்குத் திரும்பி வந்தார்.

    பஸ்ஸிலிருந்து அவர் இறங்கும் சமயம்,

    “தீ… ஐயோ! தீ! தீ!”

    “ஐயோ! அம்மா”

    என்று பல குரல்கள் ஒரே சமயத்தில் கேட்டன. சத்தம் வந்த திசையில்
    பார்த்தார் குமாரசாமி. சிறிது தூரத்திலிருந்த அரிஜனக் குடியிருப்பில்
    தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த காட்சியைக் கண்டார். உடனே, அருகில்
    இருந்தவர்களையெல்லாம் அழைத்துக்கொண்டு ஓடினார். குடிசைக்குள்
    இருந்தவர்கள் தூக்க முடிந்த சாமான்களையெல்லாம் தூக்கிக்கொண்டு
    வெளியில் ஓடி வந்தார்கள். பல ஆண்களும் பெண்களும் அருகில் இருந்த
    பெரிய கிணற்றில் தண்ணீரை இறைத்துப் பானைகளில் கொண்டுவந்து
    கொட்டினார்கள். ஆனால், தீ அணையவில்லை. கொழுந்துவிட்டு எரிந்து
    கொண்டிருந்தது. காற்றும் கலந்து கொண்டதால், தீ வெகு விரைவிலே
    பக்கத்துக் குடிசைகளுக்கும் பரவியது.

    பரபரப்பு, கூச்சல், குழப்பம் – இத்தனைக்கும் இடையே, “அம்மா! அம்மா!”
    என்று வீரிட்டு அலறும் குரல் கேட்டது. அப்பொழுது ஒரு குடிசைக்குப்
    பக்கமாகச் சென்ற குமாரசாமி, “ஐயோ! இந்தக் குடிசைக்குள் ஒரு
    குழந்தை” என்று உரக்கக் கூவினார்.

    தீப் பிடிப்பதற்கு முன்பு அந்தக் குழந்தையும், சரியாகக் கண் தெரியாத
    அதன் பாட்டியும் அந்தக் குடிசையில் இருந்தார்கள். தீப் பிடித்தவுடன்
    சப்தம் கேட்டுப் பாட்டி வெளியில் ஓடி வந்து விட்டாள். குழந்தை உள்ளே
    தூங்கிக் கொண்டிருந்தது அவளுக்குத் தெரியவில்லை. வெளியிலே
    விளையாடிக் கொண்டிருப்பதாக நினைத்து, அதன் பெயரைச் சொல்லி
    வீதியிலே கத்திக் கொண்டிருந்தாள்.

    தீப்பிடித்ததும், சூடு தாக்கியதால் விழித்துக் கொண்ட குழந்தை, வீரிட்டு
    அலறியது. அது கதறுவதை அறிந்ததும் குமாரசாமி வேகமாக உள்ளே
    பாய்ந்தார். குழந்தையைத் தூக்கித் தோளிலே போட்டுக்கொண்டார்.
    வெளியே ஓடி வருவதற்குள், வாசல் பக்கமும் தீ பரவிவிட்டது. வேறு
    வழியில்லை. சுற்று முற்றும் பார்த்தார். நல்ல வேளையாக அங்கு ஒரு
    தகரப் பீப்பாய் இருந்தது. அதற்குள் குழந்தையை வைத்து வாசல்
    வழியாக உருட்டி விட்டார். குழந்தை பிழைத்துக் கொண்டது!
    ஆனால், குமாரசாமி……?

    குமாரசாமியால் வெளியே வர முடியவில்லை! தீயிலும் புகையிலும் அவர்
    சிக்கித் தவித்துக் கொண்டிருந்தார். அப்போது, கூரையின் உச்சியில்
    குறுக்கே இருந்த கனத்த மூங்கில் மரம் சடசடவென்று முறிந்தது.
    முறிந்த மரம், குமாரசாமியின் தலையில் பட்டென்று விழுந்தது. பாவம்,
    குமாரசாமி! ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றினார். ஆனால், தம்
    உயிரை நெருப்புக்குக் கொடுத்து விட்டார்!

    குமாரசாமியின் மறைவுக்குப் பிறகு, மீனாட்சி அம்மாளின் வாழ்வில்
    இருள் பரவியது. அவளுடைய தம்பி தங்கப்பன், குமாரசாமி விட்டுச்
    சென்ற வீடு, நிலம், தோட்டம் முதலியவற்றைக் கவனித்துக்
    கொள்வதற்காக வந்தான். அவன் கெட்டவர்களுடன் கூட்டுச் சேர்ந்து, பல
    வழிகளில் பணத்தைப் பாழாக்கினான். மீனாட்சி அம்மாள் பெயரைச்
    சொல்லிப் பலரிடம் கடன் வாங்கினான். கடைசியில் எல்லாவற்றையும்
    தொலைத்துவிட்டு, ஊரைவிட்டே ஓடிவிட்டான்.

    சொத்தெல்லாம் இழந்த பிறகு, ஊரின் கோடியில் ஒரு குடிசையைக்
    கட்டிக்கொண்டு, நீலாவுடன் மீனாட்சி அம்மாள் வசித்து வந்தாள்.
    எவருடைய தயவையும் அவள் எதிர்பார்க்கவில்லை. உழைத்துப்
    பிழைப்பது என்ற முடிவுக்கு வந்தாள். “நீலாவை அவள் அப்பா
    ஆசைப்பட்டது போல், நன்றாகப் படிக்கவைத்து முன்னுக்குக்
    கொண்டுவந்து விட வேண்டும். அதுதான் என் ஆசையும்” என்று
    அடிக்கடி சொல்லுவாள்.

    அந்தக் கிராமத்தில் அவளுக்கு என்ன வேலை கிடைக்கும்? பரமசிவம்
    பிள்ளை வீட்டில் வேலைக்குச் சேர்ந்தாள். இரண்டு வேளைச் சாப்பாடும்,
    இருபத்தைந்து ரூபாய் சம்பளமும் கிடைத்தன. சிக்கனமாகக்
    குடும்பத்தை நடத்திக்கொண்டு, நீலாவையும் நன்றாகப் படிக்க
    வைத்தாள். நீலா முதல் வகுப்பிலிருந்து ஒவ்வொரு வகுப்பிலும்
    முதலாவதாகத் தேறினாள். பல பரிசுகளும், பாராட்டுகளும் பெற்றாள்.
    அம்மா தன் மகளை நினைத்து நினைத்துப் பெருமைப்படுவாள்.
    கலெக்டரிடம் நீலா பரிசுபெற்ற காட்சியை நிலாவின் அப்பாதான் பார்க்க
    முடியவில்லை. அம்மாவாவது பார்த்திருக்கலாமே!

    “நீலா, எப்படியும் விழாவுக்கு வந்து, நீ பரிசு வாங்குவதைப் பார்க்க
    வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால், நான் புறப்படுகிற
    நேரத்தில், நம் எஜமானி அம்மாளுக்கு அடிக்கடி வருமே, அந்த வியாதி
    வந்துவிட்டது. தலை சுற்றியது; மயக்கம் வந்தது. ஐயாவும் விழாவுக்கு
    வந்துவிட்டார்கள். அந்த நிலைமையிலே அந்த அம்மாளைத் தனியாக
    விட்டுவிட்டு வரலாமா? கடைசியில், அம்மாவுக்கு மயக்கம் தெளிந்து
    எழுந்தபோது, இருட்டிப் போய்விட்டது. நேராக வீட்டுக்குவந்து விட்டேன்” என்று நீலாவுக்கு அன்று இரவு சமாதானம் சொன்னாள் மீனாட்சி அம்மாள்.

    முதல் நாள் ஆண்டு விழா நடந்ததால், மறு நாள் பள்ளிக்கு விடுமுறை.
    அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு நீலாவின் அம்மா வீடு திரும்பி
    வந்தாள். “நீலா! உனக்கு ஒரு நல்ல செய்தி கொண்டு வந்திருக்கிறேன்.
    நாளைக் காலையிலே பட்டணத்திலேயிருந்து நம் எஜமானி அம்மாளின்
    மகள் வருகிறார்கள்…”

    “ஏனம்மா, அவர்கள் மட்டும்தானா? அவர்கள் மகள் மாலா வரமாட்டாளா?
    ஒவ்வொரு விடுமுறையிலும் வருவாளே!”

    “மாலாவும் வருவாள். அவள் கூடவே எட்டு மாதத்துக்கு முன்பு
    பிறந்தானே, அந்தத் தம்பிப் பாப்பாவும் வருவான்!”

    இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, வாசலில் சைக்கிள்
    மணி ஓசை கேட்டது. நீலா வாசலுக்கு ஓடிவந்து பார்த்தாள். சைக்கிளில்
    வந்து இறங்கிய தலைமை ஆசிரியரைக் கண்டதும், “சார், வணக்கம் சார்”
    என்றாள்.

    தலைமை ஆசிரியர், “அம்மா வந்தாயிற்றா?” என்று கேட்டுக் கொண்டே,
    சைக்கிளின் பின்னால் வைத்திருந்த ஓர் அட்டைப் பெட்டியை எடுத்துக்
    கொண்டு வந்தார்.

    “அம்மா, அம்மா, எங்கள் ஹெட்மாஸ்டர் வந்திருக்கிறார்” என்றாள் நீலா.
    உடனே மீனாட்சி அம்மாள் தலைமை ஆசிரியரை வரவேற்று, ஒரு பழைய
    பாயை எடுத்துப்போட்டு அதில் உட்காரச் சொன்னாள். நீலா உள்ளே ஓடிப்
    போய் ஒரு குவளையில் மோர் கொண்டு வந்தாள்.

    தலைமை ஆசிரியர் மோரைக் குடித்துவிட்டு, “இதுதானம்மா நீலாவுக்குச்
    சேர வேண்டிய வெள்ளிக் கோப்பை” என்று கூறி, அட்டைப் பெட்டியைத்
    திறந்தார். பளபளக்கும் கோப்பையை எடுத்து மீனாட்சி அம்மாளிடம்
    நீட்டினார்.

    “அம்மா, உங்கள் கையாலே நீலாவுக்குக் கொடுங்கள்” என்றார்.

    “என் கையாலே கொடுப்பதைவிட உங்கள் கையாலே கொடுப்பதுதான்
    பொருத்தம். அவள் இவ்வளவு கெட்டிக்காரியாக இருப்பதற்கு நீங்கள்
    தான் காரணம். உங்கள் கையாலே கொடுங்கள்” என்றாள் மீனாட்சி
    அம்மாள்.

    தலைமை ஆசிரியர் நீலாவிடம் வெள்ளிக் கோப்பையைக் கொடுத்து
    மனமார வாழ்த்தினார்.

    மீனாட்சி அம்மாள் அந்தக் காட்சியைக் கண் குளிரக் கண்டு மகிழ்ந்தாள்.
    தலைமை ஆசிரியர் போன பிறகு, நீலாவின் அம்மாவுக்கு வெள்ளிக்
    கோப்பை பெரிய பிரச்னையாகப் போய்விட்டது. அந்த மதிப்பு மிக்க
    பொருளைப் பாதுகாப்பாக வைக்க அந்தக் குடிசையில் வசதி கிடையாதே!
    “நீலா, இந்த வெள்ளிக் கோப்பையை இந்தக் குடிசையிலே வைக்கக்
    கூடாது. திருட்டுப் போய்விடும். நம் எஜமானர் வீட்டிலே கொடுத்து
    வைப்போம்” என்றாள் தன் மகளிடம்.

    “ஆமாம்மா, அதுதான் சரி. அவர்கள் தானே என்னை மேலே மேலே படிக்க
    வைக்கப் போகிறார்கள். அவர்களிடம் கொடுத்தால், பத்திரமாகப்
    பாதுகாப்பார்கள்.”

    “சரி, வா. உடனே போவோம்” என்று கூறி, கோப்பையை அட்டைப்
    பெட்டிக்குள் வைத்து அதை எடுத்துக்கொண்டு நீலாவுடன் புறப்பட்டாள்
    மீனாட்சி அம்மாள். தாயும் மகளும் தங்கள் எஜமானரான பரமசிவம்
    பிள்ளையின் வீட்டை நோக்கி நடந்தார்கள் வெள்ளிக் கோப்பையுடன்.
    மீனாட்சி அம்மாளும், நீலாவும், பரமசிவம் பிள்ளை வீட்டு முகப்பில் இருந்த கம்பிக் கதவுகளைக் கடந்து, தோட்டத்தின் நடுவே இருந்த அந்த வீட்டுப் படிக்கட்டில் ஏறினார்கள். அப்போது வீட்டின் உட்புறம் இருந்த பரமசிவம் பிள்ளையும், அவர் மனைவி பார்வதி அம்மாளும் சண்டை போடுவது போல் இரைந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

    அவர்கள் யாரைப் பற்றிப் பேசுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பது
    தற்செயலாகக் காதில் விழுந்தது. அதைக் கேட்டதும் மீனாட்சி
    அம்மாளுக்கும் நீலாவுக்கும் தூக்கிவாரிப் போட்டது.

    இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

    மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

    சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

    இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *