பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை
திரு. வி. கலியாணசுந்தரனார்

8. இன்ப வாழ்வு

(வீடு – ஒழுங்குபட்ட இல்லறம் வீடு – சிற்றின்பம் பேரின்பம் – காதல் காமம் – இரண்டுக்கு முள்ள வேற்றுமை – காதல் வாழ்வு – காமக்கூட்டம் – உண்மைக் காதல் – கலவி – காமச் சூடும் ஆண் மக்களும் – சுக்கிலத்தின் அருமை – காமத்தால் விளையும் கேடுகள் – சேர்க்கைக் காலவரை – மன அடக்கம் – ஒருதலை வேட்கை – வலிந்து கூடல் – அன்புக் கூடல் – படுக்கை அறை – வாழ்வும் கலவியும் – மனைவி, தாய், உடன் பிறந்தவள், மகள் – உலகியலும் கடவுள் நிலையும் – கலவி நீக்கும் வயது – பெண்ணில் தெய்வக் காட்சி – இயற்கை வழி இறைவனைக் காண்டல் – ஆண் பெண்ணாதல் – கலவியில் எச்சரிக்கை – பொருந்தா நாயகன் – கணவன் அலியாயின்; நோயாளனாயின் – வருவாய்க்கேற்ற செலவு – அருள் வளர்க்க அறஞ் செய்தல் – ஐயுறல் கெடுவது காட்டுங்குறி)

இறைகளோ டிசைந்த இன்பம்இன்பத்தோ டிசைந்த வாழ்வு

– வன்றொண்டர்

அந்தண நிலை

திருமணத்தின் பின்னர் இருவர் கூட்டுறவால், வாழ்வு அரும்புகிறது. இளமையில் இருவரும் வாழ்வு வாழ்வு என்று கற்றும் கேட்டும் வந்ததை இப்பொழுது அவர் நிகழ்ச்சியில் காண் கின்றனர் . இல்வாழ்வை இருவரும் ஒழுங்குபட நடாத்திவரின், அன்னார் தம்பாலுள்ள பொறாமை அவா வெகுளி தன்னலம் முதலிய குற்றங்கள் படிப்படியே நீங்கப்பெற்று, அவ்விடத்தில் பொறுமை அடக்கம் அன்பு அருள் தியாகம் முதலிய குணங்களுற்று, அந்தண நிலை எய்துவர். ஆகவே , திருமணங்கூட்டும் வாழ்வை நல் வழியில் நடாத்திப் பேறு பெற வேண்டுவது தலைவி – தலைவர் கடமை.

தலைவியும் தலைவனும் வாழ்வை நெறியல்லா நெறியில் நடாத்தினால் திருமண வாழ்வால் விளையத்தக்க பயன் விளை யாது. அன்னார் தீநெறியில் வாழ்வு நடாத்தி, இல்லறத்தைப் பழித்துப் பேசி, அங்கும் இங்கும் அலைவது அறியாமை. ஒழுங்கு பட்டஇல்லறம்,வீடுபேற்றை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

வீடு

வீடு , வீடு என்பது தனித்து ஓர் எல்லைக்குள் கட்டுப் பட்டுக் கிடக்கும் ஓரிடமன்று. அதைப்பற்றிய பேச்சே வேண்டுவ தில்லை. திருவள்ளுவனார் முப்பால் கூறினாரேயன்றி நாற்பால் கூறினாரில்லை. வீடு இன்பத்திலும் அறத்திலும் நிலவுவது. வீட்டைத் தனியே பிரித்து இடர்ப்படுவோர் படுக.

வீடு என்னுந் தமிழ்ச்சொல் விடு என்னும் வினையினடி யாகப் பிறந்த தொழிற்பெயர். கட்டு (பந்தம்) விட்ட இடம் வீடு; அதாவது கட்டினின்றும் விடுதலை அடைவது வீடாகும்.

ஒருத்தியும் ஒருவனும் கூடி வாழும் இடம் வீடு என்று உலக வழக்கில் சொல்லப்படுகிறது. இங்கு வீடு என்றால் என்னை? அதன் நுட்பத்தை ஓர்தல் வேண்டும். வீடு என்பது ஓர் எல்லையன்று; கட்டடமன்று; கூரையன்று; அஃதொரு பருப் பொருளன்று . பின்னை என்னை? கட்டு நீங்கி இன்பம் நிகழும் இடம் வீடாகும். ஒருத்தியும் ஒருவனும் அன்பால் விழுங்கப் பெற்று நுகரும் இன்பத்தில் கட்டேது? கட்டுள்ள இடத்தில் துன்பமன்றோ விளையும்? கட்டில்லா இடத்திலேயே இன்பம் விளையும். கட்டினின்றும் விடுதலை அடையும்போது விளைவது இன்பம். இவ்வின்பமே வீடுபேறாகும்.

துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் உற்ற இடமெல்லாம் வீடேயாகும். இவ்வுலகில் துன்பமின்றி இன்பம் நிலவும் இடம் பெற்ற வீடு என்னும் வழக்கு, முழுத்துன்ப நீக்கமும் முழு இன்ப ஆக்கமும் உற்ற நிலையாகிய வீடு என்னும் முதன்மையினின்றும் பிறந்த தென்க.

பெண்ணின்பத்தை இன்பம் என்று கூறுவது முழு உலகாயதக் கொள்கை என்று சிலர் கருதல் கூடும். ஈண்டு இன்பம் என்றது வெறுங் கலவியை மட்டுங் குறிப்ப தன்று. அது கலவியுடன் பிறவும் சேர்ந்த ஒன்று. தோன்றி மறையும் இன்பம் பெரிதுங் கலவியால் விளைவதாகும். அழியா இன்பம் பெண் ஆண் மெய்யுறு புணர்ச்சியால் மட்டும் விளைவதன்று. இப்புணர்ச்சி கடந்த ஒரு நிலையில் கூடுவது அவ்வின்பம். அழியா இன்ப ஊற்றைத் திறக்குங் கருவி, ஒருத்தி என்பது பெரிதும் உன்னத்தக்கது. இக் கருத்துப்பற்றியே உய்யவந்ததேவ நாயனார் என்னும் தவஞானச் செல்வரும்,

பெற்றசிற் றின்பமே பேரின்ப மாயங்கேமுற்ற வரும்பரி சுந்தீபற;
முளையாது மாயையென் றுந்தீபற

என்று அருளிப் போந்தார்.

அழியா இன்பப் பேற்றை அடையவே ஒருத்தி ஒருவனுடன் கூடி வாழ்கிறாள். அவள் வாழுமிடமும் வீடு , வீடு என்று வழங்கப்படுகிறது. பெண் தெய்வம் உறையும் இடம் வீடல்லாது பின்னை என்னாகும்? பெண்ணில்லா வீடு வீடா? அது காடு; சுடுகாடு; நரகம். வீட்டை இன்ப ஒளி வீசுமாறு செய்யும் தெய்வ மணிவிளக் கல்லளோ பெண்? அவ் விளக்கில்லா இடத்தில் துன்ப இருளன்றோ சூழ்ந்து கிடக்கும்? அத்தகைய பெண்ணின் பெருமையை என்னென்று பேசுவது?

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாக்கை
பண்பும் பயனும் அது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

-திருவள்ளுவனார்.

மழைதிளைக்கு மாடமாய் மாண்பமைந்த காப்பாய்
இழைவிளைக்கு நின்றிமைப்பின் என்னாம் – விழைதக்க
மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம்
காண்டற் கரியதோர் காடு.

-நாலடியார்

பண்புடையாள் இல்லா மனை. -நான்மணிக்கடிகை.

இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை.
இல்லாளும் இல்லாளே ஆமாயின் – இல்லாள்
வலிகிடந்த மாற்ற முரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.

-ஔவையார்

என வரூஉம் ஆன்றோர் மொழிகளை நோக்குக.

ஒருத்தியும் ஒருவனும் வாழும் இடம் வீடாக வேண்டுமேல், அவர் வாழ்வு இன்பமாயிருத்தல் வேண்டும். இருவர் மாட்டும் பொய் பொறாமை முதலியன இருத்தலாகாது. இன்ப நுகர்ச்சி யைத் தகைவன பொய் பொறாமை முதலியன. இவை யில்லாத உள்ளத்தில் இன்பம் ஊர்ந்துகொண்டேயிருக்கும். இவ் வின்பத்துடன் வாழ்வதே இறையுடன் இயைந்து வாழ்வதாகும். இன்பம் வேறன்று; இறை வேறன்று. இக்கருத்துப் பற்றியே, இறைகளோ டிசைந்த இன்பம் என்றார் நம் வன்றொண்டப் பெருந்தகையார். இவ்வின்பத்தோ டியைந்த வாழ்வே மக்கட் குரிய வாழ்வாகலான், இன்பத்தோ டிசைந்த வாழ்வு என்று அவர் பின்னும் கூறலானார். இத்தகைய வாழ்வினர்க்குத் துன்பம் உண்டுகொல்! அவர்க்குத் துன்பம் இல்லை. இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்றார் அப்பர் சுவாமிகளும்.

இறைவன் நிறைவையும் – அவனோ டியைந்துள்ள இன்பத்தை யும் – உணர ஒண்ணாதவாறு தகைந்து நிற்பன பொறாமை முதலிய தடைகள் என்று அடிக்கடி இந்நூற்கண் நுவன்று வருகிறேன். அவற்றைப் போக்கி இறையுடன் இயைந்த நிலை கூட்டுவது இல்வாழ்க்கை என்று இந்நூலில் இறைவழி யிலும், இயற்கையறத்திலும் விரித்துக் கூறி யுள்ளேன்.

காதல்

திருமணத்தில் பெறும் வாழ்க்கையை இறையுடன் இயைந்த இன்ப வாழ்வாக்குதல் எங்ஙனம்? அதற்குரிய முறைகள் என்னென்ன? விரிவஞ்சி மிகச் சுருக்கமாகச் சில பகர்ந்து மேலே செல்கிறேன்.

முதலாவது இருவர்பாலும் காதல் நிலவுதல் வேண்டும். காதல் பெருநிலை கூட்டும். காதலாவது தலைவி தலைவர்க்குள் நிகழும் கடவுள் அன்பு. தலைவி, தலைவனைக் கடவுளாக் கோடலும், தலைவன், தலைவியைக் கடவுளாக் கோடலும் காதலாகும். கடவுளாவது எல்லாவற்றையும் கடந்து நிற்பது. தலைவியும் தலைவனும் தாம் விரும்பும் பொருள்களுள் தம் மோடு ஒப்பாகவாதல் உயர்வாகவாதல் தாமன்றிப் பிறி தொன்றைக் காணாத ஒரு பெரும் நிலை காதல். இக்காதலால் விழுங்கப் பெற்ற தலைவிக்குத் தலைவனிலும் கடந்த பொருள் ஒன்று தோன்றாது. அவ்வாறே தலைவனுக்கும் தலைவியினும் கடந்த பொருள் ஒன்று புலனாகாது. இந்நிலை பெறுவோர்க்குக் கூடா ஒழுக்கம் இயல்பில் நிகழாது. இக் காதல் நிலை எய்தாதார் காம வாய்ப்பட்டு வாழ்வைக் குலைத்துக் கொள்வர். ஆகவே, தலைவி தலைவர் வாழ்வு, காதல் வழி இயங்குவதாயிருத்தல் வேண்டும். காமத்தின் வழி அவ்வாழ்வு இயங்குதலாகாது.

காதல்; காமம்

காதல் என்னை? காமம் என்னை? இரண்டுக்கும் வேற்றுமை உண்டோ? உண்டு. காதல் ஓரிடத்தில் படிந்த வேட்கை. அத் தகைய வேட்கை பிறிதொன்றில் நிகழாது. காமம் பல இடங்களில் தோன்றும் விருப்பம்.

காதல் மாறாதது; காமம் மாறுவது. காதல் கடவுள்; காமம் பேய். காதல் இன்பம்; காமம் துன்பம். காதல் அன்பென்னுந் தண்மையினின்றும் பிறப்பது; காமம் அவாவென்னும் வெம்மை யினின்றும் பிறப்பது. காதல், உடலை வளர்க்கும்; காமம், உடலை எரிக்கும். காதல், உடல் – மனம் – அறிவு – என்னும் மூன்றினும் ஊடுருவிப் பாய்ந்து நிலைத்து நிற்கும்; காமம், உடலளவில் எழுந்து வீழ்ந்துபடும். காதல், நாளுக்குநாள் பெருகுந் தன்மையது; காமம், நாளுக்கு நாள் அருகுந்தன்மையது.

காதல் தொல்காப்பியனார், திருவள்ளுவனார், இறையனார், நம்மாழ்வார், மாணிக்கவாசகனார், ஆண்டாள் முதலிய அறிஞரால் போற்றப்படுவது, விரிவு அவர் அருளிய நூல்களிற் காண்க.

காதலைப் போற்று மொழிகளுள் சில வருமாறு:-

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள.

-திருக்குறள்

குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக்
கூத்தனை ஏத்தலர்போல்
வருநாள் பிறவற்க வாழியரோ
மற்றென் கண்மணிபோன்
றொருநாள் பிரியா துயிரிற்
பழகி யுடன்வளர்ந்த
வருநா ணழிய அழல்சேர்
மெழுகொத் தழிகின்றதே.

-திருக்கோவையார்

ஆயுந் தொறுந்தொறும் இன்பந்
தருங்கல்வி யாங்கறிவு
மாயுந் தொறுந்தொறும் இன்பந்
தரும்வள்ளல் வார்கழல்கள்
தேயுந் தொறுந்தொறும் இன்பந்
தருஞ்சந்து தேங்குழனில்
தோயுந் தொறுந்தொறும் நேராத
இன்பஞ் சுரந்திடுமே.

-திருத்தணிகைப் புராணம்

பெண்ண லத்தினைப் பெறாதவர்
மகவினைப் பெறாதார்
பெண்ண லத்தினைப் பெற்றவரே
மகப் பெற்றார்
பெண்ண லத்தினான் மகவுபெற்
றிருமையும் பெறுவார்
பெண்ண லத்தினா லன்றியோர்
பெறும்பொரு ளுண்டோ.

-பிரமோத்தர காண்டம்

காமம் அறிஞரால் தூற்றப்படுவது. அத்தூற்றல்களுள் சில வருமாறு:-

மனைபுகு வார்கண் மனைவியை நாடிற்
சுனைபுகு நீர்போற் சுழித்துடல் வாங்கும்
கனவது போலக் கசிந்தெழு மன்பை
நனவது போலவு நாடவொண் ணாதே.

-திருமந்திரம்

பேணாது பெண்விழைவா னாக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.

-திருக்குறள்

ஊரு ளெழுந்த வுருகெழு செந்தீக்கு
நீருட் குளித்து முயலாகு – நீருட்
குளிப்பினுங் காமஞ் சுடுமே குன்றேறி
ஒளிப்பினுங் காமஞ் சுடும்.

-நாலடியார்

சிறையு முண்டோ செழிப்புனன் மிக்குழீஇ
நிறையு முண்டோ காமங் காழ்கொளின்.

– மணிமேகலை

கொலையஞ்சார் பொய்நாணார் மானமு மோம்பார்
களவொன்றோ வேனையவுஞ் செய்வார் – பழியொடு
பாவமிஃ தென்னார் பிறிதுமற் றென்செய்யார்
காமஞ் கதுவப்பட் டார்.

-நீதிநெறி விளக்கம்.

உள்ளினுஞ் சுட்டிடு முணருங் கேள்வியிற்
கொள்ளினுஞ் சுட்டிடுங் குறுகி மற்றதைத்
தள்ளினுஞ் சுட்டிடுந் தன்மை யீதினாற்
கள்ளினுங் கொடியது காமத் தீயதே.

-கந்தபுராணம்

காமமே கொலைகட் கெல்லாங் காரணங் கண்ணோ டாத
காமமே களவுக் கெல்லாங் காரணங் கூற்ற மஞ்சும்
காமமே கள்ளுண் டற்குங் காரண மாத லாலே.
காமமே நரக பூமி காணியாக் கொடுப்ப தென்றான்.

-திருவிளையாடற் புராணம்

சில இடங்களில் காமம் என்னுஞ் சொல் காதல் பொருள் பட ஆன்றோரால் ஆளப்பட்டிருக்கிறது. சொல்லைக் கண்டு எவரும் ஏமாறுதல் கூடாது; பொருளையே நோக்கல் வேண்டும். காமம், இன்பம் என்னும் பொருள்பற்றி வரும்போது, அதைக் காதற்கும் ஆளுதல் உண்டு. திருவள்ளுவனார் காமக்கேட்டைப் பெண்வழிச் சேறலிலும் காதற்றிறத்தைக் காமத்துப்பாலிலும் ஓதியிருத்தல் காண்க.

காதல் வாழ்வு

காதலென்ன காமமென்ன எல்லாங் கலவிதானே என்று சொல்வோருமுளர். அன்னார் காதற்றன்மை யுணராதாரென்க. திருமணம், வெறும் பெண், ஆண் சேர்க்கையை மட்டும் குறிக் கொண்டு நிற்பதன்று. அதனுடன் வேறு பல வாழ்வுத் துறை களையும் அது குறிக்கொண்டு நிற்கிறது. அவையெல்லாம் சேர்ந்த ஒன்று காதல் வாழ்வு.

காமக் கூட்டம்

கலவிக்கென்றே பெண் படைக்கப்பட்டாள் என்று கருதுவது மடமை. தாய்மை என்னும் பெருவாழ்வு பெற்று, எல்லா உயிர்களிடத்தும் அத்தாயன்பு செலுத்திக் கடவுள் நிலை பெறுதற்குப் பெண் பிறந்தாள். உயிர்நிலை முதலிய மெல்லு றுப்புக்கள் பிள்ளைப் பேற்றிற்கென அமைக்கப்பட்டன என்று கோடல் வேண்டுமேயன்றி அவற்றை வெறுங் கலவிக் கெனக் கோடல் படைப்பு நோக்கை உணர்வதாகாது. பிள்ளைப் பேற்றிற்குக் கலவி ஒரு துணைக்கருவி போன்றது. கலவியிலேயே பெண் வாழ்வு அடங்குகிறது என்று, அக்குறியுடன் ஆண் பெண்ணை நோக்குவதும், அவளொடு வாழ்வதும் நரகக் குழி யில் வீழ்வதாகும். அங்ஙனம் தன்னை நினைந்து கலவியிலேயே காலங்கழிக்கும் பெண்ணும் தனது பிறவிப்பேற்றை இழந்து துன்புறுவாள். இவ்வாண் பெண் ஈட்டமே காமக்கூட்ட மென்க. பெண்பிறவி ஒரு பெரும் விழுமிய நோக்குடையது. அந்நோக்கு, காதல் வாழ்வால் நிறைவேறும்.

காதலில் கலவி இல்லையோ எனில், உண்டு என்று சொல்ல வேண்டுவதில்லை. காதல் வாழ்வில் கலவி ஒரு சிறு கூறு. காம வாழ்விலோ கலவியே யெல்லாம். அதற்குமேல் அது செல்வ தில்லை. காதலிலோ, கலவி – பிள்ளைப் பேறு – கொலை களவு கள் காமம் பொய் முதலிய இழிவுகளினின்றும் விடுதலை யடைதல் – யான் எனது என்னுஞ் செருக்கறல் – தியாகம் – அன்புடைமை – விருந்தோம்பல் – எவ்வுயிரையும் தன்னைப் போல் பார்த்தல் – பயன்கருதாத் தொண்டு முதலிய அறத்துறை கள் பல அடங்கி இருக்கின்றன.

காதற் றலைவன், தலைவி நலன்நாடி வாழ்வன். அங்ஙனே காதற் றலைவியும், தலைவன் நலன்நாடி வாழ்வள். ஒருவர் நோயுறின் மற்றவரும் நோயுற்றாற் போல வருந்துவர். இருவரும் ஓருயிர் ஈருடலென வாழ்வர். அவரது அன்பு, வாழ்வுடன் கலந்து நீண்டு வளர்ந்தே போகும். காமத்தலைவனோ தன்னலனே நாடுவன். காமத்தலைவியும் தன்னலனே நாடி நிற்பள். உடல் நலனோ பொருள் வளனோ சுருங்கின் இவர்க்குள் பிரிவு நேரும். இத்தகைய அன்பில்லாக் காம வாழ்விலா மக்கள் வீழ்வது? சிறுமை! சிறுமை!

உண்மைக் காதல்

உண்மைக் காதலி, தன் காதலனுடைய உடல் நலனோ பிறவோ குன்றினும், அவள் அவனை விட்டுப் பிரியாது, ஒன்றிய அன்பால் தொண்டு செய்வாள். காதலன் உயிர்நீப்பினும் அவனைக் காதலி மறவாள். காதலி உள்ளத்துள்ளே காதலனை யன்றி வேறென்ன நிலவும்? உண்மைக் காதலன் இயல்பும் இத்தன்மையதே. காதல் என்பது வெறும் விளையாட்டன்று. காதல், தன்னலன் நாடாது பிறர்நலன் நாடி உழைக்க எத்தகைய தியாகத்துக்கும் உட்படத் துணிவு ஊட்டும். உண்மைக் காதலுக்கு அறிகுறி இதுவே யாகும். இக் காதல்வழி வளரும் இல்வாழ்க்கை, பின்னை எந்நிலை கூட்டும் என்று இயம்பலும் வேண்டுமோ? ஆதலால், மக்கள் காதல் என்னும் தண்மைப் பொழிலிடை வாழ்வு நடாத்த முயலவேண்டுமா? அல்லது காமம் என்னும் எரிவாய் வெம்மையிடை வீழ முயல வேண்டுமா? என்பது உன்னற்பாற்று.

கலவி

காதல் வாழ்வு கூட்டும் தாய்மை முதலிய பேறுகட்குப் பிள்ளைப் பேறு அடிப்படை. பிள்ளைப் பேற்றிற்குக் கலவி தேவை. கலவியைப் பற்றிச் சில உரைபகர வேண்டுவதும் எனது கடன்.

உலகில் கல்வித்துறைகள் பல உண்டு. அவற்றுள் கலவித் துறையும் ஒன்று. இக் கல்வி இயற்கையில் உயிர்கள் மாட்டு, நிகழ்வது. அதற்கெனத் தனிக் கல்லூரித் தேர்வு முதலியன தேவை யில்லை. ஆதலால், இதுகுறித்து விரித்துரைத்தல் அநாவசியம்.

கயமை நூல்கள்

பல துறைகட்கு நூல்கள் இருப்பது போலக் கலவித் துறைக்கும் நூல்கள் உண்டு. அவற்றுள் பல கயவரால் எழுதப்பட்டன. அவற்றைக் கையாலும் தொடுதல் கூடாது. நன் மக்களால் எழுதப் பெற்ற நூல்கள் வாழ்விற்குத் துணை செய்யும். இளமையில் நேரிய முறையில் வாழ்வைச் செலுத்தியவர்க்கு எந்நூலும் வேண்டுவதில்லை. அன்னாரை இயற்கைத் தெய்வம், வழியே நடாத்திச் செல்லும்.

காமச்சூடும் ஆண்மக்களும்

கலவி காமச்சூட்டால் நிகழலாகாது. காமச் சூட்டுக்கு எளியராகிக் கலவி புரியாப் பயிற்சி ஆண்மக்கட்குத் தேவை. காமச்சூட்டுக்கு ஆண்மக்கள் எளியராதல் போலப் பெண்மக்கள் எளிய ராவதில்லை. இத்தன்மை பெண்மக்களுக்கு இயல்பில் அமைந்திருக்கிறது. உலகில் நிறை என்பது பெரிதும் பெண் மக்கள் உறுதியில் நிலவுகிறது என்று சொல்வது மிகையாகாது. இப்பெட்புடைய மகள், நாயகனையும் காமத்துக்கு இரையாகாத வாறு காத்தல் சிறப்பு.

நாயகன் விரும்பும்போதெல்லாம் நாயகி இடந்தரலா காது; இடந் தந்துவரின் ஆண்மகன், உடலுரங் குன்றி, அகாலத் தில் ஆண் தன்மை இழந்து, பலதிற நோய் வாய்ப்படுவன். இவ் வாறு ஒருவனைக் கெடுக்கவா ஒருத்தி அவனை மணஞ் செய்வது?

கணவன் மனைவியை அடிக்கடி கலவிக்கு அழைத்தல் பெருந்தவறு. இப்பயிற்சியால் ஆண்மகனே பெண் தெய்வத்தைப் பேயாக்குகின்றான். ஒருவரை ஒருவர் வலியுறுத்தல்வழி நிகழும் கலவி ஒருதலைக் காமத்தின் பாற்படும். அதனால் உடல் நலம் குன்றும்.

நாயகன் விரும்பும்போதெல்லாம் நாயகி உடல் நலங் கருதி, மறுத்துக் கொண்டே இருத்தல் அறமாமோ எனில், அஃதும் அறமாகாது. இடையீடில்லா மறுப்பு வெறுப்பின்வழி நிகழ்வது. காதல் வாழ்வில் கட்டுப்பட்ட நாயகி, இடையீடின்றி மறுத்து வாராள். இருவரும் ஓரளவில் கலவியில் கருத்துச் செலுத்தல் நல்லது.

கல்வி அறிவு ஒழுக்கம், நல்லாரிணக்கம், கடவுளிடத்தன்பு, உயிர்களிடத்தன்பு, தன்னிடத்தன்பு, பொருந்திய உணவு, பொருந்திய உடை முதலியன காமஎரி எழாதவாறு மக்களைக் காத்துவரும். பிள்ளைப் பேற்றிற்குக் கலவி என்னும் எண்ணம், இருவர் பாலும் பசுமரத்தாணிபோல் பதிந்து கிடப்பின், அவ்வெண்ணம் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தும்.

சுக்கிலம்

ஆண்மகனுக்கு உடற்கட்டு, நலன், வளன், உரன், அழகு முதலியவற்றை நல்குவது அவனது சுக்கிலம். அதை நினைந்த போதெல்லாம் அவன் போக்கிக் கொண்டிருந்தால், உடற்கட்டு முதலியன குலையும்; பின்னை நரப்புத் தளர்ச்சி உண்டாகும். நரப்புத் தளர்ச்சி உற்றவனால் காம உணர்ச்சியைச் சிறிதும் அடக்கல் முடியாது. போதிய வலிமையின்மையால் அவ் வுணர்ச்சியை அவனால் மாற்றுதலும் முடியாது. பெண் நினைவுறினும், அவள் ஒலி பேச்சு முதலியவற்றைக் கேட்பினும் உடை முதலியற்றைக் காணினும், காமச்சுடர் தீயனை எரிக்கும். எரியால் தாக்குறும் அவனால் ஆர்ந்த கலவியும் புரிதல் இயலாது; இயலாமையால் மன எரிவும் அவனுக்குத் தணிவ தில்லை. இவ்வளவோடு சனி அத்தீயனை விடுமோ?

காமத்தால் விளையுங் கேடுகள்

சனி, மகனது மூளையைக் கலக்கி நினைவழிக்கும்; கண்ணொளியைப் போக்கும்; காதை அடைக்கும்; பொறி புலன்களை ஒடுக்கிப் பசியைக் குலைக்கும். இவற்றால் அவனுக்கு மலம் சிக்குறும்; மண்டை இடிக்கும்; இருமல் எழும்; பித்தேறும். அவன் கண்டதை உளறுவன். உலகம் அவனுக்கு வெறுப்பாகத் தோன்றும்; அவனுக்கு அழகிடை அன்பு தோன்றாது; இசையில் இன்பந் தோன்றாது. அவன் நிலையை இன்னுமா வருணித்தல் வேண்டும்? அவன் வாழ்விழந்த பாவியாகிறான். இத்துணைக் கேட்டிற்குங் காரணம் என்னை? இளமையில் மைந்தன் தாதுவை அதிகம் செலவழித்ததே யாகும். காமச்சூட்டுக்கு இரையாகும் பெண்மகள் நிலையும் இவ்வாறே முடியும்.

தாதுவை வீணில் நினைந்தபோதெல்லாம் செலவழிப்ப தால் விளையுந் தொல்லைகள் பலப்பல. எண்பது துளி இரத்தம் ஒரு துளி தாதுவாகிறது. இவ்வரிய தாதுவைச் சேமிக்கும் அளவினதாக உடல்வளன் அமையும். அடியோடு தாதுவைக் கட்டுதலும் கூடாது. (இதுபற்றி முன்னர்க் கூறியுள்ளேன்) அதனாலும் சில கேடுகள் விளையும், ஓரளவினதாக – அதுவும் பிள்ளைப்பேறு கருதி – அன்பிடை – தாதுவைச் செலவு செய்தல் அறிவுடைமை.

சேர்க்கைக் காலவரை

திங்களுக்கு இரண்டு முறை மனைவியோடு சேருமாறு நமது நாட்டு நூல்கள் கூறுகின்றன; அதாவது மாதப் பூப்புக்கு முன்னொருநாளும், சூதகம் நின்ற பின்னொருநாளும் என்று சிலர் கூறுப. மாதப் பூப்பில் சூதக வடிவு நான்கு ஐந்து நாளில் நிற்கும்; சிலருக்கு ஆறு ஏழு எட்டு நாட்களுமாகும்; நல்லுடல் பெறாதார்க்கு இன்னுஞ் சின்னாள் நீடிக்கும். உடல் நிலைக்கு ஏற்றவண்ணம் சூதக ஒழுக்கு நிற்பது வழக்கம். அது நின்ற ஒரு வாரம்வரை கருத்தரிக்கும் நாட்களாகும். சில உடலுக்கு இன்னுஞ் சின்னாள் கூடுதலுமுண்டு. பொதுவாக ஒரு வாரம் குறிப்பிடலாம். அந்நாட்களில் இரண்டொரு நாள் கலவி புரிந்து, மற்ற நாட்களில் அதை விலக்கி வாழ்வது அறிவுடைமை. இவ் வழக்குப் பற்றியே, மாதத்துக் கிரண்டு முறை மங்கையரைப் புணர்தல் என்னும் அநுபவமொழி எழுந்தது போலும்!

திங்களுக்கு ஒருமுறை கூடல் சாலும் என்று பல அறிஞர் கூறியுள்ளனர். மூன்று திங்களுக்கு ஒருமுறை கூடல் மிகப் பொருத்தம் என்பது சில கூர்த்த மதியினர் கொள்கை. மூன்று மாத காலந்தாதுவைக் கட்டி, அன்பு வழியில் புரியுங் கலவியில் செம்மை இன்பம் நிகழும். அவ்வின்பம், கலவிக்குப் பின்னும் பன்னெடுநாள் மன அமிழ்தாய் நிலவும். பிள்ளை பிறப்பின் அது மிக அழகியதா யிருக்கும்.

வாரத்துக்கு இருமுறை மும்முறையும், (சூதகம் அடங்கிய நாள்தொட்டு மறுசூதகம் உறும் வரை) நாடோறும் மனைவி யுடன் கலவி புரிவது அறியாமை. இக் கலவியில் இன்பம் இராது. ஆனால் பின்னைத் துன்பம் மிகும். கலவியில் அளவாயிருக்கப் பயிலும் பயிற்சி மிகச் சிறந்ததென்க.

காமங் காத்தல்

இடையிடையே காம எரி எழாதவாறு எங்ஙனங்காப்பது? மனைவி முகம் பாராமலிருப்பதா? என்று சிலர் கேட்கலாம். மனைவியுடன் வாழலாம்; ஆடலாம்; பாடலாம். ஆனால் சேர்க்கை கூடாது. அவ்வாறு மனத்தைப் பயிற்சி செய்தல் வேண்டும். எப்படி – அதிலும் வெம்மை நாட்டில் எப்படி – என்று சிலர் கருதலாம். இது குறித்து எவரும் மலைவுறல் வேண்டு வதில்லை. மனப் பயிற்சி முறையில் மேல்நாட்டறிஞர் செவ்விதிற் பண்பட்டிருக்கின்றனர். நம் நாட்டவரும் அப்பயிற்சியில் பண்படுவது நலம். அப்பயிற்சியில் நமது நாடு ஒரு போது தலைசிறந்து விளங்கியது.

மன அடக்கம்

நாயகன் நாயகியுடன் பலதிற ஆடல்கள் ஆடலாம்; கைகால் படவும் ஆடலாம்; உடலுறவும் விளையாடலாம்; எல்லாஞ் செய்யலாம். ஆனால் மனத்தில் மட்டும் காமக் கிளர்ச்சிக்கு எவரும் இடந்தரலாகாது. கிளர்ச்சி தோன்றினும் அதற்கு எளிமையாகாது, ஒருமுறை இருமுறை மன உறுதியால் அதை அடக்கி ஆளஆள மனம் பண்படும். பின்னர், நாளடைவில் தீக்கிளர்ச்சி எவரையும் தன்வயப்படுத்த இயலாதொழியும்.

மனைவியைப் பாராமலும், தொடாமலும், பேசாமலும் அவளுடன் ஆடாமலும், பாடாமலும் இருப்பின், மனத்தில் காமக்கனல் மூண்டுகொண்டே யிருக்கும். ஆதலால், மனைவி யுடன் ஆடியும் பாடியும் வரின், மனமயல் ஒழியும். மனஅடக்கப் பயிற்சியால், விரும்பும்போது கலவி புரியும் பயிற்சியும் கைகூடும். இப்பயிற்சியுடையாரே நல்வாழ்வு பெற்றவர்.

வலிந்து கூடல்

நாயகி விரும்பாத காலத்து நாயகன் வலிந்து கூடுவது கொடும்பாவம்; கொலைப்பாவம்; அஃது இன்பக் கூடலுமா காது. அக்கூடலில் வலிந்து புகும் ஆடவனுக்குக் கேடு விளையும். அது முஷ்டிமைதுனத்தை ஒத்தது என்பது முன்னர்ச் சில இடங்களில் காட்டப்பட்டது. அஃறிணையுலகில் வலியுறுத்தல் கிடையாது. அவ்வுலகை நோக்கியேனும் உயர்திணை உலகம் நல்லறிவு பெறுவதாக.

பறவைகளிற் சில தமது சிறகை விரித்துக் காட்டுவதால், காதல் குறிப்பை உணர்த்தும். சில பூச்சிகள் கூத்தாட்டால் தங்கள் நிலையை உணர்த்தும். சில இனங்கள் சுழற்சியால் தங்கள் வேட்கையைப் புலப்படுத்தும். இவ்வழியில் இவைகள் தங்கள் பெண்ணினங்களை அன்பு வயப்படுத்துகின்றன. வலிந்து புணர் தலை அவ்வுயிர்களிடத்தில் காண்டல் அரிது. வலிந்து கூடலும் இயற்கை நிகழ்ச்சியாகாது. வலிந்து கூடும் மனிதர் மாக்களினும் இழிந்தவராவர்.

அன்புக் கூடல்

நாயகன் தனது காதல் அன்பெழுச்சியை இனியமுறையால் புலப்படுத்தப் புலப்படுத்த, அதுகாணும் நாயகியும் அக்காதல் அன்பால் விழுங்கப்படுவாள். அவள், செயல் குன்றியிருப்பது போல் கிடப்பாள். அதனைக் கண்ணால் – உதட்டால் – பிற மெய்ப்பாட்டால் – நன்கு உணர்தல் கூடும். அந்நிலையில் கலவி புரிதல் அறம். அதுவே மனங்கலந்த கலவியாகும். நாயகியுள்ளத் தில் விருப்பமில்லா வேளையில் கூடுதற்கும், விருப்பமுள்ள வேளையில் கூடுதற்கும் உள்ள வேற்றுமை, காதல் நுட்பம் உணர்ந்த அறிஞர்க்குப் புலனாகும்.

தலைவி விரும்பா வேளையில் கூடும் தலைவனுக்குப் பலதிறக் கேடுகள் விளையும். இவனது சுக்கிலம் அவள்பால் செல் கிறது. அதற்கீடாக அவளிடமிருந்து இவன் என்ன பெறுகிறான்? ஒன்றுமில்லை. தலைவியும் விரும்பிய புணர்ச்சி யாயின், அவள் உள்ளத்தூறும் அன்பால் கருக்குழிக்கணுள்ள சினைகள் கிளர்ந்தெழும். அவ்வெழுச்சியினின்றும் ஒருவிதச் சத்துப் பிறக்கும். அது தலைவனுள் நுழையும். அதனால் தலைவன் உடல் நலன் கெடுவதில்லை. தலைவி விரும்பாத வேளையில் தலைவன் அவளை நண்ணுவது மரத்துடன் புணர்வதை ஒக்கும். அது முஷ்டிமைதுனத்தை ஒத்தது என்று அறிஞர் கருதுகின்றனர். இதுபற்றி முன்னுங் கூறினேன்; பின்னுங் கூறுவேன். ஆதலால், எக்காரணம் பற்றியும் பெண் விரும்பாத காலத்து, ஆண் வலிந்து கூடுவது மூர்க்கச் செயலாகும். அதனால் இன்ப வாழ்வு கூடவே கூடாது.

படுக்கை அறை

இருவர்க்கும் படுக்கை அறை வேறாக இருத்தல் வேண்டும். அறை வேறே இல்லாதொழியினும் படுக்கையாதல் வேறே தனித் தனியாக இருப்பது நலம். ஒரே படுக்கையில் இருவர் உறங்குவது வெறுக்கத்தக்கது. அதில் சுகாதாரக் குறைவு ஏற்படும்.

வாழ்வும் கலவியும்

வாழ்வில் கலவி ஒரு கூறாகலான், அதை வாணாள் முழுவதும் வைத்துக் கொள்ளுதல் தவறு. சில இடங்களில் மனைவியின் பூப்பு நிற்குமட்டும் கலவியை விடுக்கக் கணவனுக்கு மனம் எழுவதில்லை. சிலர் மனைவியின் பூப்பு நின்ற பின்னர் வேறு ஒருத்தியை நச்சுகின்றனர். மருந்து தின்றேனும் கிளர்ச்சியை உண்டு பண்ணிக் கூடலில் சிலர் மூழ்குகின்றனர். இவர் அறியாமை இருந்தவாறென்னே! என்னே! இவர் வாழ்வின் நோக்கம் உணராத கயமை விலங்கினத்தார் என்க.

மனைவி, தாய், உடன் பிறந்தவள், மகள்

மனைவியின் பூப்பு முற்றும் நிற்பதற்கு முன்னரே, அவளோடு மெய்யுறு புணர்ச்சியை நிறுத்தி, அவள் உள்ளத்தில் வீற்றிருக்கும் அன்புக் கடவுளைக் காணத் தலைவன் முயலல் வேண்டும். மனைவி வெறுங் கலவிக்கு மட்டும் உரிய ஒருத்தி யல்லள். அவள், தாயுமாவள். உடன் பிறந்தவளுமாவள்; மகளு மாவள்; கடவுளுமாவள். எல்லாம் அவள். அவளிடத்தில் எல்லா இயல்புகளும் உள்ளன. இவையெல்லாம் சேர்ந்த ஒருத்தியே மனையில் வாழத்தக்கவள்.

வாயும் மனமும் கடந்த மனோன்மணி
பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளுநற் றாரமு மாமே.
தாரமு மாகுவள் தத்துவ மாய்நிற்பள்
காரண காரிய மாகுங் கலப்பினள்
பூரண விந்து பொதிந்த புராதனி
பாரள வாந்திசை பத்துடை யாளே.

-திருமூலர்.

மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண்
வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர்
என்னுடை யாரமு தெங்களப்பன்
எம்பெரு மானிம வான்மகட்குத்
தன்னுடைக் கேள்வன் மகன்றகப்பன்
தமயனெம் மையன் றாள்கள்பாடிப்
பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர்
பொற்றிருச் சுண்ண மிடித்துநாமே.

-திருவாசகம்

அன்னை தயையும் அடியாள் பணியுமலர்ப்
பொன்னின் அழகும் புவிப்பொறையும் – துன்னுமெழில்
வேசி துயிலும் விறல்மந் திரிமதியும்
பேசில் இவையுடையாள் பெண்.

-நீதி வெண்பா

தாயோ டறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் – தூயவுடன்
வந்தோன் மரிக்கில் வலிபோம் மனையெனிலோ
அந்தோ இவையெலாம் போம்.

-நீதிசாரம்

இவ்வான்றோர் மொழிகளின் உள்ளக்கிடக்கையை ஓர்க.

உலகியலும் கடவுள் நிலையும்

கடவுள் இயல் குறித்துச் சான்றோர் மொழிகளை உலகிய லுக்கு எடுத்தாளல் பொருத்த மாகுமா? என்று சிலர் வினவுதல் கூடும். உலகியல் நன்கு நடைபெறவேண்டி அதற்கோர் இலக்கிய மாகக் கடவுள்நிலை விளங்குகிறது. கடவுளியலை உலகியலி னின்றும் பிரித்துப் பேசுதல் கூடாது. கடவுளின்றி உலகமில்லை; உலகமின்றிக் கடவுளில்லை. உலகியலுக்குக் கடவுள்நிலை ஒரு வழிகாட்டி போன்றது. இறைவனுக்கு இறைவி ஒருபோது தாயாகவும், ஒருபோது உடன்பிறந்தவளாகவும், ஒரு போது மனைவியாகவும், ஒருபோது மகளாகவும் இருக்கிறாள் என்பது எதைக்காட்டுகிறது? அஃது, உலகியலிலும் ஒரே பெண்மை ஒருபோது தாயாகவும், ஒருபோது உடன்பிறந்த வளாகவும், ஒருபோது மனைவியாகவும், ஒருபோது மகளாகவும் நின்று துணை செய்கிறது என்பதை அறிவுறுத்துகிறது. இல்வாழ்வு இறையியலை நன்கு விளக்குவதென்க. இது நிற்க.

கலவிநீக்கும் வயது

உலக வளர்ச்சி நாடிக் கடவுள் ஆணைவழி நின்று பிள்ளைப் பேற்றின் பொருட்டுச் சின்னாள் கலவியில் ஈடுபட்டுப் பின்னை அதை நிறுத்துவது வாழ்வின் நோக்கை நிறைவேற்றுவ தாகும், முப்பதாம் ஆண்டளவில் மூன்று அற்று என்றார் ஔவையார். காலநிலை நோக்கி இப்பொழுது வயதை முப்பத் தைந்தாகப் பெருக்கிக் கொள்ளலாம். நமது நாட்டில் முப்பத் தைந்து வயதுக்குமேல் பெண்ணொடு கலத்தல் பொருந்தாத தாகும். குளிர்நாட்டில் வதிவோர் இன்னஞ் சில ஆண்டு கலவியில் போக்கலாம். நாட்டின் இயல்பிற்கேற்ப நமது நாட்டுப் பெண்மகளும் முப்பதுக்குள் கலவியினின்றும் விலக முயல்வது நல்லது. பூப்புள்ளபோதே அப்பயிற்சியில் தலைப்படல் வாழ்வை அறிவால் ஒழுங்குபடுத்துவதாகும். பூப்பு நிற்கும் வரை மெய்யுறு புணர்ச்சி நிகழ்த்தல் உடலுக்கு நலன் தேடுவதாகாது.

இருபது வயதுமுதல் முப்பத்தைந்து வயதுவரை அதாவது பதினைந்தாண்டு மெய்யுறு புணர்ச்சி நிகழ்த்தியது சாலாதா? அதற்குள் பிள்ளைப் பேறும் உண்டாகிறது. பிள்ளைப் பேற் றிற்குப் பின்னை, மேலும் மேலும் மெய்யுறு புணர்ச்சி எற்றுக்கு? பிள்ளைப் பேற்றின் பின்னை, நாயகன் தந்தையாகிறான்; நாயகி தாயாகிறாள். இப்பேற்றினின்றும் இறைமைப் பேறு பெற இருவரும் முயலல் அறம். இதுவே அந்தணநிலை என்பது. இவ்வுண்மையை,

காமஞ் சான்ற கடைக்கோட் காலைஏமஞ் சான்ற மக்களொடு துவன்றிஅறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே

எனவரூஉம் தொல்காப்பியச் சூத்திரத்தால் உணர்க.

இது துறவொழுக்கம் கூறும் சூத்திரம் என்று சிலர் நினைக்கலாம். தீய குணங்களினின்றும் விடுதலை அடைவதே துறவொழுக்க மென்பதும், பெண்ணை வெறுத்தல் துறவொழுக் கம் அன்றென்பதும் இந்நூற்கண் பல இடங்களில் சொல்லப் பட்டிருக்கின்றன. பிற்காலத்தில் நாட்டைக் கெடுக்க நுழைந்த போலித் துறவறத்தை இச்சூத்திரம் அறிவுறுத்துகிற தில்லை. பிள்ளைப் பேற்றின் பின்னை, மெய்யுறுபுணர்ச்சி நீத்து, உள் நோக்கால் இறைமைநிலை உணர்ந்து, உயிர்களிடத்து அன்பு செலுத்தும் ஒருநிலை சிறந்தது பயிற்றல் என்பது.

மெய்யுறு புணர்ச்சி நீக்கிய பின்னை

இவ்வாறு மெய்யுறலை நீக்கும் நாயகன், நாயகியைத் தன்னுடன் பிறந்த ஒருத்தியாகவும் தாயாகவும், நாயகி நாயகனைத் தன்னுடன் பிறந்த ஒருவனாகவும் தந்தையாகவும் கொள்ளப் பயிலல் அறம். இருவரும் மெய்யுறு புணர்ச்சி நீத்த பின்னர் உடல்நிலை கடந்த உள்நிலையில் கருத்தைச் செலுத்தல் விழுப்பம். உடம்பினுள்ளே கோயில் கொண்டுள்ள அன்புக் கடவுளோடு உறவுகொள்ளப் பயிலல் மேன்மை. இப்பயிற்சிக்குக் கால்கொள்வதே இளமை மெய்யுறு புணர்ச்சியின் நோக்கமாகும்.

மெய்யுறு புணர்ச்சி ஒரு படி

மெய்யுறுபுணர்ச்சி, மெய்யிலுள்ள அன்புக்கடவுள் காட்சிக்கு ஒரு படிபோன்றது. அப்படியும் பிள்ளைப் பேறெனும் உலக வளர்ச்சிக்குத் துணை நிற்பது. அந்தப் படியைக் கடந்தால் தெய்வக் காட்சி காணலாம். பெண்ணின் பெருமை விளங்கு மிடம் அங்கே அங்கே என்று இறுமாப்புடன் கூறுகிறேன். பொறாமை முதலிய பேய்கட்கு அங்கே இடமில்லை. அங்கே எல்லாம் அன்பு அன்பாகப் பொலியும். இளமை தொட்டு வாழ்வை அவ்வப்போதைக்குரிய நேரிய வழியில் நடாத்துவோர் இந்நிலை எய்துவர்.

பெண்ணில் தெய்வக்காட்சி

இந்நிலை எய்துவோர்க்குப் பெண்மக்கள் தெய்வங் களாகவே தோன்றுவார்கள். பெண்ணைத் தெய்வமாகக் காணும் ஒருவன் பிறவிக்கடல் கடந்தவனாவன். வாழ்வில் இத் துணை புரியப் போந்த பெண்ணின் பெருமையை என்னென்று சொல்வேன்? இக்கருத்துப் பற்றியே பெண் தெய்வத்தை வாழ்க் கைத் துணை என்று நந் தமிழ்ப் பெரியார் கூறிப்போந்தார். உடல் வாழ்க்கைக்கும் உயிர் வாழ்க்கைக்கும் துணைபுரிவோள் பெண்தெய்வம் என்பது உன்னற்பாலது.

பெண்ணின்பாலுள்ள தெய்வ இன்பத்தை நுகர்ந்த பெரியோர் பலருளர். அவருள் தம்பிரான் தோழர் என்னும் நம்பியாரூரரை ஈண்டுச் சிறப்பாகக் குறிக்கிறேன். அப்பெரியார் தமக்கும் தம் மனைவிமார்க்கும் ஏற்பட்ட பற்று, கடவுள்பற்று என்று அருள்கிறார்.

பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும்
பற்றாய பெருமானே மற்றாரை யுடையேன்

என்று வன்றொண்டர் ஆண்டவனை வழுத்தியிருத்தல் காண்க. இத்திருப்பாட்டை எத்துணைமுறை எடுத்துக் காட்டினும் என் மனம் சலிப்புறுவதில்லை. அதை நோக்க நோக்க – நினைக்க நினைக்க – என்னுள்ளம் இன்பக் கடலாடுகிறது. அன்பர்களே! அத்திருவாக்கில் படிந்து, அதன் பொருளாதற்குப் பயிலுங்கள்.

இயற்கைவழி இறைவனைக் காண்டல்; ஆண் பெண்ணாதல்

தெய்வம் கண்ணுக்குப் புலனாகாதது. அஃது இயற்கை வடிவாகிக் காட்சி அளிக்கிறது. இயற்கை வழியே இறைவனை உணரல் கூடும். பெண்ணோடு மெய்யுறல் நீத்து, உள்ளுறல் கொண்டு, இன்ப அன்பை நிகழ்ச்சியளவில் பருகி வரும்போது அன்பெனும் ஆண்டவன் வடிவாகிய இயற்கை நுட்பங்களெல் லாம் இனிது விளங்கும். பெண் ஓர் இயற்கை வனம்போலக் காணப்படுவள். நீலவானமும், வெண்திங்களும், மாங்குயிலும், நீலமஞ்ஞையும், அழகிய மலரும், விரைக் கொடியும், அருவி கொழிக்கும் மணிகளும், பிறவும் ஒருங்கு திரண்டு பெண் ணெனப் பொலிதல் காணலாம். இப்பொலிவுடைய இயற்கைப் பெண், அவளது உள்ளேயுள்ள இன்ப அன்புக் கடவுளின் பருமை யாவள். ஆகவே, பெண் இயற்கை வடிவான தெய்வமாகிறாள். இத்தெய்வத் தன்மையை ஆண்மகன் நினைந்து நினைந்து பெண்தன்மை பெறுவானாக. பெண்தன்மையாவது அருட் டன்மை; அதாவது எவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண் டொழுகும் அந்தண நிலை. இது வாழ்வின் நோக்கம்.

இப்பெருநிலைக்கு அடிப்படையாயுள்ள கலவியில் ஓரளவாகக் கருத்திருத்தல் வேண்டுவது தலைவி தலைவர் கடன்.

கலவியில் எச்சரிக்கை

கலவியும் ஒருவிதக் கல்வி என்பது மேலே சொல்லப் பட்டது. அக்கலவியை வழிதுறையின்றிப் புரிவதாலும் உடலுக்குப் பல திறக்கேடுகள் விளைவதுண்டு. வலிய ஆண் மக்களிடம் மெலிய பெண்மக்கள் மிக எச்சரிக்கையாயிருத்தல் வேண்டும். வழிதுறையில்லா விளையாட்டால் பெண்மக்களின் கருவு றுப்புக்களுக்கு ஊறு நிகழும்.

கால வேளை நாழி கருதாது கலவி புரிவதால், மலச்சிக்கல் முதலிய பிணிகள் தோன்றுவதுண்டு. உணவு கொண்ட சிறிது நேரத்துக்கெல்லாம் ஒருவரோடொருவர் கூடிக் களித்தலாகாது. அதனால் அஜீரணம் முதலிய நோய்கள் தோன்றும்; பின்னைப் பெருநோய்கள் உண்டாகும். புணர்ச்சிக் காலத்தில் வயிறு நிரம்ப ஜீரணமாகாத வெம்மை உணவு நின்றிருத்தலும் கூடாது. இன்னும் விரிக்கிற்பெருகும்.

பொருந்தா நாயகன்

தனக்கினிய கொழுநனைத் தெரிந்தெடுப்பதில் பெண்மகள் பெருங் கவலை செலுத்தல் வேண்டுமென்று திருமணம் என்னுந் தலைப்பின் கீழ் வலியுறுத்தியிருக்கிறேன். பெண் மகளின் கவலை ஈனத்தாலோ வேறு எக்காரணத்தாலோ பொருந்தா நாயகன் வாய்க்கப் பெறுவனேல் என் செய்வது? பெண்மகள் அவனுடன் வாழ்வதா அல்லது வாழாது அவனை விடுத்துப் பிரிவதா? பிரிதல் வேண்டுமென்று சொல்ல இந்தியாவில் பிறந்த எனக்கு நா எழவில்லை. எங்ஙனமாவது முயன்று ஆண்மகனது பொருந்தாத் தன்மையைப் போக்கவே பெண்மகள் முயல்வது சிறப்பு.

பெண்மை என்பது தாய்மை என்றும், தாய்மை என்பது தொண்டுக்குரியது என்றும் மேலே விளக்கப்பட்டன. தொண்டைப் பொருந்தா நாயகனை ஒழுங்குபடுத்துவதில் பெண்மகள் பயன்படுத்தலாமன்றோ? தொண்டில் விருப்புடைய பெண்ணிற்கு அஃதொரு வாய்ப்புமாகும்; தனக்கு வாய்த்த நாயகனைப் பண்படுத்தப் புகுந் தொண்டினும் வேறு தொண்டு பெண்ணிற்கு எற்றுக்கு? தொண்டுவழியில் வாழ்வு செலுத்தும் பெண்மணி வாழ்க. அவள்பால் கடவுள் அருள் என்றும் நிலவுக.

பொருந்தாத் தன்மை எத்தகையது என்று முதல் முதல் காணல் வேண்டும். அத்தன்மை பலதிறத்தது. ஈண்டு இரண் டொன்றை எடுத்துக்கொள்வோம்.

கணவன் அலியாயின்?

கொண்ட கணவன் அலியாயிருந்தால் என்செய்வது? பிறப்பில் பேடனாக உள்ள ஒருவன், ஒருத்தியை மணஞ் செய்து கொள்ளான்; ஒருவேளை அறியாது கொள்வனேல், மனைவி என்செய்தல் வேண்டும்? மனைவி உயரிய மனங்கொண்டு மெய்யுறு புணர்ச்சியைக் காய்ந்து கணவனுடன் வாழ்வது மேன்மை. அவள் வேறுவித ஆடல் பாடல், கல்வி ஆராய்ச்சி, கடவுள் வழிபாடு முதலியவற்றில் உட்கலந்து வாழ்வு நடாத்தி வரலாம். அப் பெண்மணி, பிள்ளைப்பேறு விரும்பினால், வேறு ஒருவனை மணஞ் செய்வது தவறாகாது.

நோயாளனாயின்?

நோயாளன் கணவனாக வாய்த்தால், மனைவி அவனது நோயைப் போக்கி, அவனுடன் கூடிவாழ உழைத்தல் ஒழுங்கு. நாயகன் கொடிய (பெண்) நோயாளனாயின், எக் காரணம் பற்றியும், அந்நோய் தீருமட்டும், அவனுடன் நாயகி சேர்தல் கூடாது. ஓராண்டோ ஈராண்டோ முயன்று, அவனது நோயைப் போக்கிய பின்னரே, அவள் அவனுடன் சேர்தல் விழுப்பம். தீரா நோயாயின் சேர்க்கையைத் தொலைத்துவிடுவது நல்லது. நோயாளியுடன் சேர்ந்து அவனது நோயை அருமைப் பெண் தன்னுடலில் இறக்கி வருந்துவதோடு, நோய்க் குழவிகளையும் குருட்டுக் குழவிகளையும் ஏன் உலகில் பெருக்கல் வேண்டும்? அப்பிள்ளைகளின்வழி நோயை ஏன் உலகில் வளர்த்தல் வேண்டும்? உயிர்களிடத்து இரக்கமுடைய பெண் ஒருபோதும் உலகிற்குக் கேடு நினைத்தலுங் கூடாது; செய்தலுங்கூடாது.

வேறு சில செயற்கை முறைகளால் சிறிது ஆண் தன்மை இழந்த கணவனாயின், மனைவி அவனுடன் கலத்தலை முற்றும் நிறுத்தி, எவ்வழியிலாவது முயன்று, அக்குறை போக்கத் தொண்டு செய்வாளாக. குறை நீங்கிய பின்னர் அவனுடன் அவள் கலந்து வாழ்வு நடாத்தலாம்.

இத்தகைய குறைகளின்றிக் குணத்திலோ செல்வத்திலோ கல்வியிலோ இவைபோன்ற பிறவற்றிலோ குறைபாடுடைய ஒருவன் ஒருத்திக்கு நாயகனாகக் கிடைப்பனேல், அவனது அவ்வக் குறையைக் களையப் பல்லாற்றானும் முயல வேண்டுவது நாயகியின் கடமை. குறையுடைய நாயகனை நிறையுடையனாக்க நாயகி தொண்டு செய்வது சிறந்த கடவுள் தொண்டு செய்வ தாகும். பெண்ணுக்குரிய பொறுமை, அடக்கம், அன்பு முதலிய குணநலன்களெல்லாம் பயன்படத்தக்க இடம் இதுவே.

நாயகன் பால் எக்குறையிருப்பினும், நாயகி பிரிவு உளங் கொள்ளாது, அக்குறை போக்க மகிழ்வுடன் தொண்டின் வழி வாழ்வைக் கழிப்பது பிறவிப் பயனைப் பெறுவதாகும்.

பொருந்தா நாயகியைப் பெறும் நாயகனும், மேற்போந்த முறைப்படி, அவளை ஒழுங்குபடுத்திக் கூடி வாழவே முயல்வது நல்லது.

வேறு சில

ஒருத்தியும் ஒருவனும் கூடி இல்லறம் நடாத்தும் வேளை யில் கவனிக்கத்தக்க வாழ்வுத் துறைகள் பலவுள. அவற்றுள் இன்றியமையாத சிலவற்றைக் கூறுகிறேன்.

வருவாய்க் கேற்ற செலவு

செல்வநிலை கவனிக்கத் தக்கது. இல்வாழ்க்கைக்குப் பொருள் இன்றியமையாது வேண்டற்பாலது. பொருள் வருவாய்க் கேற்ற செலவு செய்யப்படின் வாழ்வில் இன்பத் தேன் பிலிற்றும்; வருவாய்க்குமேல் செலவு செய்யப்படின், வாழ்வைத் துன்பக் கைப்பு அரிக்கும். வருவாய்க்கேற்ற செலவு செய்யும் பொறுப்பு யாருடையது? அப்பொறுப்பு வீட்டுக்கரசியாய், வாழ்க்கைத் துணைநலனாய் வந்த பெண்ணினுடையது என்று சொல்லலும் வேண்டுமோ?

மனைத்தக்க மாண்புடைய ளாகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

என்றார் திருவள்ளுவனார்.

அருள் வளர்க்க அறஞ்செய்தல்

வாழ்விற்குத் தேவைன அளவு செலவு செய்வது அறிவு டைமை; அன்புடைமை. செல்வக் களியாட்டயர்தல் அல்லது வறுமைக் குழியில் வீழ்தல் இரண்டும் நல்வாழ்வாகா. இரண்டிற் கும் இடைப்பட்ட எளிய இயற்கைவாழ்வு சாலும். இது குறித்துப் பெண்ணின் வளர்ப்பிலும் சொல்லியுள்ளேன். எளிய இயற்கை வாழ்விற்குச் செலவாகிப் பொருள் எஞ்சி நிற்குமேல், அதை ஏழைகள் – குருடர் – முடவர் – தீராப் பிணியாளர் – முதலிய வர்க்குச் சோறு கூறை கல்வி முதலியன வழங்குவதில் செல வழித்தல் அறம். பொருள்வழி அருள்வளர்க்க முயல்வது அறிவுடைமை.

இல்வாழ்வின் நோக்கம் என்னை? அன்பு அருள் ஒப்புரவு முதலியவற்றை ஓம்புதல்.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

என்று திருவள்ளுவனார் இல்வாழ்வோர் தொண்டு குறித்தல் காண்க.

தம்முயிர் போலப் பிறவுயிரையுங் கருதற்குரிய செந்துறை களிலெல்லாம் இறங்கித் தொண்டாற்ற வேண்டுவது இல்லறத் தார் கடன். அக் கடனாற்ற வருவாய்க்குத் தக்க செலவு செய்யும் இயல்பு சிறப்பாக இல்லக் கிழத்தியர் மாட்டிருத்தல் விழுப்பம். அத்தகைய இல்லிலேயே இன்ப வாழ்விற்கு இடனுண்டாகும்.

மீச் செயல் கூடாது

நாயகிக்கும் நாயகனுக்கும் இடையீடின்றி நாளுக்கு நாள் அன்பு வளரும் வழியில் இருவரும் வாழ்வு செலுத்துவது நலம். அதற்கு வாழ்வில் எல்லாவற்றிலும் ஓரள விருத்தல் வேண்டும். எதிலும் வரம்பு மீறி மீச்செயல் நிகழ்த்தல் கூடாது. ஆடல் பாடல் கூட ஓரளவினவாக இருத்தல் சால்பு. தொடக்கத்தில் வரம்புமீறி ஆடிப்பாடிப் பின்னே விடுத்தால், அன்பிற்கு இடையூறு நிகழும். சில இடங்களில் நாயகிமார் அன்பு அன்பு என்று தத்தம் நாயகன்மார்க்கு எல்லாப் பணிகளுஞ் செய்து, அவரைச் சோம்பேறிகளாக்குகின்றனர்; சில இடங்களில் பிணங்களாக்குகின்றனர். இச் செயல்கள் நாளடைவில் இடர் விளைக்கும். பின்னை வெறுப்புளத்தோடு பணிகள் ஆற்றல் நேரும். அட்டில் அமைத்தல் போன்ற வினைகளை நாயகி ஆற்றலாம். நாயகனுடைய துணி தோய்த்தல், கால்கழுவல், அவனுக்குப் பொட்டிடல் போன்ற வினைகளை நாயகி ஆற்று வது அநாவசியம்.

இருபாலாரும் வினையாற்றுவது நலன். ஒருவரோ டொருவர் கலந்து பல வேலைகள் செய்யலாம். இளமையில் உடலுரம் உள்ளபோது, எல்லாப் பணிகளையும் நாயகி தானே செய்து நாயகனைப் பிணமாக்கினால், பின்னை வலி குன்றும் போது, அவன் எதிர்பார்க்கும் வேலைசெய்ய இயலாது, அவள் விழிப்பாளாயின், அவன் மனம் மாறுபடும். ஆதலால், நாயகன் மாரைச் சோம்பேறிகளாக்காத வாழ்வை நாயகிமார் நடாத்து வாராக.

இளமையில் நாயகி நாயகனுடன் அடிக்கடி வீண்பேச்சு, வெற்றுரை, பயனில்சொல் முதலியன வழங்கல் ஆகாது. அவை தொடக்கத்தில் விருப்பூட்டுவது போலத் தோன்றும்; பின்னர் நாளடைவில் வெறுப்பூட்டும்.

ஐயுறல் கெடுவது காட்டுங்குறி

ஒருத்தியும் ஒருவனும் நடாத்தும் இல்வாழ்வு இன்ப வாழ்வாக வேண்டுமேல், இருவர் மாட்டும் நம்பிக்கையும் உண்மையும் இருத்தல் நல்லது. ஒருவரை ஒருவர் ஐயுறல் கூடவே கூடாது. ஐயத்தால் பீடிக்கப்படும் வாழ்வு இன்ப வாழ்வாதல் அரிது. அதை நரக வாழ்வு என்று கூறலாம். ஒன்றிய அன்புத் தெய்வம் நிலவத்தக்க இடத்தில், ஐயப்பேய் புகுந்தால், அது வாழ்வை அலைப்பது திண்ணம். ஐயத்தால், விளைந்த கேடுகள் பல; நிகழ்ந்த கொலைகள் பல. எக்காரணத்தாலோ ஐயந் தோன்றினால், உடனே கரவின்றி அதை வெளிப்படுத்தித் தெளிவு பெறல் சிறப்பு, ஐயத்தை உளங்கொண்டு, துப்பறிவார் போல் ஒருவரை ஒருவர் சோதிக்கப் புகுவது, நரகத்தை வலிந்து விலைக்கு வாங்குவதாகும். மருண்டவன் கண்ணுக்கு இருண்டன வெல்லாம் பேயாகத் தோன்றுதல் போல, ஒவ்வொருவர் செயலும் மருட்சியை வளர்த்து வளர்த்துப் பேரிடர் விளைக்கும். ஆதலால், நாயகியும் நாயகனும் தமதுள்ளத்தில் ஐயப்பேய் நுழையாதவாறு தம்மைக் காத்து வருவாராக.

நாயகி தன் வாழ்வு நாயகன் பொருட்டென்றும், நாயகன் தன் வாழ்வு நாயகி பொருட்டென்றும், தன்னலமில்லா வாழ்வு நடாத்தி வரின், அவர் வாழும் இல்லம் இறையுறையும் வீடாகும்; வாழ்வும் இன்ப இறைவனோ டியைந்ததாகும்.

பண்டுநிகழ் பான்மையினால் பசுபதிதன் னருளாலேவண்டமர்பூங் குழலாரை மணம்புணர்ந்த வன்றொண்டர்புண்டரிகத் தவள்வனப்பைப் புறங்கண்ட தூநலத்தைக்கண்டுகேட் டுண்டுயிர்த்துற் றமர்ந்திருந்தார் காதலினால்,

-சேக்கிழார்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !