கபோதிபுரத்துக் காதல்
க. நா. அண்ணாதுரை

10

கணவனுக்கும் அவளுக்கும் மணமாயிற்று என்பதைத் தவிர வேறு பிணைப்பு இல்லை. அவன், அவள் கழுத்தில் தாலியைக் கடடினானே தவிர மனத்திலே அன்பு என்ற முத்திரையைப் பதியவைக்கவில்லை. எனவே, அவள் கணவனிடம் கலந்து வாழ்வதைத் தனது கடமை, உலகம் ஏற்படுத்திய கட்டு எனக்கொண்டாளே தவிர, அதுவே தன் இன்பம் என்று கொள்ளவில்லை.

பரந்தாமனை மணந்திருந்தால், அவளைப் பதைக்கப்பதைக்க வெட்டினாலும் பாழும்கிணற்றில் தள்ளினாலும் பயப்பட மாட்டாள். பிறனுடைய மிரட்டலுக்குக் காலடியில் கோடிகோடியாகப் பணத்தைக் குவித்தாலும் நிமிர்ந்து நோக்கியிருக்க மாட்டாள் மற்றொருவனை. அவள் காதற்செல்வத்தைப் பெறவில்லை. இவள் இன்பக்கேணியில் புகவில்லை. எனவே அவள் வாழ்க்கையில் இவனிடம் எளிதில் வழுக்கி விழுந்தாள்.

உலகம் தன் குற்றத்தைத் தெரிந்துகொள்ளாதிருக்கும் மட்டும் கவலை இல்லை என்று எண்ணினாள்.

‘இனி, இந்த உலகில், ஜோராக வாழவேண்டும். சொகுசாக உடுத்தி, நல்ல நல்ல நகைகள் போட்டுக்கொண்டு, கணவர் கொண்டாட ஆனந்தமாக வாழவேண்டும். அதற்கு காரியஸ்தன் தயவிருந்தால் கணவனைச் சரிப்படுத்த முடியும். காரியஸ்தனோ தன் காலடியில் கிடக்கிறான். இனி தனக்கென்ன குறை!’ என்று எண்ணினாள் சாரதா. சாரதா புது உருவெடுத்தாள் உடையிலே. தேடித்தேடி அணிந்தாள். நகைகள் புதிதாகப் போட்டாள். ஒரு நாளைக்குப் பத்துமுறை முகத்தை அலம்புவாள், நிமிடத்திற்கொருமுறை கண்ணாடி முன் நிற்பாள். வலியச்சென்று புருஷனிடம் கொஞ்சுவாள். அவள் சரசம்புரியத் தொடங்கினாள். கிழக்கணவன் அவள் வலையில் வீழ்ந்தான். கேட்டதைத் தந்தான். சாரதாவே கண்கண்ட தெய்வம் என்றான். ஆனால் அவன் அறியான் பாபம், அவள் கற்பை இழந்த சிறுக்கியானாள் என்பதை.

மயிலும் மாதரும் தமது அழகைப் பிறர் காணவேண்டுமென்ற எண்ணத்துடன் இருப்பதாகக் கவிகள் கூறுவர். மயிலின் தோகை அவ்வளவு வனப்புடன் இருக்கும்போது அது பிறர் கண்களுக்குத் தெரியாமல் மறைந்து கிடப்பின் பயன் என்ன? கண்டோர் மனத்தில் களிப்பை உண்டாக்கும் ஒப்பற்ற பணியை அழகு செய்கிறது. அந்த அழகு, அன்றலர்ந்த பூவிலுண்டு! அந்தி வானத்திலுண்டு. அதரத்தில் தவழும் அலங்காரப் புன்சிரிப்பிலுண்டு, கிளியின் கொஞ்சுதலில், குயிலின் கூவுதலில், மயிலின் நடனத்தில், மாதரின் சாயலில் உண்டு! சிற்பத்தில் உண்டு. ஆனால் அதன் சிறப்பை முழுதும் காணவல்லார் மிகச்சிலரே. ஆனால் மாதரின் எழில் அத்தகையதன்று. அது கண்டவரை உடனே களிக்கவைக்கும் தன்மையது. காற்று வீசும்போது குளிர்ச்சி தருகிறேன் பாரீர் எனக் கூவுமா! அதன் செயல் நமக்கு அந்த இயற்கையான எண்ணத்தை உண்டாக்கும். அதுபோலவே, எந்த மாதும், ‘என் அழகைக் கண்டாயோ!’ எனக் கேளார், ஆனால் தம் அழகைப் பிறர் கண்டனர், களித்தனர் என்பது அவர்களுக்குத் தெரியும். அதிலே பூரிப்பும் பெருமையும் அடையாத பெண்கள் மிகமிகச் சொற்பம். ஆனால், அழகு, களிப்பதற்கு எங்ஙனம் உதவுகிறதோ அதைப்போலவே பிறரை அழிக்கவும் செய்கிறது. எனவேதான், புலவர்கள், மாதர்களின் விழியிலே அமிர்தமும் உண்டு. நஞ்சும் உண்டு என்றனர்.

இசைந்த உள்ளத்தை எடுத்துக்காட்டும் விழி, அமிர்தத்தை அள்ளி அள்ளி ஊட்டும்! இல்லை, ‘போடா! மூடா! எட்ட நில்!’ – என்ற இருதயத்துக்கு ஈட்டி போன்ற பதிலைத் தரும் விழிகள் நஞ்சுதரும்! ஆம்! அமிர்தம் உண்டு ஆனந்தப்பட்டவர்களுமுண்டு; நஞ்சு கண்டு நலிந்தவர்களுமுண்டு! ஒரே பொருள் இருவகையான செயலுக்குப் பயன்படுகிறது! ஆனால் சாரதாவின் கண்கள் அமிர்தத்தையும் ஊட்டவில்லை, நஞ்சையும் தரவில்லை! இயற்கையாக எழும் எண்ணத்தை அடக்கி, மடக்கி, மாற்றிக்காட்ட அவளது கண்கள் கற்றுக்கொண்டன!

உண்மையான அன்பு கனிந்திருந்தால், அக்காரிகை தன்னைக் காதலன் நோக்கும்போது தலைகுனிந்து நிற்பாள். பளிங்குப் பேழையின் மூடியை மெதுவாகத் திறப்பாள். கண் சரேலெனப் பாயும் காதலன்மீது! நொடியில் மூடிக்கொள்ளும்! இடையே ஒரு புன்சிரிப்பு, மின்னலெனத் தோன்றி மறையும்!

காதலற்று, வேறு எதனாலேனும், பொருள் காரணமாகவோ, வேறு போக்கு இல்லை என்ற காரணத்தாலோ, கட்டுப்பட்ட காரிகை, தன்னுடன் பிணைக்கப்பட்டுள்ளவன் தன்னைக் காணும்போது, உள்ளத்தில் களிப்பு இருப்பினும் இல்லாது போயினும், பற்களை வெளியே காட்டியும் அவன் அப்புறம் சென்றதும் முகத்தில் மெருகற்றுச் சோர்வதும் உண்டு! தானாக மலர்ந்த மலருக்கும் அரும்பை எடுத்து அகல விரித்ததற்கும் உள்ள வித்தியாசம் இங்கும் உண்டு!

சாரதா மலராத மலர்! அரும்பு! முள்வேலியில் கிடந்தது. கருப்பையா அதனை அகல விரித்தான்! அவன் ஆனந்தமடைந்தான். சாரதா ஆனந்தமடைந்ததாக நடித்தாள்! அந்நடிப்பே அவனுக்கு நல்லதொரு விருந்தாயிற்று! நடிப்பும் ஒரு கலைதானே!

கருப்பையாவுக்கும் சாரதாவுக்கும் கள்ள நட்பு பெருகி வருவதைக் கணவனறியான். நல்ல தோட்டம், அழகான மாடு, கன்று இருப்பது கண்டும் பெட்டியைத் திறந்ததும் பணம் நிரம்பி இருப்பதைப் பார்த்தும் பெருமை அடைவதைப்போலவே தன் அழகிய மனைவி சாரதாவைக் கண்டு பெருமையடைந்தான்.

“என் சாரதா குளித்துவிட்டு, கூந்தலைக் கோதி முடிக்காது கொண்டையாக்கி, குங்குமப் பொட்டிட்டு, கோவில் போகும்போது லட்சுமியோ, பார்வதியோ என்று தோன்றுகிறது. பூஜா பலன் இல்லாமலா எனக்கு சாரதா கிடைத்தாள்” என்று அவள் கணவன் எண்ணினான்.

அந்த லட்சுமி தனது செல்வத்தை, இன்பத்தை, கருப்பையாவுக்குத் தருவதை அவன் அறியான். அறியவொட்டாது அபின் தடுத்தது. நாளுக்கு நாள் அபினின் அளவும் அதிகரித்தது. கள்ள நட்பும் பெருகிவந்தது. இவ்வளவு சேதியும் பரந்தாமன் செவி புகவில்லை.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *