
கபோதிபுரத்துக் காதல்
க. நா. அண்ணாதுரை
13
இரவு கருப்பையா, சிங்காரவேலன் அறைக்குச் சென்றான், மடியில் கூரான ஈட்டியுடன். சாரதாவின் மானத்தையும் தன் மரியாதையையும் வாழ்வையும் அழிக்கக்கூடிய அந்த வேலனின் உயிரைப் போக்கிவிடுவது என்ற முடிவுடன்.
ஒரு கொலை செய்வதற்கு வேண்டிய அளவு உறுதி அவன் முகஜாடையில் காணப்பட்டது.
வேலன், “வா கருப்பையா, சொன்னபடி வந்துவிட்டாயே” எனத் துளியும் தடுமாற்றமின்றிப் பேசினான்.
கருப்பையாவின் கரம், மடியில் சொருகி வைக்கப்பட்டிருந்த ஈட்டி மீது சென்றது.
வேலனின் சூரிய பார்வை, ஏதோ ஆபத்து இருக்கிறது என்பதை உணர்த்திற்று. ஆனால், அவன் துளியும் அசையவில்லை. படுக்கைமீது உட்கார்ந்தபடியே ஒரு முடிவுக்கு வந்தான்.
சாமர்த்தியமாகக் கருப்பையாவை ஏமாற்ற வேண்டும்.
“ஓ! கோகிலா, வாயேன் உள்ளே” என்று கூறினான். கோகிலம் வருவதைப் போல பாசாங்கு செய்துகொண்டே.
முரட்டுக் கருப்பையா சரெலெனத் திரும்பினான். கதவுப்பக்கம். வேலன் புலிபோல அவன்மீது பாய்ந்து மடியில் இருந்த ஈட்டியைப் பிடுங்கிக்கொண்டான்.
சட்டை கிழிந்துவிட்டது. கருப்பையாவுக்கு. தான் முட்டாள்தனமாக நடந்துகொண்டதை எண்ணினான்.
வேலன் இளித்தான். “கருப்பையா நான் சொல்வதைக் கேள். என்னிடம் உன் முரட்டுத்தனம் பலிக்காது. மூடு கதவை. இப்படி உட்கார்” என்று கட்டளையிட்டான்.
பெட்டியிலிட்ட பாம்பென அடங்கிய கருப்பையா மிகப் பரிதாபத்துடன், “ஐயா என்னைப் பற்றிக்கூட கவலையில்லை. அந்தப் பெண்ணின் மானம் அதைக் காப்பாற்றும். அவசரப்பட்டு எதுவும் செய்யவேண்டாம்” என்று கெஞ்சினான்.
“கருப்பையா, நான் அவசரப்படுகிற வழக்கமே கிடையாது. தோட்டத்தில் உங்கள் சல்லாபத்தைக் காண எவ்வளவு நேரம் பொறுமையாக இருந்தேன் தெரியுமா, இன்றுந்தான் என்ன, ஈட்டிமுனைக்கு எதிரில்கூட நான் அவசரப்படவில்லை” என்றான் வேலன்.
“அந்தப் போட்டோ, அதனைக் கொடுத்துவிடு. உனக்குக் கோடி புண்ணியம் உண்டு. உன் பிள்ளை குட்டிகளுக்கும் புண்ணியம். ஒரு குடும்பத்தைக் கெடுக்காதே” என்று கருப்பையா வேண்டினான். “உளராதே கருப்பையா குடும்பத்தை நானா கெடுத்தேன்” என்று கோபித்தான் வேலன்.
கருப்பையா, வேலன் காலில் விழுந்தான். வேலன், “சரி சரி சர்வமங்களம் உண்டாகட்டும். எழுந்திரு. நான் சொல்வதைக் கேள். முடியாது என்று சொல்லக் கூடாது. நாளை காலைக்குள் எனக்கு ஆயிரம் ரூபாய் வேண்டும். கொடுத்தால் நாங்கள் போய் விடுகிறோம். இல்லையேல் நீயும் சாரதாவும் போகவேண்டிய இடத்துக்குப் போகத்தான் வேண்டும் என்றான் வேலன்.
“ஆயிரம் ரூபாயா… என்னிடம் இருப்பதே கொஞ்சந்தானே” என்றான் கருப்பையா.
“கிடைத்தற்கரிய செல்வத்தைப் பெற்ற நீயா ஓர் ஆயிரம் ரூபாய்க்கு அஞ்சுவது?” என்றான் வேலன்.
‘சரி’ என ஒப்புக்கொண்டான் கருப்பையா.
“நான் வெளியே போவதற்கு, படத்தை நான் வெளியிடாதிருப்பதற்கு, மாதா மாதம் 200 ரூபாய், தவறாமல் என் சென்னை விலாசத்துக்கு அனுப்பிக்கொண்டு வரவேண்டும். நான் கண்டிப்பான பேர்வழி. ஒரு முறை பணம் வருவது தவறினாலும் படம் வெளியாகும். படம் வெளிவந்தால் என்ன ஆகும் என்பது உனக்கே தெரியும். சாரதா கர்ப்பவதியல்லவா! அவள் பிள்ளை தெருவில் அலைய வேண்டித்தான் வரும்” என்று வேலன் “கண்டிஷன்கள்” போட்டான்.
“ஐயா உனக்குக் கருணை இல்லையா?” என்று கெஞ்சினான் கருப்பையா.
“கருணை இருந்தது சில வருஷங்களுக்கு முன்பு. இப்போது கருணை இல்லை. இப்போது உலகமும் உல்லாசமும் எதிரே இருக்கிறது” என்றான் அந்த உல்லாசக் கள்ளன்.
வேறு வழியின்றிக் கருப்பையா ஒப்புக்கொண்டான்.
மறுதினம் ஆயிரம் ரூபாய், (பாங்கியில் அவன் போட்டு வைத்திருந்த பணம் அதுதான்) கொடுத்தான்.
உல்லாசக் கள்ளர்கள், வீட்டில் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு, ஊருக்குப் பிரயாணமாயினர்.
வேலனோ, கோகிலமோ, பேச்சிலோ, நடவடிக்கையிலோ, சாரதா – கருப்பையா மர்மக்காதலைப் பற்றிக் கண்டுகொண்டதாக, சாரதாவின் புருடனுக்குக் காட்டிக் கொள்ளவேயில்லை.
“கண்ணே சாரதா, போய் வரட்டுமா, ஆண் குழந்தை பிறந்தால் பிரபாகரன் என்று பெயரிடு, பெண் பிறந்தா, கவனமிருக்குமா” என்று கொஞ்சினாள் கோகிலம் சாரதாவிடம்.
சாரதாவின் புருடன், விருந்தாளிகளை மிக மரியாதையுடன் அனுப்பி வைத்தார். அபின் உலகில் அலையும் அவருக்கு மர்ம சம்பவங்கள் என்ன தெரியும் பாவம்!



