
அமைதி
பாரதிதாசன்
பதினொன்று
மாடி வீட்டின் பெருங் கதவு திறக்கப்படுகின்றது. பெரிய பண்ணையார் முறுக்கிய மீசையுடன் விரைவாக வெளிவருகிறார். அவர் மனைவி அணிகளையும் தன் அழகையும் சுமந்து வெளி வருகின்றாள். இருவரும் தெரு நடுவில் நின்று கையில் மண் வெட்டி யும் சிவப்புத் துணியையும் தூக்கி அசைத்துக் காட்டு கிறார்கள். ஊர் மக்கள் மண்வெட்டி, தட்டு, பாரை தூக்கி ஏரி நோக்கி ஓடுகிறார்கள்.
மற்றொரு மாடி வீட்டினின்று சின்ன பண்ணையார் அவருடைய அழகற்ற மனைவியும் அவ்வாறே அடையாளங்காட்ட அங்குள்ள மக்களும் ஏரியை நோக்கி ஓடுகிறார்கள் கருவிகளுடன்.
இரு பண்ணையார்களின் நூற்றுக்கணக்கான ஆட்கள், பெருமிடாக்களில் அரிசியைக் கழுவிப் போட்டுச் சோறாக்கு கிறார்கள். ஏரியில் வேலை செய்யும் ஊர் மக்கட்கு வாழையிலை திருத்தப்படுகிறது. சோறு இட, கறிகள் அரிகிறார்கள் குழம்பு வைக்க, நூற்றுக்கணக்கான அடுப்புகள் எரிகின்றன. தாளிப்பு மணம் கமகம என்று எழுகின்றது நாற்புறத்தும்.
அனைத்தும் ஊர்மக்கட்கு! மகிழ்ச்சியுடன் திரிகிறான். மண்ணாங்கட்டி. அவன் ஏரிக்கரை செல்கிறான். ஊர் மக்கள் ஏரிக்கரை செப்பனிடுவதைப் பார்க்கிறான். மீண்டும் ஊருக்குள் வருகிறான். சோறு கறிகள் இலையில் வரிசை வரிசயைாக வட்டிக்கப் படுவது காணுகிறான். பசிகொண்ட நாய்கள் தாமே சோற்றண்டையில் சூழ்ந்தன. பசிகொண்ட மக்களோ பண்ணையார்கள் கையசைக்க வந்து சேர்ந்தனர்.
அனைவரும் உணவருந்துகிறார்கள். மண்ணாங்கட்டி அள்ளூறிப் போகிறான், மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. உண்ணும் மக்களைச் சுற்றி சுற்றி வருகிறான். விலாப்புடைக்க உண்டு எழுகிறார்கள் ஊர் மக்கள். அவர்கள் வாய் நிறைய வெற்றிலைப் பாக்கிட்டு மெல்லுகிறார்கள். அவர்கள் முகங்கள் பொலிவுறுகின்றன.
முதுகெலும்பை ஒட்டிய வயிறு முற்புறம் பெருத்திருப்பதை மண்ணாங்கட்டி கடைக்கண்ணால் பார்த்துப் பார்த்துக் கடை யுதட்டால் சிரிப்பை ஒழுக விடுகிறான். அனைவரும் ஏரி நோக்கிச் செல்லுகிறார்கள். வேலை தொடங்குகிறார்கள். மாலை வேளைச் சோறு சமைக்கத் தொடங்குகிறார்கள் பண்ணையாட்கள். மண்ணாங் கட்டி தான் சாப்பிட மறந்து போனதைத் தன் வயிற்றைத் தடவிய அவன் கைகள் காட்டுகின்றன.
மாலைப் போதில் மீண்டும் ஊர் விருந்து மண்ணாங் கட்டிக்கு உட்பட நடக்கிறது.
