
கபோதிபுரத்துக் காதல்
க. நா. அண்ணாதுரை
19
“சாரதா வரவில்லையே, சாரதாவுக்கு என்மீது கோபமா? ஆம்! நான் அவள் வாழ்விற்கே ஒரு சகுனத்தடைபோல வந்தேன். சாரதா என் மனத்தைக் கொள்ளைகொண்ட சாரதா” என்று பரந்தாமன் அலறிக்கொண்டிருந்தான்.
கண் இரப்பை மீதும் அம்மை இருந்ததால் பரந்தாமனுக்கு கண்களைத் திறப்பதென்றாலும் கஷ்டம். திறந்ததும் வலிக்கும். வலித்ததும் மூடுவான். ‘வந்தாளா சாரதா’ என்று கேட்பான்.
“தம்பீ, வருவாள் பொறு, சற்றுத் தூங்கு” என்பாள் சாரதாவின் தாய்.
“தூக்கம்! எனக்கா! அம்மணி நான் செல்கிறேன் சாரதா இங்கு வரமாட்டாள். நானே அங்குச் செல்கிறேன். போனால் என்ன? அவள் கணவன் என்னைக் கொல்வானா! கொல்லட்டுமே? நான் செத்துதான் பல வருஷங்களாயிற்றே. எனக்கு இல்லாத சொந்தம் அவனுக்கா? தாலி கட்டியவன் அவன்தான்! ஆனால் அவளுடைய கழுத்தின் கயிறுதானே அது! நான் அவள் இருதயத்தில் என் அன்பைப் பொறித்துவிட்டேன். எனக்கே அவள் சொந்தம். ஓஹோ! ஊரைக்கேள், சாரதா யார் என்று என்பானோ! ஊரைக் கேட்டால், ஊராருக்கு என்ன தெரியும? உள்ளத்தைக் கேட்டுப் பார்க்கட்டுமே. ஏதோ இங்கே வா அம்மா இப்படி. நீயே சொல். சாரதா உன் மகள்தான். நீ சொல், சாரதா எனக்குச் சொந்தமா, அந்தக் கிழவனுக்கா! யாருக்கம்மா சொந்தம்! கொண்டுவா சாரதாவை! இனி ஒரு க்ஷணம் விட்டு வைக்கமாட்டேன். என் சாரதா, என்னிடம் வந்தே தீரவேண்டும்” என்று பரந்தாமன் அலறினான்.
கப்பல் முழுகுவதற்கு முன்பு, கடல் நீர் அதிகமாக உள்ளே புகும். அதுபோல, பரந்தாமன் இறக்கப் போகிறான். ஆகவேதான் அவன் எண்ணங்களும் மிக வேகமாக எழுகின்றன என வேதவல்லி எண்ணி விசனித்தாள்.
சாரதாவைப் பெற்றவள் அவள். அவளே சாரதாவைக் கிழவனுக்குக் கலியாணம் செய்து கொடுத்தாள். பரந்தாமனோ சாரதா யாருக்குச் சொந்தம் கூறு எனத் தன்னையே கேட்கிறான். வேதவல்லி என்ன பதில் சொல்வாள்.
“கதவைத் தட்டுவது யார்?”
“அம்மா! நான்தான் சாரதா!”
“வந்தாயா, கண்ணே வா, வந்து பாரடி அம்மா பரந்தாமனின் நிலையை…” என்று கூறி, சாரதாவை வேதவல்லி அழைத்து வந்தாள்.
பரந்தாமனைக் கண்டாள் சாரதா. அவள் கண்களில் நீர் பெருகிற்று. உள்ளம், ஒரு கோடி ஈட்டியால் ஏககாலத்தில் குத்தப்பட்டதுபோல் துடித்தது. குனிந்து அவனை நோக்கினாள். அந்த நேரத்தில் பரந்தாமனின் எண்ணம், அன்றொரு நாள் ஜூரமாக இருந்தபோது சாரதாவுக்கு முத்தமிட்ட காட்சியில் சென்றிருந்தது. அதனை எண்ணிப் புன்சிரிப்புடன் அவன் மீண்டும் உளறினான்.
“சாரதா நான் உன்னைக் காதலிக்க, நீ என் பாட்டனுக்குப் பெண்டானாயே, உன்னை விடுவேனோ! ஒரு கயிறு உன்னை என்னிடமிருந்து பிரித்துவிடுமா! என்னைவிட அக்கயிறு என்ன பிரமாதமா! வா! சாரதா! வந்துவிடு!” என்று உளறினான்.
“தம்பி பரந்தாமா, இதோ இப்படிப் பார், சாரதா வந்திருக்கிறாள்” என்று வேதவல்லி கூறினதும், பரந்தாமன், “யார் ராதவா, இங்கேயா” என்று கேட்டுக்கொண்டே கண்களைத் திறந்தான், சாரதாவைக் கண்டான். படுக்கையிலிருந்து தாவி, தன் கரங்களால் சாரதாவை இழுத்தான்.
சாரதா தழுதழுத்த குரலுடன் கண்களில் நீர் ததும்ப, “வேண்டாம் வேண்டாம் என்னைத் தொடதீர்கள்” என்றாள்.
பரந்தாமனின் விசனம் அதிகமாகிவிட்டது. கரங்களை இழுத்துக்கொண்டான். “மறந்துவிட்டேன் சாரதா அம்மை தொத்து நோய் என்பதை மறந்துவிட்டேன். என் பிரேமையின் பித்தத்தில், எனக்கு எதுதான் கவனத்துக்கு வருகிறது” என்று சலிப்புடன் கூறினான்.
சாரதா பதைபதைத்து “பரந்தாமா! தப்பாக எண்ணாதே. தான் என்னைத்தொட்டால் அம்மை நோய் வந்துவிடுமென்பதற்காகக் கூறவில்லை. நீ தொடும் அளவு பாக்கியம் எனக்கில்லை. நான் ஒரு பாவி” என்றாள்.
புன்னகையுடன் பரந்தாமன் “நீயா பாவி, தப்பு தப்பு. சாரதா நான் பாவி, நான் கோழை, என்னால்தான் நீ துயரில் மூழ்கினாய்” என்று கூறிக்கொண்டே சிங்காரவேலனிடமிருந்து வாங்கிக்கொண்டு வந்த ‘போட்டோவை’ சாரதாவிடம் கொடுத்தான்.
சாரதா சிறிதளவு திடுக்கிட்டுப்போனாள். பரந்தாமனைப் பார்த்து “இந்தப் படத்தைக் கண்ட பிறகுமா, என்மீது உனக்கு இவ்வளவு அன்பு. நான் சோரம் போனதைக் காட்டும் சித்திரங்கூட உன் காதலை மாற்றவில்லையா” என்று கேட்டாள்.
“சாரதா, கல்லில் பெயர் பொறித்துவிட்டால், காற்று அதனை எடுத்து வீசி எறிந்துவிடுமா!” என்றான் பரந்தாமன். அவனுடைய இருதயபூர்வமான அன்புகண்ட சாரதாவால் அழுகையை அடக்கமுடியவில்லை. இவ்வளவு அன்பு கனியும் பரந்தாமனிடம் வாழாது வாழ்க்கையைப் பாழாக்கிக்கொண்டு வழுக்கி விழுந்ததை எண்ணினாள். ஆனால் அவன் என் செய்வான்!
சமுதாயத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உருக்கி ஊற்றப்பட்டிருக்கும் பழக்க வழக்கம் சமூகத்தை ஒரு சருக்கு மரமாக்கிவிட்டது, அதில் தம்மிஷ்டப்படி செல்ல விரும்பி சருக்கி விழுந்து சாய்ந்தவர், கோடி கோடி, அதில் சாரதா ஒருத்தி.
“சாரதா ஒரே ஒரு கேள்வி. என்மீது கோபிப்பதில்லை யானால் கேட்கிறேன்” என்றான் பரந்தாமன்.
“குணசீலா, உன்மீது எனக்குக் கோபமா வரும்? கேள், ஆயிரம் கேள்விகள்” என்றாள்.
“அந்தப் படத்திலுள்ள கருப்பையாவுடன் நீ காதல் கொண்டிருந்தாயா!” என்று சற்று வருத்தத்துடன் கேட்டான் பரந்தாமன்.
“கருப்பையாவிடம் காதலா! வலை வீசும் வேடன்மீது புள்ளிமான் ஆசைகொண்டா வலையில் விழுகிறது” என்றாள் சாரதா.
“தெரிந்துகொண்டேன். ஆம்! நான் எண்ணியபடிதான் இருக்கிறது. நீ அவன் மீது காதல் கொள்ளவில்லை. அவன் உன் நிலைகண்டு உன்னைக் கெடுத்தான். நீ என்ன செய்வாய் பருவத்தில் சிறியவள்” என்று பரந்தாமன் கூறிக்கொண்டே சாரதாவின் கரத்தைப் பிடித்துத் தன் மார்பின் மீது வைத்துக்கொண்டு, “சாரதா! நீ இதனுள்ளே எப்போதும் இருந்து வந்தாய். அன்று உன்னை முந்திரிச்சோலையில் கண்டபோது உன் முத்திரை என் இருதயத்தில் ஆழப்பதிந்தது. அதனைப் பின்னர் அழிக்க யாராலும் முடியவில்லை. நாளொன்றுக்கு ஆயிரம் தடவை ‘அரகரா சிவசிவா அம்பலவாணா’ என்று சொல்லிப் பார்த்தேன். உன் கவனம் மாறவில்லை. தில்லை, திருவானைக்காவல், காஞ்சி எனும் தலங்களெல்லாம் சென்றேன். என் ‘காதல்’ கரையவில்லை. எப்படிக் கரையும்! ‘உமை ஒரு பாகன்’, ‘இலட்சுமி நாராயணன்’, ‘வள்ளி மணாளன் முருகன்’, ‘வல்லபைலோலன்’ என்றுதான் எங்கும் கண்டேன். நான் தேடிய உமை நீ தானே!” என்று பரந்தாமன் பேசிக்கொண்டே இருந்தான்.
கேட்கக் கேட்க சாரதாவின் உள்ளம் தேன் உண்டது. ஆனாலும், கடுமையான அம்மையின்போது பேசி உடம்புக்கு ஆயாசம் வருவித்துக் கொள்ளக்கூடாதே என்று அஞ்சி, “பரந்தாமா போதும் பிறகு பேசுவோம், உன் உடம்பு இருக்கும் நிலைமை தெரியாது பேசிக்கொண்டிருக்கிறாயே” என்று கூறி சாரதா அவன் வாயை மூடினாள்.
“உடம்பு ஒன்றும் போய்விடாது. போனாலும் என்ன? உன்னைக் கண்டாகிவிட்டது. உனக்கு இருந்துவந்த ஆபத்தைப் போக்கியுமாகிவிட்டது. இனி நான் நிம்மதியாக…” என்று கூறி முடிப்பதற்குள் சாரதா மீண்டும் அவன் வாயை மூடி, “அப்படிப்பட்ட பேச்சு பேசக்கூடாது. நான் சாகலாம், ஆனால் உங்களுக்கு ஒரு கெடுதியும் சம்பவிக்கலாகாது” என்று கூறினாள். சாரதாவைக் கண்ட ஆனந்தம் அவளிடம் பேசியதால் ஏற்பட்ட களிப்பு பரந்தாமனின் மனத்தில் புகுந்தது. அயர்வு குறைந்தது. பேசிக்கொண்டே கண்களை மூடினான். அப்படியே தூங்கிவிட்டான். அவன் நன்றாகத் தூங்கும் வரை பக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருந்தாள் சாரதா. மெல்ல குறட்டை விட்டான் பரந்தாமன், சாரதா மெதுவாக எழுந்தாள். தாயை அழைத்தாள். இருவரும் சமையலறை சென்றனர். அடுப்பில் நெருப்பை மூட்டினர். பரந்தாமன் தந்த போட்டோவை எரியும் நெருப்பில் போட்டு கொளுத்திவிட்டனர். பின்னர் சாரதா மெல்ல நடந்து வீடு சென்றாள்.



