அமைதி
பாரதிதாசன்

ஐந்து

நள்ளிருளில் ஒரு குடிசையில் ஒற்றை விளக்கு எரிகிறது. தரையிற் குந்தித் தலையிற் கை வைத்துக் கண்ணீர் சிந்துகின்றான் ஒருவன். அறையிலிருந்து ஒருத்தி ஒரு சின்னஞ் சிறு மூட்டையுடன் வெளிவந்து கொல்லைப்புறக் கதவு திறந்து வெளிச் செல்லுகிறாள். அவள் சிறிது தொலைவில் தனியே சென்று ஒரு வேலிப்புறத்தில் தன் கையிலிருந்த மூட்டையை மெதுவாகத் தரையில் வைத்துப் போகிறாள். மண்ணாங்கட்டி அம் மூட்டையைச் சென்று எடுத்துப் பிரித்துப் பார்க்கிறான். அவன் மேனி நடுங்குகிறது. குழந்தையைத் தன் மேலுடையால் மறைத்து எடுத்துப் போகிறான்.

சற்றுத் தொலைவில் ஒரு குளத்தைக் காணுகிறான். அதில் குழந்தையின் செந்நீர் தோய்ந்த மேனியைக் கழுவுகிறான். கொப்பூழ்க் கொடியைக் களைகிறான். உடையால் ஒற்றி வேறு உடை போர்த்துக் கைப்புறத்தில் அணைத்தபடி செல்லுகிறான்.

அங்கொரு தொழுவம் காணுகிறான். அதில் உள்ள ஒரு பசுவைக் காணுகிறாள். குழந்தையை ஒரு புறம் படுக்க வைத்து விட்டுப் பசும்பாலைத் துணி நனையக் கறந்து குழந்தையின் வாயிற் பிழிந்து உண்பிக்கிறான். சற்றுத் தொலைவில் குழந்தையுடன் செல்லுகிறான். ஊர்ப் பொதுச் சாவடி ஒன்று காணுகிறான். ஊர் பொதுச் சாவடியில் சிலர் மூட்டை முடிச்சுகளுடன் துயிலுகிறார்கள். ஆயினும், அவர்களில் ஒரு கணவனும் மனைவியும் துயில் நீங்கி எழுந்து மற்றவர்கள் துயில்வதையும் அவர்களின் அண்டையில் மூட்டை முடுச்சுகள் கேட்பாரற்றுக் கிடப்பதையும் பார்க்கிறார்கள். அந்த மூட்டைகளிற் சிலவற்றை திருடிச் சென்று சிறிது தொலைவிலுள்ள ஆலமரத்தின் வேரில் மறைத்து மீண்டும் துயில்வாரோடு தாமும் வந்து துயில்கிறார்கள்.

கிழக்கு வெளுக்கிறது. ஆலமரத்தை நோக்கி ஒரு கணவனும் அவன் மனைவியும் சுற்று முற்றும் பார்த்தபடி வருகிறார்கள். அவர்கள் திருடிப் பதுக்கிய மூட்டைகளைக் காணுகிறார்கள். அம் மூட்டைகளின் அண்டையில் வண்டு விழிகாட்டி மலர் முகம் காட்டிச் சிறிய மலர்க் கைகளும் கால்களும் அசைத்துக் கிடக்கும் ஒரு குழந்தையையும், குழந்தையின் அண்டையில், சில தங்க நகைகளும் பணமும் கிடப்பதையும் காணுகிறார்கள். மனைவி குழந்தையை வாரி அணைத்து முத்தமிடுகிறாள். கணவன் முகம் மகிழ்ச்சி கொள்ளு கிறது. ஆலமரத்தின் மேல் ஒரு நெஞ்சம் பூரித்துப் போகிறது.

பிள்ளையையும், பணம், நகை மூட்டைகளையும் எடுத்துக் கொண்டு கணவனும் மனைவியும் போகிறார்கள். ஆலமரத்தை விட்டு இறங்கிய மண்ணாங்கட்டி வேறு புறம் செல்லுகிறான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *