பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை
திரு. வி. கலியாணசுந்தரனார்

5. இறைவழி

(பெண் பாதி ஆண் பாதி ஒன்றல் முழு மனிதத் தன்மை – இயற்கையின் நோக்கு – இறைவழி நிற்றல் – பிரவர்த்தி நிவர்த்தி – படைப்பு நோக்க நிறைவேற்றம் – இல்லறத்திலிருத்தல் – படைப்புப் பொருள் – உயிர்களின் வரவு – அவ்வரவுக்குத் துணை – ஆண்டவன் உதவி – கடவுள் படைப்பு நிகழ்த்தும் முறை – உடலமைப்பின் நுட்பம் – தனித்த வாழ்வு கூடாது.)

யாவரும் மடந்தைமாரோ டில்லறத் தொழுகும்தன்மைமேவரப் பணித்தான்.

-கச்சியப்பர்

தனித்த வாழ்வு

பெண் கற்பன கற்று, கேட்பன கேட்டு, நல்வழியில் வளர்ந்து உற்ற வயதடைந்து நிற்கிறாள். இவ்வாறே ஆணும் வளர்ந்து உற்ற வயதடைந்து நிற்கிறான். பின்னர் இருவர் நிலையும் எங்ஙனம் முற்றுறல் வேண்டும்? அவள் அங்ஙனே தனித்தும், இவன் இங் ஙனே தனித்தும் வதிந்து மாய்தல் வேண்டுங்கொல்? இல்லை; இல்லை. இருவரும் தனித்தே நின்று சாவாராயின், அவரது பிறவி நோக்கம் நிறைவேறாது.

முழு மனிதத் தன்மை

பெண் ஆண் சேர்ந்த ஒன்றே வாழ்வு என்பது. வாழ்வின் ஒருபாதி பெண்; மற்றொரு பாதி ஆண். இரு பாதியாக இவர் எத்துணைநாள் உலகில் உறைவது? இரு பாதியும் சேர்ந்த ஒன்றே முழு மனிதத் தன்மை. இத்தன்மையைப் பெறுதற்கென்றே பெண் ஆண் வடிவங்கள் இயற்கையில் அமைகின்றன. இல்லையேல் வடிவங்கள் வேறுவழியில் அமையலா மல்லவோ? படைப்பில் வடிவங்கள் அமைந்துள்ள ஒழுங்கை நோக்குழிப் பெண்ணுக்கும் ஆணுக்கும் உள்ள இயற்கைத் தொடர்பு நன்கு புலனாகும்.

இயற்கையின் நோக்கு

தனித்து ஒரு பாதியாக நிற்கும் பெண்ணையும், தனித்து மற்றொரு பாதியாக நிற்கும் ஆணையும் இயற்கை கூட்டும் அழகை என்னென்று சொல்வேன்! இருவர்பாலும் உற்ற வயதில் ஒருவித இன்ப உணர்வு எழுகிறது. இவ்வுணர்வு ஏன் எழுதல் வேண்டும்? இதற்கு ஏதாயினும் பொருள் இருத்தல் வேண்டு மன்றோ? இவ்வுணர்வே இரு பாதியையும் ஒன்றாகப் பிணித்துப் பிறவி நோக்கை நிறைவேற்றும் இயற்கை அன்புக் கயிறென்க.

இறைவழி நிற்றல்

இறைவன், பிறப்பில் பெண் ஆண் வடிவ அமைப்பு வகுத்து, இரண்டையும் ஒருமைப்படுத்த இயற்கையில் இன்ப உணர்வு அளித்துள்ள நுட்பத்தை ஓர்ந்து, ஒருத்தியும் ஒருவனும் அன்பால் ஒன்றி வாழ்வது, அவ்விறைவன் வழி நிற்பதாகும். அங்ஙனமின்றி, இருவரும் தனித்து நின்று, இறைவனை மட்டும் வழிபடல், அவ்விறைவன் வழி நிற்பதாகாது.

போலித் துறவு

இறைவன் ஆணைவழி உலகில் ஒருத்தியும் ஒருவனும் கூடி வாழும் வாழ்வே பெரிதும் நடைபெறுகிறது. இறைவழியே உலகம் இயங்கி வருகிறது. இதைப்பற்றி விரிந்த பேச்சும் வேண்டு வதில்லை; எழுத்தும் வேண்டுவதில்லை. ஆயினும், இடைக் காலத்தில் இறைவழிக்கு மாறுபட்ட போலித்துறவு என்னும் ஒன்று தோன்றி, அருள் நெறிக்கு இடையூறு செய்து வரலான், அதுபற்றிச் சில உரையாதல் பகரவேண்டுவது எனது கடன்.

பிரவர்த்தி நிவர்த்தி

பெண்ணும் ஆணும் கூடி வாழ்வது இறைநெறியல்லாத பிரவர்த்தி மார்க்கம் என்றும், பெண் ஆணைத்துறந்தும், ஆண் பெண்ணைத் துறந்தும், தனித்து நின்று தவங்கிடப்பதே இறை நெறி நிற்கும் நிவர்த்தி மார்க்கம் என்றும் பெரியோரும் நூல் களும் முழங்கா நிற்க, நீவிர் முற்றும் மாறுபட்ட இறைவழி குறிப்ப தென்னை? என்று சிலர் வினவலாம். இதற்கு ஒல்லும் வகை பொருந்திய விடை பின்னை இறுப்பன். ஈண்டு எடுத்துக் கொண்ட இறைவழி என்பதற்கு ஏற்பச் சிறிது கூறுகிறேன்.

கடவுள் வழி நிற்றல்

பெண்ணும் ஆணும் பிரிந்து வாழ்தல் நிவர்த்தி என்று கருதுவோர், கடவுள் வழி விடுத்து வேறுவழிச் செல்வோராவர். கடவுள் படைப்பு முயற்சிக்குத் துணை செய்யாதொழிவோர், எங்ஙனம் கடவுள் வழி நிற்போராவர்? இறைவன் படைப்புத் தொழிலை எவர்பொருட்டு நடாத்துகிறான்? தன் பொருட்டா? உயிர்கள் பொருட்டே அவன் அத்தொழிலை நடாத்துகிறான். அவன் முயற்சிக்குத் துணை நில்லாதார், எங்ஙனம் அவனிடத்தும் உயிர்களிடத்தும் அன்புடையவராவர்?

கடவுளின் படைப்புத் தொழிலைப் பற்றிப் பல திறக் கருத்து வேற்றுமைகள் உண்டு. அவை சமயவாதங்களின் பாற்படும். அவற்றுள் நுழைய வேண்டுவதில்லை. வாதம் இந்நூலிற்கு வேண்டற்பாலதுமன்று.

படைப்பு என்பதன் பொருள்

கடவுள் ஓரிடத்திருந்து கையால் படைப்புத் தொழில் செய்கிறார் என்பது எனக்கு விளங்கவில்லை. கடவுள் தூய அறிவு. அதற்கு இருவித நிலை உண்டு. ஒன்று கடந்த நிலை; மற் றொன்று கலந்த நிலை. முன்னையது பேச்சு எழுத்துக்களையும் தாண்டித் தனித்து நிற்பது. இங்கே பின்னையதே தேவை. இஃது இன்ப அன்பாக யாண்டும் நீக்கமறக் கலந்து நிறைந்துள்ளது. இந்நிலைக்கு இறை என்ற பெயர் வழங்கப்படுகிறது. இறை யாண்டும் இறுத்தலையும் இருத்தலையும் உடையது. இவ் விறை, இயற்கை வாயிலாகத் தன் வினைகளை ஆற்றி வருகிறது. அவ்வினைகளுள் ஒன்று படைப்பு என்பது. படைப்பு என்பது இல்லாத ஒன்றையோ அல்லது இல்லாத ஒன்றினின்றும் ஒன்றையோ புதிதாக உண்டு பண்ணுவதன்று. உள்ள ஒன்றே காரியப்படுவது படைப்பு என்று சொல்லப்படுகிறது. அதற்குக் கடவுள் என்னும் அறிவு, நிமித்தமாக நிற்றலான், அது கடவுள் படைப்பு என்று வழங்கப்படுகிறது. இஃது உபசாரம்; உண்மை யன்று.

இனி எடுத்த பொருள்மீது செல்வோம். ஒருத்தியும் ஒருவனும் கூடி வாழாதொழிவது, கடவுளிடத்தும் உயிர்களிடத்தும் அன் பின்மையை எங்ஙனங் குறிக்கும் என்பதைச் சிறிது ஆராய்வோம்.

அறிவு அறியாமை முதலியன

எவ்வாராய்ச்சிக்கும் கண்ணுக்குப் பொருளாக உள்ள உலகையும், அநுபவத்தையும் அடிப்படையாகப் கொள்வது வழக்கம். அவ்வழிபற்றி யானுஞ் செல்கிறேன். இவ்வுலகில் யான் பிறந்தேன்; வளர்கிறேன். எனது அநுபவத்தில் அறிவு அறியாமை, இன்பதுன்பம், ஒளி இருள், நினைப்பு மறப்பு ஆகிய இரு நிகழ்ச்சியும் என் மாட்டு உறுதல் காண்கிறேன். முழு அறிவோ, முழு இன்பமோ, முழு ஒளியோ, முழு நினைப்போ தோன்றக் காண்கிறேனில்லை. அவ்வாறே முழு அறியாமையோ, முழுத் துன்பமோ, முழு இருளோ, முழு மறப்போ தோன்றக் காண் கிறேனில்லை. இவ்வுலகில் இரண்டும் விரவியே நிற்கின்றன. எனக்கு அறிவும் விளங்குகிறது; என்னை அறியாமையும் மறைக் கிறது. என்னில் இன்பமும் எழுகிறது; என்னைத் துன்பமும் சூழ்கிறது. நான் ஒளியையும் காண்கிறேன்; இருளையும் பார்க்கிறேன். எனக்கு நினைப்பும் உண்டு; மறப்பும் உண்டு.

இச்சிறு அறிவு – இன்பம் – ஒளி – நினைப்பு – கொண்டு, முழு அறிவு – இன்பம் – ஒளி – நினைப்பு – உண்மையை நிறுவலாம். அங்ஙனே சிறு அறியாமை முதலியவற்றைக் கொண்டு, முழு அறியாமை முதலியவற்றையும் நிறுவலாம். முதலின்றிச் சினை, அதாவது உறுப்பு எங்ஙனந் தோன்றும்? எனவே, முழு அறிவு முதலியன நிலவும் இடத்துக்கும், முழு அறியாமை முதலியன மலியும் இடத்துக்கும் இவ்வுலகம் இடைப்பட்டதென்க.

உயிர் வரவு

இவ்வுலகில் வாழும் யான் யாண்டிருந்து ஈண்டுப் போந்திருப்பேன்? முழு அறிவு – இன்பம் – ஒளி – நினைப்பு – உள்ள ஓரிடத் திருந்தா அல்லது முழு அறியாமை – துன்பம் – இருள் – மறப்பு – செறிந்த ஓரிடத்திருந்தா ஈண்டுப் போந்திருப்பேன் என்பது சிந்திக்கற்பாலது. முழு அறிவும் – இன்பமும் – ஒளியும் – நினைப்பும் நிலவும் ஓரிடத்திருந்து, அறிவும் அறியாமையும் – இன்பமும் – துன்பமும் – ஒளியும் இருளும் – நினைப்பும் மறப்பும் விரவி நிற்கும் இவ்வுலகை யான் ஏன் நோக்கல் வேண்டும்? நிழலில் வாழும் ஒருவன் கானலில் வாழ ஒருப்படுவனோ? கானலில் வருந்தும் ஒருவன் நிழலை நாடி ஓடுதல் இயல்பு. ஆகவே, யான் முழு அறியாமை – முழு துன்பம் – முழு இருள் – முழு மறப்பு – செறிந்த இடத்திருந்தே, இரண்டும் இலங்கும் இவ் வுலகம் போந்திருப்பேன். ஈங்கிருந்து – முழு அறிவு – முழு இன்பம் – முழு ஒளி – முழு நினைப்பு – பெற முயன்று வருகிறேன்.

வரவுக்குத் துணை

முழு அறியாமையால் விழுங்கப் பெற்றுத் துன்ப இருளில், எனது நிலை யுணராது செயலின்றிக் கிடந்த யான், இவ்வுலகிற்கு எப்படி வந்தேன்? எனக்கோ அந்நிலையில் அறிவு விளக்கமும் இல்லை; செயலும் இல்லை. பாம்பு தீண்டிய ஒருவனது நிலைக்கு எனது நிலையை ஒப்பிடலாம். அந்நிலையிலிருந்த யான், பிறர் துணையின்றி, இங்கு எங்ஙனம் வருதல் கூடும்? ஒருவர் துணை கொண்டே யான் ஈண்டுப் போந்திருத்தல் வேண்டும்.

துணைவர் இயல்

அவ்வொருவர் யாவர்? அவர் எத்தன்மையராய் இருத்தல் வேண்டும்? அவர் என்னைப்போல அறியாமையால் விழுங்கப் பெற்றுத் துன்ப இருளில் கிடப்பவராய் இருத்தல் கூடாது. அறியாமைத் துன்ப இருளில் செயலின்றிக் கிடப்போர், அந் நிலையிலுள்ள மற்றொருவர்க்கு என்ன செய்தல் கூடும்? குருடனுக்குக் குருடன் வழிகாட்டிய கதையாகவே முடியும். ஆதலால், அறியாமைத் துன்ப இருட்கட்டில்லா ஒருவரே, எனக்குத் துணை நின்று, இவ்வுலக வாழ்வை நல்கியிருத்தல் வேண்டும். அவ்வொருவரையே உலகம் கடவுள் என்று போற்றுகிறது.

அறிவு அறியாமை இயல்

கடவுள், அறியாமை – துன்பம் – இருள் – மறப்பு – முதலிய எக்கட்டும் இல்லாதவர் என்பதை ஈண்டுப் பெரிதுங் கவனித்தல் வேண்டும். எக்கட்டுமில்லாத கடவுள், கட்டில்லா அறிவாய் இன்பமாய் ஒளியாயிருத்தல் வேண்டுமென்பதற்கு விளக்கமுந் தேவைகொல்! கட்டில்லா அறிவில் என்றும் இன்பம், அன்பு, இரக்கம், பிறர்நல நாட்டம் முதலிய அருட்குணங்கள் இருத்தல் இயல்பு. இதனை வலியுறுத்த வேறோர் எடுத்துக்காட்டும் வேண்டுவதில்லை. மக்களாகிய நமது அநுபவமே சாலும். நமது அறிவு, கட்டினின்றும் நீங்கி விளக்கமுறும்போது, நம்மாட்டு, அன்பு, பொறை, இரக்கம், பிறர்க்குதவல் முதலிய நற்குணங்கள் தோன்றுதலை உணர்கிறோம். நம்மாட்டு அறியாமை மிகுந்து நிற்கும் போது, அவா, பொறாமை, வன்கண்மை, பிறர்க்குக் கேடு சூழல் முதலிய தீக்குணங்கள் எழுதலை அறிகிறோம். நல் லெண்ணங்கட்கும் இன்பத்துக்கும் பிறப்பிடம் அறிவு என்பதும், தீய எண்ணங்கட்கும் துன்பத்துக்கும் தோற்றுவாய் அறியாமை என்பதும் அவரவர் அநுபவத்தில் உணரக் கிடப்பனவாம். கட்டினின்றும் வெளியாகும் அறிவிற்கே அன்பு இரக்கம் முதலிய குணங்கள் உண்டெனில், அநாதியாக எக்கட்டுமின்றி என்றும் அறிவாய் ஒளிரும் பரம்பொருளிடத்து எத்தகைய அன்பு – எத் தகைய அருள் – இருக்கும் என்பதை எழுத்தால் எழுதல் முடியாது. அன்பே அது; அருளே அதன் வடிவம்.

அருளியல்

நீரில் தண்மை போலவும், நெருப்பில் வெம்மை போலவும், மலரில் மணம் போலவும் ஆண்டவனிடத்தில் அருட்குணம் இயல்பாய் அமைந்திருக்கிறது. அவ்வருள் வாளா கிடக்குமோ? ஒவ்வொன்றும் தன் தன் வேலையை நிகழ்த்துவதுபோல, அருளும் தன் வேலையை நிகழ்த்தி வருகிறது. ஒருவருக்கு அருள் – இரக்கம் – தயை பெரிதும் எப்பொழுது சுரக்கிறது? பிறர் துன்பம் காணும் பொழுதன்றோ? உயிர்களின் துன்பத்தைக் காணக் காண இறையருள் சுரந்த வண்ணமிருக்கிறது. உயிர் களின் துன்பத்துக்கும் ஓய்வில்லை; ஆண்டவன் அருள் சுரப்புக் கும் ஓய்வில்லை. உயிர்களிடத்துத் துன்பமுள்ள மட்டும் ஆண்டவன் அருளும் சுரந்து கொண்டேயிருக்கும். இரண்டின் எல்லை கண்டு கூறல் எவரால் இயலும்? ஆகவே இரண்டும் அநாதி யென அறிஞர் கூறுகின்றனர்.

ஆண்டவன் உதவி

உயிர்கள் அறியாமையால் விழுங்கப் பெற்றுத் துன்ப இருளில் கட்டுப்பட்டுக் கிடப்பதைத் திருவருளையே திருமேனி யாக உடைய ஆண்டவன் கண்டு வாளா கிடப்பனோ? ஆண்டவன், அவைமீது இரக்கஞ் செலுத்தி, அவற்றைத் துன்பத் தினின்றும் நீக்கித் தன்னைப் போலாக்கத் திருவுளங் கொள் கிறான். அறிவு விளக்கமும் செயலுமின்றிக் கிடக்கும் உயிர்கள் மீது, ஆண்டவன் அருளொளி பட்டதும், அவைகட்குத் தனு கரண புவன போகங்கள் கூடுகின்றன. கண்ணுதலோன் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி என்றார் மாணிக்க வாசகனார். கட்டிற் கிடந்த உயிர் கட்குத் தனு (உடல்) முதலியன கிடைத்ததும், அவை சிறிது அறிவு விளக்கமும் செயலும் பெறுகின்றன. இந்நிலையே, அறிவு அறியாமை, இன்ப துன்பம், ஒளி இருள், நினைப்பு மறப்பு முதலிய இரண்டும் கலந்த உயிர்களின் இவ்வுலக வாழ்வென்க. இந்நிலையினின்றும் முழு அறிவு விளக்கம் பெற்று, முழு இன்பநிலை எய்த முயல வேண்டுவது உயிர்களின் கடமை.

அறியாமைத் துன்ப இருட்கட்டில் கிடந்த உயிர்கள், அறிவு விளக்கமும் செயலும் அடையும் பொருட்டு ஆண்டவன் புரியுந் துணையன்றோ துணை! ஆண்டவன் உயிர்கள் மீது கொண்டுள்ள அருட் பெருக்கிற்கோர் அளவும் உண்டோ? அப்பெருக்கை ஏழையேன் என்னென்று புகல வல்லேன்?

கடவுள் படைப்பு நிகழ்த்தும் முறை

இனித் துன்ப இருட்கட்டில் கிடக்கும் உயிர் கட்குத் தனு என்னும் உடலை, இறைவன் எவ்வழியில் கூட்டுகிறான் என்பதை உன்னுவோமாக. கட்டிற்கிடக்கும் உயிர்களை, இறைவன் தனது கையாற் பிடித்துத் தூக்கி, உடல் தந்து, அவற்றை இவ்வுலகில் கொணர்ந்து விடுகிறானில்லை. இறைவனோ கைகால்கள் இல்லாதவன். பின்னை எவ்வழியில் அவன் தன் படைப்புத் தொழிலைச் செய்கிறான்? அவன் எதையும் இயற்கை வாயிலாக நிகழ்த்துகிறான். இறைவன் இயற்கையில் நீக்கமறக் கலந்து நிறைந்திருப்பவன். அண்டபிண்ட சராசரங்களெல்லாம் அவன் வடிவம். அவன் எங்கும் பொருந்தி இருத்தலால், அவனை இறைவன் என்று போற்றுகிறோம். எங்கும் அறிவாகக் கலந்து நிற்கும் இறைவன் ஓரிடத்திருந்து படைப்புத் தொழிலைச் செய்கிறானில்லை. அவனது படைப்புத் தொழில் ஆங்காங்கே எங்கணும் நிகழ்கிறது. இயற்கை வாயிலாக இறைவன் எல்லாஞ் செய்கிறான். உடல் தாங்காமற் கிடக்கும் உயிர்களின் தோற்றத் துக்கென, உடல் தாங்கித் தோன்றியுள்ள உயிர்களிடத்துச் சில இயற்கை அமைப்புக்களை இறைவன் வகுத்திருத்தல் ஈண்டுக் கருதற்பாலது.

உடல் அமைப்பின் நுட்பம்

பெண் ஆண் என்னும் இருபாலாரும் உற்ற வயதடைந்ததும், இருவர் மாட்டும் ஒருவித இன்ப உணர்வு இயல்பாக எழுகிறது. இவ்வுணர்வு உயிரிகளிடத்து எழுவதன் நோக்கம் என்னை? எழுச்சிக்குரிய உறுப்புக்கள் அமைந்திருப்பதன் நோக்கம் என்னை? அன்பர்களே! உன்னுங்கள். இன்பத் தோற்றத்துக்கென மெல்லுறுப்புக்களும், அவைகளின் காப்புக்கெனப் பருவுறுப்புக் களும், அவைகளின் அரணுக்கென நரம்பு – என்பு – தசை – தோல் முதலியனவும் இயற்கையில் அமைந்திருக்கும் நுட்பத்தை உன்ன உன்ன, அவற்றின் நோக்கம் புலனாகும். உடற்கூற்றின் அமைப்பும், அதனால் எழும் இன்பமும், பெண் ஆண் சேர்க்கை, இயற்கையில் பொருந்திய தொன்று என்பதைச் செவ்வனே அறிவுறுத்துகின்றன. இதைப்பற்றி விரிவுரை வேண்டுவதில்லை. பெண் ஆண் சேர்க்கையின் வழித் துன்ப இருளிற் கட்டுண்டு கிடக்கும் உயிர்கட்கு, ஆண்டவன் உடலை ஈந்து, இவ்வுலக வாழ்வை நல்குகிறான். ஆண்டவன் படைப்பு இவ்வழி நிகழ்ந்து வருகிறது.

தனித்த வாழ்வு கூடாது

பெண் ஆண் சேர்க்கை, உயிர்களின் துன்ப நீக்கத்துக்கு இன்றியமையாததாயிருக்க, அதை வெறுப்பதும் துறப்பதும் அறமா என்று கேட்கிறேன். பெண் ஆணை விடுத்துத் தனித்து நிற்பதும், ஆண் பெண்ணை விடுத்துத் தனித்து நிற்பதும், துன்ப இருளில் கிடக்கும் உயிர்களின் கட்டை நீக்க மறுத்து நிற்ற லாகும். இதனால் உயிர்களின் துன்பமும் நீங்குவதில்லை; ஆண்டவன் நோக்கமும் நிறைவேறுவதில்லை. எனவே, துறவு என்னும் பெயரால் ஒருவரை ஒருவர் நீத்து நிற்போர் கடவு ளிடத்தும் உயிர்களிடத்தும் எங்ஙனம் அன்புடையவராவர்? உயிர்களின் துன்ப நீக்கத்துக் கென்று ஆண்டவன் கோலியுள்ள வழி நில்லாது, அவனைப் போற்றுவோர் எங்ஙனம் அவன் அருள் பெறுதல் கூடும்? ஆண்டவன் வழி நிற்போரே அவ னிடத்தும் உயிர்களிடத்தும் அன்புடையவராவர்.

துறவு துறவு என்று ஒதுங்கும் பெண்மகளும் ஆண்மகனும் யாண்டிருந்து முளைத்தனர்? அவர் தாய் தந்தையரின்றியோ முளைத்தனர்? அன்னார் உடல்தாங்கி இவ்வுலக வாழ்வை அடைந்ததுபோல, மற்ற உயிர்களும் அவ்வாழ்வை அடைதல் வேண்டாவோ? அதற்குத் தடையாக நிற்பது அறிவுடைமையா?

உயிர்கள் உடலோடு கூடி வாழ்வு பெற்ற பின்னரே, அறிவு விளக்கமும் செயல் நிகழ்ச்சியும் பெறுகின்றன. விளங்கிய அறிவுப் புணைகொண்டே, உயிர்கள் பிறவிக்கடல் கடந்து இன்பக்கரை நண்ணுதல் வேண்டும். இன்பக்கரை நண்ணுதற்குக் கருவியாயுள்ள உடல் வாழ்வைப் பெறப் பெண்ணும் ஆணும் கூடி வாழாதொழிவரேல், உயிர்களின் நிலை என்னாகும்? கருணையில்லா மக்களே மணவாழ்வை வெறுப்பார்கள்.

ஒவ்வொரு பெண்ணும் ஆணும் துறவு துறவு என்று மணவாழ்வை வெறுத்து நிற்பின் உலக வளர்ச்சி அற்றேபோகும்; உயிர்களின் துன்பமும் நீங்காது; இறைவனது படைப்பு நோக்கமும் நிறைவேறாது. இத்துணை இடருக்குக் காரணராக உள்ள கூட்டத்தார் கடவுளிடத்தும் உயிர்களிடத்தும் தம்மிடத்தும் அன்பில்லாதவர் என்று பன்முறை அறை கூவுகிறேன்.

துறவொழுக்கம் நிவர்த்தி மார்க்கம் என்று நமது நாட்டு நூல்கள் பல கூறுவது உண்டு. துறவொழுக்கமும் நிவர்த்தி மார்க்கமும் பெண்ணை வெறுக்குமாறு ஆணிற்கும், ஆணை வெறுக்குமாறு பெண்ணிற்கும் அறிவுறுத்தவில்லை. அவற்றின் நுட்பங்களைப் பின்னே விளக்குவேன்.

பெண்ணும் ஆணும் கூடிவாழல் இறைவழி நிற்ப தென்றும், அங்ஙனம் வாழாதொழிவது இறைவழி நிற்பதாகா தென்றும் இவ்வதிகாரத்தில் சுருங்கச் சொன்னேன். இனி, இயற்கை நெறிக்கும் பெண் ஆண் சேர்க்கை வேண்டற்பால தென்பதையும், இல்லையேல் உலகில் பல துன்பங்கள் விளையும் என்பதையும் சிறிது விரிக்கப் புகுகிறேன்.

‘Marriage is the nursery of heaven’ – Jeremy Tayler

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !