அமைதி
பாரதிதாசன்

பன்னிரண்டு

மாலையில், மண்ணாங்கட்டி ஏரிக்கரையண்டையில் நின்று வேலை நடப்பதைப் பார்க்கிறான். நாளை வேலை தீர்ந்து விடும் நிலையில் இருப்பது அவனுக்குத் தெரிகிறது. ஊர் மக்கள் ஏரிக் கரையைக் கட்டுவதில் சுறுசுறுப்பாக வேலை செய்வதைப் பார்க்கிறான். அவன் விழிகள் நினைப்பில் தோய்கின்றன. பகலவனும் மேற்கில் மறைகிறான். ஊரில் நுழைகிறான்.

பெரிய பண்ணையார் வீட்டு மாடியில் பொருத்தப் பட்டிருக்கும் மணிப்பொறியின் முட்கள் இரவு  9 என்று காட்டுகின்றன. மண்ணாங்கட்டி அப்பெரு வீட்டை ஒரு சுற்றுச் சுற்றி வருகிறான். மேலும் அவன் அவ்வீட்டின் பக்கவாட்டில் நின்று வீட்டின் உயரத்தைக் கண்ணால் அளக்கிறான்!

அப்பெரு வீட்டின் மாடியில், ஒருகூடம், அங்கு சாப்பாட்டு மேசை, நாற்காலிகள், அலமாரி, ஒரு புறம் இரண்டு கட்டில்கள், விளக்கொளியில் காட்சியளிக்கின்றன. பெரிய பண்ணையார் அங்கு வந்து மேசையின் எதிரில் உட்காருகிறார். ஆட்கள் சாப்பாட்டுக்குரிய கறிகள் முதலியவைகள் கொண்டு வந்து வைத்துப் போகிறார்கள். பெரிய பண்ணையாரின் அழகு மனைவி வருகிறாள். அவள் இரண்டுபேருக்கு உணவு படைக்கிறாள். அலமாரியைத் திறக்கிறாள். சாராயச் சீசாவை எடுத்துக் கணவன் எதிரில் உள்ள ஏனத்தில் ஊற்றுகிறாள். அவன் குடிக்கிறான். மேலும் மேலும் ஊற்றுகிறாள். அவளும் அவனும் சோறு உண்ணத் தலைப்படுகிறார்கள். இடை யிடையே இடது கையால் தன் கணவனுக்குச் சாராயம் ஊற்றிக் கொடுக்க அவன் குடித்துத் தலை சாய்கிறான். அழகி தன் கணவனைத் தூக்கி, அடுத்துள்ள ஒரு கட்டிலில் போடுகிறாள். அவன் உயிரற்றவன் போல் ஆகிறான். மனைவி, உண்டு கைகழுவி அணிமாற்றி அணிந்தும் உடைமாற்றி உடுத்தும், கண்ணாடி பார்த்துத் தலைசீவியும், முகந்திருத்தியும் ஒரு கருநிறமுள்ள மெல்லிய பட்டு உடையால் முக்காடிட்டு மாடியை விட்டு இறங்குகிறாள். இதையெல்லாம் மாடியின் சன்னலில் ஒன்றிப் பார்த்திருந்த மண்ணாங் கட்டியும் அவள் இறங்குமுன், கீழிறங்கி வீட்டின் கொல்லைப் புறத்தில் ஒருபுறம் ஒளிந்து நிற்கிறான். பெரிய பண்ணையாரின் வீட்டுக் கொல்லைப்புறக் கதவு திறக்கப்படுகிறது. பெரிய பண்ணை யின் மனைவி வெளியே வருகிறாள். அங்கு வந்து நிற்கும் ஒரு வண்டியில் ஏற வண்டி சின்ன பண்ணையை நோக்கிப் போகிறது. மண்ணாங்கட்டியும் தொடர்கிறான்.

சின்ன பண்ணையாரின் வீட்டைத் தாண்டிச் சிறிது தொலை வில் கட்டப்பட்டிருக்கும் ஒரு கோடை விடுதியின் எதிரில் வண்டி நிற்கிறது. அங்கு காத்திருந்த சின்ன பண்ணையாரால் அவ்வழகிய மங்கை அள்ளிக்கொண்டு போகப்படுகிறாள் விடுதிக்குள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *