கபோதிபுரத்துக் காதல்
க. நா. அண்ணாதுரை

17

பரந்தாமன் போட்டோவை எடுத்துக்கொண்டு அழகாபுரிக்குப் புறப்பட்டான். இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்தான். இடியும் மழையும் இணைபிரியாது அழகாபுரியில் அவதி தந்தது. குளம், குட்டை நிரம்பி வழிந்து ஓடிற்று. பெருங்காற்று அடித்தது, சாலை சோலையை அழித்தது. மரங்கள் வேரற்று வீழ்ந்தன. மண்சுவர்கள் இடிந்தன. மாடு கன்றுகள் மடிந்தன. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிற்று. ஊர் தத்தளித்தது. வந்துள்ள வெள்ளம், தன்னைக் கொள்ளைகொண்டு போகவேண்டும் எனச் சாரதா மாரியை வேண்டினாள்.

இருட்டும்வரை ஊர்ப்புறத்தே ஒளிந்திருந்து பிறகு மெல்ல நடந்து சாரதாவின் தாய் வீட்டை அடைந்தான் பரந்தாமன்.

நரைத்து நடை தளர்ந்துபோன அம்மாது விதவைக் கோலத்துடன் இருந்தாள்.

“கருத்து, மிரட்டும் கடுமழையில் எங்கிருந்து தம்பி நீ வந்தாய்” என்றாள்.

“வந்தேன் ஒரு முக்கியமான வேலையாக. நான் சாரதாவைப் பார்க்கவேண்டும்” என்றான் பரந்தாமன்.

“சாரதாவையா? நீ பழைய சாரதாவென எண்ணாதேயப்பா. அவள் என் மகள்தான். ஆனாலும் பெரிய பாவியானாள். அவள் முகத்தில் நான் விழிப்பதே இல்லை. ஊர் சிரித்துவிட்டது” என்று சலிப்புடன் தாய் கூறினாள்.

“சாரதா என்ன செய்தாள்?” என்றான் பரந்தாமன்.

“என்ன செய்தாளா? நல்ல கேள்விதான்!” என்று வெறுத்துக் கூறினாள் தாய்.

“இதோ, இதைப்பார். இதைத்தானே நீ கூறுகிறாய்” என்று கூறிக்கொண்டே, போட்டோவைக் காட்டினான் தாயிடம்.

“ஆ! படமும் எடுத்தார்களா!” என்று திகைத்தாள் தாய்.

“பயப்படாதே அம்மா, இதனைக் காட்டத்தான், நான் சாரதாவைப் பார்க்கவேண்டும்” என்றான் பரந்தாமன்.

“அநியாயம்! நீயாவது இந்தப் படத்தையாவது அவளிடம் காட்டுவதாவது வெட்கக்கேடு” என்றாள் தாய்.

“அம்மா! நீ விஷயமேதும் அறியாய். இந்தப் படத்தை ஒரு போக்கிரி வைத்துக்கொண்டு, சாரதாவை மிரட்டிக்கொண்டிருந்தான். பாவம் நம் சாரதா, எவ்வளவு பயந்தாளோ, பதைத்தாளோ, அழுதாளோ நமக்கென்ன தெரியும், என்னிடம் இது தற்செயலாகச் சிக்கிற்று. இதனை சாரதாவிடமே கொடுத்துவிட்டால் அவள் மனம் நிம்மதியாகும்!” என்றான் பரந்தாமன்.

“தம்பீ, பரந்தாமா, உனக்குத்தான் அவள் மீது எவ்வளவு ஆசை. உம்! உன்னைக் கட்டிக்கொண்டிருந்தால் அவளுக்குப் பாடும் இல்லை, பழியும் இல்லை” என்றாள் தாய்.

“ஆமாம்! எனக்கு சாரதா கிட்டாது போனதால்தான் வாழ்வுமில்லை. வகையுமில்லை” என்று அழுதான் பரந்தாமன்.

“நாளை காலையில் நான் சேதிவிடுத்து, அவளை இங்கு வரவழைக்கிறேன். நீ உடையைக் களைந்துவிட்டு, வேறுதுண்டு உடுத்திக்கொண்டு படுத்துறங்கு” என்று வேதவல்லியம்மை கூறினாள்.

‘ஆகட்டும்’ என்றான். ஆனால் அழுத கண்களுடனும் நனைந்த ஆடையுடனும் படுத்துப் புரண்டான். அலைச்சலாலும், அடைமழையில் நனைந்ததாலும், மனம் மிக நொந்ததாலும், பரந்தாமனுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. கண் திறக்கவும் முடியாதபடி காய்ச்சல். ஊரில் மழையும் நிற்கவில்லை. உடலில் சுரமும் நிற்கவில்லை. ஆறுகள் பாலங்களை உடைத்துக்கொண்டு ஓடின! வயல்கள் குளமாயின. செயல் மறந்து படுத்திருந்தான் பரந்தாமன்.

ஜூரம் முற்றிற்று. உடலும் திடீரெனச் சிவந்தது. வேதவல்லி தனக்குத் தெரிந்த சில்லறை வைத்தியமெல்லாம் செய்து பார்த்தாள். ஒன்றுக்கும் ஜூரம் கேட்கவில்லை.

பரந்தாமன் அலற ஆரம்பித்தான். வேதம் அழுதுகொண்டிருந்தாள். சாரதாவுக்குச் சொல்லி அனுப்பிப் பயனில்லை. “எப்படி நான் அவர் முகத்தைப் பார்ப்பேன்” என்று இடிந்து போனால் சாரதா. பரந்தாமனுக்கு ஜூரம் குறைந்ததுபோல் காணப்பட்டது. ஆனால் அம்மை வார்த்துவிட்டது. சிவந்த அவன் மேனியில் சிவப்புச் சித்திரங்கள் பல நூறு ஆயிரம் திடீர் திடீரெனத் தோன்றின. மயக்கமும், மருட்சியும் அதிகரித்தன. குளறலும் குடைச்சலும் ஆரம்பமாயிற்று. புரண்டு புரண்டு படுத்ததால் அம்மை குழைந்துவிட்டது. பார்க்கவே பயங்கரமாக இருந்தது பரந்தாமனை.

வேதவல்லி வேப்பிலையும் கையுமாக அவன் பக்கத்தில் வீற்றிருந்தாள்.

அம்மையின் வேகம் அதிகரிக்க, பரந்தாமனின் நிலை மோசமாகிக்கொண்டே வந்தது. வேதவல்லி வேப்பிலை கொண்டு வீசி, உபசாரம் செய்தாள். மாரியோ கேட்கவில்லை. பரந்தாமனின் மேனியில் துளி இடங்கூடப் பாக்கி இல்லை. எங்கும் சிவப்புப் பொட்டுகள் பூரித்துக்கொண்டிருந்தன. பரந்தாமனின் உடல் எரிச்சல் சொல்லுந்தரமன்று, அவன் அம்மைத் தழும்புகளைத் தேய்த்துவிடுவான், தழும்புகள் குழைந்துவிடும். வேதவல்லி, “ஐயோ, அபசாரம், அபசாரம் மாரி, கோபிக்காதே மகன்மீது சீறாதே மாவிளக்கு ஏற்றுகிறேன்” என்று வேண்டுவாள். மாரிக்கு என்ன கவலை.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *