
பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை
திரு. வி. கலியாணசுந்தரனார்
6. இயற்கை அறம்
(இறையும் இயற்கையும் – நீத்தற் பொருள் – குணத் தொகுதிகள் – இயற்கை செயற்கை – திருக்குறள் உலகம் – அறம் கடவுள்நிலை – பொருளும் இன்பமும் – அரசும் இல்லரசும் – அறமும் கடவுளும் – படைப்பை வெறுத்தல் கடவுளை வெறுத்தல் – விடுதலைக்கு வழி – இயற்கை நிலை – போலித் துறவால் விளையுங் கேடு – அமைப்பின் நோக்கம் – உயிர்நிலைச் சிறப்பு – செயற்கை வினைகள் (வேசையர் கூட்டம்; காமுகர் ஈட்டம்; நோய்க் குழு; முஷ்டிமைதுனம்; மருந்துண்ணல்; புலனடக்கம்; வாளா கிடத்தல்) – அஞ்ஞானம் மெய்ஞ்ஞானம் – நீத்தல் அல்லது துறவு (தொல்காப்பினார் இறையனார் திருவள்ளுவனார் மாணிக்க வாசகனார் ஆண்டாள் முதலியோர் கோலிய அறநெறி) – ரவீந்தரர் போக்கு – கருத்து வேற்றுமைக்கு மதிப்பு – மூவாசை – பெண்ணை நீத்தல் ஞானமாகாது – திருவள்ளுவர் வழி விளக்கம் – பெண்ணை விடுத்தோடல் துறவன்று – காமக் கொடுமை – மனமாசகற்றும் வழி – மாசற்ற நெஞ்சில் அன்புக் கடவுள் கோயில் கொள்ளல் – கல்விப்பயன் இல்லறம் – இல்லறத்தில் தன்னலக்கேடு – பிள்ளைப் பேற்றில் தியாகம் – பெண்ணை வெறுத்தவன் – பெண்ணைக் கொண்டவன் – இல்லறத்தால் அன்பு உயிர்களிடம் பரவல் – விருந்தோம்பலின் நுட்பம் – நீத்தார் பெருமை – உண்மைத் துறவு – துறவைப் பற்றிய ஐயப்பாடு – பெண்ணுடன் வாழலும் ஆசை துறத்தலும் – அந்தணர் நிலை செந்தண்மை பூண்டொழுகல் – பெண்வழிச் சேறல் என்னும் அதிகாரம் – திருவள்ளுவரும் துறவும் – பிறப்பில் சாதி வேற்றுமை இன்மை – ஆச்சிரம நோக்கம் – தவம் என்பது பெண்ணைத் துறப்பதன்று – போலித் துறவும் உண்மைத் துறவும் (போலித் துறவின் நுழைவு – மகாத்மா காந்தியும் இல்லறமும் – காலமும் விதியும் – புத்தர் பெருமான் தொண்டும் இல்வாழ்வும் – கிறிது – மணிமேகலை – புத்தர்பெருமான் காலத்திய அறம் – தொண்டு நிலையின் பின்னை மாற்றம் – மடாதிபதிகளும் வாழ்க்கைத் துணையும் – பெண்ணை வெறுக்கும் போலித் துறவு – தற்காலச் சந்நியாசம் – அறத்தின் பொருள் மாற்றம் – அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை – சிற்றினங்கட்குப் புகலிடம் போலிச் சந்நியாசம் – உண்மை வேதாந்தமும் பெண்ணும் – பெண்ணை வெறுத்த சந்நியாசிகள்பாடு- போலிச் சந்நியாசிகள் எழுதிய நூல்கள் – அறம் வேறு, போலிச் சந்நியாசம் வேறு – சீர்திருத்தத்தார்) – ஞானிகள் (பட்டினத்தார்; அருணகிரியார்; நம்மாழ்வார்; மாணிக்கவாச கனார்) – இல்லறம் (இல்லறம் துறவறம் – திருவள்ளுவர் கருத்து – துறவு இல்லறத்தின் ஒரு கூறு – பெண்ணுடன் வாழும் நோக்கம் – பேரின்பம் சிற்றின்பம் – வீடு) – மகாத்மா காந்தி, ரவீந்தரர், நக்கீரனார், நச்சினார்க்கினியர் இவர்களின் கருத்து)
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின்
புறத்தாற்றில் போஒய்ப் பெறுவது எவன்.
-திருவள்ளுவர்
இறைவழி எதுவோ அதுவே இயற்கை என்பது. எவன் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடாத்துகிறானோ, அவன் இறைவழி நிற்பவனாகிறான். இயற்கையோடு இயைந்து நிற்றலை உலகோர் அறமெனக் கூறுப. இக் கருத்துப்படவே ஈண்டு இயற்கை நெறியை, இயற்கை அறம் என்று குறித்தேன். உலகில் அறமெனும் பெயரால், சில செயற்கை முறைகளும் நிகழ்ச்சியி லிருத்தலால், நேரிய அறத்தை இயற்கை அறம் எனக்கோடல் தவறாகாது.
இறையும் இயற்கையும்
இறை – இயற்கை – என்னுஞ் சொற்களைக் கொண்டு, இரண்டிற்கும் பிரிவு கற்பித்தல் கூடாது. இறையை விடுத்து இயற்கை இயங்குவதில்லை; இயற்கையை நீத்து இறை கடனாற்றுவதில்லை.
இயற்கை கடந்த ஒரு நிலையும் இறைக்கு உண்டு. அதைப் பற்றி ஏழையேன் என் சொல்ல வல்லேன்! அது வாக்கு மனங் கடந்தது; உருவம் – அருவம் – அருவுருவம் – எல்லாவற்றையுங் கடந்தது. அவ்விறை உயிர்கட்கு அருள வேண்டி, இயற்கையை உடலாக் கொண்டு கடனாற்றுகிறது. இயற்கையை உடலாக் கொண்ட இறைநிலையே வழிபாட்டுக்குரியது. இறை இயற்கை யில் கட்டின்றி, அங்கிங்கெனாதபடி, எங்கும் நீக்கமறக் கலந்து நிறைந்து நிற்பது; இறையை இயற்கை வாயிலாகவே, மெய்யறி வால் உணர்தல் வேண்டும்.
இறைவனது உண்மையை உணர்த்துங் காட்சிப் பொருள் இயற்கையே யாகும். இயற்கை வாயிலாகவே இறைவனது அருட்டொழில் நிகழ்ந்து வருகிறது. இயற்கை, இறைவனது தொழிற் சக்தியாய் விளங்குகிறது. இறையின் உண்மையை உணர்ந்து அழியாத இன்பம் நுகர வேண்டுமேல், அதற்குக் காட்சிப்பொருளாகிய இயற்கைக் கொழுகொம்பையே பற்றல் வேண்டும். இயற்கையை விடுத்து இறையை உணர முயல்வது கானற்சலத்தை நம்பி ஓடினவன் கதையாக முடியும். இறைக்குரிய வழி இயற்கை இயற்கையே. இல்வியற்கைக்கு அரணாகுமாறு வாழ்வு நடாத்துவோர் இறை இன்பம் நுகரல் திண்ணம். இறைகளோடிசைந்த இன்பம் இன்பத்தோ டிசைந்த வாழ்வு என்னுந் திருவாக்கின் நுட்பத்தை ஓர்க.
இறை இன்பத்துக்கு, அதை விடல் வேண்டும் – இதைவிடல் வேண்டும் என்று சொல்வோரும் உளர். அவரால் எழுதப்பெற்ற நூல்களும் உண்டு. விடல் எனில் எதை விடுவது? எதுவும் இயற்கையின் கூறாகவே இருக்கிறது. இயற்கையோ இறையின் உண்மையை உணர்த்துங் கருவியாயிருக்கிறது. அதை விடுத்து இறை இன்பத்தை எங்ஙனம் நுகர்தல் கூடும்? இயற்கையை நீத்து எங்ஙனம் உலகில் வாழ்தல் முடியும்? இயற்கையை நீக்கப் புகின் முதலாவது இயற்கையாலாகிய உடலை நீத்தல் வேண்டும். உடலை நீத்து ஞானத்தைப் பெறுவது எப்படியோ தெரியவில்லை.
நீத்தற்பொருள்
பின்னை, நீத்தல் என்று சொல்லப்படுவதன் பொருள் என்னை? இயற்கைக்கு மாறுபட்ட செயற்கையை நீத்தலையே, நீத்தல் என்பது குறிப்பதாகும். செயற்கை எது? அதை இரு கூறாகப் பிரிக்கலாம். ஒன்று புறஉலகில் மனிதன் கையால் செய்வது; இன்னொன்று மக்களின் அக உலகிலிருப்பது. அக உலகிலுள்ள செயற்கை அழியின், புறஉலகச் செயற்கை தானே அழியும். அகத்தில் இயற்கை இன்பம் தோன்றப் பெறுவோர் புறத்தேயுள்ள இயற்கை இன்பத்தையும் செவ்விதில் நுகர்வர். மக்கள், செயற்கைப் பொருட்களில் வேட்கை கொள்வதற்குக் காரணமாக நிற்பன, அவர்கள் உள்ளத்திலுள்ள செயற்கைக் குணங்களேயாம். அக்குணங்களை நீத்தால் மக்கள் செயற்கை நரகத்துக்கு இரையாக மாட்டார்கள். எனவே, நீத்தல் என்பது, செயற்கைக் குணங்களினின்றும் நீத்தலைக் குறிப்ப தென்க.
செயற்கைக் குணங்கள் யாவை? அழுக்காறு – அவா – வெகுளி முதலியன. அவை இயல்பாக மக்களிடத்தில் பதிந்து கிடக்கின்றன. இயல்பாக உள்ள குணங்களைச் செயற்கையெனச் செப்பல் நியாயமோ என்று சிலர் வினவலாம். இச்செயற்கை, உலக வழக்கில் சொல்லப்படுஞ் செயற்கை போன்ற தன்று. இதனை இயற்கைச் செயற்கை எனச் செப்பல் பொருந்தும்; அதாவது மக்களுடன் இயல்பாகத் தோன்றி, மக்களை அழிப்பது. இயற்கைச்செயற்கை என்பது, பயிருடன் முளைக்கும் களை போன்றது.
குணத் தொகுதிகள் (இயற்கை செயற்கை)
மக்களிடத்து இருவிதக் குணத்தொகுதி காண்கிறோம். ஒன்று, பொறுமை – அன்பு – அருள் முதலிய குணத்தொகுதி; மற்றொன்று, அழுக்காறு – அவா – வெகுளி முதலிய குணத் தொகுதி. முன்னையது மக்கள் வாழ்விற்குக் கேடு சூழாது. இயற்கையோடு இயைந்து இறை இன்பத்தைக் கூட்டுதற்குத் துணைநிற்பது; பின்னையது மக்களை இயற்கை வாழ்விற் செலுத்தாது, செயற்கை நரகில் தோய்த்து, இறை இன்பத்தைக் கூட்டாமல், அவர்கள் வாழ்விற்குக் கேடு சூழ்வது. இவ்விரண்ட னுள் மக்கள் நல்வாழ்விற்கு உரியது எது? உரியதாகாதது எது? பொறுமை – அன்பு – அருள் முதலிய குணத்தொகுதி மக்கள் நல்வாழ்விற்கு உரியது. பொறாமை – அவா – வெகுளி முதலிய குணத் தொகுதி அவ்வாழ்விற்கு உரியதாகாதது. மக்கள் வாழ்விற்கு உரியதை இயற்கை என்று கொண்டேன்; மற்றதைச் செயற்கை என்று கொண்டேன். “அழுக்காறு முதலிய குணங்கள் மக்களுடன் இயல்பாய், அநாதியுண்மை யான் அவைகளைச் செயற்கையென்று எங்ஙனம் கூறலாம்” என்று சிலர் வாதமிடுவர். வாதத்துக்கும் எனக்கும் நெடுந்தூரம். வாதங் கடந்த ஒன்றே எனக்கு உரிய இயற்கை வாழ்வு. அழுக்காறு முதலியவற்றை ஆதி என்று சொல்வோரும் உளர். அநாதி என்று சொல்வோரும் உளர். அவை ஆதியோ அநாதியோ அதைப் பற்றிய ஆராய்ச்சி ஈண்டு வேண்டுவதில்லை. மக்கள் வாழ்விற்கு உரியதை இயற்கை என்றும், உரியதாகாததைச் செயற்கை என்றும் யான் கொண்டு என் கருத்தை வெளியிடுகிறேன். அன்பர் சொற்போரை ஒழித்துக் கருத்தை மட்டும் நோக்குவாராக.
திருவள்ளுவனார்
மக்கள் தங்கள் மாட்டுள்ள அழுக்காறு முதலிய தீக் குணங்கள், தங்களை விடுத்து விலகும் முறையில் வாழ்வு நடாத்தல் வேண்டும். அவ்வாழ்வு பெறுவது எப்படி? இயற்கை வாயிலாக இறைவன் அதைக் கோலி இருக்கிறான். அஃது, இஃதெனச் சில அறிஞர் உலகிற்கு அறிவுறுத்தி இருக்கின்றனர். அவருள் நந் தமிழ்நாடு உலகுக்களித்த தெய்வத் திருவள்ளுவனாரை யான் இங்கே போற்றி ஏற்கிறேன்.
திருக்குறள்
திருவள்ளுவனார் அருளிய திருக்குறள், மக்கள் வாழ்வுக் குரியது. மக்கள் வாழ்வுக்குரிய முறைகளும் துறைகளும் திருக் குறளாக அமைந்திருக்கின்றன. திருக்குறள் ஒரு நூலன்று. அஃது உலகம்; மக்கள் வாழ்வு. ஆதலால், அதை ஈண்டுப் போற்றி ஏற்கிறேன்.
அறம் கடவுள் நிலை (பொருளும் இன்பமும்)
திருக்குறள், அறம் – பொருள் – இன்பம் என்னும் மூன்றையும் அறிவுறுத்துவது. அறம் என்பது ஒரு பெரும் நிலை. அது கடவுள் நிலை. கடவுள் நிலை எய்துதற்கு இயற்கை வாழ்வு இன்றியமை யாதது என்று முன்னே சொல்லப்பட்டது. இயற்கை வாழ் வாவது இவ்வுலக வாழ்வு. இவ்வுலக வாழ்விற்குரிய துறைகள் பலவற்றைப் பொருட்பாலில் திருக்குறள் வகுத்துக் கூறுகிறது. இப்புறவுலக வாழ்வுடன் நின்றுவிடுவதா மக்கள் வாழ்வின் நோக்கம்? இல்லை. மேலான அறநிலை என்னுங் கடவுள் நிலை எய்த வேண்டுமென்பது மக்கள் வாழ்வின் விழுமிய நோக்கம். அந்நோக்கம் நிறைவேறுதற்குரிய முறைகளைத் திருக்குறள் இன்பத்தில் கோலியிருக்கிறது. எனவே, பெரிய அறநிலைக்குப் பொருளும் இன்பமும் வேண்டற் பாலன என்க. பொருள் புறத்துக்குரியது; இன்பம் அகத்துக் குரியது.
அரசு
புறவுலகில், கொலை களவு முதலிய கொடுந்தீமைகள் நிகழாதவாறு காப்பதற்கு அரசு வேண்டும். அரசு நன்கு நடை பெற அமைச்சு, கல்வி, முயற்சி, செல்வம் முதலியன வேண்டும். இவை யாவும் ஒழுங்குபட அமைந்துள்ள நாட்டில் கொடுந் தீமைகள் எரியாது அமைதி நிலவும். அமைதி அகத்துக்குந் தேவை. புறத்தில்அமைதியின்றிக் கிளர்ச்சி நிகழின், அகத்தே அமைதி நிலவுதல் அரிது. ஒருவனது உடற்றுன்பம் அவனது உள்ளத் துன்பமாகவும் இருத்தல் கண்கூடு. ஆகவே புறவாழ்வின் நிலை அகவாழ்வின் நிலையைப் பெரிதும் பொறுத்து நிற்கிறது. புறவாழ்வின் அமைதிக்கு அரசு முதலியவற்றை அறிவுறுத்திய திருக்குறள், அகவாழ்வின் அமைதிக்கும் இன்பத்துறையெனும் இல்வாழ்க்கையை (இல்லரசை) அறிவுறுத்தா நிற்கிறது. அகத்தில் அமைதி கெடுப்பன யாவை? அழுக்காறு, அவா, வெகுளி முதலியன அல்லவோ? இவற்றைக் கெடுக்க இல்லரசு என்னும் இல் வாழ்க்கையைத் திருக்குறள் உணர்த்துகிறது. திருக்குறள் உணர்த்தும் அறமே இயற்கை அறமாகும்.
அறமும் கடவுளும்
முதலாவது அறத்தின் இயல்பைச் சிறிது ஆய்வோம். மாசிலா மனத்தில் – அதாவது, அழுக்காறு அவா வெகுளி முதலிய தீக்குணங்கள் அற்ற இடத்தில் -அறக்கடவுள் பொலியும். மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன் – ஆகுல நீர பிற என்றும், அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் – இழுக்கா இயன்றது அறம் என்றும் திருவள்ளுவனார் அறத்தின் இயல்பை ஓதியிருத்தல் காண்க. அழுக்காறு முதலிய தத்துவக் கூட்டங்களைக் கடந்து ஒளிர்வது கடவுள் என்னுஞ் செம்பொருள். அப்பொருளை அறம் என்று திருவள்ளுவனார் கூறுகிறார். எனவே, கடவுளையும் அறத்தையும் ஒன்றென்றும் கொள்ளலாம். மேலும், அறத்தின் மேன்மை தோன்ற அறத்தினூ உங் காக்கமு மில்லை அதனை- மறத்தலினூங் கில்லை கேடு என்றார் நம் பெரியார். திருவள்ளுவனார் அருளிய திருக்குறளின் முழு நோக்கம் அறன் வலியுறுத்தல் என்பது தெளிதற்பாற்று. இக்காரணத்தான் அறன் வலியுறுத்தல் பாயிரத்துள் வைக்கப் பட்டிருக்கிறது.
திருக்குறள் அறநிலையம்
அறம் ஒரு மரம் போன்றது. மற்றப் பால்களும், அதிகாரங் களும், பாக்களும் மரத்தின் கவடு கோடு இலை முதலியன போன்றன. திருக்குறளின் ஒவ்வொரு பாட்டும் அறத்தின் ஒவ்வொரு கூறாம். திருக்குறள் கோலியுள்ள வழியில் ஒருவன் வாழ்வு நடாத்துவனேல், அவன் முடிவில் அறநிலை எய்தல் ஒருதலை. அவ்வாழ்வு இயற்கைக்கு அரண் செய்வதாகவும் வளர்ந்தோங்கும்.
மக்கள், அழுக்காறு – அவா – வெகுளி முதலிய கட்டுக் களினின்றும் விடுதலை அடைதற்குக் கொள்ளத்தக்க வழிதுறை களை நோக்குவோம். மக்கள் கட்டுக்களினின்றும் விடுதலை அடைதற்குக் கடவுளைப் போற்ற வேண்டுமென்றும், மாய உலகைத் துற்றத்தல் வேண்டுமென்றும், சிறப்பாகப் பெண்ணைத் துறத்தல் வேண்டுமென்றும், துறந்து நாட்டைவிடுத்துக் காட்டுக் கோடி கண்ணை மூடி உடலை வருத்தி யோகஞ் செய்தல் வேண்டுமென்றும் சிலர் கூறுப. இதைப்பற்றி முன்னருஞ் சிறிது தொகையாகக் குறிப்பிட்டிருக்கிறேன். அத்தொகையை இங்கு வகைப்படுத்திச் சில உரை பகர்கிறேன்.
உலகம் கொடியதாயின் கடவுள் படைப்பில் அவ் உலகம் அமைய வேண்டுவதில்லை. பெண் மாயையாயின், அப் பொருளும் இயற்கையில் தோன்ற வேண்டுவதில்லை. உலகமும் பெண்ணும் கடவுள் படைப்பில் தோற்றமுற்றிருப்பதால், அவ்விரண்டும் உயிர்களின் வாழ்விற்கென்றே தோன்றியிருத்தல் வேண்டும். ஆதலால், உலகையும் பெண்ணையும் துறந்து வாழல் என்னும் எண்ணம், கடவுளின் படைப்பு நோக்கை அறியாது, கடவுளை மறப்பதாகும். கடவுளின் படைப்பை வெறுப்பது கடவுளை வெறுப்பதாகும்.
விடுதலைக்கு வழி
பின்னை எங்ஙனம் அழுக்காறு அவா முதலியவற்றைத் தொலைப்பது? அதற்கொரு வழி, செயற்கை முறையில் நாம் வலிந்து கோலத்தேவையில்லை. அவ்வழி இயற்கையிலேயே அமைந்திருக்கிறது. எல்லாவற்றையும் அளித்த ஆண்டவன், மக்களின் துன்பத்துக்குக் காரணமாக உள்ள கட்டினின்றும் விடுதலை அடைய ஒரு வழியையா கோலாதொழிவன்? கட்டினின்றும் மக்களை விடுதலை செய்விக்கவே அவர்கட்கு இவ்வுலக வாழ்வை ஆண்டவன் நல்கியிருக்கிறான். அவ்வருள் சுரந்த ஆண்டவன் கட்டு நீக்க வழியையும் கோலியிருக்கிறான். இயற்கையில் அவ்வழி அமைந்திருக்கிறது.
இயற்கை நிலை
இயற்கை, பெண் ஆண் வடிவாகப் பொலிவது என்பது தொடக்கத்தில் விளக்கப்பட்டது. அப்பெண் ஆண் சேர்க்கை யால் உலகம் வளர்ந்து வருகிறது. பெண்மகளும் ஆண்மகனும் இயற்கையின் கூறாகவே யிருப்பவர். இயற்கைக் கூறாக உள்ள அன்னார், அதற்கியைந்த வாழ்வு நடாத்துவதே அறிவுடைமை. அன்னார் வேறுபட்ட வாழ்வு நடாத்தப்புகின், அவர்தம் வாழ்வில் பலதிற இன்னல்கள் விளைவது திண்ணம். உலகத்தோ டொத்து வாழ் எனவும், உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும் – கல்லார் அறிவிலா தார் எனவும் வரூஉம் ஆன்றோர் மொழிகளை ஊன்றி நோக்குக. மற்ற உயிர்கள் இயற்கை யுலகோடியைந்த வாழ்வு நடாத்துவது போல, மக்களும் அத்தகைய வாழ்வு நடாத்தக் கடமைப்படல் வேண்டும். தாவரம், பறவை, விலங்கு முதலிய எல்லா உயிரும் (பெண் ஆண்) சேர்க்கை வாழ்வையே நடாத்துகின்றன. இயற்கை நிலை அவ்வாறாக, ஆறறிவுடைய மக்கள் மட்டும் சேர்க்கை வாழ்வைத் துறந்து நிற்க வேண்டுமென்று வலியுறுத்துதற்கு இயற்கையில் எந்நியதி அமைந்திருக்கிறது?
போலித்துறவால் விளையுங் கேடு
வாழ்விற்கு நீர், காற்று ஒளி முதலியன வேண்டப்படுவது போலப் பெண்ணிற்கு ஆண் வேண்டற்பாலன்; ஆணிற்குப் பெண் வேண்டற்பாலள். இரண்டொரு நாள் நீரின்றியும் சிறிது போழ்து காற்று ஒளியின்றியும் வாழ்வு நடாத்தல் இயல்வ தில்லை. போதிய நீரும், காற்றும், ஒளியுமின்றி வாழ்வோர் முகத்திலும் உடலிலும் வெளுப்பேறியிருத்தல் காண்கிறோம். இதன் பயனாகப் பலதிற நோய்கள் தோன்றி இவர்தம் வாழ்வையே குலைக்கின்றன. இவ்வளவிற்குங் காரணம் என்னை? இயற்கை யிலுள்ள நீரையும், காற்றையும், ஒளியையும் அவமதித்த குற்றமே சிறந்த காரணமாகும். இவ்வாறே இயற்கையின் கூறாகிய பெண் ஆணைத் துறத்தலும், ஆண் பெண்ணைத் துறத்தலும் குற்ற மாகும். இத்துறவு இயற்கைக்கு மாறுபட்ட தொன்றாகலான், பின்னை நாளடைவில் அது பலதிற நோய்களைத் தோற்றுவித்து வருத்தி வாழ்வைக் குலைப்பது ஒருதலை. இயற்கையோடியைந்த வாழ்வு நடாத்தலே ஒழுங்கு பட்ட வாழ்வாகும்.
அமைப்பின் நோக்கம்
உறுப்புப் பயிற்சியின் இன்றியமையாமை
மக்கள் வடிவம் பெண் ஆண் சேர்க்கைக்கு ஏற்றவாறு அமைந்திருத்தல் கருதற்பாலது. அவ்வமைப்புக்கு ஒருவித நோக்கமும் இருத்தல் வேண்டும். ஒரு நோக்கமுமில்லா ஒன்று இயற்கையில் அமைதல் அரிது. உடலிலுள்ள ஒவ்வோர் உறுப்பையும் உற்று நோக்குவோம். ஒவ்வொன்றற்கும் ஒவ்வொரு விதக் கடமை இருத்தல் காண்கிறோம். ஒவ்வோர் உறுப்பும் தன் தன் கடமையை ஆற்றாதொழியுமேல், அவ்வதனால் ஆக்கப் பட்ட உடல் செழுமையுறாது சூம்பிப் போகும். உடலின் செழுமை காக்கவேண்டி ஒவ்வோர் உறுப்பும் இயங்குமுறையில் பயிற்சி செய்கிறோம். பயிற்சியால் உறுப்புக்கட்கும் உடலுக்கும் நலன் விளைவதைக் கண்கூடாகக் காண்கிறோம். உறுப்புக்களின் இயக்கம், குருதி ஓட்டத்தை ஒழுங்குபடுத்தி, நரம்புகட்கு உரமேற்றிக் கொழுமை திரட்டித் தசையாக்கி அதனின்றும் அழகுத் தெய்வக் காட்சியை வழங்குகிறது.
உறுப்புக்களுக்கெல்லாம் உயிர் போன்றது உயிர்நிலை. அப்பெயரானே அதன் பெற்றி இனிது விளங்கும். அதற்குங் கடமை உண்டு. அக்கடமையாற்ற அதற்கும் பயிற்சி தேவை. உயிர் நிலைப் பயிற்சி குன்றின், அதன் நிலை என்னாகும்? அதனை உயிராக் கொண்ட மற்ற உறுப்புக்களின் நிலை என்னாகும்? இக்கால மேல்நாட்டறிஞர், உயிர்நிலையின் நுட்பங்களைத் துருவித் துருவி ஆராய்ந்து, அது மற்றைய உடலுறுப்புக்களுக்கு எங்ஙனம் உயிர்ப்பாக – பிராணனாக – இருக்கிறதென்பதையும், அதற்கு எவ்வழியிலாதல் கேடு நிகழின் அக்கேட்டான் எங்ஙனம் உடல்வளன் குன்றுகிறதென்பதையும் உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெள்ளத் தெளிய விளக்கிக் காட்டியிருக்கின்றனர்.
உயிர்நிலைச் சிறப்பு
இளமையிலோ அல்லது உற்ற வயதிலோ உயிர் நிலைக்கு எவ்வழியிலாதல் ஊறு நிகழ்த்திக் கொள்வோரது பின்னைய நிலை இரங்கத் தக்கதாக முடியும். சிலர் நோய் வாய்ப்பட்டு இறந்துபடுவர்; சிலர் முகப்பொலிவும் உடல்வளமும் குன்றப் பெற்று, குரலொடுக்குற்று, கண்ணொளி இழந்து, அழகுடைந்து, பார்வைக்கு இனிமை பயவாத உடல்தாங்கி ஒழிவர். ஒருவரது உடல்வளம் அவரது உயிர்நிலை வளத்தைப் பொறுத்து நிற்கிற தென்று சுருங்கச் சொல்லலாம்.
விதை அடிக்கப் பெற்ற மாட்டுக்கும் குதிரைக்கும், மற்ற மாட்டுக்கும் குதிரைக்கும் வேற்றுமை இருத்தல் கண்கூடு. முன்னைவற்றிற்கு ஊக்கம், எழுச்சி, சுறுசுறுப்பு, உரிமையுணர்வு முதலியன போதிய அளவு இல்லை; பின்னையவற்றிற்கு அவை உண்டு. அஃறிணை உயிர்களின் உயிர்நிலைக் கேட்டினும், உயர்திணை உயிர்களின் உயிர்நிலைக்கேடு பேரிடர் விளைக்கும்.
உயிர்நிலைக்கேடு, அறிவு விளக்கத்துக்கும் ஞாபக சக்திக்கும் பெருந்தொல்லை விளைக்கும் என்பதை ஈண்டுச் சிறப்பாகத் தெரிவிக்கிறேன். அறிவு விளக்கங்குன்றி, ஞாபகசக்தி இழந்து, உலகில் வாழ்வது வாழ்வாகுமா?
இளமைதொட்டு உயிர்நிலையை எப்படிக் காப்பது என்பது பற்றிப் பெண்ணின் வளர்ப்பு என்னுந் தலைப்பின் கீழும் உரைத்திருக்கிறேன். உற்ற வயதில் உயிர்நிலையின் இயற்கை அமைப்புக்கேற்ற பயிற்சி இருத்தல் வேண்டும். அப் பொழுதே அவ்வமைப்பின் நோக்கம் நிறைவேறும். உயிர்களின் துன்ப நீக்கத்தையும், இன்ப ஆக்கத்தையும் குறிக்கொண்டு நிற்பது அந்நோக்கம் என்பதை மீண்டும் ஈண்டு வலியுறுத்து கிறேன்.
செயற்கை வினைகள்
உற்ற வயதில் உயிர்நிலைக்குப் பயிற்சிதானே தேவை என்று மக்கள் செயற்கைத் துறைகளில் இறங்குவது தற் கொலைக்குக் கால்கொள்வதாகும். செயற்கை முறைகள் பற்பல. அவற்றை ஈண்டு விரிக்கில் அவை பெருகும். அவற்றுள் சிற்சிலவற்றை ஈண்டுச் சுருங்கச் சொல்கிறேன். அவை: வேசையர் கூட்டம், காமுகர் ஈட்டம், நோய்க்குழு, முஷ்டி மைதுனம், மருந் துண்ணல், புலனடக்கல், வாளாகிடத்தல் முதலியன. இவை எப்படிச் செயற்கை முறைகளாகும் என்பதைச் சிறிது ஆராய் வோம். ஈண்டுக் கூறுவன யாவும் பொதுவகையில் பெண் ஆண் என்னும் மக்களினத்தைக் குறிப்பன என்று கொள்க.
வேசையர் கூட்டம் : வேசையர் கூட்டம் பெண்மக்களி லும் உண்டு; ஆண்மக்களிலும் உண்டு. ஆனால், அப்பெயர் பெரிதும் ஒருவகைப் பெண்ணினத்துக்கே வழங்கப்பட்டு வருகிறது. அன்புப் பொறுப்புடன் ஒருவனோடு வாழ ஒருப்படாது, பிழைப்புக்கென மானம் விற்றுப் பொல்லா வாழ்வு நடாத்தும் பெண், வேசை என்று அழைக்கப்படுகிறாள். தெய்வத் தன்மை பொருந்திய பெண்ணினத்தில் வேசைக் கூட்டம் தோன்றி யதற்குக் காரணம் ஆண்மக்களின் மூடச் செயலேயாகும். ஆணுலகம் தூய்மை காத்திருக்குமேல், பெண்ணுலகில் வேசையர் கூட்டம் திரண்டிராது. எப்படியோ வேசையர் கூட்டம் தோன்றி இருக்கிறது. அதை ஒடுக்க வேண்டுமாயின், ஒருவன் ஒருத்தி யோடு வாழும் இயற்கை அறம் உலகில் யாண்டும் பரவுதல் வேண்டும். ஒருவன் ஒருத்தியுடன் வாழும் பொறுப் பேலாது, நினைந்தபோது வேசையர்பால் துயின்றெழுவதால் விளையும் தீமை என்னை? எங்ஙனமாவது பெண் சேர்க்கைதானே தேவை என்று கருதுவோரும் உளர். இவர் இயற்கை – செயற்கை நுட்பம் தெரியாதவர் என்க.
கலவி நுட்பம்
கலவி என்றால் எல்லாங் கலவியாகுங்கொல்? பெண் ஆண் கலவி என்பது காதல் இன்பத்தை அடிப்படையாகக் கொண்டி ருத்தல் வேண்டும். காதல் இன்பம், அறிவு மனம் உடல் ஆக மூன்றும் ஒன்றிய அன்பின் வழிப் பிறப்பது. அன்பில்லாத இடத்தில் அவ்வின்பம் பிறவாது. அறிவும் மனமும் உடலும் அன்பால் ஒன்றி நிகழுங் கலவியில், பெண்மக்களின் உயிர்நிலை யின் உட்கருவிகளிலுள்ள சினை உறுப்புக்களினூடே ஒருவித இன்பம் துளும்பி ஊறும். அதன் பயனாக ஒருவிதச் சத்து எழும்பி (ஆண்மகன் சுக்கிலம் விழுந்ததும்) ஆணுள் நுழையும். அந்தச் சத்து ஆண்மகன் சுக்கிலச் செலவிற்கு ஈடு செய்யும் அமிழ்தாய் உடல்நலனைக் காப்பதாகும். இஃது இயற்கைக் கலவி, இதற்கு மாறுபட்டது செயற்கைக் கலவி.
பொருட்பெண்டிர் கலவி
அறிவும் மனமும் ஒன்றாத கலவியில் சத்துப் பிறப்ப தில்லை. பொருட் பெண்டிர் கலவி, அன்புவழி அறிவும் மனமும் ஒன்றாத வெறும் உடற்கூடல் என்பதற்கு விளக்கந் தேவை யில்லை. அக்கலவியில் பெண்மகளின் உட்கருவியின் சினை களில் இன்பக் கிளர்ச்சியும் நிகழாது; அதனின்றும் சத்தும் எழாது. சத்து எழாத இடத்தில் நிகழ்வது, வெறும் உடற் கூடலாகலின் அக்கூடல் செயற்கை முறையாகும். அது முஷ்டி மைதுனத்தை ஒத்ததெனச் சில அறிஞர் எண்ணுகின்றனர்.
பொருளொன்றே குறிக்கொண்டு, சில பெண் மக்களோடு கூடித்திரியும் ஆடவரும் வேசையர் கூட்டத்திற் சேர்ந்தவராவர். இவர்தங் கலவியும், மனமும் அறிவும் ஒன்றாத அன்பில்லாத தாகலின், அதுவும் செயற்கை முறையே யாகும். அன்புவழி நிகழாத கலவி யாவும் செயற்கை முறைகளே என்று சுருங்கச் சொல்லலாம். இதைக் கீழ்வரும் இனங்களிலும் கூட்டிக்கொள்க.
ஆகவே, பொருளில் கருத்து வைத்து, மானம் விற்பதைத் தொழிலாக உடைய வேசையர் கூட்டம், உடலுக்கு நலன் பயவாத செயற்கை இனங்களில் ஒன்றாதல் காண்க.
காமுகர் ஈட்டம்: சில இடங்களில் பொருள் வேட்கை யின்றி, வெறுங் காமக்கிளர்ச்சியால் இருவர் சேர்க்கை நிகழ்வ துண்டு. காமம் (Lust) என்பது, வெறியால் உடலளவில் எழும் ஒருவித வெம்மைக் கிளர்ச்சி. இவ்வெம்மைக் கிளர்ச்சியால் நிகழும் புணர்ச்சி மனத்தில் உறுவதில்லை. சேர்க்கையின் போழ்தும் காமுகர் மனம் பெரிதும் அலைந்துதிரியினும் திரியும். காதலால் விழுங்கப்பட்ட மனம் அவ்வாறு அலைந்து திரிவதில்லை. இம்மனம் அன்பில் ஒன்றி நிற்கும். அலைந்து திரியும் மனத்துடன் கூடுவது வெறும் உடல்சேர்க்கையே யன்றி, அது மனங் கலந்த ஒன்றாகாது.
சில சமயங்களில் மனம் அலையாமலும் காமுகர் சேர்க்கை நிகழும். மனம் அலையாத ஒரு காரணம் பற்றி, மனங்கலந்த காதற் சேர்க்கை என்று அதைக் கோடலாகாது. என்னை? காமுகராகிய ஒருத்திக்கும் ஒருவனுக்கும் விளைந்த வேட்கை மற்றவரிடத்தும் செல்கிறதா இல்லையா என்று பார்த்தல் வேண்டும். அவ் வேட்கை மற்றவரிடத்தும் சென்று தாக்கு வதாயின், அவ் விருவர்க்கும் மனக்கலப்பில்லை என்று உணர்ந்து கொள்ளலாம்.
சில காலம் பிறரிடத்து வேட்கை செல்லாத வழியிலும் சில இடங்களில் ஒருத்திக்கும் ஒருவனுக்கும் காமச் சேர்க்கை நிகழ்வ துண்டு. இதைச் சோதனை செய்து பார்த்தால் உண்மை விளங்கி விடும். இருவரையும் சிறிது காலம் பிரித்து வைத்திருப்பின், இவள் இவனையும், இவன் இவளையும் மறந்து விடுவர். சமயம் நேரின், இவர் மற்றக் காமுகரிடத்திலும் திருவிளையாடல் புரியத் துணியினுந் துணிவர்.
காமுகர் சேர்க்கையில் மனக் கலப்பிராது. சில சமயத்தில் போலிக்கலப்பு நிகழும். சேர்க்கை, மனங் கலந்ததாயின், அது காதலாகும். காதலுடையார் பிறரைக் காமுறார்; எவ்வளவுநாள் பிரிந்திருப்பினும் ஒருவரை ஒருவர் மறவார். அவர்தம் உள்ளத்தில் பிரிவு நிகழாது. இதற்கு மாறுபட்டு வாழும் கூட்டமே காமுகர் ஈட்டமாகும்.
காமுகர் பலரிடங் கூடலால், அவர்பால் நோயும் நிரம்பித் ததும்பும், புணர்ச்சிக் காலத்தும் மனத்தைப் பிறரிடஞ் செலுத்தும் காமத்தின் சிறுமையை என்னென்று கூறுவது?
காமுகர் ஈட்டமும் – அன்பும் – மனக்கலப்பும் இல்லா ஒரு வழியில் உழன்று, உடலுக்குக் கேடு தேடிக் கொள்வதால், அதுவுஞ் செயற்கைத் துறையின்பாற் படுவதாகும்.
நோய்க்குழு : நோயாளரின் சேர்க்கையைக் குறித்து விரித்துக் கூறவேண்டுவதில்லை. நோய்வாய்ப்பட்ட பெண்ணுடன் ஆணோ அல்லது ஆணுடன் பெண்ணோ கூடுவதைப் போன்ற செயற்கை நரகம் பிறிதொன்றில்லை. நோய், அவளுடனும் அவனுடனும் ஒழிவதில்லை. சில இடங்களில் அஃது அவர் வழிவழித் தொடர்ந்தும் வளர்கிறது. இக்கொடுமையைப் பற்றிப் பின்னுங் கூறப்போவதால், இவ்விடத்திற்கு ஏற்ற அளவில் நின்று மேற்செல்கிறேன். நோயாளர்க்கு முதலாவது அறிவு விளக்கம் இராது; மனோ உரம் இராது. இரண்டும் இன்மையால் இவரைச் சிறுகாமத்தீ பெரிதும் எரித்துக் கொண்டே யிருக்கும். அவர்க்குத் தீய நினைவு தோன்றும்போதெல்லாம் கிளர்ச்சி எழும். வேறு நினைவு அவர்க்குப் பெரிதும் உறாது. அவர்தஞ் சேர்க்கை, உடல் அளவிலும் நிகழ்தல் அரிது. இதை எங்ஙனம் இயற்கை முறை என்று கூறுவது? ஆதலால், நோய்க் குழுவினரது ஆடலையும் செயற்கைத் துறையெனத் தள்ளுக.
முஷ்டிமைதுனம் : இது கைமுட்டி என்று வழங்குவதுண்டு. இஃதொரு கொடிய செயற்கை முறை. அறிவும் மனமும் கலவாத ஒருத்தியும் ஒருவனும் கூடுவதே செயற்கை முறையெனில், இருவர் சேர்க்கையேயின்றி, ஒருவரே இன்பங் காணப் புகும் முயற்சித் துறையை எத்தகைய கொடிய செயற்கை முறை என்று சொல்வது? இதுவே சுத்த செயற்கைமுறை.
இச்செயற்கை முறையின் கொடுமை தெரியாது சிலர் வெந்நரகத்துக்கு இரையாகின்றனர். இப் பயிற்சியால் வாழ்வில் விளையுங் கேடுகளை மேல்நாட்டு மருத்துவர் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கின்றனர். அவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் மக்களிடையில் பரவுதல் நலம்.
இக்கொடுஞ் செயற்கைப் பயிற்சி, பல காரணங்களால் இளமையில் சில பெண்மக்களிடத்தும் ஆண் மக்களிடத்தும் நுழைந்து, அவர்கள் பிறவிப் பயனைக் கொல்கிறது. குழந்தைகள் (அப்பருவத்திலேயே) அடிக்கடி உயிர்நிலையைத் தொடுவதா லும், சில மூடத்தாய் தந்தையர் குழந்தைகளின் உயிர்நிலையைத் தொட்டும் கசக்கியும் முத்தமிடுவதாலும், பீடங்களின் மீதோ மற்றெதன்மீதோ குழந்தைகள் சாய்ந்து உயிர்நிலையை உறாய் வதாலும், இன்னோரன்ன பிற காரணங்களாலும் உயிர்நிலை யின் நரம்புகளில் ஒரு விதக் கிளர்ச்சி எழும். நாளடைவில், வயது ஏற ஏற, இக்கிளர்ச்சி, குழந்தைகளை முஷ்டிமைதுனத்தில் செலுத்தும். இதற்குக் காரணம் பெற்றோரது கவலை ஈனமே. இதைப் பெண்ணின் வளர்ப்பு என்னுந் தலைப்பின் கீழும் சிறிது விரித்துள்ளேன்.
தீயோர் இணக்கத்தாலும் முஷ்டிமைதுனப் பயிற்சி நுழைவதுண்டு. ஆயிரக்கணக்கான மாணாக்கர் பயிலுங் கல்லூரி களிலும், மாணாக்கர் வதியும் விடுதிகளிலும், இளைஞர் கூடும் எந்த இடங்களிலும் இக்கொள்ளை நோய் வாடை சிறிதும் வீசாதவாறு ஆசிரியன்மாரும் மற்றவரும் பார்த்துக் கொள்ளல் வேண்டும். பெண்பாடசாலைகளும், அவைகளை ஒட்டிய விடுதிகளும் நன்மக்கள் பார்வையில் நடைபெறல் வேண்டும். சில இடங்களில் மணவாழ்வு ஏலாத பெண் மக்கள் ஆசிரியன்மார் களாகவும், விடுதித் தலைவர்களாகவும் அமர்கிறார்கள். அவர் களில் நல்லோர் பலர் இருக்கலாம். முஷ்டிப் பயிற்சியும், வேறு சில தீப்பயிற்சியும் புகுந்த உள்ளமுடைய சிலரால் பாடசாலை யும் விடுதியும் பாழாகிவிடும். இதுகுறித்துத் தாய் தந்தையர் மிக எச்சரிக்கையா யிருப்பாராக.
முஷ்டிமைதுனத்தில் ஒரு நல்ல குண முண்டு! அஃது எது? அது, விரைவில் தன்னைக் கொண்டோரைக் காட்டிக் கொடுப்பது. முஷ்டிமைதுனம் தொடங்கப் பெற்ற சில ஆண்டுக் குள்ளாக, அது தன் நண்பருடலில் சில மாறுதல் நிகழ்த்தும். மாறுதல் கண்டு, பெற்றோரோ மற்றவரோ அப்பயிற்சி யுடையாரை எச்சரிக்கை செய்து, அதனால் வாழ்வில் விளையுங் கேடுகளை எடுத்துக்காட்டினால், அவர் உடனே அதை விட் டொழிப்பர். அப்பயிற்சியால் தலைப்பட்டோர் உற்ற வயதடைந் தவராயின், உடனே அவர் மணம் புரிதல் சிறப்பு.
முஷ்டிமைதுனத்தால் விளையும் கேடுகளை இளமையில் உணர்வோர் அத்துறையில் தலைப்படமாட்டார். ஒன்றுந் தெரியாது தலைப்பட்டோர், கேடுகளை உணரப்பெற்றதும், அவரும் உடனே அம் மைதுனத்தைத் தொலைப்பர். பல ஆண்டு அப்பயிற்சியில் உழன்று பழுத்தோர், பழுத்து விழவேண்டி யவரே. அன்னார்க்குத் துன்பம் நரகம் போலத் தோன்றும்; தோன்றினும் அப்பயிற்சியினின்றும் அவர் விடுதலை அடைதல் அரிது. அவர் அப்பயிற்சிக்கு அடிமையாய்விட்டவர். அவர் அதன் கொடுமை உணர்ந்து, அதனை விட முயலினும் அஃது அவரை விடாது. எந்நோய்க்கும் மருந்து உண்டு; எப்பேய்க்கும் மந்திரமும் உண்டு. முஷ்டிமைதுன நோய் பேய்கட்கு மருந்தும் இல்லை; மந்திரமும் இல்லை. பின்னை முஷ்டிமைதுனத்தார் உய்யும் வழியாது? ஒன்றும் இல்லை என்று சிலர் கூறுவர். உய்யும் வழி உண்டு என்று கூறலாம். அவ்வழியை மற்றோரிடத் தில் (பெண்ணலனில்) குறிப்பன். தீப்பயிற்சியால் துன்பம் முதிர்ந்த பின்னர் வழிகாண முயல்வதினும், அது முதிரா வண்ணம் அதைத் தடுத்தொழிப்பதே அறிவுடைமை.
முஷ்டிமைதுனம் எவ்வழியில் தன்னை உடையானைக் காட்டிக் கொடுக்கும் என்பதைச் சிறிது பார்ப்போம். அப்பீடை, முதலாவது முகத்தில் சில மாறுதல் நிகழ்த்தும். முகத்தில் இளமை குன்றும்; ஒரு விதப் பழுப்புத் தோன்றும்; பழுப்பில் கருஞ்சாம்பற்பூசல் போன்றதொரு சாயல், மிக மென்மையாய் எழும்பி மறையும். பின்னே கண்களின் கீழ்க் கருங் (கோட்டுக்) கீற்றுக்கள் படரும். கண்களில் குழிவிழும். சோர்வு களைப்பு தலைகாட்டும். படிப்பிலோ தொழிலிலோ மனம் செல்லாது. நாளடைவில் உயிர் நிலையின் நரம்புக்கட்டுக் குலையும்; சோர் வுறும். அது கிளர்ந்தெழுந் தன்மையை இழக்கும்; வாட்டமுறும். உயிர்நிலையின் நரம்புக்கட்டுக் குலைவு தன்னளவில் நின்று விடாது. அஃது எல்லாவற்றிற்கும் தாயக மாகலான், அது மற்ற இடங்களிலுள்ள நரம்புக்கட்டுக்களையும் குலைக்கும். இக்குலை வால் மூளையின் உரங்குன்றும்; குடர் மெலிவுறும்; ஈரலும் குண்டிக்காயும் சுறுசுறுப்பா யிருக்க மாட்டா. இவற்றால் ஜீரணசக்தி குறையும்; மலச்சிக்கல் உண்டாகும். இன்னோரன்ன தொல்லைகளால் இடர்ப்படும் மாந்தர்க்கு ஞாபகசக்தி இராது; பெரிய நூலாராய்ச்சியில் நாட்டம் செல்லாது. கூட்டங்களி லிருக்க அவர்தம் மனம் ஒருப்படுவதில்லை. ஆடவராயின் அவர்க்கு மகளிர் கூட்டம் நஞ்செனத் தோன்றும்; மகளிராயின் அவர்க்கு ஆடவர் கூட்டம் வெறுப்பாகத் தோன்றும். இப் பெரியோர் தனித்து ஒதுங்கி வாழவே விரும்புவர். இன்பூட்டும் இயற்கை இவர்க்குத் துன்பூட்டுவது போலத் தோன்றும். இன் னும் கொடுமைகளை விரிக்கில் அவை பெருகும். மேல்நாட்டு அறிஞர் எழுதிய மருத்துவ நூல்களில் முஷ்டி மைதுனத்தால் விளையுங் கொடுமைகளைப் பரக்கக் காண்க. இப்பயிற்சியில் பழுத்த மாக்களே உயிரொடு நரகில் இவ்வுலகத்தில் அழுந்திக் கிடப்பவராவர்.
இவ்வளவு துன்பத்துக்குங் காரணம் என்னை? ஒருத்தி ஒருவனுடனும், ஒருவன் ஒருத்தியுடனும் வாழா தொழிவ தன்றோ? ஆண்டவன் விதித்த இயற்கை முறைக்கு இடர் விளைத்த பாவம் வீண் போகுமோ? இருவர் சேர்க்கைக்கென அமைக்கப்பட்ட உறுப்பில் ஒருவர்க்கு என்ன விளையாட்டு? இவரல்லரோ இறையின் ஆணையை மீறியவர்? இயற்கைத் தாயை மறந்தவர்? முடிவில் தம் வாழ்விற்கே கேடு சூழ்ந்தவர்? இவரே பேர்பெற்ற தற்கொலையாளர். இன்பத்துக்கென அளிக்கப்பட்ட அரிய பிறவியை – பெறற்கரும் பெருவாழ்வை – துன்பமாக்கிக் கொள்ளும் மடமையினும் மடமை பிறி தொன்றுண்டோ?
இத்துணைக்கேடு விளைக்கவல்ல முஷ்டிமைதுனத்தைச் செயற்கை முறை என்று சொல்லலும் வேண்டுமோ?
மருந்துண்ணல் : இயல்பாக எழும் வேட்கையை ஒடுக்கச் சிலர் மருந்து உண்கின்றனர். இம்மருந்தார் முஷ்டிமைதுனத் தார்க்குத் தம்பியார் என்க. இயற்கையை மருந்தால் கட்டுப் படுத்தப் புகலே அறிவுடைமையன்று. மருந்து என்ன செய்யும்? தாதுவைக் கெடுக்கும். மருந்துகளிற் சில, மூலாதாரத்தையே ஒடுக்கும்; வேறு பல நோய்களையும் உண்டுபண்ணும். மருந்து, தொடக்கத்தில் வேட்கையை அழிப்பது போன்றதொரு உணர் வளிக்கும். உண்மையில் மருந்து, வேட்கையை அழிப்ப தில்லை; வேட்கைக்கு நிலைக்களனாக உள்ள உறுப்புக்களின் பசையை அழிக்கிறது. பசையின் அழிவு, பின்னே படிப்படியாக முஷ்டி மைதுனத்தால் விளையும் கேடுகளைப் போன்ற கேடுகளைப் பொறுத்துப் பொறுத்து விளைக்கும். இக்கேடுகளை விளைக்கும் மருந்துண்ணலும் செயற்கை முறையாகும்.
புலனடக்கம் : மேற்போந்த முறைகளைச் செயற்கை என்பதில் வாதப் போர் நிகழாது. புலனடக்கத்தைச் செயற்கை முறை எனில், வாதப்போர் அளவின்றிக் கிளம்பும். புலனடக்கம் பல பெரியோரால் கொள்ளப்பட்டது; நூல்களால் முழங்கப் பெறுவது. அதை எப்படி செயற்கை முறை என்று கூறலாம்? என்று பலர் வாதம் புரிவர். புலனடக்கப் பயிற்சி இல்லாதாரே, பெரிதும் வாதப்போர்க்குப் புறப்படுவர். பெரியோர் மீதும், நூல்கள் மீதும் அவர் கொண்டுள்ள பற்றே பிடிவாதத்துக்குக் காரணம். உண்மைப் பெரியோர் கருத்துக்கும், உண்மை நூல் களின் உள்ளக்கிடக்கைக்கும், அநுபவத்துக்கும் எனது கருத்து முரண்பட்டு நில்லாது என்று உறுதி கூறுகிறேன். பெண்ணை இழிந்த பொருளெனக் கருதி, அவளை வெறுத்து, அவள் நினைவு உள்ளத்தில் பதியாதவாறு காக்கப் புலனடக்கம் வேண்டு மென்று சொல்வோர் கூற்றுக்கு எனது கருத்து மாறுபட்டே நிற்கும். பெண்ணை வெறுக்கும் எண்ணத்துடன் புலன்களை அடக்குவது செயற்கை முறை என்பது எனது கொள்கை. யான் பெரியோரெனக் கொண்டுள்ள அறிஞர் கொள்கையும் இதுவே.
புலனடக்கம் பல ஆன்றோர் நூல்களில் பேசப்பட்டிருத்தல் உண்மை. அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை என்று திருவள்ளு வனார் திருவாய் மலர்ந்திருக்கிறார். மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத்து என்று மாணிக்க வாசகனார் அருளிச் செய்திருக்கிறார். இக்கருத்தடங்கிய நம் நாட்டவர் பாடல்களை மலை மலையாகக் குவிக்கலாம். திரு மூலர் என்னும் பெரியார்.
அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார்அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லைஅஞ்சும் அடக்கில் அசேதனம்
ஆமென்றிட்டுஅஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே
என்று அறிவுறுத்தியிருத்தல் ஊன்றி நோக்கத்தக்கது. அத் திருமூலரே.
ஐந்தில் ஒடுங்கில் அகலிட மாவதுஐந்தில் ஒடுங்கில்
அருந்தவ மாவதுஐந்தில் ஒடுங்கில் அரன்பத
மாவதுஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே
என்றுங் கூறியிருக்கிறார்.
பெரியோர் உரைகள் ஒன்றோடொன்று முரண்படுவது போலக் காணப்படும். அவ்வுரைகளை நுணுகி ஆராய்ந்தால் முரண்பாடின்மை காணலாம்.
அடக்கம் என்பதன் பொருள்
முதலாவது அடக்கம் என்னுஞ் சொல்லின் பொரு ளுணர்தல் வேண்டும். நெறியல்லா நெறியில் செல்வதினின்றும் தன்னைக் காத்தலே அடக்கமென்பது. முற்றுஞ் செயலின்மை அடக்கமாகாது. நாவடக்கம் என்றால் என்னை? நாவைச் செய லின்றிச் செய்வதா? அன்று, கண்டதைத் தின்னலாகாது என்பது அதன் பொருள். வாயடக்கமாயிரு எனில், பேசாமல் ஊமையா யிரு என்றோ பொருள் கூறுவது? பேசத் தகாததைப் பேசாதே என்பதன்றோ அதன் உண்மைப் பொருள்? இவ்வாறே புலனடக்கம் என்பதற்கும் பொருள்கொள்ளல் வேண்டும். புலனடக்கம் என்பதற்குப் புலன்களை வழியல்லா வழியில் உழற்றலாகா தென்பது பொருள்; புலன்களின் செயலைக் கெடுத்தல் என்று பொருள்கோடல் தவறு. புலன்களின் செயல் கெடின், மனிதன் அசேதனனாவன்; அதாவது அறிவற்ற சடப் பொருளாவன். புலன்களின் செயலைக் கெடுத்து அழிவோரை நோக்கியே திருமூலர், அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்று நல்லறிவு கொளுத்தினர். அத்திருப்பாட்டிலேயே அஞ்சும் அடக்கா அறிவறிந்தேனே என்று புலனடக்கத்தின் நுட்பத்தை அவர் நுவன்றுள்ளனர். புலன்களை வினைகெடச் செய்யாது, அவற்றைச் செம்மையில் நிறுத்தி வாழ்வோருக்கு, மன ஒற்றுமையும் அறிவு விளக்கமும் உண்டாகும்.
திருவள்ளுவர் கருத்து
ஆகவே, புலனடக்கம் என்று ஆன்றோர் கூறிய உரைகளில் வேற்றுமைப் பொருளில்லை என்க. புலனடக்கம் வேண்டற் பாலதே. ஆனால், அசேதனமாய் அழியும் முறையில் அவ் வடக்கம் வேண்டற்பாலதன்று. உலகிற்கு இயற்கை அறத்தை அறிவுறுத்தப் போந்தவர் திருவள்ளுவனார். அவர் புலனடக்கத் தைப் பற்றிப் பெரிதும் பேசியுள்ளார். புலன்களைக் கெடுக்கும் முறையை அவர் அறிவுறுத்தினாரில்லை. ஒருபோதும் அவர் புன்னெறியை அறிவுறுத்தார்.
உரன்என்னுந் தோட்டியான் ஒரைந்துங்
காப்பான்வரன்என்னும் வைப்பிற்கோர் வித்து
என்றார் திருவள்ளுவனார், உரன் என்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான் என்று அவர் அருளியிருத்தல் காண்க. உரனால் ஒரைந்தும் நெறியல்லா நெறியில் சென்று உழலாத வாறு அவற்றைக் காத்தல் வேண்டுமேயன்றி, அவற்றை அழித்தல் கூடாது. அழித்தால் உரன் விளக்கம் ஏது? அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை என்றதென்னை எனில், ஐந்தன் புலம் தீநெறி யில் செல்வதை அடல் வேண்டுமென்று கொள்க. ஐம்புலன் அடங்காது முனைந்தெழுந்து தீநெறியில் பாயும் நீர்மை யுடைமையால், அவற்றின் முனைப்பை அடல் வேண்டும் என்று புலவர் விரைந்து கூறுகிறார்.
சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்
றைந்தின்வகைதெரிவான் கட்டே உலகு
என்னுங் குறளினும் ஆசிரியர் ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு என்று அருளியிருக்கிறார். ஐந்தினை அழித்து வினை கெடுத்தவன்கண்ணதே உலகு என்று அவர் அறைந்தாரில்லை.
1புலனடக்கம் பொறியடக்கம் என வரூஉம் இடங்களில் அடக்கம் என்பதற்குச் செயலின்மை கொள்ளாது, அறிவு வழிச் செந்நெறியில் நின்றொழுகல் என்று கொள்ளக் கடவோமாக.
இவ்வுண்மை தேறாது, சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும் ஐந்தைக் கெடுக்கும் முறையில் புலனடக்கப் பயிற்சி செய்யப்புகுவது செயற்கை முறையாகும். இவ்வைந்தும் கெட்டால், மகன் அறிவற்ற பொருளாதல் உறுதி. அறிவு கெடும் முறையில், சிலர் புலனடக்கம் என்னும் பெயரால், பெண்ணை வெறுத்து, யோகம் யோகம் என்று போலியோகஞ் செய்து, ஈரல் இயக்கங் கெடுத்து, உடல் வெளுப்பேற, சோகை, காமாலை, இருமல் முதலிய நோய்வாய்ப்பட்டு, வாழ்வைக் குலைக்கின்றனர்.
நமது நாட்டில் கௌதமனாரைப் பற்றிய ஒருவிதக் கதை வழங்கிவருதல் நேயர்கட்குத் தெரியும். கதையைப் பற்றிய ஆராய்ச்சி ஈண்டு வேண்டுவதில்லை. கதையிலுள்ள நுட்பத்தையே கருதல் வேண்டும். கௌதமனார் ஐம்புலவழி உழலாது, ஐம்புலனைத் தம் அறிவின்வழிச் செந்நெறியில் இயக்கும் ஆற்றல் வாய்ந்தவர். அவரும் அகலிகை என்ற மனைவியோடு வாழ்ந்தவர். இந்திரன் புலனடக்கும் ஆற்றல் இலனாய், சிறுமை இன்பத்துக்கு எளியனாய், அகலிகையின் கற்பழித்துத் துன்புற்றான். இவ்விரு வருள் ஐந்தின் வழியுழலாதவர் ஒருவர்; உழன்றவன் ஒருவன். கௌதமனார் ஐந்தையுஞ் செயலின்றி ஒடுக்கி மாயவில்லை என்பது கவனிக்கற்பாலது.
அன்புநெறி இன்னதென்று உணராது, உடலைக் கெடுக்கும் வெம்மை நெறியில் நுழைந்து திரியும் போலி யோகிகள், தங்கள் மறச்செயலுக்குத் திருவள்ளுவனார் போன்ற அறவோர் உரைகளை எடுத்தாண்டு, பொல்லாப் பழியை அப்பெரியோர் மீது சுமத்தா திருப்பார்களாக. திருவள்ளுவனார் ஆங்காங்கே அறிவுறுத்தும் புலனடக்க நுட்பத்தை,
கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும்
ஐம்புலனும்ஒண்தொடி கண்ணே யுள
என்று அவரே விளக்கியிருத்தல் காண்க. திருவள்ளுவனார் அருளிய திருக்குறளை முற்றும் ஆய்ந்து, அவர்தம் உள்ளக் கிடக்கை இன்னதென்று உணராது. ஆங்காங்கே ஒவ்வோர் உரையை எடுத்துக் தங்கோள் நிறுத்த முயல்வது நியாயமாகாது. திருவள்ளுவனார் அருளிய திருக்குறள், இயற்கை அற வாழ்க்கையை உலகிற்கு அறிவுறுத்த எழுந்த நூல் என்பதை அன்பர்கள் உணர்வார்களாக.
ஆகவே, புலனை நல்வழியில் நிறுத்தி ஆளுந்திறனின்றிப் புலனையே கெடுத்துப் புலனை அறிவற்ற பொருளாக்க முயல் வதும் செயற்கை முறையேயாகும்.
வாளா கிடத்தல் : மேற்போந்த முறைகளெல்லாம் உடல் நலனைக் குலைத்தலால், அத்துறைகளில் இறங்காமலும், மணவாழ்வை ஏலாமலும் வாளாகிடத்தல் நலமெனச் சிலர் கருதலாம். வாளாகிடத்தலும் பிழையே. ஒவ்வோர் உறுப்பும் ஒவ் வொரு வினையாற்றினாலன்றி உடல்நலம் பெறாது. உயிர் நிலைக்கென உள்ள கடனை ஒருத்தியோ ஒருவனோ ஆற்றா தொழிவதும் இயற்கைக்கு மாறுபட்டு நிற்பதாகும். மேற்போந்த முறைகள் விரைவில் கேட்டை வெளிப்படுத்தும். வாளா கிடத்தல், நாட்பொறுத்து உடல் நலனுக்கு ஊறு நிகழ்த்தும். இறைபடாத கேணியின் நிலை என்னாகும்? வாளா கிடக்கும் வாழ்வும் அத் தகையதாகும். வாளா கிடக்கக் கிடக்க உயிர்நிலையின் இயக்கம் குன்றிப்போகும். அதனால் நரம்புக்குத் தளர்ச்சி உண்டாகும். மனைவியொடு வாழாமலும், வேறு தீப்பயிற்சியில் நண்ணாம லும் இருப்போர்க்கும் கண் மங்கல், மண்டையிடி, மூளை உரம் குன்றல், நினைவுத்திறக் குலைவு முதலியன தோன்றும். இந் நோய்களுக்கு உரிய மருந்து காதல் மணவாழ்வேயாகும். ஆதலால், வாளா கிடத்தலும் இயற்கைக்கு மாறுபட்டு நிற்பதாகும்.
இன்னும் பல செயற்கை முறைகள் உண்டு. அவ்விழிவு களை ஈண்டு விரிக்கில் நூல் பெருகும். இயற்கை அறத்துக்கு மாறுபட்ட ஒவ்வொன்றும் செயற்கையின் பாற்படுமென்று சுருங்கச் சொல்கிறேன்.
செயற்கை முறைகளில் தலைப்பட்டால் உடல் நலத்துக்குக் கேடு விளையும். உற்ற வயதில் வாளா கிடந்தாலும் உயிர் நிலைக்குப் போதிய பயிற்சியின்றி உடல்நலன் கெடும். பின்னை என்ன செய்வது? வேறு வழி உன்னாது, இயற்கை அமைப்பு வழியே வாழ்வு நடாத்த ஒருப்படல் வேண்டும். இயற்கை அமைப்பு, பெண் ஆண் சேர்க்கையைக் குறிக்கொண்டு நிற்றல் வெள்ளிடைமலை. அவ்வமைப்பின் நோக்குக்கு மாறுபட்டொழுகி, ஏன் வாழ்வைக் கெடுத்துக் கொள்ளல் வேண்டும்? இயற்கைவழி நிற்க ஒருப்படுவது அறிவுடைமை.
அஞ்ஞானம் மெய்ஞ்ஞானம்
மக்கள், இயற்கை அமைப்புவழி நின்றால் உடல் நலமுறல் உண்மை. ஆனால் அவ்வழி ஞானத்தை அகற்றி அஞ்ஞானத்தை கூட்டுமா ? என்று ஐயுறுவோரும் உளர். இயற்கைக்கு முரண்பட்டு நிற்குமட்டும் அஞ்ஞானம் அகலா தென்றும், அதற்கு அரணாக நிற்க நிற்க மெய்ஞ்ஞானம் கூடு மென்றும் அன்பர்கள் அறிவார்களாக. இயற்கைக்கு அரணாக வாழ்தலாவது ஒருத்தி ஒருவனுடனும், ஒருவன் ஒருத்தியுடனும் வாழ்வதாகும். அந்தோ! இஃதென்னை? மற்றும் மாறுபட்ட கருத்து! இல்வாழ்க்கையா மெய்ஞ்ஞானத்தைக் கூட்டும்? அநியாயம்! அநியாயம் ! என்று கடிந்துரைப்போர் இல்லாமற் போகார்.
அழுக்காறு அவா வெகுளி முதலியன உள்ள இடத்தில் அஞ்ஞானமும், அவை அற்ற இடத்தில் மெய்ந்ஞானமும் நிலவும் என்பது எவரும் ஒப்ப முடிந்த உண்மை. இதில் கருத்து வேற்றுமை இல்லை. அழுக்காறு முதலிய தீக்குணங்களின் நீக்கத்துக்கும், மெய்யுணர்வின் ஆக்கத்துக்கும் கடைப்பிடிக்கத் தக்க வழி யாது? இல்வாழ்க்கையை அஞ்ஞான மென்றும் பிரவர்த்தி யென்றும் பேசுவோர் என்ன வழி காட்டுகின்றனர் ? அது செயற்கை வழியா யின் உடலுக்குக் கேடு விளையும். மெய்ஞ ஞானத்துக்கு உடல்நலன் மிக மிக இன்றியமை யாதது.உடலார் ஒழிந்தால் உயிரார் ஒழிவார் – திடம்பட ஞானம் சேர வொட்டாது என்றார் திருமூலர். மேலே காட்டிய வழிகளுள் எதில் நுழையினும், அது செயற்கை வழியாய் முடிகிறது. எஞ்சி நிற்பது இல்வாழ்வு ஒன்றே. அதை அஞ்ஞான வழி எனில் வேறு வழி என்ன? வேறு வழி, நீத்தல் அல்லது துறவு என்று அன்பர்கள் கூறலாம். நீத்தல் என்னும் துறவைப்பற்றி இந்நூலின் இடை யிடையே பேசி வருகிறேன். புலனடக்கத்திலும் குறிப்பாக அது பற்றிச் சில உரை பகர்ந் துளேன், ஆயினும், இன்னும் சிலமொழி கூறுதல் தவறாகாது.
நீத்தல் அல்லது துறவு
சில இடங்களில் புலனடக்கம் எவ்வாறு திரிபாகக் கொள்ளப்பட்டிருக்கிறதோ, நீத்தலும் அவ்வாறே கொள்ளப் பட்டிருக்கிறது. திரிபு பல ஆண்டாக நிலைத்தும் நிற்கிறது. திரிபில் மயங்கிக் கிடப்போர்க்கு என் போன்றார் கூற்று, கூற்றாகவே தோன்றும்.
யான் புதிதாக ஒன்றுங் கூறுகிறேனில்லை. பண்டைத் தமிழ்மக்கள் கொண்ட ஓர் அறத்தையே இன்று வலியுறுத்து கிறேன். இடைக்காலத்தில் தோன்றிய திரிபும் மயக்கமும் நாட்டையே அலைக்கின்றன. தொல்காப்பியனார், இறைய னார், திருவள்ளுவனார். மாணிக்கவாசகனார், ஆண்டாள் முதலியோர் கோலிய அறநெறியே யான் வலியுறுத்தும் செந்நெறி யாகும். இக்கால ரவீந்திரநாத் தாகூரும் அவ்வற நெறியையே உலகிற்கு அறிவுறுத்தினர். எனது உள்ளக்கிடக்கையைச் செவ்வனே உணராது,புதுமுறை என்று என்மீது பழிசுமத்தும் அன்பர்கட்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன். யான் குறிப்பது புதுமுறை யன்று; அது பழையது. புதுமுறை காண்பதும் குற்றமாகாது. அதற்கும் மக்கட்கு உரிமை இருத்தல் வேண்டும். தொன்மையவாம் எனும் எவையும் நன்றாகா இன்று தோன்றிய நூல் எனும் எவையும் தீதாகா என்று உமாபதி சிவம் உரைத் திருத்தல் காண்க.
கருத்து வேற்றுமை
நமது நாட்டில் கருத்துவேற்றுமைக்கு மதிப்பு ஏற்படல் வேண்டும். கருத்து வேற்றுமை காரணமாகப் பகைமை பாராட்டலும் கேடுசூழலும் அறியாமை. கருத்து வேற்றுமைக்கு இடமும் மதிப்பும் கொடுப்பது சிறந்த நாகரிகமாகும். அவரவர் கருத்தை அவரவர் வெளியிடுவாராக. உலகம் கொள்ளத் தக்கதைத் கொள்ளும்; தள்ளத்தக்கதைத் தள்ளும். பழைமை என்று மடமையைப் போற்றலும், புதுமை என்று செம்மையைத் தூற்றலும் அறிவுடைமையாகா. இக்குணமுடைய நாடு ஒரு போதும் வளர்ச்சியுறாது. கருத்து வேற்றுமைக்கும், பொருந்திய புதுமைக்கும் இடந்தரும் நாடு வளரும். இது நிற்க.
மூவாசை
நீத்தல் என்பதற்கு உலக ஆசையை நீப்பது என்று சொல்லப் படுகிறது. ஆசை வகைகள் பல. அவை மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை என்று தொகுக்கப்பட்டிருக்கின்றன. இம் மூன்றனுள் பெண்ணாசையை நீத்தால் மற்ற ஆசைகள் தாமே நீங்குமென்று அறையப்படுகிறது. மண்ணாசை தன்னிற் பொன்னாசை தன்னின் மயக்க வாழ்க்கைப் – பெண்ணாசை நீத்தல் எளிதோ பெரியோர் தமக்கும் என்றும் பெண்ணாசை யின் கொடுமை குறிக்கப்படுகிறது. பெண்ணாசையால் எல்லா ஆசைகளும் வளரும் என்பது பெண்ணை வெறுப்போர் கருத்துப் போலும்!
பெண்ணை நீத்தல் ஞானமாகாது
இடைக்காலத்தில் ஆணுலகில் எழுந்த அடக்குமுறை, பெண்ணுலகை மாயையாகவும் அஞ்ஞானமாகவும் கருதச் செய்திருக்கிறது. பெண்ணுடன் வாழ்தல் பிரவர்த்தி மார்க்கமாம்! mŠPhdkh« !அவ்வாழ்வைத் துறத்தல் நிவர்த்தி மார்க்கமாம்! மெய்ஞ்ஞானமாம்! இந்த ஞானம் பேசும் அறிஞரை நோக்கிச் சில கடாக்கள் கடாவ விரும்புகிறேன். அறிஞரே ! நீவிர் யாண்டிருந்து முளைத்தீர்? நுந் தந்தை ஒரு பெண்ணுடன் கூடி வாழாதொழிந்திருப்பரேல், நீவிர் இப்பொழுது இந்த ஞானம் பேசல் முடியுங்கொல்! நுந் தாய் தந்தையர் சேர்க்கை யன்றோ நமது துன்ப இருட்கட்டை அவிழ்த்து, நுமக்கு இவ்வுடலீந்து , இவ்வுலக வாழ்வுதந்து. உம்மை ஞான ஆராய்ச்சி புரியுமாறு செய்திருக்கிறது. அவரைப் போல் நீவிரும் ஒரு பெண்ணுடன் கூடி வாழ்ந்து, துன்ப இருளிலுள்ள சில உயிர் கட்கு உடலீந்து ,அவைகளை இவ்வுலகில் கொணரல் வேண்டு மன்றோ? நீவிர் மட்டும் ஞானம் பெற்று, வீடுபேறெய்துவது அறமாகுமோ? இது தன்னலமா ? பிறர் நலமா? தன்னல முடையார்க்கு ஞானம் உண்டோ? அன்பு உண்டோ? நீவிர் பெண்வாழ்வை மறுப்பது இறைவன் படைப்பு நோக்குக்கு இடையூறு செய்வதாகாதோ? புத்தர், கிறிது, முகம்மது, காந்தி போன்ற பெரியோர் உலகிற்கு வேண்டாவோ? பெண்ணுடன் வாழ்தலை வெறுத்தால் அத்தகைய பெரியோர் எப்படி உலகில் தோன்றுவர்? அறிஞரே ! பெண்ணின் வயிற்றிற் பிறந்து, ஞானம் பேசும் ஒருவர், அப்பெண்ணை மாயை – அஞ்ஞானம் – பிரவர்த்தி – என்று பேசுவது எத்தகைய நன்றியறிதல்! எத்தகைய கைம்மாறு! வெட்கம்! வெட்கம்!
அஞ்ஞானம் எது? மெய்ஞ்ஞானம் எது? பெண் தெய்வத்தை மாயையென்று கருதி அவளைத் துறப்பது அஞ்ஞானமென்றும் , பெண்ணைக் கடவுள் வடிவம் என்று உணர்ந்து அவளுடன் அன்பு வாழ்வு நடாத்துவது மெய்ஞ்ஞான மென்றும் யான் சொல் கிறேன்; இங்ஙனமே பெண்ணுடன் கூடிவாழல் நிவர்த்தி என்றும், கூடிவாழாமை பிரவர்த்தி என்றும் சொல்கிறேன். எப்படி?
திருவள்ளுவர் வழி விளக்கம்
திருவள்ளுவனார் வழியே நின்று எனது கருத்தை வெளி யிடுகிறேன். திருவள்ளுவனார், மனத்துக்கண் மாசில னாதல் அனைத்து அறம் என்றும், அழுக்காறு அவாவெகுளி இன்னாச் சொல் நான்கும் – இழுக்கா இயன்றது அறம் என்றும் அறத்தின் இயல்பு கூறியிருக்கிறார். இவ்வறநிலை முன்னருங் கூறப்பட்டது. அழுக்காறு முதலிய குற்றங்களினின்றும் நீங்கி, மன மாசு அகற்றவது எப்படி? ஏட்டுப் படிப்புக் கொண்டு எல்லாவற்றை யும் புறத்தே நீத்தால் மனமாசு அகன்றுவிடுமோ? வாய்வேதாந்தம் மிக எளிதில் பேசிவிடலா மன்றோ?
பெண்ணை விடுத்தோடல், காமக்கொடுமை
எவ்வெண்ணத்தோடு வாய்ஞானிகள் துறவு ஏற்க விரும்பு கிறார்கள்? பெண் மாயை; காமப் பொருள் என்னும் எண்ணத் தோடன்றோ? இவ்வெண்ணத்துடன் அவர்கள் காட்டுக் கோடினாலென்ன? மூக்கைப் பிடித்தாலென்ன? அவர்கள் உள்ளத்துள்ள காமநோய் ஓடிப்போகுமோ? காம எண்ணம் உள்ளமட்டும் அஃது அவர்களை மலையிலும் எரிக்கும்; நீரிலும் எரிக்கும்; காட்டிலும் எரிக்கும்; நாட்டிலும் எரிக்கும்; எங்கும் எங்கும் எரிக்கும். இவ்வெரியால் இத்துறவோர் கூடா ஒழுக்கத்திலோ வேறு எச்செயற்கைத் துறையிலோ வீழ்ந்து ஒழியினும் ஒழிவர்; வீழா தொழியினும் பெருநிலை இவர்க்குக் கூடப் போவதில்லை. என்ன? மன மாசு அகலா ஒருவர்க்கு எங்ஙனம் பெருநிலை கூடும்? இவர் மனத்திலுள்ள மாசன்றோ பெண்ணினிடத்துப் பொலிதரும் கடவுட் டன்மையை மறைத்து, அதை மாயை எனக் கருதித் துறக்கச் செய்தது? மாசு எவர்பாலது? பெண்ணின் பாலதா? இத்துறவோர் பாலதா? தம்பாலுள்ள மாசினைத் துடைக்க வழி தேடாது, அதைத் துடைக்க வந்த பெண் தெய்வத்தை – அன்பு வடிவை – மாயை என்று கருதி ஓடுவது அஞ்ஞானமாகாது, பின்னை எஞ்ஞானமாகும்?
மனமாசு அகற்றும் வழி
மனத்துக்கண் மாசிலனாதல் என்று அறநிலை கூறிய திருவள்ளுவனார், அம் மனமாசை அகற்றுதற்கு வழி கூறா தொழிந்தாரில்லை. அவ்வழி எது? பாயிரத்துள் அறன் வலி யுறுத்தி, அவ்வறநிலை பெறுதற்குப் படிப்படியே அவர் வழி கோலியிருக்கிறார். முதலாவது திருவள்ளுவனார் இல்வாழ்க்கை குறிக்கிறார்; பின்னை அதற்குரிய வாழ்க்கைத் துணைநலம் வகுக்கிறார்; அதற்கு மேல் மக்கட்பேறு புகல்கிறார்; அதினின்றும் அன்புடைமை விருந்தோம்பல் முதலிய அறத் துறைகளை முறை முறையே அணி அணியாகத் தொகுத்துச் செல்கிறார். இவ் வதிகார வைப்பின் நுட்பத்தைச் சிறிது கூர்ந்து நோக்குவோம்.
அன்புக் கடவுள் கோயில் கொள்ளல்
அழுக்காறு அவா முதலிய மாசுபடிந்த மனத்தில் தன்னல உணர்வே பெரிதும் இருக்குமன்றிப் பிறர் நலங் கருதும் அன்பு நிகழ்தல் அரிது. அன்பும் கடவுளும் ஒன்றே. அழுக்காறு முதலியன குறையக் குறையத் தன்னலப் பேயுணர்வு தேய்ந்து தேய்ந்து இறுகும். பின்னை அவ்விடத்தில் அன்புக் கடவுள் உணர்வு, வளர்ந்து வளர்ந்து, மற்ற உயிர்களிலும் அக்கடவுள் கோயில் கொண்டிருத்தலைப் புலப்படுத்தும். அதனால் நெஞ்சிலும் எவ்வுயிர்க்கும் தீங்கு நினையாது, அவ்வுயிர் நலன் நாடிப் பயன் கருதாத் தொண்டாற்ற இயல்பாக ஓருணர்வு எழும். இவ்வுணர்வு பெறவே மக்கள் பிறக்கிறார்கள். அவ்வுணர்வு பெறுவிக்கவே கடவுள் உயிர்கட்குத் தநு கரண புவன போகங் களைக் கொடுக்கிறார். இவ்வுலக வாழ்வின் நோக்கமும் இவ்வுணர்வு பெறல் வேண்டுமென்பதே.
கலைஞானத்தால் பயனின்மை
இப்பெருநிலையை மக்கள் முதல் முதல் கலைஞானத் தளவில் உணர்கிறார்கள். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது பழமொழி. ஏட்டில் படித்தது நடையில் – செயலில் – வரல் வேண்டும். எவ்வுயிர்க்கும் அன்பாயிரு என்று வாயால் சொல்வது எளிது. அதைச் செயலில் கொணர்வது அரிது. அழுக்காறு அவா முதலிய மாசுகளைத் துடைத்தால் தன்னிடத் தும் பிறரிடத்தும் விளங்கும் அன்புக் கடவுள் தோற்றமுறும் என்று பேசலாம்; எழுதலாம். இப்பெருநிலையைச் செயலில் பெற்றாலன்றோ வாழ்வின் நோக்கம் நிறைவேறும்? வெறுங் கல்வியுடன் நின்றால் மனமாசு எங்ஙனம் அகலும்? அன்பு ஊற்று எங்ஙனம் திறக்கும்?
கல்விப்பயன் இல்வாழ்க்கை என்பது
வெறுங் கல்வி அறிவோடு வளரும் ஒருத்தியும் ஒருவனும் ஒன்றி வாழப்புகுவரேல், அக்கல்வி அறிவாலாகிய பயன் பெறுவர். இல்லையேல் அவர் அப்பயன் பெறாதொழிவர். கல்விப் பயனைப் பெறுதற்குரிய நிலை ஒருத்தியும் ஒருவனும் கூடி வாழ்வதாகும். இந்நிலை கூட்ட இயற்கை, தன் நாட்டத்தைச் செலுத்தியே நிற்கிறது.
உற்ற வயதில் இருவர்க்கும் இன்ப உணர்வு தோன்றுகிறது. அஃது ஏன் தோன்றுதல் வேண்டும்? அவ்வுணர்வின் நோக்கம் என்னை? இருவரையும் சேர்க்க வேண்டுமென்பதன்றோ? இரு வரும் இயற்கை கூட்டும் வழியே சேர்ந்தால், வாழ்வின் நோக்கம் கைவரப் பெறுவர். வாய் வேதாந்தம் பேசிப் பேசிப் போலித் துறவில் அவர் தலைப்படுவரேல், வாழ்வு நோக்கம் கைவரப் பெறாது இடர்ப்பட்டொழிவர். இயற்கை வழி என்னும் ஆண்டவன் ஆணைவழி நிற்றலே அறிவுடைமை. அதற்கென்று படைப்புக் களும் அமைந்திருக்கின்றன. ஒருத்தி ஒருவனுடன் வாழ்தலும், ஒருவன் ஒருத்தியுடன் வாழ்தலும் இயற்கை; இயற்கை.
இல்வாழ்க்கையில் தன்னலக்கேடு
இயற்கை வழி ஒருத்தியும் ஒருவனும் கூடி இல்வாழ்வில் நுழைகின்றனர். நுழைவதால் வாழ்வு நோக்கம் எங்ஙனம் நிறைவேறும்? இங்கே கூர்ந்து கூர்ந்து வாழ்வின் வளர்ச்சியை நோக்குவோமாக. நாளடைவில் படிப்படியே இவளிடத்துள்ள அழுக்காறு அவா முதலிய மாசுகளும் இவனிடத்திலுள்ள அம் மாசுகளும் தேய்ந்து தேய்ந்து, அவ்வவ்விடத்தில் பொறுமை, தியாகம், இவை எல்லாவற்றிற்கும் அடிப்படையாயுள்ள அன்பு, அப் படிப்படியே கால் கொண்டு கோயில்கொள்ளும் அழகை என்னென்று சொல்வது? சுருங்கச் சொல்லின், தன்னலங் கெட்டுப் பரநலம் பெருகும் என்னலாம்.
மணத்தின் பின்னர் விளையும் மாறுதல்
மணவாழ்விற்கு முன்னர், ஒருத்தி பெரிதுந்தன்னையே நேசித்துத் தன்னலத்திலேயே நாட்டஞ்செலுத்துகிறாள்; ஒருவனும் அவ்வாறே தன்னலத்தில் தோய்ந்து கிடக்கிறான். காரணம், பரநலத்துக்குரிய அன்பு ஊற்றை, அழுக்காறு அவா வெகுளி முதலிய மாசுகள் மறைத்து மூடிக் கொண்டிருப்பதாகும். மணவாழ்விற்குப் பின்னை ஒரு பெரும் மாறுதல் இருவர்பாலும் நேர்கிறது. இவள் இவனை நேசிக்கிறாள்; இவன் இவளை நேசிக் கிறான். அந்தோ! எத்தகைய நேசம்! சொல்லலும் இயலுமோ! இவள் இவன் ஆகிறாள்; இவன் இவள் ஆகிறான். இருவரும் ஓருயிர் ஈருடலெனப் பொலிகின்றனர். இவள் நோயுற்றால் இவன் நோயுற்றதுபோல வருந்துகிறான்; இவன் நோயுற்றால் இவளும் அவ்வாறே வருந்துகிறாள். என்ன நேசம்! ஒருவரிடத்தில் முன்னே கட்டுப்பட்டுக் கிடந்த அன்பு, இப் பொழுது இருவர் பால் பரவலாயிற்று. எவ்வளவு அன்பு பரவுகிறதோ, அவ்வளவில் அழுக்காறு அவா முதலிய மாசுகளும், அம்மாசுகளாலாகுந் தன்னலமும் கெடும்.
பிள்ளைப் பேற்றால் தியாகம் பெருகல்
இருவரும் கூடி வாழும்பொழுது, இவரது அன்பின் பயனாகக் குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தைகள் இவ்விரு வருடைய உயிர் என்று கூறல் மிகையாகாது. தாயும் தந்தையும் குழந்தைகளை எப்படி நேகிக்கின்றனர் என்பதை விளக்கலும் வேண்டுமோ? இருவரிடையே பரவி முட்டி நின்ற அன்பு, இப் பொழுது மூன்றாவது உயிர்களிடைப் பரவி நிற்கிறது. அவ்வள வில் அழுக்காறு அவா முதலியன கெடுகின்றன. பிள்ளைகள் பால் அழுக்காறு முதலியன கொள்ளும் தாய் தந்தையர் அரியர். தாய் தந்தையர் தமக்கென்று ஏற்ற வாழ்வு, இப்பொழுது பிள்ளைகளுக்கென்று அர்ப்பணஞ் செய்யப்படுகிறது. அன்பர் களே! பாருங்கள்; தன்னலங் கெடுவதையும், தியாக உணர்வு பெருகுவதையும் உன்னிப் பாருங்கள். அன்பு நிகழும் இடத்தில், அழுக்காறு முதலிய மாசுகள் தலைகாட்டுமோ? இப்பொழுது தாய் தந்தையர் தம்மை மறந்து மூன்றாவது உயிர்களாகிய பிள்ளைகள் நலத்துக்கென வாழ்வோராகின்றனர். அழுக்காறு முதலியன குறைதலும் அன்பு வளர்தலும் நிவர்த்தியா பிரவர்த்தியா என்று, பெண்ணை வெறுக்கும் பெரியோர்களை நோக்கி வினவுகிறேன்.
பெண்ணை வெறுத்தவனும் கொண்டவனும்
இல்வாழ்வு ஏற்ற ஒருவன், தன்பாலுள்ள மாசுகுறைந்து, அன்பு ஊற்றுத் திறக்கப்பெற்று, அவ்வன்பு, மனைவி மக்கள் மீது பொழிவது காணும் பேறு பெறுகிறான். பெண்ணை மாயை என்று வாய் வேதாந்தம் பேசித் திரியும் ஒருவன் அன்பின் தன்மை இன்னதென்று உணராது, மாசடர்ந்த இருள்மனமுடைய வனாய் நிற்கிறான். எவன் நிவர்த்திமார்க்கத்தில் இருப்பவன்? எவன் பிரவர்த்தி மார்க்கத்தில் கிடப்பவன்? நேயர்களே! சிந்தித்து உண்மை காணுங்கள்.
மற்ற உயிர்களிடம் அன்பு பரவல்
ஒருத்தியும், ஒருவனும் இளமையில் ஏட்டில் படித்த அன்பை, இப்பொழுது வாழ்வில் காண்கின்றனர். இவ்விருவரும் கற்றவராகலான், பிள்ளைகளைப் பெற்று, அவர்கள் நலனுக்குப் பயன் கருதாத் தொண்டு செய்துவரும் வேளையில், இவ்வுயிர் கட்கும் மற்ற உயிர்கட்கும் என்ன வேற்றுமை? இவர்கட்குள்ள பசி- பிணி- முதலியன மற்றவர்கட்கும் உண்டு. இவர்கள் நம் வயிற்றிற் பிறந்தமையான், இவர்களை நாம் பாதுகாக்கிறோம். அங்ஙனமே மற்றவர்களும் தங்கள் தங்கள் மக்களை வளர்த்து வருகிறார்கள். இஃது ஆண்டவன் கோலியுள்ள ஒழுங்கு முறை. உதவியின்றி வருந்தும் உயிர்கள் என்செய்யும்? அவைகட்கும் நாம் உதவுதல் வேண்டும் என்னும் எண்ணம் அடிக்கடி அவர்தம் உள்ளத்தில் தோன்றும். இப் பரோபகார எண்ணம் முதிர முதிர அழுக்காறு அவா முதலியன கெடும். அவை கெடக்கெட அவர்தம் அன்பு, மற்ற உயர்திணை உயிர்களிடத்தும் பரவத்தொடங்கும்; பின்னை அஃறிணை உயிர்களிடத்தும் பரவும். இப் பரவல்முறையை விரித்துக் கூற வேண்டுவதில்லை. பரோபகார எண்ணம், மனமாசு களைக் கழுவி, மக்களைத் தூய்மைப்படுத்தி, எவ்வுயிரிலும் நிறைந்துள்ள அன்புக் கடவுளைக் காட்டும். இம் முழுநிலை அடைந்தோர் முழுநிவர்த்தி பெறுவர். இந்நிலைக்கு இல்வாழ்வும் பிள்ளைப் பேறும் கருவியாயிருத்தல் கருதற்பாலது. பிள்ளைப் பேற்றிற்குப் பின்னரே, மக்களிடத்து அன்பு உளமும் – பரோப கார சிந்தையும் – திறக்கப்படுதலும் கவனிக்கத்தக்கது. ஒருத்தியும் ஒருவனும் இளமையில் கற்ற எவ்வுயிர்க்கும் அன்பாயிரு என்னுங் கல்வியை, இப்பொழுது அவர் தம் வாழ்வில் காண் கிறார். எவ்வுயிர்க்கும் அன்பாயிருத்தலாவது, மனமாசுகளை முற்றுங்களைந்த ஒரு நிலை என்க. இஃதன்றோ மெய்ஞ்ஞானம்? நிவர்த்தி மார்க்கம்? திருவள்ளுவனார் உலகிற்கு அறிவறுத்தியது இச்செந்நெறி என்க.
திருவள்ளுவனார், மனத்துக்கண் மாசில னாதல் அனைத் தறம் என்றும், அழுக்காறு அவாவெகுளி இன்னாச் சொல் நான்கும் – இழுக்கா இயன்றது அறம் என்றும் கூறி, அழுக்காறு அவா முதலிய மனமாசுகளை அகற்றும் வழி கோல்வான், இல் வாழ்க்கை, வாழ்க்கைத் துணை நலம், மக்கட்பேறு, அன்புடைமை, விருந்தோம்பல் முதலிய அதிகாரங்களை முறை முறையே அமைத்தனர். இம்முறையில் அழுக்காறு முதலியன தேய்தலும், அன்பு முதலியன வளர்தலும் அமைந்திருத்தல் காண்க.
அன்புடைமையும் விருந்தோம்பலும்
மக்கட் பேற்றிற்குப் பக்கத்தில் அன்புடைமையையும் விருந்தோம்பலையும் பொருத்தியிருத்தல் கருதற்பாற்று. ஒருத்தியும் ஒருவனும் கூடி வாழ்வு நடாத்தி, மக்களை ஈன்ற பின்னரே, அன்னார் அன்பின் தன்மை இன்னதென்று அநுபவத்தில் உணர்வோராகின்றனர். அந்நிலையில் அவர்தம் அன்பு ஊற்றும் திறக்கிறது. அவர்க்கு அப்பொழுது அன்பு உடை மையாகிறது. பிள்ளையில்லா ஒருவன் அடா செயல் நிகழ்த்தும் போது, அவனை நோக்கி, பிள்ளையில்லாப் பாவி என்று உலகோர் சொல்வது வழக்கம். அதன் பொருள் என்னை? அன்பில்லா தவன் என்பது. பிள்ளைப் பேற்றிற்கும் அன்பொழுக்கத்துக்கும் உள்ள தொடர்பு, வாழ்வில் அநுபவத்தில் உணரத்தக்கது.
அன்புடைமைக்குப் பின்னை விருந்தோம்பல் வைக்கப் பட்டிருக்கிறது. பிள்ளைப்பேற்றிற்குப் பின் எழும் அன்பு, தொடர்புடைய அப்பிள்ளையளவில் நில்லாது, தொடர்பில்லா உயிர்களிடத்தும் பாய்தலை விருந்தோம்பல் தெரிவிக்கிறது. இதுபற்றி முன்னருஞ் சுருங்கச் சொல்லியிருக்கிறேன்.
புதிதாக வருவோரே விருந்தினராவர். விருந்து என்னுஞ் சொல்லிற்குப் புதுமை என்பது பொருள். உற்றார் உறவினர் நண்பர் முதலியோர் விருந்தினராகார்; முன்பின் பழக்கமின்றி வருவோரே விருந்தினராவர். அவர்க்கு உதவுதல் தொடர்பில்லா மற்ற உயிர்கட்கு உதவுதலாகும். இக்காரணம் பற்றியே விருந் தோம்பல் அன்புடைமைக்குப் பின்னே பொலிகிறது. அன்பில்லா இடத்தில் விருந்தோம்பல் ஏது?
மற்றைய மற்றைய அதிகாரங்களெல்லாம் ஒருத்தியும் ஒருவனும் கூடி வாழும் வாழ்வில் கொள்ளத்தக்க முறைகளையும் தள்ளத்தக்க முறைகளையும் வகை வகையாக விரித்துக் கூறுவனவாம்.
இப்பொழுது நீத்தல் எது? பெண்ணை மாயை என்று இல்வாழ்வை விடுத்து ஓடுவதா அல்லது இல்வாழ்வை ஏற்று அழுக்காறு முதலிவற்றை நீக்குவதா என்று உன்னுதல் வேண்டும். இல்வாழ்வு, அழுக்காறு அவா முதலிய மாசுகளை நிவர்த்தி செய்யும் மார்க்கம் என்பது ஒல்லும்வகை முன்னே விளக்கிக் காட்டப்பட்டது. திருவள்ளுவனார் கோலிய வழியும் இதுவே என்பதும் விளக்கப்பட்டது. ஆதலால், பெண்ணை மாயை என்று விடுத்து ஓடல், நீத்தல் ஆகாதென்றும், ஓடுவது மாயையில் தோய்ந்து கிடக்கும் பிரவர்த்தி மார்க்கமென்றும் உணர்க.
திருவள்ளுவனார் பாயிரத்தில், நீத்தார் பெருமை என்றோர் அதிகாரமும், அறத்துப் பாலில் துறவு என்றோர் அதிகாரமும் அருளி யிருத்தல் என்னை என்று சிலர் வினவலாம். இவ்விரண்ட திகாரமும் எனது கருத்துக்கு அரண் செய்வனவே. மன மாசு களை அகற்றுதற்கு இல்வாழ்க்கை முதலிய முறைகளான் வழி காட்டிய ஒருவர், அதற்கு மாறுபடுமாறு மற்ற இடங்களில் வேறு வழி காட்டுவரோ? காட்டார். நீத்தல் துறவு என்னுஞ் சொற்களைக் கொண்டு, அவை பெண்ணை வெறுக்கும் போலித் துறவைக் குறிப்பன என்று, திருவள்ளுவனாரை மற்றவர் தம்வழி ஈர்க்க முயலலாகாது. பெண்ணை வெறுத்தல் துறவெனக் கொள்வோர் கொள்க. அதைப்பற்றிய கவலை எனக்குச் சிறிதும் இல்லை. திருவள்ளுவனாரை அத் துறவோர் தமக்குத் துணை கோடல் குறித்து வருந்துகிறேன். இயற்கை வாழ்வு நடாத்தி, இயற்கை அறவழியே உய்யும் வழி என்று உணர்த்திய ஒருவர் மீது ஏன் வீண்பழி சுமத்தல் வேண்டும்?
நீத்தார் பெருமை, துறவு என்னும் இரண்டதிகாரங் களில் யாண்டாயினும் பெண்ணை மாயை என்று துறக்குமாறு திருவள்ளுவனார் மொழிந்திருக்கிறாரா என்பது ஆராயற் பாலது. அவ்விரண்டும் வருமாறு:-
நீத்தார் பெருமை
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவற் றுணிவு.
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு.
உரனென்னும் தோட்டியான் ஒரைந்துங் காப்பான்
வரனென்னும் வைப்புக்கோர் வித்து.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செய்கரிய செய்கலா தார்.
சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்த லரிது.
அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுக லான்.
துறவு
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல.
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு.
இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை
மயலாகு மற்றும் பெயர்த்து.
மற்றுந் தொடர்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க் குடம்பு மிகை.
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த வுலகம் புகும்.
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று
நிலையாமை காணப் படும்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
நீத்தார் பெருமை பாயிரத்திலிருப்பது; துறவு அறத்துப் பாலிலிருப்பது. இப்பாக்களின் பொருள் நுட்பங்களை ஈண்டு ஆராய வேண்டுவதில்லை. திரண்ட கருத்தைமட்டும் எடுத்துக் கொள்வோம். புலன்கள் தீயவழியில் உழலாதவாறு அவற்றைக் காத்தல் வேண்டுமென்றும், அவை தீய வழியில் உழல முனைந் தெழுமேல் அவற்றின் எழுச்சியை அடல் வேண்டுமென்றும், யான் எனது என்னுஞ் செருக்கை அறுத்தல் வேண்டுமென்றும், அகப்புறப் பற்றைக் களைதல் வேண்டுமென்றும் இவ்விரண்டதி காரமும் அறிவுறுத்துகின்றன. இவற்றின் கருத்து, பெண்ணைத் துறத்தல் என்று எங்ஙனம் கூறுவது?
உண்மைத் துறவு
புலன்கள் நெறியல்லா நெறியில் சென்று உழலும்போதும் யான் எனது என்னுஞ் செருக்கு எழும்போதும் – அகப்புறப்பற்று உறுத்தும்போதும் – மக்கள், அழுக்காறு அவா வெகுளி கொலை களவு கள் காமம் பொய் முதலிய பேய்கட்கு இரையாகிறார்கள். இவைகட்கு இரையாகாதவாறு மக்கள் தங்களைக் காத்துச் செற்நெறி நிற்றல் வேண்டும். இதற்கு அழுக்காறு முதலிய வற்றிற்குப் பிறப்பிடமாயுள்ள புலன்களின் தீநெறியோட்டத்தை யும், யான் எனது என்னுஞ் செருக்கையும், அகப்புறப் பற்றையும் தடுத்து, இவைகளினின்றும் நீத்தல் அதாவது துறத்தல் வேண்டும். எனவே, துறத்தலாவது அழுக்காறு முதலியவற்றினின்றும் நீங்குதலாகும். இதுவே துறவென்பது. சிறிது விளக்கிக் கூறின், அழுக்காறு, அவா, வெகுளி, கொலை, களவு, கள், காமம், பொய் முதலியவற்றை விடுவது துறவு என்று கூறலாம்.
துறவைப் பற்றிய ஐயம்
பெண்ணைத் துறக்குமாறு பெரியோர் நூல்களிற் சில வலி யுறுத்திக் கூறுவதன் பொருளென்னை என்று சிலர் கேட்கலாம். பெண்ணைத் துறக்குமாறு பெரியோர் எவரும் கூறினாரில்லை. பெண்ணாசையைத் துறக்குமாறு பெரியோர் நூல்கள் நுவல்வது உண்மை. பெண்ணைத் துறத்தல் என்பதற்கும், பெண்ணாசை யைத் துறத்தல் என்பதற்கும், வேற்றுமை உண்டு. பெண்ணாசை எவரிடத்திருப்பது? அது பெண்ணைக் காமுறும் ஒருவன் உள்ளத்திருப்பது. அவ்வாசையைத் துறக்க வேண்டுவது அவன் கடமை. அவ்வாசையைத் துறவாது, பெண்ணை நீத்துக் காட்டுக் கோடி, மூக்கைப் பிடித்தல் எங்ஙனந் துறவாகும் ? பெண்ணாசை யைத் துறக்கும் ஒருவனுக்குப் பெண்ணினிடத்துள்ள கடவுட்டன்மை இனிது புலனாகும்.
பெண்ணுடன் வாழலே ஆசைதுறத்தல்
ஆசை முதலிய குற்றங்கள் மனமாசு என்று மேலே விளக்கி வந்ததை நேயர்கள் கருத்திலிருத்தல் வேண்டும். மனமாசு நீக்கத்துக்கு இல்வாழ்வு உறுகருவி என்பது, திருவள்ளுவனார் கருத்தையொட்டி, மேலே விளக்கப்பட்டது. மாசு நீக்கத்துக்குக் கருவியாயுள்ள பெண்ணையே துறத்தல் – நீத்தல் ஆகாது. அம் மாசைத் தொலைக்கவல்ல பெண்ணைத் துறப்பது மாசைச் செவ்வனே பதிய வைப்பதாகும். ஆதலால், ஆசை முதலிய மாசு களைத் துடைத்துப் பெருநிலை எய்தப் பெண்ணுடன் வாழ்தலே அறிவுடைமை.
நீத்தார் பெருமை எது?
நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்திலுள்ள இறுதிப் பாட்டின் கருத்தை ஊன்றி நோக்குவோமாக. நீத்தார் பெருமை யாது? எவ்வுயிரையுங் தம்முயிரெனக் கொண்டு, அவ்வுயிர்க்குச் செந்தண்மை பூண்டொழுகுவது நீத்தார் பெருமை. எவ்வுயிரை யுந்தன்னுயிர்போல் கொண்டு ஒருவன் ஒழுகுதற்குத் தடையா யிருப்பன யாவை? அவை அழுக்காறு அவா வெகுளி முதலியன. இக்குற்ற நீக்கத்துக்கு உறுகருவி இல்வாழ்க்கை என்பதை அடிக்கடி ஓதவேண்டுவதில்லை. இல்வாழ்க்கையின் முடிந்த நிலை யாது? மனமாசு முற்றும் அகன்று முழு அன்புநிலை பெறுவது. இப்பெருநிலையை, அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ் வுயிர்க்குஞ் – செந்தண்மை பூண்டொழுக லான் என்னும் குறள் அறிவிக்கிறது. எனவே, நீத்தார் எவரெனில், அவர், பெண்ணை மாயை என்று கருதி ஓடாது, மனத்திலுள்ள மாயையை ஓட்ட, பெண் தெய்வத் துணைபெற்று வாழ்ந்து, அன்புநிலை அடைந்து, எவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகுவோ ரென்க.
பெண்வழிச் சேறல்
பெண்ணைத் துறத்தலே துறவு என்னுங் கொள்கை யுடையார், திருவள்ளுவனாரைத் தம் பக்கத் துணையாக்க வேண்டித் திருக்குறளிலுள்ள பெண்வழிச் சேறல் என்னும் அதிகாரத்தைத் தமது வைப்பென எடுத்துக்காட்டி, இதற்கென் சொல்கிறீர் என்று கடாவுகிறார், வாழ்க்கைத் துணை நலன் வகுத்த திருவள்ளுவனார் – இன்பப்பால் இனிது ஓதிய திருவள்ளுவனார் – பெண்வழிச் சேறல் என்று பொதுப்படக் கூறார். பெண் வழிச்சேறல் என்னும் அதிகார வைப்பு முறையை நோக்குதல் வேண்டும். பெண்வழிச் சேறல் என்னும் அதி காரத்தின் அண்டையில் வரைவின் மகளிர் என்னும் அதிகாரம் வைக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, கள் சூது முதலிய அதிகாரங்கள் நிற்கின்றன. தெய்வப் பெண்ணைக் கொணர்ந்து இக்குழுவிலா திருவள்ளுவனார் செருகுவார்?
காம வேட்கை மேலீட்டான் விலைமகளிர் ஏவல் செய்யும் ஆடவர் கூட்டமும் உண்டு. அச்சிறுமைக் கூட்டத்தின் இழிவைப் பெண்வழிச் சேறல் என்னும் அதிகார வாயிலாக ஆசிரியர் விளக்கியிருக்கிறார். பெண்வழிச் சேறல் என்னும் அதிகாரம் காமக் கேட்டைத் தெரிப்பதென்க. வேறு வழியில் அவ்வதிகாரக் கருத்தைக் கொள்வது திருக்குறள் நோக்கத்தை இடர்ப்படுத்துவ தாகும். இவ்வாறே மற்ற இடங்களிலும் முன் பின் பார்த்துத் திருவள்ளுவனார் உட்கிடக்கையைத் தெளிய முயல்க.
திருவள்ளுவரும் துறவும்
திருவள்ளுவனார் இல்வாழ்க்கை அதிகாரத்தில் இல் வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் – நல்லாற்றின் நின்ற துணை என்றும், துறந்தார்க்கும்- துவ்வா தவர்க்கும் இறந் தார்க்கும் -இல்வாழ்வான் என்பான் துணை என்றும் அருளிய பாக்களிற் போந்துள்ள இயல்புடைய மூவர், துறந்தார் யாவர் என்னுங் கேள்வி எழலாம்.
பிறப்பில் சாதி வேற்றுமை இல்லை என்பது
திருவள்ளுவனார் காலத்தில் நால்வகை ஆச்சிரமம் வழக்கி லிருந்தது; நால்வகை வருணப் பாகுபாடும் இருந்தது. வருணப் பாகுபாடு பிறப்பில் இருத்தல் கூடாது என்று, திரு வள்ளுவனார் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா- செய்தொழில் வேற்றுமை யான் என்னுங் குறளால் மறுத்தனர். தொழில் முறை பற்றி நால்வகை இனம் எங்கணும் உண்டு. நமது நாட்டில் பிறப்பை ஒட்டி அவ்வின வேற்றுமை இடைக்காலத்தில் புகுத்தப் பட்டது. வேத காலத்தில் பிறப்பை யொட்டி நால்வகை வருணம் இயங்கவில்லை. இடைக் காலத்திலேயே அவ்வேற்றுமை இடம் பெற்றது. அவ்வேற்றுமையைப் பிறப்பில் கொள்ளலாகா தென்று திருவள்ளுவனார் மறுத்துரைத்தார்.
ஆச்சிரமம்
ஆச்சிரம ஒழுக்கம் மக்கள் வாழ்விற்குரியது. அம்முறை சில இடங்களில் மூன்றாகவும், சில இடங்களில் இரண்டாகவும் தொகுக்கப்பட்டிருக்கிறது. நமது நாட்டில் அது நான்காக வகுக்கப்பட்டிருக்கிறது.
மாணாக்கனாயிருந்து கல்வி கற்றல், பின்னை அக்கல்விப் பயனைப் பெற இல்வாழ்க்கை ஏற்றல், அவ்வில்வாழ்கை யினின்றும் அன்பும் அருளும் விளங்கப் பெற்று உயிர்கட்குத் தொண்டு செய்யத் தம்மைப் பண்படுத்தல், அதன் பயனாக எவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகல் ஆகிய இவை ஒவ்வொருவர் வாழ்விலும் அரும்பி மலர்ந்து காய்த்துக் கனிய வேண்டுவன. மனைவியோடு தொடக்கத்தில் வாழும் ஒருவன், தன் வாழ்விற்குத் தொழில் பல செய்து பொருளுடையவனா கிறான். அவன், ஏழை மாணாக்கர்க்கும், தொண்டிற்குத் தம்மைப் பண்படுத்திக் கொள்ளும் வாய்ப்புப் பெறாதார்க்கும், எல்லாங் கடவுள் மயம் என்று தொண்டு செய்வோர்க்கும், உண்டி முதலியன உதவுதல் இயல்பு. இம்மூவர்க்கும் இல்வாழ்வின் முதற்படியில் நிற்பவன் துணைபுரியக் கடமைப்பட்டிருக்கிறான். ஈண்டுத் துறந்தார் என்போர் பெண்ணைத் துறந்தவரல்லர்; காமம் வெகுளி முதலியவற்றை மறந்தவரென்க. பெண்ணை வெறுத்தோடும் பூரியரை ஈண்டுத் திருவள்ளுவனார் மூவர் என்றும், துறந்தார் என்றும் குறிப்பிட்டாரில்லை.
வாழ்வை நான்கு கூறிட்டு ஆச்சிரமம் வகுத்த அறிஞரும் இல்வாழ்வை ஒதுக்கினாரில்லை. பிரமசரியம், கிருஹதம், வானப்பிரதம், சந்நியாசம் என்னும் நான்கனுள் கிருஹதமும் ஒன்றாயிருக்கிறது. பிரமசரியத்தில் படித்துணர்வதை அனுபவத் திற் பெறுதற்குரிய ஆச்சிரமம் கிருஹதம். அக்கிருதத்தின் பயன் வானப்பிரதமும் சந்தியாசமுமாகும். கிருஹதத்தின் முழுமை (Perfection) சந்நியாசமாகும். சந்நியாசமென்பது கிருஹ தத்தினின்றும் பிரிந்து வேறுபட்டு நிற்பதன்று. சந்நியாசமாவது முற்றும் அழுக்காறு முதலிய மாசுகளினின்றும் நீங்கி, எவ் வுயிரிடத்தும் அன்புக் கடவுளைக் கண்டு, அவ்வுயிர் நலன் நாடிப் பயன் கருதாத் தொண்டு செய்வது. இப்பெரு நிலைக்குக் காரண மாயுள்ள கிருஹதத்தை வெறுக்குமாறு ஆச்சிரமக்காரருங் கூறவில்லை. துறவோர் என்று சொல்லப்படும் பெருமுனிவரர் அனைவரும் பெண்ணுடன் வாழ்ந்த பெரியோர் என்பது எவர்க்குந் தெரியும்.
தவமென்பது பெண்ணைத் துறப்பதன்று
‘தவம் என்று ஒரு நிலை சொல்லப்படுகின்றதே அதென்ன? என்னும் ஐயமும் ஈண்டுச் சிலர்க்கு நிகழலாம். திருக்குறளில் தவம் என்னும் ஓர் அதிகாரம் இருக்கிறது. தவம் என்பதும் அறநிலையின் ஓர் உறுப்பு. தவம் என்பது என்னை? பெண்ணை விடுத்துச் செல்வதா? அன்று.
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமைஅற்றே தவத்திற்கு உரு.
என்றார் திருவள்ளுவனார். எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமையும், பிறர் தீங்கு செய்யும்போது அதனால் விளையும் துன்பம் பொறுத்து அவர்க்குங்கேடு சூழாது நலன் புரிவதும் தவநிலையாகும்.
திருவள்ளுவர் மறுப்பு
போலித் துறவு திருவள்ளுவனார் காலத்திலேயே உலகில் நிலவலாயிற்று. அதன் வரலாற்றைப் பின்னே கூறுவன். அப் போலித் துறவைத் திருவள்ளுவனார் மிக உரமாக மறுத்தி ருக்கிறார். அம்மறுப்புகைளிற் சில வருமாறு :-
வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம்புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று.
தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்துவேட்டுவன் புட்சிமிழ்த் தற்று.
பற்றற்றே மென்பார் படிற்றொழுக்க மெற்றெற்றென்றேதம் பலவுந் தரும்.
நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்துவாழ்வாரின் வன்கணா ரில்.
மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்.
போலியும் உண்மையும்
பெண்ணை வெறுத்தல் துறவு என்னுங்கொள்கை எப்பொழுது எப்படி உலகிடை நுழைந்தது? எந்நாளில் எவ்வாறு ஆக்கம் பெற்றது? திகம்பர ஜைனம் தோன்றிய நாளில் பெண்ணை வெறுக்குந் துறவு உலகிடை நுழைந்தது. புத்தர் காலத்துக்குச் சில நூற்றாண்டுகட்குப் பின்னர்ப் போலித் துறவு உலகிடை ஆக்கம் பெற்றது.
திகம்பர ஜைனத்தைப் பற்றியும் பெண்மையைப் பற்றியும் பெரிய புராணத்தில் திருஞான சம்பந்த சுவாமிகள் புராணக் குறிப்புரையில் என் கருத்தை விளக்கியுள்ளேன். அதைப் பார்க்க.
போலித் துறவின் நுழைவு
புத்தர் பெருமான் தமது அறத்தை உலகிற்கு அறிவுறுத்தத் திருவுளம் பற்றியபோது, புகைத் தொடர்வண்டி – மோட்டார் வண்டி – பத்திரிகைகள் – போன்ற சாதனங்கள் இல்லை. புத்தர் பெருமான் தமது சீரிய அறத்தை உலக முழுவதும் பரப்பும் பொருட்டுச் சில நன்மக்களைத் தொண்டர்களாகச் சேர்த்தனர். அவர்களுள் பெண் ஆண் என்னும் இருபாலாரும் இருந்தனர். அந்நன்மக்கள் காடு மலை கடந்து, பல இடங்கட்குச் செல்ல வேண்டியிருந்தமையானும், சில இடங்களில் தங்கவேண்டி யிருந்தமையானும், வேறு பல காரணம் பற்றியும் அவர்கள் இல்வாழ்வு ஏலாது தன்னந்த தனியராய்ப் புறப்பட்டார்கள். தொண்டில் தலைப்படுவோர் இல்வாழ்க்கை ஏலாதிருத்தல் வேண்டும் என்ற விதி அன்று பிறந்ததோ பிறக்கவில்லையோ தெரியவில்லை. அவ்விதி பிறந்ததாகவே வைத்துக் கொள்வோம்; வைத்துக் கொள்ளினும் அது கால நிலைக்கேற்றவாறு நிறுவப் பட்டதென்று கோடல் அறிவுடைமை. கால நிலைக்கேற்றவாறு சில காரணம் பற்றிச் செய்யப்படும் விதிகளை என்றும் நிலவ வைத்துப் பிடிவாதங்காட்டுவது அறிவுடைமையாகாது. அத் தகைய மக்கள் வாழும் நாடும் முன்னேற்றம் அடைதல் அரிது. நமது நாடு இதற்கு எடுத்துக்காட்டாக நிற்கிறது.
மகாத்மா காந்தியும் இல்லறமும்
மகாத்மா காந்தி, இந்தியர் இல்வாழ்வு ஏலாதிருப்பது நலம் என்று அறிவுறுத்தினர். மகாத்மா காந்தி ஏன் இவ்வாறு அறிவுறுத்தினர்?இப்போதனைக்கு இப்போது அவசியமென்ன ? என்று ஆராயாது, அவர் போதனையை நிலைபேறாக உள்ள இயற்கை அறமாகக் கோடல் நியாயமாகாது. மகாத்மா காந்தி என்றுமே இல்வாழ்வு வேண்டா என்று சொற்றாரில்லை. நாடு, உரிமை யிழந்து, செல்வ நிலை குலைந்து, வறுமை மேலீட்டான் பசியானும் பிணியானும் அலக்கணுற்ற வேளையில், உயிர் களைப் பெருக்கலால், அவைகள் இன்னலுறு மாதலால், நாடு உரிமை பெறும்வரை, இல்வாழ்வு வேண்டா என்று அடிகள் அறிவுறுத்தினர். இம்செம்மொழி உயிர்கள் மீதுள்ள இரக்கத் தினின்றும் எழுந்ததாகும்.
காலமும் விதியும்
காலநிலை நாட்டுநிலை முதலியவற்றை நோக்கிப் பெரியோர் சொல்லும் மொழிகளையும், கோலும் முறைகளை யும் என்றும் நிலைபேறாகக் கொள்வதால் வாழ்வில் பல திற இடர்கள் நிகழ்ந்துவிடும். சிற்சில சமயங்களில் நோயாளர்க்குப் பத்தியம் விதிப்பது போல, இயற்கைக்கு மாறுபடுவது போல் தோன்றத்தக்க சில விதிகள் அறிஞரால் நிறுவப் பெறுதல் உண்டு. நிலைமை மாறி ஒழுங்குபெற்றதும், அவ்விதிகளை விலக்கிவிடல் நல்லது.
அங்ஙனே பௌத்த தர்மத்தைப் பரப்ப வேண்டுமென்ற பேராவலால், புத்தர் பெருமான், காலநிலை – நாட்டுநிலை- பிற நிலை முதலியவற்றை உன்னித் தொண்டர்களை இல்வாழ்வு ஏலாதிருக்குமாறு அறிவுறுத்தியிருக்கலாம். இப்பொழுது நிலை மைகள் மாறுபட்டிருக்கின்றன. இல்வாழ்வு ஏற்றும் பௌத்த தர்மத்தைப் போதிக்கலாம். இந்நாளில் பலதிற வண்டி, தபால், தந்தி, அச்சு, பத்திரிகை முதலிய பல சாதனங்கள் ஏற்பட்டிருக் கின்றன. ஆகவே, அறத்தைப் பரப்பும் முறைகளையும் மாற்றிக் கொள்ளலாம்.
தொண்டர் உள்ளம்
மற்றுமொன்றை ஈண்டுக் கூற விழைகிறேன். அது தனித்த வாழ்க்கையைப் பற்றியது. இல்வாழ்வின்றித் தனித்து வாழலும் இயற்கைக்கு முரண்பாடென்று முன்னே யான் வலியுறுத்தியதை ஈண்டு நினைவூட்டிக் கொள்ளுமாறு நேயர்களை வேண்டு கிறேன். அறத்தொண்டிற்கெனப் புறப்பட்ட நன்மக்களும், தனிமை வாழ்வால் உடல்வளம் குலைந்து வருந்தார்களோ எனில், வருந்தார்கள் என்று இங்கே இயம்புகிறேன். அறத்தொண்டிற் கெனப் புறப்படும் நன்மக்கள் உள்ளத்தில் அழுக்காறு – அவா – வெகுளி முதலிய பேய்கள் உலவுமா? அல்லது அன்பு – அருள் – தயை என்னும் தெய்வம் நிலவுமா? என்று கேட்கிறேன். பேயுலவும் உள்ளமுடையார் அறத் தொண்டிற்கு அருகராகார். அருட்டெய்வம் நிலவும் உள்ள முடையாரே அறத்தொண்டிற்கு உரியராவர்.
தொண்டும் இல்வாழ்வும்
தொண்டு என்பதன் பொருள் என்னை? வளைவு- தாழ்வு என்பது பொருள். அழுக்காறு அவா முதலியவற்றிற்கு மூலமாய், யான் எனது என்று நிமிர்ந்து நிற்கும் முனைப்புக் கெட அதாவது வளைய, அன்பிலும் அருளிலும் தாழ்வு பெற்றுப் பிற உயிர் நலன் நாடிப் பயன் கருதாது செய்யும் அருட்பணியே தொண்டாகும். இத்தொண்டுடையார் உள்ளத்தில், அருள் – இரக்கம் – தயை – என்னும் பரோபகாரத் தெய்வம் இருத்தலால், அவர்தம் உடலுக்கு எவ்விதக் கேடும்நேராது. தொண்டு செய்யும் போது அவர் உள்ளத்தெழும் மகிழ்ச்சி அவர் உடலைச் செவ்வனே ஓம்பும். இந்நிலையை இல்வாழ்வுங் கூட்டும்.
இப்பெரியோர் உள்ளம் தொண்டில் படிவதால் இவர் உடல்நலங் குலைவதில்லை. இஃது ஏற்றுக் கொள்ளற்பாலதே. மற்றுமொன்று மேலே வலியுறுத்தப்பட்டது. அஃதென்னை? அஃது உயிர்களின் துன்ப நீக்கத்துக்கு இல்வாழ்வு நடாத்த வேண்டுமென்பது.
பெரியோர் தொண்டு உளங்கொண்டு, இல்வாழ்வு ஏலா தொழிவரேல், இவர்வழித் தோன்ற வேண்டிய உயிர்களின் கதி என்ன ஆகும்? அவ்வுயிர்களின் தோற்றத்துக்குத் துணைபுரியாத பாவம் பெரியோரைச் சூழுமன்றோ? இவர் போன்ற பெரியோர் உலகிடைத் தோன்றாமைக்கும் இவர் காரணமாக நிற்கிறா ரல்லரோ? இவைகட்கென் சொல்வது? இல்வாழ்வு ஏலாது தொண்டிற் புகும் பெரியோர்வழி, உயிர்கள் தோற்ற முறா முறையில் இயற்கை இவர்க்குத் துணைபுரியும். இவர்வழித் தோற்றமுறும் உயிர்களும் நியதியில் அமைந்திரா. மலரும் எல்லாப் பூக்களும் காய்க்கின்றனவோ? இஃது இயற்கையின் நியதி.
இவ்வியல்புடன் உலகில் தோன்றும் பெரியோர் தொகையை விரல் வைத்து எண்ணிவிடலாம். இத்தகையோர் உலகில் கோடி யில் ஒருவர் இருவர் பிறத்தலும் அரிது. கிறிது, மணிமேகலை முதலியோர் இல்வாழ்வு ஏலாது அறத் தொண்டாற்றியவர். இவர் போன்றார் மிக அரியர். இவர் போன்றார் வாழ்வை எடுத்துக்காட்டிப் பெண்ணை வெறுக்கும் போலித் துறவை நிலைநாட்டப் புகுவது அறியாமை.
இப்பெரியோரில், எவராவது பெண் ஆணையாதல் ஆண் பெண்ணையாதல் வெறுத்தனரா என்பது சிந்திக்கப்படல் வேண்டும். இவர் வாழ்வில் ஒருவரை ஒருவர் மாயை என்று வெறுத்தது இல்லை. வெறுப்புள்ள இடத்தில் அன்பேது? அருளேது? தொண்டேது?
புத்தர் பெருமான் காலத்தில், அறத்தொண்டிற்கெனப் புறப்பட்டவர், அறத்தை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத் தால் விழுங்கப்பட்ட பெரியோராதலால், அவர்தம் உள்ளம், வேறு வழியில் செல்லாது, தொண்டிலேயே நிலைத்து நின்றது. உயிர்களிடத்து இரக்கஞ் செலுத்தும் உள்ளத்தில் எம்மாசு நிலவும்? எம்மாசு புகும்? இத்தகையோரையும் உலகம் அந்நாளில் அறவோர், துறவோர், நீத்தார், அந்தணர் என்று அழைத்தது.
புறனடை
உயிர்களிடத்து இயல்பாக இரக்கந் தோன்றப் பெறாதார் உள்ளத்துள்ள யான் எனது என்னுஞ் செருக்கை உடைத் தெரிவது இல்வாழ்க்கை. இல்வாழ்க்கையே உலகில் இயற்கை வாழ்வாக அமைந்திருக்கிறது. ஒருவர் இருவர் இயல்பாக ஒரு பெரும்நிலை பெறுவதை உலகிற்குரியதொன்றாகக் கொள்ளாது, அதைப் புறனடையாகவே கொள்ளல் வேண்டும். இல்வாழ்வி லிருந்து, மாசு கழியப் பெற்ற அனைவரும் அறவோர் – துறவோர்- நீத்தார் – அந்தணராகிறார்.
தொண்டு நிலை மாற்றம்
பல காரணம் பற்றி இல்வாழ்விற் புகாது, அறத்தொண்டுக் கெனப் புறப்பட்ட பௌத்தப் பெரியோரின் அகநிலையை உணராது, அவரது தனிமை வாழ்வின் மீதும் மற்றப் புறக் கோலங்களின் மீதும் பெரிதும் சமய உலகம் தன் கருத்தைச் செலுத்தியது. பௌத்தப் பெரியோரின் தனிமை வாழ்வும் புறக் கோலங்களும் நாளடைவில் மற்றச் சமய குருமாரிடத்திலும் குடியேறின. அற்றைஞான்று சமய குருமாரென வெளிப்போந்த ஆண்பாலர் பெண் பாலரை வெறுத்து நீப்பதும் பெண்பாலர் ஆண்பாலரை வெறுத்து நீப்பதும் மிகச் சிறப்பாகக் கருதப் பட்டன. அன்று நுழைந்த இல்வழக்கம் இன்றும் வீழ்ந்துபடாம லிருக்கிறது. இன்னும் மடாதிபதிகளென்போர் தமக்கென வாழ்க்கைத் துணை ஏற்க ஒருப்படாது, வாழ்வு நடாத்தல் கண் கூடு. இம்மடாதிபதிகள் எத்துணைக் கூடாஒழுக்கச் சேற்றில் வீழ்ந்து புரண்டாலும் வெளிப்படையாக (ஒருவன் ஒருத்தியை அல்லது ஒருத்தி ஒருவனை) மணஞ் செய்து கொள்வதில்லை. ஆண் பெண்ணுடன் வாழாமையும், பெண் ஆணுடன் வாழாமை யும் கடவுள் நெறிக்கு ஓர் அறிகுறி என்னும் மூடக் கொள்கை பல இடங்களில் வேரூன்றி நிலைத்துவிட்டது.
பெண்ணை வெறுக்கும் போலித் துறவு
பின்னைப் பெண்ணுரிமை குலைக்கப்பட்ட இடங்களில், மூடக்கொள்கை ஆணுலகில் மட்டும் நிலவலாயிற்று. அந்நாளில் நமது நாட்டில் எழுதப் பெற்ற விதி நூல்களில் பெண்பால் சந்நியாசம் பெறுதல் கூடாது என்னுங் கட்டுப்பாடு நிறுவப் பெற்றது. அன்று தொட்டுப் பெண்ணை வெறுத்து நீத்தல், கடவுள் நெறி கூட்டும் துறவறம் என்னும் பொருளற்ற சிறுமைக் கொள்கை வழக்கில் வந்தது. அவ்வழக்கு வளர்ந்து வளர்ந்து பெரிய நூல்களிலும் நுழைந்துவிட்டது. முடிவில் மூவாசைப் பொருள்களுள் ஒன்றாகப் பெண்ணும் பாவிக்கப்பட்டாள். பெண்ணை வெறுத்து நீத்தல் துறவொழுக்கம் என்பதும், அவளை இழித்துரைத்தல் ஞானநெறி என்பதும் பொது மக்களால் எண்ணப்பட்டன. இவ்வாறு பெண்ணை வெறுக்கும் போலித்துறவு பொதுவாக உலகிலும், சிறப்பாக நமது நாட்டிலுங் கால்கொண்டது.
தற்காலச் சந்நியாசம்
ஒருத்தியுடன் வாழாது, துவராடை புனைந்து, மொட்டை யடித்தோ சடைவளர்த்தோ மடத்திலோ மற்ற இடங்களிலோ உறைவது துறவொழுக்கம் அல்லது சந்நியாசம் என்று கருதப் பட்டது. அழுக்காறு அவா முதலிய மாசுகளினின்றும் விடுதலை யடைந்து, எவ்வுயிரையுந் தன்னுயிர்போல் நினைந்து தொண் டாற்றும் அறவொழுக்க நிலைக்கு வழங்கப் பெற்று வந்த துறவு – நீத்தல் – சந்நியாசம் – சாது முதலிய சொற்கள், தமக்குரிய பொரு ளிழந்து, வெறுந் தனி வாழ்வுக்கும் புறக்கோலத்துக்கும் வழங் கலாயின.
அறப்பொருள் மாற்றம்
அறம் என்னும் இல்லறம் அறத்தின் ஒரு கூறாகக் கொள்ளப் பட்டது. இல்லறத்தின் முடிந்த நிலையாக உள்ள துறவு, அறத்தின் மற்றொரு கூறாகக் கொள்ளப்பட்டது. இம்மாற்றங் கண்டே திருவள்ளுவர், ஔவையார் முதலியோர் அறத்தின் உண்மையை விளக்க வேண்டி, அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை என்றும், இல்லறமல்லது நல்லறமன்று என்றும் அறிவு கொளுத்தினர்; கொளுத்தியும் பயன் விளையவில்லை. அத்திருவாக்குகட்குத் திரிபுப் பொருள்கள் சொல்லப்படுகின்றன. இந்நாளில் மூலத்தின் வழிநின்று துறவின் உண்மை இயல்பு கூறுவோர் எள்ளி நகை யாடப்படுகிறார். என் செய்வது! காலத்தின் கோலம்!
சிற்றினங்கட்குப் புகலிடம் போலிச் சந்நியாசம்
ஒருத்தியுடன் அறநெறியில் வாழும் பொறுப்பேற்க நடுக் குறும் பயங்கொள்ளிகள் – மனைவி, மக்கள், மற்றவர்கள் நலத்துக்கு நாமேன் உழைத்தல் வேண்டும் என்றெண்ணுந் தன்னலத்தார் – பிழைக்க வழிதெரியாதவர் – திண்ணை தூங்குஞ் சோம்பேறிகள் – முதலிய சிற்றினங்கட்குப் போலிச் சந்நியாசம் இந்நாளில் புகலிடமாயிருக்கிறது. இச்சிற்றினம் நாளுக்கு நாள் தொகையில் பெருகுகிறது.
இவ்வினத்தவரில் படித்தவர், தம் நலன்நாடி, வேதாந்தப் பெயரால், பெண் மாயை; அவளைத் துறப்பது வீடு என்று சில நூல்களையும் எழுதி வைத்தனர். அந்நூல்கள் மக்கட்குச் செய்து வரும் இன்னல்கள் எண்ணில; எண்ணில.
உண்மை வேதாந்தமும் பெண்ணும்
உண்மை வேதாந்தம் பெண்ணை வெறுக்குமாறு உரைக்க வில்லை. எல்லாவற்றையும் கடவுள் வடிவாக நோக்கும் வேதாந்தம், பெண்ணிடத்துள்ள கடவுளிருப்பை மட்டும் எங்ஙனம் மறுக்கும்? பெண்ணிடத்துள்ள கடவுள் தன்மை விளங்கப் பெறுவோர், மற்ற இடங்களிலுள்ள கடவுள் தன்மையும் விளங்கப் பெறுவர். பெண்ணைக் காமப் பொருளாக் கருதும் மனம், அவளைக் கடவுளாகக் கருதும் பேறு பெறுமேல் அம் மனமுடைய ஒருவன், வாழ்வின் முடிந்த நிலை கண்ட உண்மை வேதாந்தியாவன். பெண்ணைக் காமப் பொருளாக் கருதி, அவளை வெறுத்து நிற்குமட்டும் உண்மை வேதாந்தம் எவ்வழியில் கைகூடும்?
காம வேட்கையால் பெண்ணுடன் வாழாது, காதல் வழி நின்று, அவளுடன் வாழ வாழ, அவள்பாலுள்ள கடவுட்டண்மை புலனாகும். தலைவிக்கும் தலைவனுக்கும் ஏற்படும் பற்று, அழுக்காறு முதலிய மாசுகளைக் கழுவவல்ல கடவுட் பற்றாக அதாவது அன்பாக இருத்தல் வேண்டும். பெண்ணுடன் அன்பு வழியில் கூடி வாழ வாழ அன்றோ பெண்ணின் பெருமை புல னாகும்? அன்பு வழி நின்று இல்வாழ்வு நடாத்திய சுந்தரமூர்த்தி சுவாமிகள், பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே என்று தமது அநுபவத்தை உலகிற்கு அறிவு றுத்தியிருத்தல் காண்க.
பெண்ணை வெறுத்த பாவம்
அன்பு வழியில் பெண்ணுடன் கூடி வாழாது, வெறுப்பு – வெறுப்பு என்னும் நெருப்பிடை நிற்போர், காமம் வெகுளி முதலிய கனல்களால் எரிக்கப்படுதல் திண்ணம். பெண்ணை வெறுத்தோடும் எத்துணைப் போலிச் சந்நியாசிகள், பின்னைக் காமத் தீயால் எரிக்கப்பட்டு, எரி தாங்காது, பலதிறச் செயற்கைக் குழிகளில் வீழ்ந்து வருந்துகிறார்கள்! எத்துணை நோய்கள் இவர் களை அடர்கின்றன! நோய்வாய்ப்பட்டு இவர்கள் வருந்துவதை என்னென்று வருணிப்பது? அனலிடைப்பட்ட புழுவென இவர்கள் துன்பத்தில் நெளிகிறார்கள். நரகத் துன்பத்தை இவ்வுலகில் இவர்கள் அநுபவிக்கிறார்கள் என்று சுருங்கச் சொல்லலாம். இத்துன்பத்துக்குக் காரணம் என்னை? பெண் தெய்வத்தை வெறுத்த பாவம்; அத்தெய்வத்தை மாயையென்று கருதிய பாவம்; அவ்வாறு மற்றவர்க்குப் போதித்த பாவம், ஆண்டவன் அருளால் உயிர்கள் நலத்துக்கெனத் தோன்றிய பெண்ணை வெறுத்தால் ஆண்டவன் பணியை நிகழ்த்தும் இயற்கை, வாளா கிடக்குமோ? இயற்கைக்கு மாறுபட்டு நிற்போரை இயற்கை ஒருத்தே தீரும். போலிச் சந்நியாசிகள் போதனைக்குச் செவி சாய்த்துப் பின்னை இடர்ப்பட்ட இளைஞர் பலரை யான் அறிவேன். ஆதலால், போலிச் சந்நியாசிகள் வலையில் சிக்குறாதி ருக்குமாறு இளைஞரை எச்சரிக்கை செய்கிறேன்.
காமம் வெகுளி முதலிய நோய்களைப் போக்கும் மருந்து, இல்வாழ்வென்று அடிக்கடி அறைய வேண்டுவதில்லை. காமம் வெகுளி முதலிய நாக்கள் விட்டெரியும் தீயைத் தணிக்கும் அன்பென்னும் தண்புனல் ஊற்று, பெண்தெய்வம் என்பதை உலகம் உணர்ந்து நடப்பதாக, இத்தகைய பெருமை வாய்ந்த பெண் தெய்வத்தை – அன்பு ஊற்றை – அருட்பெருக்கை – மாயை யென்றும் நாயென்றும் பேயென்றும் பேசுவதா ஞானம்? இஃதன்றோ அஞ்ஞானம்? வாழ்விற்கு இன்றியமையாத பெண்ணுடன் வாழாது, இரண்டொரு போலி நூல் பயின்று, காஷாயஞ்சுற்றி, மொட்டையடித்து, பெண் மாயை; அப்பா! அவள் வாழ்வைவிடு என்று பேசுவது வேதாந்தமுமன்று; ஞானமுமன்று. ஞானம் எது அஞ்ஞானம் எது என்பன பற்றி மேலே விளக்கியுள்ளேன். ஆகவே, பெண்ணின் பெருமை உணராது, பெண்ணைச் சிறுமைப்படுத்திய போலிச் சந்நியாசி களாலும் அவர்கள் சொற்கேட்டு ஏமாந்த மற்றவர்களாலும் பேசப்படும் பேச்சுக்களும் எழுதப்படும் எழுத்துக்களும் வேதாந்த ஞான உண்மை தெரிக்கும் பேச்சுக்களுமல்ல; எழுத்துக்களுமல்ல.
போலி நூல்கள்
தன்னல மேலீட்டான் வெளிவரும் போலிச் சந்நியாசிகள் எழுதி வைத்துள்ள நூல்களை நம்பி உலகம் மோசம் போதலா காது. இவர்கள் என்னென்னவோ எழுதி வைத்திருக்கிறார்கள்! இவர்களின் குணங் குற்றம் ஓராது, பெண்ணுடன் வாழும் புனிதர்கள், இவர்கட்குச் சோறிடல் வேண்டுமாம்! கூறை யளித்தல் வேண்டுமாம்! இப் பெரியோர்கள் நிஷ்டையில் திளைத்திருக்கும் வேளையில் இவர்கட்குச் சிற்றின்ப நினைவு தோன்றினுந் தோன்றுமாம்! தோன்றுமேல் அந்நினைவைக் கழித்துக் கொள்ளச் சுவாமிகள் வரைவின் மகளிரில்லம் போந்து, துயில்நீத்துப் பின்னை நிஷ்டை கூடுவார்களாம்! இந் நிஷ்டாபரணர் பொருட்டு மன்னரும் மற்றவரும் காமச் சத்திரங்கட்டி நடாத்துவது அறமாம்! அந்தோ! அந்தோ! உலகம் எப்படி ஏமாற்றப்பட்டது! ஏமாந்த உலகமே! இன்னுமா ஏமாறுவை! ஏமாந்தது போதும்! போதும்!
இப்போலிக் கூட்டத்தார்க்குப் பாவம் ஏது? புண்ணியம் ஏது? இவர் முத்தரல்லரோ? இவர்க்கு எல்லாம் ஒன்றுதானே! அவர் கொலை செய்யலாம்! களவாடலாம்! கள்ளருந்தலாம்! காமத்திற் கிரையாகலாம்! பொய் கூறலாம்! எல்லாஞ் செய்யலாம்! கொலை களவு முதலியவற்றிற்கும், கொல்லாமை கள்ளாமை முதலியவற்றிற்கும் இச் சமரச ஞானி கட்கு வேற்றுமை தோன்றினாலன்றோ இவர்கட்குப் பாவ புண்ணிய வேற்றுமை புலனாகும்? இத்தகைய கூட்டத்தை என்னென்று கூறுவது? இதை ஆண் வேசையர் கூட்டம் என்று கூறுவது குற்றமாகாது. தனக்கென ஒரு நாயகனின்றிக் கூடா ஒழுக்கத்தில் உழலும் மகளிர், வேசை என்று சொல்லப்படுகிறாள். அவ்வாறே தனக் கென ஒரு நாயகியின்றிக் கூடா ஒழுக்கத்தில் உழலும் ஆடவனை யும் வேசையர் இனத்தில் சேர்க்கலாமன்றோ? ஆண் மக்களின் இக்கூட்டம் அருகினால், பெண்மக்களில் வேசையர் கூட்டம் அருகும். போலிச் சந்நியாசமும் பெண்ணுலகில் வேசையர் கூட்டம் திரண்டதற்குக் காரணம் என்று ஊகிக்க இடமுண்டு. சில வேசையர் தம்மைப் பெண்சந்நியாசிகள் என்று சொல்வ துண்டு.
தமது நலத்துக்கெனப் பெண்ணை வெறுக்கும் போலித் துறவோரால், பெண்ணை வேண்டுமென்று வெறுத்துத் தள்ளாது, உயிர்கள் மீது கொண்ட இரக்கத்தால், தொண்டுக்கென வெளி வரும் அறவோர்க்கும் இவ்வுலகில் இன்னல் விளைகிறது. உண்மைக்கும் போலிக்கும் புறத்தே வேற்றுமை காண்டல் மிக அரிதாயிருக்கிறது. தொண்டில் குறிக்கொண்டு தனித்து வாழும் அறவோர் திருவடி எனது முடியணி என்று ஈண்டு அறிக்கை செய்கிறேன். அத்தகைய தொண்டர் இந்நாளில் மிக அரியர்; அரியர். அவரைப் பற்றி முன்னருங் கூறியிருக்கிறேன்.
அறத்தொண்டிற்கெனச் சில காரணம் பற்றிக் குறிப்பிட்ட சிலரால் ஒருபோது கொள்ளப்பெற்ற பெண்ணுடன் வாழாமை, பின்னைப் பெண்ணை வெறுக்கும் போலித் துறவாய் முடிந்தமை கண்டு, ஆங்காங்குள்ள அறிஞர் அப்போலியை மறுத்தனர். கலியுகத்தில் சந்நியாசங் கூடாது என்னும் விதி நமது நாட்டில் பிறந்தது. மேல்நாட்டில் கிறிதுவ மதத்தில் ஒருவரை ஒருவர் வெறுக்குந் துறவு என்னுந் தீ ஒரு போது மூண்டது. மகளிரை நீத்த ஆடவரும், ஆடவரை நீத்த மகளிரும் பல இடங்களில் மடங்களையும், ஆசிரமங்களையும் அமைத்துக் கடவுளை மறைக்கும் தீவினைகளில் தலைப்பட்டு, இயற்கை வாழ்விற்குக் கேடு சூழ்ந்தனர். ஆங்கே லூத்தர் முதலிய அறிஞர் கிளர்ச்சி செய்து, அந்நாட்டைச் சீர்திருத்தஞ் செய்தனர். அரேபியாவில் நபிநாயகம் தோன்றி, இல்வாழ்வு நடாத்திக் காட்டிப் பெண்ணை வெறுத்து வாழும் அறியாமையை ஒழித்து உலகை உய்வித்தனர். பெண்ணை வெறுத்து வாழல் கடவுள் நெறி யென்றும், ஞானமென்றும், வேதாந்தமென்றும் உலகில் எழுந்த போலிஅறம் விரைவில் ஒழியுமாறு ஆண்டவனை வழுத்துகிறேன்.
ஞானிகள்
பொதுவாக உலகிலும், சிறப்பாக நமது நாட்டிலும் தோன்றிய ஞானிகளிற் பெரும்பான்மையோர் பெண்ணை இழித்துக் கூறியுள்ளன ரென்று சிலர் எண்ணியிருக்கின்றனர். இதுபற்றிப் பல இடங்களில் யான் பேசியும் எழுதியும் வரு கிறேன். மெய்ஞ்ஞானிகள் ஒருபோதும் பெண்ணை இழித்துக் கூறார்கள். அவர்கள் பெண்ணைக் காமப் பொருளெனக் கருதும் தங்கள் மனத்தை நொந்து நொந்து கூறிக்கொள்வது வழக்கம். சில ஞானிகள் பெண்ணையே நேராகத் தாக்கியிருப்பது, பெண்ணுலகினின்றும் வழுக்கி வீழ்ந்த வரைவின் மகளிர் கூட்டத்தைக் குறிப்பதாகும். வரைவின் மகளிரை நன்னெறியில் திருப்ப வேண்டுமென்பது ஞானிகளின் விருப்பம். காமவேட்கை யால் விழுங்கப் பெற்று, மயக்குற்று, பெண்ணின் நுண்மை யுணராது, பூவை மாந்து கிடக்கும் வண்டைப் போலப் பெண்ணின் என்புதோலில் பற்றுவைத்து, வீழ்ந்து கிடக்கும் தூர்த்தருக்கு நல்லறிவு கொளுத்த வேண்டி, ஞானிகள் சில உரை பகர்ந்தும் இருக்கிறார்கள். இவை யாவும் பெண்ணுலகை வெறுத்துக் கூறியன அல்ல என்று ஒரு முறைக்குப் பன்முறை பறைசாற்றுகிறேன்.
ஈண்டுப் பல ஞானியரைக் குறித்தும், அவர்தம் வாய் மொழிகளைக் குறித்தும் முறை முறையே எழுதிச் செல்லின், நூல் மிக விரியும். இரண்டொரு ஞானியர் மீது கருத்துச் செலுத்து வது நலம்.
பட்டினத்தார்
நமது நாட்டிற் றோன்றிய ஞானியருள் பெண்ணைப் பெரிதும் இழித்துப் பாடினவர் பட்டினத்தார் என்று பலர் சொல்ல யான் கேட்டிருக்கிறேன். அவர் பெண்ணை வெறுத்துப் பாடினமையால், அவரது துறவு நிலையை, பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல் ஆருந் துறக்கை அரிது அரிது என்று அநுபூதிமானாகிய தாயு மானாரே விதந்தோதியிருக்கிறார் என்று சிலர் கருதுவதும் எனக்குத் தெரியும். பட்டினத்தார் மிகப் பெரியவர்; முற்றும் மனமாசகலப் பெற்றவர். அவர் இவ்வுலகிலேயே சிவோகம் பாவனை நிலையுற்று, எல்லாவற்றையுஞ் சிவமாக் கண்டு, வாவியெல்லாந் தீர்த்தம் மணலெல்லாஞ் சிவலிங்கம் என்று பாடினவர். பட்டினத்தார்க்குப் பார் முழுவதும் சிவமாகக் காணப் பட்டதேயன்றி, மாயையாகக் காணப்படவில்லை. அதனால் அவரது பெருநிலையைத் தாயுமானார் உலகிற்கு எடுத்துக் காட்டினார். மனமாசு முற்றும் அகல்வதே துறவுநிலை என்று முன்னே விளக்கியிருக்கிறேன். அத்துறவுநிலை எய்தினவர் பட்டினத்தார் என்க.
பட்டினத்தார் பெயரால் இருவித நூல்
பெண்ணை வெறுத்தல் துறவு அல்லது ஞானம் என்று பட்டினத்தார் பகர்ந்தனரா என்பதொன்றே ஈண்டுப் பெரிதுங் கருதற்பாற்று. பட்டினத்தார் பெயரால் இருவித நூல்கள் உலகில் உலவுகின்றன. பதினொராந் திருமுறையில் பட்டினத்தார் அருளிய சில நூல்கள் அடங்கியிருக்கின்றன. பட்டினத்தார் அருளிய திருப்பாடற்றிரட்டு என்றொரு நூலும் ஆட்சியிலிருக் கிறது. இத்திரட்டு பதினொராந் திருமுறையில் சேர்க்கப் பட்டில்லை.
மொழிவனப்பு, பாநடை முதலியவற்றை நோக்குழி இரண் டிற்கும் உள்ள வேற்றுமை நன்கு புலனாகும். ஆனால் பட்டினத் தார் இருவர் இருந்தனர் என்பதற்குப் போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. பெண்ணைப் பற்றிய மயக்க உரைகள் பெரிதும் திருப்பாடற் றிரட்டிலேயே கிடக்கின்றன. பதினொராந் திரு முறையில் ஒரு பகுதியைப் பாடிய பட்டினத்தார் திருப்பாடற் றிரட்டைப் பாடியிருப்பரோ என்னும் ஐயம் ஆராய்ச்சி யாளருக்கு இயல்பாக நிகழும். இவ்வாராய்ச்சியில் தலைப் படாது, பெண்ணைப் பற்றிப் பட்டினத்தார் கொண்ட கருத் தென்னை என்பதன் மீது கருத்தை இருத்துவோம். பதினொராந் திருமுறையில் பட்டினத்தார் அருளிய திருவிடை மருதூர் மும்மணிக்கோவையில்,
மலர்தலை உலகத்துப் பலப்பல மாக்கள்
மக்களை மனைவியை ஒக்கலை ஓரீஇ
மனையும் பிறவும் துறந்து நினைவரும்
காடும் மலையும் புக்குக் கோடையில்
கைம்மே னிமிர்த்துக் காலொன்று முடக்கி
ஐவகை நெருப்பி னழுவத்து நின்று
மாரி நாளிலும் வார்பனி நாளிலும்
நீரிடை மூழ்கி நெடிது கிடந்தும்
சடையைப் புனைந்தும் தலையைப் பறித்தும்
உடையைத் துறந்தும் உண்ணா துழன்றும்
காயும் கிழங்கும் காற்றுதிர் சருகும்
வாயுவும் நீரும் வந்தன அருந்தியுங்
களரிலும் கல்லிலும் கண்படை கொண்டும்
தளர்வுறும் யாக்கையைத் தளர்வித் தாங்கவர்
அம்மை முத்தி அடைவதற் காகத்
தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர்
ஈங்கிவை செய்யா தியாங்க ளெல்லாம்
பழுதின் றுயர்ந்த எழுநிலை மாடத்தும்
செந்தா துதிர்ந்த நந்தன வனத்தும்
தென்ற லியங்கு முன்றி லகத்தும்
தண்டாச் சித்திர மண்டப மருங்கிலும்
பூவிரி தரங்க வாவிக் கரையிலும்
மயிற்பெடை ஆலக் குயிற்றிய குன்றிலும்
வேண்டுழி வேண்டுழி யாண்டாண் டிட்ட
மருப்பி னியன்ற வாளரி சுமந்த
விருப்புறு கட்டின் மீமிசைப் படுத்த
ஐவகை அமளி அணைமேற் பொங்கத்
தண்மலர் கமழும் வெண்மடி விரித்துப்
பட்டினுட் பெய்த பதநுண் பஞ்சி
னெட்டணை அருகாக் கொட்டைகள் பரப்பிப்
பாயின் மீது பரிபுர மிழற்றச்
சாயலன் னத்தின் தளர்நடைப் பயிற்றி
* **அஞ்சொன் மடந்தைய ராகந் தோய்ந்தும்
சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தின்
அறுசுவை அடிசில் வறிதினி தருந்தா
தாடினர்க் கென்றும் பாடினர்க் கென்றும்
வாடினர்க் கென்றும் வரையாது கொடுத்தும்
பூசுவன பூசியும் புனைவன புனைந்தும்
தூசு நல்லன தொடையிற் சேர்த்தியும்
ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்து
மைந்தரும் ஒக்கலும் மகிழ்வன மகிழ்ந்து
இவ்வகை இருந்தோ மாயினும் அவ்வகை
மந்திர வெழுத்தைந்தும் வாயிடை மறவாது
சிந்தை யின்வழிச் செலுத்தலின் அந்த
முத்தியும் இழந்திலம் முதல்வ அத்திறம்
நின்னது பெருமை யன்றோ
எனவரூஉஞ் செம்மொழிகளைப் பன்முறை உற்று உற்று நோக்குக. இத்திருவாக்கில் இல்வாழ்விற்கும் கடவுள் நெறிக்கும் உள்ள தொடர்பைக் கூர்ந்து ஊன்றிப் பார்க்க. இக்கருத்துடைய பட்டினத்தார் பெண்ணை இழித்துக் கூறுவரோ? ஒருபோதும் கூறார்.
திருப்பாடற்றிரட்டும் இப் பட்டினத்தாரே அருளின ரென்று கருதப்படின், அதன்கண் ஒளிரும் பெண்ணைப் பற்றிய பாடல்கள், பெரிதும் பெண்ணைக் காமப்பொருளாக எண்ணும் மனத்துக்கும், காமுகர்க்கும், வரைவின்மகளிர்க்கும் அறிவு கொளுத்தும் நோக்குடன் அருளிச் செய்யப்பெற்றன என்று கொள்ளப்படல் வேண்டும். வேறு ஒரு பட்டினத்தாராயினும் இவ்வாறு கோடல் தவறாகாது. திருப்பாடற்றிரட்டிலுள்ள இரண்டொரு திருவாக்குகளை நோக்குவோம். தோகையர் மாயையிலே செல்லாமல் செல்வந் தருவாய் சிதம்பர தேசிகனே; மாலை உபாதி துயில் காமம் இவை மாற்றிவிட்டே- ஆலமுகந் தருள் அம்பலவா என்னை ஆண்டருளே; சிற்றின்பம் விட்டு ஏறும் பதந்தருவாய் திருக்காளத்தி ஈசுரனே எனவரூஉம் அடிகளின் திருவாக்குகள் பெண்ணை வெறுக்குமாறா அறிவிக் கின்றன? பெண் காமப் பொருள் என்று நினைக்கும் நெஞ்சை நல்வழியில் திருப்ப ஆண்டவன் அருளையல்லவோ அத் திருவாக்குகள் குறிக்கொண்டு நிற்கின்றன? பட்டப் பகலில் வெளிமயக்கே செய்யும் பாவையர்மேல் – இட்டத்தை நீதவிர்ப் பாய் இறைவா கச்சியேகம்பனே எனவரூஉம் இன்னோரன்ன கருத்துடைய பாக்களில் வரைவின் மகளிர் நடைமுறைகளை அடிகள் விளக்கியவாறு காண்க. வேறு பல இழிமொழிகள் அடங்கிய பாக்கள் தூர்த்தர்கட்கு நல்லறிவு கொளுத்த அருளிச் செய்யப் பெற்றன என்க. பட்டினத்தடிகள் கருத்தில் பெண்ணை வெறுத்தல் இல்லை என்பதொன்றையே நேயர்கள் கவனிப்பார் களாக.
பேய்போற் றிரிந்து பிணம்போற்
கிடந்திட்ட பிச்சையெல்லாம்
நாய்யோ லருந்தி நரிபோ
லுழன்றுநன் மங்கையரைத்
தாய்போற் கருதித் தமர்போ
லனைவர்க்கும் தாழ்மைசொல்லிச்
சேய்போ லிருப்பர்கண் டீருண்மை
ஞானம் தெளிந்தவரே
இப்பாட்டுந் திருப்பாடற்றிரட்டி லிருப்பது. இப்பாட்டு, எல்லா ஐயங்களையும் போக்கி, அடிகளின் உள்ளக்கிடக்கையைச் செவ்வனே தெரிக்கிறது. நன்மங்கையரைத் தாய்போல் கருது மாறு அடிகள் உலகிற்கு அறிவுறுத்துகிறார். அஃது உண்மை ஞானந் தெளிந்தவர் இயல்பு என்றும் அவர் கூறுகிறார்.
நன்மங்கையரைத் தாய் போல் கருதுவது உண்மை ஞானம் என்று கூறிய ஞானியா பெண்ணை வெறுப்பர்? அவளை மாயை என்று கூறுவர்? எந்த உண்மை ஞானியும் தாயாகிய பெண்ணை வெறுத்து இழித்துக் கூறார்.
அருணகிரியார் வரைவின்மகளிரைப் பற்றிக் குறித்த பாடல்களும் பெண்ணைப் பொதுவாகக் குறிப்பன என்று எண்ணி இடர்ப்படுவோரும் உளர். இதுபற்றி முருகன் அல்லது அழகு என்னும் நூலில் நுவன்றிருக்கிறேன்.
கடவுள் அருள்பெற்றுப் பேரன்பராய்ச் சமய குருமா ரெனப் போற்றப்படும் நம்மாழ்வார், மாணிக்கவாசகர் முதலிய பெரியோர், பெண்ணின் பெருமை பேசும் அகப்பொருட்டுறை கட்கு இலக்கியங்களாகத் திருவிருத்தம் திருக்கோவையார் முதலிய இன்ப நூல்களை உலகிற்கு வழங்கியிருக்கின்றனர். அவர் பெண்தெய்வத்தை முன்னிலைப்படுத்திக் கடவுளை நோக்கிப் பாடியிருக்கின்றனர். பெண் தன்மைக்கும் கடவுள் தன்மைக்கும் உள்ள உறவு அப்பெரியோரால் நன்கு உணரப்பட்டது; உணர்த்தப்பட்டது.
ஆதலால், எந்த உண்மை ஞானியும், பெண்ணை வெறுத்தல் துறவு என்று இழித்துக் கூறார். அங்ஙனம் கூறுவோர் உண்மை ஞானியராகார் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன். ஞானியரின் உள்ளக் கிடக்கையைத் தேறாது அவர்மீது பழி சுமத்துவது அறியாமை.
இல்லறம்
இறை வழியையும், இயற்கை நோக்கையும், படைப் பமைப்பையும், இன்னோரன்ன பிறவற்றையும் கூர்ந்து நோக்குழி, ஒருத்தி ஒருவனுடனும், ஒருவன் ஒருத்தியுடனும் கூடிவாழ்தலே அறம் என்பது புலப்படும். அதுவே வாழ்விற்குரிய இயற்கை யாகலான், அதனை இயற்கை அறம் என்று தலைப்பில் பொறித்தேன். இயற்கையோடியைந்த வாழ்வு நடாத்தலே அறம். அதற்கு மாறுபட்டு வாழ்தல் மறம். ஒருத்தி ஒருவனுடனும் ஒருவன் ஒருத்தியுடனும் வாழ்வது இயற்கை அறமென்று இதுகாறும் சொல்லப்பட்டுவந்தது. இவ்வியற்கை அறத்தை உலகம் இல்லறம் என்று சொல்கிறது. எனவே அறம் – இயற்கை அறம் – இல்லறம் – எல்லாம் ஒன்றே ஆதல் காண்க.
இல்லறம் துறவறம்
அறம், இல்லறமென்றும் துறவறமென்றும் இரு கூறாக உலகில் விளங்கிக் கொண்டிருக்க, அதனை இல்லறத்தில் மட்டும் ஒடுக்கி அடக்குவதென்னை என்று சிலர் ஐயுறலாம். இயற்கை வாழ்விற்குரிய நல்லனயாவும் அறத்தின் கூறுகளே யாகும். மனமாசினின்றும் நீத்தலாகிய துறவும் அக்கூறுகளுள் ஒன்று. இல்லறமோ அறக்கூறுகள் யாவும் சேர்ந்த ஒரு முழுமை என்க.
அறம் என்பது ஒரு மரம் போன்றது. திருமணம், பிள்ளைப் பேறு, அன்பு, விருந்தோம்பல், ஒழுக்கம், பொறை, ஒப்புரவு, ஈகை, அருள், தவம், வாய்மை, துறவு, மெய்யுணர்வு முதலியன அம்மரத் தின் உறுப்புக்களாகிய வேர், மன்றம், பட்டை, கவடு, கோடு, விளார், தளிர், இலை, மலர், காய், கனி முதலியன போன்றன. இவ்வறக்கூறுகள் யாவும், பிறந்து வளர்ந்து பயனளிக்க வேண்டிய தாயகம் இல்லறமாகும். இந்நுட்பத்தை ஓர்ந்து தெளி யின், அறத்துக்கும் இல்லறத்துக்கும் வேற்றுமை தோன்றாது. நீண்ட நாள் இல்லறம், துறவறம் என்று கேட்டும் படித்தும் நினைந்தும் பழகியும் தழும்பேறப்பெற்ற காதுக்கும் நாவுக்கும் நெஞ்சுக்கும் எனது கூற்றுப் புதுமையாகவே தோன்றும்.
பெண்ணுரிமை கடியப்பட்ட நாள் தொட்டும், பெண்ணை வெறுத்தல் துறவு என்னும் சிறுமைக் கொள்கை முளைத்த நாள் தொட்டும், பெண்ணுடன் வாழல் அறத்தின் ஒரு பெருங்கூறு என்பதும், பெண்ணை விடுத்தல் அறத்தின் மற்றொரு பெருங் கூறு என்பதும் நாட்டில் பிரிக்கப்பட்டன. இக்கொள்கை மக் களிடைப் புகுந்து வேர்கொண்ட பின்னைப் போலித் துறவைக் கடிந்த திருவள்ளுவனார் அருளிய குறள் போன்ற நூல்களின் உள்ளக்கிடக்கையையும் பின் வந்தார் தங் கருத்துவழித் திருப்பலாயினர்.
இல்லறவியல் துறவறவியல்
திருக்குறளில் இல்லறஇயல் துறவறஇயல் என்று இரண்டு இயல் காணப்படுகின்றன. அவ்வவ்வியலின் உறுப்புக்களாகச் சிற்சில அதிகாரங்கள் முறை முறையே ஒழுங்கு செய்யப்பட்டி ருக்கின்றன. காலத்துக் கேற்றவண்ணம் இயல் தொகுத்து அதிகாரம் வகுத்த பின்வந்தார் கூர்த்த மதியைப் போற்றுகிறேன். ஒரு கொள்கையைக் காலத்துக்கேற்ற வழியில் ஒழுங்குபடுத்திக் காட்டல் சிறந்த அறிவுடைமை யாகும்.
அதிகாரம் அதிகாரமாகத் திருவள்ளுவனார் திருக் குறளைப் பாடியது உண்மை. இல்லறம் துறவறம் என்னும் இயல்களையாதல், வேறு இயல்களையாதல் திருவள்ளுவனார் வகுத்திருப்பரா என்று எளியேன் ஐயுறுகிறேன். அறம் – பொருள்- இன்பம் – என்னும் மூன்றன் விரிவாகத் திருக்குறள் என்னும் ஓர் அரிய நூலைத் திருவள்ளுவனார் யாத்தனர். அதன்கண் அவர் அறத்தை, இல்லறம் துறவறம் என்று இரண்டு கூறிட்டிரார் என்பதே எனது சிற்றறிவிற்குப் புலனாகிறது. திருவள்ளுவனார், அறமும் இல்லறமும் ஒன்றே என்னுங் கருத்துடையார் என்பது எனது ஆராய்ச்சியிற் போந்த உண்மை. திருவள்ளுவனார் பாயிரத்தில் அறனை வலியுறுத்தி, பின்னை அதன் விளக்கங் கூறப்புகுந்தார். அவர் நேரே வாழ்க்கைத் துணைநலம் கூறாது, இல்வாழ்க்கை அல்லது இல்லறம் என்றோர் அதிகாரம் ஏன் கூறினார்? அவர் பாயிரத்திற் பகர்ந்த அறனையே பொருளாகக் கொண்டு பின்னை இல்வாழ்வில் அதன் விளக்கம் உரைக் கலாயினர் என்க.
திருவள்ளுவனார் கருத்து
அறன் வலியுறுத்தலில் திருவள்ளுவனார் அறத்தான் வருவதே இன்பம் என்று இயற்கை அறத்தின் மாண்பு தெரித்து, அந்நாளில் தலைகாட்டி நிமிர்ந்து நின்ற மற்றச் செயற்கை அறத்தை மற்றெல்லாம் புறத்த புகழு மில என்று மறுத்துரைத் தார். இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தாலும் ஆசிரியர், அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் என்று இயற்கை அறத்தை விதந்தோதிப் பின்னே, புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவ தெவன் என்று பொல்லாத போலி அறத்தை இழித்துக் கூறினார். இன்னும் அவ்வதிகாரத்தில் அவர், அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்று இயற்கை அறத்தை வலியுறுத்தி, அதனை நேர்மை வழியில் நடாத்தல் வேண்டும் என்பார், அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று என்றார்.
பின்வந்தார் கருத்துப்படி துறவு என்பது அறத்தின் ஒரு பெருங்கூறாயின், துறவதிகாரத்தில் அறத்தைப் பற்றி ஓர் உரை யாதல் ஆசிரியர் அருளியிருப்பர். அவ்வதிகாரத்தில் அறம் என்னுஞ்சொல் மருந்திற்கும் இல்லை. நேயர்கள் அவ்வதிகாரத்தை ஊன்றி ஊன்றி ஆராய்வார்களாக. ஆராயின், மனமாசினின்றும் நீத்தல் துறவு என்னும் உண்மையும், பெண்ணை விடுத்து நீத்தலைப் பற்றிய பேச்சே ஆண்டின்மையும் புலனாகும்.
துறவு இல்லறத்தின் ஒரு கூறு
மனமாசினின்றும் நீத்தல் இல்லறத்தின் ஒரு கூறு. இல்லறத்தின் பற்பல நோக்கங்களுள் ஒன்றாயிருப்பது நீத்தல் அல்லது துறவு. இத்துறவு இல்லறத்துக்கு வேறுபட்டு எங்ஙனம் நிற்கும்? ஆகவே, துறவு என்பது இல்லறமென்னும் அறத்தின் ஒரு கூறு என்றே கொள்க; பெண்ணுடன் வாழ்தல் இல்லற மென்றும், பெண்ணை விடுத்தல் துறவறமென்றுங் கொள்ளற்க.
பெண்ணுடன் வாழும் நோக்கம்
பெண்ணுடன் வாழ்தல் எனில், பெண்ணுடன் சேர்ந்து பிள்ளைபெறற்கு மட்டும் என்று நினைப்பது அறியாமை. பிள்ளைப்பேறும் இல்லறத்தின் ஒருகூறு. அவ்வளவில் இல்ல றத்தின் நோக்கு நிறைவேறுவதில்லை. வேறு பல அறக்கூறு களெல்லாம் அதன்கண் நிறைவேறுதல் வேண்டும். அவற்றின் நிறைவேற்றத்துக்குப் பெண் ஆணின் ஒத்த வாழ்வு வேண்டற் பாலது. அவ்வாழ்வு, பிள்ளைப் பேறுடன் நில்லாது, மனமாசைத் துறத்தற்கும், அன்பு அருள் பெறுதற்கும், முடிவில் இன்பநிலை எய்துதற்குந் துணை புரிகிறது. சுருங்கக் கூறின், ஆன்மாவிற்கு முழுத் தூய்மை அதாவது அறநிலை அதாவது கடவுள்நிலை கூட்டுவது அவ்வொன்றிய வாழ்வு என்று கூறலாம்.
பேரின்பம் சிற்றின்பம்
துறவு என்பதை இல்லறத்துக்கு மாறுபட்ட தனி அறமாகப் பிரித்த அறிஞர் அறத்தின் பயனாகிய இன்பத்தையும் இரு கூறிட்டனர். அறம் இரண்டாகப் பிரியும்போது, அதன் பயனாகிய இன்பமும் இரண்டாகப் பிரிவது இயல்பன்றோ? ஆழ்ந்த அறிவு கொண்டே அறிஞர் அப்பிரிவு கண்டனர் போலும்! அது காலநிலையைப் பொறுத்தது.
பெண்ணுடன் வாழ்தல் என்னும் இல்லறம் சிற்றின்பத்துக் குரியதாம்! பெண்ணை விடுத்தல் என்னும் துறவறம் பேரின்பத்துக் குரியதாம்! இன்பத்தில் சிறுமை பெருமை ஏன் கற்பித்தல் வேண்டும்?
வீடு
பெண்ணுலகு சிறுமைப்பட்ட காலந்தொட்டு இன்பம் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டது. அறம் பொருள் இன்பம் என்னும் மூவகைப் பேறு, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நால்வகையாகப் பிரிந்தன. இன்பத்துக்கு வேறாக வீடு என்பதொன்று பிரிக்கப்பட்டது.
கட்டு – அதாவது பந்தம் – விட்ட இடம் வீடு. துன்பம் நீங்கிய இடம் இன்பம். எனவே, வீட்டிற்கும் இன்பத்துக்கும் என்ன வேற்றுமை? பெண்ணும் இல்வாழ்க்கையும் இழிவாக நினைக்கப் பட்ட நாளில், இன்பத்தில் சிறுமையும் பெருமையும் நுழைந்து கொண்டன. உண்மையின் அதன்கண் சிறுமையும் இல்லை; பெருமையும் இல்லை. அஃது என்றும் ஒரு பெற்றியதாய் இலங்கிக் கொண்டிருப்பது.
பெண்ணுடன் வாழ்தல் உடலின்பத்தை மட்டும் அளிப்ப தன்று. அஃது உயிரின்பத்தையும், அது கடந்த அழியா இன்பத் தையும் அளிக்கவல்ல அன்புத் தொடர்புடையது. பெண் ஒரு பொழுது பருஉடல் தாங்கி மனைவியாய் இன்பம் அளிக்கிறாள். பின்னை அப்பெண்ணிடத்துள்ள நுண்மைத் தெய்வம் வேறு வழியில் அவ்வின்பத்தை நிலைபெறச் செய்கிறது.
பிரிவின்றி நின்ற பெருந்தகைப் பேதைகுறியொன்றி நின்றிடுங் கோமளக் கொம்புபொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கேஅறிவொன்ற நின்றன ளாருயி ருள்ளே
என வரூஉந் திருமூலர் திருவாக்கை ஓர்க.
இம்மையிலும் மறுமையிலும், இவை கடந்த பெருநிலை யிலும் பெண்ணின் கூட்டுறவின்றி அவ்வந் நிலையில் இன்ப மெய்துதல் இல்லை என்க. இன்பம் ஒவ்வொரு நிலையில் ஒவ்வொரு விதமாய்ப் பெருகிப் பெருகி முடிவில் தன் முழு நிலை எய்தும். துன்ப நீக்கத்துக் கேற்ற அளவாக இன்பம் நிகழ்ந்து கொண்டே போகும். எந்நிலையிலும் பெண்ணின் கூட்டுறவு உண்டு. அக்கூட்டுறவு இல்லாத இடத்தில் இன்ப நிகழ்ச்சி இல்லை. எந்நிலையிலும் பெண்ணைத் துறத்தல் செயற்கைமுறை யாகும். பெண்ணுடன் வாழ்தல் என்றும் வேண்டற்பாலது. அவ் வாழ்க்கையைக் கூட்டிவைப்பது இல்வாழ்க்கை யாகும். இக் கருத்துப் பற்றியே ஔவையாரும், இல்லற மல்லது நல்லற மன்று என்று அருளினார்.
திருவள்ளுவனார் பெண்ணுடன் வாழ்ந்து, தாம் பெற்ற அநுபவத்தைத் திருக்குறள் என்னும் நூலாகத் திருவாய் மலர்ந்தருளினார். அவர் பெண்ணின்பத்தைப் பற்றியும், இல் வாழ்வைப் பற்றியும் அருளிய குறட்பாக்கள் இரண்டொன்று வருமாறு:-
கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள.
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
இயல்பினால் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாந் தலை.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
இத்திருவாக்குகள் வாழ்வின் அனுபவத்தினின்றும் பிறந்தன என்பது கூர்த்த மதியினர்க்குச் செவ்விதில் விளங்கும்.
காமுகர்க்கு இன்பந் தோன்றும் நிலை
சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்வாழ்வின் வாயிலாகக் கடவுள் இன்ப நிலையை இவ்வுலகில் கண்டவர்; பரவை – சங்கிலி- என்னும் இரு பெண்மணிகளுடன் இன்பம் நுகர்ந்தவர். அவர் நுகர்ந்த இன்பம் எத்தகையது? பண்மயத்த மொழிப் பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே மற்றாரை உடையேன் என்று அவர் தமது அநுபவத்தை உலகிற்கு அறிவு றுத்துகிறார். ஈங்குக் குறிப்பிட்ட பற்று, சிற்றின்பத்தினதா? நேயர்களே உன்னுங்கள். என்பு தோல் போர்த்த ஒரு பாவை யாகப் பெண்ணைக் கருதித் தனது காம வெம்மையைக் கழிக்க அவளுடன் வாழுங் கீழோனுக்கு அவள் இன்பம் சிறுமைய தாகத் தோன்றும். மேலோர், பிள்ளைப் பேற்றிற்கென உடலும் உள்ளமும் அன்பால் ஒன்றச் சேர்ந்து, பின்னை அவ்வன்பறாத முறையில் இன்ப வாழ்வு நடாத்துவர். பெண் என்புதோல் போர்த்த காமக்கூடு. இவளோடு சின்னாள் தொலைத்துப் பின்னை இவளை விடுத்துத் தனியே இருத்தல் வேண்டும் என்னும் எண்ணத்துடன் பெண்ணொடு வாழும் காமுகனுக்குப் பெண்ணின் நுண்மையும் விளங்காது; இன்பத்தின் இயல்பும் தெரியாது.
உலகம் போற்றும் மகாத்மா காந்தி இல்லறத்திலிருந்து பெருங்கடனாற்றினர். அவரது இல்வாழ்வைப் பற்றி, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்னும் நூலில் விரித்துக் கூறியிருக்கிறேன். விரிவு ஆண்டுக் காண்க.
இப்பொழுது உலகில் மிக உயரிய நூல்களுள் ஒன்றாகப் போற்றப்படுவது கீதாஞ்சலி. அந்நூலைப் பற்பல சமயத்தாரும் போற்றுகின்றனர். அந்நூலின் உள்ளக்கிடக்கை யாது? அதன் உள்ளக்கிடக்கை எதையும் வெறுத்துத் துறத்தல் கூடாதென்பது. எல்லாம் கடவுள் வடிவாகப் பொலியும்போது, எதை வெறுப்பது – எதைத் துறப்பது – என்று அந்நூலாசிரியர் ரவீந்திரநாத் தாகூர் கேட்கிறார். அன்பு நோக்குடையார்க்கு எல்லாம் இன்பமயம் என்பது அவரது உட்கிடக்கை.
கீதாஞ்சலி என்னும் அரிய நூலை அன்பு இன்பம் ஒழுகும் பாட்டாக யாக்க ரவீந்திரர் எக்கழகத்தில் பயின்றார்? வெறும் ஏட்டுக்கல்வியா அவரது அன்புக் கண்ணைத் திறந்தது? பின்னை எது? அவர் பெண்ணுடன் கலந்து, இயற்கை அறமெனும் இல்லறக் கழகத்தில் பயின்று பயின்று பெற்ற அனுபவமும் பயனுமே கீதாஞ்சலி என்னும் பாட்டாகப் பரிணமித்தன.
தீங்கனியின் சுவை எவர்க்கு இனிக்கும்? அதைத்தின்று கண்டவர்க்கன்றோ அஃது இனிக்கும்? அதைத் தின்னாதார்க்கு அஃது எங்ஙனம் இனிக்கும்? நல்ல நாபெறாத நோயாளர்க்கு அது கைக்கும். அதுபோலப் பெண்ணுடன் அன்பு வாழ்வு நடாத்துவோர்க்கு இன்பப் பயன் இன்னதெனத் தெரியும். அவ் வாழ்வில் தலைப்படாதோர்க்கு ஒன்றுமே தெரியாது. காமநோயால் அவ்வின்பம் நுகரப் புகுவோர்க்கும் ஒன்றும் தெரியாது.
களவியலுக்கு உரைகண்ட நக்கீரனார், களவு மணத்தைப் பிற களவுகளினின்றும் வேறுபடுத்தி, அதன் பெற்றியைப் பேசும்பொழுது,
இங்குப் பிறவுங் களவுண்மை சொல்லி அக்களவுகட் கெல்லாம் இக்களவு சிறப்புடைமை சொல்லும், துறக்கம் வீடு பேறுகளை முடிக்குமாகலான் எனப்படுவதென்று சொல்லிச் சிறப்பிக்கப்பட்டது.
என்றும், தொல்காப்பியத்துக்கு உரைகண்ட ஆசிரியர் நச்சினார்க்கினியர்,
ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியுங் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம்.
என்றும் கூறியிருத்தல் காண்க.
பிற்கால வழக்கு
பெண்ணுடன் வாழ்வது உடலளவில் இன்பம் பயந்து இறந்துபடுவதென்பதும், மற்றுமோர் இன்பத்துக்கு மற்றுமோர் அறந்தாங்க வேண்டுமென்பதும் பிற்காலத்துப் புகுந்த வழக்காகும். அந்நாள் தொட்டு, நாம், நமது நாடு – நமது வாழ்வு முதலிய எல்லாம் குலைய விடுத்து, முடிவில் உரிமையையும் இழந்தோம். இவ்வளவிற்குங் காரணம் இன்ப வாழ்விற்குரிய பெண்ணையும் அவளுடன் வாழும் இயற்கை அறத்தையும் இழித்துப் போலிமுறையை ஏற்றதேயாகும். ஆதலால், இன்பத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டுவது அநாவசியம்; இரண்டாகப் பிரிந்தெழுந்த வழக்கையும், அவ்வழக்குப் பற்றிப் பின்னே நல்லோர் எழுதிய உரைகளையும், நூல்களையும் இது போழ்து குறைகூற வேண்டுவதில்லை. அவற்றைக் காலத்தின் கோலம் என்று கொண்டு பழைய மூலத்தின் வழியை மீண்டும் உயிர்ப்பிக்க முயல்வது அறிவுடைமை.
திருவள்ளுவனார் அருளிய முப்பாலில் எல்லாம் அடங்கும். வீட்டைப் பற்றித் தனிமை வாழ்வு கொள்வது பேய்த்தேரை (கானற்சலத்தை) நம்பி ஓடினவன் கதையாக முடியும். வீடு என்பது முழு இன்பநிலை என்க.
இதுகாறும் கூறியவாற்றான் இயற்கையோ டியைந்து வாழ்தலே இறை வழிக்குரியது என்பதும், அவ்வாழ்வு பெண்ணுடன் கூடி வாழும் இல்வாழ்வு என்பதும், செந்நெறியில் அவ்வாழ்வு நடாத்தப்படின் அதனால் இன்பநிலை கூடும் என்பதும், பிறமுறைகள் செயற்கையின்பாற் படுவன என்பதும், அவற்றால் உடல் நலன் கெடுவதோடு வாழ்வும் குலைந்து வாழ்விற் பெறவேண்டிய இன்பத்தையும் இழக்க நேரும் என்பதும் ஒருவாறு விளக்கப்பட்டன. ஆதலால், உலகில் இயற்கை அறம் ஓங்கி வளர்வதாக.
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை – திருவள்ளுவர்.



