நீலா மாலா
அழ. வள்ளியப்பா

மாலா வந்தாள்

    “பார்வதி! நேற்று நடந்த பள்ளிக்கூட விழாவிலே நம்முடைய மீனாட்சி மகள் நீலா இருக்கிறாளே, அவள் எவ்வளவு பரிசுகள் வாங்கினாள், தெரியுமா? மொத்தம் ஏழு பரிசுகள்! அத்தோடே, நான் அன்பளிப்பாய்க்
    கொடுத்தேனே, அந்தக் கோப்பையும் அவளுக்குத்தான் கிடைத்தது!”

    “எனக்கு எல்லாம் தெரியும். ஒரு வேலைக்காரப் பெண் இப்படி நன்றாகப்
    படித்து, நிறையப் பரிசு வாங்கியிருக்கிறாளே!……. நிலா கெட்டிக்காரக்
    குட்டிதான்.”

    “நீ பாராட்டி என்ன? கலெக்டரே, அவளை மிகவும் பாராட்டிவிட்டார்.
    ஆனாலும் அவள் கலெக்டர் கையாலே வெள்ளிக் கோப்பையை வாங்க
    முடியாமல் போய்விட்டது. உனக்கு உடம்பு சரியில்லை. அதனாலே,
    மீனாட்சி விழாவுக்கு வரவில்லை. மூன்றாவது பரிசு, ஆறுதல் பரிசு
    வாங்கினவர்களுடைய அப்பா அம்மாவெல்லாம், தங்களுடைய
    குழந்தைகள் பரிசு வாங்குகிற காட்சியைப் பார்க்க வந்திருந்தார்கள்.
    ஆனால், பாவம், மீனாட்சி உன்னைத் தனியாக விட்டுவிட்டு
    வரக்கூடாதென்று உன்னுடனே இருந்துவிட்டாள். ஒரே மகள் இத்தனை
    பரிசுகள் வாங்கியும், அந்தக் காட்சிகளைப் பார்க்கவில்லை…”
    “மீனாட்சியைக் கருந்தேள் கொட்டியதாக யாரோ சொன்னார்களாம்.
    அதனால், விழாவை அரை குறையாக முடித்துவிட்டு, கலெக்டரே மீனாட்சி
    வீட்டுக் குடிசைக்குக் காரிலே போனாராம்.”

    “நானும் தலைமை ஆசிரியரும்கூடத்தான் கலெக்டரோடு போனோம்.
    ‘நீலாவைப் போல் நன்றாகப் படிக்கிற ஒரு பெண் மேலே மேலே படிக்க
    வேண்டும். அதற்கு இந்த ஊரிலே வசதியுள்ளவர்கள் உதவ வேண்டும்’
    என்று கலெக்டர் விழாவிலே சொன்னார். உடனே நான் நீலாவை
    அமரபுரத்துக்கு அனுப்பி எஸ்.எஸ்.எல்.சி. வரை படிக்க வைக்கப்
    போவதாகச் சொன்னேன். கலெக்டர் என்னைப் பாராட்டினார். எல்லாரும்
    கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.”

    “என்ன! நீலாவை எஸ்.எஸ்.எல்.சி. வரை நீங்கள் படிக்க வைக்கப்
    போகிறீர்களா!!” என்று முகத்தைச் சுளித்துக் கொண்டே கேட்டாள்
    பார்வதி அம்மாள்.

    “ஆம். பார்வதி, பஸ் கட்டணம், புத்தகம், துணி மணி வாங்கச் செலவு
    கொஞ்சம்தானே வரும்?”
    “சொல்வது மிகவும் சுலபம். பணத்தை எடுத்துச் செலவு செய்கிற
    போதுதான் தெரியும். மேடையிலே கலெக்டர் முன்னாலே சொன்னால்,
    எல்லாரும் கைதட்டுவார்கள் என்று சொல்லிவிட்டீர்கள். ஆறு
    வருஷங்களுக்கு யார் செலவு செய்வது?”

    “ஏன், நாம்தான் செலவு செய்யப் போகிறோம்.”

    “ஆமாம், தாராளம் தான். என் தம்பி மகன் முரளி எத்தனை தடவை ஒரு
    வர்ணப் பெட்டிக்கு உங்களிடம் கெஞ்சினான்? இரண்டு ரூபாய்கூட
    விலை இருக்காது. அதை வாங்கிக் கொடுக்க மனமில்லாதவர், ஒரு
    வேலைக்காரப் பெண்ணுக்காகச் செலவு செய்கிறாராம்!”

    பரமசிவம் பிள்ளையும் பார்வதி அம்மாளும் இப்படி இரைந்து பேசிக்
    கொண்டிருந்த போது தான் நிலாவும் அவள் அம்மாவும் அங்கு
    கோப்பையுடன் வந்தார்கள். தங்களைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று
    தெரிந்ததும், “நீலா, ஒட்டுக் கேட்கக் கூடாது. வா, போவோம்” என்று
    நீலாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளிக் கதவுக்கு
    வந்துவிட்டாள் அம்மா.

    நீலாவை எப்படியாவது மேல் படிப்புப் படிக்க வைத்துவிட வேண்டும்.
    எவ்வளவு சிரமம் வந்தாலும் சரி என்று முன்பே மிகவும் உறுதியாக
    இருந்தாள் மீனாட்சி அம்மாள்.

    எஸ். எஸ். எல். சி. வரை நீலாவைப் படிக்க வைப்பதாக விழாவிலே பரமசிவம் பிள்ளை அறிவித்தது, மீனாட்சி அம்மாளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தலையிலிருந்த ஒரு பெரிய பாரம் கீழே இறங்கியது போன்ற உணர்ச்சி ஏற்பட்டிருந்தது. ஆனால், பார்வதி அம்மாளின் பேச்சைக் கேட்டதும் அந்த மகிழ்ச்சி எங்கோ ஓடி விட்டது.
    “சந்தர்ப்பம் சரியில்லை. வீட்டுக்குப் போக வேண்டியதுதான்” என்று
    கூறிக்கொண்டே வெளிக் கதவைக் கடந்து வீதிக்குவந்தாள் மீனாட்சி
    அம்மாள். நீலா கலங்கிய கண்களுடன் அம்மாவைப் பின் தொடர்ந்தாள்.
    சிறிது தூரம்கூடச் சென்றிருக்க மாட்டார்கள். “நீலா! இந்த வெள்ளிக்
    கோப்பையை நம் குடிசையிலா வைத்துக் கொள்வது? வேண்டாம்! சிறிது
    நேரம் சென்று எஜமானர் வீட்டுக்கே போவோம்” என்று கூறிவிட்டு,
    அடுத்த வீட்டுத் திண்ணை ஓரமாக அரை மணி நேரம் காத்திருந்தார்கள்.
    பிறகு, திரும்பவும் பரமசிவம் பிள்ளை வீட்டுக்கு வந்தனர். அப்போது
    சண்டை இல்லை. வாக்கு வாதம் இல்லை. உள்ளே சென்றதும், பரமசிவம்
    பிள்ளைதான் முதலில் பார்த்தார். “அடேடே, மீனாட்சியா! நீலாவும்கூட
    வந்திருக்கிறாளே? என்ன பெட்டி அது……? ஓ! உன் மகள் நீலாவுக்குக்
    கிடைத்த வெள்ளிக் கோப்பையா?” என்று மகிழ்ச்சியோடு வரவேற்றார்.
    நீலாவையும் அவள் அம்மாவையும் பார்வதி அம்மாள் ஒரு மாதிரியாகப்
    பார்த்தாள். பிறகு, “மீனாட்சி, உன் பெண் கெட்டிக்காரிதான். நன்றாகப்
    படிக்கிறாள். ஆனாலும், இந்தக் காலத்திலே ஒரு பெண் நன்றாகப் படித்து
    என்ன பிரயோசனம்? எஸ். எஸ். எல். சி. வரை படித்தால் போதுமா?
    ஏதாவது ஒரு பட்டம் வாங்கினால்தான் மதிப்பு. பட்டம் வாங்கினாலும்,
    இலேசிலே வேலை கிடைத்து விடுமா? வேலைக்கு நாயாய் அலைய
    வேணும். ஒரு வேலைக்காரியின் பெண் படித்துப் பட்டம் வாங்கி,
    வேலையும் பெறுவது சுலபமில்லை…….. அது சரி, இந்தக் கோப்பையை
    ஐயாவிடம் காட்டுவதற்கா கொண்டு வந்தீர்கள்? அவர்தானே இதை 300
    ரூபாய் போட்டு வாங்கினார்? வாங்கிக்கொடுத்தவரிடத்திலேயே
    காட்டவேணுமா?”

    “இல்லேம்மா, குடிசையிலே இதை வைக்கப் பயமாக இருந்தது. அதனாலே, இங்கே ஐயாவிடம் கொடுத்துவைக்கலாம் என்றுதான்…”

    “சரி, இப்படி அதை வை. இந்தத் தரையெல்லாம் பார்த்தாயா? மெழுகி நாலு நாட்களாகிறது. நாளைக்கு என் மகளும் குழந்தைகளும் வருகிறார்கள்.

    வீடு பளிச்சென்று சுத்தமாக இருக்க வேண்டாமா? நன்றாக மெழுகிவிட்டு
    வீட்டுக்குப் போ” என்று உத்தரவு போட்டாள் பார்வதி அம்மாள்.
    உடனே மீனாட்சி அம்மாள் சிறிதும் தயங்கவில்லை. “இதோ,
    மெழுகுகிறேன் அம்மா” என்று கூறிவிட்டு வேலையை ஆரம்பித்தாள்.
    நீலாவும் அம்மாவுக்கு உதவியாக இருந்தாள். அரை மணி நேரத்தில்
    வேலை முடிந்து விட்டது.

    வேலை முடிந்ததும், கோப்பையைப் பரமசிவம் பிள்ளையிடம் கொடுத்து
    வைத்துக்கொள்ளச் சொன்னார்கள்.

    “மீனாட்சி, கோப்பை இங்கேயே பத்திரமாக இருக்கட்டும். இன்னும் நீலா
    எத்தனையோ கோப்பைகள், கேடயங்கள், பதக்கங்களெல்லாம் வாங்கப்
    போகிறாள். எல்லாவற்றையும் என்னிடத்திலே தந்து வையுங்கள்.
    பத்திரமாக வைத்திருப்பேன். நீலா பெரிய படிப்பு படித்து, பெரிய
    உத்தியோகம் பார்க்கத்தான் போகிறாள். அப்போது, நீலாவின் வீட்டு
    ஹாலில், கண்ணாடி அலமாரியில் எல்லாவற்றையும் வைக்கலாம். என்ன
    நீலா, நான் சொல்வது சரிதானே?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார்
    பரமசிவம் பிள்ளை.

    நீலா ஒன்றும் சொல்லவில்லை. பதிலுக்குச் சிரித்தாள். ‘எவ்வளவு
    நல்லவர்!’ என்று மனசுக்குள்ளே பாராட்டினாள்.
    மறுநாள் காலை நேரம். பரமசிவம் பிள்ளையின் வீடு ஒரே உற்சாகத்தில்
    மூழ்கியிருந்தது. சென்னையிலிருந்து அவரது மகள் நளினியும், பேத்தி
    மாலாவும், குட்டிப் பையன் ரவியும் வந்திருந்தார்கள். வந்ததும்
    வராததுமாக, “தாத்தா, தாத்தா, நீலா இங்கேதானே இருக்கிறாள்?” என்று
    மாலா கேட்டாள்.

    “அதோ பார் நீலாவின் அம்மா. அவளிடத்திலே சொல்லி நீலாவை அழைத்து வரச் சொல்லலாம்” என்றார் பரமசிவம் பிள்ளை.

    “நீலா பள்ளிக்கூடம் போயிருக்கிறாள். சாயங் காலம் கட்டாயம் வருவாள்”
    என்றாள் மீனாட்சி அம்மாள்.

    “நீலாவுக்கு இன்னும் பரீட்சை முடியவில்லையா? எனக்கெல்லாம் போன
    வாரமே முடிந்து விட்டதே!” என்றாள் மாலா.

    “நீலாவுக்கு அடுத்த வாரம் தான் பரீட்சை. அப்புறம் அவள் இங்கேயே
    உன்னுடனே இருப்பாள்” என்றாள் மீனாட்சி அம்மாள்.

    மாலையில் நீலாவின் வரவை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்
    மாலா.

    நீலா சிறிது தூரத்தில் வரும்போதே மாலா ஓடிச் சென்று அவள் கையைப்
    பிடித்து இழுத்துக் கொண்டு வந்தாள்.

    குட்டிப் பையன் ரவியைப் பார்த்ததும், நீலா ஆவலாக அவனைத் தூக்கி
    வைத்துக்கொண்டு கொஞ்சினாள். ரவியின் அம்மா நளினி, “நீலா! நீ
    நிறைய நிறையப் பரிசுகள் வாங்கியிருக்கிறாயாமே! அப்பா
    சொன்னார்கள். இதோ பலகாரம், உட்கார்ந்து சாப்பிடு” என்று அன்போடு
    கூறி, ஒரு தட்டு நிறையப் பலகாரங்களைக் கொடுத்தாள்.
    “மாலா, நீ சாப்பிடவில்லையா?” என்று கேட்டாள் நீலா.

    “மாலாவுக்குக் கொடுத்த பலகாரத்தை அவள் அப்படியே
    வைத்திருக்கிறாள். நீ வந்தவுடன் உன்னோடேதான் சாப்பிடுவாளாம்”
    என்றாள் மாலாவின் அம்மா.

    உடனே மாலா ஓடிப் போய், தன் தட்டை எடுத்து வந்தாள். இருவரும்
    பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள். ரவிக்கு ஒரு பிஸ்கட்டைக் கொடுத்தாள்
    நீலா. அவன் அதை வாயில் வைத்துச் சப்பிக் கொண்டிருந்தான்.

    பரீட்சை முடியும்வரை தினமும் மாலை நேரத்திலே நீலா வந்தாள். பரீட்சை
    முடிந்ததும், காலை முதல் மாலை வரை மாலாவுடனே பொழுதைக்
    கழித்தாள். பார்வதி அம்மாளின் தம்பி மகன் முரளியும் அங்கு அடிக்கடி
    வந்தான். ஆனால், ஏனோ அவனை மாலாவுக்குப் பிடிக்கவில்லை.
    அவனிடம் அதிகமாகப் பேச மாட்டாள்; ஒதுங்கி ஒதுங்கிப் போய் விடுவாள்.

    நீலாவும் மாலாவும் இரண்டு சிட்டுக்கள் போல் அந்த வீட்டையும்
    தோட்டத்தையும் சுற்றிச் சுற்றி வருவார்கள்: குழந்தை ரவியை நீலாவும்
    மாலாவும் மாற்றி மாற்றித் தூக்கி வைத்துக் கொள்வார்கள்;
    விளையாட்டுக் காட்டுவார்கள்.

    ரவி நீலாவிடம் நன்றாக ஒட்டிக் கொண்டான். அவள் குரல் கேட்டால்
    போதும்; தாவிக் குதித்துக் கொண்டு அவளிடம் போகத் துடிப்பான்.
    ரவியை உட்கார வைத்துக்கொண்டு நீலா ஆடுவாள்; பாடுவாள்;
    அவனைத் தூக்கிக்கொண்டு தோட்டத்திலுள்ள மலர்கள்,
    பறவைகளையெல்லாம் வேடிக்கை காட்டுவாள். மாலா, நீலா, ரவி மூவரும் எப்போதும் உற்சாகமாகவே இருப்பார்கள். பார்ப்பவர்களுக்கு அந்தக் காட்சி இனிமையாக இருக்கும்.

    ஒரு நாள் ரவியின் அம்மா நளினி, தன் அம்மாவிடம், “அம்மா, இதோ
    ஜன்னல் பக்கமாகத் தோட்டத்தைப் பாரம்மா. நீலா நம் ரவியிடத்திலே
    எவ்வளவு பிரியமாக இருக்கிறாள்! அவளை விட்டு அவன் பிரியவே
    மாட்டேன் என்கிறான்!” என்றாள்.

    “ஆமாம், குழந்தையை வைத்துக் கொள்வதற்கு ஒரு பரிசு வைத்தால்,
    அதிலும் நீலாவுக்குத் தான் முதல் பரிசு கிடைக்கும்.” என்றாள் பார்வதி
    அம்மாள்.

    “அம்மா! இன்னும் இருபது நாட்களிலே சென்னைக்குத் திரும்ப
    வேண்டுமே, அப்போது நீலாவை விட்டுப் பிரிய ரவிக்குக் கஷ்டமாக
    இருக்கும்; இல்லையா அம்மா?”

    “ரவி எதற்காகக் கஷ்டப்பட வேண்டும்? நீலாவையும் கூடவே அழைத்துப்
    போனால் சரியாகி விடும்.”

    “ஆமாம்மா. மாலா எவ்வளவோ சிரமப்பட்டுத்தான் படிக்கிறாள். ஆனாலும், வகுப்பிலே எட்டாவது ஒன்பதாவது இடத்திலேதான் இருக்கிறாள்.

    நீலாவையும் மாலாவோடு ஆறாம் வகுப்பிலே சேர்த்துப் படிக்க
    வைத்தால்….” “நளினி! நான் நீலாவை அங்கே அனுப்புவது, அவளைப் படிக்க வைக்கவா? இல்லை, குழந்தை ரவியை வைத்துக் கொள்ள ஒரு
    வேலைக்காரப் பெண் வேணுமென்று எழுதியிருந்தாயே……
    அதற்காகத்தான்.”

    இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

    மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

    சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

    இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *