கபோதிபுரத்துக் காதல்
க. நா. அண்ணாதுரை

3


மறுதினம், சாரதாவுக்கு, காய்ச்சல் வந்துவிட்டது. இரவு முழுதும் அழுது அழுது கண்கள் சிவந்துவிட்டன. இருமலும் சளியும் குளிரும் காய்ச்சலுமாக வந்துவிட்டது. மறுநாள் நடக்கவேண்டிய சடங்குகள் முடிந்து, உறவினர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றுக் கொண்டு போயினர். பரந்தாமனுக்கும் போக எண்ணந்தான். ஆனால், சாரதாவுக்குக் காய்ச்சல் விட்டபிறகு போகலாம். காய்ச்சலாக இருக்கும்போதே ஊருக்கு போய் விட்டால் எப்படி இருக்கிறதோ, என்ன ஆயிற்றோ என்று கவலைப்படத்தானே வேண்டும் என்று எண்ணியதால் அவன் அங்கேயே தங்கிவிட்டான்.

மாரியப்பபிள்ளை மகிழ்ச்சியின் மேலீட்டால் பரந்தாமனை, “டேய் பயலே. அங்குப் போய்த்தான் என்ன செய்யப்போகிறாய். இங்கேயே இருப்பதுதானே. பத்துப் பேரோடு பதினொன்றாக இரு. இங்கே கிடைக்கிற கூழோ, தண்ணியோ குடித்துவிட்டு காலத்தைத் தள்ளு. ஏதோ வயல் வேலையைப் பார்த்துக்கொள்ள வண்டி பூட்ட, ஓட்ட ஆள் வைத்திருக்கிறேன். அவனையும் ஒழுங்காக வேலை வாங்கு. இரு இங்கேயே” என்று கூறினார். காரியஸ்தன் கருப்பையாவும் இந்த யோசனையை ஆதரித்தான். வேதவல்லியும் இது நல்ல யோசனை என்றாள். பரந்தாமன், “சரி பார்ப்போம்” என்று கூறினான். அவனுக்கு தான் காதலித்த சாரதா, ஒரு கிழவனின் மனைவியாக இருப்பதைக் கண்ணாலே பார்த்துக்கொண்டிருக்க இஷ்டமில்லை. சாரதாவுக்கு உடம்பு சரியாகும் மட்டும் இருந்துவிட்டு, ஊர் போய்ச் சேருவது என்று முடிவு செய்தான்.

சாரதாவுக்கு ஒரு நாட்டு வைத்தியர் மருந்து கொடுத்து வந்தார். ஜூரம் குறையவில்லை.

இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் ஜூரம் விட்டது. ஆனால் களைப்பும் இருமலும் அதிகமாக இருந்தன. அன்று மருந்து வாங்கிக்கொண்டு வர பரந்தாமனையே அனுப்பினார்கள். வைத்தியர், வீட்டை விசாரித்துக்கொண்டு வந்து சேர்ந்தான். வைத்தியர், சற்று வெறியில் இருந்தார். அவர் கொஞ்சம் ‘தண்ணீர்’ சாப்பிடும் பேர்வழி. எனவே, அவர் கிண்டலாகப் பேசினார். இது பரந்தாமனுக்குப் பிடிக்கவில்லை.

“வாய்யா, வா! என்ன மருந்துக்கு வந்தாயா! யாருக்கு? சாரதாபாய்க்குத்தானே” என்று ஆரம்பத்திலேயே கிண்டலாகப் பேசினான்.

“ஆமாம் வைத்தியரே, பாவம் கலியாணமானதும் காய்ச்சல் இப்படி வந்துவிட்டது சாரதாவுக்கு” என்றான் பரந்தாமன்.

“ஏனப்பா வராது. ஏன் வராது சொல்லு? பெண்ணோ பதுமைபோல ஜிலுஜிலுன்னு இருக்கிறாள். பருவமோ ஜோரான பருவம். புருஷனாக வந்த ஆளோ ஒரு கிழம். இதைக்கண்ட பெண்ணுக்கு வருத்தம் இருக்காதா?” என்றான் வைத்தியன்.

“இதெல்லாம் நமக்கேன் வைத்தியரே. எல்லாம் ஆண்டவன் எழுதி வைத்தபடிதானே நடக்கும்” என்றான் பரந்தாமன்.

“ஆண்டவனை ஏனப்பா இந்த வேலைக்கு அழைக்கிறே. அவர் தன் வரைக்கும் சரியாகத்தான் செய்து வைத்துக்கொண்டார். பார்வதி பரமசிவன் ஜோடிக்கு என்ன குறை! லட்சுமி – விஷ்ணு இந்த ஜோடிதான் என்ன இலேசானதா, சாமிகளெல்லாம் பலே ஆசாமிகளப்பா, அவர்கள் பேரைச் சொல்லிக்கொண்டு நாம்தான் இப்படி இருக்கிறோம்” என்று வைத்தியன் சொன்னான்.

பரந்தாமனுக்கு இந்த வேடிக்கைப் பேச்சு சிரிப்பை உண்டாக்கியது. பரந்தாமன் சிரித்ததும், வைத்தியருக்கும் மேலே பேச்சு பொங்கிற்று. உள்ளேயும் ‘அது’ பொங்கிற்று!

“கேளப்பா கேளு, இந்த மாதிரி ‘ஜோடி’ சேர்ந்தால் காரியம் ஒழுங்காக நடக்காது. என்னமோ, மாரியப்பபிள்ளைக்குப் பணம் இருக்கிறதே என்று ஆசைப்பட்டு, அந்த வேதவல்லி இந்த மாதிரி முடிச்சு போட்டுவிட்டாள். பணமா பெரிசு! நல்ல ஒய்யாரமான குட்டி சாரதா. அவளை ஓர் ஒடிந்து விழுந்து போகிற கிழவனுக்குப் பெண்டாக்கினால் அந்தக் குடும்பம் எப்படியாவது? உனக்குத் தெரியாது விஷயம். மாரியப்பபிள்ளை, ஆள் ரொம்ப முடுக்காகத்தான் இருப்பாரு. ஆனால், இந்த ‘பொம்பளை’ விஷயமென்றால் நாக்கிலே தண்ணி சொட்டும் அந்த ஆளுக்கு. ரொம்ப சபலம், ரொம்ப சபலம். எப்படியோ பார்த்து போட்டுட்டான் சரியான பெண்ணை, தன் வலையிலே” என்றான் வைத்தியன்.

பரந்தாமன் பார்த்தான் மேலே பேச்சு வளர ஆரம்பிக்கிறது. வைத்தியர் ரொம்ப வாயாடி என்பது தெரிந்துவிட்டது. “நேரமாயிற்று மருந்துகொடு வைத்தியரே, போகிறேன்” என்று கேட்டான்.

“மருந்து கொடுக்கிறேன். ஆனால் மருந்து மட்டும் வேலை செய்தா போதாது. அந்தப் பெண்ணுக்கு மனோவியாகூலம் இருக்கக்கூடாதே. அதுக்காக என்ன மருந்து தரமுடியும். நான் ஜூரம் தீர மருந்து தருவேன். குளிர்போக குளிகை கொடுப்பேன். காய்ச்சல் போக கஷாயம் தருவேன். ஆனால், சாரதாவின் மன வியாதியைப் போக்க நான் எந்த மருந்தைக் கொடுப்பது. தம்பீ, சரியான ஜோடி நீதான். சாரதாவுக்கு மருந்தும் நீயே” என்றான் வைத்தியன்.

‘தன் சாரதாவைப் பற்றி இவ்வளவு கிண்டலாக ஒரு வைத்தியன் பேசுவதா – அதிலும் தன் எதிரிலே பேசுவதா’ என்று கோபம் வந்துவிட்டது பரந்தாமனுக்கு. ஓங்கி அறைந்தான் வைத்தியனை.

“படவா மருந்து கேட்க வந்தால் வம்புதும்புமா பேசுகிறாய். யார் என்று என்னை நினைத்தாய்” என்று திட்டினான்.

வைத்தியன், வெறி தெளிந்து “அடே தம்பி நான் வேடிக்கை பேசினேன் கோபிக்காதே. இந்தா மருந்து” என்று சொல்லிவிட்டு மருந்து கொடுக்கச் சென்றான்.

வைத்தியனை, கோபத்திலே, பரந்தாமன் அடித்துவிட்டானே தவிர அவனுக்கு நன்றாகத் தெரியும் வைத்தியன் சொன்னதிலே துளிகூட தவறு இல்லை என்று. சாரதாவின் நோய் மன வியாதிதான் என்பதிலே சந்தேகமில்லை. அது அவனுக்குத் தெரிந்ததுதான். பிறர் சொல்லும்போதுதான் கோபம் வருகிறது. அதிலும் சாரதாவைக் கிண்டல் செய்வதுபோலக் காணப்படவேதான் கோபம் மிக அதிகமாகிவிட்டது ஆழ்ந்து யோசிக்கும்போது, அந்த வைத்தியர் மட்டுமல்ல, ஊரில் யாரும் அப்படித்தானே பேசுவார்கள். நேரில் பேச பயந்துகொண்டு இருந்துவிட்டாலும் மறைவில் பேசும்போது இதைப்பற்றிக் கேலியாகவும், கிண்டலாகவும்தானே பேசுவார்கள் என்று எண்ணிய பரந்தாமன், ஆஹா! இந்த அழகி சாரதாவுக்கு இப்படிப்பட்ட கதி வந்ததே, ஊர் முழுவதும் இனி இவளைப் பற்றித்தானே பேசுவார்கள். என்னிடம் வைத்தியன் கிண்டலாகப் பேசியதே எனக்குக் கஷ்டமாக இருந்ததே. சாரதாவின் காதில், இப்படிப்பட்ட கேலி வார்த்தைகள் விழுந்தால், மனம் என்ன பாடுபடுமோ. பாவம், எங்கெங்கு இதே வேளையில் கிழவனை மணந்தாள் என்று கேலி செய்யப்படுகிறதோ. எத்தனை கணவன்மார்கள், தமது மனைவியிடம், “நான் என்ன, மாரியப்பபிள்ளையா?” என்று கிண்டலாகப் பேசுகிறார்களோ! எத்தனை உணர்ச்சியுள்ள, பெண்கள், “நான் குளத்தில், குட்டையில் விழுந்தாலும் விழுவேன், இப்படிப்பட்ட கிழவனைக் கலியாணம் செய்துகொள்ள மாட்டேன்” என்று பேசுகின்றனரோ, சேச்சே! எவ்வளவு கேலி பிறக்கும், கிண்டல் நடக்கும். இவ்வளவையும் என் பஞ்சவர்ணக்கிளி எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும். நான் அவள் கருத்தைப் போக்க என்ன செய்ய முடியும். எனக்கோ, அவள் பாட்டி! என்று எண்ணிப் பரந்தாமன் வாட்டத்துடன் வீடுவந்து, வேதவல்லியிடம் மருந்தைக் கொடுத்தான்.

“தம்பி! நீயே, இந்த வேளை, உன் கையாலேயே மருந்தைக் கொடு. நீ கொடுக்கிற வேளையாவது அவளுக்கு உடம்பு குணமாகட்டும்” என்று கூற, மருந்து கொடுக்க பரந்தாமன், சாரதா படுத்துக்கொண்டிருந்த அறைக்குச் சென்றான்.

நல்ல அழகான பட்டுமெத்தை! அதன்மீது சாரதா ஒரு புறமாகச் சாய்ந்துகொண்டு படுத்திருந்தாள். அவள் படுத்துக்கொண்டிருந்த பக்கமாக. தலையணை, சிறிதளவு நனைந்து கிடந்தது, கண்ணீரால்!

“சாரதா! கண்ணே இதோ இப்படித் திரும்பு. இதோ பார், பரந்தாமன், மருந்து எடுத்து வந்திருக்கிறார்” என்று வேதவல்லி கூறிக்கொண்டே, சாரதாவை எழுப்பினாள்.

சாரதா, தாயின் குரலைக்கேட்டு திரும்பினாள். கண்களைத் திறந்தாள். பரந்தாமன் மருந்துடன் எதிரில் நிற்பதைக் கண்டாள். அந்த ஒரு விநாடிப் பார்வை சாரதாவின் உள்ளத்தில் புரண்டுகொண்டிருந்த கருத்துக்கள் அத்தனையையும் காட்டிவிட்டது. கைநடுக்கத்துடன் மருந்துக் கோப்பையைப் பிடித்துக்கொண்டு பரந்தாமன் நின்றான். “வேதம்! வேதம்” என்று வெளியே வேதவல்லியின் புருஷர் கூப்பிடும் சத்தம் கேட்டது. வேதவல்லி, “இதே வந்தேன்” என்று கூறிக்கொண்டே வெளியே போனாள். காதல் நோயால் கட்டில்மீது படுத்துள்ள மங்கையும் அவளைக் காதலித்துக் கிடைக்கப் பெறாது வாடிய பரந்தாமன், கையில் மருந்துடனும் இருவருமே அங்கு இருந்தனர்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *