பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை 
திரு. வி. கலியாணசுந்தரனார்

பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை
திரு. வி. கலியாணசுந்தரனார்

முதற்பதிப்பின் முன்னுரை

உலகம் பெண் ஆண் என்னும் இருபாலாலும் ஆக்கப் பட்டிருக்கிறது. இரண்டுஞ் சேர்ந்த ஒன்றே உலகம் என்பது. இரண்டும் ஒன்றி இயங்கினாலன்றி உலகம் நல்வழியில் நடைபெறாது.

பெண் தாயாகலான், பெண்ணலன் பெரிதும் ஓம்பப் பெறல் வேண்டும். பெண்ணலன் ஓம்பப்படாத இடத்தில் வேறு எவ்வித நலனும் நிலவல் அரிது. ஒரு நாட்டு நலன் அந்நாட்டுப் பெண்மக்கள் நிலையைப் பொறுத்தே நிற்கும்.

இந்நாளில் பெண்ணுலகில் பலதிறக் குறைபாடுகள் தோன்றியுள்ளன. அவற்றுள் இரண்டு சிறப்பாகக் குறிக்கத் தக்கன. ஒன்று, சிறிதும் நாகரிகமின்றிச் சில இடங்களில் பெண் இருளில் மூழ்கிக்கிடப்பது; மற்றொன்று, பழுத்த நாகரிகம் என்னும் பேய்க்குச் சில இடங்களில் பெண் இரையாகி வாழ்வையே குலைத்துக் கொள்வது. இருசாராரும் ஒழுங்குபட்டுப் பெண்மை யுடையராய் உலகிற்குப் பயன்படல் வேண்டும்.

நமது நாட்டில் இடைக்காலத்தில் ஏற்பட்ட கட்டுப்பாடுகள் பெண்ணுலகின் பெருமைக்கே கேடு சூழ்ந்தன. அக்கட்டுப்பாடுகள் பெண்ணினத்தைக் கல்லாய் மண்ணாய் நடைப் பிணமாய்ச் செய்துவிட்டன. மேல்நாட்டில் இத்தகைய கொடுங் கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால் ஆண்டுப் பழுத்த நாகரிகம் என்னும் அலகை, பெண்மையின் இறைமையைக் கவர்ந்து நிற்கிறது. அந்நாட்டுப் பெண்ணறிஞர் பலர் தாய்மைப் பேற்றை இழிவெனக் கருதி வாழ்தல் கண்கூடு. தாய்மை நிலவாத இடத்தில் இறைமை எங்ஙனம் நிலவும்? மேல்நாட்டுப் பழுத்த நாகரிகம் உலகை வளர்க்குமா? தேய்க்குமா?

இக்காலத்தில் பெண்மைக்கணுள்ள தாய்மையையும், தாய்மைக்கணுள்ள இறைமையையும் மக்கள் தங்கள் வாழ்வில் உணரத்தக்க துறைகள் காணப்பெறல் நல்லது. அதற்குரிய முயற்சி விரைந்தெழுவதாக.

மேல்நாட்டறிஞர் சிலர் பெண்மையைப் பற்றியும் தாய்மையைப் பற்றியும் அரிய நூல் பல எழுதி வருகின்றனர். அந்நூல்களின் உட்கிடக்கை பெரிதும் நமது நாட்டுப் பழைய அகப்பொருள் நூல்களின் உட்கிடக்கைக்கு அரண்செய்தல் கண்டு யான் கழிபேருவகை எய்துவது உண்டு. நன்மக்கள் எவராயினும், அவர் யாண்டு உறைவோராயினும், அவர்தம் அறிவில் ஒரே கருத்து அரும்பல் இயல்பு.

நமது நாட்டுப் பழமை, இப்பொழுது மேல்நாட்டில் புதுமை உருப்பெறுகிறது. பழமை, புதுமை உருத்தாங்கல் இயல்பு. பழமைக்கும் புதுமைக்கும் பொருளில் வேற்றுமையில்லை; தோற்றத்திலேயே வேற்றுமையுண்டு. பொருண் முதன்மைக்கு எப்பொழுதும் அழிவில்லை என்னும் நியாயம் ஈண்டுக் கருதற் பாலது. முன்னைப் பழம்பொருட்டு முன்னைப் பழம்பொருளே – பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே என்றார் வாதவூரடிகளும்.

நமது நாட்டுப் பழமை என்னும் உயிர், இக்கால மேல் நாட்டுப் புதுமை என்னும் உடல் தாங்கும் முறையில் தமிழ் மொழியில் நூல் பல யாத்தல் காலத்துக்கு இயைந்த தொண்டாகும். அத்தகைய நூல்களின் இன்றியமையாமையைச் சொல்லலும் வேண்டுமோ?

பெண்பெருமை பேசும் பன்னூல் இதுபோழ்து வெளிவரல் மிக அவசியம். நந்தமிழ் நாட்டில் பெண்ணைப் பற்றிய நூல்கள் சில வெளிவந்து உலவுகின்றன. அவற்றுள் பெரும்பான்மையன இடைக்காலத்தில் தோன்றிய அடக்குமுறைகளின் எதிரொலி களாக விளங்குகின்றன; சிறுபான்மையன காமவெறி யூட்டக் கூடிய முறையில் எழுதப்பட்டிருக்கின்றன. இவையல்லாத நூல்கள் இயற்றிய அன்பர்கட்கு எனது வணக்கம் உரியதாக.

பழமையும் புதுமையும் விரவ, ஒல்லும்வகை முயன்று, பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை என்னும் இந்நூலை எழுதலானேன். இந்நூல், பெண்மை – தாய்மை – இறைமை என்று முப்பொருளை முதலாகக் கொண்டது. இம் மூன்றும் முறையே நூலின், உடல் – உள்ளம் – உயிராக அமைந்தி ருக்கின்றன. இம்மூன்று முதலினின்றுங் கிளம்பிய சுவடுகளும் கோடுகளும் நூலின் பிற உறுப்புக்களென்க.

பெண் பிறவியின் விழுமிய நோக்கம், அன்பால் ஒருவனை மணந்து, ஒழுங்குபட்ட இல்வாழ்க்கை என்னும் இயற்கை வாழ்வு நடாத்துவதில் நிறைவேறுமென்பது நூலின் திரண்ட பொருள். இயற்கை வாழ்வினின்றும் வழுவிச் செயற்கைப் பாழில் விழுவதால் விளையுங்கேடுகள் நூற்கண் விளக்கமாக ஓதப்பட் டுள்ளன. அறன், அன்பு, அருள் முதலியவற்றிற்குப் பெண் உறையுள் என்பது நூலில் தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டி ருக்கிறது. ஒருத்தி ஒருவனுடனும், ஒருவன் ஒருத்தியுடனும் வாழும் உயரிய ஒழுக்க மணம் நூலில் யாண்டுங் கமழ்ந்து கொண்டிருக்கும்.

இந்நூலின் உள்ளக்கிடக்கையை உணர விரும்புவோர் நூலை முற்றும் படித்துப் பார்ப்பாராக. ஆங்காங்கே சில பொருள் கண்டு நூலைப்பற்றி ஒருவித முடிந்த கருத்துக் கோடலாகாது. ஓரிடத்தில் ஓர் ஐயப் பொருள் காட்சியளிக்கும். அவ்வைய நீக்கப் பொருள் மற்றோரிடத்தில் மிளிரும். ஆகவே, நூலை முற்றும் வாசிக்குமாறு அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இயற்கை வாழ்வு, செயற்கைத் தாழ்வு, உடலோம்பல், மலச்சிக்கல், கூடா ஒழுக்கத்தால் விளையுங் கேடுகள் போன்ற பொருள்கள் நூலின் ஊடே ஊடே சில இடங்களில் பெய்யப் பட்டிருக்கின்றன. அவை, கூறியது கூறும் நோக்குடன் பெய்யப் பட்டனவல்ல என்பதையும், அநுவாதம் என்னும் நியாயம் பற்றிப் பெய்யப்பட்டன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு பொருள் ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு குறிப்புடன் ஒவ்வொருவித விளக்கம் முதலியன பெற்றிருத்தல் நூற்கண் காணலாம். ஒரே பொருள் இடத்துக்கேற்ற விளக்கமும், தெளிவும், முறையும், இயைபும், சுருக்கமும், பெருக்கமும் பெறும்வழியில் பல இடங் களில் பொறிக்கப்படல் ஒருவித நூன்மரபு.

எல்லார்க்கும் பயன்படுமுறையில் நூல் எளியநடையில் எழுதப்பட்டுளது.

பெண் பெருமைபெறின், நாடும் பெருமைபெறும் என்னும் கருத்துக் கொண்டு, சிறியேனால் எழுதப்பெற்ற இந்நூற்கண் குற்றங்குறைகள் உளவேல், அவற்றை அறிஞர் பொறுத் தருள்வாராக.

சென்னை
25. 6. 1927

திருவாரூர் வி. கலியாணசுந்தரன்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !