பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை
திரு. வி. கலியாணசுந்தரனார்

11. பதியிலார்

(பெண்ணுலகின் கறை – பதியிலாருள் பிரிவு – பதியிலார் வரலாறு – புராணம் – சரித்திரம் – தேவடியாள் – தாசிப் பெயர் விளக்கம் – தாசி வேசையானது – கோயிலில் கூடாவொழுக்கம் – ஆண்மக்கள் கடமை – குலப்பெண்டிர் கடமை – பொருட் பெண்டிர் இன்பம் இன்பமாகாது – அன்பிலாக் கலவியால் இருபாலார்க்குங் கேடு – பதியின்றி வாழ்தலிலுள்ள கேடுகள் – ஒருவனுடன் வாழல் – வைப்பாட்டியா யிருத்தலும் கூடாது – பதியிலாரின் உலகைத் தூய்மைப்படுத்தல் – ஒருத்தியுடன் வாழும் நோன்பு – மகாத்மா காந்தியின் பொன்னுரைகள் – திருவள்ளுவர் கருத்து – செல்வரால் பெண்ணுலகங் கெடல் – இயற்கை இறை நோக்கம்.)

பதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
விதுப்பற நாடின் வேறல்ல – புதுப்புனலும்
மாரி அறவே அறுமே அவரன்பும்
வாரி அறவே அறும்

– நாலடியார்

பெண்ணுலகம் ஒரு தெய்விகமானது. அதன் கண்ணும் ஒரு கறை படிந்திருக்கிறது . அக்கறை ஒழியும் நாள் எந்நாளோ தெரியவில்லை. ஆணுலகம் தூய்மையுறு நாளே அந்நன்னாளென்க.

பெண்ணுலகில் படிந்துள்ள கறை யாது? அது பதியிலார் கூட்டமென்பது. பதியிலார் யாவர்? பதியில்லாத அனைவரை யும் பதியிலார் என்று உலகம் அழைக்கிறதோ? இல்லை. நோயாளர் பலர், பேடிகள், படைப்பில் சில குறைபாடுடைய பலர் முதலியோர் பதியின்றி வாழ்கின்றனர். இவரைப் பதியிலார் என்று உலகம் உரைப்பதில்லை. பின்னை எவர்க்கு உலகம் பதியிலார் என்னும் பட்டஞ் சூட்டியிருக்கிறது? குறிப்பிட்ட பதி அதாவது நாயகன் இன்றிப் பலருடன் கூடிப் போதுபோக்கும் பெண்ணினத்தார்க்கு உலகம் அப்பட்டஞ் சூட்டியிருக்கிறது. பதியிலார்க்குப் பொது மகளிர், வரைவின் மகளிர், கணிகையர், வேசையர் முதலிய பெயர்களும் வழங்கி வருகின்றன.

பதியிலாருள் பிரிவு

வயிற்றுப் பிழைப்புக்கென மானம் விற்கும் பதியிலாக் கூட்டம் போக, வேறு பதியிலாக் கூட்டங்களும் உண்டு. இக் கூட்டத்தார் நற்குடியிற் பிறந்தவராகவும், செல்வமுடையவராக வும் கல்வியுடையவராகவும், உயர்பதவியிலுள்ளவராகவும் இருப்பர். இவர், இக்கால நாகரிகக் கள்ளுண்ட மயக்கால் பதியிலராவோர். சில பெண்மக்கள் பல காரணம் பற்றித் திருமண வாழ்வை ஏலாது, வேட்கை மீதூரும்போது, சிலருடன் கூடி விளையாடிக் களிக்கிறார்கள். ஒருவேளை கருவுறுமேல் சிறிதும் இரக்கமின்றி அவர்கள் அதைச் சிதைக்கிறார்கள். இக்கூட்டத்தாரும் இவரனைய பிறரும் பதியிலார் இனத்தைச் சேர்ந்தவராவர்.

இப் பதியிலாக் கூட்டம் உலகில் யாண்டும் இருக்கிறது. இக்கூட்டமில்லா இடமேயில்லை. எந்நாட்டிலும் எவ்வூரிலும் இச்சேனைகளைக் காணலாம்; எல்லா வகுப்பிலும் இக்குழுவினர் இருக்கிறார்; நமது நாட்டிலும் இக்கூட்டத் தாருளர்.

அங்ஙனமாக, நமது நாட்டில் ஒரு சாதியார்க்கு மட்டும் பதியிலார் என்னும் பெயர் வழங்கப்பட்டு வருகிறது. நமது நாட்டில் பிறப்பை யொட்டிச் சாதிகள் வகுக்கப்பட்டமையான், இழிதொழிலுக்கும் பிறப்பையொட்டி ஒரு சாதி வகுக்கப் பட்டது. என்ன கொடுமை!

பிறப்புவழிச் சாதி

நீண்ட காலப் பழக்கத்தால் சாதிப் பதியிலாரும் தமது இழிவை உணராது வாழ்கிறார். வேசைத் தொழிலும் வழி வழியாக நடந்து வருகிறது. வேளாளன் பிள்ளை வேளாளனாகக் கருதப்படுவது போல, வேசியின் பெண்ணும் வேசியாகக் கருதப் படுகிறாள். இது நாட்டின் சிறுமையைப் புலப்படுத்துகிறது. பிறப்புவழிச் சாதிகருதும் முறை என்றோ தொலையும்?

சாதிப் பதியிலாரைப் பற்றிப் பலப்பல கதைகள் புராணங் களில் சொல்லப்படுகின்றன. சரித்திர முறையிலுஞ் சில வரலாறுகள் சொல்லப்படுகின்றன. மற்றக் குலத்தார்க்கு வரலாறுகள் புனையப்பட்டதுபோல, இக்குலத்தார்க்குஞ் சில வரலாறுகள் புனையப்பட்டன போலும்! இவை யாவும் சரித்திரம், புராணம், கலை என்னும் பெயர்களால் நாட்டிடை உலவுகின்றன.

புராணம்

புராணங்களில் சாதிப் பதியிலார்க்குத் தோற்றுவாய் கூறப்பட்டிருக்கிறது. அன்னார் தெய்வத் தோற்றுவா யுடையா ரென்றும், அவ்வினத்தார் ஒவ்வொரு குடும்பத்தினின்றும் ஒவ் வொரு பெண்ணைக் கடவுள் பணிக்கென அர்ப்பணஞ் செய்ய வேண்டுமென்னும் வரமுடையாரென்றும், அப்பெண்கள் கடவுள் ஒருவரையே பதியாக்கொண்டு ஏனையோரைப் பதியாக் கொள்ளாமையால், அவர்கள் பதியிலார் என்று அழைக்கப் பட்டார்களென்றும், நாளடைவில் அவர்களிடைக் கூடா வொழுக்கம் நுழைந்துவிட்டதென்றுஞ் சொல்லப்படுகின்றன.

சரித்திரம்

கிரீ தேசத்தில் கோயில்களிலும், அரண்மனைகளிலும் பதியிலாப் பெண்மக்கள் முறையே பணியாளர்களாகவும் தோழி மார்களாகவும் தொண்டு செய்து வந்தார்கள் என்றும், அவர்களிற் சிலர் இந்திய மன்னரால் வரவழைக்கப்பட்டனர் என்றும், அவர்தம் வழிவழித் தோன்றிய கூட்டத்தினரே பதியிலார் என்றுஞ் சரித்திரக்காரர் சிலர் செப்புகிறார்.

பதியிலார் வரலாற்றைப் பற்றி விரிந்த ஆராய்ச்சி ஈண்டு வேண்டுவதில்லை. பதியிலார் என்றொரு கூட்டம் நாட்டில் இருத்தல் உண்மை. அன்னார் இன்னும் கோயில்பணி செய்தலைக் கொண்டும், இழிதொழில் புரிதலைக் கொண்டும், மேற்போந்த கதைக் குறிப்புக்களைக் கொண்டும் வரலாற்றை ஒருவாறு ஊகஞ் செய்யலாம்.

தேவடியாள் தாசி

ஒரு காலத்தில் திருமண வாழ்விற்கு உரிய ரல்லாத சில பெண்மக்கள் அரண்மனைகளில் தொண்டு செய்து காலங் கழித்து வந்தார்களென்பது தெரிகிறது. பண்டை நூல்களில் வேலைக்காரிக்குக் கூனி என்ற ஒரு பெயர் வழங்கி யிருத்தல் காண்கிறோம். அரண்மனை வேலையை விரும்பாத வேறு சிலர், ஆண்டவன் கோயில்களில் தொண்டாற்றப் புகுந்திருப்பர். அவருடன் வேறு சில ஊனமில்லாப் பெண்மணிகளுஞ் சேர்ந்து ஆண்டவன் அருள்பெறப் பணியாற்றியிருப்பர். இப் பழக்கத்தால் கோயில்களில் சில தொண்டுகள் பெண்மக்களுக்கென ஏற்பட் டிருக்கும். அத்தொண்டாற்றி வந்த பெண்மக்கள் தேஅடியாள், தாசி என்று அழைக்கப்பட்டிருத்தல் வேண்டும். இச்சொற் களின் ஆட்சியால் அப்பெண்மணிகள் ஏற்ற தொண்டின் தன்மை நன்கு விளங்குகிறது. தேவனுக்குப் பணிசெய்யும் மகன் தே அடியான் – தாசன் – ஆகிறான்; அப் பணிபுரியும் மகள், தே அடியாள் – தாசி – ஆகிறாள்.

தாசி வேசையானது

ஆண்டவன் பணிக்கென வாழ்வு நடாத்திவந்த பெண் ணன்பர்கள், கோயில் அர்ச்சகர் – தர்மகர்த்தர் – முதலியவருடன் நெருங்கிப் பழகல் நேர்ந்தது. அப்பழக்கம் நாளடைவில் கூடா வொழுக்கத்தைக் கூட்டலாயிற்று. அன்று கோயில் தலைவர் களாக இருந்த ஆண் மக்கள் நிகழ்த்திய அடாத செயல், இன்று பெண்ணுலகையே கறைப்படுத்தி யிருக்கிறது. தேவனுக்கு அடிமை பூண்டோர் மற்றவர்க்கும் அடிமை பூண நேர்ந்தமை யால், தேவடியாள், தாசி என்னும் பெயர்கள் இழிபொருள் ஏற்கலாயின. இப்பொழுது அச்சொற்கள் குலமகளிரில் கடவுள் அடியவர்க்கு வழங்குவதில்லை. அவை விலைமகளிர்க்கே வழங்கி வருகின்றன. தொன்றுதொட்டு வரூஉம் வழக்கத்தால் இவ்வினத்தார் ஆண்டவன் பெயரால் பொட்டுக்கட்டி மானம் விற்கும் விலைமகளிராகிறார். இப் பழக்கம் நாட்டை விடுத்து அகலல் வேண்டும்.

கோயிலில் கூடா ஒழுக்கம்

விலைமகளிர், தேவடியாள் என்னும் பெயரால், இழி தொழிலுக்கெனப் பட்டாடை சுற்றி, அலங்கோல அணி யணிந்து, ஆடும் ஆட்டமும் பாடும் பாட்டும் வெறுக்கத்தக்கன. ஒழுக்கத்துக்கு நிலைக்களனா யிருக்கவேண்டிய திருக்கோயில், கூடாவொழுக்கத்துக்கு நிலைக்களனாய் ஊரைக் கெடுப்பதாய் விட்டது. தாய்மை என்னும் பேறு பெற்றுத் தெய்வநிலை எய்து தற்குப் போந்த பெண்வடிவம், தீச்சேர்க்கையால் தன்னிலை மறந்து, மானம் விற்றுப் பொருளீட்டுங் குறிக்கொண்டு ஆடுகிறது; பாடுகிறது. அக்காட்சி கண்டு களிக்கும் மக்கள் மக்களா? நாட்டிற் பிறந்தவர்களா? அவர்கள் பெண்ணுடன் பிறக்க வில்லையா? பெண்ணுடன் வாழவில்லையா? அவர்கள் உள்ளத்தில், ஆடுகின்றவள் பெண்; பாடுகின்றவள் பெண். இவள் எற்றுக்கு இக்கோலத்தோடு ஆடுகிறாள்? பாடுகிறாள்? நமது பேதைப் பொருள் பறிக்கவேண்டும் என்னும் நோக்குடன் அன்றோ? நமது வீட்டுச் சகோதரிக்கும் இவளுக்கும் என்ன வேற்றுமை? என்னும் எண்ணம் உறல் வேண்டாவா? உற்றால் அவள் நல்வழிப்படுவாள்.

பாரத நாட்டிற் பிறந்த ஆண்மக்களே! மானம் விற்றலுக் கெனப் பிறப்பில் ஒரு சாதி நமது நாட்டில் ஏற்பட்டுள்ளது. இவ்விழிவை நினையுங்கள்; கோயில்களில் கூடாவொழுக்கம் பெருகுவதை நோக்குங்கள்; தீ யொழுக்கத்தால் நாட்டுக்கு நாசமுண்டு என்பதை உன்னுங்கள்; கூடா வொழுக்கத்தால் பின் வரும் உலகம் மெலிவதை எண்ணுங்கள். பெண் பிறவி நோக்கம் மானம்விற்றுப் பிழைப்பதா? நமது நாட்டிற் பிறந்த சகோதரிகள் வயிற்றுக்கு மானத்தையா விற்றல் வேணடும்? இழிவு! இழிவு! விலங்குகளும் வயிற்றுக்கென மானம் விற்பதில்லையே! நமது நாட்டிற் பிறந்த பெண்தெய்வங்கள் பிழைப்புக்கென மானம் விற்றல் என்ன இழிவு!

இழிவு யாருடையது?

இழிவு யாருடையது? நாட்டிற் பிறந்த ஆண் மக்களுடைய தன்றோ? நீண்ட நாள் பழக்கத்தால் – அறியாமையால் – அப் பெண்மணிகள் இழிதொழிலில் இறங்குகிறார்கள்; அதற்கு ஆண் மக்கள் ஏன் உட்படல் வேண்டும்? ஆண்மக்களிடை ஒழுக்கம் காக்கப்படின், பெண்ணுலகில் இழிவேது? ஆதலால், ஆண் மக்களே! பெண்ணுலகை இழிவுபடுத்த முன்னாதே யுங்கள்; பதியிலாப் பெண்மக்கட்குப் பெண்மையின் நோக்கத்தை அறிவுறுத்துங்கள். கூடாவொழுக்கத்தால் விளையுங் கேடுகளை அவர்கட்கு உணர்த்துங்கள்; உண்மை விளங்கப் பெறுவரேல் அவர்கள் பதியிலராக வாழ மனங்கொள்ளார்கள். அவர்களைப் பதியுடையராகச் செய்யுங்கள்; இதனினுஞ் சிறந்த தொண்டு ஒன்று உண்டுகொல்! இது பெருந் தேசத்தொண்டு; தெய்வத் தொண்டு. இத்தொண்டாற்ற முந்துங்கள்.

நாட்டிற் பிறந்த குலப்பெண்டிர்காள்! ஆடுகிறவர் யார்? பாடுகிறவர் யார்? பதியின்றி வாழ்வோர் யார்? உங்கள் இனத்த வரல்லவா? உங்கள் நாட்டிற் பிறந்த சகோதரிகளல்லவா? உங்கள் உலகு எனில் அவ்வுலகில் அவர்களும் அடங்கவில்லையா? அவர்கள் கறை உங்கள் உலகையும் கெடுக்கவில்லையா? அவர் களை நல்வழியில் திருப்புவது உங்கள் கடமையன்றோ? தாய்மார் களாகிய நீங்களல்லவா நாட்டைத் தூய்மைப்படுத்தல் வேண்டும்? பதியிலார் உள்ள மட்டும் உங்கள் வயிற்றிற் பிறக்கும் பிள்ளை கள் எங்ஙனந் தூயராவார்கள்? பெற்ற பிள்ளைகளை நல்லவர் களாக்க நாட்டில் பதியிலாரை ஒழுக்கத்தில் பண்படுத்தல் வேண்டுமன்றோ? சகோதர உரிமைகொண்டு- இனஉரிமை கொண்டு- வழுக்கி வீழ்ந்த சகோதரிகளைத் தூக்கிவிடுங்கள்.

விலைமளிர் கூட்டப் பெருக்கம்

பதியிலார் என்னுங் குலத்தவர் மட்டும் இப்பொழுது விலைமகளி ராகிறாரில்லை. வேறு பல குலத்தினின்றும் பல காரணங்களால் ஒதுக்கப்பட்ட சகோதரிகளும் விலைமகளிரா கிறார்கள். நாளுக்கு நாள் விலைமகளிர் கூட்டம் பெருகுகிறது. இழிதொழிற்கென வீடுகள் – விடுதிகள் – வாணிபங்கள் – தரகு கள் – முதலியன பெருகுகின்றன. இதற்கு வறுமை ஒரு காரணம்; பொதுவாக நாட்டில் – சிறப்பாக ஹிந்து மதத்தில் – பெண்ணுல கிற்கு ஏற்பட்டுள்ள கட்டுப்பாடு மற்றொரு காரணம்; இக்கால நாகரிகம் இன்னொரு காரணம். வேறு சில காரணங்களுமுண்டு.

கூடாவொழுக்கத்தால் விளையுங் கேடுகளைப் பற்றி இந்நூலில் பல இடங்களில் பேசியிருக்கிறேன். அது குறித்து ஈண்டுஞ் சில மொழி பகர விரும்புகிறேன்.

முதலாவது கூடாவொழுக்கத்தால் உடலுக்குக் கேடு விளையும் என்பது உன்னற்பாலது.

உற்ற வயதில் ஒருத்தியும் ஒருவனும் சேர்ந்து வாழல் வேண்டும் என்பதற்குச் சொல்லப்படுங் காரணங்களுள் உடல் நலன் பேணுவதும் ஒன்று. விபசாரத்தால் அந்நலன் நேர்வ தில்லை; நலனுக்குப் பதிலாகக் கேடு நேரும்.

பொருட்பெண்டிர் இன்பம் இன்பமாகாது

உடல்நலனுக்கு ஊற்றா யிருப்பது இன்பம். இன்பம் அன்புள்ள இடத்தில் பிறக்கும். பொருட் பெண்டிரிடத்தில் அன்பு உண்டா? அவர்கருத்துப் பொருளிலேயே பதிந்து கிடக்கும். பொருளுக்கு மானம் விற்றலை அன்னார் தொழி லாகக் கொண்டிருக்கிறார். பொருளில் படியுங் கருத்து, அன்பில் எங்ஙனம் படியும்?

அன்பில்லாரிடத்தில் கூடுவது, செயற்கை முறையென்பது, முன்னர்ச்சில இடங்களில் குறிக்கப் பெற்றிருக்கிறது. ஈண்டு மீண்டும் அதனை வழிமொழிந்து வலியுறுத்துகிறேன்.

ஒருவன் ஒருத்தியுடன் கூடும்போது, அதன் பயனாக அவனது சுக்கிலம் இவளது கருவில் நுழைகிறது. அச்சுக்கிலச் செலவை ஈடு செய்யக் காதலியினிடத்திருந்து ஏதாயினும் ஒன்று காதலனுள் நுழைதல் வேண்டும். அப்படி ஒன்றுண்டா? உண்டு. அஃதென்னை? அஃது உடலை ஓம்பும் ஒருவிதச் சத்து. அச் சத்து எல்லாரிடத்தும் எப்பொழுதும் கூடும்போதெல்லாந் தோன்றாது. ஈருயிரை ஒன்றுபடுத்திப் பிணித்துள்ள அன்பு காரணமாக அச் சத்துப் பிறக்கும். அன்பில்லா இடத்தில் அது பிறவாது.

விலைமகளிர் உள்ளம் பொருளில் படிந்து கிடக்குமா? அல்லது அன்பில் படிந்து கிடக்குமா? இதைச் சொல்லலும் வேண்டுமா? ஒருத்தியின் உள்ளத்தூறும் அன்பு, கலவியின் போது, கருப்பையின் இன்பச் சினையுறுப்புக்களின் நுனிகளைக் கிளர்ந்தெழுப்பும். அவ்வெழுச்சியினின்றும் பிறப்பது சத்து. அதுவே உடலை வளர்க்கும் அமிழ்தம். அச்சத்து, பொருட் பெண்டிரிடத்தில் தோன்றாது. இதனால் பொருட்பெண்டிர் கலப்பு இயற்கையின் பாற்பட்ட தாகாது என்று தெளிக. அது செயற்கையின் பாற்பட்டதே. பொருட் பெண்டிர் சேர்க்கைக் கும், 1முஷ்டிமைதுனம் போன்ற செயற்கை முறைகட்கும் என்ன வேற்றுமை? ஒரு வேற்றுமையுமில்லை. இந்நுட்பமுணர்ந்தே ஆசிரியர் திருவள்ளுவனார்.

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில்பிணந் தழீஇ யற்று

என்றும்,

வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்
பூரியர்க ளாழும் அளறு

என்றும் உலகிற்கு அறிவுறுத்தியிருத்தல் காண்க.

இருபாலார்க்குங் கேடு

பொருட் பெண்டிர் கலவியால் ஆடவர்க்கு உடல்நலன் விளைவதில்லை என்பது கருதத்தக்கது. இந்நலக்கேடு பெண்டிர்க் கும் உண்டோ எனில் உண்டு என்க. கலவியில் அமிழ்தச்சத்துப் பிறவாமையால், பெண்டிர்க்கு உறுப்புக்களில் வெம்மை எழுந்து நாளடைவில் அவரை நோய்வாய்ப்படுத்தும், ஆதலால், பெண்டிர்க்குங் கேடு உண்டென்க.

நோயெரி

பொருட்பெண்டிர் கூட்டுறவால் உடல்நலன் கூடா தொழியினும், வேறு பல கேடுகள் விளையாமலிருந்தால் போதும். இயற்கைக்கு மாறுபட்ட விபசாரத்தால் கேடு விளையாமற் போகுமோ? கோணிய வழியில் புகுவோரை இயற்கை அன்னை வாளா விடுவளோ? விடாள்! விடாள்! அவரை ஒருத்தே தீர்வள். உடலோம்பும் அமிழ்தச் சத்துக்குப் பதிலாக வெம்மை எழுகிறது என்பது மேலே சொல்லப்பட்டது. வெம்மை காம வெறியனுள் நுழைகிறது. அது முதிர்ந்து முதிர்ந்து எரியாய் வெள்ளையாய்க் கொறுக்காய் மேகரணமாய் ஐயனை அரிக்கத் தொடங்கும். பொருட்பெண்டிர் இன்பப் பயன் இப் பொழுது ஐயனுக்குப் புலனாகும். பெண்டிர்க்கும் நாளடைவில் நோய்த்துயர் மிகும்.

வேறு சில கேடுகள்

இன்னும் சில கேடுகளும் உண்டு. இருவர்க்கும் மன அமைதி கிடையாது. பதியிலா ஒருத்தி மீது எத்துணைப் பேர் கருத்துப் பதியும்? ஒவ்வொருவருந் தத்தங் கருத்து முற்றுறப் போதரும் போழ்து, எத்துணைப் பொறாமை போர் பிணக்கு முதலியன நிகழும்! கொலைகளும் தற்கொலைகளும் நிகழும்! மூர்க்கர் சிலர் பதியிலாப் பெண்டிரை எவ்வெவ்வழியிலோ அலைப்பர்! இவ்வளவு துன்பம் எற்றுக்கு? ஒருவனுடன் வாழும் வாழ்க்கையில் இத்துன்பம் விளையுமோ? திருமணஞ் செய்து ஒருவனுடன் வாழும் ஒருத்தியின் மீது, மற்ற ஆடவர் மனம் பெரிதுஞ் செல்வதில்லை. பதியிலாப் பெண்ணின் மீது பலர் நாட்டம் செல்வது இயற்கையாய் விட்டது. பதியின்றி வாழ்வது பலதிற இடுக்கண்களுக்குக் காரணமாக நிற்கிறது.

விபசாரத்தில் மூழ்குவோர் உடலுரம் இழக்கின்றமையால் அடிக்கடி போகம் விரும்புவர். போகத்துக்குப் போதிய உடலுரம் இன்மையால் போலி எழுச்சி பெற வேண்டி மதுபானஞ் செய்யல் நேரும்; புளி காரம் மிகுந்த புலால் உணவு உண்ணல் நேரும்; கொடிய மருந்துண்ணல் நேரும்.

மேலும் இளம் மைந்தரின் பொருளெலாம் போகும். அவர் ஆண்டன்மையும் இழப்பர்; நோயெரியில் வேவர்; நரகத் துன்பம் அடைவர் பாவம்! பதியிலாப் பெண்டிர் நிலையும் இவ்வாறே முடியும். இவ்வாறு சாதலா பிறவியின் நோக்கம்!

விபசாரக்காரர் முடிவு இவ்வளவில் தொலைவதில்லை. இவர் நோயும் பிறவும் இவர் வழி வழி உலகிடைப் பரவி வளரும். பதியிலா வாழ்வால் உலகிற்கு எவ்வளவு கேடு!

கூடாவொழுக்கத்தார்க்குப் பிறக்கும் பிள்ளைகள் தங்கள் தாய் தந்தையர் பெயர்களையுஞ் சொல்லக் கூசுகிறார்கள். தாய் தந்தையர் மதியீனம் மைந்தர் மதிப்பையும் போக்குகிறது. தாய் தந்தையர் அறியாமைக்கு மைந்தர் என் செய்வர்!

ஒருவனுடன் வாழல்

பதியிலாக் குலத்தில் நல்லோரும் இருக்கின்றனர். ஒருத்தி, ஒருவனுடன் காலங் கழிக்க உறுதி கொள்கிறாள். அவ்வொரு வன் வேறொரு மனைவி இல்லாதவனா யிருத்தல் வேண்டும். அப்பொழுது அவன் அவளுக்குக் காதல் தலைவனாவன். அவனுடன் வாழும் ஒருத்தியைப் பதியிலார் உலகில் சேர்ப்பது அறியாமை. சாதிப்பேய்கள் அவளை என்ன கூறினுங் கூறுக. அவள் இயற்கைச் செந்நெறியில் நின்று வாழ்வு நடாத்தும் நங்கையாகிறாள். உலகின் பொருட்டு இருவரும் வெளிப்படை யாகத் திருமணஞ் செய்வது நலம். அதற்குரிய அஞ்சா நெஞ்சம் ஆண்மகனுக்குத் தேவை. சாதிப்பேயை ஓட்டுதற்குரிய வழிகளுள் இஃதும் ஒன்று.

வைப்பாட்டியா யிருத்தலுங் கூடாது

பதியிலார் குலத்திற் பிறந்த சிலர், முன்னோர் உரிமைப் பொருளுடையவரா யிருக்கிறார்; சிலர் இசை பாடியும் நாட்டியம் ஆடியும் பெரும் பொருளீட்டுகிறார். இவர் பொருள்கருதிப் பிறரிடம் இழிதொழிலில் இறங்குகிறாரில்லை. இன்பத்துக்கென இவர் ஒவ்வொருவர் ஒவ்வொருவனுடன் கலக்கிறார். அவனை யன்றி மற்றவரைக் கனவிலும் இவர் கருதுவதில்லை. இது போற்றற் குரியதாயினும் இதிலும் ஒரு குறைபாடுளது.

இவர்தம் இன்பநாயகனுக்கு மணஞ்செய்த மனைவி மற்றொருத்தி இருப்பள். மனைவியுடைய ஒருவனுடன் கூடி வாழ்வதால் இவர்க்குப் பதியிலார் பெயர் ஒழியாமலிருக்கிறது. அவனும் இவரை வைப்பாட்டி என்றே சொல்லிக் கொள்வான். ஆதலால், இவள் பதியிலார் என்னும் பழிபோக்க, மனைவி யுடன் வாழும் ஒருவனுடனும் கூடுதலை ஒழித்து, வேறு எவரையும் மணம் புரியாத ஒருவனை மணஞ் செய்வது அறம். மனைவியுடன் வாழும் ஒருவனது சேர்க்கையைப் பதியிலார் விரும்புதலாகாது.

பெண்ணுலகில் பதியிலார் என்றொரு கூட்டம் இருத்தல் இழுக்கு; அதினும் அதற்கென ஒரு சாதியார் ஒதுக்கப்பட் டிருத்தல் பேரிழுக்கு. இவ்விழுக்கைப் போக்க அறிஞர் முயல்வாராக.

பதியிலார் உலகைத் தூய்மைப்படுத்தல்

இழிதொழிலுக்கெனக் குறிக்கப்படுஞ் சாதி வழக்கு முதலாவது தொலைதல் வேண்டும். அஃது எப்படித் தொலை யும்? அப்பெண் மக்களிடைத் திருமணப் பழக்கம் பரவல் வேண்டும். அவர்கள் வழித் தோன்றும் பெண்மணிகளைத் திருமணம் செய்யும் அஞ்சா நெஞ்சம் ஆணுலகுக்குத் தேவை. பதியிலார் குலத்தில் பெண் கொள்வது இழிவு என்னும் எண்ணம் ஆண் மகனிடம் உதித்தல் கூடாது. பதியிலார் குலம் என்றொன்று இருத்தல் நாட்டுக்கு எவ்வளவு இழிவு? எவ்வளவு கேடு? இழிவையும் கேட்டையும் போக்க வேண்டுவது எவர் கடமை? தேசத்தார் கடமையன்றோ? இழிவையும் கேட்டையும் எப்படிப் போக்குவது? வாய்ப் பேச்சாலா? எழுத்தாலா? செயலில் போக்குதல் சிறப்பு. அதற்குத் திருமணமன்றி வேறு வழி என்னை?

பதியிலாருள் ஒரு பெண்ணை மணப்பது இழிவு என்று ஆண்மகன் கருதலாகாது. அங்ஙனங் கருதுவோன் தன்னலத் தனாவன். அன்னான் நாட்டின் நலத்தை நாடுவோனாகான். அம்மணத்தில் இழிவும் இல்லை; அதன்கண் பெருமையே உண்டு. அதை இழிவாகக் கொள்ளினும், நாட்டின் இழிவைப் போக்க ஒருவன் இழிவு மேற்கொண்டா லென்னை? அஞ்சா நெஞ்சமும், நாட்டினிடத்து மெய்யன்பும், தியாக உணர்வும் வேண்டற்பாலன. பதியிலாரைத் திருமணஞ் செய்ய வெள்கும் மனம் அவர்மாட்டுத் துயில் நீத்துவர வெள்குவதில்லை! வெட்கம்! வெட்கம்! விபாசரத்துக்குச் சாதியில்லை! மதமில்லை! வெளிப்படையாகத் திருமணஞ் செய்தற்குமட்டும் சாதியும் மதமும் குறுக்கிடுகின்றன! இழிவு! இழிவு!

ஒருத்தியுடன் வாழும் நோன்பு

பெண்ணுலகில் பதியிலார் கூட்டம் என்று ஒன்று நிலவு தற்குக் காரணமாயிருப்பது ஆணுலகென்று அடிக்கடி சொல் கிறேன். ஒருத்தியுடன் வாழும் நோன்பு, ஆணுலகில் நிலவினால், பதியிலார் கூட்டம் எங்ஙனம் தோன்றும்? ஆண் மக்களின் காம வெறி, பதியிலார் கூட்டமாகப் பரிணமித்திருக் கிறது. பதியிலார் கூட்டத்தால் நேரும் இழிவு, பழி, பாவம் முதலியவற்றிற்குக் காரணராயிருப்பவர் ஆண்மக்களே யாவர். இது குறித்து மகாத்மா காந்தி உலகிற் கறிவுறுத்தியுள்ள பொன்னுரைகளுள் சில வருமாறு:-

பெண்மக்கள் தூய்மைக்கு நாம் காரணரா யிருத்தல் வேண்டும்.

மனிதன்பாலுள்ள விலங்கு, பெண்மக்களைப் பொருட் பெண்டிராக்குகிறது.

காமவேட்கைக்கென ஒரு பெண்மகளை அர்ப்பணஞ் செய்யுங் குணம் நம்பாலுள்ளவரை, ஆண்மக்களாகிய நாமனை வரும் வெட்கத்தால் தலைகுனிய வேண்டியவரே. கடவுளின் உயரிய படைப்பாகிய பெண் மக்களை நமது காமவேட்கைக்கு இரையாக்கி விலங்காவதைப் பார்க்கிலும் மனிதக் கூட்டமே அழிந்துவிடுவது சாலவும் நன்று.

மானமுள்ள இந்தியாவில் ஒவ்வோர் ஆண்மகனும் தன்னுடைய சகோதரி போல் (மற்றப் பெண்மணிகளைப் ) பாவித்தால் பெண்மக்களின் நல்லொழுக்கங் காக்கப்படும்.

இந்திய மக்களை ஒவ்வொருவரும் தம் சகோதரர் அல்லது சகோதரி என்று கொள்ளும் பேராண்மையே சுயராஜ்யம்.

ஒருவன் ஒருத்தியுடனும் ஒருத்தி ஒருவனுடனும் கூடி இன்ப வாழ்க்கை நடாத்தல் வேண்டுமென்று இந்நூலில் ஆங்காங்கே வலியுறுத்தி வருகிறேன்; பெண்ணுரிமையில் திருவள்ளுவர் உள்ளம் என்னும் இடத்தில் சிறிது கூறியுள்ளேன். அதை யொட்டி ஈண்டுஞ் சில உரை பகர விரும்புகிறேன்.

உரிமையில் ஆணுக்கு உயர்வு, பெண்ணுக்குத் தாழ்வு என்பதில்லை. கட்டுப்பாட்டுக்கு, ஆண் அடங்கி நடத்தல் வேண்டுவதில்லை; பெண் மட்டும் அடங்கி நடத்தல் வேண்டும் என்னும் நியதி இயற்கையில் இல்லை. இயற்கை நிலை இவ் வாறாகச் சில இடங்களில் ஆண்மகன், பல பெண்களை மணக் குங்கொடுமை யாண்டிருந்து பிறந்தது? அக்கொடுமை ஆணுல கத்தினின்றுமே பிறந்திருத்தல் வேண்டும்.

திருவள்ளுவர்

ஒருவன் ஒருத்தியுடன் வாழ்தலே செம்மையறம் என்பதை ஆசிரியர் திருவள்ளுவனார் தமது திருக்குறளில் பல இடங்களில் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் விளக்கி யிருக்கிறார். இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தில், ஒருவன் ஒருத்தியுடன் வாழ்வதே அறம் என்னுங் கருத்துப்பட அவர் அருளிய குறள் களில் சில இந்நூலில் பெண்ணுரிமையில் எடுத்துக் காட்டப் பட்டன. இன்னுஞ் சில குறட்பாக்கள் வாயிலாக அவரது உள்ளக் கிடக்கையைக் கிடத்த முயல்கிறேன்.

திருக்குறளில் பிறனில் விழையாமை என்றோர் அதிகாரம் இருத்தல் அன்பர்கட்குத் தெரியும். அவ்வதிகாரம், ஒருவன் ஒருத்தியுடன் வாழ்தல் வேண்டுமென்பதையும், மற்றொருத்தியை அவன் நாடுதல் கூடாதென்பதையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கச் செய்கிறது. அது வருமாறு:-

பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில்.

அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற் பேதையா ரில்.

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரிற்
றீமை புரிந்தொழுகு வார்.

எனைத்துணைய ராயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.

எளிதென இல்லிறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனொன்றோ வான்ற வொழுக்கு.

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பில்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.

இக் குறட்பாக்களில் யாண்டாயினும் ஆண்மகன் பிற மாதரை விழைவது கூறப்பட்டிருக்கிறதா என்பதை அன்பர்கள் உற்று நோக்குவார்களாக. இவ்வதிகாரம், ஒழுக்கமுடைமை என்னும் அதிகாரத்தைத் தொடர்ந்து நிற்றலுங் கருதற்பாலது. ஒழுக்கத் துறைகளுள் தலையாயது – உயிர் போன்றது- பிறனில் விழையாமை என்பதையன்றோ அத்தொடர்பு அறிவுறுத்துகிறது?

பிறனில் விழைதல் பாவம்? என்று சிலர் கருதலாம். அஃதும் இயற்கைக்கு மாறுபட்ட மறச் செயலேயாகும். ஒருவன் ஒருத்தியுடன் வாழக் கடமைப்பட்டிருக்கிறானே யன்றி, எக்காரணம் பற்றியும் எம்மாதரையும் நண்ணும் உரிமை அவனுக்கில்லை என்பதே ஆசிரியர் திருவள்ளுவனார் உட்கிடக்கை. அவர் வரைவின் மகளிர் கூட்டுறவையும் கடிந்து கூறியுள்ளது வருமாறு:-

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொ லிழுக்குத் தரும்.

பயன்றூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்றூக்கி நள்ளா விடல்.

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று.

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.

பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.

நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.

ஆயு மறிவின ரல்லார்க் கணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.

வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்
பூரியர்க ளாழும் அளறு.

இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறுந்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.

சிலர் புராணக் கதைகளையும் பிறவற்றையும் எடுத்துக் காட்டுவர். இவர் ஒழுக்கத்தில் நாட்டமுடையவராகார். சில தத்துவ நுட்பங்களைப் பெண்ணாக உருவகப் படுத்திக் கவிகள் பாடியதைப் பொருளாக் கொள்வது மடமை. அவற்றைக் காட்டி உலகை ஏமாற்றப் புகுவது கயமை. ஒருவன் ஒருத்தியுடன் வாழ்தலே அறம்; அறம். பல பெண்களை ஒருவன் மணக்கலாம் என்னுங் கட்டுக்கதைகள் இனி ஒதுக்கப்படல் வேண்டும்.

விபசாரக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தல்

பிறப்பால் பதியிலார் என்று சொல்லப்படுங் கூட்டத்தின் குறைபாடுகளை நிறைவு செய்தல் அரிதன்று. உலகில் பொதுவாக வுள்ள பதியிலா விபசாரக் கூட்டத்தைச் சீர்செய்வது மிக அரிது. இக்கூட்டம் பெருகுதற்குக் காரணம் வறுமையாயிருத்தலால், அறவோர் ஆங்காங்கே விடுதிச் சாலைகள் அமைத்து, அப்பெண் மணிகட்குச் சோறு கூறை உதவி, கல்வி கற்பித்து, கைத்தொழில் போதித்து, விரும்புவோர்க்கு மணஞ் செய்து வைப்பது நலம். நாட்டில் செல்வர் பலர் இல்லாமலில்லை. அன்னார் மனம் இத் துறையில் திரும்புதல் வேண்டும். ஏழைப் பெண்மக்கட்கென ஓர் அறச்சாலை அமைப்பது எத்துணையோ வேறு பல அறச்சாலை கள் நிறுவிய பயனை நல்கும். செல்வர் தமது செல்வத்தை இவ்வறத் துறையில் பயன்படுத்துவாராக. அரசு, செல்வத்தைப் பொதுமை யாக்கின் வறுமைப் பேயே மாண்டு போகும்.

செல்வர்களால் பெண்ணுலகங் கெடல்

உலகில் செல்வரே பல கேட்டிற்குங் காரணராயிருத்தல் கண்கூடு. ஏழைத்தொழிலாளர் உழைப்பால் பெறுஞ் செல்வத்தை முதலாளிகள் பலதிறக் களியாடல்களுக்குச் செலவு செய்தல் பெருந்தவறு. களியாடல்களுள் பெண்மக்களைக் கற்பழிக்கும் ஆடல் தலையாயது. செல்வர்க்குப் பெண் வடிவங்கள் என்ன வாகத் தோன்றுகின்றனவோ தெரியவில்லை. பெண் ஒரு களிப் பொருள் என்பது அன்னார் கருத்துப் போலும்!

செல்வர் பொருட்டுப் பதியிலாப் பெண்மக்கள் தங்கள் நிலையை மறந்து, தங்களை ஒரு விலைப் பொருளாகக் கருதி வாழ்கிறார்கள். செல்வர் கொடுமையால் பெண்மக்களின் தெய் விகமும் கரந்து நிற்கிறது. தெய்வப் பெண்களைப் பேயாக்குஞ் செல்வர் ஆண்டவனை உணரும் நாளும் உண்டோ? பெண்ணைத் தெய்வமாகப் போற்றும் ஒரு நிலை பெறுவோன் கடவுளைக் காணும் அன்பனாவன்; அருளாளனாவன்.

உலகில் பதியிலார் கூட்டம் என்றொன்று இல்லாதவாறு ஒழிக்க ஆங்காங்கே அன்பும் அறிவும் வாய்ந்த பெரியோர் முயல்வாராக. அவர் முயற்சிக்கு இயற்கையும் இறையும் துணைசெய்யும். இயற்கை இறையின் நோக்கம் பெண்ணுலகில் பதியிலார் இருத்தல் வேண்டுமென்பதன்று. செயற்கை ஒழிய, இயற்கை இறையும் துணைபுரியும். உலகில் பதியிலாக் கூட்டம் ஒழிக; ஒழிக. பெண்ணுலகில் கறை அழிக; அழிக. பெண்ணுலகு ஓங்க; ஓங்க.

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொ லிழுக்குத் தரும்

-திருவள்ளுவர்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !