பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை
திரு. வி. கலியாணசுந்தரனார்

12. கைம்மை

(கைம்பெண் நிலையும் சிறுமைகளும் – குழந்தை மணக் கொடுமை – ஐன கணிதக் குறிப்பு – இந்து மதத்தின் பொறுப்பு – மறுமணம் – சாத்திரம்; கர்மம் – கைம்பெண்களின் துயர் – களையும் வழி).

திருமணஞ் செய்து கொண்ட ஒருத்தி, தன் கொழுநனைப் பற்றிய ஒரு செய்தியும் பெறாதொழியினும் அல்லது அவள் தலைவன் கொலையுண்டா னாயினும் அல்லது இறந்து பட்டானாயினும் அவள் கன்னியா யிருப்பா ளாயின், அவளுக்கு மறுமணஞ் செய்து கொள்ளும் உரிமை உண்டு. -போதாயனர்.

நாட்டுக் கைம்பெண் நிலை

கைம்மை என்னுந் தலைப்பிடும்போதே யான் பிறந்த நாட்டின்மீது நாட்டஞ் செல்கிறது. கைம்மை நிலை பெண்ணுல கிற்கும் ஆணுலகிற்கும் பொதுவானது. அந்நிலை வாழ்வில் இருபாலாருள் எவர்க்கேனும் ஒருவர்க்கு உறாமற் போகாது. உலகில் பல இடங்களில் ஆண்கைம்மையரைப் போலவே பெண்கைம்மையரும் வாழ்ந்து வருகின்றனர். சில இடங்களில் சிறப்பாக நமது நாட்டில் கைம்மை எய்தும் பெண்மக்கட்குப் பலதிறச் சிறுமைகள் உண்டு. நமது நாட்டிற் பொதுவாகப் பெண்ணுலகிற்கே சிறுமை அதிகம். அதிலும் கைம்பெண்களுக் குள்ள சிறுமைகள் சொல்லற்பாலனவல்ல. அச்சிறுமைகள் நினைவிலுறும்போது என்பு நெக்குவிடுகிறது; உள்ளம் குழைகிறது; இப்பாழும் நாட்டில் ஏன் பிறந்தோம்? என்று நினைந்து நினைந்து இரங்குதலும் நேர்கிறது.

பெண்மகள் கைம்மை எய்தினால் என்ன? ஆண் மகன் அந்நிலை எய்துவதில்லையோ? பெண்மகள் கைம்மை எய்திய தும் அவள்பாலுள்ள இயற்கை ஓடிவிடுகிறதோ? உயிர் போய் விடுகிறதோ? கடவுள் மறைந்து விடுகிறாரோ? படைப்பில் என்ன குறைவு ஏற்படுகிறது? அவள் எதிரில் வரக்கூடாதாம்! கூட்டங் களில் போகக் கூடாதாம்! நல்வினைகளில் தலைகாட்டக் கூடாதாம்! உடையையும் உணவையும் சுருக்கல் வேண்டுமாம்! அப்பெண் மூதேவியாய் விட்டாளாம்! கைம்மை எய்திய ஆண்மகனோ எல்லாவற்றினுங் கலந்து கொள்ளலாம்! அவன் பல்லிழந்த முதியனாயினும் பதினாறு வயது கட்டழகியை மணஞ் செய்யலாம்! என்ன வேற்றுமை! இவ்வேற்றுமை இயற்கையில் உள்ளதா? கடவுள் கண்டதா? இஃது இரக்கமிலா வன்கணாளர் இடைக் காலத்தில் விதித்த கொடுமை! கொடுமை!

குழந்தை மணக் கொடுமை

நம் நாட்டவரின் அநியாய மென்ன? 1சிறுகுழந்தை – ஓராண்டுக் குழந்தை – அதற்கு மணமென்ன தெரியும்? பச்சிளங் குழவிக்குப் பெண் ஆண்பால் வேற்றுமையாதல் தெரியுமா? அக் குழந்தைக்குத் திருமணம்! அது கைம்மை எய்தினால் அதற்குங் கட்டுப்பாடு! அக்குழவி உலகை அறிந்ததா? இல்லையே! அது தாய்மை என்னும் சீரிய நிலையை அடையாமலன்றோ ஒழிகிறது! இது கடவுள் கருத்தாகுமா? நமது நாட்டில் எத்துணைப் பெண் மக்கள் பால்மணமறா இளங்குழந்தைப் பருவத்தில் கைம்மை எய்தி வருந்துகிறார்கள்!

ஜன கணிதம்

1921-ஆம் ஆண்டின் ஜனக் கணக்கை யொட்டிக் கைம்மை எய்திய பெண்மக்கள் மீது சிறிது கருத்துச் செலுத்துவோம்.

அப்புள்ளிகளை உற்று நோக்குழிப் பொதுவாக இந்தியப் பெண்மணிகளின் நிலையும், சிறப்பாக ஹிந்து பெண்மணிகளின் நிலையும் இனிது புலனாகும். இக்கால ஹிந்து மதத்தைப் பெண்கொலை மதம் என்று கூறல் மிகையாகாது. இந்தியா விலுள்ள மற்றக் கைம்பெண்களின் தொகையிலும், ஹிந்து கைம்பெண்கள் தொகையே மேம்பட்டிருத்தல் கருதற்பாற்று. இந்தியாவின் மொத்தக் கைம்பெண் தொகை 26,834,838. ஹிந்து கைம்பெண் தொகை 20,218,780. எஞ்சியுள்ள தொகை மிகச் சிறியது. அதுவும் முலிம்கள் – கிறிதுவர் – பௌத்தர் – முதலியோரிலுள்ள கைம்பெண்கள் அடங்கிய தொகை.

ஒருவயது முதல் பதினைந்து வயது வரை, கைம்மை எய்தி யுள்ள இந்தியப் பெண்குழந்தைகள் தொகை 396,556. இதில் ஹிந்து பெண்குழந்தைகள் தொகை 329,076. இவ்வநியாயத்தை உற்று நோக்குங்கள்! இவ்வளவு பால்மணமறா இளங்கைம் பெண்கள்! என்னே! இக்கொலைக்குப் பொறுப்பு யாது? ஹிந்து மதமன்றோ? மற்ற மதங்களிலுள்ளவர் மீண்டுந் திருமணஞ் செய்யும் உரிமை பெற்றிருக்கின்றனர். மேலும் அவர் ஜன கணிதம் எடுத்த வேளையில் கைம்மை எய்தியிருந்தவர். அவருள் எத் துணையோ பேர் பின்னை மணஞ் செய்திருப்பர். ஹிந்து குழந்தைகளின் நிலையோ! நிலையோ!…. என்று அழவேண்டுவதே!

நமது நாட்டில் இலட்சக்கணக்கான சிறுகுழந்தைகள் கைம்பெண்களாயிருக்கிறார்கள். அவர்கள் கதி என்னை? திருமணம் இன்னதென் றுணராமுன்னர் ஏன் சிறுமியரைத் திருமணஞ் செய்து கொடுத்தல் வேண்டும்? கைம்மை எய்த நேர்ந்தால் அவரை ஏன் கூட்டில் அடைத்து வருத்தல் வேண்டும்? அவர் வழுக்கி வீழ்வரேல் அவரை அடிப்பது! ஊரைவிட்டு ஓட்டுவது! சமயம் நேர்ந்தால் கொல்வது! என்ன பாவம்! இப் பாவங்களை நிகழ்த்திவரும் நாட்டுக்கு உய்வுண்டோ? உரிமை யுண்டோ? நாயகனுடன் ஒருபொழுதேனும் கூடி இன்பம் நுகராத பெண் மகள் கைம்மைநிலை எய்தினால், மீண்டும் மணஞ் செய்தலா காதா? மணம் என்பது யாது? பந்தரா? கோயிலா? மந்திரமா? மாலையா? ஒருத்தி ஒருவனுடன் கூடி இன்பம் நுகரு நாளே திருமணம் முடிந்த நாளாகும். இளமை மணத்தையும் விலக்காது, மறுமணத்தையும் தடுப்பது அறமாகாது.

மறுமணப் பொறுப்பு

உற்ற வயதடைந்து, பல ஆண்டு, தலைவனுடன் கூடிக் குலாவிப் பிள்ளைப் பேறு பெற்ற ஒருத்தி, கைம்பெண் ஆவளேல், அவள் மறுமணஞ் செய்யாம லிருக்கலாம். ஆனால் அவட்கும் தன் விருப்பப்படி நடக்கும் உரிமை இருத்தல் வேண்டும். அவள் விரும்பினால் மறுமணஞ் செய்து கொள்ளலாம். அவள் விபசாரம் செய்து கெட்டு அழிவதினும், ஒருவனை மணந்து அவனுடன் வாழ்தல் சிறப்பாகும். மணம் விரும்புங் கைம் பெண்ணைத் தடுத்தலுங் கூடாது; விரும்பாதவளை வலியுறுத் தலுங்கூடாது. பொறுப்புப் பெண்ணினுடையதா யிருத்தல் வேண்டும்.

சில ஆண்டு நாயகனுடன் வாழ்ந்து, இன்பம் நுகர்ந்து, பிள்ளைப் பேறு பெற்றுக், கைம்மை எய்துவோள் மீண்டும் மற்றொருவனை நச்சவேண்டுவதில்லை. அப்பெண்மணி வேறு பல அறத்துறைகளில் இறங்கி வாழ்வு நடாத்தல் நலன்.

சாத்திரம் கர்மம்

பால்மணமறா இளங் கைம்பெண்கள் உற்ற வயதடைந்து மறுமணஞ் செய்து கொள்வது அறமே யாகும். அதற்கு அறிஞர் துணை செய்தே தீரல் வேண்டும். சாத்திரம் – கர்மம் – இவைமீது வீண்பழி சுமத்துவது அறியாமை.

சாத்திரம் எது? இயற்கை நெறிக்கு மாறுபட்டு எழுதப் பட்டன வெல்லாஞ் சாத்திரங்கள் ஆகுமா? ஆகா! சாத்திரம் என்பதன் பொருள் என்னை? இதைச் செய்; இதைச் செய்யற்க என்பது. இயற்கைக்கு உரியதைச் செய்தல் வேண்டும்; இயற்கைக்கு மாறுபட்டதைச் செய்தலாகாது. இதை மனச்சான்று அவ்வப் போது உணர்த்திவரும். இதுவே சாத்திரம். தின்று கொழுத்துப் பிறரை அடக்கியாள, இயற்கைக்கு முற்றும் அரண் செய்யாத பொருள் பொதிய, முரடர் சிலர் எழுதிய ஏடுகள் யாவுஞ் சாத்திரங்களாகா. இயற்கையே பெரிய சாத்திரம். அதன் நியதிகள், விதிகள். அவ்விதிகள் வழி, மன்பதை நடாத்தல் வேண்டும்.

கைம்மை எய்திய பெண், மீண்டும் மணம் செய்யலாகா தென்று இயற்கையில் ஏதாயினும் நியதி உண்டா? பெண் கைம்மை எய்தியதும் அவள் பாலுள்ள இயற்கை வேட்கை அவளை விடுத்து, நீத்து ஓடுகிறதா? சாத்திரம் சாத்திரம் என்று இருட்டறையில் விபசாரஞ் செய்து கருச்சிதைக்கலாம் போலும்! இங்கே,கடவுள் பாவம் கர்மம் ஒன்றுமில்லை போலும்! வெளிப்படையாக ஒருவனை மணஞ் செய்வது மட்டும் பாவம் போலும்! என்ன அறியாமை! இயற்கைக்கு மாறுபட்ட கண்மூடி வழக்கமும் கோழமையும் நாத்திகத்தின்பாற் பட்டனவா மென்க.

கர்மத்தின் மீது சிறிது கருத்துச் செலுத்துவோம். கர்மம் உண்டு; இல்லை என்று சொல்லவில்லை. தெருவே போகும் ஒரு பிள்ளையின் கால், வண்டியில் அகப்பட்டு நசுங்கிவிடுகிறது. அது கண்டு, கர்மம் என்று வாளா கிடப்பது அறிவுடைமை யாகுமோ? உலகம் அங்ஙனம் வாளா கிடக்கிறதோ? உடனே அக் காலுக்குத் தக்க சிகிச்சை செய்யவே மக்கள் புறப்படுகிறார்கள். அறியாமையால் கர்மம் இயல்பாக நிகழும். அதற்குக் கழுவாயும் இயற்கையிலிருக்கிறது. குழந்தை, கர்மத்தின்படி கைம்மை எய்தியிருக்கலாம். அதற்குக் கழுவாய் என்னை? உற்ற வயதில் அது தன் இயற்கை வேட்கையைத் தணிக்க மணஞ் செய்து கொள்வதாகும்.

கர்மத்தின் பேராலும் கடவுள் பேராலும் நமது நாட்டில் பல கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன. அவற்றுள் ஒன்று இளம் கைம்பெண்களைத் துன்புறுத்துவது. அத்துன்பம் நாட்டை விடுத்து அகலல் வேண்டும். இளங் கைம்பெண்கள் துயர் கண்டு மனம் இரங்காதவர் இலர். அவர்தம் துயர் களைதல் பெருங்கடன் என்று நினைப்போருமுளர். ஆனால் நினைவைச் செயலில் கொணர அவர்தம் மனம் எழுவதில்லை. காரணம் என்னை? நீண்டநாள் வழக்க ஒழுக்கப் பேய்களும், அக்கம் பக்கத்துக் கூக்குரல் – சாதிப் பழக்கம் முதலிய பூதங்களும் குறுக் கிடுதலேயாகும். இப்பேய் பூதங்கட்கா அடிமையாவது? மனச் சான்றெனுங் கடவுள் வழியன்றோ நிற்றல் அறிவு? அக்கடவுள் வழிபாட்டிற்கு உண்மையில் உறுதியும் அஞ்சா நெஞ்சமும் தேவை.

கைம்பெண்களின் துயர்

கைம்பெண்கள் வீடுகளிற் படுந்துயருக்கு ஓர் அளவும் உண்டோ? சில வேளைகளில் அவர்களை ஈன்ற தாய் தந்தை யரும் காய்கின்றனர்; அண்ணன் தம்பிமார் வெறுக்கின்றனர்; மற்றவரும் குறை கூறுகின்றனர். காய்வும் வெறுப்பும் பொறாது எத்துணைத் தாய்மார் தற்கொலை செய்துகொள்கிறார்; எத்துணைச் சகோதரிமார் வீட்டை விடுத்து ஓடி அலைகிறார்; எத்துணைப் பேர் எவர் உதவியும் நாடாது இலை தைத்தும், பழம் விற்றும், அப்பஞ் சுட்டும், கூலிவேலை செய்தும் கால் வயிறுண்டு மரணத்தை எதிர்நோக்கி வாழ்கிறார். நமது நாட்டுக் கைம்பெண்கள் துயரை என்னென்று சொல்வேன்! எவ்வெழுத் தால் எழுதுவேன்! இந்நூலில் அதுபற்றி விரித்துக் கூறலும் அநாவசியம்.

கைம்பெண்கள் துயர் களைய நாட்டிற் பிறந்த ஒவ்வொரு வர்க்கும் ஊக்கம் எழுவதாக. அதற்குரிய முறைகள் பல கூறலாம். சில வருமாறு:

(1) சாத்திரக் குப்பைகளைக் கட்டி அழலாகாது; இயற்கைச் சாத்திரவழி நிற்கப் பயிலல் வேண்டும்.

(2) இளமை மணம் நிறுத்தப்படல் வேண்டும்.

(3) நாயகனுடன் ஒருபொழுதேனும் கூடி வாழ்ந்து இன்பம் நுகராது, கைம்மை எய்திய பெண் மக்கள் திருமணம் புரியத்தக்க வழியில் வாழ்வு முறைகளைச் சீர்திருத்தஞ் செய்தல் வேண்டும்.

(4) நாயகனுடன் கூடிக் குலாவிய பின்னைக் கைம்மை எய்துவோர்க்குப் பலதிற அறச்சாலை கல்விச்சாலை தொழிற் சாலைகள் அமைக்கப்படல் வேண்டும்.

இளங் கைம்பெண்களின் சிறுமையால், பெண்ணுலகின் பெருமைக்குரிய தாய்மைக்கும் பிறவற்றிற்கும் பெருங் கேடு நிகழ்கிறது. ஒன்றும் அறியாத வயதில் திருமணமென்னும் பெயரால் வெறுமணம் பெற்றுப் பின்னைக் கைம்பெண்ணாய்க் கிடப்பதா பெண்பிறவியின் நோக்கம்? பெண் அடையத்தக்க பெரும் பேற்றுக்குக் கைம்மைநிலை பெருந்தடையாகவும் நிற்கிறது. கைம்பெண்களால் ஆணுலகிற்கும் பல திறக் கேடுகள் உண்டு. ஆதலால் கைம்மைப் பெண்களும் பெண்ணுலகில் சேர்ந்தவர்களாகலான், அவர்களும் தங்களினத்தவருக்குரிய விழுப்பம் பெறுதற்கு எவரும் இடையூறு செய்வோராக நிற்றலாகாது; இடையூறாக நிற்றல் தாய்க்கொலை செய்த பாவமாக முடியும். கைம்பெண்களின் சிறுமை என்னும் நோய் நீக்கம், பெண்ணுலகின் முன்னேற்றத்துக்குப் பெரும் வழி திறக்கும். பெண்ணுலகிலுள்ள அக்குறை நீங்க, எல்லாம் வல்ல ஆண்டவன் நாட்டவர்க்கு நல்லறிவு கொளுத்துவானாக.

திருமணஞ் செய்து கன்னி வாழ்வு நடாத்தும் பெண் தன் கணவனை இழக்கப் பெறுவளேல், மீண்டும் மறுமணம் புரிந்து கொள்ளலாம்.

வாக்குறுதி கொடுத்த பின்னரோ – நீர்வார்த்துத் தத்தஞ் செய்த பின்னரோ – மெய்யுறல் நிகழா முன்னரோ – கொழுநன் இவ்வுலக வாழ்வு நீப்பனேல், பெண் மறுமணஞ் செய்து கொள்ளலாம்.

உறுதி மொழியும் மந்திர மொழியும் ஒருத்தியின் பிரமசரிய விரதத்தைக் குலைப்பனவாகா. அவள் மற்றவனுக்குக் கொடுக்கப்படலாம். -வசிஷ்டர்

“Hinduism is the only religion which presents the sad anomalies of thousands of child widows” -Ganga Ram

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !