
கபோதிபுரத்துக் காதல்
க. நா. அண்ணாதுரை
21
“முடியுமா? முடியாதா?”
“நான் என்ன பதில் கூறுவேன்”
“உன் உள்ளத்தில் தோன்றுவதை, உண்மையைக் கூறு.”
“ஊரார்…”
“ஊரார். பாழாய்ப்போன ஊராருக்குப் பயந்து பயந்துதானே நாம் இக்கதிக்கு வந்தோம். அறுபட்ட தாலி, பொட்டையான கண், மரத்தில் தொங்கிய பிணம் இவை ‘ஊரார் ஊரார்’ என வீண் கிலிகொண்டதால் வந்த விளைவுகள் என்பது ஊராருக்குத் தெரியுமா? உன் காரியத்துக்கு, ஊரார் ஒருவரையும் பாதிக்க முடியாதா? உன் காரியத்தை நீ செய்து கொள். உன் உள்ளம், உனக்கு அதிகாரியா, ஊராரா? ஊராருக்கென்ன சாரதா? ‘இது ஆகுமா அடுக்குமா? தாலி அறுந்த முண்டைக்குக் கண் இழந்த கபோதியா?’ என்றுதான் கூறுவர். ஏளனம் செய்வர். எதிர்ப்பர். நீ ஏழைப் பெண்ணாக இருந்தால், உன்னைச் சமூக பகிஷ்காரம் செய்வர்.
ஆனால், அதனைப் பற்றி நீ ஏன் கவலைகொள்ள வேண்டும். சாரதா, கேள் நான் சொல்வதை! நான் கண்ணிழந்தவன். ஆனாலும், உனக்குப் பார்வை தெரிந்த காலத்தில் நான் கண்ட காட்சிகள் இந்தச் சமுதாயத்தின் சித்திரங்கள், எனக்குப் புகட்டும் பாடம் இதுதான்; சமூகம், திடமுடன் யார் என்பதைச் செய்யினும் பொறுத்துக் கொள்ளும், தாங்கி, பதுங்கினால் அவர்கள்மீது பாய்ந்து அவர்களைப் பதைக்க வைக்கும். சாரதா, கழுதையின் பின்புறம் நின்றால் உதைக்கும், முன்னால் செல் ஓடிவிடும். பழக்கவழக்கமெனும் கொடுமையை, தீவிரமாக எதிர்த்தால்தான் முடியும்” எனப் பரந்தாமன் சாரதாவிடம் வாதாடினான், தன்னை மறுமணம் செய்து கொள்ளும்படி.
சாரதாவுக்கு, மறுமணம் – தான் தேடிய பரந்தாமனை நாயகனாகப் பெறுவது என்ற எண்ணமே எதிர்கால இன்பச் சித்திரங்கள் அடுக்கடுக்காகத் தோன்றின. அவனுடைய அன்பு தன்னைச் சூழ்ந்து தூக்கிவாரி இன்ப உலகில் தன்னை இறக்குவதைக் கண்டாள். அவனுடைய கருவிழந்த கண்களில் காதல் ஒளி வெளிவரக் கண்டாள். சிங்காரத் தோட்டத்தில் அவன் கைப்பிடித்து நடக்க, காலடிச் சத்தம் கேட்டு மரக்கிளைகளில் அமர்ந்திருந்த கிளி, கொஞ்சுமொழி புகன்று, பறக்கக் கண்டாள். அவள் ஏதேதோ கூறவும் அவை, எண்ணத்தில் இன்பவாடையைக் கிளப்பவும் கண்டான். அவன் அணைப்பு, அவன் முத்தம், அவன் கொஞ்சுதல், அவன் கூடி வாழ்தல் அவனுடன் குடும்பம் நடத்துதல் இவை யாவும் அவள் மனக்கண்முன்பு தோன்றின.
“சாரதா, இதோ உன் உலகம், நீ தேடிக்கொண்டிருந்த தேன் ஓடும் தேசம். நீ நடந்து சென்று வழி தவறி, சேர முடியாது தத்தளித்தாயே, அதே நாடு. காதல் வாழ்க்கை, பரந்தாமனுடன் இணைந்து வாழும் இன்பபுரி, போ, அவ்வழி. வாழு, அந்த நாட்டில், ஒருமுறைதான் தவறிவிட்டாய். அதற்குக் காரணம் என் தந்தை. இம்முறை தவறவிடாதே. முன்பு நீ பேதைப் பெண். உன்னை அடக்க மடக்க பெற்றோரால் முடிந்தது. இப்போது நீ உலகைக் கண்டவள். இம்முறை உணர்ச்சியை அடக்காதே. நட இன்பபுரிக்கு. சம்மதங் கொடு பரந்தாமனுக்கு. அவன் உனக்குப் புத்துலக இன்பத்தை ஊட்டுவான். அவனுக்கு நீ தேவை. உனக்கு அவன். நீங்கள் இருவரும் தனி உலகில் வாழுங்கள். சாதாரண உலகைப் பற்றி கவலை ஏன்! பழிக்கும் சுற்றத்தார் இழித்துப் பேசும் பழைய பித்தர்கள், கேலி செய்யும் குண்டர்கள், கேவலமாக மதிக்கும் மற்றையோர், என்ன சொல்வாரோ என்பதைப் பற்றி நீ கவலைப்படாதே.
அவன் கபோதிதான்! ஆனால் அவனுக்குத்தான் தெரியும் உன்னை இன்பபுரிக்கு அழைத்துச் செல்ல. பிடித்துக் கொள் அவன் கரத்தை. அவன் குருடன்! எனவே உலகின் காட்சிகள் எதுவும் அவனுக்கு இனி தெரியாது. ஆனால் உன்னை மட்டும் அவன் அறிவான். பிறவற்றைப் பார்க்கவொட்டாதபடி தடுக்கவே பார்வை அவனை விட்டுச் சென்றும்விட்டது” – என சாரதாவுக்கு விநாடிக்கு விநாடி காணும் காட்சிகள் யாவும் உணர்த்துவித்தன.
விதவை சாரதாவுக்கும் விதியிழந்த பரந்தாமனுக்கும் மணம் நடந்தேறியது.
வீதி மூலைகளில் வீணர்கள் வம்பு பேசினர். சமையற்கட்டுகளில் பெண்டுகள் சகலமும் தெரிந்தவர்கள்போலக் கேலி செய்தனர். வைதீகர்கள் வந்தது விபரீதம் எனக் கைகளைப் பிசைந்தனர். உற்றார் உறுமினர். ஆனால், கபோதிபுரக் காதலை, இனி யாராலும் தடுக்கமுடியாது. அவர்கள் இன்பபுரி சென்று இன்பத்துடன் வாழ்ந்து வரலாயினர்.
★ ★ ★



