பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை
திரு. வி. கலியாணசுந்தரனார்

10. பெண்ணலன்

(தாயும் நாடும் – செயற்கை முறைகளும் கழுவாயும் – எரிநோய் – உயிர் முட்டை – இயற்கையும் மருந்தும் – மாதப் பூப்பு – உறுப்புப் பிறழ்ச்சி – மலச் சிக்கல் – வியர்வை – பிராணாயாமம் – சிறுநீர் – பித்தம் – நோன்பு – அழகு காத்தல்).

உடம்பா ரழியில் உயிரா ரழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாய மறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

-திருமூலர்.

பிள்ளைப்பேறு முதலிய பெருமைகட்கு நிலைக்களனா யிருப்பது உடல்நலன். உடல்நலனைக் கெடுத்து நோய் வாய்ப் படும் ஒருத்தியின் ஊனம் அவளோடு ஒழிவதில்லை. அவள் வழிவழித் தோன்றும் உயிர்களையும் அவ்வூனம் தொடர்ந்து தொடர்ந்து பீடிக்கும். ஒரு நாட்டின் செழுமையும் கொழுமை யும் அந்நாட்டுப் பெண்மக்கள் நிலையைப் பொறுத்திருக் கின்றன.

தாயும் நாடும்

நோயில்லாப் பெண்மக்களைப் பெற்ற நாடே தவஞ் சிறந்த நாடு. ஒருநாடு எல்லா வளங்களையுங் கொழிப்பதாயினும், அந்நாட்டு மக்கள் கூடாஒழுக்கத்தில் தோய்ந்து, நோய்வாய்ப் படுவரேல், அவர்கட்குப் பிறக்கும் மூஞ்சூறுகளும், குருடுகளும், செவிடுகளும் அந்நாட்டின் வளங்களிலுள்ள நலன்களை எங்ஙனந் துய்க்கும்? இன்ப நுகர்ச்சிக்கு நாட்டு வளனோடு மக்கள் வளனும் பொருந்தியிருத்தல் வேண்டும். ஆதலால், நோயற்ற வாழ்வுடைய மக்கள் வதியும் நாடே சிறந்த தவ நாடாகும். அத்தகைய நாட்டைப் படைக்கும் பொறுப்பு, தாயுடையது என்பதை விளக்க வேண்டுவதில்லை.

தாய்மைக்குரிய பெண்மணி நோயின்றி நலம் பெற்று வாழ முயல்வது தகுதி. நற்றாயாதற்குரிய வழியில் பெண்ணை இளமை தொட்டு வளர்க்கத் தாய் தந்தையர் பெரிதுங் கடமைப் பட்டிருக் கின்றனர். விரிவு இந்நூல் பெண் வளர்ப்பில் காண்க. ஆண்டு உடலோம்பு முறைகளும் சில கூறப்பட்டன.

பெண்ணினல்லாள், உணவானும் ஒழுக்கத்தானும், தன்னுடல் நிலையைப் பாதுகாத்துவாரல் பண்பை வளர்ப்ப தாகும். வெம்மையூட்டும் உணவும் கூடாவொழுக்கமும் பெண்ணின் மெல்லிய உறுப்புக்களை எரித்து அரித்துக் கல்லும். இவ்வெரிக்கு அடிமையாகாது, இயற்கைவழி வாழ்வு நடாத்தும் பெண்ணின் வாழ்வு நல்லதாக மலர்ந்து மணம் வீசும்.

உடல்நலனுக்குரிய முறைகள் பல இந்நூற்கண் ஆங்காங்கே சொல்லப்பட்டிருக்கின்றன. நூற்கண் வேறிடத்தில் சொல்லாத சிலவற்றை ஈண்டுச் சுருங்கக் குறிப்பிடுவது நலமென்று தோன் கிறது.

செயற்கை முறை: இல்லறமென்னும் இயற்கை அறத்தை ஏலாது, வேட்கையைச் செயற்கை முறையில் தணிக்கப் புகும் மக்கள் பின்னே அடையுங் கொடுமைகள் முன்னர் விளக்கப் பட்டன. முஷ்டிமைதுனம் போன்ற செயற்கைத் துறைகளில் அறியாமையால் வீழ்ந்து இடர்ப்படும் மக்கள் நிலையும் ஆண்டுக் கூறப்பட்டது. அச்செயற்கையாளர் மீண்டும் நலம் பெறல் உண்டோ?

தொடக்க நிலையில் இருப்போர்க்குத் திருமணம் பொருந்திய மருந்தாகும். அந்நிலை கடந்து, முகம் வெளுத்து, கண்ணொளி மங்கி, ஈரல் இயக்கந் தளர்ந்து, பசிகுன்றி, மலஞ்சிக்கி, உறக்கமிழந்து, இருக்கும் போதும் நிற்கும்போதும் கிடக்கும்போதும் எப்போதும் தீய எண்ணத்துக்கு அடிமையாய், சிறுநீர் அடிக்கடி சொட்டும் முதிர்ந்த நிலையடைந்த முத்தர் உய்யும் வழியில்லை என்று மேல்நாட்டு மருத்துவ அறிஞர் பலர் எழுதியிருக்கின்றனர். உய்யும் வழியும் காணப்பெறாத முத்தர் நிலை பெரிதும் இரங்கத் தக்கதன்றோ?

இயற்கையின் இயல்பு

இவர் இந்நிலை எய்துதற்குக் காரணம் என்னை? இயற்கை அன்னையின் நோக்குக்கு இவர் மாறுபட்டு நடந்தமையாகும். அந் நடக்கை, அளிக்கத்தக்க பயனை அளியா தொழியுமோ? தன் நியதிக்கு மாறுபட்டு நடப்போரைச் சிறிதும் இரக்கமின்றி ஒறுப்பது இயற்கை அன்னையின் இயல்பு. மேலும் மேலும் மருந்து முதலியன உண்டு. இயற்கை அன்னையை மறப்பது, அவளுக்கு மேலும் மேலும் சினத்தை மூட்டுவதாகும்.

கழி விரக்கமும் மன்னிப்பும்

செயற்கைத் துறையில் உழைத்து முதிர்ந்த முத்தர்க்கு உரிய மருந்து இவ்வுலகிலில்லை. இல்லையேல், அவர்தங் கதி என்னை? குற்றத்திற்கு மன்னிப்பு இல்லையா? மன்னிப்பு உண்டு. எப்பொழுது? செய்த குற்றங் குறித்துக் கழிவிரக்கமும், மீண்டும் அக் குற்றஞ் செய்யா மனஉறுதியும் கொள்வோர்க்கு மன்னிப்பும் கிடைக்கலாம்; உய்வும் உண்டாகலாம். செயற்கைத் துறையில் ஆடியதன் பயனைத் துய்ப்போர் முதலாவது இயற்கையை மறந்தது தவறு என்பதை உணர்தல் வேண்டும்; அவ் வுணர்வுடன் நிகழ்த்திய பிழை குறித்து வருந்தல் வேண்டும்; வருந்துவதுடன் மீண்டும் அக்குற்றம் நிகழ்த்தாத மனஉறுதி பெறுதல் வேண்டும். செயற்கையாளர், இயற்கை அன்னைபால் சரண்புகுந்து, அன்னாய்! அடைக்கலம்! அடியேனைக் காத்தருள்க என்று அழுவாராக. அவர் இயற்கை வழி வாழ்வு நடாத்த உறுதி கொள்வாராக.

இயற்கை முறைகள்

முதலாவது அந்நோயாளர் உயிர் நிலையைக் கரத்தால் தொடுவதுங் கூடாது; மனத்தால் நினைப்பதுங்கூடாது. பழக்கம் மிகக் கொடியது. நீண்ட நாள் பழக்கம் அவரை விரைவில் விடுதலை செய்யாது. அப்பழக்கத்தைத் தவிர்க்கவல்லது மன உறுதி ஒன்றே. உறுதி குலைந்து, மீண்டும் இடையிடையே பழைய பழக்கத்துக்குத் தீயோர் அடிமையானால், அவர் மாள வேண்டு வதே முடிவு. மன உறுதியால் பழக்கத்தை வென்று, இயற்கை அன்னையின் திருவருளாகிய நீரினும் காற்றினும் ஞாயிற்றொளி யினும் முறைப்படி படிந்து வரவர, இயற்கை அன்னை திருவருள் சுரப்பாள்.

வெம்மை நாட்டில் வதிவோர் நீண்ட நேரம் ஞாயிற் றொளியில் நிற்றலாகாது. ஐந்து அல்லது பத்து நிமிடஞ் சாலும். ஞாயிற்றொளியில் மூழ்கும் போது தலையையும் அரையையும் துணியால் அல்லது பசுந்தழையால் மூடிக் கொள்வது முறைமை. இல்லையேல் மூளைக்கும் உயிர் நிலைக்கும் பழுது நேரும்.

இயற்கை உணவு

இயற்கை மூழ்கலோடு, இயற்கை உணவருந்தல் பொருத்தம். காய்கறிகளைப் பசுமையாக உண்பது நல்லது. இயலாதாயின் அவற்றைச் சிறிது அவித்து அருந்தலாம். காரம் புளி சேர்க்கை கூடாது. பழம் நிரம்ப உண்ணலாம். பழமே உண்டும் வரலாம். காப்பி, தேயிலை, கொக்கோ, ஓவல்டைன் முதலியன வீட்டில் தலைகாட்டல் ஆகாது. அடிக்கடி நீர் பருகலாம். முறைப்படி உடல்நிலைக்கேற்ற அளவில் நோன்பு அதாவது விரதம் இருப்பது எல்லாவற்றினும் சிறந்தது.

வாழும் இடம்

நோயாளர் காடுகளிலாதல் காடடர்ந்த மலைகளிலாதல் வதிதல் நன்று. இவர் கட்டிடங்களில் – அதிலும் காற்று நுழைவில்லாத கட்டிடங்களில் – பெரும் பொழுது போக்குதலா காது; மரத்தடியில் பகல் பொழுதைக் கழிப்பது சிறப்பளிக்கும்; இயற்கையுடன் இயைந்து வாழல் வேண்டு மென்று சுருங்கச் சொல்லலாம். இவ்வாறு மனந் திரும்பினோர், ஓராண்டில் அல்லது ஈராண்டில் இயற்கை அன்னையின் திருவருளை ஒரோவழியாதல் பெற்று, ஒருவாறு நலனுறலாம்.

இடையில் உடல்நலனைக் கெடுத்துப் பின்னை ஏன் இடருறல் வேண்டும்? இடரினின்றும் நீங்க ஏன் அங்கும் இங்கும் உழலல் வேண்டும்? இளமை தொட்டு இயற்கையோடியைந்த வாழ்வு நடாத்தும் பெண்ணே மேன்மையடைவாள். அவள் பெறற்கரிய இன்பத்தைப் பெறுவாள். ஆதலால், எக்காரணம் பற்றியுஞ் செயற்கைத் துறைகளில் படியாது பெண் மக்கள் இயற்கை வாழ்வு நடாத்துவார்களாக.

எரி நோய்:- மேற்குறிப்பிட்ட செயற்கைத் துறைகளில் வீழாது, வேறு பல தீத்துறைகளில் வீழ்ந்து நோய்வாய்ப்பட்டு, உடல் நலனைக் கெடுத்துக் கொள்ளும் பெண்ணினமும் உண்டு. இவ்வுலகில் வெறுக்கத்தக்க உயிர்கள், பன்றிகள் என்று சிலர் கூறுப. அவற்றினும் இழிந்தன இந்நோயுருவங்கள். உயர்திணைப் பெண் தெய்வங்களை அஃறிணை உருவங்கள் என்று சொல்லலும் நேர்ந்தது!

பெண்பிறவி தாங்குவோர் அனைவரும் வாழ்வில் வெற்றி பெறுகிறாரில்லை. சிலர் வழுக்கி வீழ்கின்றனர். பெண்பிறவி தாங்குவது மட்டும் பெண்மை கூட்டாது. பிறவிக் கேற்ற நல னெலாம் மலர நல்வழியில் வளர்ந்து தெய்வநிலை பெறுபவளே பெண்ணெனுஞ் சொற்கு உரிய பொருளாவள். ஒருவனுடன் வாழ்வு நடாத்திக் கடவுள் படைப்புக்குத் துணைபுரிய வழங்கப் பட்ட இன்ப உறுப்பைக் கூடாவொழுக்கத் தாலும் வேறுபல தீயவழியாலும் புண்படுத்தி, எரியாக்கித்தான் இடர்ப்படுவ தோடு, பிறரையும் பின்வரும் உலகையும் இடர்ப்படுத்தும் ஒருத்தி எங்ஙனம் பெண் ஆவள்? அவள் தாய்மைக்குரிய பெண்மை இழந்த பாவியல்லளோ? அவளை அஃறிணையின் பாற்படுத்துவது தவறாகாது.

அப்பாவி உருவிலும் உறுப்பிலும் வெம்மை கொழுந்து விட் டெரியும். அவ்வுருவை ஒரு நெருப்பு மரம் என்று கூறலாம். அதைத் தொட்டாலும் போதும் நோய்த்தீ பற்றிக் கொள்ளும். ஐம்பூதத்துள் ஒன்றாகிய தீயின் சூட்டால் நேரும் புண்ணாதல் ஆறிவிடும். பாவிப் பெண்ணின் தீப்புண்ணுக்கு ஆறுதலில்லை. அத்தீயிடை வீழ்ந்து வருந்துவோர்நிலை இரங்கத் தக்கது. உயிர்நிலையினின்றும் எழும் வெம்மை, மூளையையுந் தாக்கி, வேறு பல உறுப்புக்களையுங் கலக்கி, இளகச் செய்யுங் கொடுமையை என்னென்று இயம்புவது? தண்மைப் பெண், வெம்மைப் பேயானாள். பசிய மருதம், பசுங்கள்ளியையும் எரிக்கும் பாலையாயிற்று.

உயிர் முட்டை

இப்பெண் ஏன் பிறந்தாள்? ஊரை அழிக்கவா? இவள், தானும் வெம்மையில் வேகிறாள்; மற்றவரையும் வேக வைக்கிறாள். இவள் கருவில் உயிர்முட்டை நிலவுங்கொல்! நிலவி வருங்கொல்! அஃது எரிந்து கரிந்தன்றோ போகும்? ஒழுக்கங் காவாதொழிந்த மதியீனம் இப்பொழுது மகளுக்கு விளங்கும்! ஆகவே, ஒருவனுடன் வாழும் ஒருத்தியே நலனுடையா ளென்க.

ஒழுக்கந்தவறி வீழ்ந்த பெண்மக்கள் நலனுறுவது எங்ஙனம்? இவர்கள் விடுதலை அடையக் கொள்ளும் பேராவலுக்கு அளவில்லை. இவர்கள் எவ்வழியில் முயன்றாலும் கறந்த பாலாகப் போவதில்லை; ஆயினும், தக்க கழுவாய் தேடின், ஒருவழியில் துன்பமின்றியாதல் வாழ்தல் கூடும்.

தொடக்கத்திலேயே கழுவாய்

வெள்ளை, கொறுக்கு, மேகம் முதலிய கொடுநோய்கள் தலைகாட்டும்போதே, பெண் எச்சரிக்கையாயிருந்து, இயற்கை வழி வாழ்வு நடாத்தினால் ஒருவாறு எரியைத் தணிக்கலாம். முதலாவது – நோய் தலைகாட்டும் போதே- பெண்மக்கள் பிறர் சேர்க்கையை அறவே முற்றுந்தொலைத்தல் மனந்திருந்துவதற்கு அடிகோல்வதாகும். நோயுடையார்க்கு வெம்மைக் கிளர்ச்சி அதிகம். அதன் தூண்டுதலுக்கு எக்காரணம் பற்றியும் அவர் எளியராதல் கூடாது. உள்ளத்தில் உறுதி கொண்டு, உள்ளும் புறமும் பற்றியுள்ள வெம்மையைத் தணிக்க அவர் முயல்வாராக. இதற்கு இரு வழியுண்டு. ஒன்று இயற்கை வழி; மற்றொன்று மருந்து வழி. இயற்கை வழிகளில் தலையாயது நோன்பு அதாவது விரதம். நோன்பு பூண்டு, நீர் காற்று ஞாயிற்றொளியில் படிந்து, பொருந்திய உணவுகொண்டு வாழ்வோரது வெம்மை ஒருவாறு தணியும். இவ்வழி நிற்க இயலாதார் அநுபவத்திற் சிறந்த மருத்துவரிடம் போந்து மருந்து உண்பது மாண்பு. மருந்தினும் இயற்கை முறையே சால்புடையது. நோய் நீங்கப் பெற்ற பின்னர் நல்வழியில் காலங்கழிப்பது பெண்மைக்கு அழகு. பெண்ணோய் உலகிடை அருகுநாள், உலகம் விடுதலை அடையும் நாளாகும்.

மாதப் பூப்பு : செயற்கை நரகங்களில் வீழாமலும், வேறு பல கூடாஒழுக்கங்களில் தோயாமலும் தன்னைக் காத்து, இயற்கை அறத்தை நடாத்திப் பிள்ளைப் பேறு முதலிய பேறுகளையடைய உடலை ஓம்பும் பெண்ணே பெண்ணினல்ல நங்கையாவள். உலகை ஈன்று வளர்க்குந் தாய், பெண்ணாகலான், அவள் உடல்நலனைப் பெரிதும் பேணுதல் வேண்டும்.

உடல்நலனை நல்ல வழியில் பேணிவரும் பெண், திங்கள் தோறும் ஒழுங்காகப் பூப்பெய்துவள். மாதப்பூப்பு, மாதவிடாய், மாதருது, வீட்டுத்தூரம், வீட்டு விலக்கு, தலைமுழுக்கு, தீட்டு முதலிய யாவும் ஒரு பொருளுடையனவே. திங்களுக்கு ஒருமுறை நிகழும் சூதக வெளியீடு பூப்பென்பது. அவ்வெளியீடு இருபத் தெட்டு நாளுக் கொருமுறை நிகழல் இயல்பு. உடற்கூற்றுக்கு ஏற்றவண்ணம், சிலருக்கு இருபத்தேழாம் நாளிலும், சிலருக்கு இருபத்தொன்பது முப்பதாம் நாளிலும் சூதகம் வெளிப்படும். இவ்வேற்றுமை இயற்கை. அவரவர் உடல்நிலைக்கு ஏற்றவாறு அவ்வக் கால எல்லைக்குள் பூப்புறல் வேண்டும். அதில் மாற்றமும் பிறழ்ச்சியும் நிகழ்வது நல்லுடலுக்கு அறிகுறி யாகாது. சூதகம் வடிதல் நான்கு ஐந்து நாளுக்குள் நிற்றல் நல்லது; அதற்கு மேற்பட்டு வடிதல் நல்லதன்று. உடற்கூற்றுக்குத் தக்கவாறு சிலநாள் கூடலும் குறைதலும் உண்டு. மாதவிடாயில் ஒழுங் கீனம் நிகழின், உடனே அதைப் போக்கி, ஒழுங்கில் கொணர முயல்வது பெண்மக்கள் கடமை.

பூப்பின் ஒழுங்கின்மைக்குக் கூறப்படுங் காரணங்கள் பலப்பல. ஒழுங்கின்மைத் திறங்களும் பற்பல. அவற்றை மருத்துவ நூல்களிற் காண்க.

இளமைதொட்டு, ஒழுக்கங் காத்து, உணவு உறக்கம் முதலியவற்றில் ஏற்றமிறக்கமின்றி, அவைகளை அளவாக் கொண்டு, முறையாக உடற்பயிற்சி செய்து, இயற்கைக்கு அரணாமாறு வாழ்ந்து வருவோர்க்கு மாதவிடாயில் தவறுதல் நிகழாது. மாதப் பூப்பின் ஒழுங்கு பெண்ணின் வாழ்வின் ஒழுங்காகும். ஆதலால், மாதவிடாயில் தவறுதல் நிகழ்ந்ததும் பெண்மணி, தக்க மருத்துவர்பால் சென்று, உற்ற குறைபாட்டை முறையிட்டு, அவர்வழி நின்றொழுகி, அதை ஒழுங்குபடுத்திக் கொள்வாளாக.

மரஞ்சுற்றல், மலையேறல் முதலிய பயிற்சிகள் நல்லன.

பிறழ்ச்சி : போதிய பயிற்சியின்மையும், ஒரே இடத்தில் கிடத்தலும், மலச்சிக்கலும், இன்ன பிறவும் பெண்மகளின் கருஉறுப்பை இடம் விடுத்துச் சரியவோ, ஏறவோ, தாழவோ செய்யும். இதற்குச் சிறந்த காரணம் உடலில் போதிய உரம் இன்மை என்று பொதுப்படக் கூறலாம். பிறழ்ந்த உறுப்பைத் தக்க மருத்துவரைக்கொண்டு உடனே ஒழுங்குபடுத்தல் வேண்டும். உறுப்பு ஒழுங்குபட்டதும் உடற் பயிற்சியானும், நல்லுணவானும், பிற இயற்கை முறைகளானும் உடலை நலனுறச் செய்தல் அறிவு.

கருப்பையின் பிறழ்ச்சியை உணராது வாளா கிடந்தால் பின்னர்ப் பலதிற இன்னல்கள் விளையும். சிலபோழ்து சத்திரஞ் செய்தலும் நேரும். கருப்பையின் பிறழ்ச்சியை உணராது, பிள்ளைப்பே றில்லையே என்று வருந்தி வருந்திச் சிலர் ஏங்கிக் கிடப்பர். சில நாயகன்மார் மறுமணஞ் செய்ய முந்துவர். இயந்திர காலத்தில் வாழும் இக்காலப் பெண்ணுலகிற்குக் கருப்பைப் பிறழ்ச்சி மிக இயல்பாகிவிட்டது. ஒரே இடத்தில் கிடந்து, எந்நேரமுந் தின்று, போகந்துய்த்திருந்தால் கருப்பையும் நெகிழும்; பிற உறுப்புக்களும் தளரும். எல்லா நலன்களுக்கும் உடற் பயிற்சி, நீராடல், காற்றில் உலவல், ஞாயிற்றொளியில் நிற்றல், பொருந்திய உணவருந்தல், போகத்தில் அளவாயிருத்தல் முதலிய ஒழுங்குமுறைகள் தேவை.

மலச்சிக்கல் : மலச்சிக்கலைப் பற்றி இந்நூற்கண் பல இடங்களில் ஒவ்வொரு முறையில் குறிப்பிட்டு வருகிறேன்; ஈண்டுஞ் சில குறிக்கிறேன். உறங்கி எழுந்ததும் அன்றாடம் மலங்கழித்தல் வேண்டும். மலம் முற்றுங் கழியாது, சிக்குற்றுத் தங்குமேல், அது நஞ்சாசிப் பலதிற நோய்களை உண்டு பண்ணும். ஏறக்குறைய எல்லா நோய்களையும் பிறப்பிப்பது மலச்சிக்கல் என்பதை ஆராய்ச்சியிற் காணலாம். ஆதலால், மலச்சிக்கல் உறாதவாறு காப்பது நோய் வரவொண்ணாதவாறு தடுக்க முயல்வதாகும். உடற்பயிற்சியில் கவலை செலுத்தாது சோம்பிக்கிடத்தல், பொருந்தா உணவருந்தல், மீதூண் கொள்ளல், கண்விழித்தல், அடிக்கடி மருந்துண்ணல் முதலிய வாற்றான் மலச்சிக்கல் உறும். அளவு மீறிய போகத்தாலும் மலச்சிக்கல் நேர்வதுண்டு. மலச்சிக்கலைப் போக்க அன்றாட உணவு, உறக்கம், பழக்க வழக்கம் முதலியவற்றை ஒழுங்கு படுத்துவது தற்காப்பாகும். உடற்பயிற்சி இன்றியமையாதது. பழவுணவு மலச்சிக்கலைப் போக்கும். போதிய அளவு நீர் அருந்தல் மலச்சிக்கலுக்குப் பெருமருந்து. கீரை, கத்திரிப்பிஞ்சு, வெண்டைப்பிஞ்சு, வெங்காயம், தக்காளி, கடுக்காய் முதலியன உண்டுவரின் மலமிறங்கும். எம்முயற்சியானும் மலங்கழியா தொழியின் எனிமாவால் அதைக் கழித்தால் துன்பம் நீங்கும். காலையில் நறு நீராடினால் நலம்விளையும். நீராடல் முன்னருஞ் சொல்லப்பட்டது. ஆற்றுநீர் ஊற்றுநீர் இல்லாத இடங்களில் தொட்டியில் நீர் நிரப்பி, அதில் சிறிது நேரம், ஐந்து அல்லது பத்துநிமிடம் – காலும் தலையும் நீரில் தோயாதவாறு, கொப் பூழுக்குக் கீழ், நீர் நிற்குமாறு அமர்ந்து, பின்னர்த் தலைமுழு கலாம். இது கூன் என்பார் கொண்ட முறை. இது குடருக்கு வலிமையூட்டி, குருதியைப் பெருக்கி, மலக்கழிவை ஒழுங்கு படுத்தும்.

வியர்வை: அன்றாடம் – அன்றாடம் வியர்வை இறங்குதல் உடல் நலனுக்குத் துணைபோகும். வியர்வை இறங்காமல் உள்ளே தங்கித் தேங்குவது உடலில் நஞ்சைச் சேமிப்பதாகும். உழைப்பானும், உடற் பயிற்சியானும் வியர்வையைக் கழிக்கலாம். வியர்வை எளிதில் இறங்காவிடின், வேது அதாவது நீராவி பிடித்தல் நன்று. தலைநோயால் பீடிக்கப்பட்டிருக்கும்போது சிலர் வேது பிடித்து நோய் நீக்குவர். நோய் நீக்கத்துக்குக் காரணம் என்னை? (வெளியே வாராது) உள்ளே தங்கித் தேங்கிக் கிடந்த நச்சுநீர் வெளிவந்தமையாகும். வியர்வை கசியா இடங் களில் குருதி யோட்டங் குறையும். நாளடைவில் அவ்விடம் மரத்துப் போகும். வேது பிடித்தலால் நஞ்சை இறக்கலாம். வியர்வை சொட்டச்சொட்ட வேலை செய்வது விழுப்பம். உறக்கத்துக்குப் போம்போதும், உறக்கத்தினின்றும் எழும்போதும் உடலை நன்றாகத் தேய்த்துக் கொள்வதால் செழுமை சிறக்கும். பின்னே தூய நீராடிப் புற அழுக்குகளைப் போக்கல் புனிதம்.

பிராணாயாமம்: பிராணாயாமம் அட்டாங்க யோகங் களுள் ஒன்று. பண்டைக்காலத்தில் நம் நாட்டார் ஒவ்வொரு வரும் பிராணாயாமத்தை ஐந்தாம் ஆண்டில் தொடங்கிப் பதினாறாம் ஆண்டில் முற்றுறச் செய்து தேர்ச்சி பெறுவர். இப்பொழுது பிராணாயாமம் ஏட்டில் – பாட்டில் – மட்டுங் கிடக்கிறது. இலட்சத்தொருவர் பிராணாயாமஞ் செய்வதும் அரிதாயிற்று. உடலோம்பு முறைகளில் பிராணாயாமம் உயிர் போன்றது. பிராணாயாமத்தில் தேர்ச்சி பெற்ற ஒருத்தியையோ ஒருவனையோ நோய் என் செய்யும்? பிணி என் செய்யும்? யமன்தான் என் செய்வன்? அப்பயிற்சியை நமது நாடு இழந்தது! பெரிய உயிர்ச் செல்வத்தை நாடு இழந்தது!

இப்பொழுது பிராணாயாமத்தை முறையாகச் செய்வோர் அரியர். ஏடுகளைப் படித்து இரேசக பூரக கும்பகத்தி லிறங்குவது தவறு. பிராணாயாமத்தைப் பிழைபடச் செய்தால் பல கேடுகள் விளையும். தக்கார் மாட்டுக் கேட்டுப் பிராணாயாமத்தில் தலைப்படுவது அறிவுடைமை. தூய நறுங்காற்றை மூக்கின்வழி முறையே ஈர்த்து, நுரை ஈரற் குழல்களில் அதை நிரப்பிச் சுழற்றி, வெளிவிடும் (Breathing Exercise) பயிற்சி போதும். இது பிராணயாமத் தின் ஒரு கூறு. நாடோறும் இதைச் செய்து வருவோர்க்கு நோயணுகாது; ஆயுள் பெருகும்.

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவைநெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்உறுப்புச் சிவக்கும் உரோமங் கருக்கும்புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே

என வரூஉந் திருமூலர் திருவாக்கை ஓர்க.

இப்பயிற்சியை நகரங்களில் – சாக்கடை, மலஅறை முதலியன சூழ்ந்து தீநாற்றம் வீசும் இடங்களில் – செய்தல் கூடாது; நச்சுக் காற்று வீசாத இடங்களில் அமர்ந்து செய்வது முறைமை. கடலோரம், மலையுச்சி, பரந்த வெளி, காடு முதலிய இடங்கள் பிராணாயாமத்துக்கு உரியன.

நமது நாட்டுப் பெண்மக்கள் பெரிதுங் காற்றுள்ள இடங் களில் வாழ்வதில்லை. அவர்கள் புழுங்கிய அறைகளில் வாழ் கிறார்கள்; கரிவாயு செறிந்த அடுப்பங்கரைகளில் உறங்குகிறார் கள். கிராமத்தில் வயல்களில் வேலை செய்யும் பெண்மக்கள் உடல் நிலையையும், நகரங்களில் மாடியில் ஏறி நிற்கும் பெண்மக்கள் உடல் நிலையையும் உற்று நோக்கினால் வேற்றுமை காணலாம். முன்னவரிடத்தில் அழகுத் தெய்வம் ஆனந்தத் தாண்டவம் புரியும். பின்னவர் உடலில் பிணியென்னும் பேய் உறங்கும். காரணம் என்னை? அவர் நறுங்காற்று வீசும் வெளியில் வேலை செய்கின்றனர்; அக்காற்றை நன்கு முகர்கின்றனர். இவர்க்கு அவ்வுணவேது? காப்பி உப்புமா என்னும் நஞ்சல்லவோ இவர்தம் உணவு? அவர் இயற்கைச் செல்வத்தில் புரள்கின்றனர்; இவர் செயற்கைச் செல்வத்தில் கிடக்கின்றனர். முன்னையது வீடுபேறு; பின்னையது நரகம். இது நிற்க.

பெண்மகள் புழுங்கிய அறையில் என்றும் சிறைபட்டுக் கிடப்பதும், அடுப்பங்கரையில் பெரிதும் அடைபட்டுக் கிடப்பதும் தொலைதல் வேண்டும். பெண்மகள், காற்றும் ஒளியும் வீசும் இடங்களில் உலவியும் உறங்கியும் பொழுது போக்குவாளாக; காற்றை நன்றாக மூக்கின்வழி முகர்ந்து முகர்ந்து விடுவாளாக. அஃது உடலிலுள்ள ஊறுகளைப் போக்கி வளஞ்செய்யும்.

சிறுநீர் : சிறுநீர் என்பது மூத்திரம். பெண் மக்களிற் பலர், காலத்தில் மலசலங் கழியாது அடக்குதல் உண்டு. அதனால் மலச்சிக்கலும், நீர்கட்டும் நேர்கின்றன. நீர் அடைப்பால் குண்டிக்காய்க்கு ஊறு நிகழும். மூத்திரப்பை தூய்மை யாயிருக்கு மாறு அதைக் காத்தல் வேண்டும். சிறுநீர் அடக்கும் பயிற்சி மிகக் கொடிது! கொடிது! நாடோறும் போதிய நீர் பருகி, வேளைக்கு வேளை சிறுநீர் பெய்தால் நோயணுகாது. பெண் மக்கள் மல சலத்தை அவ்வப்போது கழித்து வருவார்களாக.

பித்தம் : பித்தச் சுரப்பிற்குப் பிறப்பிடம் ஈரல் (Liver). ஈரலின் இயக்கத்துக்கு எவ்வித இடையூறும் நேராத முறையில் வாழ்வு நடாத்தல் நன்மை. அதன் இயக்கங் குன்றினால் முழு உடலுக்குங் கேடு விளையும். ஒருவரது உடல்நிலை அவரது ஈரல்நிலையைப் பொறுத்து நிற்கிறது. பித்தச் சுரப்புக் குன்றினால் உண்ணும் உணவு செரிப்பதெப்படி? செரியாமல் உணவு கிடப்பதால் விளைவ தென்னை? இரத்த ஓட்டங் குன்றி மற்றக் கருவிகளின் இயக்கமும் குலையும். ஆதலால், ஈரல்நிலைமீது பெருங்கவலை செலுத்துவது மக்கள் கடமை. காப்பி தேயிலை கொக்கோ முதலிய பொருந்தாப் பானங்கள், கள் முதலிய குடிகள், உறக்கமின்மை, புலால் உணவு முதலியன ஈரல் இயக்கத்தைக் கெடுக்கும்; ஈரலை மலரச் செய்யும்; அதை இடம் விடுத்துப் பெயர்ப்பிக்கும். மேற்கூறிய பானங்கள் முதலியவற்றைக் கனவிலும் மறந்துங் கருதலுங்கூடாது.

நோன்பு: நோன்பைப் பற்றி இந்நூற்கண் சில இடங்களில் சுட்டிக்சுட்டி வருகிறேன். நோன்பு கொள்ளும் முறையை யாண்டுஞ் சுட்டிக் குறிப்பிட்டேனில்லை. ஆதலால், அது குறித்து ஈண்டுச் சிறிது சொல்கிறேன்.

நோன்பெனினும் விரதமெனினும் ஒக்கும். உலகிலுள்ள பல நாடுகளினும் நமது நாடு நோன்பில் பேர் பெற்றது. நோன்பின் மாண்பைக் கூறாத புராணங்கள் இல்லை என்று கூறலாம். பண்டை மக்கள் நோன்பின் பெற்றியைச் செவ்வனே உணர்ந்து வாழ்ந்தார்கள்; பெண்மக்கள் பெரிதும் நோன்பில் ஈடுபட்டு வந்தார்கள். இன்னும் அது பெண்மக்களிடைப் பெரிதும் சொல்லளவிலாதல் நிலவியிருத்தல் கண்கூடு.

இந்நாளைய விரதம்

பெண்மக்கள் கடைப்பிடித் தொழுகும் இந்நாளைய நோன்பு வெறும் பெயர் அளவினதன்றிப் பொருள் அளவின தன்று. விரதம் விரதம் என்று காலையும் இரவும் விலாப் புடைக்கப் பலகாரங்களைத் தின்பதும், பகலில் வயிறு கிழிய அறுசுவை உணவை அடைப்பதும் பொருந்தியனவல்ல. இம் முறைமை நோன்புக்கு முற்றும் மாறுபட்ட தென்பதைப் பெண் மக்கள் உணர்வார்களாக.

விரதம் எற்றுக்கு?

நோன்பு எற்றுக்கிருப்பது? உடலில் சேரும் பிணியைப் போக்குதற்கு நோன்பிருப்பது வழக்கம். நோன்பால் உள் ளுறுப்புக்கள், சுமை நீங்கப் பெற்று, விடுதலையடைந்து, தத்தங் கடன்களை ஊக்கத்துடன் நிகழ்த்தும். அன்றாடம் உண்ணப் படும் உணவில் செரியாமல் எஞ்சி நிற்கும் நஞ்சையும் பிறவற்றையும் வெளிப்படுத்தும் ஆற்றல் நோன்புக்கு உண்டு. அவை வெளியா காமல் உள்ளே கிடக்குமேல் பலதிற நோய்கள் தோன்றும். மருந்து உண்பதால் நோய் சிறிது ஒதுங்கி ஒடுங்கும். மீண்டும் பழையபடியே அஃது உயிர்த்தெழும். பொருந்தா மருந்துகள் வேறு கேடுகளையும் நிகழ்த்தும். ஆதலால், மருந்து உண்ப தினும், நோன்பால் உறுப்புக்களுக்கு உற்றுள்ள பிணியைப் போக்கி, நோயைக் கழிப்பது நலன்.

முறை

அவரவர் தத்தம் உடல் நிலைக்கேற்ற வண்ணம் வாரத்திலோ மாதத்திலோ ஒரு நாளோ இரு நாளோ இன்னுஞ் சில நாளோ கணித்து நோன்பிருக்க முயல்வது சிறப்பு. நோன்புக்கு முன்னாட் பகல் உண்டு கழித்த பின்னர், அன்றிரவு எவ்வித உணவும் உண்ணலாகாது; நீர் அருந்துவது நன்று. அடுத்த நாள் வைகறைத் துயிலெழுந்து காலைக்கடன்களை முடிப்பது முறைமை. காலையில் மலஞ் செவ்வனே கழியா தொழியுமேல் எனிமாவால் அதை முற்றும் போக்கலாம். பின்னர் நீராடி, அமைதியும் – காற்றும் – ஞாயிற்றொளியும் – நிலவிப் படரத்தக்க ஓரிடத்தில் அமர்ந்து அன்பு வடிவான கடவுளை நினைந் திருத்தல் வேண்டும். இஃது உடலையும் உயிரையும் தூய்மைப் படுத்தும். அடிக்கடி – நெஞ்சில் வறட்சியுண்டாகும்போ தெல்லாம் – ஒருவிதச் சிறுமயக்கம், இளைப்பு, களைப்பு தோன்றும் போதெல்லாம் – சிறிது சிறிதாக – நீர் அருந்தினால் ஊக்கம் பிறக்கும். நீரருந்தாது விரதமிருப்போர்க்கு, வெஞ்சுரம், இரத்தக் கழிவு முதலியன தோன்றும்; உள்ளுறுப்புக்கள் வறண்டு போகும்; பலதிற இன்னல்கள் விளையும். ஆதலால், நீரருந்தலில் கவலை செலுத்தல் நோன்பினர் கடமை. நீருடன் சிறிது உப்புச் சேர்ப்பது செம்மையாம்.

விரத காலத்தில் நோன்பினர் எவருடனும் பேசுதலாகாது. நோன்பினர் உள்ளத்தில் பொறாமை வெகுளி முதலிய எரிகள் எக்காரணம் பற்றியும் உறுதல் கூடாது. அவை யுறுத்தும் எதன் கண்ணும் அவர் ஈடுபடுதலாகாது. பொறாமை முதலியன நோன்பைக் குலைத்து, உடலுக்கு ஊறுசெய்யும்.

நாள் முழுவதும் நீர் அருந்தி, நோன்பிருந்து, மறுநாள் காலையில் எழுந்து, வழக்கம் போலக் கடன்களை முடித்தல் வேண்டும். முன்னாள் உணவு கொள்ளாமையால் மலம் வாராமை கண்டு வாளா இருத்தல் கூடாது. எனிமா உபயோகித்தால் அழுக்குகள் வந்து விழுவது காணலாம்.

நோயாளர் முறைப்படி நோன்பைப் பலநாள் தொடர்ந்து கடைப்பிடித் தொழுகலாம். நோயில்லாதார் வாரத்துக்கு ஒருநாள் அல்லது திங்கட்கு ஒருநாள் நோன்பிருத்தல் சாலும்.

நோன்பு கழித்து, உணவுகொள்ளப் புகும்போது, மிக எச்சரிக்கையா யிருத்தல் வேண்டும். திடீரெனக் கடினமான உணவு கொள்வது மடமை. நோன்பு கண்ட உறுப்புக்களில் திடீரெனச் சோறும் – காய் கறிகளும் – கிழங்குகளும் – விழுதல், அவ்வுறுப்புக்களின் கடமைகளைக் கட்டுப்படுத்தி நோய் செய்யும். ஆதலால், படிப்படியே உணவைப் பெருக்கல் நலன். நீர் அருந்தி, பின்னைப் பழரச மருந்தி, பின்னை நீர்மோர் அருந்தி, பின்னை நீர் கலந்த பாலருந்தி, பின்னைக் கஞ்சி போன்ற உணவருந்தி, வழக்க உணவு கொள்வது பொருத்தம்.

குரு இயற்கை

நோன்பு வாயிலாக உடலைச் செம்மை வழியில் ஓம்பி வரலாம். நோன்பிற்குப் போதகாசிரியர் வேண்டுவதில்லை. இரண்டொரு முறை பயிற்சிசெய்வோர்க்கு இயற்கை அன்னையே வழிகாட்டுங் குருவாவள். இஃது அநுபவத்தில் உணரக் கிடப்பது.

நல்வழியில் உடலோம்பி நலனுற்று வாழ்வது பெண் மக்களுக்கு அழகு. நோயில்லாமை பெண்மைக்கு அறிகுறி. பெண்மையில் நோய் நுழைவது பெண்மைக்குரிய தாய்மையைக் கெடுப்பதாகும். பெண்மக்கள் கருவுயிர்க்கும் பேறுடையராக லின், அவர்கள் ஆண் மக்களினும் உடல்நலனைப் பெரிதும் பேணுவார்கள். ஆண்மக்களும் பெண்மக்கள் உடல்நலன் மீது கருத்தை இருத்துவார்களாக.

பெண்மகள் கருவுற்றுள்ள போதும், கருவுயிர்க்கும் போதும் எவ்வளவோ ஜீவசத்துக்கள் குறைகின்றன. அவை களுக்கு ஈடு செய்யும் முறையில் பெண் தன்னுடலை ஓம்புதல் சிறப்பு. கர்ப்பத்தான் மங்கையர்க்கு அழகு குன்றும் என்று நம்மவர் பாடுவது வழக்கம். இவ்வழக்கைப் பொய்ப்படுத்துவது மக்கள் கடமை. கருவுயிர்த்த பின்னரும் பெண்மகள் கன்னிக் காட்சியையே வழங்கும் நிலையில் இயற்கை வாழ்வு நடாத்தல் இனிமை. அழகு என்னுந் தெய்வம் பெண்மக்களை விடுத்து என்றும் அகலலாகாது. அவர்கள் மார்புத் திரட்சி, அவர்கள் உடல் நலனுக்கு அடையாளம். அது கெடாதவாறு பெண் வாழ்வு உலகில் நடப்பதாக.

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்உடம்புளே உத்தமன் கோயில் கொண் டானென்றுஉடம்பினை யானிருந் தோம்புகின் றேனே

– திருமூலர்

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 5 / 5. வாக்கு எண்ணிக்கை: 1

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

🛒

உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆன்லைனில் பெற !