கபோதிபுரத்துக் காதல்
க. நா. அண்ணாதுரை

8

நாட்கள் பல கடந்தன. வாரங்கள் உருண்டன. மாதங்களும் சென்றன. சாரதாவின் ஜுரம் போய்விட்டது. ஆனால் மனோ வியாதி நீங்கவில்லை. அவளைக் கணவன் வீட்டுக்கு அழைத்துக் கொள்ளவில்லை. பரந்தாமன் மனம் உடைந்து தொழிலைவிட்டு பரதேசியாகி ஊரூராகச் சுற்றினான். சாரதாவின் தாயார், தனது மருமகப்பிள்ளையைச் சரிப்படுத்த எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

இந்நிலையிலே, சாரதாவைப்பற்றி ஊரிலே, பழித்தும் இழித்தும் பேசத் தொடங்கினார்கள். இதுவும் அவள் காதில் விழுந்தது. அவள் கவலை அதிகமாகி விட்டது.

கடைசியில், காரியஸ்தன் கருப்பையாதான் கைகொடுத்து உதவினான். மெல்ல மெல்ல, மந்திரம் ஜெபிப்பதுபோல ஜெபித்து, “ஏதோ சிறுபிள்ளைத்தனத்தில் துடுக்குத்தனத்தில் நடந்துவிட்டது. இனி ஒன்றும் நடவாது. சாரதாவை அவள் வீட்டிலேயே விட்டு வைத்தால் ஊரார் ஒரு மாதிரியாகப் பேசுகிறார்கள்” என்று மெதுவாக சாரதாவின் புருஷனிடம் கூறினான். சாரதாவின் கணவன் உள்ளபடி வருந்தினான். வருத்தம்போக மருந்து தேடினான். அவனுக்கு அபின் தின்னும் பழக்கம் கற்றுக் கொடுக்கப்பட்டுவிட்டது! மாலையில் அபினைத் தின்றுவிட்டு, மயங்கி விழுந்துவிடுவான். இரவுக் காலத்தில் கவலையற்றுக் கிடக்க, அபினே அவனுக்கு உதவிற்று.

கருப்பையாவின் முயற்சி கொஞ்சம் கொஞ்சமாகப் பலிக்க ஆரம்பித்தது. ஊரில் திருவிழா வந்தது. திருவிழாக் காலத்தில் உறவினர்கள் வருவார்கள். அந்த நேரத்தில் சாரதா வீட்டில் இல்லாவிட்டால், கேலியாகப் பேசுவார்கள் என்று கூறினான். “ஆனால் நீயே போய் அவளை அழைத்து வா” என்று கூறினான். காரியஸ்தன் கருப்பையா, சாரதாவை அழைத்து வந்து வீட்டில் சேர்த்தான். சாரதாவும் மிக அடக்க ஒடுக்கமாகப் பணிவிடைகள் செய்துகொண்டு வந்தாள். புருஷனுக்கு மனைவி செய்ய வேண்டிய முறையில் துளியும் வழுவாது நடந்தாள்.

சாரதா வீடு புகுந்ததும் வீட்டிற்கே ஒரு புது ஜோதி வந்துவிட்டது. சமையல் வேலையிலே ஒரு புது ரகம். வீடு வெகுசுத்தம். தோட்டம் மிக அலங்காரமாக இருந்தது. மாடு கன்றுகள் நன்கு பராமரிக்கப்பட்டன. பண்டங்களைப் பாழாக்குவதோ, வீட்டு வேலையாட்களிடம் வீண் வம்பு வளர்ப்பதோ சாரதாவின் சுபாவத்திலேயே கிடையாது. சாரதாவின் நடவடிக்கையைக் கண்ட அவள் புருஷன், ‘இவ்வளவு நல்ல சுபாவமுள்ள பெண், அன்று ஏன் அவ்விதமான துடுக்குத்தனம் செய்தாள்? எவ்வளவு அடக்கம், எவ்வளவு பணிவு, நான் நின்றால் உட்காரமாட்டேனென்கிறாள். ஒரு குரல் கூப்பிட்டதும், ஓடோடி வருகிறாள். வீட்டுக் காரியமோ, மிக மிக ஒழுங்காகச் செய்கிறாள். இப்படிப்பட்டவள் அந்தப் பாவியின் துடுக்குத்தனத்தால் கெட்டாளே தவிர, இவள் சுபாவத்தில் நல்லவள்தான்’ என்று எண்ணினான்.

ஆனால் சாரதா வெறும் யந்திரமாகத்தான் இருந்தாள். வேலையை ஒழுங்காகச் செய்தாள். ஆனால் பற்றோ, பாசமோ இன்றி வாழ்ந்தாள். வாழ்க்கையில் அவளுக்கு இன்பம் என்பதே தோன்றவில்லை. புருஷனுக்கு அடங்கி நடப்பதுதான் மனைவியின் கடமை என்பதை உணர்ந்து அவ்விதம் நடந்தாளே தவிர, புருஷனிடம் அவளுக்கு அன்பு எழவில்லை. பயம் இருந்தது! மதிப்பு இருந்தது! கடமையில் கவலை இருந்தது! காதல் மட்டும் இல்லை! காதலைத்தான் அந்தக் கள்ளன் பரந்தாமன் கொள்ளைகொண்டு போய்விட்டானே! அவள் தனது இருதயத்தை ஒரு முத்தத்துக்காக அவனுக்குத் தத்தம் செய்துவிட்டாள்.

சிரித்து விளையாடி சிங்காரமாக வாழ்ந்த சாரதா போய்விட்டாள். இந்த சாரதா வேறு பயந்து வாழும் பாவை. இவள் உள்ளத்திலே காதல் இல்லை. எனவே வாழ்க்கையில் ரசம் இல்லை.

இதை இவள் கணவன் உணரவில்லை. எவ்வளவுக்கெவ்வளவு அடக்கமாக இருக்கிறாளோ அவ்வளவு அன்பு என்று எண்ணிக்கொண்டான். உலகில் இதுதானே பெரும்பாலும் பெண்கள் கடமை என்றும் புருஷனுக்கும் பெண்டுக்கும் இருக்க வேண்டிய அன்புமுறை என்றும் கருதப்பட்டு வருகிறது.

“பெண் மகா நல்லவள் உத்தமி. நாலுபேர் எதிரே வரமாட்டாள். நாத்தி மாமி எதிரே சிரிக்கமாட்டாள். சமையற்கட்டைவிட்டு வெளிவரமாட்டாள். புருஷனைக் கண்டால் அடக்கம். உள்ளே போய்விடுவாள். கண்டபடி பேசிக்கொண்டிருக்க மாட்டாள்” என்று பெண்ணின் பெருமையைப் பற்றி பேசப்படுவதுண்டு. அந்தப் பேதைகள், வாழ்க்கையில் ரசமற்ற சக்கைகளாக இருப்பதை உணருவதில்லை. வெறும் இதயந்திரங்களாக, குறிப்பிட்ட வேலைகளை, குறித்தபடி செய்து முடிக்கும், குடும்ப இயந்திரம் அந்தப் பெண்கள், ஆனால் காதல் வாழ்க்கைக்கு அதுவல்ல மார்க்கம்.

செடியில் மலர் சிங்காரமாக இருக்கிறது. அதனைப் பறித்துக் கசக்கினால் கெடும். வண்டு ஆனந்தமாக ரீங்காரம் செய்கிறது! அதனைப் பிடித்துப் பேழையிலிட்டால் கீதம் கிளம்பாது. கிளி கூண்டிலிருக்கும்போது, கொஞ்சுவதாகக் கூறுதல் நமது மயக்கமே தவிர வேறில்லை. கிள்ளை கொஞ்ச வேண்டுமானால் கோவைக் கனியுள்ள தோப்பிலே போய்க் காணவேண்டும். மழலைச் சொல் இன்பத்தை மற்றதில் காணமுடியாது. அதுபோன்ற இயற்கையாக எழும் காதல், தடைப்படுத்தப்படாமல், அதற்குச் சுவர் போடப்படாமல், அது தாண்டவமாடும்போது கண்டால் அதன் பெருமையைக் காண முடியுமே தவிர வேறுவிதத்தில் காண முடியாது.

நமது குடும்பப் பெண்களில் எவ்வளவோ பேர் தங்கள் மனவிகாரத்தை மாற்ற, முகத்தில் மஞ்சள் பூசி குங்குமமிட்டு வாழுகின்றனர். எத்தனை பெண்கள், வாழ்க்கையின் இன்பம் என்றால் சமையற்கட்டில் அதிகாரம் செலுத்துவதும் கட்டியலறையில் விளக்கேற்றுவதும் கலர் புடவை, கல்கத்தா வளையல், மங்களூர் குங்குமம், மயில் கழுத்து ஜாக்கெட் ஆகியவற்றைப் பற்றிப் புருஷனிடம் பேசுவதும் தொட்டிலாட்டுவதும்தான் என்று கருதிக்கொண்டு வாழுகின்றனர். ரசமில்லாத வாழ்க்கை, பாவம்!

அப்படிப்பட்ட வாழ்க்கைதான் சாரதாவுக்கு. புருஷனோ அபின் தின்று ஆனந்தமாக இருந்தான். இந்நிலையில்தான் காரியஸ்தான் கருப்பையாவுக்கு சாரதாவின்மீது கண் பாய்ந்தது. சாரதாவின் தற்கால வாழ்வுக்கு, தானே காரணமென்பது அவனுக்குத் தெரியும். அதுமட்டுமல்ல! சாரதாவைத் தன் வலையில் போடுவதும் சுலபமென எண்ணினான். நாளாவட்டத்தில், பேச்சிலும் நடத்தையிலும் தன் எண்ணத்தை சாரதாவுக்கு உணர்த்த ஆரம்பித்தான்.

தாகமில்லாத நேரத்திலும் ஒரு தம்ளர் தண்ணீர் வேண்டும் என்பான். ஓய்வு கிடைக்கும் நேரத்தில் வலியச் சென்று பேசுவான். விதவிதமான சேலை வகைகளைப் பற்றிப் பேசுவான். சாரதாவின் அழகை அவர்கள் புகழ்ந்தார்கள், இவர்கள் புகழ்ந்தார்கள் என்று கூறுவான். “உன் அழகைக்காண இரு கண்கள் போதாதோ” என்று பாடுவான். சாரதாவைக் கண்டதும் ஒரு புன்சிரிப்பு.

இவனுடைய சேட்டைகள் எதுவும், சாரதாவின் புருஷனுக்குத் தெரியாது. சாரதா உணர்ந்து கொள்வதற்கே, சில நாட்கள் பிடித்தன. உணர்ந்த பிறகு திகைத்தாள். விஷயத்தை வெளியில் சொல்லவோ பயமாக இருந்தது. ‘மகா யோக்கியஸ்திதான் போடி! கலியாணமான உடனே, எவனையோ கட்டி முத்தமிட்டாய். பாவம் அந்தக் காரியஸ்தன் உனக்காக எவ்வளவோ பாடுபட்டு கணவனுடன் சேர்த்து வைத்தான். இப்போது அவன்மீது பழி போடுகிறாய்” என்று தன்னையே தூற்றுவார்கள் என்று சாரதா எண்ணினாள். அதுமட்டுமா! காரியஸ்தனைக் கோபித்துக்கொண்டால், தன் கணவனிடம் ஏதாவது கூறி, அவர் மனத்தைக் கெடுத்துவிடுவான் என்று பயந்தாள். இந்தப் பயத்தை சாரதாவின் தாய் அதிகமாக வளர்த்துவிட்டாள். எனவே, கருப்பையாவின் சேட்டையை முளையிலேயே கிள்ளிவிட சாரதாவால் முடியவில்லை. கருப்பையா பாடு கொண்டாட்டமாகிவிட்டது. சரி! சரியான குட்டி கிடைத்துவிட்டாள் என்று அவன் தீர்மானித்துவிட்டான்.

அவனுடைய வெறி விநாடிக்கு விநாடி வளர்ந்தது.

“சாரதா நம்மைக் கவனிக்க மாட்டாயே, தயவு இல்லையே” என்று கேட்பான், சிரித்துக்கொண்டே.

“என்ன வேண்டும் கருப்பையா சொல்லேன்” என்பாள் சாரதா.

கருப்பையா பெருமூச்சுவிடுவான்.

“கொஞ்சம் தாகந்தீர, உன் கையால் தண்ணீர் கொடம்மா” என்பான்.

சாரதா விசாரத்துடன் நீர் தருவாள்.

“ஏனம்மா முகம் வாட்டமாக இருக்கிறது” என்பான்.

“ஒன்றுமில்லையே” என்று கூறுவாள் சாரதா.

“அம்மா! நீ முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டால், என் மனம் படாதபாடு படுகிறது” என்று தன் அக்கறையைக் காட்டுவான் காரியஸ்தன்.

“உன்னுடைய சிவப்பு மேனிக்கு அந்த நீலப்புடவை கட்டிக்கொண்டு, வெள்ளை ஜாக்கெட் போட்டுக்கொண்டு, ஜவ்வாது பொட்டு வைத்து நிற்கும்போது, அசல் ரவிவர்மா ஓவியம் போல இருக்கிறது என் கண்களுக்கு” என்பான்.

இவ்விதமாக, கருப்பையா, மிக விரைவில் முன்னேறிக்கொண்டே போனான். ஆனால் ஜாடை செய்து, சாரதாவைப் பிடிக்க அதிக நாட்களாகும் என்பதைத் தெரிந்துகொண்டு, வாய் திறந்து கேட்டுவிடுவதே மேல் என எண்ணினான் அதற்கும் ஒரு சமயம் வாய்த்தது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *