கபோதிபுரத்துக் காதல்
க. நா. அண்ணாதுரை

9

முதலாளி பக்கத்து ஊருக்குப் போனார். ஒரு பாகப் பிரிவினை மத்தியஸ்த்துக்காக, வர இரண்டு நாட்கள் பிடிக்கும்; அந்த இரண்டு நாட்களில் காரியத்தை எப்படியாவது முடித்துவிடத் தீர்மானித்துவிட்டான், கருப்பையா.

மாலை நேரம். தோட்டத்திலே சாரதா பூப்பறித்துக்கொண்டிருந்த சமயத்தில் கருப்பையா அங்குப் போனான். சாரதாவுடன் பேச ஆரம்பித்தான்.

சற்றுத் தைரியமாகவே, “சாரதா நீ நல்ல சாமர்த்தியசாலி.”

“நானா! உம்! என்ன சாமர்த்தியம் கருப்பையா என் சாமர்த்தியம் தெரியாதா, எட்டு மாதம் சீந்துவாரற்றுக் கிடந்தவள் தானே.”

“சீந்துவாரற்றா! அப்படிச் சொல்லாதே, உன் அழகைக் கண்டால் அண்ட சராசரத்தில் யார்தான் சொக்கிவிட மாட்டார்கள்.”

“போ; கருப்பையா, உனக்கு எப்போதும் கேலிதான்”

“கேலியா இது? நீ கண்ணாடி எடுத்து உன் முகத்தைக் கண்டதில்லையா?”

“சரி! சரி! நாடகம்போல் நடக்கிறதே”

“ஆமாம்! நாடகந்தான். காதல் நாடகம்.”

“இது என்ன விபரீதப் பேச்சு கருப்பையா, யார் காதிலாவது விழப்போகிறது.”

“நான் சற்று முன்ஜாக்கிரதை உள்ளவன். தோட்டக்கார முனியனை, நாலு மணிக்கே அனுப்பிவிட்டேன் கடைக்கு.”

“நீ ஏதோ தப்பு எண்ணம் கொண்டிருக்கிறாய், கருப்பையா தயவுசெய்து அதனை விட்டுவிடு. நான் அப்படிப்பட்டவளல்ல”

“சாரதா! நான் இனி மறைக்கப் போவதில்லை உன்னை எப்படியாவது கூடவேண்டுமென நான் தவங்கிடந்து வந்தேன். இன்றுதான் தக்க சமயம்.” என்று கூறிக்கொண்டே சாரதாவின் கரத்தைப் பிடித்துக் கொண்டான்.

சாரதா திமிறினாள். பூக்கூடை கீழே விழுந்தது. மலர்கள் மண்மீது சிதறின. சாரதாவின் கண்களிலே நீர் பெருகிற்று, கருப்பையாவின் கரங்கள் அவள் உடலைக் கட்டிப் பிடித்துக்கொண்டன. அவனுடைய உதடுகள், அவள் கன்னத்தில் பதிந்தன. அந்த முத்தங்களின் ஓசை கேட்டு, பறவைகள் பறந்தன. சாரதா, கருப்பையாவிடம் சிக்கி விட்டாள்.

“சாரதா, ஜென்மம் இப்போதுதான் சாபல்யமாயிற்று. அடி பைத்தியமே; ஏன் இவ்வளவு நடுங்குகிறாய், பயப்படாதே. இந்தக் கருப்பையாவைச் சாமான்யமாக எண்ணாதே. நான், இந்த இன்பத்துக்காக எவ்வளவு பாடுபட்டேன். எத்தனை நாள் காத்துக்கொண்டிருந்தேன் தெரியுமா? தேனே நான் இதற்காகத்தானே உன்னை தாய் வீட்டிலிருந்து இங்கு வரும்படிச் செய்தேன்” என்று களிப்பாய், கருப்பையா கூறினான். சாரதாவின் ஆடையைப்பற்றி இழுத்தான். கன்னங்களைக் கிள்ளினான். “ஒரே ஒரு முத்தம் இன்னும் ஒன்று– ஆம்? இப்படி, பலே பேஷ்” என்று கொஞ்சினான்.

சாரதா மயக்கத்தில் ஈடுபட்டவள்போல, அவன் இஷ்டப்படி நடந்தாள். அன்று தோட்டத்தில் சாரதா தனது மூன்றாவது பிறப்பு பெற்றாள்.

அவளுடைய கன்னிப்பருவம் காதலைக் கண்டது! அது கருவிலேயே மாண்டது, அவளுடைய இரண்டாம் பிறப்பு கணவனுக்கு மனைவியாக வாழ்க்கையில் ரசமின்றி இயந்திரம் போல இருந்தது. அன்று தோட்டத்தில் சாகசக்கார கருப்பையாவிடம் சிக்கியதால் அவள் மூன்றாம் பிறப்பு வெளிக்குக் கற்புக்கரசியாகவும் மறைவில் பிறருக்குப் பெண்டாகவும் இருக்கும் வாழ்வைப் பெற்றாள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *