
கபோதிபுரத்துக் காதல்
க. நா. அண்ணாதுரை
15
இதே நேரத்தில் கருணானந்த யோகீசுரருக்கும், பரந்தாமனுக்கும் சச்சரவு வளர்ந்தது. மனச்சோகத்தை மாற்ற காவியணிந்த யோகியின் சேவையை நாடிய பரந்தாமன். காவி பூண்ட கருணானந்தன், காசாசை பிடித்த கயவன் என்பதை உணர்ந்தான். அவனுக்குத் தன் நிலைமையில் வெறுப்பு ஏற்பட்டது. யோகியைக் கண்டிக்கத் தொடங்கினான். ‘ஊரை ஏய்க்க உருத்திராட்சமா? கண்டவரை மயக்க காவியா? விபூதி பூசிக்கொண்டு விபரீதச் செயல் புரிவதா?’ என்று கேட்க ஆரம்பித்தான். யோகி ஒரு திருட்டு போகி என்பது பரந்தாமனுக்குத் தெரிந்ததும் “இப்படிப்பட்டவனிடம் சிக்கி வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, வீணுக்கு உழைத்தோமே” என்று வருந்தினான்.
“நான் என் நிலைமையைப்பற்றி மட்டுமே கவனித்தேன், என் சுகம், என் மன ஆறுதல் என் அமைதியைப் பற்றி அக்கறை கொண்டனேயன்றி, என்னிடம் காதல்கொண்டு கட்டுகளில் சிக்கிக் கலங்கிய காரிகையின் கஷ்டத்தைப் போக்க நான் என்ன செய்தேன். அவள் எக்கதியானாள்? அவள் பக்கத்தில் அல்லவா நான் நின்று பாதுகாத்திருக்கவேண்டும் அதுதானே வீரனுக்கு அழகு. நான் ஒரு கோழை. எனவேதான், கோணல் வழி புகுந்தேன்” என்று மனங்கசிந்தான்.
நாளாகவாக, பரந்தாமனுக்குக் கருணானந்த யோகியிடம் வெறுப்பும் கோபமும் வளர்ந்தது. உலகின் முன் அவனை இழுத்து நிறுத்திவிட வேண்டுமென்று எண்ணினான்.
இந்நிலையில் சென்னை வந்து சேர்ந்தார் கருணானந்தர் தமக்கெனப் புதிதாகத் தயாரிக்கப்பட்டிருந்த மடத்தில் தங்கினார்.
சென்னை நாகரித்திலும் படிப்பிலும் மிக முன்னேறிய நகரமாயிற்றே, இங்கே யோகியின் தந்திரம் பலிக்காது என்று பரந்தாமன் எண்ணினான். ஆனால், சென்னையைப்போல கருணானந்தருக்கு ஆதரவு தந்த ஊரே இல்லையெனலாம். அவ்வளவு ஆதரவு தந்துவிட்டது சென்னை. சீமான்களெல்லாம் சீடர்களாயினர். மேனாட்டுப் படிப்பில் தேறியவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், பத்திரிகைகாரர்கள் யாவரும் சீடர்களாயினர்.
கருணானந்தரின் தோழரொருவர், ஒரு பிரபல பத்திரிகையில் இருந்தார். அவர் யோகியின் குணாதியசங்களைப் பற்றி கட்டுரைகள் வெளியிட்டார். அவருடைய ‘தத்துவமே’ உலகில் இனி ஓங்கி வளருமென்றார். அவர் சர்வமத சமாஜத்தை உண்டாக்குவார் என்று கூறினார்கள் பலர்.
அவருடைய கொள்கைக்கும் அரவிந்தர் கொள்கைக்கும் அதிக வித்தியாசமில்லை என்று வேறொருவர் கூறினார்.
மடத்தின் வாயிலில் மணி தவறாது மோட்டார்கள் வரும். விதவிதமான ‘சீமான்கள்’ அவருடைய பக்தி மார்க்கத்தைக் கேட்டு ஆனந்திப்பர்.
பரந்தாமன் திடுக்கிட்டுப் போனான். சென்னையின் நாகரிகம் அதன் கட்டடங்களிலும், மக்கள் உணவிலும் உல்லாச வாழ்விலும் காணப்பட்டதேயன்றி, உள்ளத்திலே மிகமிகக் குருட்டுக் கொள்கைகளே இருப்பதைக் கண்டான். உலகை ஏமாற்றும் ஒரு வஞ்சகனிடம் ‘வரம்’ கேட்க பலர் வருவது கண்டு, சிந்தை மிக வெந்தான்.
“ஆஹா! பகட்டு வேஷத்துக்குப் பாழும் உலகம் இப்படிப் பலியாகிச் சீரழிகிறதே” என்று வாடினான். இனி இந்த வஞ்சக நாடகத்தில் தான் பங்குகொள்ளக் கூடாது என்று தீர்மானித்தான். நாள் முழுவதும் அத்தீர்மானம் வளர்ந்து வலுப்பட்டது. ஒருநாள் நடுநிசியில் பரந்தாமனின் உள்ளம் பதைபதைத்தது.
நேரே யோகியின் அறைக்குச் சென்று, எச்சரித்துவிட்டு மடத்தைவிட்டு விலகி விடுவது என்று முடிவு செய்துகொண்டான்.
கோபத்துடன் எழுந்தான். கொத்துச்சாவியை எடுத்தான். பெட்டியைத் திறந்தான். இரண்டு வெள்ளை வேட்டிகளை எடுத்துக்கொண்டான். காவியைக் களைந்து வீசினான். வெள்ளை வேட்டிகளைக் கட்டிக்கொண்டான், உருத்திராட்ச மாலைகளை எடுத்தெறிந்தான்.
நேரே யோகி படுத்துறங்கும் அறைக்குச் சென்றான். கதவு சாத்தப்பட்டிருந்தது, ஆனால் கதவிடுக்கில் வெளிச்சம் தெரிந்தது. அடிமேல் அடி எடுத்து வைத்து, கதவருகே சென்று உள்ளே நடப்பதை நோக்கினான். ‘யோகி’, மங்கையொருத்தியுடன் சல்லாபித்துக்கொண்டிருப்பதைக் கண்டான்.
“கோகிலா! நீ என்னை உதவாக்கரை என்று ஒதுக்கித் தள்ளினாயே. பார் இப்போது!” என்று யோகி கூறிட, “இவ்வளவு சமர்த்து உமக்கு இருப்பதைக் காணவே நான் உம்மை முன்னம் வெறுத்தேன்” என்று கோகிலம் என்று அழைக்கப்பட்ட பெண் கூறினாள்.
பரந்தாமனுக்கு ஆத்திரம் பொங்கிற்று. கதவைக் காலால் உதைத்து உள்ளே சென்று யோகியின் கன்னத்தில் அறையலாமா என்று தோன்றிற்று. பொறு மனமே பொறு என்று நின்றான்.
“அழகாபுரி உமக்குத் தெரியுமோ” என்றாள் கோகிலம்.
“அங்கே என்ன அதிசயம்” என்றார் யோகி.
“அங்கே சாரதா என்றொரு பெண்….” என்று கோகிலம் கூறலானாள்.
தன் காதலி சாரதாவின் பெயர் உச்சரிக்கப்பட்டவுடன் பரந்தாமன் ஜாக்கிரதையாக உள்ளே என்ன பேசுகிறார்கள் என்பதை உற்றுக் கேட்கத் தொடங்கினான். யோகியின் மடி மீது சாய்ந்தபடியே, அவள் சாரதாவின் ரசமுள்ள கதையைக் கூறலானாள்.
கோகிலம், சாரதாவின் சேதி பூராவையும் ஒன்று விடாது கூறினாள். ஒரு ‘போட்டோ’ மூலம் தன் அண்ணன், அவளை மிரட்டுவதைக் கூறியபோது, “இது ஒரு பிரமாதமா? இருப்பதைக் காட்டி உன் அண்ணன் மிரட்டுகிறான். யாரவள், சாரதாவா, அவள் மிரளுகிறாள். இந்தக் கருணானந்தன் செய்வது உனக்கென்ன தெரியுமடி, கட்டழகி” என்று கொஞ்சினான், யோகி வேடம் பூண்ட போகி.
“உன் சமர்த்தை உரைக்க ஒரு நாக்கும் போதாதே” என்று இசைந்தாள் கோகிலம் கிண்டலாக.
“கேள் கோகிலா, இருப்பது கண்டு மிரள்வது, இயல்பு. இல்லாதது கண்டு மிரள்வதை என்னென்பேன் பேதை மக்களிடம்.
“பிடிப்பான், அடிப்பான், கடிப்பான், உதைப்பான் பேசினாயா நமச்சிவாயா என்பான் சிவனையோ திருநீறு எனக்கேட்பான்” என்று கேட்டு, பற்களை நறநறவெனக் கடித்து, மீசைகள் படபடவெனத் துடிக்க, அந்த நரகலோகத் தூதர்கள், சிவபக்தி அற்றவனின் சிரத்தில் குட்டி, கரத்தில் வெட்டி, எரிகிற கொப்பரையில் எறிந்து, சுடுகின்ற மணலில் உருட்டி, செந்தேள் கருந்தேள் விட்டுக் கொட்டவைத்து சித்திரவதை செய்வார். எனவே மெய்யன்பர்களே. “மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு” என்ற மணிமொழிப்படி, விபூதி ருத்திராட்சமணிந்த வில்வாபிஷேகனை, வேண்டிட வேண்டும்” என நான் நரகலோகக் காட்சி பற்றி பிரசங்கிக்கும்போது அடடா, இந்த மக்கள்தான் எவ்வளவு நம்புகிறார்கள். எத்தனை பயம், இதைவிட சாரதாவின் பயத்தை நான் கண்டு ஆச்சரியப்பட்டேன்” – என்றான் யோகி.
“அதுவுஞ்சரிதான்” என்றாள் கோகிலம்.
“ஆகவே நீ என்னை அணைத்திட வாடி – அணைத்திட வாடி – ஆனந்தத் தோடி பாடி” என்று யோகி ஜாவளி பாடினான், சரசமாடினான், ஜடையைப் பிடித்திழுத்தான். அவள் இவன் ருத்திராட்ச மாலையைப் பிடித்திழுத்தாள். பொட்டைக் கலைத்தான் இவன். அவள் திருநீறைத் துடைத்தழித்தாள். கிள்ளினான்! கிள்ளினாள். நெருக்கினான்! நில் என்றாள். சிரித்தான்! சீறுவதுபோல் நடித்தாள். எழுந்தான்! அவள் படுத்தாள்.
எட்டி உதைத்தான் கதவைப் பரந்தாமன், ஆத்திரம் தாளமாட்டாது!! ‘மட்டி! மடையா!’ எனத் திட்டினான். மாது கோகிலம் மருண்டாள். “மானத்தைப் பறித்திடுவேன், உன் சூது மார்க்கத்தை அழித்திடுவேன், ஊரை இதோ எழுப்பிடுவேன், உன் சேதி உரைத்திடுவேன்” என்று கோபத்துடன் கூறினான் பரந்தாமன்.
““பரந்தாமா! பொறு! பொறு! பதறாதே! ஏதோ நடந்தது நடந்துவிட்டது. இவள் என் சொந்த மனைவி கோகிலம், கூறடி உள்ளதை, நான் குடும்பம் நடத்த முடியாது திகைத்தேன். பாடுபட முயன்றேன். உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே இவ்வேடம் பூண்டேன். என் மானத்தைக் காப்பாற்று. உன் காலடி விழுவேன்” என்று கருணானந்தன் அழுதான்.
மடத்துக்கென வரும் காணிக்கையை எண்ணினான், ஐயோ, அது வராவண்ணம் இப்பாவிப் பரந்தாமன் செய்திடுவானே, என் செய்வது என்று பயந்தான்.
“மோசக்கார வேடதாரியே கேள்! இனி உன் முடிவு காலம் கிட்டிவிட்டது. நீ பிழைக்க வேண்டுமானால், அந்த சாரதா போட்டோவை என்னிடம் தந்துவிட ஏற்பாடு செய். இல்லையேல் உன்னை கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதை மீது ஏற்றி ஊர்வலம் வரும்படிச் செய்வேன். உஷார்” என்றான் பரந்தாமன்.
“சாரதாவின் போட்டோவிலே என்ன ரசம் கண்டீர்” எனச் சாகசமாகக் கேட்டாள் கோகிலம்.
“அதிரசம்” என்று அலட்சியமாகப் பதிலளித்தான் பரந்தாமன்.
யோகி, மங்கையின் மலரடி தொழுதான். அவள் முதலில் மறுத்தாள். பிறகு திகைத்தாள். கடைசியில் அண்ணனிடமிருந்து அப்படத்தைத் திருடிக்கொண்டு வருவதாகக் கூறினாள்.
“புறப்படு” என்றான் பரந்தாமன்.
“போவோம்” என்றாள் கோகிலம்.
நள்ளிரவில், கோகிலமும் பரந்தாமனும் மெல்ல சிங்காரவேலன் ஜாகை சென்றனர்.
கோகிலம், படத்தை அதன் ‘நெகட்டிவ்’ உள்பட, திருட்டுத்தனமாக எடுத்து, பரந்தாமனிடம் கொடுத்துவிட்டு, “நீ மிரட்டினதற்காக நான் இதனைத் தருவதாக எண்ணாதே. முன்னாளில் நீ சாரதாவிடம் கொண்ட காதல் இவ்வளவு காலத்துக்குப் பிறகும் அணையாதிருப்பது கண்டு, மகிழ்ந்தே இதனைத் தருகிறேன். நான் அறிவேன் உன் சேதி யாவும், அன்றொரு நாள் தோட்டத்தில் அவள் எல்லாம் என்னிடம் கூறினாள். ஆனால் நான், நீ காதல் இழந்ததுடன், வேறு வாழ்வில் புகுந்திருப்பாய் என்றே எண்ணினேன். இன்றுதான் கண்டேன், அன்று அவள் தீட்டிய சித்திரம் இன்னமும் இருப்பதை” என்று மிகுந்த வாஞ்சையுடன் கூறினாள்.
பரந்தாமனின் கண்களில் பல துளி நீர் சரேலென வந்தது.



