
பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை
திரு. வி. கலியாணசுந்தரனார்
7. திருமணம்
[பொருள் – ஒருமைப்பாட்டின் நுட்பம் – இருமைக் கேடும் ஒருமைப் பேறும் – இக்கால மணங்கள் – வகை (திருமணத்தில் கிரியை தோன்றியதற்குக் காரணம் – எண்வகை மணம் – களவு மண விளக்கம்) – வயது (பொருந்தா மணம் – வயதும் கால வேற்றுமையும் – மேல்நாடும் நமது நாடும்- இன்ப நுகர்ச்சிப் பருவம் – எழுவகைப் பருவம் – அரிவை யரின்பம் – போலி மணம் – இளமை மணமும் கிழ மணமும்) – கொழுநன் (நாயகன் எவன்? – கட்டுப்பாடுகளால் பொருந்தா மணங்கள் – மனமொன்றலே மணம் – கொழுநனைத் தெரிந் தெடுத்தல் – நாயகன் இயல் – ஒத்த கல்வி ஒழுக்கம் முதலியன – நோயாளரிடத்தில் எச்சரிக்கை – நீறுபூத்த நெருப்புகள் – திருமணத்துக்கு விலக்கானவர்கள் – புறங்கொண்டு அகந் தெரிதல்) – சாதிக் கொடுமைக்கு அஞ்சுதலாகாது]
சொற்பால் அமுதிவள் யான்சுவைஎன்னத் துணிந்திங்ஙனேநற்பால் வினைத் தெய்வம் தந்தின்றுநான்இவ ளாம்பகுதிப்பொற்பார் அறிவார் புலியூர்ப்புனிதன் பொதியில்வெற்பில்கற்பா வியவரை வாய்கடிதோட்ட களவகத்தே.
-திருக்கோவையார்
ஒரு பாதியாய பெண்ணும் மற்றொரு பாதியாய ஆணும் ஒன்றுபடுவது திருமண மென்பது. அவ்வொன்றிய வாழ்வின் இன்றியாமையாமை, முன்னே இறைவழி, இயற்கை அறம் என்னும் தலைப்புக்களின் கீழ் விரித்தோதப்பட்டிருக்கிறது. அவ்விரண்டும் இத் திருமணத்துக்கு முற்றுந் தொடர்புடையன. மண வாழ்வைப் பற்றி எழும் பலதிற ஐயங்கட்கும் தடைகட்கும் ஆண்டுச் செவ்வன் இறை இறுத்திருத்தலான், அவற்றை மீண்டும் ஈண்டுக் கிளத்த வேண்டுவதில்லை.
மக்களின் இயற்கை அமைப்பை நோக்குழி அவர்கள் தனித்து வாழும் இயல்பினரல்லர் என்பது புலனாகும். மக்கள் கூடிவாழும் இயல்பினரே யாவர். அக்கூட்டை நிகழ்த்துவது திருமணம். திருமணப் பேறு பெறாதார் பிறவிப் பேற்றை இழந்தவராவர்.
மக்கள் ஏன் பிறக்கிறார்கள்? பிறந்து உண்டு களித்து மாண்டு போகவா அவர்கள் பிறக்கிறார்கள்? ஒருவரோடொருவர் கூடிவாழ்ந்து, அன்பைப் பெற்று, அவ்வன்பைப் பிற உயிர்களும் பெறத் துணைநின்று, முடிவில் இன்பநிலை எய்துவது மக்கட் பிறவியின் நோக்கம். இந்நோக்கம் திருமணமின்றி எங்ஙனம் நிறைவேறுதல் கூடும்?
திருமணப் பொருள்
திருமணம் என்பது வெறும் விளையாட்டன்று. ஒவ்வொரு பாதியாய் வளர்ந்து வரூஉம் இரண்டு உயிர் ஒன்றி, முழுத்தன்மை எய்திக் கடனாற்றுதற்கு, அவைகளை அன்புக் கயிற்றால் இயற்கை பிணிப்பது திருமணம். இப் பிணிப்புக்கென்றே இருவரையும் இயற்கை பாதிப் பாதியாகத் தோற்றுவிக்கிறது. அவ்வப் பாதி நிலை, இருவரும் பின்னைக் கூடி வாழ்வதற்கு வேண்டப்படும் ஒழுங்குகளைப் பண்படுத்தற்கு உரியதாவது. இருவர் அறிவும் மனமும் ஏனைய உறுப்புக்களும் தனித்தனியே பண்பட்டதும், இயற்கை, திருமண வாயிலாக, அவர்தம் இருமை கெடுத்து ஒருமையாக்கி முழுமை வழங்குகிறது. முழுமை பிறவி நோக்கை நிறைவேற்றுவதாகும்.
ஒருமைப்பாட்டின் நுட்பம்
திருமணம் இருபாதியை எங்கே கெடுக்கிறது? பெண் ஆண் உடல்கள் ஓன்றுபடுகின்றனவா? இருவர் உடலங்களும் வெவ்வேறாக அல்லவோ விளங்குகின்றன என்று கருதுவோரும் இருப்பர். ஈண்டு ஒற்றுமை என்றது அன்பின் ஒருமைப்பாட்டை என்க. பெண் மகள் என்பவளும் உடல் அல்லள்; ஆண்மகன் என்பவனும் உடல் அல்லன். உடல் மக்களின் உறையுள். உடலே மக்களன்று. உடலுக்குள்ளே ஒரு நுண்மை இருக்கிறது. அஃது ஆன்மநேய ஒருமைப்பாடு என்பது. அந்நுண்மை விளங்கப் பெறவே மக்கள் இளமையில் கல்வி பயில்கிறார்கள். அந் நுண்மை யாண்டும் விளங்குவதை முதல் முதல் மக்கள் கலை யளவில் உணர்கிறார்கள். அதைப் பின்னை அநுபவத்திற் பெறு விப்பது திருமணம்.
இருமைக்கேடு ஒருமைப்பேறும்
தொடக்கத்தில் பெண் ஆண் சேர்க்கையால் ஒருமைப்பாடு ஒரோவழிப் புலனாகும். பின்னைப் பிள்ளைப் பேற்றானும், பிறவாற்றானும் அஃது யாண்டும் புலனாகும். விரிவு இந்நூல் இறைவழியிலும், இயற்கை அறத்திலும் காண்க. ஆகவே, பெண் ஆண் சேர்க்கையால் எய்தும் ஒருமை, வெறும் உடல் அளவின தன்று என்றும், உடலினுள் பொலியும் நுண் பொருளைப் பற்றியது என்றுங் கொள்க. இரண்டாறு ஒன்றுபடுவதுபோல என்க. ஆறு என்பது சொல்லால் இடத்தைக் குறிப்பினும், பொருளால் நீரைக் குறிப்பதாகிறது. இரண்டாறும் ஓரிடத்தில் கலந்து ஓடத்தொடங்கிய பின்னை, இஃது இவ்வாற்றுப் புனல் என்று புனலில் எவ்வாறு வேற்றுமை காணுதல் கூடும்? இவ்வாறே திருமணம் என்னுங் கூட்டால் பெண் ஆண் என்னும் வேற்றுமைக் குரிய இருமை கெட்டு ஒருமை பெறுகிறது.
உலகியல் வழிநின்று, பெண் ஆண் ஒருமைப்பாட்டுக்கு ஓர் எடுத்துக்காட்டுக் கூறலாம். ஓராவிற்கு இருகோடு பூத்திருத்தல் காண்கிறோம்; ஆ ஒன்று; கோடு இரண்டு. ஆ போன்றது தலைவி தலைவன் அன்பு; கோடுகள் போன்றன அன்னார் உடல்கள். ஈருடல் ஓருயிர் என்னும் வழக்கும் இக்கருத்துப் பற்றி எழுந்ததாகும். தலைப்பில் ஓளிரும் மாணிக்கவாசகனார் திருமொழியில் அமுதிவள் யான் சுவை என்றும், நான் இவளாம் பகுதி பொற்பார் அறிவார் என்றும் போந்திருத்தல் காண்க. இவள் இவனாமாறும், இவன் இவளாமாறும் துணைபுரியும் திருமணத்தின் பெற்றியை எவ்வுரையால் அளந்து கூறவல்லேன்?
இக்கால மணங்கள்
அப்பெற்றி வாய்ந்த திருமணம் இப்பொழுது வெறுங் கருமணமாய் மாறியிருக்கிறது. இரண்டு மரத்துண்டுகளைத் தச்சன் ஒட்டுவது போல் இரண்டு உடல்களை ஓரிடத்தில் சிலர் ஒட்டவைக்கின்றனர். மனம் ஒட்டுகிறதோ? ஒட்டவில்லையோ? அவ்வுண்மை எவர்க்குத் தெரியும்? இருமை கெடுத்து ஒருமை கூட்டவல்ல அன்பினின்றும் அரும்பவேண்டிய திருமணம் இப் பொழுது யாண்டிருந்து பெரிதும் அரும்புகிறது? அவ் விழிவைச் சொல்லலும் வேண்டுமோ? காணி பூமியில் எத்துணை மணம் – பொன் பொருளில் எத்துணை மணம் – போலிக் கல்வியில் எத்துணை மணம் – பதவி பட்டத்தில் எத்துணை மணம் – புகைப் படத்தில் எத்துணை மணம் – ஆடை அணியில் எத்துணை மணம் – ஊன் பொதிந்த உடலில் எத்துணை மணம் அரும்பு கின்றன. அந்தோ! கொடுமை! கொடுமை! அன்பு மணக் கமழ்ச்சி எங்கே? எங்கே? துன்ப மணத் துதைவா யாண்டும்? அன்பு மணம் வளர்ந்த நமது தமிழ் நாடும் துன்பக் குழியில் விழுந்து கிடக்கிறது! அகத்திணை அரும்பிய தமிழ்நாடே! களவியல் கண்ட தமிழ் நாடே! கோவையார் கொண்ட தமிழ்நாடே! நீயுமா குழியில் விழுந்தனை?
திருமணம் விளையாட்டன்று
திருமணம் என்பது ஒருபொழுது தோன்றி, மற்றொரு பொழுது அழிவதன்று. அஃது இம்மை மறுமை வரை தொடர்ந்து நிற்பது. ஆயிரங் காலத்துப் பயிர் என்று நம்மவர் சொல்வதுண்டு. அத்தகைய ஒன்றை விளையாட்டாகவா கருதுவது? மக்கள் பிறப்பதும் வாழ்வதும் படிப்பதும் உழைப்பதும் உண்பதும் எற்றுக்கு? திருமண வாழ்விற்கன்றோ? அத்திருமண நிலை குன்றின் உலகில் என்ன வளரும்? என்ன ஓங்கும்? தற்செயலாகச் சில இடங்களில் சில நன்மணங்கள் கூடிவிடுகின்றன. பல திருமணங்கள் பெரும் போராட்டமாக முடிகின்றன. தலைவனைத் தலைவியும் தலைவியைத் தலை வனும் நீதிமன்றங்களில் ஏற்றும் மணங்கள் திருமணங்களா என்று கேட்கிறேன். திருமண நிலை, மிக இழிவு எய்தி இருக் கிறது. ஆதலால், திருமணத்தின் மீது மக்கள் பெருங்கவலை செலுத்துவார்களாக.
வகை
கிரியை முதலியவற்றிற்குக் காரணர் யாவர்?
அன்பு வழியில் இருமை கெடுத்து ஒருமை கூட்டும் திருமணத்தில் வகை என்ன? பிற என்ன? என்று சிலர் வினவலாம். தொடக்கத்தில் வகையும் இல்லை; பிறவும் இல்லை. பின்னை நாளடைவில் வகையும் பிறவும் ஆங்காங்கே நுழைந்தன. நுழை விற்குக் காரணர் யாவர்? ஆண்மக்கள் என்று கூறல் மிகையாகாது. ஆணுலகில் தீயொழுக்கம், பொறுப்பின்மை, பொய்ம்மை முதலியன தோன்றிய நாள் தொட்டுப் பெண்ணுலகக் காப்புக் கெனத் திருமண விதிகள் கோலப்பட்டன. நாளடைவில் அவ்விதி களினின்றும் வகையும் முறையும் கிரியையும் கோலமும் பிறவும் பிறந்தன. அவை நாட்டுக் கேற்றவாறும், சமயத்துக் கேற்றவாறும், பலபடப் பரந்து கிடக்கின்றன. காலதேச வர்த்தமானத்துக் கேற்ற வண்ணம் அவ்வப்பொழுது அவை மாறுதலும் அடைகின்றன. மாறுதலும் பிறவும் பல இடங்களில் திருமணத்தின் உள் நோக்கிற்குக் கேடு விளைத்திருக்கின்றன. திருமணக் கட்டுப்பாடு களானும் பிறவாற்றானும் உலகில் விளையும் போருக்கும் பிரிவுக்கும் வழக்குக்கும் ஓர் அளவும் உண்டோ? அன்புவழியில் திருமணம் நடக்குமேல் போரேது? பிரிவேது? வழக்கேது?
உலகிலுள்ள மண வகைகளை ஈண்டு விரிப்பின் அவை பெருகும். நமது நாட்டு மணவகைகளை மட்டும் கவனிப்போம். அவற்றுள் உலக மணங்கள் பல அடங்கும். நமது நாட்டு நூல் களை ஆய்ந்தால் அவற்றில் பலதிற மணங்கள் காணலாம். பண்டைக் காலத்தின் முடிவிலிருந்த அறிஞர் மணத்தை எட்டு வகையாகப் பிரித்தனர். நக்கீரனாரும், நச்சினார்க்கினியரும் முறையே இறையனார் அகப்பொருள் உரைக்கண்ணும், தொல்காப்பிய உரைக்கண்ணும் எட்டுவகை மணங்களை விளக்கி உரைத்திருக்கின்றனர். அவர்தம் உரைகளை ஈண்டு எடுத்துக்காட்டுகிறேன். அவை வருமாறு:-
பிரமம்:- என்பது நாற்பத் தெட்டியாண்டு பிரமசரியங் காத்தாற்குப் பன்னீராட்டைப் பிராயத்தாளை அணிகலனணிந்து கொடுப்பது. கொடாவிடின், ஓரிருது காட்சி ஒருவனைச் சாராது கழிந்தவிடத்து ஒரு பார்ப்பனக் கொலையோடு ஒக்குமென்பது; அதனை அறநிலையென்பது. பிரசாபத்தியம் – என்பது மைத்துன கோத்திரத்தான் மகள் வேண்டிச் சென்றால் மறாது கொடுப்பது; அதனை ஒப்பென்பது, ஆரிடம் – என்பது ஆவும் ஆனேறும் பொற் கோட்டுப் பொற் குளம்பினவாகச் செய்து அவற்றிடை நீரிற் கொடுப்பது; அதனைப் பொருள்கோ ளென்பது. தெய்வம் – என்பது வேள்வியாசிரியற்கு வேள்வித் தீமுன் வைத்துக் கொடுப்பது; அதனை தெய்வமென்று வழிபடப்பட்டது. அசுரம் – என்பது கொல்லேறு கொண்டான் இவளை யெய்தும், வில்லேற்றினான் இவளை யெய்தும், திரிபன்றி எய்தான் இவளை யெய்தும், மாலை சூட்டப்பட்டான் இவளை யெய்தும், இன்னதொரு பொருள் தந்தான் இவளை யெய்துமென இவ்வாறு சொல்லிக்கொடுப்பது; அஃது அரும்பொருள் வினைநிலை யென்பது. இராக்கதம் – என்பது அவள் தன்னினுந் தமரினும் பெறாது வலிந்து கொள்வது. பைசாசம் – என்பது மூத்தாண் மாட்டுந்துயின்றாண் மாட்டுங் களித்தாண் மாட்டுஞ் சார்வது; அது பேய்நிலை யெனப்படும். கந்தர்வம் – என்பது இருவர் ஒத்தார் தாமே கூடுங் கூட்டம்; அதனை யாழோர் கூட்டமென்ப.
– நக்கீரனார்.
பிரமமாவது:- ஒத்த கோத்திரத்தானாய் நாற்பத்தெட்டி யாண்டு பிரமசரியங் காத்தவனுக்குப் பன்னீராட்டைப் பருவத்தாளாய்ப் பூப்பு எய்தியவளைப் பெயர்த்து இரண்டாம் பூப்பு எய்தாமை அணிகலன் அணிந்து தானமாகக் கொடுப்பது: கயலே ரமருண்கண் கன்னிபூப் பெய்தி – யயல்பே ரணிகலன்கள் சேர்த்தி – யியலி – னிரலொத்த வந்தணற்கு நீரிற் கொடுத்தல் – பிரமமண மென்னும் பெயர்த்து. பிரசாபத்தியமாவது: – மகட்கோடற்கு உரிய கோத்திரத்தார் கொடுத்த பரிசத்து இரட்டி தம் மகட்கு ஈந்து கொடுப்பது; அரிமத ருண்க ணாயிழை யெய்துதற் குரியவன் கொடுத்த வொண்பொரு ளிரட்டி – திருவின் றந்தை திண்ணிதிற் சேர்த்தி – யரியதன் கிளையோ டமைவரக் கொடுத்தல் – பிரிதலிலா பிரசாபத்தியம். ஆரிடமாவது: – தக்கான் ஒருவற்கு ஆவும் ஆனேறும் பொற் கோட்டுப் பொற் குளம்பினவாகச் செய்து அவற்றிடை நிறீஇப் பொன்அணிந்து நீரும் இவைபோற் பொலிந்து வாழ்வீரென நீரிற் கொடுப்பது: தனக்கொத்த வொண்பொரு டன்மகளைச் சேர்த்தி – மனைக்கொத்த மாண்புடையார் பேணி- யினக்கொத்த – வீரிடத் தாவை நிறீஇயிடை யீவதே- ஆரிடத்தார் கண்டமண மாம் தெய்வமாவது:- பெருவேள்வி வேட்பிக்கின்றார் பலருள் ஒருவற்கு அவ்வேள்வித் தீ முன்னர்த் தக்கிணை யாகக் கொடுப்பது: நீளி நெடுநகர் நெய்பெய்து பாரித்த – வேள்வி விளங்கழன் முன்னிறீஇக் – கேள்வியாய் – கைவைத்தாம் பூணாளைக் காமுற்றார்க் கீவதே – தெய்வ மணத்தார் திறம். அசுர மாவது:- கொல்லேறு கோடல் திரிபன்றி யெய்தல் வில்லேற்றுதல் முதலியன செய்து கோடல் : முகையவிழ் கோதையை முள்ளெயிற் றரிவையைத் – தகைநலங் கருதுந் தருக்கின ருளரெனி னிவையிவை செய்தாற் கெளியண்மற் றிவளெனத் – தொகைநிலை யுரைத்த பின்றைப் பகைவலித் – தன்னவை யாற்றிய வளவையிற் றயங்க – றொன்னிலை யசுரந் துணிந்த வாறே, இராக்கதமாவது: – தலைமக டன்னினும் தமரிலும் பெறாது வலிதிற் கொள்வது: மலிபொற்பைம் பூணாளை மாலுற்ற மைந்தர் – வலிதிற்கொண் டாள்வதே யென்ப – வலிதிற் – பராக்கதஞ் செய்துழலும் பாழி நிமிர்தோ – ளிராக்கதத் தார்மன்ற லியல்பு. பைசாசமாவது: – மூத்தோர் களித்தோர் துயின்றோர் புணர்ச்சியும் இழிந்தோளை மணஞ் செய்தலும் ஆடை மாறுதலும் பிறவுமாம்: எச்சார்க் கெளிய ரியைந்த காவலர் – பொச்சாப் பெய்திய பொழுதுகொ ளமையத்து – மெய்ச்சார் பெய்திய மிகுபுகழ் நண்பி – னுச்சாவார்க் குதவாக் கேண்மை – பிசாசர் பேணிய பெருமைசா லியல்பே. இடைமயக்கஞ் செய்ய வியல்பினி னீங்கி – யுடைமயக்கி யுட்கறுத்த லென்ப – வுடைய – துசாவார்க் குதவாத வூனிலா யாக்கைப் – பசாசத்தார் கண்டமணப்பேறு. இனிக் கந்தருவ மாவது: – கந்தருவ குமாரருங் கன்னியருந் தம்முள் எதிர்ப்பட்டுக் கண்டு இயைந்தது போலத் தலைவனுந் தலைவியும் எதிர்ப்பட்டுப் புணர்வது: அதிர்ப்பில்பைம் பூணாரு மாடவருந் தம்மு – ளெதிர்ப்பட்டுக் கண்டியைத லென்ப – கதிர்ப்பொன் யாழ் – முந்திருவர் கண்ட முனிவறு தண்காட்சிக் – கந்தருவர் கண்ட கலப்பு என இவற்றானுணர்க. -நச்சினார்க்கினியர்
இவ்வெட்டனுள் பண்டைக் காலத்தில் நிலவியது களவு மணம். அக்கால இறுதியில் எட்டுவித மண வகைகள் தோன்றின என்று தெரிகிறது. அவ்வெட்டும் நிலவியபோதும் அறிஞர் பண்டையதாகிய களவுமணங் கொண்டே வாழ்ந்தனர். தொல் காப்பியனாரும், இறையனாரும் களவுமணத்தையே போற்றிப் பிறவற்றின் இயலைக் குறிப்பிட்டுச் சென்றனர்.
இன்பமும் பொருளும் அறனும் என்றாங்குஅன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கில்காமக் கூட்டங் காணுங் காலைமறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்துறையமை நல்யாழ்த் துணைமையோ ரியல்பே
-தொல்காப்பியனார்
அன்பி னைந்திணைக் களவெனப் படுவதுஅந்தணர் அருமறை மன்றல் எட்டனுள்கந்தருவ வழக்கம் என்மனார் புலவர்
-இறையனார்
மண வகைகளை உற்றுநோக்குழிக் களவுமணம் ஒன்று தவிர, ஏனைய மணங்களிற் சில ஒருதலைக் காமமுடையன வாயும், சில இருவர்வழிவேட்கை பெறினும் வயது முதலியன பொருந்தாதனவாயும் விளங்குதல் காணலாம். ஒருதலைக்காமம் கைக்கிளை யென்றும், பொருந்தாதது பெருந்திணை யென்றும் பண்டை மக்களால் அழைக்கப்பட்டன.
முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே
பின்னைய நான்கும் பெருந்திணை பெறுமே
என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். அகத்திணை உணர்ந்த அறிஞர், கைக்கிளை பெருந்திணை இரண்டையும் ஒதுக்கிக் களவு மணம் ஒன்றையே கொண்டனர். தொல்காப்பியனாரும் இறையனாரும் ‘***கிழவனும் கிழத்தியும்’ என்றும், அன்பின் ஐந்திணைக் களவெனப்படுவது என்றும் முறை முறையே ஓதியிருத்தல் காண்க.
களவுமணத்தின் நுட்பம் உணராதார், களவு என்னுஞ் சொற்கேட்டு, அம்மணத்தை இழிவாகக் கருதுகின்றனர். ஈண்டுக் களவு என்பது, மற்றக் களவு போன்றதன்று.
என் பயக்குமோ இது கற்கவெனின், வீடுபேறு பயக்கு மென்பது. என்னை? இது களவியலன்றோ? இது கற்க வீடுபேறு பயக்குமா றென்னை? களவு கொலை காமம் இணை விழைச்சு என்பனவன்றோ சமயத்தாரானும் உலகத்தாரானுங் கடியப் பட்டன? அவற்றுள் ஒன்றன்றாலோ இது? எனின், அற்றன்று. களவெனுஞ் சொற்கேட்டுக் களவு தீதென்பதூஉங் காம மெனுஞ் சொற்கேட்டுக் காமந் தீதென்பதூஉ மன்று; மற்றவை நல்லவாமாறு முண்டு. என்னை? ஒரு பெண்டாட்டி தமரொடு கலாய்த்து நஞ்சுண்டு சாவலென்னும் உள்ளத்தளாய் நஞ்சு கூட்டிவைத்து, விலக்குவா ரில்லாதபோழ் துண்பலென்று நின்றவிடத்து, அருளுடையா னொருவன் அதனைக் கண்டு இவளிதனையுண்டு சாவாமற் கொண்டுபோ யுகுப்பலென்று அவளைக் காணாமே கொண்டுபோ யுகுத்திட்டான்; உவளுஞ் சனநீக்கத்துக்கண் நஞ்சுண்டு சாவான் சென்றாள். அது காணாளாய்ச் சாக்காடு நீங்கினாள். அவன் அக்களவினான் அவளை உய்யக் கொண்டமையான் நல்லுழிச் செல்லுமென்பது. மற்றும் இது போல்வன களவாகா, நன்மை பயக்குமென்பது.
இங்குப் பிறவுங் களவுண்மை சொல்லி அக்களவுகட் கெல்லாம் இவ்வளவு சிறப்புடைமை சொல்லும், துறக்கம் வீடுபேறுகளை முடிக்குமாகலான் எனப்படுவ தென்று சொல்லிச் சிறப்பிக்கப்பட்டது. அது பாயிரத்துள்ளும் உரைத்தாம். மற்று உலகத்துக் களவான வெல்லாம் கைகுறைப்பவுங் கண்சூலவுங் கழுவேற்றவும் பட்டுப் பழியும் பாவமுமாக்கி, நரகத் தொடக்கத் தீக்கதிகளில் உய்க்கும். இது மேன்மக்களாற் புகழப்பட்டு ஞான வொழுக்கத் தோடொத்த இயல்பிற் றாகலானும் பழிபாவ மின்மையானும் எனப்படுவதென்று விசேடிக்கப்பட்டது
என்று நக்கீரனாரும்,
பிறர்க்குரித்தென்று இருமுது குரவராற் கொடை யெதிர்ந்த தலைவியை அவர் கொடுப்பக் கொள்ளாது இருவருங் கரந்த உள்ளத்தோடு எதிர்ப்பட்டுப் புணர்ந்த களவாதலின் இது பிறற்குரிய பொருளை மறையிற் கொள்ளுங் களவன் றாயிற்று. இது வேதத்தை மறைநூ லென்றாற் போலக் * * *’ உலகத்து மன்றலாவது குரவர் கொடுப்பதற்கு முன்னர் ஒருவற்கும் ஒருத்திக்குங் கண்ணும் மனமுந் தம்முள் இயைவதே’ யென வேதமுங் கூறிற்றாதலின்
என்று நச்சினார்க்கினியரும் களவியலை விளக்கியிருத்தல் காண்க. விரிவு அக நூல்களிற் பார்க்க.
களவுமண விளக்கம்
களவு மணமாவது ஒத்த பண்பும் ஒத்த நலனும் ஒத்த அன்பும் ஒத்த செல்வமும் ஒத்த கல்வியும் உடைய ஒருத்தியும் ஒருவனும், பிறர் முயற்சியின்றி ஆண்டவன் அருள் கூட்டிய வழிக்கூடி, இவள் இவனாமாறும், இவன் இவளாமாறும் ஐம்புலனார இன்ப நுகருங் காதல் மணமென்க. இம்மண வாய்ப்படும் ஒருத்திக்கும் ஒருவனுக்கும் நிகழும் இன்ப அன்பே வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்ற வல்லது. இதன் பெற்றியை அக நூல்கள் விரித்துக் கூறுகின்றன.
தூய களவு மணத்துடன் நாளடைவில் சில வினைமுறை கள் கூடலாயின. மன்பதையில் – சிறப்பாக ஆடவரிடைப் பொய்யும் வழுவும் புகுந்த பின்னர்க் களவுவழி நிகழும் (தலைவி – தலைவன்) அன்புக் குறிப்பை உலகுக்கு உணர்த்தற்பொருட்டுப் பெற்றோர் சில வினைகள் கொண்டனர். வினைகளுக்கேற்ற கிரியைகளும் வகுக்கப்பட்டன.
பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர்ஐயர் யாத்தனர் கரண மென்ப
எனவரூஉந் தொல்காப்பியச் சூத்திரம் உன்னற்பாலது. கரணம் அல்லது கிரியை கொண்டது கற்பியல் என்பது. கற்பியல், களவியல்வழிப் பிறந்தது. களவின்றேல் கற்பில்லை. தொல் காப்பியனார் காலத்தில் களவு மணம் எந்நிலையுற்றிருந்த தென்பது, தொல்காப்பியப் பொருள் அதிகாரத்திற் போந்துள்ள களவியல் கற்பியல்களான் தெரிகிறது. பின்வந்த ஏனையோர் அவ்வழி நின்றே நூல்கள் எழுதினர்.
பின்னை நாளடைவில் தொல்காப்பியர் காலத்திய களவு மணமும் மறைந்து, வேறு மணங்கள் மன்பதையில் நுழைந்தன. இப்பொழுது மணங்கள் போலியாய் முடிந்திருத்தல் கண்கூடு. போலி மணங்களால் மக்கள் வாழ்வு குலைந்து வருகிறது; தீயொழுக்கம் பெருகி வருகிறது.
இந்நாளில் பழைய களவு மணத்தை உயிர்ப்பித்தல் அரிது. என்னை? அந்நாளில் இருபாலாரும் அகத்திணைப் பயிற்சியில் வல்லவரா யிருந்தனர். அவர் காட்சியளவான் மெய்ப்பாடு கண்டு, அகப் பொருத்தம் உணரும் நுண்ணறிவு பெற்றிருந்தனர். இப்பொழுது அப்பயிற்சி இறந்துபட்டமையான், புறவழி யிலாதல் நிலைமையை உணர்ந்து திருமணம் நடாத்தல் வேண்டும். இது குறித்துச் சில உரை பகர விரும்புகிறேன்.
வயது
முதலாவது வயதின்மீது கருத்துச் செலுத்துவோம்; பின்னே பிறவற்றை நோக்குவோம். ஒத்த பண்பு ஒத்த நலன் ஒத்த அன்பு ஒத்த செல்வம் ஒத்த கல்வி என்று கூறிய அறிஞர் ஒத்த வயது என்று கூறாமை உன்னத் தக்கது. வயதில் மாறுதல் இருத்தல் வேண்டுமென்பது அன்னார் கருத்து. எத்தகைய மாறுதல்? அவர்தங் கூற்றால் வயது ஒத்திருத்தல் கூடாது என்பது விளங்குகிறது. ஒத்தலின்றேல் ஏற்றக் குறைவு இருத்தல் வேண்டுமன்றோ? ஏற்ற வயது எவருக்கிருத்தல் வேண்டும்? குறைந்த வயது எவருக்கிருத்தல் வேண்டும்? ஒத்த பண்பு ஒத்த நலன் முதலியன ஓதிய அறிஞர், வயதில் மட்டும் வேற்றுமை காட்ட வேண்டி, இவனும் பதினாறாட்டைப் பிராயத்தானாய் இவளும் பன்னீராட்டைப் பிராயத்தாளாய் ஒத்த பண்பும் ஒத்த நலனும் ஒத்த அன்பும் ஒத்த செல்வமும் ஒத்த கல்வியும் உடைய ராய் என்று வயது குறித்திருத்தல் ஊன்றி ஊன்றி நோக்கற் பாலது. இதனால் ஆண் வயது, பெண் வயதினும் சிறிது ஏறி யிருத்தல் வேண்டுமென்பது தெரிகிறது; இதனை ஆராய்ச்சி மிகுந்த மேல்நாட்டறிஞரும் ஏற்றுக் கொள்கின்றனர். பெண், ஆணைவிடச் சிறிது விரைவில் உற்ற வயதடைதலான், ஆண் வயதினும் பெண் வயது சிறிது குறைந்திருத்தல் பொருத்தம். இல்லை யேல் பெண்ணுக்குத் துன்பம் மிகும்; ஆணுக்கும் இன்பம் இல்லை.
பொருந்தா மணம்
வயது வேற்றுமை கொண்டு, ஆண்டில் பலபட முதிர்ந்த நரை மூதாளன், ஓரிளங் கன்னியைக் கட்டலாமோ எனில் அது கூடவே கூடாது. வயதில் முதிர்ந்த பெண்ணுடன் வயதில் இளைய ஆணும் சேர்தல் ஆகாது. இம்மணங்களால் இன்பம் விளைவதில்லை; நற்பிள்ளைப் பேறும் உறுவதில்லை. இன்பம் பொருந்தாததாகவும் ஒருதலையாகவும் இருத்தலான் உடல் நலனுங் கெடும். ஆதலால், வயதில் சிறு வேற்றுமையுடைய காளையும் கன்னியும் மணம்புரிதலே சால்புடைத்து.
அச்சிறு வேற்றுமை யாது? அதற்குக் கால எல்லையுண்டோ? நம் நாட்டார் பதினாறு – பன்னிரண்டு என்று நான்கு வயது வேற்றுமை கொண்டனர். இன்னும் ஓராண்டு கூட்டி ஐந்து வயது வேற்றுமையும் கொள்ளலாம். இரண்டு வயது வேற்றுமையும் ஒருபுடை ஒக்கும், வயது வேற்றுமை, ஐந்துக்கு மேற் போகா மலும், இரண்டுக்குக் குறையாமலும் இருப்பது நலம். நான்கு வயது வேற்றுமை மிகப் பொருத்தம்.
பதினாறு – பன்னிரண்டு வயதைப் பற்றிச் சிறிது உன்னு வோம். இவ்வயதுமுறை இப்பொழுது மறுக்கப்படுகிறது. மறுப்புக்கு யானும் துணைநிற்கிறேன். ஆனால் பதினாறு – பன்னிரண்டு வயதுகுறித்துச் சென்ற பண்டை மூதறிஞர்மீது, இக்காலத்துச் சிலர் சுமத்தும் பழிக்கு யான் துணை நில்லேன். என்னை?
வயதும் கால வேற்றுமையும்
பதினாறு – பன்னிரண்டு வயது என்று ஆன்றோர் குறிப் பிட்ட காலதேச வர்த்தமானத்துக்கும் தற்கால தேசவர்த்த மானத்துக்கும் வேற்றுமை உண்டு. இப்பொழுது உள்ள நிலைமையைக் கொண்டு, பண்டை மூதறிஞர் செயலைக் குறை கூறுவது பிழை. அவரைக் குறை கூறாது, காலத்துக்கேற்ற மாறுதல் செய்வது அறிவுடைமை. அந்நாளில் பிராணாயாமம் முதலிய பயிற்சிகள் ஐந்து வயதில் தொடங்கப்படும். பதினாறு வயதில் அப்பயிற்சிகள் முழுமை எய்தும். அவ்வயதில் திருமணத் துக்குரிய இயல் – திறம் – உரம் முதலிய யாவும் ஆடவன்பால் பொருந்தி வந்தன. பெண்ணும் பன்னீராண்டில் திருமணத்துக் குரிய யாவும் பெறுவள். இந்நாளைய பதினாறு வயதுடைய ஆணும், பன்னிரு வயதுடைய பெண்ணும் புல் தடுப்பினும் கீழே விழுவர். இப்பதினாறு – பன்னிரண்டையா, அப்பதினாறு – பன்னிரண்டுடன் ஒப்பநோக்கி ஆன்றோரைப் பழித்துக் கூறுவது!
காலதேச வர்த்தமான நிலை நோக்கி, பதினாறையும் பன்னிரண்டையும் முறையே, இருபது – பதினாறு ஆக்கலாம். வேண்டுமேல் இரண்டு வயது உடன் கூட்டலாம். எப்படியோ இருவர்க்கும் நான்கு வயது வேற்றுமை இருத்தல் வேண்டும்.
மேல் நாடும் நமது நாடும்
இந்நாளில் சிலர் மேல்நாட்டு முறைபற்றி முப்பது, முப்பத்தைந்து என்று சொல்கின்றனர். நமது நாடு மேல் நாடன்று. மேல்நாட்டார் வெண்ணிறத்துடன் பிறக்கின்றனர். நாம் அந்நிறுத்துடன் பிறப்பதில்லை. மேல்நாடு தண்மை நாடு. அதை நோக்க நமது நாடு வெம்மை நாடு. இன்பக் கிளர்ச்சி வெம்மை நாட்டில் விரைவில் எழுதல் இயல்பு. அவ் வெழுச்சி யைத் தகைய இயற்கையோடு மாறுபட்டுப் போர் புரிதல் அறியுடைமையாகாது. எல்லாவற்றிற்கும் மேல் நாட்டை இலக்கியமாகக் கொள்வது நமது நாட்டின் வளத்தைக் கெடுப்ப தாகும். மேல்நாட்டு முறைபற்றி முப்பது – முப்பத் தைந்து பாட்டுப்பாடுவது அறமன்று. இருபத்திரண்டு வயதுக்குள் மணவினை முடிப்பது அறிவுடைமையாகும். புறனடையாகச் சிலர் இருபத்தைந்து கொள்ளலாம். இருபது இருபத்தைந் துக்குள் ஆடவருக்கும், பதினாறு இருபத்துக்குள் மகளிர்க்கும் மணவினை முடித்தல் நமது நாட்டின் இயற்கைக்கு அரண் செய்வதாகும்.
உற்ற வயதில் மக்கட்குப் போகப் புணர்ச்சி இருத்தல் வேண்டும். அஃது உடல் வளத்துக்கும் அறிவு விளக்கத்துக்கும் துணை செய்வதாகும்.
பொறையிலா அறிவு போகப் புணர்விலா இளமை மேவத்துறையிலா வனச வாவி துகிலிலாக் கோலத் தூய்மைநறையிலா மாலை கல்வி நலமிலாப் புலமை நன்னர்ச்சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே.
-வளையாபதி
இன்பநுகர்ச்சிப் பருவம்
திருமணத்தின் பின்னர் இருவர்க்கும் சொலற்கரிய இன்ப நிகழ்ச்சி தொடங்கும். சில ஆண்டு இன்பக் கலவியால் சில ஒழுங்குமுறைகள் பண்படும். பண்பட்ட இன்ப நுகர்ச்சிக்குரிய பருவமுமுண்டு, அப்பருவத்தில் திருமணஞ் செய்யாது முன்னரே ஏன் திருமணம் செய்தல் வேண்டும்? என்று சிலர் கருதலாம். முன்னரே திருமணம் நடந்தாலன்றி அப்பருவத்தில் பண்பட்ட இன்பம் நிகழாதென்க. ஒருவன் குழந்தைப் பருவந்தொட்டு எழுத்து, சொல் முதலியன பயிலாது வாளாகிடந்து, பின்னே திடீரெனத் தொல்காப்பியம் பயிலப் புகுந்தால், அவனது தொல்காப்பியப் பயிற்சி என்னாகும்? இன்ப நிகழ்ச்சிக்கு எழுத்துப் பயிற்சி போன்றது திருமணம். சில ஆண்டு கடந்து கூடும் இன்ப நிகழ்ச்சி தொல்காப்பியப் பயிற்சி போன்றது.
அப்பருவம் எது? நம் நாட்டறிஞர் பெண் பருவத்தை ஏழு வகையாகப் பிரித்துப் போந்தனர். அவர் அததற்குரிய ஆண்டு களையும் வரைப்படுத்தியுள்ளனர். அவை வருமாறு:-
1. பேதை (ஒரு வயது முதல் ஏழு வயது வரை); 2. பெதும்பை (ஏழு – பதினொன்று) ; 3. மங்கை (பதினொன்று – பதின்மூன்று); 4. மடந்தை (பதிமூன்று – பத்தொன்பது); 5. அரிவை (பத்தொன்து – இருபத்தைந்து); 6. தெரிவை (இருபத்தைந்து – முப்பத்தொன்று); 7. பேரிளம் பெண் (முப்பத்தொன்று – நாற்பது); பிற இளமை கடந்த முதுமைக் குரியன. இவை நமது நாட்டுத் தட்ப வெப்ப நிலைமைக் கேற்றவண்ணம் வகுக்கப்பட்டன. மேல்நாட்டில், இன்னும் சில ஆண்டு கடந்து முதுமையுறும். மேலே குறிப்பிட்டவாறு, கால நிலை நோக்கி இம்முறையில் சில மாறுதல் நிகழ்த்துவது தவறாகாது.
பழைய முறைப்படி நோக்குழி, இப்பருவங்களில் திருமணத் துக்குரியது மங்கைப் பருவமாகிறது. இப்பொழுது மடந்தைப் பருவம் வரை திருமணக்காலம் நீண்டிருக்கலாம். திருமணத்தினின் றும் இன்ப நிகழ்ச்சி செம்மை பெறுதற்குச் சில ஆண்டாகுமென்பது மேலே சொல்லப்பட்டது. இன்ப நுகர்ச்சிக்குரியது அரிவைப் பருவமாகும். கால நிலைக்கு ஏற்றவாறு அப்பருவத்துக்குரிய ஆண்டுநிலை ஒரு சிறிது மாறலாம். செம்மை இன்பத்துக்குரிய பருவம் அஃது என்பதே ஈண்டுக் கருதற்பாற்று. பெண் இன்பமே முத்தி எனக்கொண்ட உலகாயதர், அவ்வின்பத்துக்குரிய பருவம், அரிவைப் பருவம் என்று குறித்திருக்கின்றனர். அரிவையர் இன்பம் முக்தி என்னும் உரையைக் காண்க. பண்பட்ட செம்மை இன்பத்துக் குரிய அப்பருவத்தில் திருமணஞ் செய்யப் புறப்படுவோர் இன்பத்தைப் பெறாதொழிவோராவர். ஆதலால், அப்பருவத்துக்கு முன்னரே மணவினை முடிப்பது அறிவுடைமை.
போலி மணம்
நமது நாட்டில் பலப்பல விதமாகத் திருமணங்கள் நடை பெற்றன; பெறுகின்றன. திருமணத்திற்கு உரிய வயது முதலிய வற்றின் மீது நம் நாட்டார் சிறிதுங் கவலை செலுத்தியதில்லை. பால்மணமறாச் சிறு குழந்தைகள் கரத்தில் பழந் தந்து ஏமாற்றி மணவினை முடிக்க முந்திய தாய் தந்தையரும் இருந்தனர். இவர் தாய் தந்தையராவரோ? என்று கேட்கிறேன். திருமணத்தின் இயல், பொருள், நுட்பம் முதலியவற்றுள் ஒன்றுந் தெரியாத குழந்தைகட்கு மணவினை முடித்து வந்த கொடுமை ஒருவழியில் சாரதா சட்டத்தால் தொலைந்தது. பெண்மகள், பயில வேண்டுவதைப் பயின்று, உணர வேண்டுவதை உணர்ந்து, இயற்கை வழி வளர்ந்துவரும் வேளையில், திருமண நிகழ்ச்சி அவள் உள்ளத்தில் கூடும்போது, அவள், தன் இயல்பு, கல்வி முதலியவற்றிற்குத் தக்கவாறு, ஒருவனைத் தெரிந்தெடுக்கும் உரிமை அவளுக்கன்றோ இருத்தல் வேண்டும்? உலகம் இன்ன தென்று தெரியா முன்னம் ஒருத்தியை ஒருவனுக்கு மற்றவர் கொடுத்தல் பாவம்.
இளமை மணமும் கிழ மணமும்
இளமை மணத்தால் நாடு கேடுற்று வந்தது ஓரளவில் ஒழிந்தது. கிழ மணத்தால் விளைந்து வருங் கேட்டையும் தொலைக்க அறிஞர் முயலுதல் வேண்டும். வெள்ளிக் கம்பியென நரை மயிர் திரண்டு, கண்குழிவிழுந்து, பல் தேய்ந்து, நரப்புக்கட்டுக் குலைந்து, எலும்பு உலுத்து, முதுகு வளைந்த தொண்டு கிழவன், மேகங் கட்டுக் கட்டாகத் தவழ்ந்தாலென அடர்ந்த மயிரும், பிறைத் திங்களும் வெஃகும் நுதலும், நீலக் கருவிழியும், முத்தன்ன வெண்ணகையும், பவள இதழும், குயில் குரலும், மயில் நடையு முடைய இளமையும் அழகும் ஒழுகியூரும் கன்னியை மணக்குங் கொடுமை நமது நாட்டில் மலிந்து கிடக்கிறது. அந்தோ! பெண் தெய்வம் கல்லா? மண்ணா? இக்கொடுமை குறித்து எழுதக் கையும் ஓடவில்லை. பெண் கொலை? பெண் கொலை? என்று கூவிக் கூவி மேலே செல்கிறேன்.
மறுமணம்
‘நாயகி இறந்தால் என் செய்வது? என்று சிலர் கேட் கின்றனர். ‘நாயகன் இறந்தால் என் செய்வது ? என்று கேட் பாரில்லை. இரண்டா முறை மணம் வேண்டுமேல் அம் மணவுரிமை இரு பாலார்க்கும் இருத்தல் வேண்டும். இரண்டா முறை மணம் வேண்டுவதில்லை என்றே யான் சொல்வேன். ஒருமுறை ஒருத்தியுடன் காதல் கொண்டு ஒருவன் மணஞ் செய்த பின்னை, மற்றொரு பெண்ணை அவன் மணஞ் செய்வது எற்றுக்கு? காதல் ஒருவரிடம் நிகழுமேயன்றி மற்றவரிடம் நிகழாது. காதலால் ஒருமுறை வாய்க்கப்பெற்ற மனைவி, இன்னுயிர் துறக்க நேரினும், அவள் காதல் எங்ஙனம் நீங்கும்? கொழுநன் காதலும் அத்தன்மையதே. ஆதலால், காதலால் விழுங்கப் பெற்ற ஒருத்தி இறப்பினும் ஒருவன் மறுமணஞ் செய்ய வேண்டுவதில்லை. அவ்வாறே ஒருவன் இறப்பினும் ஒருத்தி மறுமணஞ் செய்ய வேண்டுவதில்லை. மனைவி உயிருடன் இருக்க, மேலும் மேலும் ஆடவன் மணஞ் செய்வது பெருங்கொடுமை. அதைப் பற்றி ஈண்டு விரித்துக் கூற வேண்டுவதில்லை.
புறனடையாக இங்கு இரண்டொரு குறிப்புப் பொறிக்க விரும்புகிறேன். திருமணம் நடந்த உடன் அதாவது ஓராண்டு ஈராண்டுக்குள், மனைவி மரித்தால், பிள்ளைப்பேறு கருதி, இன்னொருத்தியை மகன் மணக்கலாம். வயது முதிர்ந்த ஒருவன், மனைவியை இழந்த பின், மனைவி நசையால் இடர்ப்படுவனேல், அவன் தன் வயதிற்கியைந்த ஒருத்தியை – அதாவது கணவனை இழந்த ஒருத்தியை – அவளும் விரும்பின் – மணந்து கொள்ள லாம். அங்ஙனஞ் செய்யாது, கிழவன் கன்னியைக் கட்டுவது கூடாது. இருவர் எவ்வயதில் எந்நிலையில் மணஞ் செய்து கொள்ளினும், வயது வேற்றுமை நான்கு அல்லது ஐந்துக்குமேல் இருத்தல் கூடாதென்பது கவனிக்கத்தக்கது.
கொழுநன்
கொழுநன் என்பதற்குக் கொழுகொம்பு போன்றவன் என்பது பொருள். தான் சுற்றிக் கொள்ளத் தக்க கொழுகொம்பு இஃது என்று கொடி தெரிந்து கொள்ளுதல் போலத் தன் னியல்புக்குரிய கொழுநன் இன்னானென ஒருவனைத் தெரிந்து கொள்ளும் பொறுப்புப் பெண்ணினுடையதா யிருத்தல் வேண்டும். பெண் பிறந்து வளர்ந்து கல்வி பயின்று தேர்ச்சி அடைவது எற்றுக்கு? ஒருவனுடன் வாழ்ந்து தாய்மைப் பேறு பெறுதற்கன்றோ? அப்பேற்றிற்குரிய வாழ்க்கைத் துணையைத் தேடுவதில் அவள் கவலை செலுத்தியே தீர்தல் வேண்டும். வாழ்க்கைக்கு நற்றுணையாகாத ஒருவன் நாயகனாக வாய்ப்பனேல் பெண்ணின் வாழ்வு குலைந்துபடுவது திண்ணம். அப்பெண், செல்வத்திற் சிறந்த சீமாட்டியா யிருந்தாலென்னை? கல்வியிற் சிறந்த கலைவாணியா யிருந்தாலென்னை? அழகிற் சிறந்த அணங்கா யிருந்தாலென்னை? நல்ல கணவன் வாய்த்தால் இவையெல்லாம் அவளுக்குப் பயன்படும். வாய்க்கவில்லையேல் இவைகளால் ஆகும் பயன் ஒன்றுமில்லை. ஒருத்தியின் வாழ்வுச் செல்வம் அவளது நாயகனேயாவன்.
நாயகன் எவன்?
நாயகன் விளையாட்டல்லன்; பாவையல்லன்; இன்றிருந்து நாளை ஒழிவோனல்லன். அவன் என்றும் நீங்காது வாழ்வில் ஒன்றியிருப்பவன்; வாழ்க்கைத் துணையா யிருப்பவன். இத்தகைய ஒருவன், எல்லா வழியிலும் நாயகியுடன் இயைந்தவனா யிருத்தல் வேண்டுமன்றோ?
அத்தகைய நாயகனைத் தெரிந்தெடுக்கும் பொறுப்பு எவருடையதாயிருத்தல் வேண்டும்? தாய் தந்தையர் பெண்ணுக் குரிய நன்னாயகனைத் தெரிந்தெடுப்பதில் துணை புரியலாம்; கவலை செலுத்தலாம். ஆனால் ஆர்ந்த பொறுப்புப் பெண் ணினுடையதாகவே இருத்தல் வேண்டும். இது நம் நாட்டார் பலர்க்கு வியப்பூட்டும். ‘பெண்ணா புருஷனைத் தேடிக் கொள்வது? என்று அவர் எள்ளுவர்; நகையாடுவர். ‘புருஷனுடன் நாளை வாழப்போகிறவர் யார்? என்று எள்ளுவோரையும் நகையாடுவோரையும் நோக்கிக் கேட்கிறேன். கேவலம் நகை, புடவை முதலியன வாங்குவதில் தாய் தந்தையர் மகளது விருப்பம் கேட்கின்றனர். இவைகட்குப் புதல்வியின் கருத்தைத் தெரிந்து கொள்ள விரும்பும் பெற்றோர் அவள் வாழ்வினூடே நெடிதும் உயிராகக் கலந்து வாழத்தக்க நாயகனைப் பற்றித் தானா பெண்ணின் கருத்தைத் தெரிந்து கொள்வது இழிவு? பழைய களவு மணம் வழக்கில் இல்லா தொழியினும், அதற்குரிய அக அறிவு ஊற்றுத் தூர்ந்துபடினும் அதனுடைய போக்கை யாதல் பற்றி ஒழுகுவது நல்லது. திருமணத்துக்கு முன்னரே பெண், நாயகனைப் பற்றிச் செவ்வனே தெரிந்து கொள்ளுமாறு மற்றவர் முயலுதல் சிறப்பு. முன்பின் ஒன்றுந் தெரியாத ஒருவன் பக்கத்தில் பெண்ணைத் திடீரென அமர்த்துவது அறமன்று. ‘பெண்ணைப் பெற்ற தாய் தந்தையர்க்கு பொருப்பில்லையோ எனில் பெற்றோர்க்குப் பொறுப் பில்லை என்று யான் கூறேன். அப்பொறுப்புடன் பெண்ணின் விருப்பும் கூடல் வேண்டு மென்பது எனது உள்ளக்கிடக்கை.
கட்டுப்பாடுகளால் பொருந்தா மணங்கள்
சாதிக் கட்டுப்பாடு, சமயக் கட்டுப்பாடு, பொருள் வேட்கை முதலியவாற்றான் எத்துணையோ பொருந்தா மணங்கள் நடை பெறுகின்றன. கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு எத்துணை நாள் உயிர்வதை செய்து கொண்டிருப்பது! கட்டுப்பாடுகள் என்னென்ன செய்கின்றன! அந்தோ! விரிக்கிற் பெருகும். பெற் றோரும் பெண்ணும் விரும்பாத இடத்திலும் மணம் நிகழுமாறு கட்டுப்பாடு செய்கிறது! கட்டுப்பாட்டுக்கும் கண்மூடி வழக்கத் துக்கும் என்ன ஆற்றல்! என்ன பெருமை! அஞ்சா நெஞ்சுடன் கட்டுப் பாடுகளையும் கண்மூடி வழக்கங்களையும் உடைத்தெறிதல் வேண்டும்.
மன மொன்றிய மணம்
சில இடங்களில் மூடப் பெற்றோரின் விருப்பத்துக் கிணங்கி, எத்துணைப் பெண்மணிகள் கண்ணீர் உகுத்து மணஞ்செய்து கொள்கின்றனர். பெண் மனங்கொள்ளா மணம் மணமா? என்று வினவுகிறேன். திருமணம் என்பது நகையா? இசையா? பந்தரா? மாலையா? கூட்டமா? விருந்தா? மனம் ஒன்றாத இடத்திலே மணமேது? மகிழ்வேது? நாயகி நாயகன் மனம் ஒன்றுவதே மன்றல் மன்றலாகும். ஆதலால், பெண் தன் கருத்துக் கியைந்த நாயகனை நண்ணலே பொருத்தம்.
சோதிடம்
களவு மணம் இறந்துபட்ட பின்னர்த் தாய் தந்தையர் சோதிடத்தின் வழிப் பொருத்தங் கண்டு, பிள்ளைகட்குத் திருமணஞ்செய்து வந்தனர். இஃது இன்னும் நடைபெற்று வருகிறது. சோதிட வழிக் குறிக்கப் பெறும் பொருத்தத்தை யான் குறை கூறவில்லை. சோதிடம் பிழையெனவும் யான் கூறேன். சோதிடன் பிழை படலாமன்றோ? கணிதம் முதலியவற்றில் பிழை நிகழலாமன்றோ? சோதிடத்துடன் – பெற்றோர் ஆராய்ச் சியுடன் – மற்றவர் உதவியுடன் – பெண்ணின் விருப்பமும் தேவை என்று யான் சொல்கிறேன். முடிபு பெண்ணின் விருப்பத்தை ஒட்டியதாயிருத்தல் வேண்டும் என்பது எனது கருத்து.
கொழுநனைத் தெரிந்தெடுத்தல்
கொழுநனைத் தெரிந்து கொள்வதில் பெண்ணுக்குப் பெரும் பொறுப்பு உணடு. மகன் என்னுஞ் சொல்லுக் குரிய பொருளுடைய ஒருவனைப் பெண் தெரிந்தெடுப்பது பொருத்தம். நீண்ட நாள் தனக்குத் தெரிந்த ஒருவனையே பெண் கருத்திற் கொள்வது நலம். திடீரென வரும் ஒருவனது செல்வம் – கல்வி – உடற்கட்டு – முதலியவற்றைக் கண்டு பெண்மகள் மயங்கலாகாது. நாளடைவில் அவனது வழக்க ஒழுக்கம் முதலிய வற்றைக் கவனித்து, அவள் தன் மனத்தில் தெளிவுபெறல் வேண்டும். தாய் தந்தையர் வாயிலாகவும், மற்றவர் வாயிலாகவும், ஒல்லும்வகை நேராகவும் அவனது செயலைப் பெண் கவனித்துவரல் வேண்டும். வெறுங் காமக்கிளர்ச்சிக்கு எளிவந்து, திடீரென ஒருவனை ஒருத்தி ஏற்பது பின்னைப் பிரிவிற்கும் பிற இடருக்குங் கால் கொள்வதாகும். பின்னை வாழ்வில், எத்தகைய இடையூறும் நேராத வழியில், அவள் தனக்குகந்த வாழ்க்கைத் துணையைத் தேடுவது அறிவுடைமை. இழிந்த காமச்சூட்டிற்கு அடிமைப் பட்டுப் பெண், சேற்றில் விழுவது அறியாமை.
நாயகன் என்றால், காமவேட்கை தணிப்பவன் என்று மட்டுங் கருதலாகாது. ஒருத்தியின் தாய்மை நிலைக்குத் துணை நிற்பவனும், நற்பிள்ளைப் பேற்றிற்குத் தந்தையாயிருப்பவனும் நாயகன் என்னுஞ் சொற்கு உரியவன் என்க. பின்னுலகாக்குந் தந்தையாமாறு ஒருவனைத் தனக்குரிய கணவனாகக் கோடல் பெண்ணின் கடமை. தந்தையாகும் நீர்மை அவன்பால் இருக்கிறதா என்பது பெரிதுங் கருதற்பாற்று.
நாயகன் இயல்
வயது ஒன்று தவிர, பிறவற்றில் ஏறக்குறைய எல்லாக் கூறுகளிலும் பெண் தன்னை ஒத்த ஒருவனை நாடுவது சிறப்பு. ஒத்த பண்பும் ஒத்த நலனும் ஒத்த அன்பும் ஒத்த செல்வமும் ஒத்த கல்வியும் உடையராய் * *’- அன்பினானும் குணத்தினா னும் கல்வியினானும் உருவினானும் திருவினானும் திரிவிலா ஒருவர் ஒருவரின்* * *’ – எக்காலத்தும் எவ்விடத்தும் ஞானத்தானும் ஒழுக்கத்தானும் ஆள்வினையானும் பொருளினானும் பொருவிலன் தானே என்பது. இவளும் அன்னளெனவே, இருவரும் பொருவிறந்தா ரென்பதைப் பயக்கும்- என வரூஉங் களவியல் உரையாசிரியர் மொழிகளைக் காண்க.
ஒத்த கல்வி
இருபாலார்க்கும் முதலில் ஒத்த கல்வி வேண்டற்பாலது. ஒத்த கல்வி இல்லாத இடத்துப் பிற ஒத்துவரல் அரிது. ஈண்டு ஒத்த கல்வி என்பது ஒத்த ஏட்டுக்கல்வியையும் அன்று; ஒத்த பட்டக் கல்வியையும் அன்று. பின்னை எது? கல்விக்குரிய பயனிலையை என்க.
சில இடங்களில் நாயகி இசைக் கல்வியிற் சிறந்து விளங்கு கிறாள். நாயகன் அக்கல்வியில் சூந்யமாயிருக்கிறான்; அதை வெறுப்பவனாயும் இருக்கிறான். நாயகனுக்கு அக்கல்வி யில்லா தொழியினும், அதைச் செவிமடுத்துத் திளைக்கும் அறிவாதல் அவனுக்கிருத்தல் வேண்டும். இல்லையேல் பெருங் கவலையே. இசைப் புலமை நிரம்பப் பெற்ற ஒருத்தி, அப்புலமை சிறிது மில்லா ஒருவனை மணந்தால் மன ஒற்றுமை நிகழ்தல் அருமை. புறனடையாகச் சில இடங்களில், சிலபோழ்து, வேறு துறை களால் ஒற்றுமை நிகழலாம். பலதிறக் கல்வித் துறைகளில் இரு பாலார்க்கும் ஒத்த புலமை இருத்தல் சமயத்துக்கு உதவுவதாகும். இந்நாளில் நாயகன்மாருள் பலர் கற்றவராயிருக்கின்றனர். நாயகிமாருக்கோ எழுத்து வாசனையும் கிடையாது. இவ் விருவர்க்கும் அறிவு ஒற்றுமை எங்ஙனம் நிகழும்? அறிவு – மனம் – உடல் என்னும் முத்திற ஒற்றுமை இருபாலார்க்கும் இருத்தல் சிறப்பு. இவ்வொற்றுமைக்கு அடிப்படை ஒத்த கல்வியாகும்.
ஒத்த ஒழுக்கம்
கல்வி அறிவுடன் இருபாலார்க்கும் ஒத்த ஒழுக்கம் இருத்தல் வேண்டும். ஒத்த ஒழுக்கம் இல்லாதாரிடத்து ஒத்த அன்பு நிகழாது. பொய்யனிடம் மெய்யள் சிக்குவதும், கொலைஞனிடம் அருள் கனிந்த அகமுடையாள் அகப்படுவதும் மாறுபாடாக முடிதல் இயல்பு. ஆதலால், ஒத்த ஒழுக்கம் இருபாலார்க்கும் தேவை.
நாயகன், நாயகியின்பால் எவ்வொழுக்கத்தை எதிர்நோக்கு கிறானோ, அவ்வொழுக்கம் அவன்பாலும் இருத்தல் வேண்டும். அவ்வாறே நாயகி, நாயகன்பால் எதிர்நோக்கும் ஒழுக்கமும் அவள்பால் இருத்தல் வேண்டும். செல்வமும் பிறவும் ஒத்திருத்த லும் நல்லதே.
உடற் பொருத்தம்
சில இடங்களில் எல்லாம் ஒத்தும் உடல்நலன் ஒவ்வாமல் இருக்கும். உடல் நலன் ஒவ்வாமை, பிற ஒத்த நிலைகளையும் சிதைக்கும். இத் திருமணத்தால் மெய்ப்பயன் விளையாது. கட்டும் அழகும் திரண்டு, அமுதெனப் பொலியும் இளங் கன்னியை, உடல் நலன் பெறாத ஒரு தேரை மணந்தால் மன ஒற்றமை நிகழுங்கொல்? மன ஒற்றுமை இல்லாத இடத்து அறிவு ஒற்றுமை ஏது? உடல் – மனம் – அறிவு – என்னும் மூன்றும் ஒருமைப்பட்ட வாழ்வே அன்புக்குரிய இல்வாழ்வாகும். உடல் நலன் எல்லாவற்றிற்கும் ஊற்று என்று கூறல் மிகையாகாது.
நோயாளரிடத்தில் எச்சரிக்கை
உடல்நலன் மீது பெரிதுங் கருத்துச் செலுத்தல் வேண்டும். நீறுபூத்த நெருப்புக்கள் சில உண்டு. அவர் விலையுயர்ந்த நல்லாடையால் தம் புரையை மறைத்து உலகை மயக்குவர்; ஏறு போல் செயற்கை நடை நடந்துங் காட்டுவர்; கல்வியிலும் செல்வத்திலும் பிறவற்றிலும் பெருக்குடையராயும் இருப்பர். இவ்வளவுடன் அவருள் கனல் மூண்டு கொண்டிருக்கும். இந் நீறுபூத்த நெருப்புக்களிடை எவராவது அணுகலாமா? அணு கின் நெருப்பு என் செய்யும்? அணுகுவோரையும் அவர் வழித் தோன்றல்களையும் அக்கனல் எரிக்கும். ஆதலால், பெண்மகள் தன்னை மணஞ் செய்ய விரும்பும் ஒருவனது உடல் நலனைப் பெரிதுங் கவனிப்பாளாக.
இந்நாளில் எத்துணையோ நோயாளர் செயற்கைப் புறக்கோலத்தால் தம் புண்ணை மறைத்துப் பின்னே பெண் ணுலகை எரிக்கின்றனர். இவர், தாம் கெட்டது மன்றிப் பிறரை யுங் கெடுக்கின்றனர். இப்பாவிகட்கு இப்பொழுதுள்ள நரகக் குழிகள் போதுமோ? புது நரகக் குழிகளல்லவோ தேவை? தொழு நோய் அல்லது குஷ்டரோகம், காசம் முதலிய நோய்களுடையார் திருமணஞ் செய்யாமலிருப்பது நல்லது. இந்நோயினர் எத்துணைக் கல்வி, செல்வம் உடையவராயினும், பெண்மக்கள் இவரைப் பொருட்படுத்தலாகாது. வெள்ளை – கொறுக்கு – மேகம் முதலிய நோய்களுடையவரிடத்தும் பெண்மக்கள் மிக எச்சரிக் கையாயிருத்தல் வேண்டும். இவர் பெரிய நீறுபூத்த நெருப்புக்கள். இவர் நோய் இவருடன் ஒழிவதில்லை. இவரை மணக்கும் மங்கைநல்லாரிடத்தும் நோய் தொடரும். நோய் இவர் அளவிலும் நில்லாது, இவர் வயிற்றில் பிறக்கும் பிள்ளை களையும் பற்றி அரிக்கும். பின்னே கொடு நோய் வழி வழியே படர்ந்து கொடி கொடியாக வளரும்.
பெரு நோய்களால் பீடிக்கப்பட்டோர்க்குப் பிள்ளை பெறல் அரிது. பிறப்பினும், அது குருடாகவும் வேறு பல ஊறு உடையதாகவும் பிறக்கும். இக்கொடுமைக்குக் காரணனாயுள்ள ஒருவனையா ஒருத்தி மணப்பது?
நோய்த் தன்மையை அளந்தறியும் ஆற்றல் பெண்மகள் பெற்றிருத்தல் வேண்டும். தீ நோயால் பீடிக்கப்பட்டதும், கழுவாய் தேடுஞ் சிலர், கொள்ளையினின்றும் பிழைப்பதுண்டு. அவரையும் மருத்துவரைக் கொண்டு சோதித்து உண்மை தெளிவது பெண்ணினத்தார் பெருங்கடன். யாண்டாயினும் நோயின் வெம்மையும் பூச்சும் புழுவும் மறைந்து ஒளித்திருக்கும். பெண்சேர்க்கை நேர்ந்ததும் மீண்டும் நோய் வெளிப்படும். ஆதலால், எக்காரணம் பற்றியும் நோயாளியைப் பெண்மணி மணஞ் செய்யாதொழிவது நலன். எத்துணைக் கள்ளர் நல்லுடையால் புண்ணை மூடிப் புகைப்படம் எடுத்தனுப்பிப் பெண்ணுலகை ஏமாற்றுகின்றனர்! புகைப்படக் காட்சியாலும் பெண்மகள் மோசம் போதலாகாது.
குடி முதலியன
பெண்மணி குடியரை மணஞ் செய்தலுந் தவறு. குடியால் தொடக்கத்தில் நரப்புக் கிளர்ச்சி உண்டாகும். அதனால் அவர் பெண் விளையாட்டில் மூழ்குவர். நாளடைவில் அவர்தம் நரப்புக்கட்டுக் குலையும். அதனால் அவர் திடீரென அகாலத் தில் நபுஞ்சகராவர். புகையிலையை அமிதமாக மெல்லுவோர், காப்பி தேயிலை கொக்கோ முதலியவற்றை அமிதமாக அருந்து வோர் முதலியவர் நிலையும் இவ்வண்ணமே முடியும்.
தீநோய் – குடி – முதலியவற்றால் விளையுங் கேடுகள் உயிர் களை வழி வழி அடர்ந்து தொடரும் என்று ஆராய்ச்சி யாளர் கண்ட உண்மைமீது பெண்மகள் கருத்திருத்திக் கடனாற்றுவது அறிவுடைமை.
திருமணத்துக்கு விலக்காகும் மற்றவர்
காமுகன், பக்கத்தாரை ஐயுறுவோன், முன்னரே ஒருத்தியை மணந்தவன், சோம்பேறி, முதல் வைத்துத்தின்பவன், இன்னவ ரன்ன பிறரும் திருமணத்துக்கு விலக்கானவரே. பெண்மையை விரும்பாது பொருட் காதல் மட்டுங் கொண்டு, இவ்வளவு ஆயிரம் கொடுத்தால் பெண்ணைக்கொள்வேன் என்று சொல்வோனும் விலக்கானவனே. என்னை? அவனது காதல் பொருளைப் பற்றிக் கிடக்குமே யன்றிப் பெண்ணைப் பற்றிக் கிடப்பதில்லை. மேலும் அன்னான் பொருளின் பொருட்டு மற்றொரு பெண்ணை நாடினும் நாடுவன். இந் நாளில் பொருள் மணங்கள் பல நடை பெறுகின்றன. இம் மணங்கள் அன்பற்றன வாம். பெண் வாழ்விற்கெனப் பெற்றோர் அன்பால் பொருள் கொடுக்கலாம். அது வேறு. பொருட்கு முதன்மை அளித்து, இவ்வளவு வேண்டும் என்று வலியுறுத்துவது பெண்ணின் நுண்மை யுணர்ந்து மணஞ் செய்வதாகாது. ஆகவே, அத்தகைய ஒருவனும் விலக்கிற்கு உரியவனே.
புறங்கொண்டு அளந்தறிதல்
கூர்த்த மதியுடைய பெண்மணி, ஒருவனது புறத்தோற்றங் கண்டு, அவனது நிலையை அளந்து உணரலாம். கண், நா, விரல் முதலியன ஒருவனது உடல் நிலையைச் செவ்வனே அறிவிக்கும். குடியருக்குக் கண் சிவந்திருக்கும். நோயாளர்க்கு அது மஞ்சளாயிருக்கும். நாவிலும் விரலிலும் மஞ்சள் படர்ந்திருத்தல் நோய்க்கு அறிகுறி. உடல்நலனுடைய சிலர், நோய்வாய்ப்படும் வேளையில் இத்தோற்றம் பெறுதலுண்டு. இவரை மேற் போந்தவர் கூட்டத்தில் சேர்த்தல் கூடாது. என்றும் நோயுடை யாரிடத்துப் பெண்மகள் மிக எச்சரிக்கையாயிருத்தல் தற்காப்பாம்.
சிற்ப நூல்
நமது நாட்டுச் சிற்ப நூல்களில் இரண்டொன்றை ஒருவர் வீட்டில் இளமையில் அடியேன் ஒருபோது பார்த்தல் நேர்ந்தது. அந்நூல்களில் பாவைகள் செதுக்கற்குரிய இயல்கள் சொல்லப் பட்டுள்ளன. அவற்றில் பெண் ஆண் உடற் பொருத்தம் பேசி யிருத்தல் கண்டேன். இப்பொழுது அஃது ஈண்டு நினைவிற்கு வருகிறது. அதுபற்றி இங்கு இரண்டோர் உரை பகர்கிறேன்.
பெண்ணின் கை கால் விரல்களின் அளவு, ஆணின் கை கால் விரல்களுடன் ஒத்திருந்தால் உடற் பொருத்தம் இருக்கும். சிறிது ஆண்மகனுக்கு நீண்டும் இருக்கலாம்; அதிகம் நீண்டி ருத்தல் கூடாது. பெண் விரல்களைவிட ஆண் விரல்கள் அளவில் குறைந்திருக்குமேல் உடற்பொருத்தம் இருத்தல் அரிது. இவ்வாறு சிற்பநூல்கள் கூறுகின்றன.
சாதி முதலிய கொடுமைக்கு அஞ்சுதலாகாது
நமது நாட்டில் சிலர் ஒருமை மனப்பட்டும், சாதி முதலிய கட்டுப்பாடுகளால் வெளிப்படையாக மணஞ் செய்ய மறுத்துக் காலங் கழிக்கின்றனர். இது பொருந்திய அன்புமணம் என்பதில் ஐயமில்லை. ஆனால் இதனிடைக் கரவிருக்கிறது. கரவு கூடாது. உலகில் சட்டங்களும் விதிகளும் பல இருத்தல் இயல்பு. அவை கட்குத் தாய் தந்தையர் இணங்கி நடந்தாலன்றி அவர்க்குப் பிறக்கும் பிள்ளை நல்வாழ்வு பெறமாட்டாது. பிள்ளை நலன் கருதி, இருவரும் தமது மனமிசைந்த மணத்துக்குச் சட்டப்படி எச்சமூகம் இடந் தருகிறதோ, அச்சமூகத்தில் சேர்ந்து மணவினை முடிப்பது நலம். இங்ஙனம் அவர் செய்யாது, சாதிக் கட்டுக் களுக்கு அடங்கி ஒதுங்கி வாழ்ந்து, பிள்ளைக்குக் கூத்திப் பிள்ளை என்னும் பழியை ஏன் சுமத்தல் வேண்டும்? பிள்ளைக் குப் பழியுண்டாகா முறையில் தாயும் தந்தையும் நடப்பது அறம்.
ஹிந்து மதக் கட்டுகள்
ஹிந்து மதத்தில் சாதிச் சமூகக் கட்டுப்பாடுகள் பலபடக் கிடக்கின்றன. கட்டுப்பாடுகள் பல நன்மணங்களைக் கெடுக் கின்றன. மனம் ஒன்றப்பெறும் ஒருத்தியும் ஒருவனும் விருப்பவழி மண முடித்தலைத் தடுக்கும் கட்டுப்பாடுகள் இயற்கைச் செந்நெறிக்கு அரண் செய்வன ஆகா. அவைகளை உடைத் தெறிய வேண்டுவது அறிஞர் கடமை. இக்கால ஹிந்து மதத்தி லுள்ள சில மூடக் கட்டுப்பாடுகளைத் தொலைக்கவே அறிஞர் சிலர் ஆரிய சமாஜம், பிரம சமாஜம் முதலியவற்றைக் கண்டனர். இது நிற்க.
ஆண் மக்களிடம் எச்சரிக்கை
பெண்மக்கட்கு ஓர் எச்சரிக்கை பகர்ந்து இப்பகுதியை இவ்வளவில் முடிக்கிறேன். அஃது, எல்லா வழியிலும் ஒத்த ஒருவனாயினும் திருமணத்துக்கு முன்னர் அவனுடன் ஒருத்தி கூடுதலாகாதென்பது. அன்புப் பெருக்கால் கூடுதல் நிகழ்த்த வல்ல குறிகள் தோன்றினும் பெண்மகள் அவைகளை அறிவால் அடக்க முயலல்வேண்டும். அடக்கல் அரிதாயிருக்கலாம். அரிதாயினும் சோதனைக்கு இடந்தரலாகாது. பண்டை நாளில்- களவுமணக் காலத்தில்- வாய்மை, கடவுளாகப் போற்றப் பட்டது. பின்னைப் பொய்யும் வழுவும் புகலாயின. ஆதலால், காலநிலை யுன்னி நடக்குமாறு பெண்மணிகளைக் கேட்டுக் கொள்கிறேன். கூடிக் கலவி நிகழ்த்திய பின்னைத் திருமணங் கூடாதொழியு மேல் என் செய்வது? ஆண்மகன் மணம் நிகழ்த்துவான் என்பதற்கு என்ன உறுதி? இதுகுறித்து இக்காலப் பெண்ணுலகுக்கு விரிவுரை கூறவேண்டுவதில்லை.
உலகம் ஒருகுலம்
திருமண நுட்பங்கள் பல உண்டு. அவற்றுள் ஒன்று உலகம் ஒருகுலமாதற்குக் கால்கொள்வது. மக்கள் இயல்பு சேர்ந்து வாழ்வதென்பது உயிர்நூலார் கண்ட உண்மை. இச் சேர்க்கைக் கென்றே புனிதக் காதல் இயற்கையில் அமைந்துள்ளது. காதல் சேர்க்கை குடும்பமாகிறது. சேர்க்கைக் குடும்பத்தின் குறிக்கோள் ஊராய், கோட்டமாய், வட்டமாய், நாடாய், உலகாய் விரிந்து பொலிதல் வேண்டுமென்பது. காதல் சேர்க்கை என்னுந் திருமணம், உலகம் ஒருகுடும்பமாக அதாவது ஒரு குலமாக வித்திடுவதென்பது உணரத்தக்கது. இதுபற்றிய விளக்கம் ஈண்டைக்குத் தேவையில்லை.
மற்றொரு பாதி
ஒருத்தி ஒருவனுடன் வாழ்தலாவது, தனக்குரிய மற்றொரு பாதியைத் தன்னுடன் பொருத்துவதாகும். அவ்வொருபாதி எத்தகையதாயிருத்தல் வேண்டும். அது பொருந்தியதாய் இருத்தல் வேண்டும். பொருந்திய பாதியைத் தேடிப் பிடித்தல் எளிதன்று. அரிதின் முயன்றேனும் பெண்மகள் தனக்குரிய ஒருவனைப் பெற முயல்வது அவளது கடமை. உடல் – மனம் – அறிவு என்னும் மூன்றானும் பொருத்தம் நல்கும் இருபாதி, அன்பால் பிணிக்கப்பட்டு, இருமைகெட ஒருமை இன்பங்கூட்டி வாழ்வதற்குக் கால்கொள்வது திருமணம். இத்திருமணம் ஓங்குக.
பருகிய நோக்கெனும் பாசத் தாற்பிணித்துஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்இருவரும் மாறிப்புக் கிதயம் எய்தினார்.
-இராமாயணம்



