கபோதிபுரத்துக் காதல்
க. நா. அண்ணாதுரை

18

இரவு பத்து மணிக்கு, ஓர் உண்டை அபினெடுத்தாள் சாரதா, பாலில் கலக்கினாள். நேரே படுக்கையறை சென்றாள். பாதி மயக்கத்தில் படுத்திருந்த அவள் கணவன் “சாரதா, எனக்கேண்டி கண்ணே இவ்வளவு பால்! நீ கொஞ்சம் சாப்பிட்டால்தான்” என்று கூறினான், கெஞ்சினான். “வேணாமுங்கோ, சொல்றதைக் கேளுங்கோ, நான் இப்போதுதான், பெரிய டம்ளர் நிறைய பால் சாப்பிட்டேன்” என்று சாக்குக் கூறினாள் சாரதா.

அந்த நேரத்திலே அவனுக்கு ஏதோ குஷி! விளையாட வேண்டுமென்று தோன்றிவிட்டது.

“நீ குடித்தால்தான் நான் குடிப்பேன்” என்று கூறிவிட்டான்.

“பால் ஆறிப்போய் விடுகிறதே!”

“ஆறட்டுமே யாருக்கென்ன?”

“விளையாட இதுதானா சமயம்”

“சரசத்துக்குச் சமயம் வேண்டுமோ”

“சின்ன பிள்ளைபோல விளையாட வேண்டாம்; எனக்கு தூக்கம் வருகிறது. நீங்கள் பால் குடித்துவிட்டால் படுத்துத் தூங்கலாம்”

“தூங்க வேண்டுமா! ஏன் நான் ஆராரோ ஆரிரரோ பாடட்டுமா தொட்டிலிலே படுக்க வைக்கட்டுமா” என்று கூறிக்கொண்டே சாரதாவைத் தூக்க ஆரம்பித்துவிட்டான், கணவன். சாரதாவுக்குத் தன்னையும் அறியாமல் ஒரு சிரிப்பு வந்துவிட்டது.

“ஐயய்யோ! இதேது இவ்வளவு சரசம். என்ன சங்கதி! பால்யம் திரும்பிவிட்டதோ” என்று கேட்டுக்கொண்டே, “இதோ பாருங்கள் இப்படி, என்மீது உமக்கு ஆசைதானே” என்றாள்.

தலையை வேகமாகக் கிழவன் அசைத்தான்.

“சத்தியமாக, ஆசைதானே” என்று கேட்டாள் சாரதா.

“சாமுண்டி சாட்சியாக நிஜம்” என்றான் கிழவன்.

“அப்படியானால் நான் சொல்வதைக் கேட்க வேண்டும். பாலைக் குடித்துவிட்டுப் பிறகு பேசுங்கள்” என்றாள் சாரதா.

“ஹுஹும் நான் மாட்டேன். நீ கொஞ்சமாவது குடிக்க வேண்டும்” என்றான் கிழவன். சொல்லிக்கொண்டே பால் செம்பை, சாரதாவின் வாயில் வைத்து அழுத்திக்கொண்டே விளையாடினான். கொஞ்சம் பால் உள்ளேயும் கொஞ்சம் அவள் மேலாடையிலும் விழுந்தது.

“இப்போ சரி! உன் உதடுபட்ட உடனே, இந்தப் பால் அமிர்தமாகிவிட்டது. இனி ஒரு சொட்டுப் பால்கூட விடமாட்டேன்” என்று கிழவன் கொஞ்சுமொழி கூறிக்கொண்டே பாலைக் குடித்தான். பக்கத்தில் படுத்த சாரதாவை நோக்கிச் சிரித்தான்.

“ஆலமர முறங்கக் குட்டி அடிமரத்தில் வண்டுறங்க, உன் மடிமேலே நானுறங்க, குட்டி என்ன வரம் பெற்றேனோடி” என்று பாடத் தொடங்கினான். சாரதா, அவள் பாசாங்கு செய்வதைக் கண்டுகொண்டான். அவளுடைய காதில் சிறிய துரும்பை நுழைத்தான். அவள் சிரித்துக்கொண்டே எழுந்து விட்டாள்!

“என்னை ஏமாற்ற முடியுமோடி குட்டி, என்னிடம் சாயுமோடி” என்று பாடினான். இரண்டொரு விநாடியில் குறட்டை விட்டான் பாசாங்கு அல்ல! நிஜம். பாலில் கலந்திருந்த அபின் வேலை செய்யத் தொடங்கிவிட்டது. சாரதா, கணவனைப் புரட்டிப் பார்த்தாள், எழுந்திருக்கவில்லை. பிறகு, அவள் படுக்கையைவிட்டு எழுந்து, பெரிய பச்சை சால்வையொன்றை எடுத்துப் போர்த்திக்கொண்டு புறக்கடை கதவைத் திறந்துகொண்டு, கழனிப் பக்கம் நடந்தாள். இருட்டு. தவளையின் கூச்சல் காதைத் துளைத்தது. சேறும் நீரும் கலந்த வழி. தொலைதூரத்தில் நரியின் ஊளை. ஆங்காங்கு, வீட்டுப் புறக்கடைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகள் அசைவதால் உண்டாகும் மணி ஓசை, மர உச்சியில் தங்கி ஆந்தை கூச்சலிட்டது. சாரதா பயத்தையும் மறந்து நடந்தாள். கணவனின் பிடிவாதத்தால் பாலைக் கொஞ்சம் பருகியதால், அபின் அவளுக்கு மயக்கத்தைத் தந்தது. அதையும் அவள் உணர்ந்தாள். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நடந்தாள்? எங்கே? தன் தாய் வீட்டுக்கு. ஏனெனில் பரந்தாமன் பிழைப்பதே கஷ்டம், அவன் உயிர் போகும் முன்னம் சாரதா வந்து பார்த்துவிட்டுப் போனால்தான் போகிற பிராணனாவது சற்று நிம்மதியாகப் போகும் என சாரதாவுக்கு அவள் தாய் சேதி விடுத்திருந்தாள். எனவேதான் சாரதா பதைத்து, கணவனுக்கு அபின் கலந்த பால் கொடுத்துவிட்டுப் பறந்தாள், தன் காதலனைக் காண.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *