நீலா மாலா
அழ. வள்ளியப்பா

மாலா வரைந்த படம்!

    “என்ன நீலா, நீ, வர்ணப் பெட்டியைக் கொண்டு வந்தது எனக்காகவா?”
    என்று ஆச்சரியத்துடன் கேட்டான் முரளி.

    “ஆமாம் முரளி! உனக்காகவேதான் கொண்டு வந்தேன். நீ உன் மாமாவிடம்
    வர்ணப் பெட்டி வாங்கித் தரச்சொல்லிப் பல தடவை கேட்டாயாம். என்
    அம்மா சொன்னார்கள். ‘பாவம், நம் முரளிக்கு இதைக் கொடு. நீதான்
    நிறையப் பரிசு வைத்திருக்கிறாயே’ என்று சொல்லி, என் அம்மா இதை
    எடுத்துக் கொடுத்தார்கள்” என்று கூறி வர்ணப் பெட்டியை முரளியிடம்
    நீட்டினாள் நீலா.

    முரளி அதை வாங்குவதற்குத் தயங்கினான்.

    “முரளி! வாங்கிக்கொள். அன்போடு கொடுப்பதை வேண்டாமென்று
    சொல்லக் கூடாதாம். என் அம்மா அடிக்கடி சொல்லுவார்கள்” என்றாள்
    மாலா.

    முரளி, வர்ணப் பெட்டியைத் தயக்கத்தோடு கையில் வாங்கினான்.
    அப்போது அவன் கைகள் கூசின. கண்களிலிருந்து நீர் வழிந்தது.

    “ஏன் முரளி, அழுகிறாய்?” என்று ஒரே சமயத்தில் மாலாவும் நீலாவும்
    கேட்டார்கள்.

    “நீலா! உன் அம்மா எவ்வளவு நல்லவர்கள்! அவர்களைக் கருந்தேள்
    கொட்டியதாக…” அதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை.
    தொண்டை அடைத்தது.

    “முரளி, இது வரையில் நடந்த கெட்டதையெல்லாம் மறந்து விடுவோம்;
    நல்லதை மட்டும் நினைவு வைத்துக் கொள்வோம்… வாருங்கள்,
    மாடிக்குப் போவோம்” என்று நீலாவையும் முரளியையும் மாலா
    மாடிக்கு அழைத்துச் சென்றாள். மேஜை அறையைத் திறந்தாள்.
    உள்ளேயிருந்த படத்தை எடுத்துக் காட்டினாள்.

    “அடடே, படம் எவ்வளவு அழகாக இருக்கிறது! மிகமிக நன்றாக
    வரைந்திருக்கிறாயே!” என்று வியப்போடு கூறினாள் நீலா.

    “ஏதோ எனக்குத் தெரிந்தபடி வரைந்திருக்கிறேன். நீலா, நீ என்னுடைய
    நல்ல சிநேகிதி. நல்ல சிநேகிதி என்ன செய்யவேணும்? தப்பு ஏதாவது
    இருந்தால் அதை எடுத்துச் சொல்லித் திருத்த வேணும்”

    “ஓஹோ! அப்படியா? மாலா, தாமரைக் குளம், அதைச் சுற்றியிருக்கிற
    மரங்கள், கொஞ்ச தூரத்தில் தெரிகிற மலை, மேலே பறக்கிற பறவைகள்
    எல்லாவற்றையும் நன்றாகத்தான் வரைந்திருக்கிறாய். ஆனால்…”

    “என்ன ஆனால்….? சொல்லு, நீலா. சும்மா சொல்லு.”

    “ஒரே ஒரு சின்னத் திருத்தம் செய்தால், இயற்கையாக இருக்கும்.”

    “இதோ, உடனே திருத்தி விடுகிறேன்…. சொல்லு நீலா “

    “எங்களூர்த் தாமரைக் குளத்திலே வாத்துக்களைத்தானே நீ
    பார்த்திருப்பாய்? ஆனால், படத்திலே வாத்துக்களைக் காணோம்!

    அன்னங்களைப் போட்டிருக்கிறாயே! இரண்டு வெள்ளை அன்னங்கள்.
    ஒரு கறுப்பு அன்னம். பொருத்தமாக இல்லையே!”

    “நீலா! குளத்திலே அன்னங்கள் இருந்தால் அழகாயிருக்குமே என்றுதான்
    அப்படி போட்டேன்!”

    “அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் பொருத்தமாக இல்லையே!”

    “ஆமாம் நீலா, தப்புத்தான். நான் கண்ணாலே கண்டதைத்தானே படமாக
    எழுதுகிறேன்? எதற்காக இந்த அன்னங்களெல்லாம்? இதோ பார்.

    வாத்துக்களாக மாற்றி விடுகிறேன்” என்று கூறி அன்னங்களிலே மாலா
    சில திருத்தங்களைச் செய்தாள். சில கோடுகளை ரப்பரால் அழித்தாள்:

    உடனே, அன்னங்கள் இருந்த இடத்தில் வாத்துக்கள் தெரிந்தன!

    “அபாரம்! அபாரம்!” என்று துள்ளிக் குதித்தான் முரளி. “எது அபாரம்?

    நீலாவின் யோசனை தானே?” என்று கேட்டாள் மாலா.

    “மாலா, நீ செய்ததுதான் அபாரம். ஒரு நிமிஷத்திலே
    அன்னங்களையெல்லாம் வாத்துக்களாக மாற்றிவிட்டாயே! இப்போது,
    இந்தப் படத்தை யார் பார்த்தாலும், பூங்குடியிலுள்ள தாமரைக் குளம்
    என்று சொல்லிவிடுவார்கள். நேருக்கு நேராகப் பார்க்கிற மாதிரியே
    இருக்கிறது” என்று மனமாரப் பாராட்டினாள் நீலா.

    “இதற்கு வர்ணம் கொடுத்தால் இன்னும் அழகாக இருக்கும்” என்றான்,
    முரளி.

    “எனக்கு நல்லபடியாக வர்ணம் கொடுக்கத் தெரியாதே! நீ கொடுப்பாயா
    முரளி?” என்று கேட்டாள் மாலா.

    “எனக்குப் படம் போட வராது. ஆனால், நன்றாக வர்ணம் கொடுப்பேன்.
    என் புத்தகத்திலே இருக்கிற படங்கள் எல்லாமே வர்ணப் படங்களாகத்
    தான் இருக்கும்! எல்லாவற்றுக்கும் வர்ணம் கொடுத்திருக்கிறேன். ஒரு
    நாள் ‘டிராயிங் மாஸ்டர்’ அந்தப் படங்களையெல்லாம் பார்த்துவிட்டு,
    நன்றாக வர்ணம் கொடுத்திருக்கிறாய்! இது ஒன்றிலாவது திறமை
    இருக்கிறதே’ என்று பாராட்டினார்; முதுகிலே தட்டிக் கொடுத்தார்.”

    “அடடே, அப்படியா!.. சரி, நீ இந்தப் படத்துக்கு வர்ணம் கொடு. வர்ணப்
    பெட்டிதான் கையிலே இருக்கிறதே!” என்றாள் மாலா.

    உடனே முரளி, அந்தப் படத்துக்கு வர்ணம் தீட்டினான். சிறிது நேரத்தில்
    அந்தப் படம் மிகவும் அழகாக அமைந்துவிட்டது. “முரளி, எவ்வளவு
    அழகாக, வர்ணம் கொடுத்திருக்கிறாய்!” என்று மகிழ்ச்சியுடன்
    கூறினாள் மாலா.

    “மிகவும் நன்றாக இருக்கிறது. இவ்வளவு திறமை முரளியிடம்
    இருக்கிறதே!” என்று வியந்தாள் நீலா.

    “நான் படம் வரைந்தேன். நீலா பொருத்தமாக ஒரு திருத்தம் சொன்னாள்.
    முரளி அற்புதமாக வர்ணம் கொடுத்தான். படம் அபாரமாக அமைந்து
    விட்டது. இதிலிருந்து என்ன தெரிகிறது?” என்று கேட்டாள் மாலா.

    “ஒற்றுமையே உயர்வு தரும்” என்றாள் நீலா.

    “சேர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்வு” என்றான் முரளி.

    “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்றாள் மாலா.

    “ஆம், சந்தேகமே இல்லை” என்ற குரல் கேட்டு மூவருமே திரும்பிப்
    பார்த்தார்கள்.

    மாலாவின் பாட்டி பார்வதி அம்மாள் அங்கே நின்று கொண்டிருந்தாள்.
    அவள் அருகிலே மாலாவின் அம்மா நளினியும் நின்றாள். அவர்களைக்
    கண்டதும், நீலா திடுமென்று எழுந்தாள். பயத்துடன் ஓர் ஓரத்தில் போய்
    ஒதுங்கி நின்றாள்.

    “நாங்கள் வந்ததைக்கூடக் கவனிக்காமல், நீங்கள் மூன்று பேரும்
    சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் இவ்வளவு
    ஒற்றுமையாக இருக்கிறதைப் பார்க்க எனக்கு எவ்வளவு சந்தோஷமாக
    இருக்கிறது, தெரியுமா? முரளி கூடத் திருந்தி விட்டானே!…… மாலா,
    தோட்டத்திலே நடந்ததையெல்லாம் உன் தாத்தா என்னிடத்திலேயும்,
    நளினியிடத்திலேயும் சொல்லிவிட்டுத் தான் கணக்கப் பிள்ளை
    வீட்டுக்குப் போனார்.”

    “பாட்டி, முரளி மனசுகூடத் திருந்திவிட்டது, இல்லையா!” என்று கேட்டாள்
    மாலா.

    “முரளி மனசுகூடத் திருந்தி விட்டது என்கிறாயே, அப்படியானால்,
    இன்னொரு மனசுதான் திருந்தவில்லை என்கிறாயா? அந்த மனசும்
    இப்போது திருந்திவிட்டது. அது யார் மனசு? சொல்லு மாலா.”

    “யார் மனசு? தெரியவில்லையே!” என்றாள் மாலா.

    உடனே பார்வதி அம்மாள் சொன்னாள்:
    “உன் பாட்டி மனசுதான். இத்தனை வருஷத்திலே நீலாவும், அவள்
    அம்மாவும் நம்மைப் பற்றி ஏதாவது கெடுதலாகப் பேசியிருக்கிறார்களா?
    நமக்கு ஏதாவது கெடுதல் செய்திருக்கிறார்களா? நினைத்து நினைத்துப்
    பார்த்தேன். அவர்கள் எதுவும் கெடுதலாகக்கூட நினைத்திருக்க
    மாட்டார்கள். அவர்கள் மேலே எந்தத் தப்பும் சொல்ல முடியாது. அவர்கள்
    ஏழையாகப் போனதனாலே நான்தான் அவர்களை இளப்பமாக நினைத்து
    விட்டேன்” என்று பாட்டி கூறிக் கொண்டிருக்கும் போதே, மாலாவின்
    அம்மா நளினி குறுக்கிட்டாள்:

    “அம்மா! கதிரேசன் செட்டியாரிடத்திலே மாலாவினுடைய அப்பா எவ்வளவு விசுவாசமாக இருக்கிறார்! அதேபோல உங்களிடத்திலும், அப்பாவிடத்திலும் நீலாவும், அவள் அம்மாவும் விசுவாசமாக இருக்கிறார்கள்.

    மாலாவின் அப்பா ஒவ்வோராண்டும் எத்தனையோ ஏழை
    மாணவர்களுக்குப் புத்தகம், துணி, ரொக்கமாகப் பணம் எல்லாம்
    கொடுத்து வருகிறார்கள். நீலாவும் பட்டணத்துக்கு வந்தால்,
    அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.”

    “ஆமாம் பாட்டி, நிலாவை நாங்கள் திரும்பிப் போகிறபோது அழைத்துப்
    போகட்டுமா?” என்று குழைவாகக் கேட்டாள் மாலா.

    “நீங்கள் எல்லாரும் ஒரே கட்சியில் இருக்கிறீர்கள். நான் ஒருத்தி மட்டும்
    எதிர்க்கட்சியிலே இருக்கலாமா? உங்களோடே சேர வேண்டியது தான். சரி,
    உங்கள் விருப்பப்படியே நீலாவை அழைத்துப் போங்கள்”

    “பாட்டி, நீலா சென்னைக்கு வருவது பிள்ளையை வைத்துக் கொள்ளவா?
    அல்லது படிக்கவா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் மாலா.

    “போடி, குறும்புக்காரி!” என்று கூறிவிட்டு “நீலா, இங்கே வா. ஏன் இப்படி
    ஓரமாக நிற்கிறாய்?” என்றாள் பார்வதி அம்மாள்.

    உடனே மாலா ஓடிப் போய் நீலாவின் கையைப் பிடித்து இழுத்து வந்தாள்.
    பார்வதி அம்மாள் மாலாவையும் நீலாவையும் அன்போடு அணைத்துக்
    கொண்டாள்.

    “அம்மா! நானும் என் அம்மாவும் ஏழையாக இருந்தாலும், எங்கள் மேலே
    இவ்வளவு பிரியம் வைத்திருக்கிறீர்களே! என் அம்மா அடிக்கடி
    சொல்லுவார்கள். ‘உன் அப்பா செய்த உதவியும் தியாகமும்
    வீண்போகாது. நல்லவர்கள் உருவத்திலே வந்து நமக்கு எப்போதும்
    உதவும்’ என்று சொல்லுவார்கள். அந்த நல்லவர்கள் நீங்கள் தான்” என்று
    நன்றியுடன் கூறினாள் நீலா. அப்போது அவள் கண்களில் நீர்
    நிறைந்தது.

    “மாலா, உனக்கு முந்தாம் நாள் உன் தாத்தா வாங்கி வந்தாரே ஒரு பாட்டுப்
    புத்தகம், அதிலேயிருந்து ஒரு பாட்டை உன் அம்மா கொஞ்ச நேரத்துக்கு
    முன்னாலேதான் படித்துக் காட்டினாள். மாடு செத்தால், அதன் தோலாலே
    செருப்புத் தைக்கலாம். ஆடு செத்தால், அதன் உரோமத்தாலே கம்பளி
    செய்யலாம். யானை செத்தால், அதன் தந்தத்தாலே சீப்பு,
    பொம்மையெல்லாம் செய்யலாம். பாம்பு செத்தால்கூட அதன் தோலாலே
    மணிபர்ஸ் செய்யலாம்; பெல்ட் செய்யலாம்.

    ஆனால்,

    செத்த மனிதன் உடலிலே
    செய்ய என்ன உள்ளதோ?
    செருப்புக் கூடத் தைத்திடத்
    தீண்டு வாரும் இல்லையே!
    ஆகையால்,
    இருக்கும் போதே பிறருக்கு
    இயன்ற வரையில் உதவுவோம்.

    இப்படி ஒரு பாட்டு அந்தப் புத்தகத்திலே இருக்கிறது. அதைக்
    கேட்டதிலேயிருந்து, என் மனசே மாறிவிட்டது. எனக்கோ அடிக்கடி
    தலைசுற்றல், மயக்கம் எல்லாம் வருகிறது. நாளைக்கே நான் திடீரென்று
    போனாலும் போய்விடுவேன்….”
    பார்வதி அம்மாள் இப்படிச் சொன்னதும், நீலா “அம்மா! இப்படியெல்லாம்
    சொல்லாதீர்கள்” என்று துடிதுடித்துக் கொண்டே, பார்வதி அம்மாளின்
    வாயைத் தன் சிறு கையால் பொத்தினாள்.

    “இல்லை நீலா! என்னாலே யாருக்கு என்ன பிரயோசனம்? உயிரோடு
    இருக்கிறபோதே, உதவ வேண்டியவர்களுக்கு உதவாமல் போனேன்.”

    “பாட்டி, நீதான் நீலாவைச் சென்னைக்குக் கூட்டிப் போகச்
    சொல்லிவிட்டாயே! நீதான் நல்ல பாட்டி. இன்றைக்கே நான் என்
    அப்பாவுக்குக் கடிதம் எழுதப் போகிறேன். நீலாவும் எங்களோடே
    வரப்போவதைத் தெரிவிக்கப் போகிறேன்.”

    “மாலா, உன் அப்பாவுக்குக் கடிதமா எழுதப் போகிறாய்? வேண்டாம்”
    என்றாள் மாலாவின் அம்மா நளினி.

    “என்ன! வேண்டாமா! என்ன அம்மா இது! இந்த நல்ல செய்தியைத்
    தெரிவிக்க வேண்டாமா” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் மாலா.

    இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

    மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

    சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

    இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *