கபோதிபுரத்துக் காதல்
க. நா. அண்ணாதுரை

16

“ஐயோ! புளிய மரத்தைப் பாருடா பொன்னா” என்று அலறினான் பொம்மன்.

“பிணம் தொங்குதேடா பிடிடா ஓட்டம் தலையாரி வீட்டுக்கு” என்று கூறினான் பொன்னன். ‘கரியா, வரதா, காத்தா, முத்து’ எனக் கூக்குரல் கிளம்பிற்று. ‘அமிர்தம், கமலம், ஆச்சி அகிலாண்டம்’ என்ற படைகள் வந்தன. மரத்திலே தொங்கிய பிணம், காற்றிலே ஊசலாடிற்று. அதைக் கண்டவர்களின் குடல் பயத்தால் நடுங்கிற்று. “கூவாதே! கிட்டே போகாதே!” என்றனர் சிலர்.

“அடி ஆறுமாதம் கர்ப்பக்காரி. அகிலாண்டம் இதைப் பார்க்கக் கூடாது” என்று புத்தி புகட்டினாள் ஒரு மாது.

“ஐய்யய்யோ இது என் அக்கா புருஷனாச்சே” என்று அலறினாள் வேறொரு வீரி.

“ஆமாம்! ஆமாம்! கருப்பையாதாண்டோ! அடடா? இது என்னடா அநியாயம்” என்றான் பொம்மன்.

தலையாரி வந்தான். ஊர் கூடிற்று. கருப்பையாவின் மனைவியும் மக்களும், மார்பிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கூடிவிட்டனர்.

கருப்பையா புளியமரத்துக் கிளையில் பிணமாகத் தொங்குவது கேட்ட சாரதாவின் முகம் வெளுத்துவிட்டது.

அவள் புருஷன் அழுதே விட்டான்.

ஊர் முழுவதும் ஒரே அர்க்களம்தான்.

ஏன் கருப்பையா தற்கொலை செய்துகொண்டான் என்பதை ஊர் அறியாது.

வருட முடிவில், வீட்டுக் கணக்குப் பார்ப்பார். அதிலே ஆயிரத்துக்கு மேலே துண்டு விழுந்துவிட்டது. தன் மோசம் வெளிக்கு வரும். தன்பாடு பிறகு நாசந்தான். இந்நிலையில் மாதக் கர்ப்பம் தவறிவிட்டது. மருட்டி உருட்டிக் கடிதம் வந்தது. சாரதா கைக்கு எப்பொருளும் சிக்கவில்லை. இருவருக்கும் சண்டையோ நிற்கவில்லை. சாரதா, சற்று கடுமையாகப் பேசிவிட்டாள். கருப்பையாவின் சித்தம் கலங்கிவிட்டது. “ஒரு முழம் கயிறுக்குப் பஞ்சமா, ஊரில் ஒரு மரமும் எனக்கில்லையா” என சாரதாவிடம் வெறுத்துக் கூறினான். அப்படியே செய்தும்விட்டான். பிணமானான்! இரண்டொரு மாதத்தில் புளியமரத்துப் பிசாசுமாவான்.

சாரதாவின் நிலைதான் என்ன? சிங்காரவேலனின் மிரட்டல் கடிதம் அவளைச் சிதைக்கத் தொடங்கிற்று.

ஊர்க்கோடியில் ஒரு மாந்தோப்பு. அதில் உள்ள கிணறு ஆழமுள்ளது. அதுதான் தனக்குத் துணை என முடிவு செய்தாள் சாரதா. அந்த முடிவு செய்தது முதற்கொண்டு அவள் முகத்தில் வேதனை தாண்டவமாடிற்று. விதி என்னை இப்படியும் வாட்டுமோ என்றெண்ணுவாள் வேதனைக்கோ நான் பெண்ணாய்ப் பிறந்தேனோ என்பாள். கணவன் தன் மனைவியின் கலக்கத்தை அறியான், அவள் உடல் இளைப்பது கண்டு, மருந்து கொடுத்தான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *