அமைதி
பாரதிதாசன்

பத்து

மண்ணாங்கட்டியின் எதிரில் ஒரு பெரிய ஊர் தோன்றுகிறது. வானைத் தொடுகின்ற இரண்டு மாடி வீடுகள் தோன்றுகின்றன. இவ்விரண்டு மாடி வீடுகளும் தம்மில் நெருங்கியிருக்கவில்லை. இரண்டுக்கும் நடுவில் ஒரு கல் தொலைவு இடைவெளி யிருக்கலாம். மண்ணாங்கட்டி ஊரில் நுழைகிறான். ஊர்ப்புறத்தில் புல்லற்ற வெளி யில் சில மாடுகள் மேய்கின்றன. அவை எலும்பும் தோலுமாய்த் தோன்றுகின்றன. தெருக்களைக் காணுகிறான். நிறையப் பொத்தற் குடிசைகள்; தெருக்களில் தீனியின்றி மண்ணைக் கொத்தித் தின்னும் இளைத்த கோழிகள் மேய்கின்றன. ஆடையின்றி விலாவெடுத்த சிறுகுழந்தைகள் மண்ணிற் கிடக்கின்றன. குலைக்கவும் வலிவின்றி நாய்கள் மண்ணாங்கட்டியைக் கண்ணாற் பார்த்துப் பழையபடி புறங்கால் இடுக்கில் தலைவைத்துச் சுருண்டு படுக்கின்றன.

பேச்சுக் குரலற்ற குடிசைகளைக் காணுகிறான். சில குடிசை களை அவன் எட்டிப் பார்க்கின்றான். பூனை தூங்கும் அடுப்புகள், ஈரமற்ற முற்றங்கள், ஒட்டடை நிறைந்த அடுக்குப் பானைகள் காட்சியளிக்கின்றன. அவன் விழிகளில் இரக்கமும் வியப்பும் மாறி மாறித் தோன்றுகின்றன.

ஒரு மாந்தோப்புத் தோன்றுகின்றது. மரங்களில், காயில்லை, வண்டுகளும், பூவும் இருக்கின்றன. ஏழை மக்கள் சிலர் மாவடு, பூ, தளிர் இவைகளைக் கையால் தாவிப் பறித்து உண்கிறார்கள். அவர்களின் கண்கள் எவனுக்கோ அஞ்சுகின்றன.

ஒருவன் கையில் தடியுடன் வருகிறான். மக்கள் ஓடி ஒளிகிறார்கள். வேறுபுறம் மண்ணாங்கட்டி செல்லுகிறான்.

பழுக்காத பனங்காயைப் பலர் பல்லாற் கடித்துக் கிடக் கின்றனர். மற்றும் சிலர் பச்சோலையைத் தின்கின்றனர். மண்ணாங் கட்டி மெய் நடுங்குகிறான். அவன் மறுபுறம் நடக்கின்றான்.

பெரியதோர் மாடிவீடு. அதையடுத்துப் பல “பொருட் காப்பு விடுதி”கள் தோன்றுகின்றன. மாடி வீட்டின் வாயிலில் நிறைய மக்கள் கெஞ்சிய முகத்தோடும் துணி விரித்து ஏந்திய கையோடும் மொய்த்திருக்கின்றார்கள். சிலர் கூழ் ஏந்தும் சிறு பானையுடன் ஏங்கியிருக்கின்றனர். வேறு புகல் இல்லையென்னும் நிலையில் பலர் வாயிலின் நேரில் உட்கார்ந்திருக்கின்றனர். மற்றும் பலர் உட்கார்ந்திருக்க வலிவின்றிப் படுத்திருக்கின்றனர். மண்ணாங்கட்டி நின்று பார்க்கிறான். அவன் முகம் கருமையடைகின்றது. சிறிது நேரம் செல்ல, மாடி வீட்டினின்று ஒருவன் கையிற் கோலுடன் ஏழை மக்களை நோக்கிச் சினத்துடன் வருகின்றான். மக்கள் அஞ்சிப் பறக்கின்றார்கள். அவன் உள்ளே போகின்றான். மீண்டும் ஏழை மக்கள் மாடி வீட்டை மொய்க்கின்றார்கள். மண்ணாங்கட்டி மேலும் நடக்கின்றான் விரைவாக!

ஒரு கல் தொலைவு செல்லுகின்றான். மற்றொரு வீட்டைக் காண்கின்றான். அங்கும் காணுகின்றான் கையேந்தி நிற்கும் ஏழை மக்களை. மண்ணாங்கட்டி ஆவலுடன் எதையோ பார்க்கிறான். நடக்கிறான் மேலும்! ஊரின் மேற்குப் புறத்தில் ஏரிக்கரையை அடைகிறான்: ஏரியைச் சுற்றிச் சுற்றிப் பார்க்கின்றன அவன் விழிகள். அவன் முகத்தில் சிறிது மகிழ்ச்சியரும்புகின்றது. ஏரி நிறைய நீர் இருக்கிறது. ஏரியின் மறுமுனையைப் பார்க்கிறான். ஊர் தோன்றுகிறது. அவ்வூருக்கும் இந்த ஏரிக்கும் இடையில் தடைச் சுவர் ஒன்று மட்டமாய்க் கட்டப்பட்டிருப்பதை அறிகிறான். மற்றும் ஏரியின் அருகில் குறவர் குடிசைகள் தோன்றுகின்றன. உற்றுப் பார்க்கிறான் மண்ணாங்கட்டி, ஒரு குறவன் மூட்டம் போட்டு அதில் உயிருடன் நாய் ஒன்றை வதக்கிக் கொண்டிருக்கிறான். அதன் தசையை எதிர்பார்த்துப் பல குறவர் ஏங்கி நிற்கிறார்கள். மண்ணாங் கட்டி விரைந்து சென்று குடிசையொன்றில் நுழைகிறான். சிறிது நேரத்தில் அக்குடிசையினின்று ஒரு குறவன் வெளிச் செல்லுகிறான். அவன் உடனே பல குறவர்களுடன் தன் குடிசைக்குள் நுழைகிறான். பகலவன் மேற்றிசையில் வீழ்கிறான். கையெழுத்து மறைகிறது. பல குறவர்கள் மண்ணாங்கட்டியுடன் செல்லுகிறார்கள் கையில் கடப்பாரைகளுடன்.

ஏரியின் அக்கரையில் கட்டப்பட்டிருக்கும் தடைச் சுவர் இடி படுகின்றது. மண்ணாங்கட்டியின் தோள் விரைவாக அவ்வேலையில் ஈடுபடுகின்றது. குறவர்கள் தம் தலைவருடன் போட்டியிடு கின்றார்கள். மண்ணாங்கட்டி ஏரியைப் பார்க்கிறான். அவன் மகிழ்ச்சி கொண்ட முகத்தை மற்றும் காண்கிறார்கள். குறவர்களும் மண்ணாங் கட்டியும் குறவரின் குடிசைகளை நோக்கிச் செல்கிறார்கள்.

சிறிது நேரத்தில், ஒருவன் சுளுந்தக் கழி கொளுத்தியபடி இடிக்கப்பட்டிருக்கும் தடைச் சுவரைப் பார்க்கிறான். ஏரியின் மறு முனையில் தோன்றும் ஊரை நோக்கி விரைந்து செல்லுகிறான்! உடனே சுளுந்தக் கழி கொளுத்திப் பிடித்தவனும் ஊர்ப் பெரியவர் களும் தடைச்சுவரை ஆராய்கிறார்கள். அவர்கள் கண்ணில் தீப் பொறி பறக்கிறது. அவர்கள் தம் எதிரில் தோன்றும் இரண்டு மாடிகள் உள்ள ஊரை நோக்குகிறார்கள்.

மீண்டும் குறவர்களுடன் மண்ணாங்கட்டி செல்கிறான். ஏரிக் கரை இடிபடுகின்றது. தண்ணீர் உடைந்த தடைச்சுவரைத் தாண்டி அவ்வூரில் நுழைகிறது. இடையில் பரந்த வயல் அனைத்தும் வெள்ளம். அவ்வூரிற் சென்ற அளவு இவ்வூரிலும் வெள்ளம் புகுகின்றது. மண்ணாங்கட்டி குறவர்களுடன் செல்லுகிறான்!

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *