அமைதி
பாரதிதாசன்

ஆறு

மண்ணாங்கட்டி ஒரு சிற்றூரை அடைகிறான். இளங்கதிர் கடலைவிட்டு எழுகிறது. அவன் நடக்கிறான். அவன் கண்கள் நாற்புற நிகழ்ச்சிகளையும் துழாவுகின்றன.

அங்கோர் வண்டியில் ஏறுகால்மேல் உட்கார்ந்து மாடுகளை ஓட்டுகிறான். வண்டியில் ஏற்றிய பூச்சுணைக்காய் பின்புறத்தில் நழுகுகின்றது ஆயினும், அது விழுமுன் ஏந்தி முன்னிருந்த இடத்தில் வைக்கின்றன மண்ணாங்கட்டியின் கைகள்.

தெருத்திண்ணைமேல் தூணிற் கட்டப்பட்ட கன்றுக்குட்டி கால் தவறிக் கீழே விழுகிறது. அதன் உடல் பதைக்குகிறது. அது தூக்கு மாட்டிக் கொண்ட உடல்போல் தொங்கித் துடிக்கிறது! இந்நிலை அதற்கு ஒரு நொடி. மறு நொடியில் மண்ணாங்கட்டி மீட்சியளித்து அதற்கு முத்தமும் தந்து மகிழ்ந்தபடி நடக்கிறான்.

மண்ணாங்கட்டிக்கு உச்சியினின்று கதிரவன் நெருப்புக் குடை பிடிக்கும் நேரம்! ஒரு குளக்கரையில் இருவர் தலைவிரித்து நிறையச் சோறிட்டு உண்டிருக்கிறார்கள் அக்காட்சியை மண்ணாங்கட்டி பார்க்கிறான். திகைக்கிறான். தன் கையால் அடிவயிற்றைத் தடவுகிறான். அவன் முகம் சுருங்குகிறது.

அப்போது அவன் எதிரில் ஒரு வைக்கோல் வண்டி போகிறது. எத்தனை பெரிய வண்டி! அவ்வண்டி மேல் எவ்வளவு வைக்கோல்! இளைத்த இரண்டெருதுகள், மண்டியிட்டு இழுத்துச் செல்கின்றன, அவற்றின் கண்கள் பீளை கக்குகின்றன; கடைவாய் நுரையூற்று!

மண்ணாங்கட்டி பாய்கிறான், வண்டியின் பின்புறம் தன் தலையைப் பொருத்தி உரங்கொண்ட மட்டும் தள்ளிச் செல்கிறான், எருதுகள் துயர் நீங்கி மாப்பிள்ளை போல் நடக்கின்றன. மண்ணாங் கட்டியின் சுருக்க முகம் மலர்கின்றது வண்டி தன் இடத்தை யடைகின்றது. மண்ணாங்கட்டி வேறு வழி நோக்கி நடக்கிறான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *