நீலா மாலா
அழ. வள்ளியப்பா

ஏழு பரிசுகள்!

    “பாட்டுப் போட்டி – முதல் பரிசு – கே. நீலா” என்றார், பரிசு பெற்றவர்கள்
    பட்டியலைக் கையில் வைத்திருந்த தலைமை ஆசிரியர் தணிகாசலம்.
    உடனே மேடையில் இருந்த ஓர் ஆசிரியர் ஒரு ஃபவுண்டன் பேனாவைக்
    கலெக்டரிடம் கொடுத்தார்.

    ஆனால், கலெக்டரிடம் பேனாவைப் பெற்றுக் கொள்ள நீலா மேடைக்கு ஓடி வரவில்லை! ஏன்? நீலா அந்தக் கூட்டத்தில் இல்லையா? இருந்தாள். சுவர் ஓரமாக நின்றுகொண்டிருந்த அவளது கவனம் எங்கோ இருந்தது.
    அவளது கண்கள் கூட்டத்தில் யாரையோ தேடித் தேடிப் பார்த்துக்
    கொண்டிருந்தன. தன் பெயரைத் தலைமை ஆசிரியர் கூப்பிட்டது அவள்
    காதில் விழவில்லை.

    “முதல் பரிசு பெற்ற நீலா உடனே மேடைக்கு வருக” என்று மீண்டும் ஒரு
    முறை தலைமை ஆசிரியர் ஒலிபெருக்கியில் கூறினார்.

    “நீலா, உன்னைத்தான்!”

    “நீலா, என்னடி சும்மா நிற்கிறாய்!”

    “உம், போய்ப் பரிசை வாங்கிக் கொள்.”

    இப்படி ஒரே சமயத்தில் பல குரல்கள் பல திசைகளிலிருந்து வந்தன.
    நீலாவுக்கு அப்போதுதான் சுய நினைவு வந்தது. நிலைமையைப்
    புரிந்து கொண்டாள். நேராக மேடைக்கு ஓடினாள்.

    “இதோ நீலா வருகிறாள்” என்றார் விழாவுக்குத் தலைமை வகித்த
    பரமசிவம் பிள்ளை. கலெக்டர் பேனாவைப் பரிசாகக் கொடுத்தார். நீலா
    வணக்கம் செலுத்திப் பணிவுடன் இரு கைகளாலும் பேனாவைப்
    பெற்றுக் கொண்டாள். கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    “பேச்சுப் போட்டி – முதல் பரிசு – கே. நீலா”

    சிறிது நேரத்தில், மறுமுறையும் நீலாவின் பெயரைப் படித்தார் தலைமை
    ஆசிரியர். அப்போதும் நீலா திரும்பித் திரும்பிக் கூட்டத்தைப் பார்த்துக்
    கொண்டே மேடைக்குச் சென்றாள். கலெக்டர் கொடுத்த ‘அதிசயப்
    பெண்மணி’ என்ற அழகான புத்தகத்தைப் பெற்றுக் கொண்டாள்.
    மேடையிலிருந்து இறங்கும் போதும், அவள் கண்கள் ஆவலாக
    யாரையோ தேடின.

    இந்த இரண்டு போட்டிகளில் மட்டும் தானா நீலா பரிசு வாங்கினாள்?
    இல்லை; கட்டுரைப் போட்டி, கையெழுத்துப் போட்டி, பொது அறிவுப்
    போட்டி என்று ஆக மொத்தம் ஐந்து போட்டிகளில் முதல் பரிசு பெற்றாள்.
    ஓவியப் போட்டியிலும், மாறு வேடப் போட்டியிலும் இரண்டாவது பரிசு
    பெற்றாள். மொத்தம் ஏழு பரிசுகள்!

    அவளுடைய பெயரைச் சொல்லி அழைக்கும் ஒவ்வொரு தடவையும்
    கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். பரிசு பெற அவள்
    மேடைக்குச் செல்லும் போதும், திரும்பி வரும் போதும் பலர் அவளது
    கையைப் பிடித்துக் குலுக்கினர்; முதுகிலே தட்டிக் கொடுத்துப்
    பாராட்டுத் தெரிவித்தனர். இத்தனை பாராட்டும் ஆரவாரமும் இருந்தும்
    நீலாவின் முகத்தில் முழுமையான மகிழ்ச்சி இல்லை. ஏதோ ஒரு குறை
    அவளது நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்தது.

    ‘நான் பரிசு பெறும் காட்சியை இத்தனை பேர் பார்த்துப்
    பாராட்டுகிறார்களே! ஆனால், யார் அவசியம் பார்க்கவேண்டும் என்று
    நான் நினைக்கிறேனோ அவர்கள் பார்க்கவில்லையே!’ என்று அவள்
    எண்ணி எண்ணி ஏங்கினாள்.

    தனித்தனியாக எல்லாப் போட்டிகளுக்கும் பரிசு கொடுத்து முடிந்த
    பிறகு, தலைமை ஆசிரியர் ஒரு வெள்ளிக் கோப்பையைக் கொண்டுவந்து
    கலெக்டருக்கு முன்னால், மேசை மேல் வைத்தார்.

    “இந்தப் பூங்குடி ஒரு சிறு கிராமம். இதுவோ ஐந்தாம் வகுப்பு வரை
    உள்ள ஓர் ஆரம்பப் பள்ளி. ஆனாலும், இங்கு நடைபெறும் நமது பள்ளி
    ஆண்டு விழாவுக்கு நமது மாவட்டக் கலெக்டரே வந்திருந்து பரிசுகளை
    வழங்குவது நமக்கெல்லாம் பெருமையாக இருக்கிறது. நாங்கள்
    போட்டிகளை அறிவித்தபோது, எந்தக் குழந்தை மூன்று போட்டிகளில்
    முதல் பரிசு பெறுகிறதோ, அதற்கு ஒரு வெள்ளிக் கோப்பையைச்
    சிறப்புப் பரிசாகக் கொடுக்க ஆசைப்பட்டோம். ஆனால், ஒரே சிறுமி ஐந்து
    முதல் பரிசுகளையும், இரண்டு இரண்டாவது பரிசுகளையும்
    பெற்றிருக்கிறாள்! முந்நூறு ரூபாய் மதிப்புள்ள இந்த வெள்ளிக்
    கோப்பையை வாங்கி அன்பளிப்பாக நமக்குத் தந்தவர் வேறு யாருமல்ல;
    இன்று இவ் விழாவுக்குத் தலைமை தாங்கும் பரமசிவம் பிள்ளை
    அவர்களே! இந்த வெள்ளிக் கோப்பையைத் தட்டிக் கொண்டு
    போகவிருக்கும் சிறுமி யார் என்பது உங்களுக்குத் தெரியும்….”

    தலைமை ஆசிரியர் இப்படிச் சொன்னதும், “தெரியும், தெரியும்” என்றன
    பல குரல்கள்.

    “கே. நீலா! கே. நீலா!” என்று பல சிறுவர்களும், சிறுமிகளும் உற்சாகப்
    பெருக்கில் குதித்துக்கொண்டே கூச்சலிட்டனர்.

    “ஆம், இந்த வெள்ளிக் கோப்பையை நீலாவுக்கு வழங்கும்படி கலெக்டர்
    அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டுத் தலைமை
    ஆசிரியர் உட்கார்ந்தார்.

    கலெக்டர் கம்பீரமாக எழுந்து நின்றார். ஒலி பெருக்கியின் முன்பு
    உற்சாகமாகப் பேசினார்:
    “காந்தி மகான் பெயரை இந்தப் பள்ளிக்கு வைத்திருக்கிறீர்கள்.
    பெயருக்கு ஏற்றபடி இந்தப் பள்ளி நன்முறையில் நடந்து வருவதை நான்
    நன்றாக அறிவேன். குழந்தைகள் நடத்திய நாடகம், நாட்டியம் எல்லாம்
    எவ்வளவு சிறப்பாக இருந்தன! பெரிய பட்டணங்களில்கூட இப்படி நான்
    கண்டதில்லை. இவை எல்லாவற்றையும்விட நான் மிக உயர்வாக
    நினைப்பது எது தெரியுமா? ஒரே சிறுமி ஏழு பரிசுகளைப் பெற்றாளே,
    அதுதான்! அந்தச் சிறுமியைப் பற்றிய விவரங்களைத் தலைமை
    ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். ஏழையாக இருந்தாலும்
    எல்லாத்துறைகளிலும் அவள் கெட்டிக்காரியாக இருப்பது மிகவும்
    பாராட்டத்தக்கது. இச் சிறுமிக்கு ஊக்கம் அளித்து, உதவியும் செய்தால்,
    எதிர் காலத்தில் இவள் மிகவும் சிறந்தவளாக, நாடு போற்றும்
    நல்லவளாக, ஒரு தலைவியாக விளங்கினாலும் விளங்கலாம். இந்தப்
    பள்ளியில் ஐந்து வகுப்பு வரையில்தான் இருக்கிறது. இந்த ஆண்டுடன்
    இவளது படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட வேண்டியதுதானா?
    இங்கிருந்து நான்கு மைல் தூரத்தில் உயர்நிலைப் பள்ளி இருக்கிறது.
    அங்கு அனுப்பி இவளைப் படிக்க வைக்க வேண்டும். இந்த நல்ல
    காரியத்தைச் செய்ய இந்த ஊரில் உள்ள பணக்காரர்களில் யாரேனும்
    முன்வந்தால் நல்லது. அப்படி யாருமே முன் வராது போனாலும்,
    கவலைப்பட வேண்டாம். தலைமை ஆசிரியர் எனக்குத் தகவல்
    கொடுத்தால் என்னால் முடிந்ததை நிச்சயம் செய்வேன்.”
    கலெக்டர் இப்படிக் கூறியதும், தலைமை வகித்த பரமசிவம் பிள்ளை
    கலெக்டரிடம் மெதுவாக ஏதோ சொன்னார்.
    உடனே கலெக்டர், “ஒரு மகிழ்ச்சியான செய்தி. தலைமை தாங்கும்
    பரமசிவம் பிள்ளை அவர்களே இச் சிறுமியை எஸ். எஸ். எல். சி.வரை படிக்க வைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறாராம். புத்தகங்கள்,
    துணிமணிகள் வாங்கவும், தினமும் இங்கிருந்து பஸ்ஸில் போய்
    வரவும், இன்னும் படிப்பு சம்பந்தமான எல்லாச் செலவுகளையும் அவரே
    ஏற்றுக் கொள்கிறாராம். அவரை என் சார்பிலே, உங்கள் சார்பிலே,
    மாணவர்கள் சார்பிலே பாராட்டுகிறேன்” என்றார்.

    உடனே அந்தப் பள்ளிக்கூடமே அதிரும்படி, கூடியிருந்தோர் பலமாகக் கை
    தட்டி மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

    “சரி, இப்போது வெள்ளிக் கோப்பையை நீலாவுக்கு வழங்குகிறேன்”
    என்று கூறிக் கோப்பையைக் கையிலே எடுத்தார் கலெக்டர். ஆனால், நீலா
    மேடைக்கு வரவில்லை.

    “நீலா, உடனே மேடைக்கு வரவும்” என்றார் தலைமை ஆசிரியர்.
    நீலா வரவில்லை. பல முறை அழைத்தும் நீலா வரவில்லை. நீலா அங்கே
    இருந்தால்தானே வருவதற்கு?
    “நீலா எங்கே?”, “நீலா எங்கே?” என்று ஒருவரை ஒருவர்
    கேட்டுக்கொண்டனர்.

    ஒரே பரபரப்பு! பள்ளியின் உட்புறம் முழுதும் தேடிப் பார்த்து விட்டனர்.
    பள்ளியின் வெளியிலும் சிலர் ஓடிச் சென்று தேடிப் பார்த்தனர். நீலாவைக்
    காணோம்!

    அப்போது, ஓர் ஆசிரியை தலைமை ஆசிரியர் அருகிலே ஓடி வந்தார்.
    அவரது காதுக்குள் இரகசியமாக ஏதோ சொன்னார்.

    “என்ன! உண்மையாகவா?” என்று திகிலுடன் கேட்டார் தலைமை ஆசிரியர்.

    “ஆம், இப்போதுதான் ஒரு பையன் சொன்னான்” என்றார் ஆசிரியை.
    உடனே தலைமை ஆசிரியர் கலெக்டரிடமும், பரமசிவம் பிள்ளையிடமும்
    ஆசிரியை சொன்னதை மெதுவாகச் சொன்னார்.

    “என்ன! மகிழ்ச்சியான இந்த நேரத்திலே இப்படி ஒரு செய்தியா?” என்று
    திடுக்கிட்டார் கலெக்டர்.

    “பாவம், நீலா!” என்றார் பரமசிவம் பிள்ளை. உடனே கலெக்டர், எதிர்பாராத காரணத்தால், நீலா நேரிலே இந்தக் கோப்பையைப் பெற்றுக்
    கொள்ளமுடியவில்லை. தலைமை ஆசிரியரிடம் இந்தக் கோப்பையைக்
    கொடுக்கிறேன். அவர் நீலாவிடம் இதைச் சேர்த்துவிடுவார்” என்றார்.
    நன்றிகூடக் கூறவில்லை. நாட்டு வாழ்த்துடன் விழா முடிந்தது.

    நீலா எங்கே போனாள்?

    நீலாவுக்கு என்ன நேர்ந்தது?

    இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

    மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

    சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

    இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *