பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை
திரு. வி. கலியாணசுந்தரனார்

9. பிள்ளைப்பேறு

(பெண்ணின் பெருமை பிள்ளைப் பேற்றில் – பிள்ளைப் பேற்றின் மாண்பு – குழந்தை இன்பம் – பிள்ளைப் பேற்றிலுள்ள நலன்கள் – நற்பிள்ளைப் பேற்றிற்குப் பொறுப்பாளர் – உடல் நலனும் ஒழுக்கமும்- கருவுற்ற காலத்தில் கொள்ளத்தக்க முறைகள் – பிள்ளைப் பேற்றில் அச்சம் – இக்கால நாகரிகம் – கருத்தடை – கருச்சிதைவு – தாய்தந்தையர் அன்பே குழந்தை – சோமாகந்த மூர்த்தம்.)

கல்லா மழலைக் களியுறல் கலந்து கொஞ்சும்
சொல்லா லுருக்கி அழுதோடித் தொடர்ந்து பற்றி
மல்லார் புயத்தில் விளையாடு மகிழ்ச்சி மைந்தர்
இல்லா தவர்க்கு மனைவாழ்வின் இனிமை என்னாம்.

-வில்லிபுத்தூரார்.

பெண்ணின் பெருமை, மணத்துடன் நிற்கவில்லை; இன்ப வாழ்வுடன் முடியவில்லை. மற்றுமொன்றில் அவள் பெருமை பிறங்குகிறது. அஃது எது? அது பிள்ளைப்பேறு.

பிள்ளைப்பே றில்லையேல் தாய்மை ஏது? பெண் பிறவி யின் நோக்கம் தாய்மைப்பேறு பெறுவதன்றோ? வாழ்விற்குரிய தொண்டு தியாகம் அன்பு முதலியன நிலவுதற்கு நிலைக்களன் தாய்மையன்றிப் பிறிதென்னை? அத்தாய்மையை அளிப்பது பிள்ளைப்பேறு.

பிள்ளைப் பேற்றின் மாண்பு

பிள்ளைபேறு, தாய் தந்தையரை இயற்கை நெறியில் நிறுத்தும்; உலக வளர்ச்சிக்குத் துணை புரியும்; இறைவன் அருள் நோக்கத்தை நிறைவேற்றும்; பெற்றோரது அன்புக் கண்ணைத் திறக்கும்; உயிர்களிடத்து அன்புகொண்டு தொண்டு செய்யுமாறு அவரை உந்தும்; வேறு பல வாழ்வுத் துறைகட்கும் உதவி செய்யும்.

வாழ்வை இன்பமயமாக நடாத்தல் வேண்டுமென்பது இயற்கையின் நோக்கம். தொடக்கத்தில் இன்பம் கல்வி வாயி லாகப் பிறக்கும்; பின்னைத் திருமண வாயிலாக விளையும்; முடிவில் பிள்ளைப்பேறு வழியே நிலைபெறும். பிள்ளைப் பேற்றில் ஒரு தனிச் சிறப்புண்டு. அது சோர்வு போக்குவது. சோர்வு கல்வியில் தோன்றுவதுண்டு; தொழிலில் தோன்றுவ துண்டு. நாயகனுக்கு நாயகி இடத்திலும், இவளுக்கு அவனிடத் திலும் சோர்வு தோன்றுவதுண்டு. பிள்ளையின்பாலோ எச்சோர்வும் தோன்றுவதில்லை. வாழ்வில் சோர்வு தோன்றி, இன்பம் மறையும் வேளையில், பிள்ளை பிறந்து, சோர்வைப் போக்கி, இன்பத்தை நிலைபெறுத்துகிறது. ஆதலால், இன்ப வாழ்விற்குப் பிள்ளைப்பேறு இன்றியமையாதது.

வாழ்வில் எல்லாமிருந்தும் பிள்ளைப்பே றொன்றில்லை யேல் மற்றவைகளால் என்ன பயன்? எல்லாவற்றிலுமுள்ள இன்பத்தை நுகர்விப்பது பிள்ளைப்பேறு. ஒருத்தியும் ஒருவனும் சேர்ந்த வாழ்வால் வீடு உண்டாகும். அவ்வீட்டில் இன்ப முண்டாக்குவது பிள்ளைப்பேறு. வாழ்வில் இருள் போக்கும் மணி விளக்கு, பெண் என்று மேலே சொன்னேன். அம்மணி விளக்கு உமிழுஞ் செங்கதிர், பிள்ளை என்று ஈண்டுச் சொல் கிறேன். மணியிடைக் கதிர்வரு திறம் போல் என்றார் கச்சியப்பர்.

பிள்ளைப் பேற்றின் பெருமையை மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் – நன்கலம் நன்மக்கட்பேறு என்று திருவள்ளுவனார் விளக்கி யிருத்தல் காண்க.

பிள்ளையில்லா வீட்டில் வாழும் தலைவியையும் தலை வனையும் பிணியாளர் என்று கூறல் மிகையாகாது. புறத்தே பலதிறத் தொழில் செய்து வீடு சேரும் நாயகனும், அகத்தே பலதிறத் தொண்டாற்றி அமரும் நாயகியும் எத்துணை நாள் ஒருவரை ஒருவர் பார்த்திருப்பர்? எத்துணைநாள் அதையும் இதையும் பேசிக் கிடப்பர்? எத்துணை நாள் ஆடலிலும் பாடலிலும் கழிப்பர்? திருமண வாழ்வின் தொடக்கத்தில் நோக்கும் பேச்சும் ஆடலும் பாடலும் இன்பூட்டிக் கொண்டி ருக்கும். நாளடைவில் அவ்வூட்டம் குன்றும். நாயகன் வேறு களியாடல்களுக்குச் சென்று உணவுக்கு வீட்டுக்கு வருவன். நாயகி தன்னந் தனியளாய் எண்ணாதன எண்ணித் தூங்கி விழுவாள். குழந்தை ஒன்றிருக்குமேல் சோர்வு நீங்கும்; இன் பூட்டம் பெருகும். புறத்தே வேலை செய்துவருந் தலைவனின் சோர்வையும், அகத்தே வேலை செய்து அயரும் தலைவியின் சோர்வையும் போக்கும் அமிழ்தம் குழந்தை யென்க. குழந்தை யின் ஆடல் பாடல் கேட்கும் தாய் தந்தையரே தவமுடையார். அவர் வாழ்க.

குழந்தை இன்பம்

குழந்தையின் ஆடலைக் காணக் கண்கள் படைக்கப் பட்டன. குழந்தையின் மழலைப் பாடலைக் கேட்கச் செவிகள் படைக்கப்பட்டன. குழந்தையின் கையூறலைப் பெற உடல் படைக்கப்பட்டது. அவ்வாடல் இனியது; இப்பாடல் இனியது என்று எவர் கூறுவர்? குழந்தையின் ஆடல் பாடலைக் காணாத-கேளாத – பாவிகள் அங்ஙனங் கூறுவார்கள். குழவி இன்பத்தைச் செவ்வனே நுகர்ந்து, இயற்கை அறவோராகிய திருவள்ளுவனார், குழவி ஓசையாகிய ழகர ஓசை பொதுள, குழலினிது யாழினிது என்பதம் மக்கள் – மழலைச்சொல் கேளா தவர் என்று மொழிந்து, மேலும் மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றவர் – சொற்கேட்டல் இன்பஞ் செவிக்கு என்றும் அருளியிருத்தல் காண்க.

பிள்ளையால் வீட்டுப் பிணக்கு நீங்குதல்

நாயகனையும் நாயகியையும் பிணித்துள்ள அன்புக் கயிற்றுக்கு ஊறு நேராவண்ணம் காத்து வருவது பிள்ளைப் பேறு என்று கூறலாம். சில வேளைகளில் இருவர்க்கும் பிணக்கு நேரலாம். பிணக்கு, பிள்ளையில்லா வீட்டில் வளரும். பிள்ளை யுள்ள வீட்டிலோ அது ஞாயிறு முற்பட்ட பனிப்படலம் போல் ஒழியும். அப்பெருமையுடையது பிள்ளைப் பேறு. குழந்தை விளையாடும் வீட்டில் துன்பம் ஏது? அஃதில்லா வீட்டிலோ? அந்தோ!

பிள்ளைப் பேற்றால் தியாகம்

பிள்ளைப் பேற்றால் வேறு பல நலன்களும் உண்டு. பிள்ளையை வளர்க்கத் தாய் தந்தையர் எத்துணை அன்புத் தொண்டு செய்கிறார்! பிள்ளைப் பேறில்லையேல் அத் தொண்டு அவர் மாட்டு அரும்புதலே அரிது. பயன் கருதிப் பெற்றோர் அத்தொண்டு ஆற்றுகிறாரோ? இல்லை. கைம்மாறு கருதாக் கடவுட்டொண்டு பெற்றோரிடம் வளர்ந்து வரப் பிள்ளைப் பேறு துணை செய்கிறது. ஒரு பிள்ளையை வளர்க்கப் பெற்றோர் எவ்வளவு தியாகத்துக்கு உட்படுகிறார்! மக்கட் பிறவியை உய்விக்க வல்லது தியாகம் என்பதை விளக்க வேண்டு வதில்லை. அத்தியாகம் பிள்ளைப் பேற்றில் இருக்கிறது.

பிள்ளை நலன் கருதித் தாய் தந்தையர் தமது நலன்களை யெல்லாஞ் சுருக்கிக் கொள்கின்றனர். பிள்ளைப் பேற்றால் தன்னலம் கெடுதலும் தியாகம் எழுதலும் காண்க. அன்புத் தொண்டு – தன்னலமின்மை – தியாகம் – முதலியன, பொறாமை வெகுளி அவா முதலிய மனமாசுகளைத் துடைப்பனவல்லவோ? மாசகன்ற இடத்திலன்றோ இன்பப்பேறு உண்டாகும்? எனவே, பிள்ளைப்பேறு இன்ப வாழ்விற்கு இன்றியமையாதது என்பது கருதற்பாலது. பிள்ளைப் பேற்றின் பெற்றி யுணர்ந்தே நம் முன்னோர் அது குறித்துப் பலபடப் பேசலாயினர். அவர் பிள்ளைப் பேற்றைப் பற்றிக் கூறாத இடமேயில்லை.

நற் பிள்ளைப் பேற்றுக்குப் பொறுப்பாளர்

வாழ்விற்குரிய இன்பப் பேற்றிற்கு உறுகருவியாயுள்ளது பிள்ளைப்பேறெனில், அதன்மீது தாய் தந்தையர் எத்தகைய கவலை செலுத்தல் வேண்டும் என்பதைச் சொல்லலுந் தேவையோ? பிள்ளை எனில் எல்லாம் பிள்ளைகளாமோ? பழிபிறங்காப் பண்புடை மக்கள் என்றார் திருவள்ளுவனார். பண்புடை மக்களைப் பெறும் பொறுப்பு யாருடையது? தாய் தந்தை யருடையது என்று எவருஞ் சொல்வர். நற்பிள்ளைப்பேறு தாய் தந்தையருடைய வாழ்வைப் பொறுத்து நிற்பது.

உடல் நலன்

உலகில் நற்பிள்ளைப் பேற்றையே தாய் தந்தையர் விரும்புதல் இயல்பு. வெறும் விருப்பத்தால் பயன் விளையாது. விரும்பிய வாறு நடக்கும் பயிற்சி தேவை. நற்பிள்ளைப் பேற்றிற்கு முதலாவது வேண்டற்பாலது உடல்நலன். நலன் பெறாத தாய் தந்தையர்க்கு நற்பிள்ளை பிறத்தல் அரிது. உடல் காப்பு, பெண் வளர்ப்பில் விளக்கப்பட்டது.

ஒழுக்கம்

உடல் நலனுக்கு ஒழுக்கம் உயிர்போன்றது. அவ் வொழுக்கங் காக்கவேண்டுவது தாய் தந்தையரின் தலையாய கடன். ஒருத்தி ஒருவன்பாலும், ஒருவன் ஒருத்திபாலும் வாழ்தல் அறம். கூடா ஒழுக்கத்தாலும், நிறை தவறுதலாலும் மக்களுக்கு விளையுங் கேடுகள் பல. தீயொழுக்க முடையார்க்குப் பிள்ளை பிறத்தல் அரிது; பிறப்பினும் கருவினில் அழிவதாய், கான்முளை யினில் அழிவதாய்த் தொலையும். அஃது ஒருவேளை பிழைத்து வளரினும் நோய் வாய்ப்பட்டுச் சூம்பி ஒழியும்; நோயில்லா தொழியினும் குருடு செவிடாகப் பிறக்கும்; இக்குறைகளில்லா தொழியினும் களியாய் மடியாய் உலகச் சுமையாய்க் கிடக்கும். பிள்ளை, நாட்டின் உடைமையாகலான், அதைப் பண்புடைய தாகப் பெறுதற்குரிய வாழ்வை நடாத்தத் தாய் தந்தையர் முயலவேண்டும்.

கூடாவொழுக்கமில்லாத சிலர்க்கும் நற்பிள்ளை பிறவா திருத்தற்குக் காரணமென்னை என்று சிலர் கருதலாம். அன்னார் வெவ்வேறு வழிகளில் தமது உடல் நலன்களுக்குக் கேடு சூழ்ந்தவராயிருப்பர். காப்பி தேயிலை கொக்கோ முதலிய பானங்களை அளவிற்கு மீறிப் பருகல், கள் சாராயம் முதலிய வற்றை அருந்தல், உடற்பயிற்சியின்றிச் சோம்பிக் கிடத்தல், அளவு கடந்த உழைப்பு, அகால உணவு, போதிய நேரம் உறங்காமை, புழுங்கிய இடத்தில் வதிதல், மீதூண் கொள்ளல், வரம்புமீறிப் பட்டினி கிடத்தல் முதலியன உடல்நலனைக் கெடுப்பன. இவைகளால் உறுப்புக்களில் வெம்மையெழும். வெம்மை, உறுப்புக்களின் சுறுசுறுப்பு – ஊக்கம் – எழுச்சி முதலியவற்றைப் போலியாகத் தொடக்கத்தில் கிளப்பிப் பின்னை அவைகளைக் குலைக்கும். பெண்மக்களின் கருவுறுப்புக் களோ மிக மெல்லியன. அவைகளில் வெம்மை ஏறினால் கருத் தங்கலும் அரிதாகும்; தங்கினும் அழியும். நற்பிள்ளைப் பேறு விரும்பும் தாய் தந்தையர், உணவு, உழைப்பு, உறக்கம் முதலிய வற்றில் அளவாயிருப்பாராக.

உணவு முதலியவற்றை ஒழுங்குபடுத்தி வாழ்வோர்க்கும் சில இடங்களில் நற்பிள்ளை பிறப்பதில்லை. இஃது எற்றுக்கு? ஒருத்தியும் ஒருவனும் இளமை தொட்டு உயிர்நிலைகளின் மீது கவலை செலுத்தி வந்ததைவிடத் திருமணத்தின் பின்னர் ஆயிரமடங்கு அதிகமாக அவற்றின்மீது கவலை செலுத்தல் வேண்டும். காம எரிக்கு எளியராய் ஒருவரோடொருவர் புணர்தல் கூடாது; பிள்ளைப்பேறு நினைவின்றி, வெறும் புணர்ச்சிமீது மட்டும் கருத்தைப் பதித்து அடிக்கடி கூடலா காது. போகத்தில் அளவாயிருத்தல் வேண்டும்; இல்லையேல், சுக்கிலம் நீத்து, நற்பிள்ளைப் பேற்றிற்கு இடர் செய்யும்.

திருமணஞ் செய்த சின்னாளுக்குள் பிள்ளை பெறுதலா காது. கருவுறுப்புக்கள் உரம் பெறுதற்கு முன்னர்க் கருவுயிர்த்தல் அவ்வுறுப்புக்களை மெலிவிப்பதாகும். மெலிவுற்ற கருவி னின்றும் பிறக்கும் பிள்ளை எங்ஙனமிருக்கும்? மூஞ்சூறுபோ லிருக்கும். வலிய திண்ணிய அழகிய அறிவுடைய பிள்ளைப் பேறே உலகிற்குப் பயனளிப்பதாகும். அதற்குரிய பெண் பருவம் அரிவைப் பருவமென்க. விரிவு, இந்நூல் திருமணத்தில் பார்க்க.

நற்பிள்ளைப் பேற்றிற்குத் தாய் தந்தையரது ஒழுங்குபட்ட வாழ்வே காரணம். நல்வாழ்வில் தலைப்படாத தாய் தந்தையர், சேர்க்கை தவிர்த்து வாழ்தல் முறைமையாம். அவர் ஈனும், ஊனமும் ஈனமும் நிரம்பிய பிள்ளைகளால் நாட்டுக்கு என்ன பயன்? உலகிற்கு என்ன பயன்?

கருவுற்ற காலத்தில் கொள்ளத்தக்க முறைகள்

பெண் கருவுற்றிருக்கும்போது அவள் மிகத்திறம்பட வாழ்வு நடாத்தல் வேண்டும். கருவுற்ற நாள்முதல் அவள் ஒன்றுஞ் செய்யாது வாளா கிடத்தல் கூடாது. வழக்கம் போல் நிகழ்த்திவந்த பயிற்சிகளை யெல்லாம் அவள் நிகழ்த்தி வரலாம். மனைவி கருவுற்ற வேளையில் கணவன் பெரும் பொறுப்புடன் அவளைக் கவனித்து வருதல் கருணையாகும். அச்சம் – ஐயம் – கவலை – பொறாமை – வெகுளி – முதலிய கனல்கள் மனைவி மனத்தில் மூளாவண்ணம் நாயகன் நடந்துவரல் நன்மை பயக்கும். இக்கனல்கள் கருக்குழியை எரிக்கும். கருவுற்ற வேளையில் பெண் மகள் சிலபோழ்து காய்ந்து விழுவதுமுண்டு. நாயகன் பொறுமை யுடன் அவள் காய்வை ஏற்பானாக.

மற்றுமொன்றை ஈண்டுச் சிறப்பாகக் குறிப்பிட விரும்பு கிறேன். அது, மனைவி கருவுற்றிருக்கும்போது மெய்யுறு புணர்ச்சி நிகழ்த்தலாமா என்பது. இது குறித்துப் பலதிறக் கருத்து வேற்றுமைகளுண்டு.

உடற் கூற்றுக்கு ஏற்ற வண்ணம் கூடுதல் நிகழ்ந்து வருகிறது. சிலர் மூன்று ஐந்து ஏழு மாதம் வரை கூடிக் குலாவுவர்; சிலர் பிள்ளை பிறக்கும்வரை அவ்வினை நிகழ்த்துவர். கருவுற்ற வேளையில் பெண்ணுக்கு இயல்பாகக் கிளர்ச்சி மிகும். கிளர்ச்சி மேலீட்டான், சில சமயம் பெண்மகள் (எல்லாருமல்ல; சிலர்) நாயகன்பால் நெருங்குதலுமுண்டு. அவ்வேளையில் மனைவி வேண்டுதலுக்கு இரங்காது மறுக்குங் கணவன் இல்லாம லில்லை. மறுப்புக்குக் காரணம் மனைவிமீதும், அவள் வயிற்றி லுள்ள குழவி மீதுங் கொண்ட இரக்கமே யாகும். இரக்கம் இச்சையையும் அடிமைப்படுத்தும். மூன்று மாதங் கடந்ததும் மெய்யுறு புணர்ச்சியை நீப்பது நலன் என்பது சில அறிஞரது உள்ளக்கிடக்கை. ஒருவேளை மனைவி விருப்பந் தணிக்கக் கணவன் எண்ணுவனேல், அவன் அவளுடலுக்கும், உட் கருவிக்கும், கருவுக்கும் கேடு நிகழா முறையில் கூடுவானாக.

கருத்தாங்கும் மனைவி விரும்பாத வேளையில் அவளுடன் வலிந்துசேர முயலுங் கணவன் கணவனல்லன். அவன் அவளைக் கொல்ல வந்த யமன் என்று கூறலாம். கருவுறாக் காலத்திலேயே வலிந்து புணரல் கூடாது. கருவுற்றுள்ள வேளையில் – அதுவும் மனைவி விரும்பாத போது – வலியுறுத்திக் கூடுவோனை விலங்கென்றுஞ் சொல்லலாமோ? அவன் விலங்கினும் இழிந்த வனல்லனோ? இத்துறையில் விலங்கினின்றும் மனித உலகம் பாடங் கற்றல் வேண்டும். மக்காள்! விலங்கு உலகை நோக்குங்கள். அதன் பெண்ணினம் கருவுற்றிருக்கும் போது, ஆணினம் நெருங்கி அதை வலியுறுத்துகிறதா? இல்லையே! ஆறறிவுடைய மனிதனோ கருவுற்ற வேளையிலும் மனைவியிடஞ் செல்கிறான்! அதிலும் அவ்வேளையில் வலிந்து சேர்வோனை என்னென்று கூறுவது? மனைவி கருவுற்றுள்ள போழ்து அவளைச் சகோதரி யென்று கருதுவோனே மனிதன்.

பிள்ளைப் பேற்றில் அச்சம்

மரம் பருவத்தில் காய்ப்பது போல, உற்ற வயதில் பெண் மகளும் பிள்ளை பெறுவது இயற்கையோ டியைந்து வாழ்வ தாகும். இப்பொழுது உலகில் சில இடங்களில் பெண் மக்களிற் சிலர் பிள்ளைப் பேற்றுக்கு அஞ்சித் திருமண வாழ்வு கொள்ளா தொழிகின்றனர். சிலர் பிள்ளைப்பேறு உறா முறையில் ஆண் கலப்புக் கொள்ள விரும்புகின்றனர். சிலர் பிள்ளை கரைக்கும் வித்தை பயின்று வாழ்கின்றனர். இக்கூட்டத்தார் இக்கால நாகரிக மென்னும் அறியாமையில் மூழ்கினவர். இந் நாகரிகத்தை நாகரிகம் என்று எப்படி அழைப்பது? இச்செயற்கைத் துறைகளில் பெரிதும் இறங்குவோர் கற்றவர்; பெரும்பட்டம் பெற்றவர். இவர் அறிவு இருந்தவாறென்னே! இவர் கற்றது கல்வியா?

திருமண வாழ்வையே வெறுத்து நிற்பவரைப் பற்றி, இயற்கையறத்தில் விரிவாகப் பேசியிருக்கிறேன். வாளா கிடத்தலாலும், முஷ்டிமைதுனம் போன்ற செயற்கைத் துறை களாலும் விளையுங் கேடுகளும் ஆங்காங்குச் சுருங்க ஓதப்பட்டி ருக்கின்றன. ஆதலால், அவற்றைப் பற்றி ஈண்டு மீண்டுங் கூற வேண்டுவதில்லை.

நோயாளிகள்

காசநோய், தொழுநோய் (குஷ்டரோகம்), பித்து முதலிய நோய்களால் பீடிக்கப்பட்டவர், திருமண வாழ்வு கொள்ளாது வாளா கிடக்கலாம்; திருமணவாழ்வு கொண்ட பின்னர் இந் நோய்கள் தொடரின், அப்பொழுதும் வாளா கிடக்கலாம். ஈண்டு வாளா கிடத்தல் என்பது பிள்ளைப் பேற்றை வெறுத்தலைக் குறிப்பதன்று; அப்பிள்ளைப் பேற்றால் உலகில் நோய்கள் வளரு மாகலின், வாளா கிடத்தலே அறம் என்பதைக் குறிப்பதென்க.

குடியனுடன் சேரல் கூடாது

ஓயாத குடியனை மணக்க நேரின், பெண்மணி கலவியை வெறுத்து வாழ்வது நியாயம். தீய பிள்ளைகளைப் பெற்று உலகைக் கெடுப்பதினும், தான் ஒருத்தி வருந்தி ஒழிவதால் கேடு விளையாது. குடி, தொழுநோய், பெண்நோய், பித்து முதலியன கருவில் தாக்குற்றுப் பிள்ளைகளை அடரும். இன்னோரன்ன அல்லாத பிற, பிள்ளையைச் சார்வதில்லை. இது குறித்து மேல் நாட்டார் ஆராய்ச்சி செய்து, இதனை எவரும் ஒப்பமுடிந்த வழியில் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இது நிற்க.

சில இடங்களில் பொருட்செல்வ நிலை கருதிப் பிள்ளைப் பேற்றை ஒடுக்குவதுண்டு. திருமண வாழ்வில் தலைப்படாது பிரமசரியங் காக்குமாறு நம்நாட்டார்க்கு மகாத்மா காந்தி ஒரு போது அறிவுறுத்தினர். காரணம் என்னை? நாட்டின் வறிய நிலை நோக்கி யென்க. இத்தகைய காரணங்களால் பிள்ளைப் பேற்றை வெறுத்தல் ஏற்கற்பாலதே. இக்குறைகளில் ஒன்று மில்லா மக்கள், பிள்ளைப் பேற்றை வெறுப்பது அறமாகாது.

கருத் தடை

பெண்கள் ஆடவனுடன் புணரினும் கருத்தரியா முறைகள் பல மேல்நாட்டில் காணப்பட்டு வருகின்றன. அம்முறைகளை அறிவுறுத்தும் நூல் பலவற்றை யான் படித்துப் பார்த்தேன். ஒன்றேனும் எனக்குப் பிடிக்கவில்லை. கருவைத் தகையக் காணப் பட்டுள்ள முறைகளாலும் கருவிகளாலும் உறுப்புக்களுக்குப் பின்னை ஊறு விளையும் என்பதில் ஐயம் இல்லை. இத்துறையில் இறங்க ஒருப்படும் மகளிருக்குந் தீமை விளையும்; ஆடவனுக்குந் தீமை விளையும்; இவை யாவும் முஷ்டிமைதுனம் போன்ற செயற்கை முறைகளே யாகும். பிள்ளைப் பேற்றைத் தடுக்கக் கொள்ளப்படும் முறைகளும் கருவிகளும், நாளடைவில் மெல்லிய கருவுறுப்புக்களின் ஆக்கத்தைக் குலைக்கும். அவ் வுறுப்புக்களின் குலைவால் பின்னே பலதிற நோய்கள் தோன்றும். ஆண் – பெண் உறுப்புக்களின் சேர்க்கையின்றிப் பல இடைச்சேர்க்கைகள் யாவும் தீமை பயப்பன என்று சுருங்கச் சொல்கிறேன்.

இக்கால நாகரிகப் பெண்மக்கள்

நமது நாட்டுப் பெண்மக்களில் மேல்நாட்டு முறைப்படி கல்வி பயின்று திரிவோர் சிலர், அறியாமையால் பிள்ளைப் பேற்றைத் தடுக்கும் முறை கொண்டு வாழ்வு நடாத்துகின்றனர். இப் பெண்மக்கள் பெரும் பதவிகளிலும் வீற்றிருக்கிறார்கள்; பெரும்பான்மையோர் ஆசிரியன்மாராக இருப்பவர். இவர் கூட்டுறவு நேராதவாறு, பெண் குழந்தைகளைக் காக்க வேண்டு வது பெற்றோர் கடன். இந்நூலில் இதுகுறித்து விரித்துரைக்க வேண்டுவதில்லை.

கருச் சிதைவு

சில பெண்மக்கள் செயற்கைக் கருவிகளைச் செருகிக் கொள்ளாது ஆடவரோடு இன்பந் துய்க்கிறார்கள். ஆனால் அவர் பிள்ளைப் பேற்றை விரும்புகிறாரில்லை. கருவுற்ற குறி தோன்றியதும் அதைச் சிதைக்க அவர் முயல்கிறார். அதற்கென எவ்வளவு முயற்சி! எவ்வளவு உழைப்பு! கருச்சிதைக்க ஒருப்படும் மருத்துவர்க்குக் கடவுள் எந்நரகம் படைத்திருக்கிறானோ தெரியவில்லை. பாவங்களிற் சிறந்தன கருச் சிதைப்பதும், அதற்குத் துணைபோவதுமாகும். பாவமென்றால் பாவத்துக்கு அஞ்சாதாருமுளர். அவருக்கு என்ன உரைப்பது?

இயற்கையில் அமையுங் கருவை மருந்தாலோ மற்றெ தனாலோ அழிப்பின் கருக்குழிக்கும் அதனை ஒட்டிய சினையு றுப்புக்கட்கும் ஊறு உண்டாகும். அதனால் உடல் வலிமை குன்றும். இவ்வாறு பலமுறை நிகழ்த்துவோர் கதி என்ன? இவ்வுலக வாழ்வை அகாலத்தில் நீப்பதே அவர் கதி ஆகும்.

வழுக்கிய நடையால் கொலை

நற்குடியிற் பிறந்து, கூடாவொழுக்கத்தில் தலைப்படு வோரிடையும் கருவழிக்குந் திருத்தொண்டு நிகழ்கிறது. பிள்ளை பிறந்தால் மானம் போகுமென்று கருதி, அன்னார் பெருங்கொலை செய்கிறார். தொடக்கத்தில் காம வேட்கை! பின்னே மானம்! என் செய்வது? குழந்தையோ கடவுளின் கொடை! நாட்டின் செல்வம்! அதை ஏன் அழித்தல் வேண்டும்? நமது நாட்டில் பொதுவாகப் பெண்மக்கட்கும், சிறப்பாகக் கைம்பெண்கட்கும் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகள் உயிர்க் கொலையாய் முடிகின்றன. இளம் பெண்கள் வழுக்கி வீழ் கிறார்கள்; பின்னே விழிக்கிறார்கள்.

இப்பெண்கள் கூடாவொழுக்கத்தில் தலைப்படாத நெறி யில் வாழ்வு நடாத்தல்வேண்டும்; நெறி தவறநேரின், குழந்தையை ஈன்று வளர்க்கும் அஞ்சா நெஞ்சம் பெறல் வேண்டும். உலகப் பழிப்புக்கு அஞ்சிக் கருவழிப்பது இழிவு! இழிவு! பேரிழிவு! கருவழிக்கும் பெண்ணின் உடல்நலன் குன்றும். அவள் நோய் வாய்ப்பட்டு, அகாலத்தில் மாள்வது ஒருதலை. அரிய வாழ்வை இடையில் இழப்பதா அறிவு?

கடவுள் நெறிக்கும், உலக வளர்ச்சிக்கும், நாட்டின் செல்வத்துக்கும், இன்ப வாழ்வுக்கும் உறுகருவியாயுள்ள பிள்ளைப்பேற்றை விரும்பாத நெஞ்சம், ஈரமில்லாததே யாகும். அது பெண்ணுலகிற்கு உரியதன்று. பிள்ளைப்பேறு விரும்பாத பெண் பெண்ணல்லள் என்று சுருங்கச் சொல்லலாம்.

பெண்பிறவி தாங்கினோர், பிள்ளைப் பேறு பெற, இளமை தொட்டு – உடல் நலன் – ஒழுக்கம் முதலியவற்றைக் காத்துவரல் வேண்டும். உடல்நலனும் ஒழுக்கமும் பெண் பிறவிக்கு இன்றிய மையாதன என்று கூறல் மிகையாகாது. ஆகவே, ஒருத்தி ஒருவனுடன் நன்முறையில் வாழ்ந்து, பிள்ளை பெற்று, உலகை ஓம்புவது சிறப்பு.

தாய் தந்தையர் அன்பே குழந்தை

தாய் – தந்தை – குழந்தை இம்மூன்றுஞ் சேர்ந்த ஒன்று சோமாகந்த மூர்த்தமென்பது. உலகில் இம்மூன்றும் நிலை பெறல் இயற்கை என்பதை அறிவுறுத்தவே நம் முன்னோர் கடவுளை அம்மூர்த்தமாகவும் கொண்டு வழிபட்டனர். அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே என்றார் மாணிக்கவாசகனார். தாய் தந்தையர் அன்பினின்றும் பிறக்கும் ஆரமுதம் குழந்தையென்க. அக் குழந்தையைப் பெற முயல்வது பெருந் தவமாகும். பெண்ணின் பெருமைக்கு உரையுளாயுள்ள அத்தவம் யாண்டும் மலிக; என்றும் நிலைக்க.

படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணும்உடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக்குறுகுறு நடந்து சிறுகை நீட்டிஇட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்நெய்யுடை யடிசின் மெய்பட விதிர்த்தும்மயக்குறு மக்களை யில்லோர்க்குப்பயக்குறை யில்லைத் தாம்வாழு நாளே.

-பாண்டியன் அறிவுடை நம்பி

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !