
கபோதிபுரத்துக் காதல்
க. நா. அண்ணாதுரை
20
படுத்துறங்கும் கணவன் பக்கத்தில் படுத்தாள் பூனை போல. சில நிமிடங்கள் வரை சாரதாவின் கவனம் முழுவதும் பரந்தாமன் மீதே இருந்தது. திடீரென அவள் திடுக்கிட்டாள். ஏன்? தன் கணவன் குறட்டைவிடும் சத்தமே கேட்கவில்லை. என்றுமில்லாத அதிசயமாக இருக்கிறதே என்று எண்ணி, மெதுவாகக் கணவன் மீது கையை வைத்தாள். பனிக்கட்டி போல ஜில்லென இருந்தது. அலறிக்கொண்டே, அவர் உடலைப்பிடித்து அசைத்தாள். பிணம் அசைந்தது. அபின் அதிகம், மரணம்.
சாரதா விதவையானாள். குங்குமம் இழந்தாள். கூடின பந்துக்கள் தமது அனுதாபத்தைத் தெரிவித்தனர். வேதவல்லி தன்னைப் போலவே சாரதாவும் ஆனது கண்டாள்; மனம் நொந்தாள்.
சாரதா விதவையானாள், பரந்தாமன் குருடனானான். அம்மையிலிருந்து அவன் தப்பித்துக்கொண்டான்; ஆனால் அவனது கண்கள் தப்பவில்லை. பார்வையை இழந்தான் பரந்தாமன். சாரதாவுக்கு நேரிட்ட விபத்தைக் கேட்டான். மனம் நொந்தான். ஏன்? சாரதாவுக்கு இதனால் மனக்கஷ்டம் வருமே என்பதனால். அம்மை போயிற்றே தவிர, எழுந்து நடமாடும் பலம் பரந்தாமனுக்கு வருவதற்கு ஒரு மாதத்துக்கு மேல் பிடித்தது.
ஒரு மாதத்துக்குப் பிறகு, பரந்தாமன் சாரதாவைக் காணச் சென்றான். கண் இழந்தவன் கபோதி எனினும் அவளைக் காணமுடியும் அவனால். கண் இழந்தான், கருத்தை இழக்கவில்லையல்லவா!
சாரதா தாலியை இழந்தாள்; பிறரால் பிணைக்கப்பட்ட கணவனை இழந்தாள்; தன் வாழ்க்கையில் அதனை ஒரு விபத்து எனக்கொண்டாள். ஆனால் அதனாலேயே தன் வாழ்க்கையில் இருந்து வந்த இன்ப ஊற்று உலர்ந்துவிட்டதாகக் கருத முடியவில்லை. துக்கம் விசாரிக்க வந்தவர்களெல்லாம் தனக்கும் மாண்டு போன தன் கணவருக்கும் இருந்த பொருத்தம், ஒற்றுமை, நேசம் முதலியவற்றைப் பற்றிப் பேசினர். அது வாடிக்கையான பேச்சுதானே! யாருக்குத் தெரியும். தன் காதலனைக் காணப் போகவேண்டும் என்பதற்காகக் கணவனுக்கு அபின் ஊட்ட, அது அளவுக்கு மீறிப் போனதால் அவன் இறந்தான் என்ற உண்மை. தன் கணவனைத் தானே கொன்றதை எண்ணும்போது சாரதாவுக்கு இருதயத்தில் ஈட்டிபாய்வது போலத்தான் இருந்தது. “நான் அவர் சற்று தூங்கவேண்டும் என்று அபின் கொடுத்தேனேயொழிய அவர் இறக்கவேண்டும் என்றா கொடுத்தேன். இல்லை! இல்லை! நான் எதைச் செய்தாலும் இப்படித்தானே ‘வம்பாக’ வந்து முடிகிறது. என் தலை எழுத்துப் போலும்” என்று கூறித் தன்னைத்தானே தேற்றிக்கெண்டாள்.
தன் வீட்டின் கடனைத் தீர்க்கத்தான், சாரதாவின் தகப்பன் பணக்காரனுக்குத் தன் பெண்ணை மணம் செய்து கொடுத்தார். வேதவல்லியும் தன் மகள் நல்ல நகை நட்டுடன் நாலுபேர் கண்களுக்கு அழகாக வாழவேண்டும் என்ற விருப்பத்துக்காகத்தான் சாரதாவை மணம் செய்ய ஒப்பினாள். ஆனால் அந்த மணம் மரணத்தைத்தான் சாரதாவுக்குத் தந்தது. என் செய்வது? ஓட்டைப் படகேறினால் கரையேறு முன்னம் கவிழ்ந்தாக வேண்டுமல்லவா! சாரதாவுக்கு அவள் பெற்றோர்கள் அமைத்துக் கொடுத்த வாழ்க்கைப்படகு ஓட்டையுள்ளது. அதில் எத்தனை நாளைக்குச் செல்லமுடியும். அந்த ஓட்டைப் படகுக்குக் கருப்பையா ஒட்டுப்பலகை! ஆனால் ஒட்டுப் பலகைதான் எத்தனை நளைக்குத் தாங்கும். அதுவும் பிய்த்துக் கொண்டு போய்விட்டது ஒருநாள். பிறகு படகே கவிழ்ந்துவிட்டது. கணவனே மாண்டான் இனி சாரதா கரை சேருவது எப்படி முடியும்?



