பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை
திரு. வி. கலியாணசுந்தரனார்

1. பெண் ஆண்

(பெண் ஆண் வடிவம் – தாவரங்கட்கு உயிரும் பெண் ஆண் வேற்றுமையும் உண்மை – உலகம் காரியமா காரணமா என்பது – உள்ளது போகாது இல்லது வாராது – கடவுளில் பெண்மையும் ஆண்மையும் – கடவுள் தாய் தந்தை – பெண் ஆண் நுட்பம் – பௌராணிகம் – பெண் ஆண் – சக்தி இயல் – தண்மை பெண்; வெம்மை ஆண் – பெண் ஆண் நிறம் – சந்திர சூரிய கலைகள் – சக்தி சிவம் – முழு மனிதத் தன்மை).

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே

-மாணிக்கவாசகர்

இவ்வழகிய உலகைச் சிறிது உற்று நோக்குவோம். உலகம் எக்காட்சியை வழங்குகிறது? பெண் ஆண் காட்சியையன்றோ அது வழங்குகிறது? உலகில் தனிப்பெண் தோற்றமாதல், தனி ஆண் தோற்றமாதல் புலனாகிறதோ? இல்லை.

தாவரங்கட்கு உயிரும், பெண் ஆண் வேற்றுமையும்

உலகில் புல் முதல் மக்கள் ஈறாக உள்ள எல்லாம் பெண் ஆண் வடிவாகப் பொலிதல் காண்கிறோம். புல் முதலிய தாவர இனங்கட்கும் உயிர் உண்டு என்றும், அவைகளுள்ளும் பெண் ஆண் வேற்றுமை உண்டு என்றும் நமது நாட்டு நூல்கள் முழங்கு கின்றன. இக்கொள்கை, சிலகாலம் சில இடங்களில் மறுக்கப் பட்டும் வந்தது. அம்மறுப்பிற்கு இனி இடமில்லை.

அக உணர்வு

தாவரங்கட்கு உயிர் உண்மையையும், பெண் ஆண் வேற்றுமை உண்மையையும் நம் முன்னோர் ஏட்டில் மட்டும் எழுதிச் சென்றனர். வேறு வழிகளான் அவ்வுண்மைகளை அவர் நிறுவிக் காட்டினரா என்பது தெரியவில்லை. அவர் எத்துறை நண்ணி அவைகளைக் கண்டனர் என்பதும் செவ்வனே விளங்க வில்லை. அக்கால மக்கட்கு அகவுணர்வு மிக்கிருந்ததென்று சொல்லப்படுகிறது. அவ்வுணர்வான் அவர் பல நுண்மைகளைக் கண்டிருக்கலாம். அக்கால நிலை, புறக்கருவி ஆராய்ச்சியை வேண்டி நிற்கவில்லை போலும்.

பிற்கால அறிஞர் கடன்

பின்னை நாளில் – அதாவது அகவுணர்வு குன்றிய பொழுது – முன்னோர் ஏடுகளில் எழுதிவைத்துள்ள பல உண்மைகளைக் காலநிலைக் கேற்றவண்ணம், புறக்கருவிகளின் துணையால் ஆராய்ந்து, புதிய முறைகளான் உறுதிப்படுத்த வேண்டுவது பிற்கால அறிஞர் கடன். அக்கடனாற்றப் புகாது, பழைய மக்களைக் குறைகூறிக் கொண்டிருப்பது அறமாகாது.

இந்நாளில் நமது நாட்டில் ஒரு பேரறிஞர் தோன்றித் தாவர உலகை நன்கு ஆய்ந்து, இக்கால முறையில் பலதிற உண்மைகளை வெளியிட்டனர். அவரை இன்னாரென்று யான் உலகுக்கு அறிவிக்க வேண்டுவதில்லை. அவர் வங்காளமளித்த பேரறிஞர் ஜகதீச சந்திர போ என்பவர். அவரது திறன், ஆராய்ச்சியாளர் பலர்க்குந் தெரியும். அன்னார் தாவர ஆராய்ச்சியில் தமது பெரும்பொழுதைப் போக்கி, எத்துணை எத்துணை நுட்பங்களை உலகிற்கு உதவி வந்தனர்! அவ்வறிஞர், தாவரங்கட்கு உயிர் உண்மையையும், அவற்றுள் பெண் ஆண் வேற்றுமை உண்மையையும் எவருங் கண்டு வியக்குமாறு புறக் கருவிகளின் துணையால் உறுதிப்படுத்தியது உலகறிந்த தொன்று. அவரல்லரோ நம் பண்டை மூதறிஞர் வழி வழி வந்த பெரியார் என்று போற்றத்தக்கவர்? இனித் தாவரங்கட்கு உயிர் உண்மை யையும், பெண் ஆண் வேற்றுமை உண்மையையும் மறுத்தற்கு உலகில் சிறிதும் இடமில்லை.

ஏனைய உயிர்களின் பெண் ஆண் உண்மை வெள்ளிடை மலை. ஆகவே, இவ்வழகிய உலகம், பெண் ஆண் வடிவாக அமைந்திருத்தல் எவரும் ஒப்பமுடிந்த உண்மை என்க.

உலகம் காரியமா? காரணமா?

பெண் ஆண் வடிவாயிலங்கும் உலகம் காரியமா? காரணமா? இதுகுறித்து நீண்ட ஆராய்ச்சி இங்கே நிகழ்த்த வேண்டுவ தில்லை. உலகம் நாமரூபங்களையுடையது. நாமரூபங்களை யுடைய ஒன்று தோற்றக் கேடுகளுக்கு உட்படல் இயல்பு. தோற்றக் கேடுகளையுடைய ஒன்று காரியமாகுமா? காரண மாகுமா? அது காரியமாகாது எங்ஙனம் காரணமாகும்? உலகம் காரியமென்பது அறிஞர் ஆராய்ந்து கண்ட முடிபு.

நிமித்தம்

காரிய உலகம் எக்காட்சியை வழங்குகிறது? அது பெண் ஆண் காட்சியை வழங்குகிறது. காரிய உலகம் பெண் ஆண் வடிவாயிருத்தலால், அதைக் காரியப்படுத்தும் நிமித்தம் எவ்வடிவினதாயிருத்தல் வேண்டும்?

உள்ளது போகாது இல்லது வாராது

உள்ளது போகாது இல்லது வாராது என்பது நியாயம். காரணத்தில் பெண்மை இல்லை எனில், காரியத்திலும் பெண்மை இராது. அவ்வாறே காரணத்தில் ஆண்மை இல்லை எனில், காரியத்திலும் ஆண்மை இராது. காரிய உலகு, பெண் ஆணால் ஆக்கப்பட்டிருப்பதால், அதைக் காரியப்படுத்தும் நிமித்தமும் பெண் ஆணாகவே இருத்தல் வேண்டும். இவ்வுண்மை கண்டே நம் முன்னோர், நிமித்தமாகிய கடவுளை, அம்மை அப்பன் எனக் கொண்டனர் போலும்.

கடவுளில் பெண்மையும் ஆண்மையும்

முழுமுதற் பொருள் பெண் ஆண் வடிவாய்ப் பொலிகிறது என்ற உண்மை, முதல் முதல் நம்நாட்டவரால் காணப் பெற்றது. எல்லாவற்றையும் கடந்தொளிரும் மெய்ப் பொருளை இக்கால உலகில் பலர் ஆணாகவும், சிலர் பெண்ணாகவும், சிலர் பெண் ஆணாகவும் கொண்டு வழிபடுகின்றனர். இனி வரும் உலகம் எத்திறக் கருத்து வேற்றுமையுமின்றி ஒரே உண்மையை ஏற்கும் என்று யான் நம்புகிறேன்.

மாற்ற மனங்கழிய நிற்கும் மறைபொருளை அவரவர் விரும்புமாறு போற்ற அவரவர்க்கு உரிமை உண்டு. எல்லாமாய் அல்லவுமாய் விளங்கும் ஒன்றை எவ்வண்ணம் போற்றினா லென்ன? ஆயினும், எடுத்த பொருளுக்கேற்பக் கடவுளின் பெண் ஆண் நிலையைப்பற்றி ஓர்ந்து உணர வேண்டுவது நமது கடன்.

கடவுள் தாய் தந்தை

கடவுளைத் தாயெனக் கொண்டோர் மிகச் சிலர். அவரைத் தந்தையெனக் கொண்டோர் பலர். கடவுளைத் தந்தை யாகக் (Fatherhood of god) கொண்டோர், அவரைத் தாயாகக் (Motherhood of God) கொள்ள மறுத்தற்குப் பொருளில்லை. தந்தையாக உள்ள கடவுள் ஏன் தாயாக இருக்கமாட்டார்? அன்னையினும் அப்பன் சிறந்தவன்கொல்! அப்பனிலும் அருள் மிக்கவள் அன்னையல்லளோ? கடவுளிடத்துள்ள தாய்மைக் குணத்தையா மறைப்பது? மறுப்பது? கடவுளைத் தந்தையாக் கொள்ள ஒருப்பட்ட மனம், அவரைத் தாயாக் கொள்ள ஒருப்படுவதில் என்ன இழுக்கு?

பெண் ஆண் நுட்பம் (பௌராணிகம்)

முழுமுதற் பொருளைப் பெண் ஆண் என்றும், தாய் தந்தை என்றும் கொள்வதால், அதற்குத் திண்ணிய உறுப்புக்களுண்டு என்று எவருங் கருதலாகாது. அப்பொருளின் பெண்மையும் ஆண்மையும், திண்ணிய உறுப்புக்களையுடைய பெண் ஆண் வடிவங்களை உணர்த்துவன அல்ல. அவை நுண்ணிய சக்தி களை உணர்த்துவனவாம். புராணங்கள் அவைகளைத் திண்ணிய வடிவங்களாகக் கொண்டு திருமணப் படலங்களும் வகுத்திருக் கின்றன. அறிவால் கூர்ந்து உணரத்தக்க சில நுண்மைகள், மனத்திற் பொருளாகுமாறு அவற்றை உருவகப்படுத்திக் கதைகளாக அணிவகுத்துக் கூறுவது புராண மரபு. கதைகளை உள்ளவாறு நம்புவது பௌராணிக மதம். ஞான நூலாராய்ச்சியுடையார் புராணக் கதைகளின் நுட்பமுணர்ந்து இன்புறுவர்; ஏனையோர் இடர்ப்படுவர்.

பெண் ஆண் சக்தி இயல்

நுண்ணிய பெண் ஆண் சக்திகள் மீது சிறிது கருத்துச் செலுத்துவோம். உலகில் இரண்டு சக்தி நிலவுகின்றன. ஒன்று கூட்டுஞ் சக்தி; மற்றொன்று பிரிக்குஞ் சக்தி. முன்னையது தண்மையது; பின்னையது வெம்மையது. இவ்விரண்டும் சடசக்திகளாகும். இவற்றின் உண்மை, பூதபௌதிக சாதிரி களால் உறுதி செய்யப் பெற்று நீண்ட நாட்களாயின. சட சக்திகள் தாமே இயங்கமாட்டாவாகலின், அவற்றை இயக்கச் சடமல்லாத ஒன்று தேவையே. அதுவே சித்பொருள் என்பது. இயங்கும் சடத்தில் இரண்டு சக்தியிருத்தலையொப்ப, அச் சடத்தை இயக்கும் சித்பொருளிலும் இரண்டு சக்தியிருத்தல் வேண்டும். இல்லையேல், சடசக்திகள் முறை முறையே இயங்க மாட்டா. ஆகவே, சித்பொருளினிடத்தும் கூட்டல் பிரித்தற் குரிய தண்மை வெம்மை இருந்தே தீரல் வேண்டும். அவற்றின் இருப்பும், உண்மை கண்ட பெரியோரால் உறுதி செய்யப்பட்டி ருக்கிறது. சித்தெனும் செம்பொருள், சடப் பொருளுடன் நீக்க மறப் பிரிவின்றி, அத்துவிதமாகக் கலந்து நின்று, அச்சடத்தை இயக்குந்திறத்தை விரிந்த நூல்களிற் காண்க.

தண்மை பெண்; வெம்மை ஆண் (பெண் நீலம்; ஆண் செம்மை)

தண்மையைப் பெண் என்றும், வெம்மையை ஆண் என்றும் கூறுதல் உலகோர் இயல்பு. இவ்வியல்பு பற்றிச் சித்பொருளின் தண்மைக் கூற்றைப் பெண் என்றும், வெம்மைக் கூற்றை ஆண் என்றும் நம் முன்னோர் உலகுக்கு உணர்த்தினர். இவை நிரலே சக்தி என்றும் சிவம் என்றும் வழங்கப்படுகின்றன. வழிபடுவோர் உள்ளத்தில் அவை பொருளாகுமாறு முன்னதற்கு நீல நிறமும், பின்னதற்குச் செம்மை நிறமும் மெய்ஞ்ஞானிகளால் பொறிக்கப் பெற்றன. தண்மைக்கு நீலமும், வெம்மைக்குச் செம்மையும் பொறித்தது மிகப் பொருத்தம். நீலத்தைப் பெண்மை நிறம் (Feminine colour) என்றும், சிவப்பை ஆண்மை நிறம் (Masculine colour) என்றும் மனோ தத்துவ ஆசிரியர் வில்லியம் ஜேம் உள்ளிட்டார் உரைத்துள்ளனர். இதை வலியுறுத்தப் பல சான்றுகள் தேவை யில்லை. கண்கூடாக உள்ள ஒன்றைக் குறித்தல் சாலும். அது நெருப்பு. நெருப்பு நா நீட்டிச் சுழன்று எரியும்போது, அதினுடலில் செம்மையும், விளிம்பில் நீலமும் மிளிர்தல் காண்கிறோம், இந் நீலமும் செம்மையும் ஒன்றினின்றும் ஒன்று பிரிந்து நிற்பதில்லை. அது போலச் சக்தியும் சிவமும் பிரிவின்றி ஒன்றோடொன்று இயைந்து நிற்கின்றன.

யோக முறை

அண்டம் பெண் ஆணாக அமைந்திருப்பது போலப் பிண்டமும் அவ்வண்ணமே அமைந்திருக்கிறது. உடலின் இடது பக்கத்தில் தண்மை நாடியும், வலது பக்கத்தில் வெம்மை நாடியும் ஓடுகின்றன. விளக்கம் உடற்கூற்று நூலிற் பார்க்க. யோகிகள் இத் தண்மையையும், வெம்மையையும் முறையே சந்திரகலை சூரிய கலை என்று சொல்வர். இவை, இடைகலை பிங்கலை எனவும் படும். வலதுபக்க வெம்மைச் சூரிய கலையும், இடது பக்கத் தண்மைச் சந்திரகலையும் சமமாக இயங்கல்வேண்டும். ஒன்று மிகுந்து, மற்றொன்று குறையின் உடலுக்கு ஊறு விளையும் இதனை,

மாறு மதியும் ஆதித்தனும் மாறின்றித்தாறு படாமல் தண்டோடே தலைப்படில்ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும்பாறு படாஇன்பம் பார்மிசைப் பொங்குமே

எனவரூஉந் திருமூலர் திருவாக்கான் உணர்க.

இக்கலைகளைப் பெண்கலை ஆண்கலை என்று வழங்கு வதுமுண்டு; ஈராறு பெண்கலை எண்ணிரண்டான்கலை என்றார் அத் திருமூலரே. விரித்துச் சொல்லாது சுருங்கச் சொல்லின், மக்களின் இடது பக்கம் பெண் தண்மையும், வலது பக்கம் ஆண் தன்மையும் திகழ்கின்றன என்னலாம். பிராணாயமப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றோர், கலைகளை ஒழுங்குபெற இயக்கும் ஆற்றல் வாய்ந்தவராதலின், அவர் விரும்புமாறு பெண் குழவியையோ ஆண்குழவியையோ பெறுதல் கூடும் என்று யோக நூல்கள் கூறுகின்றன. இப்பெண்கலை ஆண்கலைக்குப் பற்றுக்கோடு சக்தி சிவமேயாகும்.

ஆண்ட பிண்டங்கள் யாவும் பெண் ஆண் வடிவாயிருத்தல் போல, அவைகட்குக் காரணமாகவுள்ள முழு முதற் பொருளும் பெண் ஆண் வடிவாயிருத்தல் கருதத்தக்கது. இந்நுட்பம் அர்த்த நாரீசுர மூர்த்தத்தில் நனிவிளங்கும். அம்மூர்த்தத்தில் ஒருபாதி பெண்ணுருவும், மற்றொருபாதி ஆணுருவும் பொலிதல் காண் கிறோம். அதின் நுட்பமென்னை? அவ்வடிவம், இவ்வண்ட பிண்டம் அர்த்தநாரீசுர வடிவமாயிருத்தலை அறிவுறுத்துவ தென்க. அர்த்தநாரீசுர வடிவம் ஓவியம். ஓவியத்தின் விரிவு அண்டபிண்டஞ் சேர்ந்த அகிலம்.

சக்தி சிவ இயைபு

சக்தி சிவம் என்ப ஒன்றை விடுத்து ஒன்று பிரிந்து நிற்பன அல்ல. அவை ஒன்றோடொன்று இயைந்து நிற்பன. சக்திக்கும் சிவத்துக்கும் உள்ள இயைபு, மலரும் மணமும் போன்றது; மரமும் காழ்ப்பும் போன்றது; பண்ணும் இசையும் போன்றது.

பரம்பொருள் எல்லாவற்றையுங் கடந்தது; ஒன்றையுங் கடந்தது. ஒன்றையுங் கடந்ததை என்னென்று கூறுவது? அதைப் பாழ் என்று பெரியோர் உலகிற்கு அறிவுறுத்தினர். பாழின் இயல்பு என்னை? இன்னதென்று சொல்ல முடியாதது அதன் இயல்பு. அஃது அகல நீளம் அற்று, நாம ரூபம் அற்று, பிறப்பு இறப்பு அற்று, (அகல நீள நாம ரூபங்களையுடைய) எல்லா உலகங்களும் இயங்க, அடிப்படையாய் – தாரகமாய் – நின்று, அகண்டமாய், அறிவாய் ஒளிர்வது. இது பரத்தின் உண்மை நிலை. இந்நிலை சொரூபம் என்றும், நிர்க்குணம் என்றும் மரபினரால் வழங்கப்படுகிறது.

பரம் எல்லாவற்றையும் கடந்து நிற்பதோடு, எல்லா வற்றிலும் கலந்தும் நிற்கிறது. அதில் கலப்பில்லையேல் எதுவும் இயங்காது. பரத்தின் கலந்தநிலை தடதம் என்றும் சகுணம் என்றும் சம்பிரதாயத்தவரால் சாற்றப்படுகிறது.

தூய அறிவாய் ஒளிர்வது பரம்பொருள். அதன் பண்பு அருள். பரத்தின் கலந்த நிலையில் அருள் செவ்வனே விளங்கும். கலப்பில் அருள் விளங்குவது இயற்கை.

ஒரு சக்தி உண்டென்றும், அது புரோடான் – எலெக்ட்ரான் – என்று இரண்டாய் இயங்கி ஒளி செய்கிறது என்றும் விஞ்ஞானக் கலை விளம்புகிறது. புரோடான் சிவம் போன்றது; எலெக்ட்ரான் சக்தி போன்றது.

பரம்பொருள் சிவம். அதன் அருள் சக்தி. சக்தி என்பது தனித்து நிற்பதன்று. சக்தியாவது சிவத்தின் அருள். ஒருவனிடத் துள்ள அருட்குணத்தை எங்ஙனம் பிரித்தல் இயலும்?

சக்தி என்றோ அன்றே சிவமுமுண்டு; சிவம் என்றோ அன்றே சக்தியுமுண்டு. இரண்டும் அநாதி. இரண்டும் உயர்வு தாழ்வின்றி ஒத்து உலகு உயிர்களை இயக்குகின்றன. சக்தி சிவத்தைப் பற்றி,

அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருளாய் வேறாங்குறியது உடைத்தாய் வேதா கமங்களின் குறியி றந்தங்கறிவினில் அருளான் மன்னி அம்மையோ டப்ப னாகிச்செறிவொழி யாது நின்ற சிவனடி சென்னி வைப்பாம்

என்றும்,

ஒருவனே இராவ ணாதி பாவகம் உற்றாற் போலத்தருவனிவ் வுருவ மெல்லாம் தன்மையுந் திரியா னாகும்வரும்வடி வெல்லாஞ் சக்தி சக்திதான் மரமுங் காழ்ப்பும்இருமையும் போல மன்னிச் சிவத்தினோ டியைந்து நிற்கும்

என்றும்,

சக்தியுஞ் சிவமு மாய தன்மையிவ் வுலக மெல்லாம்ஒத்தொவ்வா ஆணும் பெண்ணும் உணர்குண குணியு மாகவைத்தனன் அவளால் வந்த வாக்கமிவ் வாழ்க்கை யெல்லாம்

என்றும்,

எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்

என்றும்,

அருளது சக்தி யாகும் அரன்தனக் கருளை யின்றித்தெருள்சிவ மில்லை அந்தச் சிவமின்றிச் சக்தி யில்லை

என்றும் சிவஞான சித்தியார் விளக்கியிருத்தல் காண்க.

முழு மனிதத் தன்மை

சக்தி சிவம்போலப் பொண்ணுலகும் ஆணுலகும் இலங்கல் வேண்டும். பெண் ஆண் சேர்ந்த ஒன்றே வாழ்வென்பது. பெண்ணும் ஆணும் சேர்ந்த ஒன்றே முழு மனிதத்தன்மை என்று மனு பகர்கிறார். தண்மையும் வெம்மையும் எங்ஙனம் உடல் நலத்துக்கு வேண்டற்பாலனவோ, அங்ஙனமே பெண்மையும் ஆண்மையும் வாழ்வுநலத்துக்கு வேண்டற்பாலன. ஒன்றற் கொன்று சிறுமை யுறின் ஊறும் குலைவும் நிகழும். இவ்வுலக வாழ்விற்குப் பெண்மை ஆண்மை என்னும் இரண்டும் இன்றியமையாதன. இரண்டனுள் உயர்வு தாழ்வில்லை. உயர்வு தாழ்வு கற்பிப்போர் இறை இயல்பையாதல், இயற்கை இயல்பையாதல் உணராதார் என்க.

இவ்வுலகம் பெண் ஆண் வடிவாயிலங்குகிறது. முழுமுதற் பொருளும் பெண் ஆண் வடிவாய்ப் பொலிகிறது. ஆதலால், பெண்ணும் ஆணும் கூடி வாழும் வாழ்வே வாழ்வாகும். அவ்வாழ்வு ஓங்க; பெண் ஆண் வாழ்க.

மண்ணினல்ல வண்ணம் வாழலாம் வைகலும்எண்ணினல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலைகண்ணினல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்பெண்ணினல் லாளொடும் பெருந்தகை இருந்ததே.

-திருஞானசம்பந்தர்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !