
பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை
திரு. வி. கலியாணசுந்தரனார்
எட்டாம் பதிப்பு முன்னுரை
இந்நூல் முதற்பதிப்பு 1927-ம் ஆண்டிலும், இரண்டாம் பதிப்பு 1929-ம் ஆண்டிலும், மூன்றாம் பதிப்பு 1934-ம் ஆண்டிலும், நான்காம் பதிப்பு 1939-ம் ஆண்டிலும், ஐந்தாம் பதிப்பு 1945-ம் ஆண்டிலும் ஆறாம் பதிப்பு 1946-ம் ஆண்டிலும், ஏழாம் பதிப்பு 1949-ம் ஆண்டிலும் வெளிவந்தன. முதற்பதிப்பு வெளிவந்த போது தமிழ்நாட்டில் பெண்ணுலகின் நிலை எப்படி இருந்தது? இன்று எப்படி இருக்கிறது? இடையில் நேர்ந்த மாறுதல்கள் மகிழ்ச்சிக்குரியன.
முதற்பதிப்புத் தலைகாட்டியபோது எதிர்ப்புப் பெரிதும் எழுந்தது; இப்பொழுது எதிர்ப்பு மறைந்தவிட்டதென்று கூறலாம். இந்நூல் வெளிவந்த பின்னைத் தென்னாட்டில் பெண்ணுரிமைக்கெனத் தோன்றிய இயக்கங்கள் பல; சங்கங்கள் பல; முயற்சிகள் பல; மேலுங் கலப்பு மணங்களும் கைம்மையர் மணங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன; சட்டங்கள் செய்யவும் நாடு முனைந்து நிற்கிறது; இளைஞருள் ஒருவிதப் புத்துணர்வு தோன்றியிருக்கிறது; மூலை முடுக்குகளிலும் பெண்ணின் பெருமை பேசப்படுகிறது. பெண்ணுலகம் விழித்துக் கொண்டது என்று சுருங்கச் சொல்லலாம். இந்நூல், இன்னும் பல நலன்களைச் செய்யும் என்றே நம்புகிறேன்.
எனது கண்கள் படலத்தால் மறைக்கப்பட்டும், உடல் நிலை தளர்ந்தும் படுக்கையில் கிடக்கும் இவ்வேளையில், எனது நிலை கண்டு, எவ்விதக் கைம்மாறும் கருதாது, இவ்வெட்டாம் பதிப்பின் அச்சுத்தாள்களைப் பார்வையிட்டு உதவிய தமிழ்ப் பேராசிரியர் – வித்துவான் – அன்பு கணபதி அவர்களை எம் மொழியால் போற்ற வல்லேன்! அவர் வாழ்க; வாழ்க; நீடு வாழ்க!
திரு.வி.க



