
கபோதிபுரத்துக் காதல்
க. நா. அண்ணாதுரை
11
அவன் செவியில், “காயமே இது பொய்யடா நல்ல காற்றடைத்த பையடா” என, கருணானந்த யோகீசுரர் செய்துவந்த கானமே புகுந்தது. பரந்தாமன் ஒரு பாலசந்நியாசியாகக் காலந்தள்ளி வந்தான். காதலைப் பெறமுடியவில்லை. கருத்திலிருந்து சாரதாவை அகற்ற முடியவில்லை. அன்று மருண்டு, ஊரை விட்டோடி, பாழும் சத்திரத்தில் படுத்துப் புரண்டு, கள்ளரைக் கண்டு கலங்கி, கடுக நடந்து தோப்புக்குள் புகுந்து துயின்ற நாள் தொட்டு பரந்தாமன் ஊர் ஊராக அலைந்தான்! காவிகட்டியவர்களை எல்லாம் அடுத்தான்! “சாந்தி வேண்டும் சுவாமிகளே! உலக மாயையினின்றும் நான் விடுபட அருளும் என் ஐயனே! உண்மை நெறி எதுவெனக் கூறும் யோகியே!” என்று கேட்டான் பலரிடம்.
கருணானந்த யோகீசுரர், தமது சீடராக இருப்பின், “சின்னாட்களில் கைலை வாழ் ஐயனின் காட்சியும் காட்டுவோம்” எனக் கூறினார். பரந்தாமன், சிகை வளர்த்தான். சிவந்த ஆடை அணிந்தான். திருவோட்டைக் கையிலெடுத்தான்.
“சங்கர சங்கர சம்போ, சிவ சங்கர, சங்கர சம்போ” என்று கீதம் பாடியபடி கிராமங்கிராமமாக யோகீசுரருடன் சென்றான்.
“சாரதா! ஒரு விசேஷம்!”
“என்ன விசேஷம்?”
“நம் வீட்டுக்கு விருந்தாளிகள் வருகின்றனர் நாளைக்கு!”
“யார் வருகிறார்கள்!”
“சென்னையிலிருந்து எனது உறவினர் ஒருவர் வருகிறார். சிங்காரவேலர் என்பது அவர் பெயர். அவருடன் கோகிலம் என்ற அவர் தங்கை வருகிறாள். அவர்கள் மகாநாசுக்கான பேர் வழிகள். பெரிய ஜமீன் குடும்பம்!”
“வரட்டுமே, எனக்கும் பொழுது போக்காக இருக்கும்”
“கோகிலத்தை நீ கண்டால் உடனே உன் சிநேகிதியாக்கிக் கொள்வாய். நன்றாகப் படித்தவள் கோகிலம்.”
“படித்தவர்களா! சரி சரி! எனக்கு அல்லியரசானிமாலை தவிர வேறு என்ன தெரியும்? என்னைப் பார்த்ததும் அந்தம்மாள், நான் ஒரு பட்டிக்காட்டுப் பெண் என்று கூறிவிடுவார்கள்.”
“கட்டிக் கரும்பே நீயா, பட்டிக்காட்டுப் பெண்–” என்று கூறிக்கொண்டே சாரதாவின் ரம்மியமான கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினான் கணவன்.
“இதுதானே உங்கள் வழக்கம்! இது என்ன தவடையா ரப்பர் பந்தா, இப்படிப் பிடித்துக் கிள்ளுவதற்கு. வரட்டும் அம்மா, சொல்லுகிறேன், நீங்கள் செய்த வேலையை….” என்று கொஞ்சினாள் சாரதா.
“அடடா! பாபம் கன்னம் சிவந்துவிட்டதே! சாரதா, கிள்ளினதற்கே இப்படிச் சிவந்துவிட்டதே…”
“போதும் நிறுத்துங்கள் விளையாட்டை. நான் பூப்பறிக்கப்போக வேண்டும்” என்று கூறிவிட்டு, சாரதா, தன் கணவன் தன்னிடம் வசியப்பட்டு இருப்பதை எண்ணிப் பெருமை அடைந்தபடியே தோட்டத்துக்குச் சென்றாள். அங்குக் கருப்பையா காத்துக்கொண்டிருந்தான்.
“ஏது ரொம்ப குஷிதான் போலிருக்கு!” என்று கூறிக்கொண்டே, சாரதாவின் கரங்களைப் பிடித்து இழுத்தான்.
“இது என்ன வம்பு! விடு கருப்பையா, அவர் வந்துவிட்டால் என்ன செய்வது?” என்று கூறிக் கையை இழுத்துக்கொண்டாள், அந்த வேகத்தில் வளையல் உடைந்து கீறிக்கொண்டதால், பொன்னிற மேனியில் செந்நிற இரத்தத் துளியும் வந்தது.
“பார்! நீ செய்த வேலையை” என்று கரத்தைக் காட்டினாள்.
“சூ! மந்திரக்காளி! ஓடிப்போ!” என்று கூறிக்கொண்டே, கருப்பையா, அந்தக் கரத்திற்கு முத்தமிட்டான். அவன் அறிந்த மந்திரம் அது!
“ஒரு சங்கதி கருப்பையா! நாளைக்கு விருந்தாளிகள் வருகிறார்கள். நாம் சற்று ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். யாரோ ஜமீன்தாராம்; அவர் தங்கையாம். இருவரும் வருகிறார்களாம்” என்று எச்சரித்தாள்.
அன்றிரவு சாரதாவுக்கு நாளைக்கு எந்தக் கலர் புடவை உடுத்திக்கொண்டால் அழகாக இருக்கும், கார்டு கலர்ச் சேலையா, ரிப்பர் பார்டர் சேலையா, மயில் கழுத்து கலரா, மாதுளம் பழநிறச் சேலையா. ஜவ்வாது இருக்கிறதா, தீர்ந்து விட்டதா என்ற யோசனைதான்.
மாதுளம்பழ நிறச்சேலை கட்டிக்கொண்டால்தான் நன்றாக இருக்கும் என முடிவு செய்தாள். உடனே முகம் மாறிற்று. ஆம்! முதன்முதலில் பரந்தாமனைக் காணும்போது மாதுளம்பழ நிறச்சேலைதான் கட்டிக்கொண்டிருந்தாள் சாரதா!
பழைய நினைவுகள், தோணி ஓட்டையில் நீர் புகுவதுபோல விரைவில் புகுந்தன. தோணி கடலில் அமிழ்வதைப்போல அவள் துக்கத்தில் ஆழ்ந்தாள். தலையணையில் நீர் கண்கள் குளமாயின! அவளது வாசனை திரவியப் பூச்சுவேலை சேறாகிவிட்டது. சாரதா தனது உண்மைக் காதலை நினைத்து உள்ளம் கசிந்தாள். உறக்கமற்றாள்! மறுநாள் காலை முகவாட்டத்துடன் விருந்தாளிகளை வரவேற்றாள்!
சிங்காரவேலுக்கு, அந்த முகவாட்டமே ஒரு புது மோஸ்தர் அழகாகத் தெரிந்தது. கோகிலம், கத்தரிப் பூக்கலர்ச் சேலைதான் சாரதாவுக்கு ஏற்றது என்று யோசனை கூறினாள். விருந்தாளிகள் வந்த ஒருமணி நேரத்திற்குள் சாரதாவிடம் வருஷக்கணக்கில் பழகினவர்கள்போல நடந்துகொண்டனர். ஒரே பேச்சு! சிரிப்பு!! கோகிலத்தின் குட்டிக் கதைகளும் சிங்காரவேலின் ஹாஸ்யமும் சாரதாவுக்குப் புதிது! அவை அவளுக்குப் புதியதோர் உலகைக் காட்டிற்று. அதிலும் அந்த மங்கை புகுந்தாள்!
ஒருமுறை வழிதவறிவிடின் பிறகு எவ்வளவோ வளைவுகளில் புகுந்தாகத்தானே வேண்டும்.
அத்தகைய ஒரு வளைவு! சிங்காரவேலர் – கோகிலா பிரவேசம்!
கோகிலா அழகியல்ல! சாரதா அதைத் தெரிந்துகொண்டாள். என்றாலும், கோகிலத்தின் நடை, உடை, பேச்சில் ஒரு தனி வசீகரம் கண்டாள். கோகிலத்தின் கண்கள் சிலமணி நேரங்களில் சாரதா, கருப்பையா நட்பைக் கண்டுவிட்டன. அவள் வாய், ஒரு நொடியில் விஷயத்தைச் சிங்காரவேலருக்குக் கூறிவிட்டது. அவரது மூளை உடனே சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. சிங்காரவேலரும் கோகிலமும் செல்வக்குடி பிறந்தோர். செல்வத்தை வீண் ஆட்டத்தில் செலவிட்டுப் பிறகு, உல்லாசக் கள்ளராயினர்! கோகிலம் தம் கணவன் வீட்டுக்கு வரவே கூடாது எனக் கண்டிப்பாக உத்தரவிட்டுவிட்டவள், சிங்காரவேலர் முதல் மனைவி பிரிந்த துக்கத்தை மறக்கமுடியுமா என்பவர், தாரமிழந்தவர். இருவருமாகப் பழைய ஜமீன் பெருமையைக் கூறி, ஊரை ஏய்ப்பதும் உலவுவதுமாகவே இருந்தனர்.
சாரதா, கருப்பையா உறவு நல்லதொரு தங்கச்சுரங்கம் என்று சிங்காரவேலன் எண்ணினான். அவனுடைய சிந்தனையில் சூதுவலை உடனே வளர்ந்தது. கோகிலத்திடம் கலந்தான்.
“பேஷான யோசனை அண்ணா! சரியான யோசனை!”
“நம் யோசனை எது சரியானதாக இராமல்போய்விட்டது கோகிலம்”
“இந்த ‘விடுமுறை’ வியாபார தோரணையில் நமக்கு மிகச்சிறந்தது.”
“ஆமாம்! நாம் போடப்போகும் ‘முதல்தொகை’ மிகச் சொற்பம், கோடாக் நாதனின் கருணையால், நமக்குக் குறைவே ஏற்படாது” என்றான் சிங்காரவேலன்.
கோகிலம் அண்ணனின் சமர்த்தை எண்ணிச் சிரித்தாள்.
அண்ணனும் தங்கையுமாகச் சிரிக்கும் நேரத்திலே, சாரதா, அங்கு வந்தாள். ‘சிரிக்கும் காரணம் என்னவோ?’ என்று கேட்டாள்.
“நாங்களா சிரிப்பதா! ஏன் அண்ணா நாம் எதற்காகச் சிரித்தோம்” – என்று கோகிலம் கேட்டாள். அவள் கேட்ட கேள்வியும், பேசியவிதமும், சாரதாவுக்கும் சிரிப்பை உண்டாக்கிவிட்டது.
மூவருமாக, விழுந்து விழுந்து சிரித்தனர்! “பேதைப்பெண்ணே சிக்கினாயா” என்று சிங்காரவேலன் எண்ணினான்!!
“குட்டி மகாகெட்டிக்காரியாக இருக்கிறாள். எங்கே நமது கண்களுக்கு விஷயம் தெரிந்துவிடுகிறதோவென்று மிக ஜாக்கிரதையாக நடந்துகொள்கிறாள். அவனாவது பரவாயில்லையென்று எண்ணிக்கொண்டு சில சமயங்களில் அவளை நோக்கி சிரிக்கிறான். கொஞ்சுகிறான். இருவரும் கைப்பிடியாகக் கிடைக்கவேண்டும். அது போட்டோ எடுக்கப்படவேண்டும். அதுதான் என் பிளான். சமயம் வாய்க்கவில்லையே” என்றான் சிங்காரவேலன், கோகிலத்திடம்.
“அண்ணா பெண்கள் எப்போதும் நிறைகுடம் போன்றவர்கள். உணர்ச்சியைத் ததும்பவிடமாட்டார்கள் ஆண்கள் அப்படியல்லவே. நிழலசைந்தாலும், அவள் அசைந்தாள் என்று எண்ணிக்கொண்டு அவதிப்படுவார்கள். இது இயற்கைதானே” என்றான் கோகிலம்.
“அது எப்படியாவது தொலையட்டும். நமக்கு வேண்டியது நடக்க வேண்டுமே” என்றான் வேலன்.
“இது ஒரு பிரமாதமா! நாளை மாலை சாரதா, கருப்பையாவின் தோளைப் பிடித்திழுத்து முத்தமிடும் காட்சியை நீங்கள் போட்டோ எடுக்கலாம். அந்தக் காட்சியை நான் டைரக்டு செய்கிறேன்” என்றாள் கோகிலம்.
சிங்காரவேலன் முகம் சற்று சுளித்தது. கோகிலம் சிரித்துக்கொண்டே, “ஏன் அண்ணா, உமக்கும் சாரதா மீது…” என்று கேலி செய்தாள்.
“தூ! தூ! நான் பெண்கள்மீது ஆசை வைப்பதைவிட்டு வருஷங்களாகிவிட்டன” என்றான் வேலன்.
“சரி! நான் நமது சினிமா காட்சிக்கு வேண்டிய ஏற்பாடு செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு கோகிலம் கருப்பையாவைத் தேடிக்கொண்டு தோட்டத்துக்குச் சென்றாள்.



