கபோதிபுரத்துக் காதல்
க. நா. அண்ணாதுரை

4

அந்த அறை ஒரு தனி உலகம்!

அங்கு இன்பத்திற்குத் தடை இல்லை! கட்டு இல்லை! காவல் இல்லை! பெண்டுகொண்டேன் என அதிகாரம் செலுத்த மாரியப்பபிள்ளை இல்லை. மகளே, என்னை வேலை செய்கிறாய் என்று மிரட்ட வேதவல்லி இல்லை. கனைத்து மிரட்ட சாரதாவின் தகப்பன் இல்லை.

காவலற்ற, கட்டற்ற உலகம்! காதலர் இருவர் மட்டுமே இருந்த உலகம்.

“மருந்தைக் குடி, சாரதா!”என்றான் பரந்தாமன்.

சாரதா வாயைக் கொஞ்சமாகத் திறந்தாள். மருந்து நெடியினால் முகத்தைச் சுளித்தாள். கட்டில் ஓரத்தில் உட்கார்ந்தான் பரந்தாமன். “சாரதா! திற வாயை. இதோ மருந்து, குடித்துவிடு” என்று மருந்தை ஊற்றிவிட்டு, வாயைத் துடைத்தான். அந்தத் ‘தீண்டுதல்’ சாரதா அதுவரை கண்டறியாத இன்பத்தை அவளுக்குத் தந்தது. முகத்திலே ஒருவித ஜொலிப்பு. கண்டுகொண்டான் பரந்தாமன். குனிந்து அவளுடைய கொஞ்சும் உதடுகளில் ஒரு முத்தம் கொடுத்தான்.

“ஆஹா! என்ன வேலை செய்தாயடி கள்ளி! என்ன வேலையடா செய்தாய் மடையா” என்று கர்ஜித்தார் மாரியப்பபிள்ளை வாயிற்படியில் நின்றுகொண்டு.

‘மடையா!’ என்ற சொல் காதில் விழுந்த உடனே, பரந்தாமன், காதல் உலகை விட்டுச் சரேலெனக் கிளம்பி, சாதாரண உலகுக்கு வந்தான். மணமான சாரதாவை, கணவன் காணும்படி, முத்தமிட்டதும் பேரன் செய்த செயலைப் பாட்டன் கண்டதும் அவள் நினைவிற்கு வந்தது. அவனோ, சாரதாவோ, மேற்கொண்டு எண்ணவோ, எழவோ நேரமில்லை! “மடையா!” என்று கர்ஜித்துக்கொண்டே மாரியப்பபிள்ளை, எருது கோபத்தில் பாய்வதுபோல, பரந்தாமனின் மீது பாய்ந்தார். அவன் கழுத்தைப் பிடித்தார். அவன் கண்கள் சிவந்தன. மீசை துடித்தது. கைகால்கள் வெடவெடத்தன. மாரியப்பபிள்ளையின் பிடியினால் பரந்தாமனின் கண்கள் பிதுங்கி வெளிவந்துவிடுவது போலாகிவிட்டது. பரபரவெனப் பரந்தாமனை இழுத்து எச்சரித்தார். மாரியப்பபிள்ளையின் கரத்துக்குப் பரந்தாமன் எம்மாத்திரம்! அடியறுத்த மரம்போல, சுருண்டு சுவரில் மோதிக்கொண்டான் பரந்தாமன், குபீரென மண்டையிலிருந்து இரத்தம் பெருகிற்று. “ஐயோ!” என்று ஈனக்குரலில் அலறினாள் சாரதா! “என்ன! என்ன!” என்று பரபரப்புடன் கேட்டுக்கொண்டே வேதவல்லியும் அவள் புருஷனும் கருப்பையாவும் வந்தனர்.

பரந்தாமன் இரத்தம் ஒழுக நிற்பதையும் சாரதா, கண்ணீர் பெருக நடுங்குவதையும் கோபத்தின் உருவமென மாரியப்பபிள்ளை உருமிக்கொண்டிருப்பதையும் கண்டவுடன் வந்தவர்களுக்கு விஷயம் ஒருவாறு விளங்கிற்று.

“நடடா! நட! உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் பாதகா! நட. இங்கு நிற்காதே” என்று மாரியப்பபிள்ளை கூறிக்கொண்டே பரந்தாமனின் தலைமயிரைப் பிடித்து இழுத்து அறையைவிட்டு வெளியேகொண்டு வந்தார்.

“எஜமானருக்குத்தான் சொல்கிறேன். இவ்வளவு உரக்கக் கூவாதீர்கள். அண்டை அயலார் காதில் கேட்கப் போகிறது” என்று கருப்பையா கூறினான்.

“கேட்பதென்ன, செய்வதென்ன, என் போறாத வேளை. ஒரு வெட்கங்கெட்ட சிறுக்கியைத் தேடிப்பிடித்துக் கட்டிக்கொண்டேன். என் சோறு தின்றுவிட்டு சோரம் செய்கிறாள் இந்தக் கள்ளி. இன்று இருவரும் கொலை! ஆமாம்! விடமாட்டேன்! எடுத்துவா, அரிவாளை இரண்டு துண்டாக இந்தப் பயலையும் துண்டுத் துண்டாக அந்தக் கள்ளியையும் வெட்டிப் போடுகிறேன். விடு, கருப்பையா கையைவிடு. டே கிழ ராஸ்கல்! நல்ல பெண்டுடா! என் தலைக்குத் தீம்பாகக்கொண்டு வந்தாய். நிற்காதே என் எதிரே யாரும் நிற்க வேண்டாம் யார் நின்றாலும் உதை, குத்து, வெட்டு, கொலை ஆமாம்! விடமாட்டேன்” என்று மாரியப்பபிள்ளை இடி முழக்கம் போலக் கத்தினார். அவர் ஆயுளில், அதைப்போல, அவர் கத்தியதில்லை.

காரியஸ்தன் கருப்பையா விடவில்லை அவர் கரங்களை. “எஜமான்! எஜமான் சற்று என் பேச்சைக் கேளுங்கள். ஊர், நாடு தெரிந்தால் நமக்குத்தானே இழிவு. டே, பரந்தாமா போய்விடுடா வெளியே. வேதம்மா நீங்களும் போங்கோ” என்று மிகச் சாமர்த்தியமாகக் கூறிக்கொண்டே துடித்துக்கொண்டு கொலைக்கும் தயாராக நின்றுகொண்டிருந்த மாரியப்பபிள்ளையை மெதுவாகத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

மாரியப்பபிள்ளை போன உடனே வேதத்தின் புருஷர், பரந்தாமனை நையப் புடைத்து, “பாவி! ஒரு குடும்பத்தின் வாயிலே மண் போட்டாயே!” என்று அழுதார்.

“புறப்படடி! போக்கிரிச் சிரிக்கி, போதும் உன்னாலே எனக்கு வந்த பவிசு” என்று சாரதாவைக் கட்டிலிலிருந்து பிடித்து இழுத்து மூவருமாகத் தமது வீடு போய்ச் சேர்ந்தனர்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *