
நீலா மாலா
அழ. வள்ளியப்பா
மாங்குயில் சிறுவர் சங்கம்
‘அப்பாவுக்கு ஒரு நல்ல செய்தியைத் தெரிவிக்கத்தானே கடிதம் எழுத
வேண்டும் என்றேன். ஆனால், அம்மா வேண்டாம் என்கிறாளே!’ என்ற
கேள்விக் குறியுடன் அம்மாவின் முகத்தைப் பார்த்தாள் மாலா.
அம்மா சிரித்துக்கொண்டே, “மாலா! நாம் சென்னையிலிருந்து
புறப்படும்போது, ரயில் நிலையத்தில் உன் அப்பா என்ன சொன்னார்கள்?
ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டாள்.
“ஓ! ஞாபகம் இருக்கிறதே. ‘வாரத்துக்கு ஒரு முறை கடிதம் போடுங்கள்.
பத்து நாளைக்கு ஒரு தடவையாவது டிரங்கால் போட்டுப் பேசுங்கள்’ –
என்று அப்பா சொன்னது நன்றாக ஞாபகம் இருக்கிறது”
“நாம் வந்தது முதல் இதுவரை ஒருதடவையாவது போனிலே
பேசினோமா? இல்லையே! அதனாலேதான் கடிதம் எழுத வேண்டாமென்று சொன்னேன். நாளைக் காலையிலே நாம் அமரபுரத்துக்குப் போய், அங்கேயிருக்கிற போஸ்ட் ஆபீஸிலிருந்து உன் அப்பாவுக்கு போன் பண்ணுவோம். நீலா நம்மோடு வருகிற செய்தியைச் சொல்லுவோம்.
உன் அப்பா மிகவும் மகிழ்ச்சி அடைவார்.”
“ஆமாம் அம்மா, அதுதான் சரி. கூடவே நீலாவையும் அமரபுரத்திற்கு
அழைத்துச் செல்வோமா?”
மாலா அம்மாவிடம் இப்படிக் கேட்டதும் “மாலா, மாலா, நானும் உங்களோடு வரட்டுமா?” என்று ஆசையோடு கேட்டான் முரளி.
“பாவம், முரளியையும் அழைத்துச் செல்லுங்கள். இருக்கவே இருக்கிறது,
நம் வீட்டு வில் வண்டியும், மயிலைக் காளைகளும்” என்றாள் பார்வதி
அம்மாள்.
மறு நாள் காலை பலகாரம் சாப்பிட்டதும், மாலா, நீலா, முரளி, மாலாவின்
அம்மா நளினி, குட்டிப் பையன் ரவி எல்லாரும் அமரபுரத்துக்கு மயிலைக்
காளைகள் பூட்டிய வில் வண்டியில் புறப்பட்டனர். தபால்
நிலையத்திலிருந்து டாக்டர் சூரியசேகருடன் போனில் பேசினார்கள்.
டாக்டருடன் முதலில் பேசியது மாலாவின் அம்மாதான். குடும்ப
விஷயமாகச் சிறிது நேரம் பேசிவிட்டு, நீலாவைப் பற்றியும் அவளை மேல்
படிப்புக்காகச் சென்னைக்கு அழைத்து வருவது பற்றியும் சொன்னாள்.
பிறகு மாலா பேசினாள்.
அவள் நீலாவைப் பற்றிக் கூறும் போது, நீலாவிடம் ரவி எவ்வளவு
பிரியமாக இருக்கிறான் என்பதையும் சொன்னாள். பிறகு, “அப்பா! இதோ
நீலா பேசணுமாம். அவளோடு பேசுங்கள் அப்பா” என்று கூறிச்
‘சட்’டென்று நீலாவிடம் ரிசீவரைக் கொடுத்தாள்.
நீலா அதற்கு முன்னால் டெலிபோனில் பேசியதே இல்லை. அவளுக்கு
என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்றே தெரியவில்லை. அப்போது
“ஹலோ! ஹலோ! நீலாவா! மாலாவோடு அவசியம் நீ இங்கே
வரவேண்டும்” என்று டாக்டர் கூறுவது கேட்டது.
“ஆகட்டும், டாக்டர்” என்று நீலா சொன்னாளே தவிர, வேறு எதுவும்
அவளால் பேச முடியவில்லை.
போனில் பேசி முடித்ததும் எல்லாரும் வண்டியில் வீடு திரும்பினர்.
வண்டியில் வரும்போது, “மாலா, நீயும் நீலாவும் பட்டணம் போன பிறகு
எனக்குப் பொழுதே போகாது….. கெட்ட பையன்களோடு சேர்ந்தால்,
வம்பு அளக்கலாம்; ஊரைச் சுற்றலாம். பொழுது போய்விடும். ஆனால்,
இனிமேல் இப்படி உங்களோடு பழகின பிறகு, நான் கெட்ட
பையன்களோடு சேருவேனா? ஒரு நாளும் சேரமாட்டேன்…. சரி,
அப்படியானால் எனக்கு எப்படித்தான் பொழுது போகும்? அதுதான்
தெரியவில்லை” என்று ஏக்கத்துடன் கூறினான் முரளி.
உடனே மாலா, “முரளி! நாங்கள் இருக்கிற அண்ணா நகரிலே ‘கவிமணி
குழந்தைகள் சங்கம்’ என்று ஒரு சங்கம் இருக்கிறது. அங்கே என்னைப்
போல் குழந்தைகள் எல்லாம் அடிக்கடி கூடுவோம். ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையும் யாராவது ஓர் எழுத்தாளர் வந்து கதை
சொல்லுவார். நாங்களும் கதை சொல்லுவோம், பாட்டுப் பாடுவோம்;
நாடகம் கூடப் போடுவோம். அதுமாதிரி ஒரு சங்கத்தைப் பூங்குடியிலும்
நாம் ஆரம்பித்தால் என்ன?” என்று கேட்டாள்.
“ஆஹா! ஆஹா! அருமையான யோசனை!” என்று கூறிக்கொண்டே
குதித்து எழுந்தான் முரளி. மறுவிநாடி, ‘டங்’கென்ற சத்தம் கேட்டது.
வண்டியில் உட்கார்ந்திருக்கிறோம் என்பதை மறந்து முரளி எழுந்ததால்,
அவன் தலை வண்டியின் மேல் பாகத்தில் உள்ள சட்டத்தில் பலமாக
மோதிவிட்டது! அதைக் கண்டு எல்லாரும் வயிறு குலுங்கச் சிரித்தனர்.
நெல்லிக்காய் அளவு அவனது உச்சந்தலை புடைத்திருப்பதைக் கண்ட
பிறகுதான் அவர்களது சிரிப்பு அடங்கியது.
“பாவம்” என்று மாலாவின் அம்மா புடைத்த இடத்தைத் தடவிக்
கொடுத்தாள். ஆனாலும் முரளி அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
“வீட்டுக்குப்போய் மருந்து போட்டால் சரியாகிவிடும்” என்று சமாதானம்
கூறிக்கொண்டான். பிறகு “மாலா! நீ சொன்னது நல்ல யோசனை!
ஊருக்குப் போனவுடனே சங்கத்தை ஆரம்பித்துவிடுவோம்” என்றான்.
“ஆமாம் மாலா! உன்னைப் போல் நகரத்திலே இருக்கிற குழந்தைகள்
விடுமுறையிலே கிராமத்துக்கு வந்து விடுகிறார்கள். கிராமத்திலே
இருக்கிற ஏழைக் குழந்தைகள் எங்கே போவார்கள்? ஒரு சங்கம் ஏற்படுத்தி
அதை நல்லபடியாக நடத்தினால் பொழுது வீணாய்ப் போகாது.
வாழ்க்கைக்கு உதவியாகவும் இருக்கும்” என்று சொன்னாள் மாலாவின்
அம்மா.
“நீலா, முரளி, என் அம்மா சொன்னதைக் கேட்டீர்களா? நாம் வீட்டுக்குப்
போனவுடனே இந்த யோசனையைத் தாத்தாவிடத்திலே சொல்லுவோம்.
தாத்தா இந்த மாதிரி நல்ல காரியத்துக்கு நிச்சயம் உதவி, ஒத்தாசை
பண்ணுவார்” என்றாள் மாலா.
“எங்கள் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியரிடமும் சொல்லுவோம். அவரும்
நல்ல நல்ல ஆலோசனைகளைச் சொல்லுவார்” என்றாள் நீலா.
வீட்டை அடைந்ததும், முதல் வேலையாகச் சங்கம் தொடங்குவதைப்
பற்றித் தாத்தாவிடம் சொன்னாள் மாலா.
“மாலா, ரேடியோவிலே வாரா வாரம் ஏதாவது ஒரு குழந்தைச் சங்கம்
நாடகம், பாட்டு, கதையெல்லாம் நடத்தும்போது, நம் ஊரிலும் இப்படி ஒரு சங்கம் இருந்தால் நன்றாயிருக்குமே என்று நினைப்பேன். நம் வீட்டுத்
தோட்டத்திலே நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க இரண்டு அறைகள்
கட்டி வைத்திருக்கிறோமே, அந்த அறைகளை உங்கள் சங்கத்துக்குத்
தந்துவிடுகிறேன். இப்பொழுதுதான் தேவைக்கு மேலே அரிசி
வைத்திருந்தால், சட்டப்படி குற்றமாயிற்றே!” என்றார் பரமசிவம் பிள்ளை.
“தாத்தா! நானும் நீலாவும் சென்னைக்குப் போவதற்குள்ளே சங்கத்தை
ஆரம்பித்துவிட வேண்டும்” என்றாள் மாலா.
“சரி, நம் ஹெட்மாஸ்டரிடத்திலே சொல்லி அமரபுரத்திலே,
குழந்தைகளுக்கு வேண்டிய புத்தகங்களை வாங்கி வரச் சொல்லுவோம்.
அவர் நல்ல நல்ல புத்தகங்களாகப் பார்த்து வாங்குவார். மேலும்,
பிள்ளைகள் விளையாட காரம் போர்ட், செஸ் இன்னும்
வேண்டியதையெல்லாம் வாங்கி வரச் சொல்லுவோம்” என்றார் பரமசிவம்
பிள்ளை.
“எங்கள் தாத்தா தங்கத் தாத்தா” என்று அவரைக் கட்டிப் பிடித்துக்
கொண்டாள் மாலா.
உடனே மாலாவின் பாட்டி பார்வதி அம்மாள், “நாளை மறுநாள்கூட நல்ல
நாள் தான். முகூர்த்த நாள். அன்றைக்கே உங்கள் சங்கத்தை
ஆரம்பிக்கலாமே! எத்தனை பேர் வருவார்கள் என்று முன் கூட்டியே
சொன்னால் எல்லாருக்கும் இனிப்பு, காரம், காப்பியோடு விருந்து
வைத்துவிடுவோம்” என்று முக மலர்ச்சியோடு கூறினாள்.
பாட்டி சொன்ன நாளில் சங்கம் தொடங்கியது. பரமசிவம்பிள்ளையின்
வீட்டுத் தோட்டத்தில் உள்ள மாமரத்தடியில், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த
சுமார் ஐம்பது குழந்தைகள் கூடியிருந்தார்கள். பரமசிவம் பிள்ளையும்,
தலைமை ஆசிரியரும் சில பெரியவர்களும் அங்கு வந்திருந்தார்கள்.
மாலா இறைவணக்கம் பாடினாள். நீலா தலைமை ஆசிரியரைத் தலைமை
தாங்கி நடத்தித் தருமாறு கேட்டுக் கொண்டாள். தலைமை ஆசிரியர்
பேசும் போது, “குழந்தைகளே! உங்கள் சங்கத்தின் துவக்க விழாவை
இன்னும் பத்துப் பதினைந்து நாட்களில் மிகவும் சிறப்பாகக்
கொண்டாடப் போகிறோம். இப்போது நடப்பது சங்கத்தை
அமைப்பதற்கான ஒரு கூட்டம் தான். முதலில் உங்கள் சங்கத்துக்கு ஒரு
பெயர் வைக்க வேண்டும். என்ன பெயர் வைக்கலாம்?” என்று கேட்டார்.
ஒவ்வொருவரும் ஒரு பெயரைச் சொன்னார்கள். அப்போது செல்வி என்ற
பெண் எழுந்து, “தயவு செய்து சப்தம் போடாமல், சற்று கவனமாகக்
கேளுங்கள். ‘கூ, கூ’ என்று இனிமையாக ஒரு குயில் கூவுகிறதே,
கேட்கிறதா?” என்றாள். எல்லாரும் உயரே பார்த்தார்கள்; உற்றுக்
கேட்டார்கள்.
“ஆம், கேட்கிறது” என்றார்கள்.
மாமரத்திலிருந்து அந்தக் குயில் கூவுவதால் ‘மாங்குயில் சிறுவர் சங்கம்’
என்று பெயர் வைக்கலாம்” என்றாள்.
“நல்ல பெயர்” “அழகான பெயர்” என்று எல்லாரும் ஆமோதித்தனர்.
“சரி, நம் சங்கத்துக்கு ‘மாங்குயில் சிறுவர் சங்கம்’ என்று பெயர் வைத்து
விட்டோம். இனி, சங்கத்துக்குத் தலைவர், செயலாளர், பொருளாளர்,
செயற்குழு உறுப்பினர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்றார்
தலைமை ஆசிரியர்.
தலைமை ஆசிரியரையே சங்கத்தின் தலைவராக இருக்கும்படி கேட்டுக்
கொண்டார்கள். முரளியைச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தார்கள்.
செல்விதான் பொருளாளர். கிராமத்தின் எட்டுப் பகுதிகளுக்கும் எட்டுச்
சிறுவர்களைச் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தார்கள். பிறகு,
லட்டு, வடை, காப்பியுடன் அமைப்புக் கூட்டம் இனிது முடிந்தது.
அன்று இரவு மாலா, நீலா, முரளி மூவரும் உட்கார்ந்து பேசிக்
கொண்டிருந்தபோது, “நீலா, நாம் ஊருக்குப் போவதற்குள் நம் சங்கத்
துவக்க விழாவை ஜாம் ஜாமென்று நடத்திவிட வேண்டும். துவக்க
விழாவில் நாமெல்லாம் சேர்ந்து ஒரு நாடகம் நடத்தினால் எவ்வளவு
நன்றாக இருக்கும்” என்று ஆசையோடு கூறினாள் மாலா.
“நாடகமா? யார் எழுதிய நாடகத்தை நடத்துவது” என்று கேட்டான் முரளி.
“நாடகத்தை நாமே தயாரித்தால்…?” என்றாள் நீலா.
“நாமே தயாரிப்பதா!” என்றான் முரளி.
“நாம் ஒவ்வொருவரும் இரவு படுக்கப் போகும் போது யோசனை
பண்ணிக் கொண்டே படுப்போம். ஏதாவது நல்ல யோசனை தோன்றும்.
அதை வைத்து ஒரு நல்ல நாடகம் தயாரித்து விடலாம்” என்றாள் நீலா.
“படுத்தவுடனே எனக்கு யோசனை வராது. தூக்கம்தான் வரும்.”
என்றான் முரளி.
“சரி, நீ நன்றாகத் தூங்கு. அப்படித் தூங்கும் போது ஒரு கனவு கண்டு,
அதிலே ஏதாவது நல்ல காட்சி தெரிந்தால், காலையிலே சொல்லு. அதையே
நாடகமாக்கி விடலாம்” என்றாள் மாலா.
அடுத்த நாள் காலையில் நீலா வந்தாள். வந்தவுடனேயே, “மாலா, நான்
இரவு வெகு நேரம் யோசனை பண்ணினேன். நான் எப்போதோ படித்த
ஒரு குட்டிக் கதை ஞாபகத்துக்கு வந்தது. அது ஈசாப் சொன்ன கதை.
அதற்குக் கண் காது வைத்து ஒரு பெரிய கதையாக ஆக்கிவிடலாம்.
ஜோராக இருக்கும் அந்தத் திருடன் கதை.” என்றாள்.
“என்ன! திருடன் கதையா? அப்படியானால் எனக்கு மிகவும் பிடிக்குமே!”
என்றான் முரளி.
“அந்தத் திருடன் சின்னப் பையனாக இருக்கிறபோது,
பள்ளிக்கூடத்திலேயிருந்து சிலேட், பென்சில், புத்தகம் – இப்படி
எதையாவது திருடிக் கொண்டு வருவானாம். அவனுக்கு அப்பா இல்லை.
அம்மா அவனுக்கு அளவுக்கு மீறிச் செல்லம் கொடுத்தாளாம். அதனாலே
அவன் செய்வது தப்பு என்று எடுத்துச் சொல்லிக் கண்டிக்காமல், அவன்
போக்கிலேயே விட்டுவிட்டாளாம். கொஞ்ச நாட்களானதும், அவனுக்குத்
திருட்டுப் பட்டம் கொடுத்து அவனைப் பள்ளியை விட்டே விரட்டி
விட்டார்களாம். பிறகு, அம்மா சொல்லைக் கேட்காமல், அவன் தீவிரமாகத்
திருட்டுத் தொழிலிலே இறங்கி விட்டானாம். அவனைவிட வேகமாக
அவனுடைய திருட்டுப் புத்தி வளர்ந்ததாம். அப்புறம்…”
“அப்புறம் என்ன?” என்று ஆவலாகக் கேட்டான், முரளி.
“அவன் பக்காத் திருடனாகி, பல இடங்களிலே கொள்ளை அடித்தான்;
பலரைக் கொலை பண்ணினான். கடைசியிலே, அவன் ஒரு சிறுமியாலே
திருந்தி, நல்லவனாகி விட்டான்.”
“நீலா, நீலா, அந்தச் சிறுமி யார்?” என்று ஆவலாகக் கேட்டான் முரளி.
“ஐயையோ, அதை இப்போது சொல்லமாட்டேன்” என்று சிரித்துக்
கொண்டே சொன்னாள் நீலா.
“நீலா, இந்தத் திருடன் கதையை நாடகமாக்கினால் நன்றாக இருக்குமே!”
என்றாள் மாலா.
“நான் மொத்தக் கதையையும் எழுதிக் கொண்டு வந்து காட்டுகிறேன்.
நன்றாக இருந்தால் சேர்க்க வேண்டியதைச் சேர்த்து, நீக்கவேண்டியதை
நீக்கி……..”
இப்படி நீலா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “சரி, நீ மாடிக்கு வா.
அங்கே உட்கார்ந்து எழுது. நாங்கள் தொந்தரவு செய்யமாட்டோம்” என்று
கூறி நீலாவின் கையைப் பிடித்து மாடிக்கு அழைத்துச் சென்றாள் மாலா.
முரளியும் கூடவே சென்றான்.
நீலா சாப்பிடும் நேரம் தவிர, மற்ற நேரமெல்லாம் யோசித்து யோசித்து
எப்படியோ கதையை முடித்து விட்டாள். இரவிலே மாலாவுக்கும்
முரளிக்கும் அந்தக் கதையைப் படித்துக் காட்டினாள்.
“ஆஹா! ஆஹா! அபாரம், அபாரம்!” என்றான் முரளி.
“நீலா, கதை மிக நன்றாக இருக்கிறது. இதை நாடகமாக்கி, நம் சங்கக்
குழந்தைகள் நடித்தால் எல்லாரும் பாராட்டுவார்கள்” என்றாள் மாலா.
“சரி, இதை நாடகமாக எழுத வேண்டுமே!” என்றாள் நீலா.
“உங்கள் தலைமை ஆசிரியரிடம் கேட்கலாமா?” என்றாள் மாலா.
“மாலா, சென்னையிலே எத்தனையோ நாடகங்களை நீ பார்த்திருப்பாயே!
நீயும் சில நாடகங்களிலே நடித்ததாகக்கூடச் சொன்னாயே. நீயே இதை
நாடகமாக எழுதிப் பாரேன்” என்றாள் நீலா.
மறுநாள் காலை பரமசிவம் பிள்ளை வீட்டுக்குள் நீலா நுழைந்ததும், மாலா
நீளமான நோட்டுப் புத்தகம் ஒன்றை அவளிடம் நீட்டினாள்.
அதன் முகப்பில் இருந்த படத்தை நீலா பார்த்ததும், “அடடே, கதையில்
வருகிற திருடனை நேரிலே பார்த்த மாதிரி வரைந்திருக்கிறாயே! பணக்கார
வீட்டிலே திருட வந்த அவன் கையிலே டார்ச் விளக்கு இருக்கிறது. அந்த
விளக்கு வெளிச்சத்திலே ஒரு சிறுமி! அடடா! எவ்வளவு நன்றாக
வரைந்திருக்கிறாய்!” என்று பாராட்டிக் கொண்டே உள்ளே புரட்டினாள்.
சில பக்கங்களே மாலா எழுதியிருந்தாள். உள்ளேயும் சில படங்கள்
இருந்தன. அவள் எழுதியிருந்ததை நீலா படித்தாள். முதல் காட்சியே
மிகவும் நன்றாக இருந்தது. “மூன்று காட்சிகள் எழுதிவிட்டாயே!
மிச்சத்தையும் இன்றே எழுதி விடு. நாடகம் பிரமாதமாக இருக்கும்.
சந்தேகமே இல்லை” என்றாள் நீலா.
“ஏதோ எனக்குத் தெரிந்தபடி கிறுக்கியிருக்கிறேன். உங்கள்
ஹெட்மாஸ்டரிடத்திலே காட்டுவோம். நன்றாக இருப்பதாக அவர்
சொன்னால், நாடகமாகப் போடுவோம்” என்று அடக்கத்துடன் கூறினாள்
மாலா.
அன்று இரவு வெகு நேரம்வரை உட்கார்ந்து நாடகம் முழுவதையும்
எழுதி முடித்து விட்டாள் மாலா. பொருத்தமாகச் சில படங்களையும்
போட்டாள். முரளி அந்தப் படங்களுக்கு அழகாக வர்ணம் கொடுத்தான்.
மறுநாள் தலைமை ஆசிரியரிடம் மாலா, நீலா, முரளி மூவரும் நாடகத்தை
எடுத்துச் சென்று காட்டினர். நாடகத்தைப் படிக்கப் படிக்கத் தலைமை
ஆசிரியருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வியப்பாகவும் இருந்தது. “மாலா!
மிக அருமையாக இருக்கிறது இவ்வளவு தூரம் ஒரு சிறு பெண்
எழுதுவாள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை” என்றார்.
“சார், சார், நீலா எழுதிய கதையைத்தான் நான் நாடகமாக எழுதினேன். என்
ஐடியா எதுவுமே இல்லை, சார்.”
“நீலா, நீ மிக அழகாகக் கதை எழுதியிருக்கிறாய், மாலா அதை மிக அழகாக
நாடகமாக்கியிருக்கிறாள்….. ஒரு சில இடங்களில் கொஞ்சம் திருத்தினால்
இன்னும் பிரமாதமாகி விடும். யாரும் குறை சொல்ல முடியாது. நான்
இன்று இரவே திருத்தி வைக்கிறேன்” என்றார் தலைமை ஆசிரியர்.
அந்த நாடகம் அந்த வட்டாரத்திலேயே பெரிய பரபரப்பை உண்டாக்கப்
போகிறது என்பது அப்போது அந்தத் தலைமை ஆசிரியருக்கோ முரளி,
அல்லது நீலா, மாலா ஆகியோருக்கோ தெரியாது!



