பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை
திரு. வி. கலியாணசுந்தரனார்

13. பெண்மை – தாய்மை – இறைமை

(பெண்மை – தாய்மை – இறைமை – அன்பே இறை – தாய்மையில் இறைமை இலங்கும் விதம் – பெண் தெய்வம் – பெண்ணின் இறைமை – ஸ்ரீராமபிரான் முயற்சி – பாரதப் போர் – எல்லாம் பெண்ணால் – எல்லாம் பெண்ணில்.)

செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனைமும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்றான்நம்மையுமோர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்தஅம்மையெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே

-வாதவூரடிகள்

பெண்மை என்பது அநாதியாக முழு முதற்பொருளின் ஒருகூறாயிருப்பது. அப்பெண்மை தண்மைச் சத்தியாய்த் தனக் குரிய கடனை ஆற்றி வருகிறது. அச்சத்தியின் கூறே பெண்ணுல கென்பது. பெண், மகளாகப் பிறந்து, பின்னை மனைவியாகி, பின்னைத் தாயாகி, முடிவில் இறையாகிறாள். பெண்ணி னிடத்து இத்துணை நிலைகள் இருத்தல் இந்நூற்கண் விளக்கப் பட்டிருக்கிறது.

பெண்மை

பெண்மை என்பது கட்புலனாயதோர் அமைதித்தன்மை. அமைதி நிலையே சிறந்த கடவுள்நிலை என்று மறை முழங்குகிறது. கடவுளை யாண்டும் சாந்தம் சாந்தம் என்று வேதாந்தம் போற்றுகிறது. அமைதி, பெண் வடிவாகக் கண்ணுக்குக் காட்சி அளிக்கிறது; காட்சி அளிப்பதோடு நில்லாது, உலக வாழ்வில் தலைப்பட்டுக் கடவுள் நெறியைக் காட்டுகிறது; அந்நெறியால் இறைமைக் காட்சியையும் வழங்குகிறது. பெண்மைக்கணுள்ள இந்நுட்பங்களை யெல்லாம் உலகம் உணர்வதாக.

தாய்மை

பெண்மைக்குள்ள பெருமை யாது? பெண்மையின் மாட்டு, உலக வளர்ச்சிக் குரியதும் தொண்டுக் குரியதுமாகிய தாய்மை பொலிதலான், அது பெருமையுடையதாகிறது. பெண்மைக் குள்ள பெருமை யெல்லாம் தாய்மையால் என்க.

தாய்மையில் நிலவுவது இறைமை. இறைமை பெண்மை யின் முடிந்தநிலையாகும்.

இறைமை

இறை எது? சமய நூல்கள் பலவாறு கூறும். அக்கூற்றுக் களை ஈண்டு ஆராய வேண்டுவதில்லை. பொய், பொறாமை, அவா, சீற்றம், தன்னலம் முதலியவற்றைக் கடந்த ஒன்று இறை என்பது. ஒருவர் உள்ளத்தில் அன்பு நிகழும் போது இப்பொய், பொறாமை முதலியன நிலவுமோ? பொய், பொறாமை, அவா முதலியவற்றால் எரியும் ஒருவன் உள்ளத்தில் அன்பு ஒதுங்கி நிற்றல், (ஒவ்வொருவர் தம் தம்) அநுபவத்தால் உணரக் கூடியது.

அன்பு

அன்பு என்பது பொய் பொறாமை முதலியவற்றைக் கடந்து நிற்பது. பொய், பொறாமை முதலியவற்றைக் கடந்து நிற்கும் ஒன்றே இறை என்றுஞ் சொல்லப்படுகிறது. ஆகவே இறையே அன்பு, அன்பே இறையாதல் காண்க.

அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்அன்பே சிவமா யமர்ந்திருந் தாரே

– திருமூலர்

தாய்மையில் இறைமை இலங்கும் விதம்

பெண், பிள்ளை பெற்றதுந் தாயாகிறாள். தாய் பிள்ளையை வளர்க்கப் புகுங்கால், அவள் உள்ளத்தில் இறை மைக்குரிய நீர்மைகளெல்லாம் பதிகின்றன. தொண்டு, தியாகம், தன்னல மறுப்பு முதலியன அவள் மாட்டு அரும்புகின்றன. தாய் கைம் மாறு கருதிக் குழந்தைக்குத் தொண்டு செய்வதில்லை. தனக்குள்ள எல்லாவற்றையும் – சமயம் நேரின் உயிரையும் – பிள்ளை நலத்துக்குக் கொடுக்கத் தாய் விரைந்து நிற்கிறாள். தன்னலங் கருதிக் குழந்தையை வருத்துந் தாய் யாண்டும் இராள். பயன் கருதாத் தொண்டு, தியாகம், தன்னல மறுப்பு முதலியன சேர்ந்த ஒன்றே தாய்மை என்க. இந்நீர்மைகள் உள்ள இடத்தில் பொறாமை அவா முதலியன இரும்புண்ட நீர்போல ஒடுங்கிப் போகும். இந்நிலைபெற்ற தாயின் உள்ளத்தில் என்ன நிலவும்? அன்பாகிய இறையன்றோ நிலவும்? தாயுள்ளத்தில் அன்பே ஊர்ந்திருத்தலால், அன்புக்கு எடுத்துக் காட்டாகத் தாயன்பைக் கொள்வது ஆன்றோர் வழக்கம். தாய் எனினும் அன்பெனினும் ஒக்கும்.

இன்னும் இரண்டொரு பிள்ளைகளைப் பெறுந் தாயன்பு சொலற்பாலதன்று. அவ்வன்பு கூடப் பெற்ற தாய், மற்றப் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளைப்போற் கருதும் ஒருநிலை எய்துகிறாள். அந்நிலை எவ்வுயிரையும் தன்னுயிர்போல் பார்க்கும் பெருநிலை கூட்டும். அப்பெருநிலைக்குத் தாய்மை நிலைக் களானா யிருக்கிறது. பொய் பொறாமை கடந்த அன்பே, தாய்மை யாகலின், தாய்மை இறைமையாகிறது.

அன்புக்கடவுள் கோயில்

பொய் பொறாமைகளைத் தவிர்க்கும் தொண்டு, தியாகம், தன்னல மின்மை முதலியன படியும் உள்ளமே அன்புக் கடவுளுக் குரிய கோயில். அன்புக் கடவுள், நிலைபேறாகத் தாயாகிய பெண் மகளிடத்தில் ஒளிர்கிறது. பெண்மையில் தாய்மையும், தாய்மை யில் இறைமையும் பொலிவது கருதத்தக்கது.

பெண் தெய்வம்

பெண்மை என்பது அமைதித் தன்மை என்று மேலே சொல்லப்பட்டது. அமைதிநிலை இறைமை என்பது. இறைமை யுடைய தாயை வெறும் பெண்ணென்றா கூறுவது? அவளை பெண் தெய்வமென்று போற்றுதல் வேண்டும். பெண் – தெய்வம்! பெண் – தெய்வம்! பெண் – தெய்வம்!

முழு முதற் பொருள், தண்மை வெம்மை யெனும் இரண்டு சக்தியாக உலகை இயக்குகிறதென்பது நூல் தொடக்கத்தில் குறிக்கப்பட்டது. அத் தண்மையின் கூறு பெண்ணுலகு. பெண் பிறந்து, உலக வளர்ச்சிக்குத் துணைபுரிந்து, மீண்டும் அத் தண்மைத் தெய்வமாகிறாள்.

பெண், மகளாகத் தோன்றினாள்; மனைவியாக வாழ்ந் தாள்; தாயாகத் தொண்டு செய்தாள். இப்பொழுது தெய்வ மாகக் காட்சி அளிக்கிறாள். உலகீர்! அக்காட்சி காண்மின்; தெய்வம் தெய்வம் என்று எங்கு ஓடுகிறீர்? நூற்களை ஏன் ஆராய் கிறீர்? இதோ தெய்வம்; பெண் தெய்வம்; காணுங்கள்; கண்டு வழிபடுங்கள்.

பெண்மை என்பது, என்புதோல் போர்த்த உடலன்று. அவ்வுடலினுள்ளே யுள்ள நுண்மை, இறைமை, பெண்மை என்க. அத்தகைய பெண்மை வாழ்க.

ஆண்மக்களே! உங்கள் பெருமை பெண்ணுடன் பொருந்தி நிற்பது. உங்களைப் பெற்றவள் பெண்; உங்களை வளர்ப்பவள் பெண்; உங்களோடு வாழ்பவள் பெண்; உங்களைப் பெண்ணாக்கு பவள் பெண்.

நீங்கள் பெண்ணாகாது, அதாவது பெண்மைநிலை பெறாது, அதாவது அமைதி நிலை எய்தாது, விடுதலையடைதல் இயலாது. பெண்ணால் நலனடையும் நீங்கள் அப்பெண்ணு லகையா வெறுப்பது? துறப்பது? நன்றி கொல்லாதேயுங்கள்; தாய்நன்றி கொல்லாதேயுங்கள்; எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை- செய்ந்நன்றி கொன்ற மகற்கு என்னும் பொய்யாமொழியை நோக்குங்கள்.

பெண்ணிற்கு மதிப்புக் கொடுங்கள்; உரிமை கொடுங்கள்; வணக்கம் செலுத்துங்கள்.

பெண்ணை மதித்துப் போற்றலே நாகரிகம். அவளைக் கட்டுப்படுத்தல் – அடிமைப்படுத்தல் – கொடுமையாக நடத்தல் – அநாகரிகம்.

பெண்ணலன் உங்கள் நலன்; உங்கள் நாட்டு நலன். பெண் கண்ணீர்விடும் நாடு வறுமை நாடாகும்; அடிமை நாடாகும். அஃது எரிந்து போகும்; கரிந்து போகும். ஒரு பெண்ணுக்கு ஸ்ரீராமபிரான் எவ்வளவு முயன்றார்; எத்துணை இடுக்கணுற்றார்; எத்துணைப்போர் புரிந்தார்! ஒரு பெண்ணின் பொருட்டுப் பாரதப் பெரும்போர் நடந்தது! பெண்ணின் துயர் தீர்ப்பது ஆண்மகன் கடமை.

அவளது துயர் தீர்க்க இயலாதவன் ஆண் மகனல்லன். பெண்ணின் சிறுமை போக்க உயிரையுந் துறக்கலாம். அவளது பெருமை காக்கவே ஆண்மகன் பிறந்திருக்கிறான். பெண்ணில்லையேல் உலகேது? உயிரேது? அன்பேது? கடவுளேது? எல்லாம் பெண்ணால்; எல்லாம் பெண்ணில். அத்தகைய பெண்ணை – தாயை – தெய்வத்தைப் போற்றுங்கள்; போற்றுங்கள்.

எங்கணும் பெண்மை பொலிக; எங்கணுந் தாய்மை ஓங்க; எங்கணும் இறைமை வாழ்க. வந்தேமாதரம்.

ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ – அப்பர்

தாயே யாகி வளர்த்தனை போற்றி – மாணிக்கவாசகர்

தாய்மைப் பெண்ணினம் வாழ்ந்து தழைக்க
தாய்மைப் பெண்ணுயிர் தந்திடல் காட்சி
தாய்மைப் பெண்ணெனச் சான்றுகள் வேண்டா
தாய்மைப் பெண்ணினம் வென்று தழைக்க. (1)

உலக மெல்லாம் உதிப்பிடந் தாய்மை
உதித்துத் தங்கி ஒழுகிடந் தாய்மை
கலையின் மூலங் கமழிடந் தாய்மை
கடவு ளன்பு சுரப்பிடந் தாய்மை. (2)

வானை நோக்க வயங்கிடுந் தாய்மை
மண்ணை நோக்க விளங்கிடுந் தாய்மை

கானம் மாமலை காட்டிடும் தாய்மை
கடலும் ஆறும் கருணையின் தாய்மை. (3)

கருணைப் பெண்ணைக் கடிவதோ ஆண்மை
கடிவோ ரெந்தக் கருவழி வந்தார்?
அருளை அற்றவர் ஆர்த்த மொழிகள்
அனலைக் கக்கும் அருநர காகும். (4)

பெண்ணைப் பேயெனப் பேசுதல் நன்றோ
பெரிய மாயையென் றேசுதல் நன்றோ
தண்மை யில்லா வனத்து விலங்கும்
தடவிப் பெண்ணலம் தாங்குதல் காண்மின். (5)

பாவை தாலி அறுத்திடல் மூர்க்கம்
பட்டம் முண்டை என் றீதலும் மூர்க்கம்
ஏது மற்ற இழிவுகள் மூர்க்கம்
எல்லாம் வீழ்த்த இளைஞர் எழுமின். (6)

ஆணும் பெண்ணும் சமன்சமன் ஐயோ
ஆணின் கோல்மிக அன்னை விழுந்தாள்
கோணல் நீக்கிடுங் காதல் மணமே

கோதில் மார்க்கம் குலவும் இனிதே (8)

– புதுமை வேட்டல் (திரு.வி.க.)

முற்றும்.

★ ★ ★

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !